Sunday 21 September 2014

தமிழ் இனி மெல்லதொடர்கிறது[3ம் பாகம்-4ம் அதிகாரத் தொடர்ச்சி ]

 தமிழ் இனி மெல்ல சென்ற பதிவின் [3-4]இறுதியில் 
மேலே தொடர முயன்ற அவரை இடைமறித்து, “அல்ல சேதுராயரே, அல்ல! என் தந்தை சிறந்த சைவராக இருந்தாலும், வைணவத்தை மதித்தவர். நிறைய வைணவக் கோவில்களுக்கு நிலமும், அறக்கட்டளையும் வழங்கியவர். சாக்கிய முனியான புத்தருக்கு நாகைப்பட்டினத்தில் விகாரம் அமைக்க என் தந்தையார் அறக்கட்டளை வழங்கவில்லையா? என் அத்தையார் தஞ்சையில் சுந்தர சோழ விண்ணகரம் அமைக்கவும், சமணக் கோவில் கட்டவும் அறக்கட்டளை வழங்கியதை இந்நாடே அறியும். மேலும், தங்கள் மகள் என்னை மணந்ததும், சைவத்தை ஏற்று ஒரு சைவப் பெண் ஆகிவிடவில்லையா? அதல்ல காரணம்...”
சில கணங்கள் அமைதியான இராஜேந்திரனின் குரலில் இலேசான கரகரப்பு இருக்கிறது. “என் முதல் திருமணம் காதல் கடிமணமாக அமைந்ததை தந்தையார் ஒப்புக் கொள்ளவில்லை. சோழநாட்டின் பட்டத்து அரசியாக வரவேண்டியவள் நாடறிய, உலகறிய என்னை மணக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். எங்கள் திருமணம் அரசர்களுக்கு அனுமதிக்கப் பட்டதே என்பினும், களவுக் காதல் கடிமணமாக அமைந்ததால், அது அரசுப் பதவி உரிமைக்கு அருகதையற்றது என்று முடிவெடுத்து - எனக்குத் தண்டனையாக தங்கள் மகள் வழியோர் சோழ அரச உரிமையற்றவர்கள் என்று செப்பேட்டில் பதிப்பிட்டுவிட்டார். இன்றுவரை என் அவசரச் செயலுக்காக நான் இதயத்திற்குள் குருதி சிந்தி வருகிறேன். உமது மன ஆற்றாமை எமக்குப் புரிகிறது. அதனால் உம் மனதைக் குளிர வைக்கும் ஒரு அறிவிப்பைச் செய்யத் தீர்மானித்திருக்கிறோம்.”
இராஜேந்திரனின் கண்கள் பளிச்சிடுகின்றன. “அரசகேசரியான எமது தந்தையாரின் கட்டளையை மீற இயலாவிட்டாலும், சோழ அரசர்களுக்கே உரிய பட்டப் பெயரில் கடைசியான கேசரியை ஆளவந்தானுக்கு வழங்கிச் சிறப்பிக்கிறோம். ஓலைநாயகமே, இனி ஆளவந்தான் மனுநீதிச் சோழன் வழித்தோன்றல் என்பதைக் குறிக்கும் வகையில் “மனுகுல கேசரி”  என்று அழைக்கப் படுவான் என்பதைச் செப்பேட்டில் பதிவு செய்வீராக!” அவன் குரல் மண்டபத்தில் எதிரொலிக்கிறது.

தமிழ் இனி மெல்லதொடர்கிறது[3ம் பாகம்-4ம் அதிகாரத் தொடர்ச்சி ]
அரிசோனா மகாதேவன் 
தயங்கி எழுந்து நின்ற நிலவுமொழி தரையைப் பார்த்துக் குனிந்தவாறே மெல்லிய குரலில் பதிலளிக்கிறாள். “கோப்பரகேசரியாரே! இந்த ஏழையைத் தாங்கள் நினைவில் கொண்டு, ஒரு இளவரசருக்கு மணவினை முடிப்பது என் தந்தையார் சொல்லியது போல எங்கள் முன்னோர்கள் செய்த நல்வினைப் பயன்தான். அதில் ஒரு ஐயமும் இல்லை. ஆயினும்...” என்று இழுக்கிறாள்.

அரசவையே அவளை நோக்குவது அவளுக்குப் புரிகிறது. அனைவரின் கண்களும் அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று கவனிப்பதும் அவளுக்குத் தெரிகிறது.

“கோப்பரகேசரியாரே! இன்றும், என்றும் நான் ஒரு சைவப் பெண்ணாகத்தான் இருப்பேன். என் வாழ்நாள் முழுவதும் சிவனாரைத் துதித்து, தேவாரமும், திருவாசகமும் ஓதி வருவேன். இவ்வுலகத்தில் உள்ள அனைத்துப் பொன்னும், மணியும் எனக்குக் கிடைத்தாலும், சிவனாரை என் உள்ளத்திலிருந்து நீக்க நான் ஒப்ப மாட்டேன். என் வயிற்றில் பிறப்பவர்களுக்கும் சிவபக்தியையே ஊட்டி வளர்ப்பேன். வைணவராக இருக்கும் இளவரசர் இவற்றிற்கு முழு மனதுடன் அனுமதி கொடுத்தால்தான் இத் திருமணத்திற்கு என்னால் ஒப்ப இயலும். இதுவே இந்த ஏழை தங்கள் முன் வைக்கும் கோரிக்கை! இதைத் தாங்களோ, மற்றவர்களோ தவறாக எண்ணக்கூடாது!” மனதில் இருப்பதை அனைவரின் முன்னமும் கொட்டிவிட்டு அமைதியாகி விடுகிறாள் நிலவுமொழி.

அனைவரும் அதிர்ந்து போகிறார்கள்.

இராஜேந்திரன் சேதுராயரைக் கண்களினாலே வினவுகிறான். சேதுராயர் தன் பெயரன் காடவனைப் பார்க்கிறார். காடவனோ சேதுராயரை நோக்கி இருகைகளையும் விரித்து அவர் பக்கம் நீட்டுகிறான். “தங்கள் முடிவு பாட்டனாரே!” என்பது போல இருக்கிறது அது.

சேதுராயர் எழுந்திருந்திருந்து மெல்ல நிலவுமொழியின் அருகில் வந்து நிற்கிறார். நிலவுமொழியின் குனிந்த தலை இன்னும் நிமிராமலேயே இருக்கிறது.

“ஏன் பெண்ணே, உனக்கு திருமால் பேரில் இத்தனை வெறுப்பு?” என்று கனிவான குரலில் வினவுகிறார்.

“ஐயா, எனக்குத் திருமாலிடம் வெறுப்பு இல்லை. சிவனாரிடம் அளவு கடந்த பக்தி. அவ்வளவே!” என்று உறுதியான, மெல்லிய குரலில் குனிந்த தலை நிமிராமல் பதிலளிக்கிறாள்.

“திருமணத்திற்குப் பின்னர் பெண்கள் கணவன் வழி செல்வதுதானே சிறப்பு! அதைத்தானே மறைநூல்களும் உரைக்கின்றன! என் மகளும் கோப்பரகேசரியாரை மணந்ததும் சைவப் பெண்ணாகத்தானே தன்னை மாற்றிக் கொண்டாள்!” அவளிடம் தனது பக்கத்தை எடுத்துச் சொல்கிறார் சேதுராயர்.

“ஐயா, நான் தங்கள் அளவுக்கு அறிவு உள்ளவள் அல்ல. நான் அருள்மொழிநங்கையார் போல சிவனடியாரைத்தான் திருமணம் செய்து கொள்வேன், அதற்காக அரசுரிமையையே துறப்பேன் என்னும் அளவுக்கு உயர்ந்தவளும் அல்ல. ஆயினும் திருமாலை மட்டும் வணங்கவோ, வைணவத்திற்கு மாறவோ என் மனது ஒப்பவில்லை. திருமணத்திற்குத் தலையை ஆட்டிவிட்டு, பிறகு திருமாலை வணங்க முடியாதென்றால் தங்களுக்கும், தங்கள் பெயரரான இளவரசருக்கும் என்மீது மனத்தாங்கலை ஏற்படுத்தும் அல்லவா? அதனால்தான் முதலிலேயே தெரிவிக்கிறேன். சமணரான கூன்பாண்டியரை சைவத்திற்குக் கொணர்ந்தது கோப்பரகேசரியாருக்கு முன்னுதித்த சோழ இளவரசியும், பழையாறையில் பிறந்த மங்கையர்கரசியார் என்பதும் தாங்கள் அறியாததல்ல. எனவே இறை வழிபாடு ஒவ்வொருவரின் மனதைப் பொறுத்தது. நானும் தங்கள் மகளும் ஒன்றா? பத்தினித் தெய்வமான அவர்கள் இடத்தில் என்னை வைத்துப் பேசுவதே அவர்களை அவமதிப்பதாகாதா! ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் பிழை பொறுத்தருள்வீர்களாக!” என்று சேதுராயரின் கால்களில் விழுந்து பணிகிறாள் நிலவுமொழி.

“எழுந்திரு குழந்தாய்! மனதில் உள்வதைச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? போகட்டும். நீ சிவனாரை வணங்குவது உன் மனப்பாங்கு. அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆயினும் உன் வயிற்றில் உதித்தவர்களும் சைவர்களாகவே வளர வேண்டும் என்ற நிபந்தனையை ஏன் விதிக்கிறாயம்மா?” என்று கேட்கிறார் சேதுராயர்.

“ஐயா, என் வயிற்றில் பிறந்தவர்களுக்கு என் பாலை ஊட்டி வளர்க்கும் பொழுது எனது மொழியான தமிழையும், எனது கடவுளான சிவனாரையும் இனங்காட்டி வளர்க்காமல் வேறு எப்படி வளர்ப்பேன்? ஒரு தாயின் நாவில் வரும் மொழியைக் குழந்தை கற்று வளருவதால்தானே அதைத் தாய்மொழி என்று சொல்கிறார்கள்? அதைப் போலத்தானே தான் வணங்கும் தெய்வத்தையும் ஒரு தாய் குழந்தைக்குக் காட்டி வளர்ப்பாள்? அதைச் செய்யாதே என்று சொன்னால் நீ ஒரு தாயாக இராதே என்று சொல்வதாகத்தானே நான் பொருள் கொள்ள வேண்டும்? இப்படித்தான் என் சிற்றறிவுக்குப் படுகிறது.” அவள் கண்களில் நீர்முத்துக்கள் திரண்டு வழிந்து சேதுராயரின் கால்களை நனைக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------


        எரிந்த கட்சி எரியாத கட்சி
                         உருவகம் தான் முதலாளி
                        சிலர். 
                        உவமை வெறும் கூலித்தொழிலாளி.
                       சிலர். 
                       பழைய கதாநாயகர்களின்
                        கல்லறை மீது இரங்கற்பா
                       இயற்றிக் குழாய்ப்புட்டு
                       சுட்டுப் பரிமாறுவோர் 
                       சிலர் 
                        உருவ வழிபாட்டுக்காரர்கள்
                       எப்படியெப்படியோ உருமாறி
                       விட்டது இன்றைய கவிதை
                      ஆகக் கூடி கேட்க
                       நன்றாக படிக்க 
                      ரசமாக இருப்பது
                      கவிதையா அல்லவா
                      என்பதில் எப்போதுமே 
                       எரிந்த கட்சி

                       எரியாத கட்சி தான்-    வையவன் 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
சேதுராயர் நெகிழ்ந்து போகிறார். அவளைத் தூக்கி நிறுத்துகிறார்.
“குழந்தாய்! உன் உண்மைக்கு என்னை அடிமையாக்கி விட்டாயம்மா! இதுவரை என் வாழ்வில் சோழநாட்டில் வைணவர்களைச் சிறுமைப்படுத்தி, நான் கண்டதில்லை. சைவமும், வைணவமும் சோழத்தாயின் இரு கண்களாகத்தான் இருந்து வந்திருக்கின்றன. எனக்கு உன் மனநிலை புரிகிறது. உன் விருப்பத்திற்கு நான் ஒப்புக் கொள்கிறேன். காடவன் உன்னை மணக்கத் தடையேதுமில்லை. திருமணத்திற்குப் பிறகும் உன் விருப்பப்படி சிவனாரை வழிபட்டு வரவும், உன் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளுக்கு நீ சிவபக்தியை ஊட்டி வளர்க்கவும் நாங்கள் சம்மதிக்கிறோம். நீயும் எனது ஒரு விருப்பத்தை நிறைவேற்றி வைக்க உறுதியளிக்க வேண்டும்.” சேதுராயரின் கனிவான மொழி நிலவுமொழியை அமைதிப்படுத்துகிறது.

என்ன என்பது போல் முதன்முதலாக அவரை நிமிர்ந்து பார்க்கிறாள்.
“என் மகள் வயிற்றுப் பெயரனுக்குத் திருமாலைப் பற்றி நிறையச் சொல்லி வளர்த்து வந்திருக்கிறேன். ஆனால் அவனை வைணவனாக மாற்றக் கட்டாயப்படுத்தவில்லை. அவனுக்கு வைணவப் பெயரை வைத்து மகிழ விரும்பியதற்கும் கோப்பரகேசரியார் தடை ஏதும் சொல்லவில்லை. அதே போல உன் வயிற்றில் பிறப்பவர்களுக்கும் வைணவப் பெயரை வைக்க எனக்கு நீ உரிமை அளிக்க வேண்டும். எந்த ஒரு பேச்சு வார்த்தையிலும் ஒருவருக்கு மற்றவர் சிறிது விட்டுக் கொடுக்க வேண்டும் அல்லவா! இந்த விஷயத்தில் எனக்கு நீ விட்டுக் கொடுத்தானம்மா ஆகவேண்டும்!” ஒரு குழந்தையைப் போல நிலவுமொழியிடம் கெஞ்சுகிறார் சேதுராயர்.

அவள் முகத்தில் புன்னகை மலர்கிறது. “ஐயா, இதற்கும் ஒப்புக் கொள்ளாவிட்டால் நான் பெண்ணே அல்ல! என் வயிற்றில் பிறந்தாலும் அவர்கள் உங்கள் பெயரர்கள்தான். அவர்களுக்குப் பெயர் வைக்கும் உரிமை தங்களுக்கு இல்லாமல் எவருக்கு ஐயா இருக்கிறது?” என்று சொல்லி விட்டு நாணத்துடன் தலையைக் குனிந்து கொள்கிறாள்.
மெல்ல தன் கைகளைத் தட்ட ஆரம்பிக்கிறான் இராஜேந்திரன். அனைவரும் அவனைத் தொடர்ந்து கையொலி எழுப்புகின்றனர்.
* * *
                           ஜெயங்கொண்ட சோழபுரம்
                             பிங்கள, வைகாசி 24 - ஜூன் 9, 1017

குடிசை ஒன்றில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டிருக்கின்றனர் இராஜேந்திரனும், சிவாச்சாரியனும். தூரத்தில் நகர நிர்மாணப் பணியால் ஏற்படும் ஒலிகளும், கூச்சல்களும் மெலிதாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. குடிசைக்கு அருகில் இருக்கும் மரங்களில் கட்டப்பட்டிருக்கும் குதிரைகளின் கனைப்புச் சத்தமும் அவ்வப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கிறது. வைகாசி வெய்யில் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தாலும் குடிசையின் நிழல் கொஞ்சம் குளுமையாகவே இருக்கிறது.

தன்னைத் தனியாகக் கூட்டி வந்ததிலிருந்தே மிகவும் முக்கியமான அரசுப் பணியைப் பற்றித்தான் பேச விரும்புகிறான் இராஜேந்திரன் என்று ஊகிக்கிறான் சிவாச்சாரி. கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் பேசாமலே இருக்கிறான் இராஜேந்திரன். மனதிலேயே தான் நினைப்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறான் என்பதை அறிந்ததால் தானும் அமைதியாகவே இருக்கிறான் சிவாச்சாரி.

“சிவாச்சாரியாரே! உம்மிடம் சில கேள்விகளைக் கேட்கவேண்டும், உமது போக்கிற்கு விளக்கம் பெறவேண்டும் என்று கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆயினும் தக்க தருணம் வரவில்லை. இருப்பினும் முக்கியமான சில அரசு முடிவுகளை நான் எடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. எனவே, உம்முடைய மன ஓட்டத்தை நான் புரிந்து கொண்டாக வேண்டும். எனவே, சுற்றி வளைக்காமல், எனது நண்பனாகப் பதில் சொல்வீராக!” என்ற பீடிகையுடன் தொடங்குகிறான்.

“முதலாவதாக, எனது தந்தையின் தமிழ்ப் பணியின்மீது எனக்கு அக்கரை இல்லை என்று நினைக்கிறீர் என்றும், இரண்டாவதாக, புதிய தலைநகரம் நிர்மாணிப்பதற்கு உமக்கு ஒப்புதலில்லை என்றும் எனக்குப்படுகிறது. மூன்றாவதாக, அந்தப் பெண் நிலவுமொழியைச் சேதுராயரின் பெயரனுக்கு மணமுடிப்பதிலும், இறுதியாக, ஆளவந்தானுக்கு “மனுகுலகேசரி”  என்ற பட்டத்தை அளிக்கவேண்டும் என்பதிலும் ஏன் என்னை நீர் கட்டாயப்படுத்தினீர் என்றும் எனக்குத் தெரியவேண்டும். இன்னும் இரண்டு நாழிகைக்கு இங்கு யாரும் வரக்கூடாது என்று ஆணை பிறப்பித்து விட்டுத்தான் உம்மை அழைத்து வந்திருக்கிறேன். எனவே நீர் நிதானமாக எனக்கு உமது மனஓட்டத்தை விளக்குவீராக!” என்று கேட்கிறான்.

இராஜேந்திரன் இந்தக் கேள்வியைத் தன்னிடத்தில் கேட்பான் என்பது சிவாச்சாரி முன்னமேயே அறிந்திருந்ததுதான். ஆயினும், எப்பொழுதும் உடனுக்குடன் எந்த விஷயத்தையும் தீர்மானித்து அறிந்து கொள்ள விரும்பும் இராஜேந்திரன் ஏன் ஒரு ஆண்டுக்கும் மேலாகக் காத்திருந்தான் என்பதுதான் புரியாத புதிராக இருந்தது. அவனுடைய இந்தக் கேள்விகளுக்குத் தான் அளிக்கும் விளக்கத்தில்தான் தனது எதிர்காலமே அடங்கி இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்கிறான் சிவாச்சாரி. அரசன் என்று தான் காட்டி வந்த தயக்கத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்பதால்தான், நண்பனாகப் பதில் சொல்லுமாறு இராஜேந்திரன் கேட்கிறான் என்பதும் புரிகிறது.

“கோப்பரகேசரியாரே!” என்று துவங்கிய அவனைக் கையமர்த்துகிறான் இராஜேந்திரன். “ஓய் சிவாச்சாரியாரே! உமக்கு எத்தனை தடவை நான் சொல்லவேண்டும், நண்பனாகப் பதில் சொல்லும் என்று?” இராஜேந்திரனுடைய மீசை துடிக்கிறது.

“இப்பொழுது நான் சோழ நாட்டுப் பேரரசனாக உம்முடன் உரையாடவில்லை. உமது தயக்கத்தை விடும். அந்தப் பெண் நிலவுமொழி எவ்வளவு துணிச்சலுடன் சேதுராயருடன் உரையாடினாள்! அவளுடைய துணிச்சலைக் கொஞ்சம் கடன் வாங்கிக் கொண்டு ஒரு நண்பனுடன் உரையாடுவது போல உரையாடும்!” இராஜேந்திரனின் பொறுமை குறைகிறது என்பதை அவனது குரல் நன்றாக உணர்த்துகிறது.

“அப்படியே மதுராந்தகா!” என்று ஆரம்பிக்கிறான் சிவாச்சாரி.
அவன் தன்னை இப்படி அழைப்பான் என்று எதிர்பார்க்காத இராஜேந்திரன், ஒருகணம் கழித்து தனக்கே உரிய உரத்த குரலில் கடகடவென்று நகைக்கிறான். “இதுதான் நான் விரும்புவது. மேலே தொடரும்!” என்று சிவாச்சாரி அருகில் நெருங்கி அமர்ந்து கொள்கிறான் இராஜேந்திரன்.
“முதல் கேள்விக்குப் பதில் சொல்வதானால் நான் முதல் முறையாக உங்களைக் கருவூராருடன் சந்தித்த நாளுக்குச் செல்ல வேண்டும்!” என்றபடி அங்கு இராஜேந்திரனுக்கும், இராஜராஜருக்கும் நடந்த சிறு பூசலைச் சுட்டிக் காட்டுகிறான்.

“அப்பொழுது அங்கு உங்களுக்கும், சக்ரவர்த்தியாருக்கும் இடையில் ஒரு திரை விழுந்த மாதிரி எனக்குத் தோன்றியது. அது எனக்கு மட்டும் தோன்றவில்லை, கருவூராருக்குமே தோன்றியது என்பதை அவர் தமிழ்த் திருப்பணியைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டுப் புறப்பட்டதிலிருந்து தெரிந்து கொண்டேன். அதுமட்டுமல்ல...” என்று மேலே தொடர்ந்து கருவூரார் இராஜேந்திரனும், இராஜராஜரும் பாண்டியருடன் உறவை மறுத்ததைப் பற்றியும் விளக்குகிறான்.

“அது கருவூராரின் மனதை மிகவும் பாதித்து விட்டது. எனவேதான், அவர் திருக்கயிலைக்குச் செல்லத் தீர்மானித்து தஞ்சையை விட்டு நீங்கி விட்டார். மேலும், நீங்களாகக் கேட்காவிடில், நான் அவரது மன ஓட்டத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் ஆணையிட்டுவிட்டார். பாண்டியருடன் நாம் இணைந்தால்தான் தமிழ்த் திருப்பணி நிறைவேறும் என்றும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
“தாங்கள் என்னை தமிழ்த் திருப்பணி ஆலோசகனாக நியமிக்கும்படி பரிந்துரைத்தது திருப்பணிக்கு மிகவும் உதவியது. ஆயினும் பாண்டியன் அமரபுஜங்கனுடன் சக்ரவர்த்தி அவர்கள் நடத்திய வாட்போர் அவரது உடல் நலத்தை மிகவும் பாதித்து விட்டது. திருப்பணி ஒரு நல்ல நிலைக்கு வருமுன்னரே தன் இறுதிக் காலம் நெருங்கி விட்டதே என்று வருந்தினார். அவர் கேட்டுக்கொண்டதால் தங்களுக்குச் சொன்ன இந்த உண்மையை அவருக்குச் சொன்னேன்.

“கருவூராரின் திருக்கயிலைப் பயணத்தின் காரணம் அவரை மிகவும் செயலிழக்கச் செய்து விட்டது. அவரின் கம்பீரம், தன்னம்பிக்கை, எதற்கும் அஞ்சாச் சிங்க நெஞ்சம் - கொஞ்சம் கொஞ்சமாகப் பொலிவிழந்து வருவதை தினமும் கண்டுவந்த நான் மிகவும் கலங்கினேன். என்னைத் திருமந்திர ஓலைநாயகமாக நியமித்தது என்னைத் தமிழ் திருப்பணியில் முழுதும் ஈடுபடவிடாமல் என் கவனத்தைத் திருப்பியது. அவரிடமே இதுபற்றிப் பேசிவந்தேன். அதைச் சரிசெய்ய முயன்ற பொழுதுதான் நான் இளஞ்சேரனிடம் பிடிபட்டுத் திரும்பினேன். அவரின் காலமும் முடிந்துவிட்டது.

“அந்த ஆற்றாமைதான் என்னை நிலைகுலைய வைத்து என் மகள் சிவகாமியிடம் தாங்கள் அனுமதிக்கும்வரை திருப்பணியைச் செய்வேன் என்று சொல்லவும் வைத்தது. என்றும் இல்லாத அதிசயமாக அவள் நான் பேசியதைத் தங்களிடம் சொல்லிவிட்டாள். அது தங்கள் மனதில் எப்படிப் பதிந்ததோ என்று இன்னும் தவித்துக்கொண்டுதான் இருக்கிறேன். தாங்கள்தான் அதைப் பற்றி என்னிடம் சொல்ல வேண்டும்.

“மேலும், சக்ரவர்த்தியாரின் மறைவிற்குப் பின்னர் தாங்கள் என்னை மேலும் மேலும் மற்ற அரசுப் பணிகளில் ஈடுபடுத்த ஆரம்பித்தீர்கள். எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்துத் தாங்கள் எடுத்த முடிவு ஆகும் அது. என்னுடைய ஓலை நாயகத்தின் பதவி உரிமையைக் கொண்டு சக்ரவர்த்தியாரின் இறைவனடிமைத் திட்டத்தை நிறைவேற்றி விட்டேன். கோவில்கள் தோறும் இறைவனடிமைப் பெண்கள் தமிழ்க் கலைகளை வளர்த்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு கொடுத்திருக்கும் அங்கீகாரமும், அந்தஸ்தும் பலரையும் இறைவனடிமைத் திட்டத்திற்கு ஈர்த்து வருகிறது.


“தங்களது மூத்த மகனான ஆளவந்தானுக்கும் சோழநாட்டின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று உண்மையாக நம்பினேன். அவன் மூலமாகவே சேரநாட்டில் தமிழ் உருமாறிவரும் நிலையைத் தடுக்கத் திட்டம் தீட்ட ஆரம்பித்தேன். அதற்காகவே அவனுக்கு “மனுகுலகேசரி” என்ற பட்டத்தைத் தாங்கள் அளிக்குமாறு இடைவிடாது கோரினேன்.” சிறிது நேரம் சிந்தனை ஓட்டத்தை ஒருங்குபடுத்திவிட்டு மீண்டும் தொடர ஆரம்பிக்கிறான் சிவாச்சாரி.[தொடரும்]

1 comment:

  1. எளிய தமிழில் இனிய சரித்திரத்தொடர்....சரித்திரத்தொடர்கள் மக்களைக் கவருவதற்கு அதன் மொழிநடைதான் காரணம். அவ்வகையில் இத்தொடர் வெற்றிநடை போட்டுவருகிறது.

    ReplyDelete