Thursday 25 September 2014

வாழ வைத்திருக்கிறது தீபத்தின் அறிவு ஒளி

டாக்டர் மு.வ
ஒருமுறை நா.பா. ஒரு கடிதம் கொடுத்து, டாக்டர் மு.வரதராசனார் அவர்களிடம் கொடுக்க என்னை அனுப்பினார். எழும்பூர் ரயில் நிலையம் சென்று, ரயிலில் அமர்ந்திருந்த மு.வ. அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர் மதுரைக் காமராசர் பல்கலையின் துணைவேந்தராக இருந்ததாக நினைவு. ஜன்னல் வழியே அவரைக் கண்டு, வணங்கி, கடிதத்தை நீட்டினேன், உள்ளே வருமாறு அழைத்தார். சென்று நின்றேன். எதிர் இருக்கையில் அமரச் சொன்னார். பயணிகள் இன்னும் அதிகம் வரவில்லை. பரபரப்பு கூடாது என்பதால் மு.வ. முன்னதாகவே வந்து அமர்ந்திருந்தார். 

எங்கள் மாமா வீட்டில், சிறு வயதில் மு.வ. நூல்களை நான் கண்டதுண்டு. மண்குடிசை, அகல்விளக்கு, கரித்துண்டு, கள்ளோ காவியமோ போன்ற மு.வ.வின் கதைகள் சிலவற்றைப் படித்துவிட்டு என் மாமா சிலாகித்துப் பேசியதும் மனத்தில் பதிந்திருந்தது. சென்னை வந்தபின் நானும் ஒன்றிரண்டு கதைகளை வாசித்திருக்கிறேன். பள்ளியில் படித்தபோது, திருக்குறளுக்கு மு.வ. உரையெழுதிய கையடக்கப்பதிப்பு ஒன்று என்னிடம் இருந்தது.

மு.வ. வுக்குப் பிறகு இலட்சிய நோக்குடைய கதை மாந்தர்களை உலவ விட்டுக் கதைகள் படைத்தவர் நா.பா. என்றொரு பேச்சு உண்டு. அத்தகு மாமனிதரை அருகில் பார்த்த பிரமையில் இருந்தேன் நான். அன்று மு.வ.தீபம் இதழ் எப்படி நடக்கிறது? இலக்கிய ஏடுகள் விற்பனையாகின்றனவா?’ என்றெல்லாம் அக்கறையுடன் கேட்டார். என்னைப்பற்றியும் விசாரித்தார். அந்த சந்திப்பு என்னால் மறக்க முடியாதது.

இதே போல் ஒரு முறை கவிஞர் கண்ணதாசன் வீட்டிற்கு நா.பா. என்னை அனுப்பினார். தீபாவளி இதழ் கொடுக்க வேண்டியிருந்தது. அதில் கண்ணதாசனின் கவிதை இடம் பெற்றிருந்தது. இரவு ஒன்பது மணிக்கு மேல் அங்கு சென்றிருந்தேன். கவிஞர் சாப்பிட்டபின் படுக்கையறையில் உட்கார்ந்திருந்தார். நான் வாசலில் இருந்தவர்களிடம் தீபம் இதழைக் கொடுத்துவிட்டுச் செல்லவே நினைத்தேன். ஆனால், கவிஞர் உள்ளே அழைத்தார். சென்றேன். அவருக்கே உரிய சூழ்நிலையில்தான் அவர் இருந்தார். ஆயினும் என்னை உட்கார வைத்து, தீபத்தில் பிரசுரமான கவிதையை வாசிக்கச் சொன்னார். நான் ஏதோ கட்டுரை படிப்பது போல வாசித்தேன். எத்தனை பெரிய கவிஞர் முன்னிலையில் இருக்கிறோம் என்கிற பதற்றம் எனக்கு. அவரோ நிதானமாக என்னைத் திரும்ப ஒரு முறை படிக்கச் சொல்லிவிட்டு, இதழை வாங்கிப் பார்த்தார். அட்டையில் அமுதோன் வரைந்த ஓவியம். அதை மிகவும் ரசித்தார். பிறகு அவர் நடத்திய ‘கண்ணதாசன்’ இதழைப் பற்றி ஏதேதோ சொன்னார். ‘ரொம்ப சிரம்மப்பா... பத்திரிகை நடத்துவது சாதாரண காரியமில்லை. பாவம், நா.பா. எப்படித்தான் சமாளிக்கிறாரோ, விசாரித்தேன் என்று சொல். எப்போது வேண்டுமானாலும் நீ இங்குவா, தீபத்திற்கு எது வேண்டுமானாலும் எழுதித் தருகிறேன்’ என்றார். (பிறகு நான் மணியனிடம் சென்ற பிறகும் இதயம் பேசுகிறது இதழில் கவிஞர் எழுதிய ‘மனதுக்குத் தூக்கமில்லை’ என்ற தொடர்கதை சம்பந்தமாக அவரை நான் சந்தித்ததுண்டு)

ஓவியர் அமுதோன், மாருதி போன்றவர்கள் நா.பாவிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள். தீபம் அட்டைக்கு இவர்கள் அருமையான ஓவியங்களை மிகக் குறைந்த சன்மானம் பெற்றுக் கொண்டு வரைந்து தருவார்கள். மணியம் செல்வன் அப்போது ஓவியக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். இவரும் தீபம் அலுவலகத்திற்கு வருவார். படங்களும், அழகிய தலைப்புகளும் எழுதித் தருவார். தினமணிகதிர் அலுவலகத்தில் ஜெயம் என்றொரு பெரியவர் இருந்தார். சுதேசமித்திரனில் வெளியான ‘புத்தரின் புன்னகை’ என்ற என்னுடைய முதல் கதைக்கு இவர்தான் ஓவியம் வரைந்திருந்தார். இவரும் தீபத்திற்கு நிறைய கதைத் தலைப்புகள் எழுதித்தருவார். ஓவியர் ஏ.எஸ் மணி என்றொரு பெரியவர் தாம்பரத்திற்கு அப்பாலிருந்து வருவார். கு. அழகிரிசாமி தீபத்தில் எழுதிய உலகப் புகழ் பெற்ற குட்டிக் கதைகளுக்கு இந்த மணி மின்னல் வேகத்தில் ‘கேரிகேச்சர்’ டைப் படங்களை  வரைந்து தருவதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். இவருடைய திறமைகள் பற்றி ஓவியர் மாருதி நிறையவே புகழுவார்.

மாருதி அப்போது மயிலாப்பூரில், லட்சுமி லாட்ஜில் தங்கியிருந்தார். திருமணம் ஆகியிருக்கவில்லை. மாருதி நா.பா.விடம் மிகுந்த அன்புடையவர். தீபத்திற்கு அட்டைப் படமோ, கதைகளுக்கான ஓவியங்களோ ஆர்வத்துடன் வரைந்து தருவார். பணம் எத்தனைக் குறைவு என்றாலும் அதைப்பற்றி எதுவும் பேச மாட்டார். ‘பாவம், ஒரு நல்ல எழுத்தாளர். அவரே கஷ்டப்பட்டு தீபம் நடத்துகிறார். அவராக எவ்வளவு கொடுக்கிறாரோ, அது போதும்...’ என்று அனுதாபத்துடன் பேசுவதோடு, என்னையும் அழைத்துச் சென்று, மெஸ்ஸில் சாப்பாடு வாங்கித் தருவார். மாருதி நல்ல இலக்கிய ரசிகர். கம்யூனிஸம் பேசுவார். புல்லாங்குழல் வாசிப்பார். பல புகழ்பெற்ற ஓவியர்களைப் பற்றி மாருதி கூறிய தகவல்களைத் தொகுத்திருந்தால், ஒரு புத்தகமே போட்டிருக்கலாம். வெலிங்டன் தியேட்டரில் ஞாயிறு காலைக் காட்சிகளில் இந்தி, வங்காளிப் படங்கள் ஓடும், சத்தியஜித்ரே போன்ற சில பிரபலங்களின் படங்களைப் பார்த்துவிட்டு வந்து நா.பாவிடம் தொலைபேசியில் கூறுவார். உடனே நா.பா. என்னை டிக்கேட் வாங்கி வரச்சொல்லி, அப்படங்களைப் பார்ப்பார். இதன் காரணமாக ‘பதேர் பாஞ்சாலி’, ‘ஆரண்யா தீன் ராத்திரி’, அஷானி சங்கேத் போன்ற பல அபூர்வமான திரைப்படங்களை நானும் பிறகு பார்த்ததுண்டு.

‘தீபம்’ அலுவலகத்தில் பல எழுத்தாளர்களும் நா.பா.வின் ரசிகர்களும் வந்து அமர்ந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருப்பர். நா.பா.முகம் சுளிக்காமல் அத்தனை பேருடனும் இனிமையாகப் பேசுவார். அப்படி வருகிற பலரும் பெரிய பெரிய உத்தியோகம் பார்ப்பவர்களாகவும் இருப்பர். ஆனால், தீபத்தில் நா.பா.இட்ட வேலைகளை ஆர்வமுடன் செய்து கொண்டிருப்பர். தீபம் இதழ்களைக் கடையில் போடுவதை விட, சந்தாதாரர் எண்ணிக்கையே அதிகம். ஆயிரக்கணக்கான பிரதிகளுக்கு சந்தாதாரர் விலாசம் ஒட்டிய உறைகளைச் சுற்ற வேண்டும். இது போன்ற பணிகளை மிகப்பெரிய உத்தியோகம் பார்க்கும் பலர் அங்கு வந்து, ஒரு தொண்டு போலச் செய்வர்.

நா.பா. ‘POWER’  என்று ஓர் இலக்கிய அமைப்பை ஆரம்பித்து நடத்தினார். மாதத்தில் ஒரு நாள் நிகழும் இந்த ‘பவர்’ அமைப்பின் கூட்டத்திற்கு அத்தனை எழுத்தாளர்களும் வருவர். பழைமைச் சிந்தனைகள் மாறாத முதுபெரும் தமிழறிஞர் கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ முற்போக்குச் சிந்தனையுள்ள பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் சா. கந்தசாமி அனல்பறக்கும் அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதும் சின்னக் குத்தூசி, மொழிபெயர்ப்பு இலக்கிய வித்தகர்கள் என்று பலதரப்பட்ட எழுத்தாளர்களும் அங்கு ஒன்று கூடுவர். மாடியில் தரையில் ஜமுக்காளம் விரித்து அமர்ந்து விவாதங்கள் நிகழும். எத்தனை மாறுபட்ட கருத்துகள் எத்தனை உரத்த குரலில் பேசப்பட்டாலும், இறுதியில் அன்பும் மரியாதையும் மாறாமல் ஒருவரோடொருவர் கைகுலுக்கி, மகிழ்வுடன் கலைந்து செல்வர்.

உலகப்பார்வை, சமூகச் சிந்தனை, படைப்புகளின் உன்னதம் என்று ஏராளமான விஷயங்களை இந்தக் கூட்டங்களில் என்னைப் போன்றவர்கள் பெற முடிந்தது என்றால் அது மிகையில்லை. ஒரு நல்ல கதையை எங்கே படித்திருந்தாலும் அதைப் பற்றி அங்கே சிலாகித்துப் பேசுவார்கள். எழுதும் கனவுகளோடு உள்ள ஒரு புதிய இளைஞனுக்கு இது ஒரு பயிற்சிப் பட்டறை போலவே இருந்தது எனலாம்.உப்பிலி சீனிவாசன், அ.நா.பாலகிருஷ்ணன், சங்கரி புத்திரன், ஆவடி சீனிவாசன், பாலசுப்பிரமணியன், எம்.எஸ்.தியாகராஜன், கண்ணன் மகேஷ் போன்ற பலர் ‘தீபம்’ அலுவலகத்திற்கு அடிக்கடி வருவார்கள். எல்லோருமே நல்ல உத்தியோகத்தில் இருந்தனர். எழுத்துக் கனவு சிலரிடம் இருந்தது. சிலர் நல்ல ரசனையோடு மட்டும் இருந்தனர்.

இவர்களையும் இன்னும் சிலரையும் பற்றி தனித்தனியே ஒரு கட்டுரையே எழுதலாம். அவ்வளவு விஷயம் இருக்கிறது.

மு. மேத்தா, நா. காமராசன் போன்ற அருமையான கவிஞர்களின் ஆரம்பகாலப் புகழ்மிக்க படைப்புகள் தீபத்தில்தான் வெளியாயின. மொழிபெயர்ப்புக்கென சாகித்ய அகாடமி விருது பெற்ற குறிஞ்சி வேலனின் அற்புதமான பல படைப்புகள் தீபத்தில் இடம் பெற்றன. இதைப் பற்றியெல்லாம் விரிவாகச் சொல்ல ஆரம்பித்தால், அது பெரிய ஆய்வுக்கட்டுரை நூல் போலாகிவிடும்.
தெருவில் கிடந்த என்னை எடுத்துத் தூசுதட்டி, ஒரு நல்ல மனிதனாக - எழுதும் ஆற்றலுடையவனாக ஆக்கியவர் நா.பா. ‘காணும் உலகம்’ மட்டுமே அறிந்திருந்த எனக்கு ‘அறியும் உலகம்’ என்றிருக்கிறது என உணர்த்தியவர் நா.பா. அவருடைய தொடர்பு மட்டும் ஏற்படாது போயிருந்தால், நான் சிதைந்து- சின்னாபின்னமாகியிருப்பேன்.

நா.பா.வுக்காக நான் சந்திக்க நேர்ந்த ஒவ்வொரு மனிதரும் என்னுள் பெரும் சிந்தனைக் கிளர்வை ஏற்படுத்தினர். வரலாற்று அறிஞர் அ.கி. பரந்தாமனார், தேசிய உணர்வி ஊறிய கு. ராஜவேலு, புதுக்கவிதை அலைகளை இலக்கியக்கடலில் பரவலாகத் தோன்றச் செய்த ‘எழுத்து’ சி.சு.செல்லப்பா பாரதிக்குப்பின் இதன் நவீன முன்னோடியான ந.பிச்சமூர்த்தி, இளசுகளை எழுதுகோலுடன் திரும்பிப் பார்க்க வைத்த சிவகங்கைப் பேராசிரியர் மீ.ரா. ‘இந்து’ நாளிதழின் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த ஆர். நடராஜன், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் புதல்வர் வ.உ.சி. சுப்பிரமணியம், ரசிகமணி டி.கே.சி.யின் வட்டத்தொட்டியை நடத்தியவரும் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் புதல்வியுமான ராஜேஸ்வரி நடராஜன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், நீதிபதி மகராஜன், தனித்தமிழ்ப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தாளர் சங்கச் செயலாளர் கா.சோமசுந்தரம், குயிலிராஜேஸ்வரி, ஜோதிர்லதாகிரிஜா, தி.க.சியின் புதல்வர் வண்ணதாசன், நண்பர் வண்ண நிலவன் என்று ஒரு நீண்ட பட்டியலே என் மனப்பேழையில் ஒளிவிடும் ரத்தினங்களோடு பதிந்திருக்கின்றது.

தீபத்தின் அறிவு ஒளிதான் என்னையும் ஓர் எழுத்தாளன் என்று பெயர்சொல்லி, வாழ வைத்திருக்கிறது.
[வையவன் படைப்புக்களை இதய ஒளி ப்ளாகில் காணலாம் blog address 
idhayamaeoli.Blogspot.in]

No comments:

Post a Comment