Tuesday 30 October 2012

விண்வெளி தரிசனம்

வைனு பாப்பு  தொலைநோக்கிக் கூடம் 
விண்வெளி தரிசனம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய வான்வெளித் தொலைநோக்கி (Telescope), தமிழகத்தின் காவலூரில் அமைந்து இருக்கிறது; அங்கே கோள்களின் இயக்கத்தை ஆராய்கிறார்கள்
காவலூர் வான்வெளி ஆய்வு மையத்துக்கு, ‘வைனு பப்பு’ என்பவரது பெயரைச் சூட்டி இருக்கிறார்கள். (Vainu Bappu Observatory). அவர்தாம், அந்த மையத்தின் முதலாவது இயக்குநராக இருந்து, அமைப்புப் பணிகளை மேற்கொண்டவர். இந்திய வான்வெளி ஆராய்ச்சிகளில் அவர் ஒரு முன்னோடி. அவரது நினைவாக, அந்தப் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
வைனு பாப்பு


இந்த ஆய்வு மையத்தை, வாரந்தோறும் சனிக்கிழமை, பிற்பகல் 2 முதல் 5 மணி வரை மட்டுமே, பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்; வானிலை தெளிவாக இருந்தால், மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும், விண்மீன்களைப் பார்க்கலாம் என்று குறிப்புகள் காணப்பட்டன.வாணியம்பாடியில் பிரியாணியை ஒரு பிடி பிடித்தோம். அங்கிருந்து ஆலங்காயம், ஜமுனா மரத்தூர் வழியாக, மாலை 4 மணி அளவில், காவலூர் போய்ச் சேர்ந்தோம். ஆய்வு மையத்தின் நுழைவாயிலில், நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள். கதவைத் திறந்ததும், நடக்கத் தொடங்கினோம். சற்று ஏற்றமாக உள்ள அந்தப் பாதையில் நடந்தேதான் செல்ல வேண்டுமாம்.

முதலில் 6 இன்ச  தொலைநோக்கி அறை தென்பட்டது. அடுத்து, 25 இன்ச , 40 இன்ச் என வரிசையாக தொலைநோக்கி அறைகள் அமைந்து உள்ளன.

சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 90 இன்ச் தொலைநோக்கிதான், வைனு பப்பு தொலைநோக்கி. இதுதான் பெரியது. தொலைவில் இருந்து பார்க்கும்போது சிறிதாகத் தெரிந்தது. அருகில் சென்றபோது, பிரமாண்டமாக இருந்தது. சுமார் 75 முதல் 100 அடி உயர கோபுரம். லிப்ட் இருந்தாலும், காவலர் படிகளின் வழியாக ஏறிச் செல்லுமாறு கூறிவிட்டார். வயதானவர்கள், உடல் பருத்தவர்கள் மூச்சு வாங்கிக் கொண்டு மேலே ஏறி வந்தார்கள்.

உள்ளே இருந்த பிரமாண்டமான தொலைநோக்கியைப் பார்த்தபோது, ஆங்கிலப் படங்களின் காட்சிகள் நினைவுக்கு வந்தன. எங்களுக்கு முன்பு சுமார் 25 கல்லூரி மாணவர்கள் ஒரு குழுவாக நின்றுகொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு தொலைநோக்கியைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லிக்கொண்டு இருந்தார் ஊழியர் ஒருவர். நாங்களும் அந்தக் குழுவில் போய் இணைந்து கொண்டோம்.

“இதுதான் தொலைநோக்கி; வட்டவடிவில் சுழலக்கூடியது; முன்னும் பின்னும், மேலும் கீழுமாக இயங்கக் கூடியது. மேலே இருக்கின்ற மூடி திறக்கும்; அதன் வழியாக தொலைநோக்கி, விண்ணைப் பார்த்த நிலையில் இருக்கும்போது, தொலைவில் உள்ள விண்மீன்கள், கோள்களில் இருந்து பெறப்படுகின்ற ஒளிக்கற்றைகள் குறித்த விவரங்களைப் பக்கத்தில் உள்ள கணினிகளில் பெற்று, ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்”என்றார்.

நான் ஒரு சில விளக்கங்களைக் கேட்டேன். வேறு யாரும் பேசவில்லை. ஐந்து நிமிடங்களுக்கு உள்ளாக அவர் தன்னுடைய விளக்கத்தை முடித்துக் கொண்டார். “அவ்வளவுதான், நீங்கள் போகலாம்; அடுத்த குழு வருவார்கள்” என்றார்.

இருபத்து ஆண்டுகளாகப் பார்க்கத் திட்டமிட்டு, இந்த ஐந்து நிமிட விளக்கத்தைப் பெறுவதற்காகவா, நேரத்தையும், பணத்தையும் செலவழித்து, சென்னையில் இருந்து இவ்வளவு தொலைவு வந்தோம்?

தொலைநோக்கி வழியாக விண்வெளியில் எதையாவது காட்டுவார்கள் என்று பார்த்தால், இப்படி விரட்டுகிறார்களே? என்று எண்ணிக்கொண்டே, அவரிடம் பேசினேன்:

“ஐயா நான் ஒரு பயண எழுத்தாளர். காவலூர் தொலைநோக்கியைப் பற்றி மக்கள் எளிதில் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ஒரு கட்டுரை எழுதும் நோக்கத்தோடு வந்தேன். எனக்கு மேலும் விவரங்கள் வேண்டும்” என்றேன்.

“அப்படியானால், ஒரு மணி நேரம் பொறுத்து இருங்கள். பார்வையாளர்களை அனுப்பி விட்டு வருகிறேன்” என்றார்.

அடுத்த குழுவினர் வந்தார்கள். நாங்கள் அங்கேயே ஒதுங்கி நின்றுகொண்டு இருந்தோம். அவர்களுக்கும் ஐந்து நிமிட விளக்கம்தான். அதற்குள் அங்கே வந்த ஒரு காவலர், “ஆர்.டி.ஓ. வருகிறார்” என்று எல்லோரது காதுபடவும் சத்தமாகச் சொல்லிவிட்டு, அந்தக் குழுவை உடனடியாக அங்கிருந்து அகற்றினார். ஏமாற்றத்தோடு அவர்கள் போய்விட்டார்கள்.

ஆனால், அடுத்து அரை மணி நேரமாகியும் எந்த ஆர்.டி.ஓ.வும் வரவில்லை.

கூட்டத்தை விரட்ட வேண்டும் என்றால், இப்படிச் சொல்லி விரட்டுவது ஒரு சூழ்ச்சி என்பதைப் புரிந்து கொண்டேன். நாங்கள் அங்கேயே ஒரு ஓரமாக நின்றுகொண்டு இருந்தோம்.

அதற்குள் இருள் சூழ்ந்து விட்டது. இருட்டு என்றால், அப்படி ஒரு கும்மிருட்டு.

இருபது ஆண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் பத்து ஆயிரம் கிராமங்களுக்கும் மேல் சுற்றி வந்து இருக்கிறேன். அதற்கான சான்று ஆவணங்களையும் வைத்து உள்ளேன். ஆனால், தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்திலும் இப்படிப்பட்ட கும்மிருட்டை நான் பார்த்ததே இல்லை.

தொலைநோக்கி கோபுரத்தின் உச்சியில் உள்ள பலகணியில் நின்று கொண்டு பார்த்தபோது, கண்ணுக்கு எட்டிய தொலைவிலும் ஒரு மின்விளக்கு கூடத் தென்படவில்லை. ஊட்டி, கொடைக்கானல், மலைவழியில் இரவு நேரங்களில் ஏறும்போது, ஆயிரக்கணக்கான மின்விளக்குளின் ஒளி வெள்ளத்தைப் பார்க்கலாம். ஆனால், காவலூரில் ஒரு விளக்கும் இல்லை.

தொலைநோக்கி இருக்கின்ற இடத்தில் இருந்து, சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவுக்கு, விளக்குகள் பொருத்துவதற்கு அனுமதி இல்லையாம். தொலைநோக்கிக் கோபுரத்தில் இருந்து வெளியே வந்தால், கீழே தரையில் ஒன்றுமே தெரியவில்லை.

இரண்டாம் முறையாக மேலே ஏறும்போது, லிப்ட் வழியாக ஏறினோம். கதவைத் திறந்தபோது, லிப்டுக்கு உள்ளேயும் விளக்கு இல்லை. கதவைப் பூட்டியபின்புதான், ஊழியர் மின்விளக்கைப் போட்டார்.

இரண்டாவது அடுக்கு தாண்டியவுடன் அந்த விளக்கும் தானாக அணைந்து விட்டது. ஒரு சிறிய குண்டு பல்ப் கூட எரியவில்லை. அதுகூட, தொலைநோக்கியின் இயக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் இத்தகைய ஏற்பாடுகள்.

எல்லாப் பார்வையாளர்களும் சென்றபின்பு எங்களிடம் வந்த ஊழியர், “இன்றைக்குத் தொலைநோக்கியை இயக்க முடியாது” என்றார்.

அவரிடம் சில விளக்கங்களைக் கேட்டேன். அவர் சொன்ன தகவல்களுடன், நான் படித்த, டிஸ்கவரி தொலைக்காட்சியில் பார்த்த பல தகவல்களையும் தருகிறேன்:

நிலநடுக்கோட்டுக்கு அருகில் வைக்கப்படுகின்ற தொலைநோக்கியின் வழியாக, விண்ணில் இருந்து கூடுதலாக தகவல்களைப் பெற முடியும் என்பதால்தான், இந்தியாவின் தென்கோடியில், நிலநடுக்கோட்டுக்கு அருகில் உள்ள தமிழகத்தில் இந்தத் தொலைநோக்கி வைக்கப்பட்டு உள்ளது.

வானிலை மாசுபடாத, இயற்கைச் சூழலோடு சரியான ஈரப்பதம் நிலவுகின்ற இடமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், இந்த மலையைத் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.

நீண்டகாலமாக, இந்தத் தொலைநோக்கிதான், ஆசியாவிலே பெரிதாக இருந்தது. இப்போது, சீனாவில், இதைவிட சில இன்ச் கூடுதலாக உள்ள தொலைநோக்கியை நிறுவி இருக்கிறார்கள்.

‘ஹப்பிள் தொலைநோக்கி (Hubbel Space Telescope) என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதுவும், காவலூரில் உள்ளதுபோலவே, 93 இன்ச் விட்டம் கொண்ட தொலைநோக்கிதான் என்றாலும், அது விண்ணில் உள்ள செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டு உள்ளதால், மிக நீண்ட தொலைவுக்குத் தெளிவாக ஊடுருவிப் பார்க்கக் கூடிய ஆற்றல் வாய்ந்தது.

பூமியில் பொருத்தப்பட்டு உள்ள தொலைநோக்கிகள், மேகக்கூட்டத்தைத் தாண்டித்தான் பார்க்க முடியும் என்பதால், அது மிகப்பெரிய இடையூறாக இருக்கிறது. ஓராண்டில் சில மாதங்கள்தான் வானம் மிகத் தெளிவாகவும், மழை இன்றியும் இருக்கும். அப்போதுதான் அவற்றில் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். ஹப்பிள் தொலைநோக்கிக்கு இத்தகைய இடையூறுகள் ஏதும் இல்லை. அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆய்வு மையம், அந்தத் தொலைநோக்கியை விண்ணில் செலுத்தி உள்ளது.

தற்போது, பூமிக்கு அருகில் உள்ள கோள்கள் விண்மீன்கள் குறித்த அடிப்படைத் தகவல்கள் பெரும்பாலும் திரட்டப்பட்டு விட்டது. எனினும், தொடர்ந்து அவற்றில் நிகழுகின்ற மாறுதல்களைக் கண்காணித்து வருகிறார்கள். நீண்டதொலைவு ஊடுருவக்கூடிய புதிய தொலைநோக்கிகள் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் லே பகுதியில் வானம் மிகத் தெளிவாக இருக்கிறது. அங்கே புதிய தொலைநோக்கி ஒன்று அமைக்கப்படுகிறது.

உலகிலேயே பசிபிக் பெருங்கடலின் நடுவில் அமைந்து உள்ள, அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய் தீவுகளுக்கு மேலே உள்ள வானம்தான், மிகத் தெளிவான பகுதி என்பதால், அங்கே பல நாடுகள் தொலைநோக்கிகளை அமைத்து உள்ளன.

அங்கே, 30 மீட்டர் (சுமார் 100 அடிகள்) அகலம் கொண்ட, உலகிலேயே மிக பிரமாண்டமான தொலைநோக்கியை, பல நாடுகள் சேர்ந்து அமைக்க உள்ளன. இந்தியாவும், இந்தத் திட்டத்தில் சேர்ந்து உள்ளது. அந்தத் தொலைநோக்கியை அமைக்கும் பணி, 2018 ஆம் ஆண்டுதான் நிறைவு பெறும். அதற்குப்பின்னர், விண்வெளியைப் பற்றி மேலும் புதிய புதிய தகவல்களை நாம் பெற முடியும்.

டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிரபி போன்ற தொலைக்காட்சிகளில், விண்வெளி குறித்து விரிவான பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். டிஸ்கவரி தொலைக்காட்சியில் தமிழிலேயே பார்க்க முடியும்.

வாய்மொழியாகப் பெற்ற தகவல்களைத் தவிர, காவலூர் தொலைநோக்கி மையத்தில் உள்ள தொலைநோக்கியின் வழியாக நாம் விண்ணில் எதையும் பார்க்க முடியாது என்பது புரிந்தது. எதையும் நமக்குக் காட்டுகின்ற மனநிலையில் அங்கே உள்ள ஊழியர்கள் இல்லை.

எந்த ஒரு இடத்திலும், தொலைநோக்கி வழியாக நமக்கு விண்வெளியைக் காட்ட மாட்டார்கள். அவ்வப்போது, பத்திரிகைச் செய்திகளுக்காக நான்கு பேர் பார்ப்பது போலப் படம் போட்டுத் தங்கள் பணியை முடித்துக் கொள்வதுதான், இந்தியாவில் உள்ள பிளானடோரியங்கள், வானிலை ஆய்வு மையங்கள் செய்கின்ற ஏமாற்று வேலை. அதற்கு நாம் வெறுங்கண்ணால் நட்சத்திரங்களைப் பார்ப்பதே மேல்.

இவ்வளவு முயற்சிகள் எடுத்து வந்த எங்களால், தொலைநோக்கி வழியாக வான்வெளியைப் பார்க்க முடியவில்லையே, எட்டுக் கோடித் தமிழர்கள் வசிக்கின்ற தமிழ்நாட்டில், எத்தனை பேர் தொலைநோக்கி வழியாக, வான்வெளியைப் பார்த்து இருக்கிறார்கள் என்ற கேள்வியும் மனதுக்குள் எழுந்தது. இருபத்துஒன்றாம் நூற்றாண்டிலும் இதுதான் நிலைமை.

கும்மிருட்டுக்குள் நிற்கும் காவலூர் தொலைநோக்கி!

காவலூர் தொலைநோக்கி இருக்கின்ற இடம் கும்மிருட்டு என்று சொன்னேன் அல்லவா? ஆய்வாளர்களுக்கு மட்டும்தான் அங்கே வேலையாம். அவர்கள்கூட, தொலைநோக்கியின் வழியாகப் பார்க்க முடியாதாம். அதன்வழியாகப் பெறப்பட்டு கணினியில் பதிவு செய்கின்ற தகவல்களை வைத்துத்தான் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமாம்.
அப்படியானால், அடித்தட்டு மக்களைப் பொருத்த அளவில், காவலூரில் தொலைநோக்கி இருப்பதும், ஒன்றுதான்; இருப்பது தெரியாமல் கும்மிருட்டுக்குள் நிற்பதும் ஒன்றுதான். அதனால் நமக்கு எந்த நன்மையும் இல்லை; பெருமையும் இல்லை.

அதைப் பார்ப்பதற்காகச் சென்று உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்!

மூச்சு இரைக்க முக்கால் மணி நேரம் நடந்து மேலே ஏறி வருபவர்களுக்கு, மூன்று நிமிடங்கள் வாய்மொழியாக விளக்கம் கொடுத்து விரட்டுகிறார்கள். ஏன் இங்கே வந்தீர்கள் என்று கேட்காமல் கேட்கிறார்கள்.

நான் மேலே சொன்ன பிளானடோரியங்களிலாவது, புரொஜக்டரை வைத்து ஒரு படம் காட்டுகிறார்கள். காவலூரில் அதுவும் இல்லை. அங்கே நிறைய இடம் காலியாக இருக்கிறது. ஒரு இருட்டு அறைக்குள், சின்னத் தொலைக்காட்சியை வைத்து, விண்வெளியில் ஏற்கனவே எடுத்த படங்களைப் போட்டு சிறிய விளக்கமாவது கொடுக்கலாம். அதுவும் இல்லை.

93 இன்ச் பெரிய தொலைநோக்கியை இயக்குவதில் ஒருவேளை நடைமுறைச் சிக்கல்கள், சிரமங்கள் இருக்கலாம். 6 இன்ச் தொலைநோக்கி வழியாகக் காண்பிப்பார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை.

கேட்டால் எல்லாவற்றுக்கும் ஒரு காரணமாக, வானம் தெளிவாக இருக்க வேண்டும்; ஈரப்பதம் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்தான் தெளிவாகப் பார்க்க முடியுமாம்.

அப்படி என்றால், மற்ற மாதங்களில் பொதுமக்கள் வரவேண்டியது இல்லை என்று சொல்லி விடலாமே? ஏன் அலைய வைக்கிறார்கள்?

நான் விசாரித்தவரையில், இவர்கள் யாரையுமே தொலைநோக்கி வழியாகப் பார்க்க அனுமதிப்பது இல்லை என்பதை அறிந்து கொண்டேன்.

காவலூர் தொலைநோக்கி வழியாக விண்வெளியைப் பார்த்தவர்கள் யாரேனும் இருக்கின்றீர் களா?

அப்படிப் பார்த்தவர்கள் இருந்தால், உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.

சென்னையில் தொலைநோக்கிகள் எங்கே கிடைக்கும் என்று கேட்டேன். அதற்கும் பதில் இல்லை. ஆண்டுதோறும் நடைபெறுகின்ற சென்னை புத்தகக் காட்சியில், பஞ்சாப்பில் இருந்து வந்த நிறுவனத்தார் சிறிய தொலைநோக்கிகளை விற்கிறார்கள். இந்த ஆண்டும் விற்றுக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் 6000 ரூபாய் வரையிலும் சொன்னார்கள். சிறிய தொலைநோக்கியை அவ்வளவு விலை கொடுத்து வாங்கி, எந்த அளவுக்கு நம்மால் வான்வெளியை ஆராய முடியும்? என்ற எண்ணத்தில் வாங்கவில்லை.

பண்டைக்காலத்தில் நம்முடைய முன்னோர்கள், மின்சார விளக்குகள் இல்லாமல், கும்மிருட்டில் வாழ்ந்தார்கள். இரவு ஆனதும், வேறு வழி இன்றி, விண்மீன்களை எண்ணிக் கொண்டு இருந்தார்கள். அப்படி அவர்கள் கண்டுபிடித்துச் சொன்ன தகவல்களைத்தான், ராசி பலன்கள் என்று நாம் இன்றுவரையிலும் கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

இப்போது, நம்மில் எத்தனை பேர் தொடர்ச்சியாக வான்வெளியை ஆராய்கிறோம்?

350ஆண்டுகளுக்கு முன்பே கலிலியோ ஒரு சிறிய தொலைநோக்கியை வடிவமைத்து வான்வெளியை ஆராய்ந்தார்.

ஏழு கோடித் தமிழர்கள் என்றைக்குத் தொலைநோக்கி வழியாகப் பார்க்கப் போகிறோமோ என்ற கேள்விதான் எழுந்தது!
நன்றி :அருணகிரி ( writerarunagiri@gmail.com)

No comments:

Post a Comment