Monday 15 October 2012

யதார்த்தமும். பதார்த்தமும்.

சுஜாதா 
ஒரு யதார்த்தமும். மத்ததெல்லாம் ஒரு பதார்த்தமும்.
உயிர்மை-சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய
சுஜாதா விருதுகள்-2011
2011ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருது பெற்ற யுவ கிருஷ்ணாவின் குதூகலக் குறிப்புகள்.{இதன் மனம் திறந்த நேர்மைக்காக காலதாமதமானாலும் ஒரு மீள் பிரசுரம் செய்து மகிழ்கிறோம் -ஆசிரியர்)

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மனுஷ்யபுத்திரன் தொலைபேசி சொன்னபோது நம்பவே இயலவில்லை. “சொக்கா, சொக்கா... பத்தாயிரம் எனக்கா?” என்று மகிழ்ச்சியில் குதித்தேன்.

ஆம் நண்பர்களே. விருது, பாராட்டுப் பத்திரம், இதனால் கிடைக்கப்போகும் பெயர் இதையெல்லாம் விட ‘பத்தாயிரம்’தான் எனக்கு முக்கியமாகப் படுகிறது. ஏனெனில் கடனட்டை நிலுவைத்தொகை கழுத்தை நெரிக்கிறது. இதுதான் சார் யதார்த்தம். மத்ததெல்லாம் சும்மா பதார்த்தம்.


‘நாட்டாமை’ கவுண்டமணியின் பிரச்சினை அப்போதுதான் எனக்கு புரிய நேரிட்டது. விஷயம் தெரிந்ததிலிருந்தே “டீச்சரை நாட்டாமை தம்பி வெச்சிருக்காரு டோய்” என்கிற டைப்பில் விஷயத்தை யாரிடமும் சொல்லவும் முடியாமல், மென்று விழுங்கவும் முடியாமல்.. நேற்று மாலை ஆறு மணி வரை நான் தவித்த தவிப்பை எழுதிட தமிழில்/இங்கிலீஷில்/ஸ்பானிஷ் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க மொழிகளிலும் வார்த்தைகள் இல்லை. எகிறிக்குதித்து, தலையால் வானத்தை இடித்துப் பார்த்துவிடும் வண்ணம் சூப்பர்மேனாக பிறந்துத் தொலைக்கவில்லையே என்கிற ஆற்றாமை ஏற்பட்டது.

விருது பெற்றவர்கள் அடக்கமாக இருக்கவேண்டும் என்பது பொதுவிதி. சைக்கிள் கிடைத்தாலே மிதிமிதியென மிதிக்கும் அடங்காப்பிடாரியான எனக்கு புல்லட்டு கிடைத்திருக்கிறது. டபடபவென ஒலி எழுப்பி, ஒரு ஓட்டு ஓட்டிப்பார்த்துவிட மாட்டோமா?

குருநாதர் கெளதம்
காட்ஃபாதர் பா.ராகவன்
ஆசிரியர் மாலன்
அண்ணன்கள் யெஸ்.பாலபாரதி, சிவராமன்
பின் தொடரும் நிழலின் குரலான தோழர் அதிஷா

ஆகியோரே இவ்விருதுக்கான பெருமைக்கும், இனி எனக்கு எழுத்து அடிப்படையில் ஏதேனும் சிறப்புகள் நேர வாய்ப்பிருந்தால் அதற்கும் உரித்தானவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் நான் இயங்கிக் கொண்டிருக்க காரணமாக இருப்பவர்கள்.

பிறந்தவீடான கிழக்கையும், புகுந்த வீடான புதிய தலைமுறையையும் இவ்வேளையில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். எனது எழுத்துகளை பிரசுரித்த குமுதம் ரிப்போர்ட்டர், ஆனந்தவிகடன், அகநாழிகை, பில்டர்ஸ் வேர்ல்டு, பெண்ணே நீ, குங்குமம், தினகரன் வசந்தம், கீற்று, 4தமிழ்மீடியா, யூத்ஃபுல் விகடன் உள்ளிட்ட அச்சு மற்றும் இணைய இதழ்களுக்கும் நன்றியோ நன்றி.

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன், விகடன் ஆசிரியர் ரா.கண்ணன், எழுத்தாளர் சாருநிவேதிதா, தினமலர் வாரமலர் ஆபிஸ்பாய் அந்துமணி, எழுத்தாளர் ராஜூமுருகன், க.சீ.சிவக்குமார் ஆகியோரின் எழுத்துக்களை பிட் அடிப்பதைத் தவிர்த்து வேறெதையும் இதுவரை புதியதாக செய்துப் பார்த்ததில்லை. கிடைத்திருக்கும் அங்கீகாரம் எனக்கான தனித்துவம் ஒன்றினை தேடிக்கண்டிட ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.

குறைந்தபட்சம் 50 வயதுவரை இலக்கியவாதி ஆகும் எண்ணம் இல்லை என்பதைக்கூறி எனது வலைப்பூவை வாசிக்கும் தோழர்கள் வயிற்றில் இவ்வேளையில் பாலை வார்க்கிறேன்.

மேலும், இந்த வலைப்பூவை எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே ஆதரவும், ஊக்கமும் அளித்த தோழர்கள் முத்து (தமிழினி), முத்துக்குமரன், குழலி, பொட்டீக்கடை சத்யா, வரவனையான் செந்தில், செந்தழல் ரவி, சுகுணாதிவாகர், கோவி.கண்ணன், கேபிள்சங்கர், அகநாழிகை, பொன் வாசுதேவன், கார்க்கி, முரளி கண்ணன், பரிசல்காரன், அப்துல்லா, தமிழ்குரல், பகுத்தறிவு, லெனின், மதன் செந்தில், அருண், சுத்தத்தமிழ், வேக்கப்கால் உள்ளிட்ட ஏராளமான இணையத் தோழர்களும் எனது நன்றிக்குரியவர்கள். (விடுபட்ட பெயர்கள் மறதிப்பிழையால் நேர்ந்தது என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும்)

வலைப்பூ எழுதுவதற்கு முன்பாக நான் எழுதிப் பழகிய கருத்துக் களங்களான சிஸ் இந்தியா, தட்ஸ் தமிழ் மற்றும் தமிழ்நாடுடாக் ஆகிய தளங்களுக்கும் நன்றி.

எனது குடும்பத்தார் யாரும் எனது இணையத் தளத்தையோ, புத்தகங்களையோ வாசிப்பதில்லை என்பதால் அவர்களுக்கு எனது நன்றிகளில் எந்தப் பங்குமில்லை.

எனது வலைப்பூவை 2011ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருதுகளுக்கு தேர்ந்தெடுத்த நடுவர்கள் சாருநிவேதிதா, தமிழ்மகன் மற்றும் ஷாஜி ஆகியோருக்கு 100 மடங்கு நன்றிகள். உயிர்மை பதிப்பகத்துக்கும், அதன் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும், சுஜாதா அறக்கட்டளைக்கும் கோடி நன்றிகள்.

பி.கு : என்னுடைய தனித்துவ அடையாளமாக (?) நான் திரும்பிப் பார்க்கும் திமுக கொடி கலர் சர்ட்டு போட்ட படம் சமீப ஆண்டுகளாக உருவெடுத்திருக்கிறது. நான் எழுதும் புத்தகங்களின் பின்னட்டையிலும், விக்கிப்பீடியா பக்கத்திலும், இன்னும் ஏராளமான இடங்களிலும் இந்தப் படமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை 2007ஆம் ஆண்டு எடுத்த தோழர் மோகன்தாஸ். லக்கிலுக் (எ) யுவகிருஷ்ணாவுக்கு முகம் கொடுத்த அத்தோழருக்கும் இவ்வேளையில் ஸ்பெஷல் நன்றி.
[கலக்கீட்டீங்க தோழரே! அப்பப்போ இப்படி நம்ம பக்கம் வந்து போவறது!நாலு மன்சாலு சிரிப்பாங்க இல்லே ]

No comments:

Post a Comment