Monday 15 October 2012

காந்தி ஜெயந்திக் கவிதைகள் -2

 

                                  கவிஞர் புதுவைப்பிரபா

[காந்தி ஜெயந்திக் கவிதைகள்] 

ஒருவர் போதாது…!

கவிஞர் புதுவைப்பிரபா 


அணுஆயுத
ஆதரவாளர்களாலும்
வளர்ந்துவரும்
வன்முறையாளர்களாலும்
தாறுமாறாக தாக்கப்பட்டு
அவசர சிகிச்சைப்பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறது
அகிம்சை

காவல்துறையாலும்
நீதித்துறையாலும்
மாறி மாறி
மானபங்கப்படுத்தப்பட்டு
கற்பிழந்து நிற்கிறது
“வாய்மையே வெல்லும்”
வாசகம்

“சுதேசியின் ஆதரவாளரா காந்தி?”
என்கிற பெருத்த ஐயத்தோடு
விதேசிகளுக்கு
வெண்சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது
இந்திய அரசு

விடுதலைப்போராட்டம்
வெற்றிபெற்ற நிலையிலும்
பதவியேதும் தேவையில்லை
என்று தட்டி கழித்த உன்னை
கேலி செய்து
கை கொட்டிச்சிரிக்கிறது
அற்ப பதவிகளுக்காக
நாள்தோறும் போராட்டங்கள்
நடத்தும்
அரசியல் புள்ளிகள்


வறுமையும் வறட்சியும்
நிரந்தரமாக குடியேறிவிட்ட
இந்திய கிராமங்களால்
அர்த்தமற்றுப்போனது
“இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது”
என்கிற வாக்கியம்

தனது
தார்மீக உரிமைகளுக்காககூட
மற்ற மாநிலங்களோடு
மல்யுத்தம்
நடத்தவேண்டிய அளவிற்கு
கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது
தேசிய ஒருமைப்பாடு

அரசு இயந்திரத்தின்
அடிமட்ட ஊழியனிலிருந்து
அமைச்சரவை வரையிலும்
நீண்டு பருத்து
கிளைத்து செழித்திருக்கும்
ஊழல் நச்சு மரத்தின்
வேர்களில் சிக்கி
கழுத்தறுபட்டுக்கொண்டிருக்கிறது
நாட்டின் புகழ்

மகாத்மாவே!
மகாத்மாவே…!!!

வளர்ந்து வரும்
வன்முறையிலிருந்து…
புரையோடிக்கொண்டிருக்கும்
பொய்மையிலிருந்து…
வாட்டி வதைக்கும்
வறுமையிலிருந்து…
பீடுநடைபோடும்
பிரிவினைகளிலிருந்து…
ஊதிபெருத்துவரும்
ஊழலிலிருந்து…
அதீத ஆபத்தான
அரசின் கொள்கையிலிருந்து…
உடனடியாக வேண்டும்
இந்தியருக்கு விடுதலை.

ஆக-
அவசரமாகவும்
அவசியமாகவும்
தேவைப்படுகிறார்கள்                
ஐந்தாறு காந்திகள்!

                      முகவரி :
                     புதுவைப்பிரபா
                     2,முத்துவாழியம்மன் கோயில் தெரு,
                     பாக்கமுடையான்பட்டு,
                     புதுச்சேரி 605 008.
                     பேசி: 09443214654
[நன்றி புதுவைப் பிரபா அவர்களே ! நன்றி ! நன்றி !நண்பர்கள் உ றவினர்கள்,தெரிந்தவர்கள் அனைவரையும் காந்தியின் பெயரால் நடக்கும் இந்தக் கவிதை யக்ஞத்தில்பங்கேற்க அழையுங்கள். பெயர், புகழ், பரிசு, விருது, எல்லாம் கடந்து ஆத்ம தாகம் என்ற எழுச்சியால் இன்னும் காந்தி காட்டிய வழியில் கல் மூடி மண்மூடிப் போகவில்லை என்று கவிஞர்களாவது நிரூபிப்போம் ]
ஐக்கியா டிரஸ்ட் கவிதைப் போட்டி
வையவன்
காந்தி ஜெயந்தி
காந்தி என்பது ஒரு தலைவரின் பெயர் மட்டுமல்ல. தேசத் தந்தையின்  பெயர் மட்டுமல்ல. பாரதநாடு என்ற மகத்தான தேசத்தின் , அழியாச் சுடர் போன்று ஒளிவீசி நிற்கும் ஒரு பண்பாட்டின் பெயர். காரிருள் நிலைப்பதில்லை. ஒளி தொடரும் அதற்கும்  ஓர் உதய வேளை உண்டு என்று அறிவித்த நம்பிக்கையின் பெயர் அது. காந்தி என்றாலே ஒளி என்று தான் பொருள்.

அந்த நம்பிக்கையின் சின்னமாக யாஹூ இணையதளத்தின் தமிழ்ப் பிரிவு ஆசிரியரும் வல்லமை மின்னிதழின் நிறுவன ஆசிரியருமான அண்ணா கண்ணன் அவர்கள் எழுதிய கவிதை இன்று நம் இணையவெளி இதழில் பிரசுரமாகியுள்ளது

ஐக்யா டிரஸ்ட் 
.  நமது மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய கவிஞர் பெருமக்களையும் வாசக அன்பர்களையும் அக்டோபர் 2 என்ற அளவோடு நின்றுவிடாமல்   அக்டோபர் 30 வரை தங்கள் கவிதைகளை காந்தி அஞ்சலியாக நமது இணையவெளிக்கு  அனுப்பி வைக்க வேண்டுகிறோம். தங்கள் பார்வையில் மிகச்சிறந்த கவிஞர் என்று கருதப்படும் ஒருவருக்கு அன்புகூர்ந்து சிரமம் பாராது இந்த மெயில் அனுப்பிவையுங்கள். மெயிலில் படைப்புகளை அனுப்பலாம் .vaiyavan.mspm@gmail.com.
மற்றும் அஞ்சலிலும் அனுப்பலாம். முகவரி.:-Vaiyavan,Editor Innaiyaveli.,1,First Street, Chandrabagh Avanue,Mylapore,Chennai-600004,Mobile .9940120341 Landline:919940120341
பிரசுரமாகும் ஒவ்வொரு படைப்பிற்கும் ,  ஒவ்வொருவருக்கும், ஐக்யா டிரஸ்ட் வழங்கும் புத்தகம் ஒன்று பரிசளிக்கப்படும் . அவசியம் படைப்பாளிகள் தங்களது புகைப்படம் அனுப்பிவைக்க வேண்டும் . சுருக்கம், தெளிவு, எளிமை, புதிய சிந்தனை வீச்சுடன் கூடியதாக அமையும் கவிதைகளைத் தொகுத்து தாரிணி பதிப்பகம் நூலாக வெளியிடும்.அன்புகூர்ந்து தங்கள் புகைப்படம் மற்றும் சுருக்கமான விவரங்கள் இணைத்து அனுப்பவும்
-நிர்வாக ஆசிரியர்
இணையவெளி
வையவன்
கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரியில் நேர்ந்த சிறு பிழைக்கு வருந்தி சரியான மின்னஞ்சல் முகவரியைக் கீழே தருகிறோம் .அனைவருக்கும் விடுக்கும் அன்பு வேண்டுகோள் - மறக்காமல் புகைப்படம் அனுப்பிவையுங்கள். 

vaiyavan.mspm@gmail.com 

 


No comments:

Post a Comment