Saturday 6 October 2012

திரைகடல் ஓடித் தேடிய அனுபவம்-3


சிங்கை விஜயகுமார் 


திரைகடல் ஓடித் தேடிய அனுபவம்-3

  நான்கு அடி எடுத்து வைத்தால் அடுத்த வீட்டுக்குள் செல்லும் நவீன கட்டடங்களிலேயே அது வரை வசித்த எனக்கு ஆளே இல்லாத ஒரு தீவு, அதுவும் அங்கே ஒரு இரவு முழுவதும் இயற்கையுடன் ஒன்றி இருக்கலாம் என்றவுடன் வார விடுமுறை, வெள்ளிக்கிழமை எப்போது வரும் என்று விடுமுறைக்கு ஏங்கித் தவிக்கும் மாணவனைப் போலத் தவித்தேன்.
   வேலைகளை எல்லாம் மதியமே முடித்து விட்டுப் படகுக்குக் காத்து இருந்தேன். சிறு பயணம் தான் என்றான் படகுக்காரன். ஐந்து மணி அளவில் புறப்பட்டோம். பாக்டரி தீவை விட்டு ஒரு இருநூறு அடி செல்லும் வரை கடல் மிகவும் அமைதியாக இருந்தது. இதை ப்ரோடேக்டிவ் ரீப் என்பார்கள். கடல் அலைகளைத் தண்ணீருக்குள் இருக்கும் பவளப் பாறை தடுத்து நிறுத்தி விடுமாம். அதனால் தீவைச் சுற்றி உள்ள கடல் நீச்சல் குளம் போல அமைதியாக இருக்குமாம். அதன் வெளியே கடல் அதன் கோபத்தைக் காட்டியது. தோணி பெரிய படகு போல இல்லை என்றாலும் மிகச் சிறியது என்று சொல்ல முடியாது. ஆனால் கடல் அதை ஒரு காகிதக் கப்பலைப் போலத் தூக்கிப் போட்டது. அதைக் கடந்தவுடன் மீண்டும் அமைதி.




   கப்பல் ஓட்டுபவன் தோணியின் பின்னால் ஒரு பெரிய நூலின் நுனியில் ஒரு கொக்கியில் பள பள என மின்னும் பிளாஸ்டிக் கயிற்றைச் (கார்டன் கட்டும் கயிறு) சிறு சிறு பாகங்களாக வெட்டி முடிச்சு போட்டுக் கொண்டிருந்தான். பின்னர் வேகமாகச் சென்ற தோணியின் பின்னால் அந்தக் கயிற்றைத் தொடர விட்டான். சிறிது நேரத்திலேயே கயிற்றை ஏதோ பிடித்து வலிப்பது போல இருந்தது. மள மள வெனக் கயிற்றை இழுத்தான் – பெரிய மீன் ஒன்று சிக்கி இருந்தது. பாவம் அந்த மீன், தூண்டிலில் எதுவுமே போடாமலேயே மாட்டிக்கொண்டது. கீழே இருந்து பார்க்கும் போது அந்தப் பிளாஸ்டிக் கடலின் மேலே பள பள என்று ஏதோ மீன் போலத் தோன்றும் போல ! இப்படி ஒரு அரை மணிக்குள் தனது இரவு உணவிற்குப் பத்து மீன்களை முதல் போடாமலேயே பிடித்து விட்டான் அவன் !
   மறு பக்கம் சூரிய அஸ்தமனம். அது வரை வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஓடு ஓடு என்று ஓடிய எனக்கு ஒரு நாள் கூட சூரியனை இப்படிப் பார்க்கும் வாய்ப்பே கிடைத்ததில்லை ! நடுக்கடலில், அதுவும் அன்று எந்த அப்பாயின்மென்ட்டும் இல்லாமல் மிதக்கும் போது , கீழ்வானம் சிவக்க, செந்நிற ஆதவன் மெதுவாகக் கடலில் இறங்கும் காட்சி – அவனது கிரணங்கள் மேகங்களுடன் கலந்து வானத்தில் தீட்டிய ஓவியம் இயற்கையின் பால் எனது பிரியத்தை மென்மேலும் கூட்டியது.
   தீவுக்கு வந்தோம். சிறிய தீவுதான், அங்கே ஒரு சின்னப் படகுத்துறை. நான்கு பலகைகள் கொண்டு அமைக்கப்பட்ட ஒன்று தான். அதில் இரண்டு உடைந்து இருந்தன. மெதுவாக ஏறிச் சென்றேன். காலையில் வருகிறோம் என்று சொல்லி விட்டு அவர்கள் புறப்பட்டனர். படகு மெதுவாக விலகியது.
பரந்த வெட்ட வெளி, மேலே ரத்தினக் கம்பளம் போல மின்னும் நட்சத்திரங்கள் கொண்ட வானம், அப்படியே மணலில் ( வெள்ளை கோரல் பவுடர் ) மல்லாக்கப் படுத்து பனை மர ஓலைகளுக்குள் ஓடி விளையாடும் வெண்மதியைப் பார்த்தவுடன் -” நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” பாடல் தானாகப் பாடத் தோன்றியது. 
   இரவு நீள, சென்னையில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வளர்ந்த எனக்கு, இவற்றை விட ஒரு அனுபவம் அங்கு மிகவும் புதியதாய் கிடைத்தது. சென்னையில் சதா மனிதர்கள், வாகனங்கள், பாக்டரியில் தையல் இயந்திரங்களின் இரைச்சல் – என்று அது வரை பழக்கப்பட்ட எனது காதுகளுக்கு ஒரு புது அனுபவம் – நிசப்தம். முதலில் கொஞ்சம் கடினமாகவே இருந்தது, மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் திரைப்படங்களில் வரும் பிளாஷ் பாக் காட்சி போல மாறி மாறி வந்து சென்றன. சற்று நேரத்தில் மனம் அமைதி அடைந்தது. எண்ணங்கள் ஒன்றுமே தோணவில்லை. ஒரு வெறுமை – ஆனால் சுகமான வெறுமை.
   மெதுவாக எழுந்து கரையோரம் நடந்தேன். வெறும் கால்களில் அந்தக் கோரல் கர கர என்று இருக்கும் என்று நினைத்தேன் – ஆனால் அவை மெதுவாகக் குத்தியதும் நன்றாகவே இருந்தது. கடல் மெதுவாக வந்து எனது கால்களை அணைத்தது. மணலை விடச் சற்று வெப்பமாகவே இருந்த நீர் இதமாக இருந்தது. உடைகளைக் களைந்து நீருக்குள் சென்று நீந்தினேன். நிலவு நன்றாக மேலே வந்தது – அங்கே உள்ள கடல் நீர் அவ்வளவு சுத்தம் – இரவு மதியின் வெளிச்சத்தில் முப்பது அடி வரைக்கும் தெரியும்! சற்றுத் தொலைவில் ஏதோ கருப்பாக நீரில் மிதந்து வந்தது. அதே நேரம் ஒரு கரிய மேகம் நிலவை மூடியது. திடீரெனே எங்கும் கும் இருட்டு.
   மேகத்தை வென்று நிலவு வெளியில் வந்த போது அந்தக் கருப்பு உருவம் எனக்கு மிக அருகில் வந்து விட்டது. ஏதோ ஒரு பெரிய பறவை மேலே ஆகாயத்தில் பறப்பது போலவும் அதன் நிழல் கடலில் படர்வது போலவும் ஒரு உணர்வு. அப்படிக் கடலில் பறந்து பறந்து அருகில் வந்தது அந்த உருவம். ஆம், நமது ஸ்டீவ் இர்வினை வீழ்த்திய ஸ்டிங் ரே தான் அது. ஆனால் அப்போது எனக்கு அதனைப் பற்றித் தெரியாது.    மிகவும் அருகில் வந்து சுற்றிச் சுற்றி நீந்தியது. சுமார் நான்கு அடி, சப்பையான சப்பாத்தி போன்ற உருவம், பெரிய வால் ( அதன் முள் வாலுடன் சேர்த்து அமுங்கியே இருக்கும் – கோபம் வந்தால் தான் செங்குத்தாகச் சீறி நிற்கும் !) 
  ஏதோ குருட்டு தைரியத்தில் கையை அதன் மேலே வைத்து நாய்க்குட்டியைத் தடவுவது போலத் தடவிக் கொடுத்தேன். சுகமாக இருந்தது போல அதுவும் இன்னும் அருகில் வந்து என் மேல் உரசியவாறு நீந்தியது. சிறிது நேரம் அப்படியே இணைந்து நின்றோம். பிறகு அது ஆழ் கடலை நோக்கிச் சென்றது. ஏனோ மனதில் இருந்த பாரங்கள் அனைத்தும் நீங்கிய ஒரு உணர்வு. ஏதோ நண்பன் ஒருவன் பிரிந்து செல்வது போன்ற ஒரு உணர்வு. பாவம் அதற்கும் தனிமையின் தாக்கமோ?
  மீண்டும் கரைக்கு வந்து ஜோ பொக்சர் – ஆமாம் எங்கள் பாக்டரி பண்ணும் அரை பான்ட் தான்- அணிந்து படகுத் துறை நோக்கிச் சென்றேன். திடீரென ஒரு பலகை எனது கால் அடியில் நகர்ந்தது. தடுக்கி விழாமல் இருக்க தடால் என்று பக்கத்தில் இருந்த பலகையைப் பிடித்தேன். அப்போது ஒரு அதிசயம். படகுத்துறைக்கு அடியில் கடல் கரையுடன் சேரும் இடம் அனைத்தும் அந்தச் சத்தம் கேட்டு ஒரு நீலம் கலந்த இளஞ்சிவப்பு ஒளியில் ஒரு ஒளி பரவி மீண்டும் இருட்டானது. ஒன்றும் புரியவில்லை. மீண்டும் அந்தப் பலகை மீது கையைத் தட்டினேன். மீண்டும் அதே ஒளி. சிறு பிள்ளை போல உடைந்த பலகை என்றாலும் அதன் மேலே குதித்தேன் – மீண்டும் ஒளி.
  கீழே இறங்கி அந்த இடத்தில தடா தடா என்று ஓடினேன் – என்ன ஆச்சரியம் – மெதுவாக நடந்த போது ஒன்றுமே செய்யாத அந்தப் பகுதி, சற்றுப் பலத்துடன் காலை ஊன்றி ஓடிய போது கால் படும் இடத்தைச் சுற்றி ஒரு வளையம் போல அந்த வினோத ஒளி பரவியது. நின்று கையில் அந்த மணலை எடுத்துச் சோதித்தேன் – ஒன்றும் தெரியவில்லை.
  ஒரு கையில் அந்த ஈர மணலைப் பிடித்து மறுகையால் கையின் அடியில் பலமாக அடித்தேன் – ஒரு முறை லேசாக மின்னியது ! இது என்ன இந்திர ஜாலம் என்று அசந்து போனேன். பிறகு வெவ்வேறு மாதிரி அந்த இடத்தில் குதித்தேன்,  நடனம் ஆடினேன் – மனோகர் டிராமா செட்டிங் போல அந்த ஒளியும் எனக்கு ஈடு கொடுத்து மின்னியது. பிறகு தான் கண்டு பிடித்தேன் – இவை ஒரு பிரத்தியேக வகை லிவிங் லைட் எமிட்டிங் கோரல் என்று.

See full size image

  இன்னும் இரவு நீள, தீவின் மற்ற இடங்களையும் சுற்றிப் பார்க்கச் சென்றேன். வெகு நேரம் கழிந்த பின்னர் அப்படியே படுத்து உறங்கி விட்டேன். காலையில் எழுந்து கரைக்குச் சென்று அந்த மணலை எடுத்துப் பார்த்தேன் – இருந்தால் கையில் கொஞ்சம் எடுத்துப் போகலாம் என்ற நினைப்பில். ஆனால் பகல் வெளிச்சத்தில் அது வெறும் மணல் போலவே இருந்தது. அப்போது திடீரென கடலில் வெள்ளை வெள்ளையாக பாலிதீன் கவர் போல ஏதோ மிதந்து வந்தது. அருகில் சென்றால் இளநீர் உள்ளே இருக்கும் வழுக்கைத் தேங்காய் போல இருந்தது. ஆனால் அதனுள் இருந்து ஏதோ நூல் போல பல தொங்கின. அவற்றில் சில கரை ஓரம் ஒதுங்கியும் இருந்தன. என்னவாக இருக்கும் என்று காலால் பிரட்டிப் போட்டு மெதுவாக மிதித்துப் பார்த்தேன்.
  உள்ளங்காலில் திடீரென பெரிய நெருஞ்சி முள் பாய்வது போன்ற ஒரு வலி. அப்படியே உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு. மணலில் சரிந்து விழுந்தேன். காலில் சூடு வைத்தாற்போல வலி – நெற்றியில் வியர்வைத் துளிகள், நெஞ்சுத் துடிப்பு பட பட என்று அதிகரித்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. நல்ல வேளை அதற்குள் தோணி வந்து விட்டது. என்ன நடந்தது என்று உணர்ந்த அவன், ‘ஜெல்லி பிஷ் ஜெல்லி பிஷ்’ என்றான். 
http://www.advancedskinwisdom.com/wordpress/wp-content/uploads/2011/08/Jellyfish.jpg


  ‘சேரி, இப்போ என்ன செய்வது?’ என்றேன். 
  உடனே அவன் அவன் பாஷையில் எதையோ சொன்னான். ஒன்னும் புரியவில்லை. அந்தப்பக்கம் திரும்பி அவனது பாண்டைக் கழட்டி அவன் காலில் ஒன்னுக்கு விட்டான் !! ஓஓஹோ ! இது தான் நாட்டு வைத்தியமோ என்று நானும்… வலி சற்றுக் குறைந்தது. ஆனால் அதற்குள் கால் நீல நிறம் ஆகி வீங்கத் துவங்கி விட்டது. கைத்தாங்கலாகப் படகில் ஏறித் தீவுக்கு விரைந்தோம்.
  படகில் ரேடியோ கிடையாது. 
  அப்போது தான் நினைவுக்கு வந்தது நாங்கள் இருந்த தீவிலும் மருத்துவர் இல்லை.’கோ மாலே’ என்றேன். 
  அவன் மூன்று விரல்களை காட்டி உதட்டைப் பிதுக்கினான். 
  போக டீஸல் இல்லையா இல்லை எனக்கு இன்னும் அவ்வளவு காலம் இல்லையா என்று புரியவில்லை. பிறகு அந்த மீன் பிடிக் கயிற்றை எடுத்து முழங்காலில் இறுக்கக் கட்டினான். மீண்டும் ஒரு விரலைக் காட்டினான். எப்ப என்ன தான் உயிர் போகற அவசரம் என்றாலும் வரும் போது தானே உச்சா போக முடியும். அவனைப் போக சொல்லும் அளவிற்கு நிலைமை மோசமில்லை என்று நினைத்து அவனைப் படகைச் சீக்கிரம் ஓட்டச் சொன்னேன்.
  தீவில் இறங்கியதும் எழ முயற்சி செய்த போது தான் காலைப் பார்த்தேன். கரிகாலன் கால் கெட்டது. ஒரு அடி கூட நடக்க முடியவில்லை. மள மள வென நாலு பேர் ஓடி வந்து அடொல் தலைவனின் வீடு நோக்கித் தூக்கிச் சென்றனர். அவன் காலைப் பார்த்து விட்டு யாருக்கோ சொல்லி விட்டான்.
  சிறிது நேரத்திற்குள் அவனை விடக் குட்டையாகவும் கருப்பாகவும் ஒருவன் வந்தான். என்னைத் தரையில் படுக்கச் சொல்லி இருவர் காலையும் கையைப் பிடித்துக் கொண்டனர் !! 
  என்னடா இவன் எம் ஜி யார் படத்தில் வருவது போல விஷத்தைக் கடித்து எடுக்கப் போகிறானோ என்று நினைக்கும் போதே. அவன் தனது பையில் இருந்து ஒரு கட்டையை எடுத்தான். அதை எனது வாயில் குதிரைக்கு கடிவாளம் போடுவது போலப் பொருத்தினான். அதைக் கடித்துக்கொள் என்று சொல்கிறான் என்று புரிந்தது.
  பிறகு அருகில் ஒரு மெழுகுவரித்தியை ஏற்றி வைத்தான். தமிழ்ப் படங்களில் ஹீரோவின் அம்மா உயிர் ஊசல் ஆடும் போது டபக் என்று அணையும் அந்த விளக்கு நினைவுக்கு வந்தது. ஒரு சிறு கத்தி ஒன்றை எடுத்து நெருப்பில் பழுக்கக் காய்ச்சினான். சடால் என்று உள்ளங்காலில் அதைக் கொண்டே ஆழமாக அதுவும் அந்த ரணத்திலேயே கீறினான். 
  கட்டையைக் கடித்துக் கொண்டு இறுக்கி பிடித்திருந்த இருவரை உதறித் தள்ளினேன். மீண்டும் வந்து அமுக்கிப் பிடித்தனர். ஏதோ ஒரு சிறு மூக்குப்பொடி டப்பா போன்ற ஒன்றில் இருந்து ஒரு வெள்ளை நிறக் களிம்பை எடுத்து அவன் கீறிய இடத்தில அப்பினான். வலி சற்று ஓய்ந்தது. 
அப்பாடா என்று கண்ணைச் சற்று மூடினேன். அவன் அது தான் சரியான தருணம் என்று அருகில் இருந்த நெருப்பை எடுத்து காலில் அப்பிய களிம்பைப் பற்ற வைத்து விட்டான். அதுவும் குப் என்று பற்றிக் கொண்டது – வலி சுளீர் என்று தலைக்கு ஏறியது. அப்படியே நினைவை இழந்தேன்.
  எழுந்து பார்த்தால் – என்ன ஆச்சரியம் – காயம் அப்படியே ஆறி விட்டது. வீக்கம் எதுவுமே இல்லை, கால் சுய வண்ணத்துக்கு வந்து விட்டது, கீறிய இடம் அழகாகப் பொருக்குத் தட்டி இருந்தது. அவர்களுக்கு நன்றி கூறினேன். 
ஒருத்தனுக்கு பாவம் மூக்கில் ஒரு பிளாஸ்டர். வலி தாங்காமல் உதைத்து விட்டேன் போல !
  அது என்ன மருந்து என்று கேட்டேன் – ஒரு வகை மீன் வாக்ஸ் என்றார்கள் !!      ஆஹா, இயற்கை வைத்தியம் இன்னும் என்ன என்ன அதிசயங்களை தன்னுள் வைத்துள்ளதோ. பார்ப்பதற்குச் சாதாரணமாக இருக்கும் இவர்களுக்குக் கூட வழி வழியாக வரும் இந்த அறிவு இனிமேலும் பாதுகாக்கப்படவேண்டும் என்ற எண்ணத்துடன் வேலையைப் பார்க்கச் சென்றேன். 
  பின்னர் தான் தெரிந்தது மூன்று நாட்கள் தூங்கி இருக்கிறேன் என்று ! 
  அவ்வளவு விஷம் அந்தச் சிறு ஜெல்லி பிஷ்ஷில்.(தொடரும்)

No comments:

Post a Comment