அரிசோனா மகாதேவன்
“பெரிய தந்தையே! பீமன் வணங்குகிறேன்!” என்ற
சொற்கள் என் இதயத்தைக் கசக்கிப் பிழிகின்றன. குருதி கொதிக்கிறது. என் மக்கட் செல்வங்கள் நூறு பேரையும் தான் ஒருவனாகவே
இரக்கமன்றிக் கொன்றவனல்லவா இவன்! அதுவும்
என் கண்ணின் மணியான, என் உள்ளத்து ஒளியான, துரியோதனனை முறையற்று, தொடையில்
தாக்கிப் பிளந்து, துடித்துடிக்க இறக்கவைத்த இந்தக் கடையனுக்கு என் ஆசி
தேவைப்படுகிறதோ!
என்னையும் அறியாமல்
என் உதடுகள் பிரிந்து, நா சுழன்று, வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் என்
செவிபறையைத் தாக்குகின்றன.
“மகனே பீமா! தருமத்தை
நிலை நிறுத்தியவனே! வெற்றித் திருமகனே! என்னருகே வா. துரியோதனனுக்குப் பிறகு
நீதானே அவனையொத்த மகனாய் விளங்கப் போகிறாய். அருகே வா. உன்னை மார்போடு அணைத்துத்
தழுவி, உச்சி முகர்ந்து ஆசி நல்குகிறேன்.”
பீமனின் காலடிச்
சத்தம், அவன் அருகில் வந்து நிற்கும் ஒலி என் காதுகளில் விழுகிறது.
மெல்ல அவனைத்
தொடுகிறேன். இரும்பை ஒத்த உடல் என் கைகளில் படுகிறது. மெல்ல அவனைத் தழுவுகிறேன்.
திடுமென என்னுள் ஒரு அரக்கத்தனமான வெறி எழுகிறது. மூச்சை நன்கு இழுத்து, என்
வலிமையான கைகளால் என் பிடியை மரணப் பிடியாக இறுக்குகிறேன்.
சட சடவென்று
எலும்புகள் உடையும் ஒலி எழுகிறது. நான் இறுகத் தழுவிய பீமன் ஒடிந்து விழுகிறான்.
என்னுள் ஒருவிதமான நிம்மதியும், மகிழுவும் நிகழ்கிறது. என் குருதி வெறி ஒருவாறாகத்
தணிகிறது.
“ஐயனே! என்ன செய்து
விட்டீர்கள்! ஆயிரம் யானைகளுக்கு நிகரான உங்கள் வலிமையான கரங்களால் பீமனைக்
கட்டிப் பிடித்து எலும்பை நொறுக்கிக் கொன்று விட்டீர்களே!”
என்னை வணங்கவந்த வந்த
பீமனை ஏமாற்றி, வஞ்சமாகக் கொன்று என் பழியைத் தீர்த்துக் கொண்ட செயலின்
ஒலியைக்கேட்டு காந்தாரி அலறும் குரல் கேட்கிறது.
என்னுள் எதோ ஒன்று
ஓலமிட்டு, வீரிட்டு அழுகிறது. இத்தனை ஆண்டுகளாக அத்தினாபுரத்தில் கோலோச்சி வந்த
நான் வஞ்சகக் கொலைகாரனா? என்ன இழிவான செயலைச் செய்து விட்டேன்! அதர்மி என்று
இகழப்பட்ட எனது செல்வன் துரியோதனன்கூட இழிவான இச்செயலைச் செய்திருக்க மாட்டானே!
என் இதயத்தில் குருதி பெருக ஆரம்பிக்கிறது.
“நான் ஒரு கொலைகாரன்!
என் சொல்படி, என்னைத் தழுவி ஆசிபெற வந்த என் மைந்தனை – எனக்காக, கௌரவப் பேரரசையே
துறந்து என் கால்களில் அதை ஈந்து விட்டு, அத்தினாபுர அரியணையை எனதாக்கிவிட்டு,
கானகத்தில் மரித்த என் இளையோனின் குலக்கொழுந்தை – எலும்பை நொறுக்கியே
கொன்றுவிட்டேனே!” என்று நான் கழிவிரக்கத்துடன் ஓலமிடுவது என் காதில் விழுகிறது.
என் கழிவிரக்கத்துக்கு
ஒரு வடிகால் வேண்டுமே!
கிருஷ்ணன் – அந்த
இடையன் – அவன்தானே என் மகன் இறந்ததற்கும், அதனால் நான் பீமனை நொறுக்கிக்
கொன்றதற்கும் காரணம்!
“அடே கிருஷ்ணா! ஏனடா இப்படி குருவம்சத்தை அழித்துத் தீர்க்கக்
கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறாய்! நாங்கள்
உனக்கு எந்தக் கொடுமையடா செய்தோம்? உனது இரத்த வெறி எப்பொழுதடா அடங்கும்?” என்று
யானையைப் போல பிளிருகிறேன்.
அந்த மாயக் கள்ளன்
கடகடவென்று நகைக்கும் ஒலி என்செவிகளில் காய்ச்சி ஊற்றிய ஈயமாக விழுகிறது.
உடனேயே, “பெரிய
தந்தையே! தாங்கள் என்னைக் கொள்ளவில்லை. நான் இங்குதான் இருக்கிறேன்!” என்று கூறும்
பீமனின் குரல் மகிழ்வு, நிம்மதி, குற்ற உணர்விலிருந்து விடுதலை, இவற்றுடன் ஒரு
ஏமாற்றத்தையும் தருகிறது. ஒருவிதமான அச்சத்தையும் எழுப்புகிறது.
அப்படியானால்....?
நான் கொன்றது
யாரை?...
“மகனே, பீமா? நீ ஆவி உலகத்தில் இருந்து என்னை அழைக்கின்றாயா?
இல்லை, மயங்கிய என் மதியே என்னிடம் சித்து விளையாட்டு விளையாடுகிறதா?” என்று
குழம்பிப்போன மனதுடன் –நான் கேட்கும் பீமனின் குரல் – ஒருவேளை எனது குற்றம்
புரிந்த, கழிவிரக்கப்படும் மனத்தின் எதிரொலியாக இருந்துவிடக்கூடாதா என்ற
நப்பாசையும் எழுகிறது.
கூடவே அந்த கண்கட்டு
வித்தைக்காரக் கண்ணனின் கள்ளச் சிரிப்பும் தொடகிறது.
“இல்லை மாமா, இல்லை!
தங்கள் மன ஓட்டத்தைத் தங்கள் குரலிலிருந்து அறிந்துகொண்ட நான், பீமன் போன்று ஒரு
பதுமையைத் தோற்றுவித்துத் தங்கள் முன் நிறுத்தினேன்.[1]
என்னிடம் அடைக்கலம் புகுந்திருக்கும் ஐவரையும் காப்பது என் கடமை அல்லவா! இதுவரை இறந்தவர்கள் போதாதா?”
மகனைக்கொன்றவன் என்ற
பழி என் மீது விழவில்லை. வஞ்சக்கொலைக்காக, மீளா நரகத்த அடையவேண்டாம் என்ற நிம்மதி
பிறக்கிறது. இருப்பினும், அந்த எமற்றுக்காரனின் ஏளனப் பேச்சு என்னை என்னவோ
செய்கிறது.
“கிருஷ்ணா! உனக்கு
என் மனமார்ந்த நன்றி! என்னவரை மாபாதகச்
செயலிலிருந்து காப்பாற்றிவிட்டாய். உன்
கருணையை நான் மேச்சுகிறேனய்யா!” என்ற காந்தாரியின் குரல் என் காதில் விழுகிறது.
“அத்தை! இது என்
கடமை. தங்கள் பாராட்டு அதிகமானது.”
வேண்டுமென்றால்
எப்படிக் குழைகிறான், இந்தக் குடிகேடன்!
என்னுள் திடுமென்று ஒரு வெறி பொங்கி எழுகிறது. எல்லையில்லா
எரிச்சலில் என் மேனி காந்துகிறது.
என்னையும் அறியாமல் சினம் வெடிமலைக் குழம்பாகப் பீறிடுகிறது..
“போதும் கண்ணா, போதும்! உன் நாடகத்தை யார் நம்புவார்களோ, அவர்களிடம்
நடித்துக் காட்டு! கதாயுதப் போரில் வெல்ல முடியாத என் அருமைச் செல்வன் துரியோதனனை,
போர்விதிகளை மீறி தொடையில் அடித்துக் கொல்லும்படி தொடையைத் தட்டிக் காட்டி,
பீமனுக்கு வழி சொல்லிக் கொடுத்தவன்தானே நீ! அருச்சுனனைக் கொல்லக் கூடிய, அருமையான
அத்திரங்களை – கர்ணனைக் கடோத்கஜன் மீதும் செலுத்தும்படி செய்யவைத்ததும்,
நாகாஸ்த்திரம் அருச்சுனன் தலைக்குக் குறி வைத்து எய்யப்பட்ட பொது, தந்திரமாக
இரதத்தைத் தரையில் அழுத்தி, தலைக்கு வந்ததைத் தலைப்பாகையுடன் செல்ல வைத்ததும்
நீதானே! ஆயுதமேடுத்துப் போரில் கலந்து கொள்ளமாட்டேன் என்று சொல்லிவிட்டு, காலையே
ஆயுதமாக ஆக்கி, கர்ணனின் நாகாஸ்த்திரத்தை நாசமாக்கியது எந்த விதத்தில் சரியானது?
“அதுமட்டுமா! உனது சக்கரப் படையால் ஆதவனையே கள்ளத்தனமாக
மறைத்துவைத்து நாடகமாடி, என் ஒரே மகளின் கணவனைப் பார்த்தனால் கொல்ல வைத்ததும்
நீதானே! போரில் வெற்றிகிட்ட சோதிடப்புலி
சகாதேவன் துரியோதனனுக்குக் குறித்துக்கொடுத்த அமாவாசைக்கு ஒரு நாள் முன்பே
நீத்தார் சடங்கைச் செய்து, ஆதவனையும், அம்புலியையும் தந்திரமாக ஏமாற்றி, ஒருங்கே
நீ இருக்குமிடைத்துக்கு வரவழைத்து, அவர்களையே சேர்ந்திருப்பதால் அன்றுதான் அமாவசை
என்று மெய்ப்பித்து, அவர்களைச் சம்மதிக்கவும் வைத்து, அன்றே அருச்சுனனின் மகன்
அரவானைக் களபலி கொடுக்கவைத்து, போரின் போக்கையே மாற்றிய புரட்டுக்காரனல்லவா நீ!”
என்னையும் அறியாமல் காட்டாற்று வெள்ளமாகப் பொங்கிப் பெருகுகின்றன என் சொற்கள்.
அதற்கும் அட்டகாசமான சிரிப்பே எனக்கு மறுமொழியாகக்
கிட்டுகிறது.
“வேண்டாம் ஐயனே, வேண்டாம்!
இறை அம்சம் என்று கண்ணன் அனைவருக்கும் காட்டியதை, அதை சஞ்சயன் அருட்கண்
கொண்டு நோக்கி விவரித்ததை நீங்கள் கேட்கத்தானே செய்தீர்கள்! அச்சமயம், அவன்
அருச்சுனனுக்கு எடுத்துக்காட்டிய மாபெரும் வடிவத்தை மனக்கண்ணில் கனடதாகக்
கூறினீர்களே! நம் மக்கள் செல்வங்கள் மடிந்தது அவர்கள் வினைப் பயனல்லவா! அதற்குக்
கண்ணனை குறை கூறலாமா?”
தழுதழுக்கும் குரலில் என்னை அமைதி கொள்ளும்படி அறிவுரை
கூறுகிறாள், அறிவில் சிறந்த என் மனைவி காந்தாரி. என் செவிகளில் அவளது சொற்கள்
விழுகின்றன. ஆனால், அவளது அறிவுரையை ஏற்க என் மனம் மறுத்து ஒதுக்குகிறது. மாறாக,
அவளது சொற்களே, என் உள்ளத்தீயைக் கொழுந்து விட்டெரியச் செய்யும் உயிர்க்காற்றாக
மாற்றுகின்றன.
எனது குரல்
உயர்கிறது. நான் கண்ணின் நகைப்பு வந்த
இடத்தை நோக்கிக் கத்துகிறேன்.
“என் மனைவியையும் உன்
மாயத்தால் மயக்கிவிட்டாயே கண்ணா! நீ மாபெரும் வடிவெடுத்து, சித்து விளையாட்டுக்
காட்டியது போரை நிறுத்தி அனைவரின் உயிர்களையும் காப்பாற்றவா? இல்லையே! என்
பாட்டனார், ஆசான், நண்பர்கள், உறவினர்கள், அதற்கும் மேலாக என் உடன்பிறவா
உடன்பிரப்புகளைக் கொன்றுதான் தருமத்தை நிலைநாட்ட வேண்டுமா? இப்பழியை ஏற்றுத்தான்
எங்கள் பாங்கான நிலப்பரப்பப் பெறவேண்டுமா என்று மனமுடைந்து, வில்லையும், அம்பையும்
தூக்கி எறிந்த அருச்சுனனை, உன் சாதுரியமான சொற்களால் போருக்கு இழுத்தது நீதானே,
கிருஷ்ணா! நீ அப்படிச் செய்திராவிட்டால், குருச்சேத்திரத்தில் போர்தான்
நிகழ்ந்திருக்குமா? பதினெட்டு அக்குரோணி வீரர்கள்தான் அழிந்திருப்பர்களா?”
“அப்படியா, மாமா?”
முதன்முதலாக வாய்திறக்கிறான் அந்த மாயக்கள்ளன்.
“நான்தான் இந்தப் பேரழிவுக்குக் காரணம் என்கிறீர்களா?”
“அதை நான் வேறு
சொல்லவேண்டுமா?” என் சினம் எல்லை மீறுகிறது.
“நீதான் அனைத்துக்கும் காரணகர்த்தா! நடக்கக்
கூடாத போரை -- நடந்தால் பாண்டவர்கள் மறத்தால் வெல்லவே முடியாத போரை, உன் வஞ்சக
மதியால் வென்று காட்டினாய். யாராலும்
வீழ்த்த இயலாத பீஷ்மப் பாட்டனாரை, ஆணுமில்லாத, பெண்ணுமில்லாத சிகண்டியை
முன்னிருத்தி, அருச்சுனனைப் பின்நிறுத்தி வீழ்த்தச் செய்தாய்! அனைவராலும் வஞ்சிக்கப்பட்டு, தரையில் வீழ்ந்து
கிடந்து, அறக்கடவுளால் காக்கப்பட்டு நின்ற கர்ணனின், அறத்தையே, அந்தண வேடம்
பூண்டு, குருதியால் தானமாகப் பெற்று, அவனின் கடைசி அறக் கவசத்தையும் நீக்கி,
மண்ணுலகத்தை விட்டே போகச் செய்தாய். எதைத்தான் செய்யவில்லை நீ? எல்லாமே உன்
வஞ்சகச் சதிதான். எதற்காக எங்களைப்
பூண்டோடு அழித்தாய் கண்ணா, சொல். நானோ கண்ணற்ற குருடன். நான்தான் கௌரவர்கள் பக்கம்
மிஞ்சி நிற்கிறேன். என்னையும் அழித்து விடு கண்ணா, பார்ப்போம்! நீ உன்மையிலேய ஒரு
வீரனாக இருந்தால், நீ கம்சனை மற்போரில் வென்றது வஞ்சகத்தால் அல்ல, உன்
தோள்வலிமையால் என்றால் – இதோ, இந்தக் குருடனுடன் மற்போருக்கு வா! நீயும் நானுமா –
கண்ணா, நீயும் நானுமா என்று பார்த்துவிடுவோம்.
என்னால் இயலாது போனால், மிஞ்சி இருக்கும் ஒரே கௌரவ ஆண்மகனான இந்தக்
குருடனையும் அழித்துக் கொன்றுவிடு. வயோதிகத்தில் நிலைதடுமாறிச் சாகாமல், நானும்
ஒரு வீரனாக என் மகன்கள், பாட்டனார், நண்பர்கள், உறவினர்கள் போய்ச் சேர்ந்த வீர
சுவர்க்கத்தை அடைகிறேன்!”
வற்றிப்போன ஊற்றாக,
கொந்தளித்து முடித்த கடலாக, பொங்கி முடித்த எரிமலையாக என் சினம் அடங்கும் என்று
பார்த்த்தால், ஏமாற்றமே எனக்கு மிஞ்சுகிறது.
“ஐயனே! இது என்ன முறையற்ற பேச்சு? என்று நீங்கள் போர்
செய்திருக்கிறீர்கள்? உங்கள் இளையோன் பாண்டுதானே, உங்களுக்காகப் போர்
செய்திருக்கிறார்! பீஷ்மப் பாட்டனார்தானே அத்தினாபுரத்தை அரணாகக்
காத்திருக்கிறார். அனைவரையும் இழந்த நான் உங்கள் ஒருவரின் துணை இருக்கிறது
என்றுதான் இத்தனை துக்கத்திலும், ஓரளவு மன நிம்மதியுடன் இருக்கிறேன். இந்நிலையில்,
இறுதிக் காலத்தில் இறை அம்சமான கண்ணனை மல்லுக்கழைப்பது தேவைதானா?” காந்தாரியின்
கேவலால் என் உள்ளத்தைக் குளிரவைக்க முடியவில்லை.
மீண்டும் சிரிப்பொலி.
இந்தத் தடவை அது ஏளனமாகத் தொனிக்கவில்லை.
அன்புப் புன்னகையாக அமைதி கொள்ளச் செய்கிறது. என் முதுகை ஆதரவுடன் ஒரு கை
வருடிக் கொடுக்கிறது. என் மயிர்க்கால்கள் சிலிர்த்து எழுகின்றன. திடுக்கிடுகிறேன்
நான்.
“மாமா!” தேனைக்
குழைத்துத் தடவிய குரல் ஒலிக்கிறது.
இவனால்தான் எப்படி நினைத்தவண்ணம் குரலில் இன்மையைச் சேர்க்க இயலுகிறது!
“மாமா! இதென்ன
பேச்சு! ஆயிரம் மதயானை வலிமை உடைய உங்களுடன் மல்யுத்தம் செய்ய நான் என்ப்படித்
துணிவேன்? பீமனே உங்கள் அணைப்பில் நொறுங்குவான் என்றால் நான் எம்மாத்திரம்?
நீங்கள்தான் வெல்வீர்கள், அதில் ஐயம் எதுவுமில்லை. என்னால் உங்களுடன் மற்போர்
செய்ய இயலாது. ஆயுனும், நீங்கள் என்மீது தொடுத்த சொற்கணைகளுக்கு நான் பதில்
சொல்லாது போனால், வருங்காலத்தில் இப்புவியே நீங்கள் சொல்வதைச் சொல்லி, என்னை
வஞ்சகக் கண்ணன் என்று சொல்லிவிடாதா!”
மீண்டும் மெதுவாகப்
புன்னகை ஒலி எழுப்புகிறான், முழு உலகத்தையும் மோகக் கணைகளில் வீழ்த்தவல்ல
அம்மாயவன்.
“நான் செய்தேன், நான்
செய்தேன் என்று குற்றப்பத்திரிகை படிக்கிறீர்களே, மாமா! உண்மையில் குற்றம்
இழைத்தவர் யார் தெரியுமா? சொல்லுங்கள் பார்ப்போம்!” கண்ணனில் குரல் என் இதயத்தையே
மெல்லக் கீறுவதுபோல இருக்கிறது.
சிலிர்த்து எழுகிறேன்
நான். இவன் கேள்வி யார் பக்கம் திரும்புகிறது? “என் மகன் துரியனின் தலையைத்தான்
எல்லோரும் உருட்டுகிறீர்கள்! இந்த அழிவுக்கு அவன்தான் காரணம் என்கிறாயா, கண்ணா!”
என் குரலில் சூடேறுகிறது.
“இல்லை மாமா, இல்லை. அவன் அறியாத ஏமாளிச் சிறுவன். சகுனி
மாமா அவனைப் பகடைக்காயாக உருட்டினார், தன் உடன்பிறப்பின் வயிற்றில் பிறந்தவன்
அரியணை ஏறவேண்டும் என்று. அவர் செய்ததில்கூட மருமகனின் பெருவாழ்வைக் கருதி
அப்படிச் செய்தார் என்று விட்டுவிடலாம். எடுப்பார் கைப்பிள்ளையான தங்கள் மகன்,
சகுனி மாமாவின் சூழ்ச்சியாலும், கர்ணனின் கவச குண்டலத்தை நம்பியும், தனக்கு நிகர
யாருமில்லை என்று கண்மூடித்தனமான காரியங்களைச் செய்தான். அழிவுக்கு அவன்
காரணமில்லை.!”
கண்ணனின் விளக்கம் என்னைக் குழப்பியது. இவன் எங்கே செல்கிறான், என்ன சொல்ல வருகிறான்?
“என் மகனுமில்லை, சகுனியும் இல்லை என்றால், கர்ணன்
என்கிறாயா?”
“இல்லவே இல்லை. அவன் ஒரு இருதலைக்கொள்ளி எறும்பு.
நண்பன்பால் கொண்ட நன்றி உணர்வுக்கும், விஜயன்மேல் கொண்ட வெறுப்புக்கும் இடையில்
சிக்கித் தவித்தான். சேர்க்கை சரியில்லாமல் தன்னைத்தானே அழித்துக்கொண்டான்.
ஒருவேளை அவன் துரியோதனின் நண்பனாக ஆகாவிட்டால், சிறிது சிந்தித்துச்
செயல்பட்டிருப்பனோ என்னவோ? ஆனால்
கர்ணன்மீது எக்குற்றமும் இல்லை!”
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. குழப்பம் விளைவித்து என்
சித்தத்தைத் திசை திருப்புகிறானா?
“யசோதையின் மகனே! ஒருவர்பின் ஒருவராக, யாரும் அழிவுக்குக்
காரணமில்லை என்றால் யார்? பீஷ்மப்
பிதாமகரா, அல்லது துரோணாச்சாரியாரா, அசுவத்தாமனா? தமையனையே தந்தையாகக் கருதிய
துச்சாதனனா? இவர்களையும் அழிவுக்குக் காரணமில்லை என்று நீ ஒரு காரணத்தைக் கற்பித்துவிட்டால்,
பின் யார்? யுதிட்டிரனா, அருச்சுனனா? பீமனா? இவர்களும் இல்லாதுபோனால், என் மகனின்
தொடை பிளக்கப்படும்போது பொங்கும் குருதியை அள்ளி எடுத்துக் கூந்தலில் தடவி
முடிவேன் என்று சூளுரைத்த பாஞ்சாலியா? யார் கண்ணா, யார்?”
எனது பொறுமை என்னைவிட்டு அகன்றுகொண்டே இருக்கிறது. இந்தக்
கண்ணனின் குரல் வரும் திசையை நோக்கிப் பாய்ந்து, அவன் குரல்வளையைக் கடித்து
உமிழ்ந்துவிடலாமா என்றும் தோன்றுகிறது.
“மாமா! பொறுமையை இழக்கலாமா? நீங்கள்தான் ஒவ்வொருவரையும்
ஒருவிரலால் சுட்டுகிறீர்கள். நீங்கள் ஒரு விரலால் சுட்டும்போது, மூன்று விரல்கள்
யாரைச் சுட்டுகிறது, மாமா?”
அதிர்ந்து போகிறேன் நான். இதில் கையை வைத்து, அதில் கையை
வைத்து, கடைசியில் என் தலையிலேயே கையை வைத்துவிட்டானே, இக்கள்வன்?! பெரிய வரட்டுச்
சிரிப்பு ஒன்று என்னிடமிருந்து உதிருகிறது.
“நன்று, தேவகி மைந்தா, மிக நன்று! இந்தக் குருடன்தான்
அழிவுக்குக் காரணமா? நான்தானே பலவிதமான சிறப்பான கணைகளை ஏவி எல்லோரையும்
அழித்தேன்! நான்தானே கபடம் புரிந்து,
வீழ்த்த முடியாத வீரர்களை வீழ்த்தினேன்! ஆதவனைக் காணாத நான்தானே என் சக்கரப்
படையால் அவனை மறைத்து மாய விளையாட்டு விளையாடினேன்? நன்று கண்ணா, நன்று. ஏன்
என்னோடு நிறுத்தி விட்டாய்? கண்களைக் கறுப்புத் துணி கொண்டு கட்டிக்கொண்ட
காந்தாரியையும் சேர்த்துக்கொள்வதுதானே!”
என் குரல் கோபத்தில் உயர்வதோடு மட்டுமல்லாமல், உணர்ச்சிப்
பெருக்கால் தடுமாறவும் செய்கிறது.
மீண்டும் அதே அன்பான உணர்வுடன் ஒரு கை என் தோளில் படுகிறது.
மெல்ல வருடியும் விடுகிறது.
“அமைதி, மாமா, அமைதி! உண்மையைச் சொன்னால், உத்வேகப் படுதல்
உங்களுக்கு அழகா?” இடையன் குரலில் ஏளனம் இருக்கிறது.
“எது உண்மை கண்ணா? எதுவும் செய்யத் திறனற்ற நானா
குற்றவாளி?”
“உங்கள் ஒருவரால்தான் இப்பேரழிவைத் தடுத்து நிறுத்தி இருக்க
முடியும். வேண்டுமென்றே அதைச் செய்யாமல் பல ஆண்டுகளைக் கழித்துவிட்டு, எதுவும்
செய்யத் திறனற்றவன் என்று நழுவுவது ஏன், என் மாமா?”
எனக்கு உன்மையிலேயே
ஒன்றும் புரியவில்லை. குற்றம் சாட்டுபவனே விளக்கட்டும் என்று அமைதியாகிறேன்.
என்மேல் குற்றமா?
“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று எடுத்துக்கொள்ளவா?”
என்னைச் சீண்டுகிறான் கண்ணன்.
பொங்கி வழிந்துவிட்ட என் பொருமல் பயனற்றுப் போகிறது.
“சொல்லு கண்ணா, சொல்லு. பழி போட்டுவிட்டாய். அதற்கு
விளக்கத்தையும் நீயே கொடுத்துவிடு!” ஓய்ந்துபொய் விடுகிறேன் நான். வாதிட்டு வெல்ல
இயலுமா, இந்த வாசுதேவனை!
“சதைப்பிண்டமாக உருக்குலைந்து கிடந்ததை நூறாகப் பகிர்ந்து
வியாச முனிவர் உயிர்ப்பித்தபோது முதல்வனாகத் தோன்றிய துரியனால் அழிவே வரும், அவனை
அழிப்பதுதான் மாபெரும் அழிவைத் தடுக்கும் என்று ஆன்றோர்கள் இயம்பியபோது, அதைத்
தடுத்து நின்று, அவனை வளர்த்து விட்டது உங்கள் முதல் குற்றம்!’ என்று
துவங்குகிறான் கண்ணன்.
“பீமனை மயங்கத் செய்து, நீரில் தள்ளிக் கொள்ள முயன்ற
துரியனைத் தகுந்தவாறு தண்டிக்காதது இரண்டாம் குற்றம். வாரணாவதத்தில், அரக்கு
மாளிகையில் பாண்டுவின் பிள்ளைகள் அனைவரையும் அவன் தீ வைத்துப் பொசுக்க முயன்றதை
அறிந்தும், அது தவறில்லாதது போல, பாண்டுவின் அத்தினாபுர அரியணையை அவன் மகன்
யுதிட்டிரனுக்கு அளிக்காது, ஒரு காட்டுப் பகுதியைப் பாண்டவர்களுக்கு பகிர்ந்து
அளித்து விரட்டிவிட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்றது மூன்றாம் குற்றம்...
“இந்திரப்பிரஸ்தத்தை
கண்டு, பேராசை கொண்டு, சூதில் அதைக் கவர உங்கள் மகனும், சகுனியும் முயன்றபோது
அதைத் தடுத்து நிறுத்த முயலாதது நான்காம் குற்றம். அதை விடப் பெரிய குற்றம்,
மாபெரும் அரசவையில் பாஞ்சாலியைத் துகில் உரிக்க அனுமதித்தது. இவை எதுவும், உங்கள்
கண்ணில்தான் படவில்லை, போகட்டும், எது நியாயம், எது, முறைமை, எது நீதி என்று
அரசரான உங்களுக்குத் தெரியாமலா போய்விட்டது?”
கண்ணனின் குரலில் இருந்த குறும்பும், பரிவும், அன்பும்
போய்விட்டன. பகைவனைத் துண்டாட முயலும் வாளின் கூர்மைதான் இருக்கிறது.
“எத்தனை முறை நான் எடுத்துச் சொன்னேன், துரியன்
கேட்கவில்லையே! யுதிட்டிரனும், பீஷ்மப் பாட்டனாரும் அறமென்று ஒப்புக்கொண்ட
பின்னர்தானே சூதாட்டம் துவங்கியது. அடிமைப்பெண்ணைத் தண்டிக்க உரிமை உண்டு என்று
துரியன் கூறியபோது, யுதிட்டிரன் வாளாவிருந்தானே!” என் எதிர்மொழியில் எனக்கே
நம்பிக்கை இல்லை.
“நீங்கள் அரியணையை அலங்கரிக்கும் பதுமையா, பாராளும் பேரரசே?
யார் எதை அறம் என்றாலும், அரசனான நீங்கள், உங்கள் அரசவையில் சூது நடக்கக் கூடாது
என்று தடுத்திருக்கலாம், இந்திரப்பிரஸ்தத்தையும் பாண்டவர்களுக்குத் திரும்ப வழங்கி
இருக்கலாம். சூதில் வென்றதைத் திருப்பமாட்டேன் என்று துரியன் அடம் பிடித்தால்,
அத்தினாபுரத்து அரசனாக, யுதிட்டிரனுக்கே அதிதினாபுரத்தைச் சொந்தமாக்கிவிடுவேன்
என்று நீங்கள் உங்கள் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி காழ்ப்புணர்ச்சி பெருகுவதைத்
தடுத்து, துரியனின் கொட்டத்தை அடக்கி இருக்கலாம். எதையுமே நீங்கள் செய்யவில்லை. மாபெரும்
பேரரசு உங்கள் மகனுக்கே சொந்தமாகும் என மனத்தினுள் மகிழ்ந்தீர்கள்.”
சிறிது நேரம் அமைதி நிலவுகிறது. என் மனதில் எதோ கனக்கிறது. தவறு இழைத்து
விட்டோமோ என்று மதி மயங்குகிறது.
தொண்டையைச் செருமும் ஒலியைத் தொடர்ந்து, கண்ணனில் குரல்
ஒலிக்கிறது.
“நான் போருக்கு முன் தூது வந்தேனே! ஐந்து நகரங்களாவது, இல்லாவிட்டால் ஐந்து
கிராமங்களாவது, அதுவும் இல்லாதுபோனால் ஐந்து வீடுகளையாவது ஈந்து போரை நிறுத்தி
விடுங்கள் என்று மன்றாடியபோது, ஊசிமுனை ஊன்றக்கூடிய நிலம்கூட ஈயமாட்டேன் என்று மார்தட்டினானே,
துரியன், அவனைத் தடுத்து நிறுத்தினீர்களா? அரசரான உங்களால், ஐந்து வீடுகளைக்
கொடுத்து, பேரழிவைத் தடுத்து இயலாவது போய்விட்டதா?’
“அரச நீதி, அறம், உரிமை என்று துரியன்...” இழுக்கிறேன்
நான். மேலே புரள நா மறுக்கிறது. மாபெரும் தவறைத் தனியாகச் செய்துவிட்டோமோ என்று
மனது அடித்துக் கொள்கிறது.
“நீதியை நாம்தான் உருவாக்குகிறோம். பாசத்தில் மதிமயங்கிய
பார்த்தனுக்கு, மற அறத்தைப் போதித்து, கடமையைச் செய்ய வாதாடி வெற்றி பெற்றேன்
நான். அவ்வளவு முயற்சியை நீங்கள் எடுக்கத் தேவையே இல்லையே! நானோ வெறும்
நண்பன்தான். பார்த்தனைப் பக்குவமாகத்தான் பணியாற்றும்படி கூறமுடியும். நீங்களோ மன்னர். ஆணையிட்டால் அனைவரும் –
பீஷ்மப் பாட்டனார் உள்பட அனைவரும் உங்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டுத்தான் வேண்டும்.
ஒரே ஒருமுறை உங்களது அரச அதிகாரத்தை நீங்கள் கைக்கொண்டிருந்தால், பதினெட்டு
அக்குரோணி வீரர்களும் மாண்டிருக்க மாட்டார்கள், உங்கள் மக்கள்களும் உயிரோடு
இருந்திருப்பார்கள். இவர்கள் அத்தனை
பேரையும் ஒற்றை மனிதாராகவே, படை எதையும் கையில் ஏந்தாமலேயே அழித்து ஒழித்துவிட்டு,
இந்த இடையன் மேல் பழி போடுகிறீர்களே மாமா, இது தகுமா? முறைமை ஆகுமா? நான் போரில் பார்த்தனுக்கு ஒரு
தேரோட்டியாத்தானே பணியாற்றினேன். அவ்வோப்போது அறிவுரைகளையும் நல்கினேன். வேறென்ன குற்றம் செய்தேன்?”
மரண அமைதி நிலவுகிறது. வாயடைத்துப்போய் கல்லாய்ச் சமைந்து
விடுகிறேன் நான். முன்பு பழி வெறியினால் என் இதயத்தில் கசிந்த குருதி, இப்பொழுது
குற்ற உணர்ச்சியால் என் பார்வையற்ற கண்களில் வெள்ளமாய்ப் பெருக்கெடுக்கிறது.
No comments:
Post a Comment