Wednesday, 25 June 2014

தஇமெ -அத்தியாயம் 3:என் கேவலமான வாழ்க்கையை முடித்துவிடு



                                    அத்தியாயம் 3
                              சுந்தர் பாண்டி அரங்கம்,  மத்ரா
                   பிரஜோற்பத்தி,  ஆனி 30 - ஜூலை 14,  2411


                                                  Highlight
ஓரொரு தடவை வெற்றி பெறும் போதும்
 தன்னுள் இருக்கும் மனிதாபிமானம் கொஞ்சம் 
கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருப்பதை அவன் 
அறிந்து கொண்டுதான் இருக்கிறான். சில சமயம் 
தமிழ் தெரியாத எடுபிடிகள் அவன் கையில் வந்து 
மாட்டிக் கொள்வர். அவர்களுடன் மல்யுத்தம் செய்யும் பொழுது 
இந்தி பேசும் உரிமைக்குடிகளாக அவர்களைக் 
கற்பனை செய்து கொள்வான். அவ்வளவுதான் - 
அவனை எதிர்க்கும் அந்த எடுபிடிகள் அவனுடைய 
வெறிக்கு ஈடுகொடுக்க முடியாமல் குற்றுயிரும்
 குலையுயிருமாகத்தான் அரங்கத்திலிருந்து 
தூக்கிச் செல்லப்படுவர். ...........
ரும்பு போல இறுகி இருந்த தன் தோள் தசைகளைத் தட்டிப் பார்த்துக் கொள்கிறான் அழகேசன். இன்னும் இரண்டு நிமிஷங்களில் மல்யுத்தத்திற்குத் தயாராக வேண்டும். வலது கையை முறுக்கி,  தோளுக்கு மேல் உயர்த்தி,  உள்ளங்கையை இறுக மூடி மூடி அழுத்துகிறான். புஜத் தசைகளின் மேல் பகுதிகள் அலை அலையாக எழுந்து ஆர்ப்பரிக்கின்றன.

“ம்,  போகலாம்.” என்று உறுமுகிறார் அவனது காப்பாளி சுபாஷ். அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு அரங்கத்திற்குப் போகும் நடைபாதையில் துள்ளி ஓடுகிறான் அழகேசன். இந்த இறுதிப் போட்டியில் வென்று விட்டால் ஒரு வாரத்தை நிம்மதியாகக் கழிக்கலாம்.

அவன் ஓடி வரும் பொழுது அரங்கமே அதிருகிறது. இரண்டு காளைகள் முட்டிச் சண்டையிடும் போது பெருகவிருக்கும் ரத்தத்தை எதிர்பார்க்கும் நரிகள் போல் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் கூட்டம் ஊளையிடுகிறது. அந்த ஊளைச் சத்தத்தைக் கேட்டதும் அழகேசனின் உடம்பில் ஒரு வெறி கிளம்புகிறது.

இந்த ஆக்கங்கெட்ட  கூட்டத்தின் பொழுது போக்குக்காக “எடுபிடி”களான தாங்கள் ஒருவரை ஒருவரை ரத்தக் களரியாகும் வரை தாக்கிக் கொள்வது அவனுக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லைதான். ஆனாலும் ஓரொரு வெற்றியின் போதும் - ஓரொரு தடவை வெற்றி பெறும் போதும் கிடைக்கிறதே அந்த கரகோஷம் - எடுபிடியாக இருந்தாலும் தன்னைப் பாராட்டி உரிமைக் குடிகளால் எழுப்பப்படுகின்ற அந்தக் கரகோஷம் - தன்னை எடுபிடி என்று ஏளனமாகப் பார்க்கும் அந்த உரிமைக்குடிகள் தனக்காக எழுப்புகின்ற அந்த கரகோஷம் - “அழ்க்,  அழ்க்” என்று கால்களைத் தரையில் தட்டியும்,  கைகளால் டமாரங்களைத் தட்டியும் எழுப்புகின்ற அந்த கரகோஷம் - அதுதான் அவனது எடுபிடி வாழ்க்கைக்கு மயக்கம் தரும் மதுபானம்.

அவனுக்கு அந்த கரகோஷம் வெறியைத் தந்தாலும் - அது இன்னொரு எடுபிடியின் துயரத்தில் விளைகிறது என்பது அழகேசனுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்து கொண்டிருக்கிறது. அதுவும் பெரும்பாலும் தான் பேசும் தமிழ் மொழியைப் பேசத் தெரிந்த இன்னொரு எடுபிடியின் ரத்தத்தைச் சிந்தி அக் கரகோஷத்தைப் பெற வேண்டியிருக்கிறதே என்பது மிக மிக அவன் மனதைப் பாதிக்கிறது.

ஓரொரு தடவை வெற்றி பெறும் போதும் தன்னுள் இருக்கும் மனிதாபிமானம் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருப்பதை அவன் அறிந்து கொண்டுதான் இருக்கிறான். சில சமயம் தமிழ் தெரியாத எடுபிடிகள் அவன் கையில் வந்து மாட்டிக் கொள்வர். அவர்களுடன் மல்யுத்தம் செய்யும் பொழுது இந்தி பேசும் உரிமைக்குடிகளாக அவர்களைக் கற்பனை செய்து கொள்வான். அவ்வளவுதான் - அவனை எதிர்க்கும் அந்த எடுபிடிகள் அவனுடைய வெறிக்கு ஈடுகொடுக்க முடியாமல் குற்றுயிரும் குலையுயிருமாகத்தான் அரங்கத்திலிருந்து தூக்கிச் செல்லப்படுவர். 

என்னதான் எடுபிடிகள் ஆனாலும், அவர்களின் உயிருக்கோ,  உரிமைக்கோ அதிக மதிப்பு இல்லையென்றாலும், அகண்ட பாரதத்தில் இந்த மாதிரி கேளிக்கைச் சண்டைகளில் யாரும் சாகக் கூடாது என்று விதி உண்டு. ஆகவே இந்த மல்யுத்தங்களில் யாரும் சாவது கிடையாது. ஆனால் கை, கால்கள் முறிவுகள் சர்வ சாதாரணம்.

“மீனாட்சித் தாயே, மாரியம்மா, காளியாத்தா! எனக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துங்கம்மா!” என்று உரக்கக் கத்திக் கொண்டே அரங்கத்தின் மேடையில் துள்ளிக் குதிக்கிறாள் அழகேசன்.

அவனது ஐந்தடி பதினோரு அங்குல உயரத்திற்கும்,  அதற்கேற்ற பருமனுக்கும் சவால் விடுவதுபோல - பரட்டைத் தலையுடனும்,  முறுக்கி விட்ட மீசையுடனும்,  கன்னங்கரேலென்று, பல சண்டைகளில் அடிபட்டு உடைந்து ஆறிய மூக்குடன் அழகேசனுக்கு எதிராகச் சண்டையிட ஒருவன் நின்று கொண்டிருக்கிறான். 

நடுவர் - அவரும் “காப்பாளி”தான் - இருவருக்கும் நடுவில் நிற்கிறார். அவர் பேச ஆரம்பித்ததும், அழகேசனின் காதிலிருக்கும் மொழிமாற்றுக் கருவியிலிருந்து தமிழ் அவன் காதில் ஒலிக்கிறது.

“ஒழுங்காகச் சண்டை போடுங்கள் ! எங்கு வேண்டுமானாலும் அடிக்கலாம், குத்தலாம், உதைக்கலாம், மிதிக்கலாம். ஆனால் ஒருவரை ஒருவர் கடிப்பதோ,  பிராண்டுவதோ, கண்களை நோண்டுவதோ,  முறை தவறான சண்டையோ கூடாது. அப்படிச் செய்தால் மின்சார கம்பியினால் உங்களை நான் அடிக்க வேண்டியிருக்கும். இச் சண்டையில் உங்களுக்கு ரத்தப் பெருக்கு ஏற்படலாம்,  எலும்பு முறியலாம். அதற்கெல்லாம் தயார் என்று நீங்கள் கட்டைவிரல் ரேகையைப் பதிந்து கொடுத்திருப்பதால்தான் இச் சண்டையில் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருக்கிறீர்கள். இது இறுதிப் போட்டி என்பதால் உங்களில் யாராவது ஒருவர் நினைவை இழந்தால்தான் இச் சண்டை நிறுத்தப்படும். சண்டை நின்றவுடன் உங்களுக்கு மருத்துவ உதவி செய்யப்படும். மீண்டும் சொல்கிறேன். மொழிமாற்றக் கருவியைக் கழட்டி வீசிவிட்டு ஒழுங்காகச் சண்டைபோடுங்கள். ஒன்று.. இரண்டு.. மூன்று.. சண்டை துவங்குகிறது!” நடுவர் அவர்களை விட்டு நகருகிறார்.

இருவரும் காதில் இருக்கும் மொழிமாற்றக் கருவியைக் கழட்டி வீசுகின்றனர்.
உடனே பாய்ந்து வந்த பரட்டைத் தலையன், “உன் எலும்புகளை உடைத்து மாலையாக்கிக் கொள்கிறேன் வா!” என்று அழகேசன் மீது எச்சில் துப்புகிறான். அது தன்மீது படாமல் விலகிக் கொள்கிறான் அழகேசன்.

சண்டையிடும் போது பேசுவதில்லை என்று வைத்துக் கொண்டிருக்கிறான் அவன். 

அது எதிரிகளுக்கு எரிச்சல் மூட்டுவது மட்டுமின்று அவர்களை நிதானம் இழக்க வைக்கும் என்று அனுபவம் மூலம் தெரிந்து கொண்ட 
உண்மை அது. நிதானம் தவறும்போது எதிராளி தவறு செய்வான். தவறு செய்பவனை வீழ்த்துவது எளிது - அவனது ஒவ்வொரு வெற்றிக்கும் எதிராளி செய்யும் தவறுதான் பெரிய காரணமாகும் என்பது அவன் அறிந்தே இருந்ததால் பரட்டைத் தலையன் செய்யப் போகும் தவறுகளைக் கண்டு பிடிக்கத் தன் கண்களைக் கூர்மையாக்கிக் கொள்கிறான்.

பரட்டையனின் மூக்கு உடைந்திருக்கிறது. எனவே, சண்டையின் பொழுது அவன் தன் முகத்தைச் சரியாகப் பாதுகாத்துக் கொள்வதில்லை என்று தீர்மானித்தபடி வலம் வருகிறான் அழகேசன்.

இப்படி அவன் தன்னைச் சுற்றி சுற்றி வருவது பரட்டையனுக்கு பிடிக்கவில்லை. “நீ என்ன என்னை அழகு பார்த்துக் கொண்டிருக்கிறாய்? நீ என்ன பெண்ணா? நான் உன்னைத் தொட்டால் உன் கற்பு அழிந்து விடுமா? நீயாக வந்து அடிவாங்கிக் கொண்டு கீழே விழு. இல்லாவிட்டால் உன் எலும்புகளை நொறுக்கி விடுவேன்!” என்று கர்ஜிக்கிறான் பரட்டையன். இருவரும் குத்துகளைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
பரட்டையனுக்கு பதில் சொல்லாமல் அவனது அசைவுகளைக் கவனிக்கிறான் அழகேசன். பரட்டையன் பொறுமையை இழப்பது நன்றாகத் தெரிகிறது. எந்தக் கணத்திலும் அவன் தன்மீது பாய்வான் என்று ஊகித்து அதற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறான். அவன் ஊகம் சரி என்பது அடுத்த கணமே தெரிகிறது.

“ஏ பெண்ணே,  உன் கற்பை அழிக்கிறேனா இல்லையா பார்!” என்று கத்திக் கொண்டே அவன்மீது பாய்கிறான் பரட்டையன். சட்டென்று விலகிக்கொண்டு அவன் விலாவில் ஓங்கிக் குத்துகிறான் அழகேசன். 

பரட்டையன் அதைக் கொஞ்சம் எதிர்பார்க்கவில்லை. எனவே அவன் முகத்தில் சிறிது வியப்பு தெரிகிறது. அவனது மூச்சுத் திணறுகிறது.
ஒரே கணத்தில் அதைச் சமாளித்துக் கொண்டு, “வெட்கப் படாதே கண்ணு. அத்தானிடம் ஓடிவா! உன்னைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கிறேன்!” என்று உட்கார்ந்து எழுந்து பறக்கும் உதை கொடுக்க முயலுகிறான் பரட்டை.
அவன் உடல் மேடையைவிட்டுக் கிளம்பியதும்,  உடனே தரையில் மல்லாக்க விழுந்து, இரண்டு கால்களையும் மடித்து, உயர்த்தி உதைக்கிறான் அழகேசன். பரட்டையனின் தலையையும், கழுத்தையும் அவனது கால்கள் வேகத்துடன் தாக்குகின்றன. இதைச் சிறிதும் எதிர்பார்க்காததால் பரட்டையனால் எதிர்த் தாக்குதல் எதுவும் செய்ய முடியவில்லை. 

அழகேசனின் வேகம் அவனுக்கு அதிர்ச்சியைத் தருகிறது. அவனது கழுத்து எலும்புக்குக் கீழே பலமான அடி - மேலும் உதையினால் அவனது கழுத்து வேகமாக முன்னுக்குச் சென்று பின் வாங்குகிறது. இது ஒரு விநாடிக்குள் நடக்கிறது. பொத்தென்று சாக்கு மூட்டையாய்க் கீழே விழுகிறான் பரட்டையன். அவனுக்கு வலி உயிர் போகிறது. கண் இருட்டுகிறது.

உதைத்த வேகத்தில் குட்டிக்கரணம் அடித்து எழுந்திருக்கிறான் அழகேசன். தரையில் மல்லாக்க விழுந்து கிடந்த பரட்டையன் எழுந்திருப்பதற்குள் இரண்டு முழங்கால்களையும் மடித்து அவன் மார்பில்  வயிற்றுக்குச் சற்றுமேலாகக் குதிக்கிறான். அவன் முழங்கால்கள் பட்டு பரட்டையனின் சில விலா எலும்புகள் முறியும் சத்தம் அவனுக்கு இன்னிசையாகக் கேட்கிறது. உடனே உருண்டு எழுந்திருக்கிறான்.

வலி பொறுக்காமல் உருண்டு உருண்டு துடிக்கிறான் பரட்டையன். அவன் முழங்கைகள், தோள்கள் என்று மாறி மாறி முழங்கால்களால் தன் முழுவேகத்தையும் காட்டிக் குதிக்கிறான் அழகேசன். பரட்டையனின் மூட்டுகள் நொறுங்கும் சத்தம் கேட்கிறது. பரட்டையன் மல்லாந்து கிடக்கும் சாக்குமூட்டையாகத் துடிக்கிறான்.

அழகேசன் கண்களுக்கு அங்கு பரட்டையன் தென்படவில்லை, தன் இனத்தையே “எடுபிடி”யாக அடக்கி வைத்திருக்கும் உரிமைக்குடிமக்களின் பிரதிநிதியே தென்படுகிறான். அது அவனது வெறியை இன்னும் அதிகமாக்கியதால் வெறித்தனமான கோபத்துடன் பரட்டையனின் தொடைகளில் குதிக்கிறான். அவன் தொடை எலும்புகள் முறியும் சத்தம் கேட்கிறது. பரட்டையன் வீறிடுகிறான்.

“என்னைச் சித்திரவதை செய்யாதே! என் கழுத்தில் குதித்து என் கேவலமான வாழ்க்கையை முடித்துவிடு.. நண்பா!”  

1 comment:

  1. அன்புள்ள மகாதேவன் ஐயா

    வணககம். நிரம்பிய உணர்வுகளுடன் இந்த அத்தியாயம். குறியீட்டுத் தன்மையில் மொழிகுறித்த உணர்வும் போராட்டமும் சித்திரிக்கப்பட்டுள்ளன.

    “என்னைச் சித்திரவதை செய்யாதே! என் கழுத்தில் குதித்து என் கேவலமான வாழ்க்கையை முடித்துவிடு.. நண்பா!”

    இந்த இரண்டு வரிகளில் உணர்ந்துகொள்வதற்கு ஏராளமான செய்திகள் உள்ளன. சித்திரவதை செய்யாதே...மொழியை... என் கழுததில் மிதித்து... மொழியின் உயிர்ப்பாகத்தில்...என் கேவலமான வாழ்க்கையை முடித்துவிடு,,, இரு தரப்பு மொழிகளுக்கும் பொருத்திக்கொள்ளும் சூழல்.. இன்னும் இதுகுறித்து நிறைய யோசிக்கிறேன். மிக அருமையாக கொண்டுசெல்கிறீர்கள். உங்களின் நாவல்குறித்த என் புரிதலகூட மாறலாம். இருப்பினும் தொடர்ந்து வாசித்தும் உங்களோடு கருத்துக்களைப் பகிர்ந்தும் தெளிவு பெறுவேன். நன்றிகள்.

    ReplyDelete