தமிழ் இனி மெல்ல.[3.14] சென்ற பதிவின் இறுதியில்
தமிழில் கவிதை எழுதும் அளவு திறமை உள்ள இராஜேந்திரன் ஏன் இராஜராஜர் அளவுக்குத் தமிழைப் பரப்புவதில் முழு மனதையும் காட்டவில்லை, அல்லது வெளியில் அப்படிக் காட்டிக் கொள்வதில்லை என்று அவ்வப்பொழுது குழம்பியும் வருகிறார்.
பாசறைக்கு வெளியில் எழும் அரவமும், ஒலிகளும் அவரை நிகழ்காலத்திற்குக் கொணர்கின்றன.
“பிரம்மராயர் களைப்பாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் தாங்கள் சந்திக்க வந்திருப்பதாகச் சொல்கிறேன். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்களேன்.!” என்று சுப்பையன் கெஞ்சுவதும், “நான் வேங்கை நாட்டு மன்னன், யாருக்காகவும் காத்திருக்கத் தேவையில்லை!” என்று பதிலுக்குத் தெலுங்கு மொழியில் இராஜராஜ நரேந்திரன் இரைவதும் பிரம்மராயரை முழு உணர்வுக்குக் கொண்டு வருகிறது.
அவசர அவசரமாக எழுந்தவர், தனது மேல்துண்டால் தோள்களைச் சுற்றிப் போர்த்திக் கொண்டு பாசறையை விட்டு வெளிவந்து, “வரவேண்டும், அரசே! தாங்கள் சொல்லியனுப்பினால் நான் தங்கள் பாசறைக்கு வந்து விட்டுப் போகிறேன். என்னைத் தேடிக்கொண்டு தாங்கள் வரவேண்டுமா!” என்று நரேந்திரனை வரவேற்கிறார்.
“வரவேற்பு இருக்கட்டும். இன்னும் நாம் கிருஷ்ணாவுக்கு தென்கரையில் இருக்கிறோம்! எப்பொழுது இராஜமகேந்திரபுரத்தை மீட்கப் பொகிறோம்? உதவிக்கு இன்னும் தெற்கிலிருந்து படைகள் வந்து சேரவில்லை, என்ன காரணம்? எனக்கு வரவர மதிப்பு குறைந்து விட்டது. எனது மாமனாருக்கு உடல்நிலை சரியில்லை, எழுபது வயதுக்கு மேலாகிவிட்டது. அவரால் வந்து போரிட இயலாது. ஆனால் எனக்கு உதவியாகத் திறமையான, துடிப்புள்ள இளைஞர்கள் யாரையும் அனுப்பாமல் ஒரு முதியவரை அனுப்பி இருக்கிறார் எனது மாமனார். நான் நாட்டை இழந்து மாரடிக்க வேண்டி இருக்கிறது. இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம்?” என்று உரக்கப் பொரிந்து தள்ளுகிறான்.
என்றுமே அவனிடம் அமைதியாக இருந்து பழகிய பிரம்மராயரை இதுவரை இல்லாத வேகம் வந்து பிடித்துக் கொள்கிறது. கண்மண் தெரியாத, இனம் புரியாத சினம் வெடிக்கிறது.
“நரேந்திரா, உள்ளே வா!” என்று பல்லைக் கடித்துக் கொண்டே அவனது கையைப் பிடித்துத் தரதரவென்று பாசறைக்கு உள்ளே இழுத்து கொண்டு சென்ற அவர், சுப்பையனிடம் உள்ளே யாரும் வரக்கூடாது என்று கண் காட்டுகிறார்.
“என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய், நீ? மகள்களை மணந்து கொண்டிருப்பதால் கோப்பரகேசரியாரைப் பொறுத்தவரை நீயும், நானும் உறவில் ஒன்றுதான். வயதில் மூத்தவன் ஆனாலும் உன்னைவிட எல்லா விதத்திலும் திறமையும், ஆற்றலும், வலிமையும், அறிவும் மிகுந்த என்னால் வாட்போரிலோ, மல்யுத்தத்திலோ இப்பொழுதும் உன்னை வெள்ள இயலும். பலப் பரீட்சை செய்து பார்க்க நீ ஆயத்தமாக இருக்கிறாயா? என் ஆற்றலுக்கும், வலிமைக்கும் மரியாதை கொடுக்காவிட்டாலும், எனது வயதிற்காவது நீ மரியாதை கொடுக்க வேண்டும்.
“நான் வேங்கை நாட்டு மன்னனாக இருந்திருந்தாலும் உன் மாதிரி மூன்று தடவை அதை இழந்திருக்க மாட்டேன்! அரசுரிமை வேண்டாம் என்று எளிய வாழ்வு வாழும் என்னைக் கிள்ளுக்கீரையாக மதித்து, உனது ஏவலுக்கு ஓடும் வேலையாள் போல நடத்தினாலும் பரவாயில்லை, பொறுத்துக் கொள்வேன். பல்லாயிரக் கணக்கான சோழ வீரர்களையும், தனது மூத்த மகனான மனுகுலசேரி ஆளவந்தனையும் உன்னை வேங்கை மன்னனாக ஆக்கும் வேள்வியில் ஆகுதி கொடுத்த கோப்பரகேசரியாருக்கு உன்மீது அக்கரை இல்லை என்று அவதூறு செய்தால், சோழச் சக்கரவர்த்திகளை அவமதித்த குற்றத்திற்காக உன்னை நான் சிறையில் அடைக்க முடியும். அதைத் தெரிந்துகொள்! என்று ஆவேசமாகப் பொரிந்து தள்ளுகிறார் பிரம்மராயர்.
முதன் முறையாக பிரம்மராயரின் சீற்றம் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்கிறான். வயதானாலும், கூர்மையாக நகமும், பற்களும் உள்ள சிங்கம்தான் அவர் என்று அவனுக்குப் புரிகிறது. செயலிழந்து திகைத்து நிற்கிறான். அவனது நிலையைக் கண்ட பிரம்மராயரின் முகத்தில் கோபம் மறைந்து புன்னகையும் இரக்கமும் தவழ்கிறது. அவனது முதுகில் இலேசாகத் தட்டிக் கொடுக்கிறார் அவர்
தமிழ் இனி மெல்ல [3:15] தொடர்கிறது
அத்தியாயம் 11
சோழர் பாசறை, வேங்கை நாடு
சுபானு, சித்திரை 12 - ஏப்ரல் 25, 1043
செயலிழந்து நின்ற இராஜராஜ நரேந்திரன் தன்னைச் சமாளித்துக் கொண்டு உணர்விற்கு வருகிறான். தன்னுடைய மாமனார் இராஜேந்திர சோழரின் சீற்றத்தைக் நேரில் சந்தித்திருக்கிறான் அவன். அந்தச் சீற்றமும் பிரம்மராயரை அவமதித்தால் அவன் மீது செலுத்தப்பட்டது என்பதையும் அறிவான். “வங்கத்திற்குச் செல். சிவாச்சாரியருக்கு உதவியாகப் போரில் உன் திறமையைக் காட்டு. கங்கை நீருடன் திரும்பி வா. ஒரு வீரன், நாட்டை ஆளத் தகுந்தவன் என்று எனக்கு நிரூபித்துக் காட்டு. அதன் பின்பு நாடடை உனக்குத் தருவதைப் பற்றி யோசிக்கலாம்!” என்று இராஜேந்திரர் அன்று புலி போல உறுமியதை இன்று நினைத்துப் பார்த்தாலும் குலை நடுங்குகிறது. போரில் வாளேந்தினால் அவர் எப்படிச் சீறிப் பாய்வார்? எதிரிகளைச் சாடும்பொழுது அவரது முகத்தைப் பார்க்கவே எவருக்கும் அச்சமாக இருக்கும்.
ஆனால் எந்தக் காலத்திலும் - நீலமலையில் இளஞ்சேரன் உதகை மாளிகையில் அவமதிக்கப்பட்ட போதோ, பின்னர் வங்கத்தில் நடந்த போரிலோ, பிரம்மராயரின் முகத்தில் அமைதியைத் தவிர வேறு எந்த உணர்ச்சியையும் அவன் கண்டதில்லை. அவர் உறங்கும்பொழுது அவரைக் கொல்ல முயற்சி செய்து அவரிடம் பிடிப்பட்ட வங்க அரசகுமாரியை விசாரிக்கும்பொழுது அவர் கனிவுடன் நடந்து கொண்ட முறை அவன் நினைவுக்கு வருகிறது.
கிட்டத்தட்ட இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி அது..
வங்க மன்னன் மகிபாலனைச் சிறைப் பிடித்துக்கொண்டுவந்தாலும், அவனையும், அவனது குடும்பத்தினரையும் மரியாதையாக நடத்தி, தனது பாசறையில்தான் தங்க வைத்திருந்தார் பிரம்மராயர். மன்னனும், அவனது குடும்பமும் கூடாரத்தின் நடுவில் படுத்திருப்பார்கள். அவ்வமயம் மன்னனின் கால் சங்கிலியால் கட்டில் காலில் பிணைக்கப்பட்டிருக்கும். பெண்கள் நடுவில் ஒரு திரை மறைவில் உறங்குவார்கள். பிரம்மராயரும், நரேந்திரனும், அவர்களது மெய்காப்பாளர்களும் அனைவரையும் சுற்றிப் படுத்திருப்பார்கள். வங்க மன்னன் மகிபாலன் தூங்கும் நேரம் தவிர மற்ற சமயம் அரசனைப் போலத்தான் பிரம்மராயரால் நடத்தப் பட்டான்.
சில இரவுகளில் எழுந்து உலாவுவது பிரம்மராயரின் வழக்கம். அப்பொழுது அவரது கட்டிலில் அருகில் காலடிச் சத்தம் கேட்கும். அதே போலத்தான் அன்றிரவும் காலடிச் சத்தம் கேட்டது. எனவே அவருக்கு அடுத்த கட்டிலில் படுத்திருந்த நரேந்திரன் இலேசாகக் கண்விழித்துப் பார்த்தபோது போர்வையுடன் ஒரு உருவம் நின்றிருப்பது தெரிந்தது. பிரம்மராயர்தான் உலாவுவதற்காகப் போர்வையுடன் எழுந்து நிற்கிறார் என்று கண்களை மூடிய நரேந்திரனுக்கு அடுத்த கணமே ஒரு கூச்சலும், யாரோ கீழே விழும் சத்தமும் காதில் விழுந்தது. உடனே வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்திருந்த அவன் கண்களில் பிரம்மராயர் யாரையோ கையைப் பிடித்துத் தூக்குவது தெரிந்தது.
“யார் நீ? இங்கு எப்படி நுழைந்தாய்? காவலர்கள் என்ன ஆனார்கள்?” என்று மெல்லிய குரலில் கேட்டவாறே ஒரு கையால் அந்த உருவத்தின் மணிக்கட்டைப் பிடித்திருந்த பிரம்மராயர், அக்கையில் இருக்கும் பிச்சுவாக் கத்தியை மறு கையால் பிடுங்கினார். அவரது தோள்பட்டையில் ஒரு இடத்திலிருந்து குருதி வழிந்து கொண்டிருந்தது.
அந்த உருவம் அவரிடமிருந்து திமிறப் பார்த்தது. அந்தக் கை கலப்பில் அது போர்த்தியிருந்த போர்வை நழுவிக் கீழே விழுந்தது.
“என்ன, நீ ஒரு பெண்ணா! யார் உன்னை அனுப்பினார்கள்? உங்கள் நாட்டில் ஆண்கள் வாளெடுப்பது கிடையாதா? என்று வியப்புடன், ஆனால் மெல்லிய அச்சுறுத்தும் குரலில் கேட்ட பிரம்மராயர், “இளவரசே, சத்தமின்றி அங்கு இருக்கும் தூங்கா விளக்கை எடுத்து வாருங்கள். யாரும் எழாமலிருப்பது நமக்கு நல்லது.” என்று கரகரத்த குரலில் கூறினார்.
தூங்கா விளக்கை எடுத்து வந்தான் நரேந்திரன்.
“இப்பெண்ணின் முகத்தில் வெளிச்சம் தெரியும்படி விளக்கைப் பிடியுங்கள்!” என்று பிரம்மராயர் சொன்னதும், விளக்கை உயர்த்திப் பிடித்தான் நரேந்திரன்.
இருபது, இருபத்திரண்டு வயதிருக்கும் மிகவும் அழகான அப்பெண் கோதுமை நிறமாக இருந்தாள். ஆண்களைப் போலக் கீழாடை அணிந்திருந்தாலும், மார்பகத்தை கெட்டியான துணியால் இறுகக் கட்டியிருந்தாள். அதற்கு மேலே போர்வையைச் சுற்றியிருந்தாலும், தலைமுடியை வீரர்கள் மாதிரி சுற்றி மேலேக் கொண்டையாக முடிந்திருந்தாலும், தூரத்திலிரந்து பார்ப்பவர்களுக்குப் பெண் என்று அறிந்து கொள்வது கடினம் தான். போர்வை கீழே விழுந்தவுடன் அவள் பெண் என்று எளிதில் அறிந்து கொள்ள முடிந்தது பிரம்மராயரால் - இருட்டிலும் கூட.
அந்தப் பெண் வாயைத் திறந்து பேச மறுத்துத் தலையாட்டினாள். அவர் கேட்பது தனக்குப் புரியவில்லை என்று தன் கைகளால் சைகை செய்தாள். அவளது கண்களில் தாண்டவமாடும் வெறுப்பு இருவருக்கும் நன்றாகவே தெரிந்தது. அவளது முகவெட்டைக் கண்டு அவள் ஒரு வங்க நாட்டுப் பெண்ணாகத்தான் இருக்கக்கூடும் என்று முடிவுசெய்துவிட்டு, தனது உத்தரீயத்தால் அவள் கைகளைக் கட்டிய பிரம்மராயர், அவளிடமிருந்து பிடுங்கிய பிச்சுவாவை விளக்கு வெளிச்சத்தில் பரிசோதனை செய்தார்.
“ஒரு கணம் தாமதித்திருந்தால் எனது மார்பில் இந்த பிச்சுவா நுழைந்திருக்கும். அதன் மீது பட்ட ஒளியைக் கண்டு புரண்டு எழுந்ததால் மார்புக்குக் வைத்த குறி தப்பி தோளின் நடுவில் கீறலோடு தப்பித்தேன்!” என்று விளக்கிய பிரம்மராயர், “இளவரசே, வங்க மொழி பெயர்ப்பாளரைத் தருவித்தால்தான் இவளுடன் பேசலாம். அதுவரை நம்மால் எதுவும் செய்ய இயலாது. எனவே விடியும்வரை காத்திருப்போம். இவளுக்குக் காவலாக அமர்ந்திருக்கப் போகிறேன். தாங்கள் வேண்டுமானால் உறங்கலாம்.” என்று கனிவாகக் கூறி அனுப்பிவிட்டு, அப்பெண்ணுக்குத் தன் கட்டிலைச் சுட்டிக் காட்டி, தலையைச் சாய்த்து உள்ளங்கையைக் காதுகளில் வைத்து, உறங்கச் செல்லுமாறு பணித்தார்.
அவரைப்பற்றி என்ன நினைப்பது என்று புரியாமல் விழித்தாள் அப்பெண். தன்னைக் கொள்ள வந்தவளையே கட்டிலில் படுத்து உறங்கு என்று கனிந்த முகத்துடன் சைகை செய்யும் இந்த மனிதர் எப்படித் தனது தந்தையான வங்க மன்னரின் தலைமீது கங்கை நீர் நிறைந்த குடத்தை வைத்து அவரைச் சோழநாட்டிற்கு அழைத்துச் செல்கிறார் என்று குழம்பினாள். அது மட்டுமா! தனது தாயையும், உடன் பிறப்புகளையும் அல்லவா சிறைப்பிடித்துக் கொண்டு செல்கிறாரே, பொழுது விடிந்து தான் யார் என்பதை அறிந்து கொண்டால் என்ன செய்வாரோ என்றும் அச்சமுற்றாள். அந்த நினைப்பிலேயே அவளையும் அறியாமல் உறக்கம் அவள் கண்களைத் தழுவியது.
அவள் நினைத்தபடியே காலையில் அவளது தந்தையும் தாயும் பார்த்துவிடவே, ஒரே கூச்சல் எழுந்தது. பிரம்மராயர்தான் அவளைத் தேடிப் பிடித்துக் கொணர்ந்திருக்கிறார் என்று குதியாய்க் குதித்தார்கள். மொழிப்பெயர்ப்பாளர் மூலம் உண்மையைத் தெரிந்து கொண்ட பிரம்மராயர் முகத்தில் கோபத்திற்குப் பதிலாகப் புன்னகை மலர்ந்தது.
“மொழிபெயர்ப்பாளரே, நான் சொல்வதை ஒரு சொல் கூட மாறாது வங்க மொழியில் அவர்களிடம் சொல்லும். இந்தப் பெண் ஆண் வேடமணிந்து நமது படையைத் தொடர்ந்து வருவதை - இவள் பெண் என்பதை அறிந்து கொள்ளாவிட்டாலும் - கடந்த பதினைந்து நாள்களுக்கு முன்னரே ஒற்றர் மூலம் அறிவேன். ஆயினும், இவள் யார், எதற்காக நம்மைப் பின்தொடர்கிறாள் என்பதை அறிந்து கொள்ளத்தான் அவளை ஒன்றும் செய்யாது கண்காணித்து வருமாறு ஒற்றர்களுக்கு ஆணையிட்டேன். அவள் நமது பாசறைக்குள் யாருமறியாமல் நுழைய நான்கைந்து நாள்களாக முயல்கிறாள் என்று தெரிந்தும், அவளது உள்நோக்கத்தை அறிந்து கொள்ளவே, அவளை நேற்று இரவுதான் என் கூடாரத்தில் நுழைய அனுதிக்குமாறு காவலர்களுக்கு ஆணை பிறப்பித்தேன். அவர்களும் உறங்குவது மாதிரி பாசாங்கு செய்து அவளை உள்ளே நுழையவிட்டார்கள். அவளை எதிர்பார்த்து அவள் நடவடிக்கையைக் கண்காணித்தேன். எனது கட்டிலருகில் வந்தவள் கண்ணிமைக்கும நேரத்தில் ஒரு பிச்சுவாவை எடுத்துத் தாக்க முயன்றாள். அதற்குப் பின் நடந்ததை வேங்கை நாட்டு இளவரசரே விவரிக்கட்டும்”. என்றவுடன் மேற்கொண்டு நடந்ததை விவரித்தான் நரேந்திரன்.
வங்க மன்னன் மகிபாலன் சிறைப்பிடிக்கப் பட்டதும், தன்னை ஆண்வேடமணிந்து கொள்ளச் செய்து, தன்னை மணமுடிக்கவிருக்கும் அண்டைநாட்டு அரசகுமாரனிடம் சேரச் சொல்லி அனுப்பியதாகவும், ஆனால் தான் தான்? தனது தந்தையின் அவமானத்திற்கு பழிவாங்க சோழப் படையைத் தொடர்ந்து வந்து தலைமைப் படைத் தலைவரான பிரம்மராயரைக் கொலைசெய்ய முயற்சித்ததாகவும் ஒப்புக்கொண்டாள் அப்பெண், வங்க நாட்டு அரசகுமாரி மினோத்தி.
“இனி உங்கள் சோழநாட்டு நீதியைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். பெண்களை உங்கள் சோழநாட்டில் எப்படித் தண்டிப்பார்களோ அப்படித் தண்டித்து விடுங்கள். தந்தையே! உங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க இயலாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன். அடுத்த பிறப்பில் தங்களுக்கு மகனாகப் பிறந்து சோழர்களைப் பழிவாங்க புத்த தேவர் அருள் புரியட்டும்! என்று அறைகூவினாள்.
மகிபாலன், மற்றும் அவனது குடும்பத்தார் கண்ணில் நீர் வழிந்தது.
மற்ற படைத் தலைவர்கள் பிரம்மராயரைக் கொல்ல முயன்ற மினோதியைச் சிறைப் பிடித்து வாழ்நாள் முழுவதும் பிரம்மராயர் குடும்பத்திற்கு குற்றேவல் செய்து கழிக்கும்படி தீர்ப்பளிக்குமாறு வேண்டினார்கள்.
“என் மகளை விட்டுவிடுங்கள். அவளை மன்னியுங்கள். வாழவேண்டியவள் அவள். வாழ்நாள் முழுவதும் குற்றேவல் புரியச் செய்து, அவலப் படுத்துவதைவிட அவளைக் கொன்றுவிடுவது சிறந்ததாகும். அவள்மீது கருணை காட்டுங்கள். அவள் குற்றத்திற்காக என்னை அதிகமாகத் தண்டியுங்கள். நானும் என் மனைவியும் உங்கள் போர்க்கொடி உயர்த்தி, பல்லாயிரக்ணக்கான உயிர்களைப் பலியிட்டது நான்தான்! புத்தபிரான்தான் என்னை மன்னிக்க வேண்டும்! என்று இறைஞ்சினான் மன்னன் மகிபாலன்.
சற்று நேரம் சிந்தித்தார் பிரம்மராயர். அவர் உள்ளத்தில் நினைப்பதை அவரது முகம் காட்டாது அமைதியாகவே இருந்தது. அவர் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறாரோ என்று அனைவரும அவர் முகத்தை நோக்கினார்கள்.
“உங்கள் மகள் எனக்குப் பதிலாக வேங்கைநாட்டு இளவரசரைத் தாக்க முயலாததால் அவள் அரசத் துரோகம் செய்யவில்லை என்ற முடிவுக்கு வருகிறேன். அப்படிச் செய்திருந்தால் நான் அதற்கு உரிய தண்டனையைத்தான் அளிக்க வேண்டி இருந்திருக்கும். எனவே, அரசத் துரோகத்திற்கான தண்டனையை நான் வாழங்கப் போவதில்லை. என்னைத் தாக்க வந்திருந்தாலும், நான் இன்னும் உயிருடன் இருப்பதால், கொலை முயற்சிக்காக என்ன தண்டனை என்றுதான் தீர்மானிக்க வேண்டும்.
பிறகு அவர் முகத்தில் லேசான புன்னகை மலர்ந்தது. “இருப்பினும், தந்தைக்காக அவள் ஒரு வங்காள வரிப்புலியாகப் பொங்கி எழுந்தது நான் வணங்கும் சிவபெருமானின் ஒரு பாதியை தனக்கு உரிமையாக்கிக் கொண்டிருக்கும் அம்பிகையாகத்தான் தோன்றுகிறது.
“மேலும், உங்களது பெண்ணை இன்னொருவருக்கு மனைவியாக்க முடிவு செய்து அனுப்பி தந்தையின் கடமையைச் செய்து விட்டீர்கள். எனவே, அவளது செயலுக்காக உங்களைத் தண்டிப்பது சரியானதல்ல. இவளுக்கு மணமுடிக்க முடிவு செய்திராவிட்டால் இப்படிப்பட்ட வீராங்கனையை எங்கள் சோழநாட்டு இளவரசருக்கு மனைவியாக ஆக்கிவிட்டிருப்பேன்.
“இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்."
என்று வள்ளுவப் பிரான் கூறியிருக்கிறார். எனவே அவளை மன்னித்து அவளது வருங்காலக் கணவரிடமே அனுப்பி வைக்க முடிவு செய்திருக்கிறேன். எப்போது எங்களிடம் வந்து சிறைப்பட்டாளோ, அப்போதே இவள் எங்கள் வீட்டுப் பெண்ணாகிவிட்டாள். ஒரு பெண்ணை ஒரு சீர்வரிசையும் இல்லாமல் அனுப்பி வைக்கக் கூடாது. எனவே தகுந்த சீர்வரிசையுடன் அவளுக்குத் துணையாக எங்கள் நாட்டு வீரர்கள் சென்று, அவள் வருங்காலக் கணவரிடம் சேர்ப்பித்துவிட்டு வருவார்கள்.”
தனது கழுத்தில் தொங்கிய ஒரு மெல்லிய தங்கச் சங்கிலியைக் கழட்டி அதில் தன் இலச்சினையைக் கோர்த்தார். அருகில் இருந்த தூங்க விளக்கில் தன் இடுப்பில் இருந்த ஒரு அரக்குத் துண்டைக் காட்டி அதில் இருந்த சில எழுத்துக்களின் மேலே ஊற்றினார். அதை விரல்களால் சமனப்படுத்திவிட்டு “பெண்ணே! இந்தா, இதைப் பெற்றுக் கொள்!” எ?று அவளிடம் கொடுத்தார்.
“இது உன்னிடம் இருக்கும் வரை சோழநாட்டின் பாதுகாப்பு உனக்கு என்றும் இருக்கும். உன்னைப போன்ற ஒரு வீரப் பெண்மணியின் வாரிசு என் சந்ததியாருக்கு வாழ்க்கைத் துணையாகக் கிடைத்தால் அது என் பெரும்பாக்கியம். வங்கமும், சோணாடும் போர் புரிவதை விடுத்து, உறவு கொண்டாடித் துவங்கி விடும்.”
அவரது தீர்ப்பை யாராலும் நம்ப முடியவில்லை. மினோத்தியின் விழிகளிலிருந்து கண்ணீர் தாரையாகப் பெருகுகியது. “கருணையே வடிவான உங்களைக் கொலை செய்ய நினைத்தேனே! என்று கூறிக்கொண்டே அவர் கால்களில் விழுந்தாள்.
“எழுந்திரு அம்மா. நீண்ட காலம் சுமங்கலியாக வாழ்வாயாக!” என்று வாழ்த்தினார்.
“பிரம்மராயரே! உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன் - நீங்கள் சிறந்த போர்வீரர் மட்டுமல்லாமல் ஒரு அரசியல் நிபுணரும் கூட என்று, வங்கநாட்டின் அன்பளிப்பாக பெருமிதத்துடன் கங்கை நீர் நிறைந்த குடத்தை உங்கள் நாட்டிற்குக் கொண்டு செல்வேன் 12. தப்பித்துச் செல்ல முயற்சி செய்ய மாட்டேன். என்றும் உங்கள் நாட்டுக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்த மாட்டேன்! புத்தபிரானின் மீது ஆணை! என்று தழுதழுத்த குரலில் உறுதி அளித்தான் மகிபாலன்…
… மெதுவாக நிகழ்காலத்திற்குத் திருப்பி வருகிறான் இராஜராஜ நரேந்திரன்.
இப்படிக் கருணை நிறைந்த பிரம்மராயரை ஒருவேளை தவறாகவே கடந்த இருபத்திரண்டு ஆண்டுகளாக மதிப்பிட்டுவிட்டோமோ என்று நினைத்துப் பார்க்கிறான். ஒரு கணம் கனிந்த மனம் மீண்டும் கல்லாக இறுகுகிறது.
“இவரால்தானே நான் மையல் கொண்ட பெண்ணை அடையமுடியாது போனேன்! இவரால்தானே என் மாமனாரிடம் அவமானப் பட்டேன்! இவரால்தானே எனது நாட்டை நான் பெறுவதற்கு இராஜேந்திரரிடம் அவமானப்பட நேர்ந்தது! இவரை மிகவும் பாதிக்கும்படியான ஒரு செயலைச் செய்ய வேண்டும். அதுவரை இவரைப் பகைத்துக் கொள்வது சரியல்ல.” என்று மனதிற்குள் சொல்லிக் கொள்கிறான்.
“அரசே! அடங்கிக் கிடக்கும் எரிமலையின் உள்ளிருக்கும் பாறைக் குழம்பு பீச்சியடிப்பது போல மனதில் இதுகாறும் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் பீறிட்டு வந்து விட்டன. என்னதான் இருந்தாலும் தாங்கள் ஒரு அரசர். தங்களை நான் அப்படிக் கோபத்துடன் பேசியிருக்கக் கூடாது அதற்காக நான் வருந்துகிறேன். என்னதான் இருந்தாலும் நாட்டை இழப்பது மிகவும் கொடியது. அந்த மனநிலையில் நீங்கள் ஏதோ பேசிவிட்டீர்கள் என்று விடாமல் என் சலிப்பை நான் காட்டியது தவறுதான்.
“இலங்கையிலும், பாண்டிநாட்டிலும் பல கலவரங்கள் நடந்து வருகின்றன. அதனால்தான் அங்கு சோழப் படை கட்டிப் போடப்பட்டிருக்கிறது. எப்படியும் அவற்றைத் தீர்த்துவிட்டு உடனே தங்கள் மைத்துனர் இராஜாதிராஜர் பெரும்படையுடன் வந்து விடுவார். நானும் அதற்குள் என்னால் இயன்றதைச் செய்கிறேன். பெருக்கெடுத்தோடும் கிருஷ்ணையைக் கடக்க முயற்சிப்பது தற்கொலைக்குச் சமமாகும்.” என்று நரேந்திரனைச் சமாதானப் படுத்துகிறார் பிரம்மராயர்.
சமாதானம் ஆனமாதிரி நடிக்கிறான் நரேந்திரன்.
“அதனாலென்ன பிரம்மராயரே! அக்காள், தங்கையை மணந்து கொண்ட நாம் கொஞ்சம் மனம் விட்டுப் பேசிக் கொள்ளக் கூடாதோ! ஒருவரை ஒருவர் கடிந்து கொள்ளத்தான் கூடாதோ! ஆந்திர வெய்யில் நம் அனைவரையும் எரிச்சல் அடையத்தான் செய்துவிடுகிறது.” என்று திரும்பச் சமாதானம் கூறுகிறான்.
அதே சமயம், அவனது மனம் எதைச் செய்தால் இருவருடைய சிறந்த முயற்சியைத் தோல்வி அடையச் செய்யலாம், எதன் மூலம் இவரை வெற்றி கொள்ளலாம், என்று துருவிப் பார்த்துக் கொள்கிறது. அவன் மனக்கண் முன் சட்டென்று ஒன்று பளிச்சிடவே, அவனது முகம் மலர்கிறது. அதைக் கண்டு கொஞ்சம் திகைப்படைகிறார் பிரம்மராயர். திடுமென்று அவனது முகம் மலர்ந்தது அவ்வளவு நல்லதற்கல்ல என்று அவரது உள்மனம் சொல்கிறது.
குதிரைக் குளம்பொலி கேட்டு இருவரும் வெளிவருகிறார்கள். புலிக் கொடியைக் கையில் பிடித்தவாறு குதிரையில் வந்த தூதுவன் ஒருவன் அதை நிறுத்திவிட்டுக் கீழிறங்கி இருவரையும் வணங்குகிறான்.
“வணக்கத்திற்குரிய இராஜேந்தர சோழ பிரம்மராயரையும், வேங்கை நாட்டு மன்னரையும் தலை வணங்குகிறேன். பிரம்மராயருக்கு சோழநாட்டுப் படடத்தரசர் இராஜாதிராஜரிடமிருந்து ஓலைதாங்கி வந்திருக்கிறேன்.” என்று பிரம்மராயரிடம் இராஜாதிராஜனின் இலச்சினை படிந்த ஓலைக் குழலை நீட்டுகிறான்.
அதைப் படித்த பிரம்மராயரின் முகத்தில் கவலைக் கோடுகள் படிவதைக் கவனிக்கிறான் நரேந்திரன். இரண்டாம் தடவையாக இன்று அவரது முகத்தில் அமைதியைத் தவிர மற்ற உணர்ச்சிகளும் ஓடுவதைக் கண்டு உள்ளூர மகிழ்கிறான்.
“அரசே! நான் உடனே சோழநாடு திரும்ப வேண்டும். என் மகன் மறையன் அருள்மொழி கங்க நாட்டிலிருந்து இருபதாயிரம் வீரர்களுடன் தங்களுக்கு உதவியாக வந்து கொண்டிருக்கிறான்.13. நான் இன்னும் ஒரு நாழிகையில் புறப்படுகிறேன். இப்படி அவசரமாகக் கிளம்புவதற்கு மிகவும் வருந்துகிறேன்.” என்ற பிரம்மராயர், “சுப்பா, மூட்டையைக் கட்டு! நாம் உடனே கிளம்ப வேண்டும்.” என்று மற்ற படைத் தலைவர்களைச் சந்திக்கக் கிளம்புகிறார்.
இவர் உடனே கிளம்பவேண்டும் என்றால் விஷயம் மிகவும் பெரிதாகத்தான் இருக்க வேண்டும், அதனால் ஆதாயமா இல்லையா என்று யோசிக்கிறான் நரேந்திரன்.
*** *** ***
அடிக்குறிப்பு
13.வங்க மன்னன் மகிபாலனை கங்கை நீர் நிரம்பிய குடத்தைச் சோழநாட்டிற்கு சுமந்து வரச் செய்தார்கள் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றனபின்னர் அவன் விடுவிக்கப் பட்டு சோழர்களுக்குக் கப்பம் செலுத்தி வந்ததாகவும், அது மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை நீடித்ததாகவும் தெரிகிறது. அவன் விரும்பிக் கொண்டு வருவதாகச் சொல்வது கற்பனையே.
தமிழ் இனி மெல்ல [3:15] தொடர்கிறது
அரிசோனா மகாதேவன் |

No comments:
Post a Comment