அறிவியல் தொலைநோக்கி
ஐதராபாத்: நாட்டிலேயே முதல் முறையாக, கருவில் இருக்கும் சிசுவுக்கு இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து ஐதராபாத் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தம்பதியினர் அருண் (29), சிரிசா (25). சிரிசா 7 மாத கர்ப்பிணி. இவரை பரிசோதித்த டாக்டர்கள், கருவில் இருக்கும் சிசுவுக்கு இதயக் கோளாறு இருப்பதாக கூறினர். இதனால் கவலை அடைந்த அருண், சிரிசா தம்பதியினர் ஐதராபாத்தில் உள்ள அட் கேர் மருத்துவமனையை அணுகினர். அங்கு, சிரிசாவை பரிசோதித்த டாக்டர்கள், கருவில் இருக்கும் சிசுவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதற்கு அருண், சிரிசா தம்பதியினர் முதலில் தயங்கினர். இதனால், சிரிசாவுக்கு மருத்துவ அறிவியல் பற்றி பாடமே எடுத்துள்ளனர். கருவுக்கு எவ்வாறு அறுவை சிகிச்சை செய்வார்கள் என்பதை தெளிவாக விளக்கி உள்ளனர்.
இதன்பிறகு சம்மதித்தார் சிரிசா. மிகவும் கடினமான இந்த அறுவை சிகிச்சையை ஐதராபாத் டாக்டர்கள் நேற்று முன்தினம் வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்துள்ளனர். நேற்று உலக கரு தினம¢. அதற்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து குழந்தை இதய நிபுணர் டாக்டர் கே.நாகேஸ்வர ராவ் கூறியதாவது: கருவில் உள்ள சிசுவின் இதயத்தின் இடது அறையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால், இதய அறை சேதமடைந்து சுருங்கி இருந்தது. இத்தகைய பாதிப்புடன் குழந்தை பிறந்தால், அதன் பிறகு அறுவைசிகிச்சை மேற்கொள்வது சாத்தியமில்லாதது. எனவே, கருவில் இருக்கும் போதே இதய அறுவைசிகிச்சை செய்ய முடிவு செய்தோம்.கருவின் 26 வாரத்தின் போது, முதல் முயற்சி மேற்கொண்டோம்.
ஆனால் கருவின் நிலை, அறுவைசிகிச்சை செய்வதற்கு ஏற்ற வகையில் இல்லை. இதனால், ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் முயற்சி செய்தோம். மொத்தம் 12 ஸ்பெஷலிஸ்ட்கள் இணைந்து இந்த வரலாற்று சிறப்பு மிக்க அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளோம். தற்போது, சிரிசாவும் கருவும் நலமாக உள்ளனர். கருவின் எடை இன்னும் 2 வாரத்தில் 830 கிராமில் இருந்து 1200 கிராமாக கூடும். கருவின் இதய துடிப்பு, வளர்ச்சி அனைத்தும் சரியாக உள்ளது.
No comments:
Post a Comment