தமிழ் இனி மெல்ல[3.8] சென்ற பதிவின் இறுதியில்
“குந்தித் தின்றால் குதிரும் கரையும் என்ற பழமொழியை நீ கேள்விப் பட்டிருக்கிறாய் அல்லவா? சிறிது சிறிதாக சோழருக்கு எதிராக நாம் செயல்பட்டுக் கொண்டே வந்தால் அவர்களது வலிமை குறைந்து கொண்டே வரும். இலங்கைப் போரை எடுத்துக் கொள். நமக்கு ஐயாயிரம் வீரர்கள்தான் இழப்பு. ஆனால் பேரிழப்பு சோழர்களுக்குத்தானே! ரோகணத்தில் இராஜாதிராஜன் பதிமூவாயிரம் வீரர்களையும், இராஜேந்திரன் இருபத்தையாயிரம் வீரர்களையும் இழந்தான் அல்லவா? சிங்கள வீரர்கள் கிட்டத்தட்ட நாற்பத்தையாயிரம் பேருக்கு மேல் இறந்தாலும், கூட்டிக் கழித்துப் பார்த்தால் நமக்கு ஐயாயிரமும், சோழர்களுக்கு முப்பத்தெட்டாயிரமும் இழப்பல்லவா? எனது தந்தை இராஜராஜனிடம் இழந்ததற்கு மேலாகவே நாம் சோழவீரர்களை அழித்து விட்டோமே! இது தவிர எத்தனை பொருட்சேதம் அவர்களுக்கு ஏற்பட்டது?
“இனி நேருக்கு நேராக இராஜேந்திரனிடம் தேவையில்லாமல் போரிட்டு, நான் பாண்டிய வீரர்களை இழக்க மாட்டேன். மெல்ல மெல்ல நமது எண்ணிக்கை அதிகரிக்கட்டும். அவனுக்கு எல்லாவிதத்திலும் தொல்லை கொடுத்து, நமது வலிமையை அதிகரித்துக் கொண்டே வருவோம்.” என்று கூறியபடி குதிரையை ஒரு மண்டபத்திற்கருகில் நிறுத்துகிறான் விக்கிரமன். மற்றவர்களும் தங்கள் குதிரைகளை நிறுத்துகிறார்கள்.
மண்டபத்தின் அருகிலிருக்கும் குடிசையிலிருந்து ஒரு கிழவன் வெளியே வருகிறான்.
“நாங்கள் வணிகர்கள். இரவு நாங்கள் இந்த மண்டபத்தில் தங்கி, காலையில் நெல்லைக்குச் செல்லப் போகிறோம். எங்களுக்கு உணவு ஏதாவது கிடைக்குமா? நாங்கள் பணம் கொடுத்து விடுகிறோம்.” என்றபடி கைநிறையக் காசுகளை கிழவனிடம் நீட்டுகிறான் காளையப்பன்.
அவனையும், மற்ற வீரர்களையும் மேலும் கீழும் பார்த்த கிழவனின் முகம் மலர்கிறது. தனது மிச்சமிருக்கும் பற்கள் தெரியச் சிரிக்கிறான்.
“எங்க பாண்டிய மகராசாவை எனக்குத் தெரியாதா என்ன! வராத விருந்தாளியாக மன்னர் பிரானே என் குடிசைக்கு எழுந்தருளி இருக்கிறார். அவர் பசியாற நாங்கள் பணமா வாங்கிக் கொள்வோம்!” என்றபடி விக்கிரமனை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுகிறான். “கும்பிடறேன் மகராசா!”
* * *
தமிழ் இனி மெல்ல[3.9] தொடர்கிறது
திருசிவப்பேரூர்,4 சேரநாடு
காளயுக்தி, ஆவணி 8 - ஆகஸ்ட் 23, 1018
“குந்தித் தின்றால் குதிரும் கரையும் என்ற பழமொழியை நீ கேள்விப் பட்டிருக்கிறாய் அல்லவா? சிறிது சிறிதாக சோழருக்கு எதிராக நாம் செயல்பட்டுக் கொண்டே வந்தால் அவர்களது வலிமை குறைந்து கொண்டே வரும். இலங்கைப் போரை எடுத்துக் கொள். நமக்கு ஐயாயிரம் வீரர்கள்தான் இழப்பு. ஆனால் பேரிழப்பு சோழர்களுக்குத்தானே! ரோகணத்தில் இராஜாதிராஜன் பதிமூவாயிரம் வீரர்களையும், இராஜேந்திரன் இருபத்தையாயிரம் வீரர்களையும் இழந்தான் அல்லவா? சிங்கள வீரர்கள் கிட்டத்தட்ட நாற்பத்தையாயிரம் பேருக்கு மேல் இறந்தாலும், கூட்டிக் கழித்துப் பார்த்தால் நமக்கு ஐயாயிரமும், சோழர்களுக்கு முப்பத்தெட்டாயிரமும் இழப்பல்லவா? எனது தந்தை இராஜராஜனிடம் இழந்ததற்கு மேலாகவே நாம் சோழவீரர்களை அழித்து விட்டோமே! இது தவிர எத்தனை பொருட்சேதம் அவர்களுக்கு ஏற்பட்டது?
“இனி நேருக்கு நேராக இராஜேந்திரனிடம் தேவையில்லாமல் போரிட்டு, நான் பாண்டிய வீரர்களை இழக்க மாட்டேன். மெல்ல மெல்ல நமது எண்ணிக்கை அதிகரிக்கட்டும். அவனுக்கு எல்லாவிதத்திலும் தொல்லை கொடுத்து, நமது வலிமையை அதிகரித்துக் கொண்டே வருவோம்.” என்று கூறியபடி குதிரையை ஒரு மண்டபத்திற்கருகில் நிறுத்துகிறான் விக்கிரமன். மற்றவர்களும் தங்கள் குதிரைகளை நிறுத்துகிறார்கள்.
மண்டபத்தின் அருகிலிருக்கும் குடிசையிலிருந்து ஒரு கிழவன் வெளியே வருகிறான்.
“நாங்கள் வணிகர்கள். இரவு நாங்கள் இந்த மண்டபத்தில் தங்கி, காலையில் நெல்லைக்குச் செல்லப் போகிறோம். எங்களுக்கு உணவு ஏதாவது கிடைக்குமா? நாங்கள் பணம் கொடுத்து விடுகிறோம்.” என்றபடி கைநிறையக் காசுகளை கிழவனிடம் நீட்டுகிறான் காளையப்பன்.
அவனையும், மற்ற வீரர்களையும் மேலும் கீழும் பார்த்த கிழவனின் முகம் மலர்கிறது. தனது மிச்சமிருக்கும் பற்கள் தெரியச் சிரிக்கிறான்.
“எங்க பாண்டிய மகராசாவை எனக்குத் தெரியாதா என்ன! வராத விருந்தாளியாக மன்னர் பிரானே என் குடிசைக்கு எழுந்தருளி இருக்கிறார். அவர் பசியாற நாங்கள் பணமா வாங்கிக் கொள்வோம்!” என்றபடி விக்கிரமனை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுகிறான். “கும்பிடறேன் மகராசா!”
* * *
தமிழ் இனி மெல்ல[3.9] தொடர்கிறது
அரிசோனா மகாதேவன் |
திருசிவப்பேரூர்,4 சேரநாடு
காளயுக்தி, ஆவணி 8 - ஆகஸ்ட் 23, 1018
கோடி கொடுத்தாலும் கொளேன், அட்டமா சித்தியும், அண்டத்திலுள்ள அனைத்துச் செல்வமும் வேண்டேன்! உன் காலடியில் விழுந்து கிடக்கும் பேரின்பம் ஒன்றையே வேண்டி மெழுகாய் கரைந்து நிற்பேன்!” என்று திருசிவப்பேரூரில் வடக்குநாதன் ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் சிவபெருமானை பலவாறு மனமுருகி வேண்டிக் கொண்டிருக்கிறார் பொன்னம்பல ஓதுவார்.
அவரருகில் நிலவுமொழி நின்று கொண்டிருக்கிறாள். வைணவனான தன்னை ஆலயத்திற்குள் விடமாட்டார்கள் என்று அவளது கணவன் காடவன் வரமறுத்து விட்டதால், தந்தையுடன் மட்டுமே வடக்குநாதன் ஆலயத்திற்கு வழிபட வந்திருக்கிறாள் அவள்.
சேரமான் பாஸ்கர ரவிவர்மனின் விருந்தாளிகளாக அவர்கள் வந்திருப்பதால் அவர்களுக்காகச் சிறப்பான வழிபாடு நடத்தப் படுகிறது. கற்களால் கட்டப்பட்டு ஓங்கி நிற்கும் சோழநாட்டுக் கோவில்களைக் கண்டு வந்த நிலவுமொழிக்கு மரத்தினால் கட்டப் பட்ட சேரநாட்டுக் கோவில்களைக் கண்டால் புதுமையாக இருக்கிறது. தவிரவும், அங்கு நம்பூதிரிகள் பூசை செய்யும் முறையும் வேறுபட்டிருப்பதைக் கண்டு மலைக்கிறாள்.
அது மட்டுமன்றி அங்கு கோவிலில் தொழ வரும் சேரப் பெண்கள் தங்கள் மார்பை மறைக்கும் “முண்டு”களையும் இறைவன் சன்னதியில் நீக்கிவிடுவதையும் கண்டு வியக்கிறாள். தனது பார்வை அவர்கள் மார்பகங்களின்மீது படாமல் இருக்கவேண்டி கண்களைத் திருப்பிக் கொள்ளவும் செய்கிறாள். மார்புக் கச்சையை நீக்க வேண்டும் என்று அவளைச் சொன்ன போது அவளுக்குக் கோபமே வந்து விட்டது. அவள் சேரநாட்டுப் பெண்ணல்ல, சோழநாட்டு அரசப் பிரிதிநிதிகளுடன் வந்திருக்கிறாள், எனவே, சேரநாட்டு வழக்கங்களுக்கு அவளைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று பலவாறு எடுத்துச் சொன்ன பின்னர், கச்சையை நீக்க வேண்டாம், ஆனால், மார்புக் கச்சையை மறைத்துப் போர்த்திருக்கும் உத்தரீயத்தையாவது நீக்கி விடவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டனர் நம்பூதிரிகள்.
பொன்னம்பல ஓதுவாரும் அவளிடம், “மகளே நிலா, இந்த நம்பூதிரிகளின் பார்வை உனது மார்பின் மேல் படியாது. முகத்தையும், கைகளையும் போலத்தான் அவர்கள் மார்பையும் பார்ப்பார்கள். குழந்தை தாயின் மார்பைப் பார்ப்பதுபோலத்தான் அவர்களது பார்வையும் இருக்கும். எனவே உத்தரீயத்தை எடுப்பதில் தவறில்லை என்றுதானம்மா நானும் நினைக்கிறேன்!” என்று எடுத்துச் சொல்லிய பிறகு அரை மனதாக தனது உத்தரீயத்தை இடுப்பில் கட்டிக் கொண்டு மார்புக் கச்சைகூட யாருடைய கண்ணுக்கும் தெரியாதவாறு கைகளால் மறைத்துக் கொண்டுதான் இறைவனை வழிபடுகிறான் அவள்.
அவளுடைய இக்கட்டான இந்த நிலையையும், அவளது வெட்கத்தையும் கண்டு தனக்குள்ளாக நமுட்டுச் சிரிப்பை உதிர்க்கின்றனர் அங்கு வழிபட வந்த சேர நங்கைகள். அதைக் கண்ட நிலவுமொழிக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது. தந்தை வேண்டாத அஷ்டமாசித்தியைப் பெற்று தான் யார் கண்ணிலும் படாது மறைந்துவிட மாட்டோமா என்று இறைவனை பலவாறு வேண்டுகிறாள்.
“நிங்ஙள் நாடு எதுவோ?” என்று அவளருகில் வந்து விசாரிக்கிறாள் ஒரு சேர நங்கை.
தூக்கி வாரிப் போடுகிறது நிலவுமொழிக்கு. அருகில் நிற்கும் அந்த நங்கையை ஏறிட்டு நோக்குகிறாள். பதினெட்டு வயதான அவள் பளபளவென்று ஆரோக்கியமான உடற்கட்டுடன் இருபத்திரண்டு வயது மதிக்கும் அளவுக்கு இருக்கிறாள். மெதுவாக அவளைப் பார்த்துப் புன்னகை செய்த நிலவுமொழி, “தொண்டை நாடு. திருமயிலை. சோழநாட்டு வேளிர்கோன் காடவராயரின் மனைவி நான். இவர் எனது தந்தை பொன்னம்பல ஓதுவார்.” என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள்.
“சோமசுந்தரத் தம்புரான் என்ட அம்மானானு (மாமனாகும்). எண்ட அம்மை இந்துமதி தம்புராட்டி. யான் சந்திரை. நிங்கள் எங்கள கேரளத்தில் எத்தனை திவசம் தாமசிக்கும்?” என்று சேரநாட்டிற்கே உரித்தான மூக்கொலி கலந்த தமிழில் பேசுகிறாள் அப்பெண்.
இதற்குள் பூசை முடிந்து நம்பூதிரி கோவில் பிரசாதத்தை அவர்களுக்கு வழங்குகிறார், இல்லை அவர்களிடம் தூக்கி எறிகிறார். இது வேறாகப் படுகிறது நிலவுமொழிக்கு. கோவில் பிரசாதம்தான். அதை மதிப்பாகப் பேணாமல் தூக்கி எறிகிறாரே என்று திகைக்கிறாள் அவள்.
அவளும் அவளது தந்தையும் கோவிலைவிட்டு வெளிவரும் போது அவர்களுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டு அவர்களைப் பின்தொடர்கிறாள் அச் சேரநங்கை. அவளது கலகலவென்ற பேச்சும் சிரிப்பும் நிலவுமொழிக்கு மிகவும் பிடித்துப் போகிறது.
தன்னுடைய அம்மான் சோமசுந்தரத் தம்பிரான் திருசிவப்பேரூரில் அரசுப் பணி செய்வதாகவும், நிலவரி வசூல் செய்வது அவரது தொழில் என்றும் கூறிய அவள், தனது மாமன் வீட்டில் வசித்து வருவதாகச் சொல்கிறாள். ஏன் தந்தையுடன் இருக்கவில்லை என்று நிலவுமொழி கேட்டதும் சேரநாட்டுப் பழக்க வழக்கங்களை எடுத்துச் சொல்கிறாள் சந்திரை.
சேர நாட்டுக் குடும்பங்களில் மாமன்தான் வீட்டை நிர்வகிப்பவர் என்றும், தனது தந்தை தனது வீட்டிலேயே இருப்பார் என்றும், தனது தாயையும் தங்களையும் அடிக்கடி வந்து பார்த்துச் செல்வார் என்றும் கூறுகிறாள். தவிரவும், சொத்துக்கள் பெண்வழி வருவதால் பெண்கள் திருமணம் ஆனதும் கணவன் வீட்டிற்குச் செல்வது இல்லை என்றும், கணவர்கள்தான் மனைவிகளின் வீட்டிற்கு வந்து போவார்கள் என்றும் சேரநாட்டின் மரபுகளை விவரிக்கிறாள். அது புதிதாக இருந்தாலும் அதைக் கவனமாகக் கேட்டுக் கொள்கிறாள் நிலவுமொழி.
தன் தாயையும், சகோதரிகளையும் சந்திரை அறிமுகம் செய்து வைக்கிறாள். சோழநாட்டு குறுநில மன்னர் ஒருவரின் மனைவி நிலவுமொழி என்றும், சோழச் சக்ரவர்த்தி இராஜராஜருடனும், பேரரசர் இராஜேந்திரனுடனும் நன்கு பழகியவள், இவளது திருமணத்தை இராஜேந்திரனே நடத்தி வைத்தார், அவர்தான் இவர்களை சேரமான் பாஸ்கர ரவிவர்மனின் விருந்தாளியாக அனுப்பி வைத்திருக்கிறார் என்பதை அறிந்தவுடனேயே அவளுக்கு உபசரிப்பு பலமடங்கு அதிகமாகி விடுகிறது.
சந்திரையின் தாய், “நிங்கள் நம்மட இல்லுக்கு வந்தா என்ட சேட்டனுக்கு கௌரமா இரிக்கும்.” என்று நிலவுமொழியையும், அவள் தந்தையையும் தங்கள் வீட்டிற்கு வந்து செல்லும்படி வேண்டிக் கொள்கிறாள்.
“இன்னொரு சமயம் கட்டாயம் வருகிறோம் அம்மா. இந்தப் பெண்ணின் கணவர் எங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் நாங்கள் இப்பொழுது வர இயலாததற்கு வருந்துகிறோம்.” என்று பதில் சொல்கிறார் பொன்னம்பல ஓதுவார். அவர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்பதையும் கேட்டு வைத்துக் கொள்கிறாள் சந்திரையின் தாய்.
“சந்திரைக்குத்தான் இன்னம் பரிணயம் ஆகல்லா. நிங்ஙளுக்கு பரிச்யமான புருஷமார் யாரும் இருந்தா சொல்லணும். எண்ட சேட்டனை அனுப்பி, யான் நிங்ஙளை விளிப்பேன். நிங்ஙள் அவசியம் எண்ட இல்லுக்கு நிங்ஙள் பர்த்தாவோட வந்து ஊணு கழிக்கணும்.” என்று வேண்டிக் கொள்கிறாள் சந்திரையின் தாய்.
நிலவுமொழிக்குத் தன் தாயின் நினைவு வருகிறது. உயிருடன் இருந்திருந்தால் இவர்கள் வயதுதானே தனது தாய்க்கு இருக்கும் என்று நினைக்கிறாள். அவளது மனம் கனிந்து உருகுகிறது.
“அம்மா, நான் கட்டாயம் உங்கள் வீட்டிற்கு வருவேன். எனக்கும் சந்திரையை அடிக்கடி பார்க்க வேண்டும் போல இருக்கிறது. நீங்களும் சந்திரையை எங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தால் எனக்கும் பொழுது போகும்.” என்று கேட்டுக் கொள்கிறாள் நிலவுமொழி.
சந்திரையின் தாயின் முகம் பெரிதாக மலர்கிறது. “நிச்சயம். நிங்ஙள் ஆள்காரங்களை அனுப்பிச்சுக் கொடுத்தால் ஞான் சந்திரையை நிங்கள் இல்லுக்கு அனுப்பி வைக்காம். இனி சந்திரை நிங்கள் அனுஜச்சியானு.” என்று பற்கள் தெரியச் சிரிக்கிறாள். அவர்கள் கிளம்பும் சமயம் பெரிய, நரைத்த முறுக்கு மீசையுடனும், அள்ளி முடிந்த நரைத்த கொண்டையுடனும், மூன்று ஆட்கள் உடன் வர ஒரு பெரியவர் வருகிறார். அவரைக் கண்டதும், “இவர்தன்னே எண்ட சேட்டன், சோமசுந்தரத் தம்புரான்.” என்று அறிமுகப் படுத்துகிறாள் சந்திரையின் தாய்.
அதே சமயம் நிலவு மொழியை அழைத்துச் செல்ல இரண்டு குதிரைகள் பூட்டிய இரதம் ஒன்று வருகிறது. அதிலிருந்து இறங்குகிறான் காடவன். காடவனைக் கண்டதும் கைகூப்பி வணங்குகிறார் சோமசுந்தரத் தம்பிரான்.
“தம்பிரானைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.” என்றபடி நிலவுமொழியையும், பொன்னம்பல ஓதுவாரையும் அறிமுகம் செய்விக்கிறான் காடவன். சிறிது நேரம் நலம் விசாரித்தபின் நிலவுமொழியும், ஓதுவாரும் அவருடன் இரதத்தில் ஏறிக் கொள்கின்றனர். இரதம் புறப்படுகிறது.
சந்திரையைக் கோவிலில் சந்தித்ததைப் பற்றியும், அவள் குடும்பத்தைப் பற்றியும் விவரிக்கிறாள் நிலவுமொழி. தனக்கு சந்திரையை மிகவும் பிடித்துவிட்டதைப் பற்றியும் தெரிவித்து விட்டு, “உங்களுக்கு சந்திரையின் அம்மானை முன்னமேயே தெரியுமா?” என்று வினவுகிறாள்.
“ஆம்!” என்று சுரத்தில்லாமல் தலையாட்டுகிறான் காடவன்.
“ஏன் உங்கள் முகம் களையில்லாமல் இருக்கிறது?” என்று கேட்கிறாள் அவள்.
“இந்த ஆண்டு சேரமான் செலுத்த வேண்டிய திரைப் பணக் கணக்கு இன்னும் சரிவரக் காண்பிக்கப் படவில்லை. சோமசுந்தரத் தம்பிரான்தான் இந்தப் பகுதிக்கு நிலவரி வசூல் செய்ய வேண்டிய கணக்காயர். இவர் கணக்கைச் சரியாகக் காட்டாமல் மென்று விழுங்குகிறார். சேரமானிடம் காண்பித்து விட்டுச் சேதி சொல்கிறேன் என்கிறார். இவரிடம் கண்டிப்பாகப் பேசவோ, இந்த வரவு செலவுக் கணக்குகளிலோ எனக்கு அவ்வளவாக மனம் செல்லவில்லை.
“சேரமானின் அமைச்சர்களுடன் கலந்து தமிழாசிரியர்கள் எத்தனை பேர் நியமிக்கப்பட வேண்டும், அரச ஏடுகளில் தமிழ் எழுதப் படுகிறதா, அரச அலுவல்கள் நல்ல, தூய தமிழில் நடத்தப்படுகிறதா, நம்பூதிரிகளின் வடமொழி ஆதிக்கம் குறைக்கப்படுகிறதா என்று கவனிக்க வேண்டும் என்பதில்தான் மனம் சென்று கொண்டிருக்கிறது. நிலவரி வேலைப்பளுவைக் குறைக்க எனக்கு உதவியாக ஒரு தலைமைக் கணக்காயரையும், அவருக்குத் துணையாக பத்துப் பதினைந்து சிறிய கணக்காயர்களையும் அனுப்பி வைக்குமாறு மூன்று மாதம் முன்னரேயே திருமந்திர ஓலைநாயகத்திற்கு மடல் அனுப்பியுள்ளேன். இன்னும் அவரிடமிருந்து பதில் வரவில்லை. பொதுவாக செயல் திறனுக்கு மறு உருவமான ஓலைநாயகம், இந்த விஷயத்தில் ஏன் பதில் தெரிவிக்காமலிருக்கிறார் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை!” என்று அலுத்துக் கொள்கிறான் காடவன்.
“தம்பிரானைப் பார்த்தால் நல்ல மனிதராகத்தானே தெரிகிறார்! அவரது தங்கைகூட என்னிடம் மிகவும் அன்பாகத்தானே பழகினார்கள்?” என்று கேட்கிறாள் நிலவுமொழி.
“நீ என் மனைவி என்று அறிந்து கொண்ட உடனேயே உன் மூலம் தனது அண்ணனின் நெருக்கடியைக் குறைக்க முனைகிறார்கள், அந்தப் பெண்மணி. நீ இன்னும் சேரநாட்டுப் பெண்களின் திறமையை அறிந்து கொள்ளவில்லை. ஆழ்ந்து சிந்தித்து, விரைவில் செயல்படுவதில் அவர்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள். சேரநாட்டில் பெரும்பாலும் சொத்துக்கள் தாய்வழி என்பது உனக்குத் தெரியாதல்லவா! பெரிய சொத்தைக் கட்டிக் காப்பதில் அவர்களுக்கு உள்ள உரிமை நம் நாட்டுப் பெண்களுக்கு இல்லை. ஆகவே இங்கு பெண்களின் கை சற்று உயர்ந்துதான் இருக்கிறது. நீ போகப் போகப் புரிந்து கொள்வாய்!” என்று பதிலளிக்கிறான் காடவன்.
“சோழ நாட்டில் குந்தவைப் பிராட்டியாருக்கு இல்லாத செல்வாக்கா? சக்கரவர்த்திகள் கூட அவர் சொல்லுக்குத் தலைசாய்ப்பதை நான் நேரில் கண்டிருக்கிறேனே!” என்று வினவுகிறாள் நிலவுமொழி.
“நிலா, பிராட்டியாரின் செல்வாக்கு திருப்பணி விஷயத்தில்தான்! அரசு நிர்வாகத்தில் அவர்கள் ஒருபொழுதும் தலையிட மாட்டார்கள். நான் எப்படிச் சொல்லி உனக்குப் புரிய வைப்பது! இங்கு பெண்களுக்கு உரிமை அதிகம். சோமசுந்தரத் தம்பிரான் இல்லில் கிட்டத்தட்ட நூற்று இருபத்தைந்து பேர் ஒன்றாகக் கூடி வாழ்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் தலைவிதான் நீ பார்த்த பெண்மணி. அந்த வீட்டில் அவர்கள் சொல்லுக்கு எதிராகப் பேசும் திறன் தம்பிரானுக்குக்கூட இல்லை. அது அவர்கள் வீட்டு விஷயம். அரசு விஷயத்தில், அதுவும் நிலவரிக் கணக்கு விஷயத்தில் தம்பிரான் எதையோ மறைக்கிறார் - அல்லது மறைக்கும்படி உத்தரவிடப் பட்டிருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.” என்று காடவன் சொன்னதும் நிலவுமொழிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
“நிலா, உன்னைப் பார்த்தவுடனேயே நீ சோழநாட்டைச் சேர்ந்த செல்வாக்குள்ள ஒரு பெண் என்பதை உடனேயே அறிந்து கொண்டுவிட்டார்கள் அந்தப் பெண்மணி. அதனால்தான் தனது மகளின் மூலம் உன்னைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பியிருக்கிறார்கள். நீ கோப்பரகேசரியாருக்கும், மறைந்த சக்ரவர்த்தி அவர்களுக்கும் மிகவும் வேண்டியவள் என்பதை எவ்வளவு சுலபமாகத் தூண்டித் துருவி அறிந்து கொண்டுவிட்டார்கள் பார்த்தாயா! அது தெரிந்தவுடன் உன் மூலமாக என்னிடம் செல்வாக்கைப் பெற முயற்சி செய்யத் துவங்கி இருக்கிறார்கள்.” என்று நிறுத்துகிறான் காடவன்.
நிலவுமொழிக்கு கலக்கமாக இருக்கிறது. தெரியாத்தனமாக புதைமண்ணில் காலைவிட்டு விட்டோமோ என்று அஞ்சுகிறாள்.[வளரும்]
[திருசிவப் பேரூர்=தற்பொழுதைய திரிஸ்ஸூர்.]
No comments:
Post a Comment