இரண்டாம் அத்தியாயம்
ஒரு ஸ்பூன டீத்தூள் ஒரு ஸ்பூன் பூஸ்ட்
வைத்தீஸ்வரன் கோயில் சன்னதியில் இறைவனைக் கையெடுத்துக் கும்பிட்டேன். எங்கிருந்தோ பல நாள்கள் நடந்து பாத யாத்திரையாக வருகிறார்கள். எல்லோரையும் காக்கிற இந்த வைத்தியநாத சுவாமிக்கு கனகராஜன் மீது மட்டும என்ன கோபம்? அவனுக்கு ஏன் இப்படியொரு தாங்கமுடியாத தண்டனையைக் கொடுத்தார்? சன்னிதியைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி கேட்டேன். அவர் பதில் பேசவில்லை.
ஒரு ஸ்பூன டீத்தூள் ஒரு ஸ்பூன் பூஸ்ட்
ஹரணி பற்றி
[இயற்பெயர் - முனைவர் க.அன்பழகன், கல்வித்தகுதி - பிஎஸ்ஸி., எம்ஏ., எம்ஃபில்.,பிஎட்.,எம்ஏ(மொழி) பிஎச்டி. பட்டயம் சம்ஸ்கிருதம், கிரந்தம்,சான்றிதழ் – சைவ சித்தாந்தம் – அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்.தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் இவரது படைப்பிலக்கியப் பயணம் 400 சிறுகதைகள, 200 கவிதைகள், 15 குறு நாவல்கள், - 200 ஆய்வுக் கட்டுரைகள். 5 தொடர்கள் என நெடியதும் விரிவானதுமாகும் பல்வேறு பரிசுகளும் விருதுகளும் பெற்ற ஹரணியின்அண்ணா ஆய்வு நுர்ல் – மொரிசியஸ் நாட்டில் பார்வைநூலாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வடஅமெரிக்காவின் தமிழ்ச்சங்க நிகழ்வில் கட்டுரை வழங்கியமைக்குச் சிறப்புச் சான்றிதழ். /2014 ]
முயல்குட்டியைப் போல வடிவமைக்கப்பட்ட சின்னஞ்சிறிய கடிகாரம் அது. தவழும் குழந்தை காலை விரித்து நீட்டிக்கொண்டு முதுகுப் பக்கத்தைக் காட்டிக்கொண்டிருப்பது போல அது தலைமாட்டின் பாயில் அமர்ந்திருந்தது. சரியாக அலாரம் வைத்த நேரத்திற்கு விட்டுவிட்டு ஒலித்தது. நன்றாக இறுக்கிப் பிடித்திருந்த துர்க்கத்தை ஒரு துக்க தினம்போல ஒதுக்கிவிட்டு கண்களைப் பிரிக்க பிரித்த கண்களுக்குள் இருள் வந்து படர்ந்தது. லேசான இருளில் வெள்ளைநிறம் கொண்ட அந்த அலாரக் கடிகாரம் தெரிந்தது. ஒலித்துகொண்டேயிருந்தது. இடது கையால் அதன் தலைமீது இருந்த குமிழை அழுத்தி அதன் அழைப்பை நிறுத்திவிட்டு மணியைப் பார்த்தேன். மணி 5.30. இன்னும் அரைமணிநேரத்தில் குளித்துவிட்டு வெள்ளைக் குதிரையைப் பிடிக்கவேண்டும். நடக்கிற காரியமா. அடடா இப்படித் தூங்கிவிட்டோமே என்கிற கோபம் யார் மீதோ எழுந்து பொங்கியது.
இன்று திங்கட்கிழமை. எப்போதுமே திங்கட்கிழமை மட்டுமே பிடிக்காத கிழமையாக மாறிக்கொண்டிருந்தது. காரணம் அதற்கு முந்தைய சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தந்த அளவிடமுடியாத சுகங்கள். வெள்ளிக்கிழமை இரவு படுக்கும்போது மனம் முழுக்க நிம்மதியாக இருக்கும். மறுநாள் சனிக்கிழமை விருப்பம் போல எழுந்திருக்கலாம். அதேபோன்றுதான் சனிக்கிழமை எவ்வளவு நேரம் விழித்திருந்து எதை செய்தாலும் கவலையில்லை. எத்தனை மணிக்கு உறங்கச்சென்றாலும் பயமில்லை. மனக்குழப்பமில்லை. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நமக்கானது. நம்முடைய கட்டளைக்குக் கட்டுப்படும் கிழமையது, இந்த இரண்டு நாட்களுக்கு நாம்தான் ராஜா நமதாட்சிதான் என்னும்போது கிடைக்கும மகிழ்ச்சி இருக்கிறதே அதை எழுதுவதற்கு சொற்களில்லை. திங்கட்கிழமை தொட்ங்கி வெள்ளிக்கிழமை வரை தினமும் அதிகாலை எழுந்து பேருந்தைப் பிடிக்க விரைபவர்களுக்குத்தான் இந்த இருநாட்களின் தரிசனம் புரிய வரும்.
ஞாயிற்றுக்கிழமை இரவு கவிழ்ந்ததுமே மனதிற்குள் சோகம் வந்துவிடும். நாளையிலிருந்து ஐந்து நாட்களுக்கு ஓடவேண்டுமே என்று. திங்கட்கிழமை மட்டுமே அப்படித்தோணும். அப்புறம் மறுநாள் பழகிவிடும்.
இது வரமா? சாபமா? என்று புரியவில்லை. அதைப்பற்றிச் சிந்திக்கவும் நேரமும் இல்லை என்பதுதான் சரி. பரபரவென்று குளித்துமுடித்து கிளம்பி வருகையில் வாசலில் நீர்தெளித்து கோலமிட்டுவிட்டு வந்து மனைவி தந்த காபியை அருந்தும்போது உதடுகள் அவசரப்பட்டன.
வேற பஸ் இல்லியா,,, வெள்ளைக் குதிரையிலதான் போகணுமா? எந்த தேசத்து மகாராஜாவா போட்டிருக்கு,,? என்று விளையர்ட்டாகப் பேசி சிரித்தாள். நாற்காலியில் உட்கார்ந்து காபியை மௌனமாக அருந்தினேன்.
மணி ஆறாகிவிட்டிருந்தது. இன்னும் 10 நிமிடங்கள் இருக்கின்றன. பையனை எழுப்பி தம்பி கொஞ்சம் பஸ்ஸ்டாப் வரை வந்து விட்டுட்டு வாயேன்.
சரிப்பா என்று உடன் எழுந்து கிளம்பி வண்டியை எடுத்து தயாராக நின்றான்.
எத்தனை முறை கூப்பிட்டாலும் எத்தனை மணிக்கு எழுப்பினாலும் முகம் சுளிக்காதவன்,
வண்டியில் உட்கார்ந்துகொண்டு கிளம்பி மீனாட்சியம்மன் கோயில் அருகே வந்து விநாயகரை வணங்கிவிட்டுத் திரும்பும்போது வெள்ளைக் குதிரை தாண்டிப்போவது தெரிந்தது.
நிறுத்துங்க..நிறுத்துங்க...ஜெயக்குமார் என்று கத்திக்கொண்டே ஓடும்போது அது நிற்கவில்லை. கிருஷ்ணன் கோயிலைத் தாண்டிவிட்டது.
ஜெயக்குமார் ஏன் நிறுத்தவில்லை. ஒருவேளை கரந்தை நிறுத்தத்தில் பார்த்துவிட்டு வரவில்லை என்று போயிருக்கக்கூடும். அப்படியும் மீனாட்சியம்மன் கோயில்வரை மெதுவாகத்தான் பாண்டியன் ஓட்டுவார்.
என்ன வாயிற்று.? இன்னிக்கு தாமதம்தான். அடுத்த பேருந்து எதுவரும் என்று தெரியாது.
சரி வர்ங்கப்பா.. பஸ்ஸ்டாப்பிற்குப் போய்விடலாம். அப்புறம் அடுத்த பஸ்ஸையும் விட்டுடப்போறீங்க.. என்றான் பையன்.
அதுவும் சரிதான்.
பஸ்ஸ்டாப்பில் விட்டுவிட்டு போய்விட்டான் பையன். வேறு பேருந்து வருமா? அது நேரடியாக சிதம்பரம் போகுமா? வெள்ளைக் குதிரைபோல வேகம் இருக்குமா? ஏன் ஜெயக்குமார் நிறுத்தவில்லை, கண்ணாடி வழியாக பாண்டியன் பார்த்தாலும் நிறுத்துவாரே,,,
அதிகாலையில் மனசு நிலை மாறிவிட்டது.
சின்ன விஷயத்திற்குக் கன்னாபின்னவென்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
என்ன சார் எங்கே ? என்ற குரலைக் கேட்டுத் திரும்பினேன். நண்பர் ஒருத்தர்.
பக்கத்து தெரு,
வணக்கம். சிதம்பரம் போவணும், பாய்ண்ட் டூ பாய்ண்ட் பஸ்ஸை விட்டுட்டேன் என்றேன்.
அவ்வளவுதானா? விடுங்க சார்,, அடுத்து 6.20க்கு கடலுர்ர் வண்டி இருக்குல்லே,, அதுவும் பாய்ண்ட் டூ பாய்ண்ட் தான்,, கண்டக்டர் நம்ப நாராயணன்தான்... கிருஷ்ணன்கோயில்தெருவுல குடியிருக்காரு...
மனசுக்குப் பால் வார்த்தது போலிருந்தது. இருந்தாலும் மனம் வெள்ளைக்குதிரையை ஒருமுறை சுற்றி மீண்டது.
சொன்னபடி மஞ்சள் நிறத்தில் ஒரு பேருந்து வந்தது. கடலுர்ர் என்று தெளிவாகப் பெயர்ப்பலகை இருந்தது. படியில் நின்றபடி கண்டக்ட்ர் என் நண்பரைப் பார்த்து சார் வணக்கம்.. வாங்க...என்றபடி விசிலை வாயில் வைத்து ஊசினார். வண்டி நின்றது.
இருவரும் ஏறினோம்.
நாராயணன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.
சிதம்பரம் என்று டிக்கட் கேட்டேன்
மாயவரத்துலே 10 நிமிஷம் நிக்கும் பரவாயில்லை.. இது மாயவரத்துக்கு 8.00 மணிக்குப் போயிடும். அங்க டைம் 8.18 என்றார்.
பரவாயில்லை கொடுங்க என்றேன். நாராயணனை ரொம்பப் பழகியது போலத் தெரிந்தது. கேட்கத் தயக்கமாக இருந்தது.
டிக்கட் போட்டுவிட்டு வந்து பானட்டில் உட்கார்ந்தார் நாராயணன். சின்ன வயது.
என்னைப் பார்த்து அண்ணே என்னைத் தெரியலியா? என்றார்,
நானும் அதான் யோசிக்கிறேன்.. எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. சாரும் சொன்னாரு கிருஷ்ணன் கோயில் பக்கம்னு... என்றேன் இழுத்தபடி,
உங்க அம்மா வீட்டுக்குப் பக்கத்துலேதான் குடியிருந்தோம்.. எங்க அண்ணன்கூட கோயில் பூசாரி... ராமலிங்கம்னு...
உங்க அம்மா வீட்டுக்குப் பக்கத்துலேதான் குடியிருந்தோம்.. எங்க அண்ணன்கூட கோயில் பூசாரி... ராமலிங்கம்னு...
நினைவுக்கு வந்துவிட்டது. ஆமாம். ஆமாம். என்றேன் உடன் அவசரமாய்.
எங்கள் உரையாடலைக் கேட்டபடி சமயங்களில் திரும்பியபடியும் டிரைவர் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தார். சுருள் முடி. ஏறிய நெற்றி. நல்ல சிவப்பு. சிரித்த முகம்.
பாண்டியனைப் போல இல்லை. ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாதிரிதானே?
பாண்டியனைப் போல இல்லை. ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாதிரிதானே?
கலகலவென்று நாராயணன் பேச ஆரம்பித்துவிட்டான்.
நான் செவ்வாய் வியாழன் சனி வருவேண்ணே... வந்துடுங்க... என்றான்.
ஜெயக்குமார் பற்றி பேச்சு வந்தது.
என்ன ஆச்சு இன்னிக்கு வண்டி மாத்தலியா ஜெயக்குமார் என்றேன்.
பழைய கேஸ் ஒண்ணு.. செங்கிப்பட்டிக்கிட்ட ஒரு ஆட்டோவுல மோதிட்டாங்க.. இன்னிக்கு இயரிங் அதுக்கு. கோர்ட்டுக்கு போயிருக்காங்க.. வேற ஆள் மாத்தி போவுது சிதம்பரம். டிப்போவுல நம்ப வண்டிய கழுவும்போது பார்த்தேன் என்றான் நாராயணன்.
சற்று நிம்மதியா இருந்தது. வெள்ளைக் குதிரை நிற்காமல் போனது சரிதான் என்று.
டிரைவரை அறிமுகம் செய்து வைத்தான் நாராயணன். சேகரு.. அண்ணே எங்க ஏரியாதான். அவங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் நாங்க குடியிருந்தோம்..
வணக்கம் சார் என்றர்ர். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி சார். நாராயணனுக்கு உலகம் முழுக்க பிரெண்ட்ஸ் சார்... நல்லா கலகலப்பா பழகுவாரு..எனக்கு சரியான ஜோடி கண்டக்டர் சார்.. என்றார்.
விடுங்க சேகர்.
நான் காசு கொடுக்கப் போக நாராயணன் தடுத்து நீங்க சும்மாயிருங்கண்ணே.. முதமுதல்ல நம்ப வண்டில வர்றீங்க.. நான்தான் கொடுப்பேன்.. கொடுத்தான்.
மாயவரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு டிரைவர் சேகர் இறங்கினார். நான்கு டயர்களையும் காற்று இருக்கிறதா என்று தட்டிப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்து வாங்க சார்.. பத்து நிமிஷம் இருக்கு.. டீ சாப்பிடலாம்.. என்றார்..
இப்பத்தானே கும்பகோணத்துல சாப்பிட்டோம்?
எங்களுக்கு கடலுர்ர் போறவரைக்கும் டீதான் சார்.. நாங்க காலை சாப்பாடு பதினோரு மணிக்குத்தான் கடலுர்ர் போயித்தான். வாங்க சாப்பிடலாம்.
இறங்கினோம். நாராயணன் வாங்க அந்தக் கடைக்குப் போகலாம் அங்க கொஞ்சமா நல்லா போடுவான். நம்ப வாடிக்கை கடை. இவர்களைப் பார்த்ததும் டீக்கடைக்காரர் தம்பி டீய போடு என்றார்.
டீக்கிளாஸில் அரைக்கிளாஸ்தான் டீ இருந்தது. வாங்கி குடித்தேன். வித்தியாசமாக இருந்தது.
அண்ணே இது பூஸ்ட் டீண்ணே என்றான்.
ஒரு ஸ்பூன டீத்தூள் ஒரு ஸ்பூன் பூஸ்ட் வித்தியாசமான கலவை என்றாலும் அந்த டீ ரொம்பப் பிடித்திருந்தது
மாயவரம் எடுத்து சிதம்பரம் சாலையில் வண்டிபோகும்போது சாலையின் இடது பக்கம் கூட்டம் கூட்டமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். ஆண்கள். பெண்கள்.குழந்தைகள். வயதானவர்கள். நடுத்தர வயது..சிறுவயது இப்படி.. எல்லோரும் மஞ்சள் ஆடை அணிந்திருந்தார்கள். கழுத்தில் உத்திராட்ச மாலை போட்டிருந்தார்கள். தோள்களில் மஞ்சள் பை இருந்தது. ஒவ்வொருவர் கையிலும் ஒரு மெலிந்த கோல் இருந்தது. பெரும்பாலும் அது மூங்கிலால் ஆன போல். அதன் நுனியில் வேப்பிலையை சிவப்பு நுர்லால் கட்டியிருந்தார்கள். நெற்றியில் பட்டையாக விபூதி பூசியிருந்தார்கள். பெண்கள் விபூதிப் பட்டையோடு ஒருரூபாய் அளவுக்கு குங்குமம் இட்டிருந்தார்கள்.
கைகளில் கோல் எடுத்துக்கொண்டு போனது இதுவரை பார்த்தது இல்லை. இந்தப் பக்கம் வந்திருந்தால்தானே தெரியும்.
என்ன நாராயணன் இது? என்றேன்.
இது கார்த்திகை மாசம் நடக்கும்ணேன். ரோட்டைஅடைச்சி போவாங்க. வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நடந்தே வருவாங்க.. பெரும்பாலும் காரைக்குடிப்பக்கம் இருந்துஅதிகம் வருவாங்க. வரும்போது பாத யாத்திரை. போகும்போது பஸ்ல போயிடுவாங்க. அந்தக் காலத்துல விளக்குக் கிடையாது.. அங்கங்கே தங்குவாங்க.. பாம்பு..பூச்சிக்கிட்டர்ந்து தப்பிக்க கையில கோல் எடுத்திட்டு வந்தாங்க.. அதையே சடங்காக்கிட்டாங்க.. கோயில்ல வச்சிக் கும்பிட்டு எடுத்திட்டு போவாங்க.. அடுத்த வருஷம் மறக்காம எடுத்திட்டு வருவாங்க.. அது மட்டுமில்லண்ணே.. வைத்தியநாதசுவாமிய விட இங்க முருகனுக்குத்தான் அதிகம் செல்வாக்கு. இது செவ்வாய்த்தலம். இந்தக் கோல் முருகனோட தண்டம் மாதிரி.. எல்லாம் ஐதீகம்ணே..
டிரைவர் தொடர்ந்து ஒலிஎழுப்பிக்கொண்டே போனார். யாரும் ஒதுங்குவதாகத் தெரியவில்லை. வைத்தீஸ்வரன் கோயில் பஸ்ஸ்டாப்பில் நின்று பின் கிளம்பி சன்னதி நோக்கிப்போய் நின்றது. சிலர் இறங்கினார்கள். சிலர் ஏறினார்கள்.
சீர்காழி.. கொள்ளிடம்.. சிதம்பரம்தான் நிக்கும்.... வழியிலே நிக்காது. நாராயணன் கத்தினான்.
வைத்தீஸ்வரன் கோயில் சன்னதியில் இறைவனைக் கையெடுத்துக் கும்பிட்டேன். எங்கிருந்தோ பல நாள்கள் நடந்து பாத யாத்திரையாக வருகிறார்கள். எல்லோரையும் காக்கிற இந்த வைத்தியநாத சுவாமிக்கு கனகராஜன் மீது மட்டும என்ன கோபம்? அவனுக்கு ஏன் இப்படியொரு தாங்கமுடியாத தண்டனையைக் கொடுத்தார்? சன்னிதியைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி கேட்டேன். அவர் பதில் பேசவில்லை.
நாராயணன் விசில் ஊத வண்டி சன்னிதியை விட்டுக் கிளம்பி வளைவில் திரும்பி இருளர்கள் குடியிருப்பைத் தாண்டிப் பறந்தது.
(பேருந்து ஓடும்)
No comments:
Post a Comment