Thursday, 23 October 2014

3.விளக்கறியா இருட்டறையில்...

                       3.விளக்கறியா இருட்டறையில்...
                                               
கர்னல் கணேசன்
                                                           
 1972 ஏப்ரல்-மே செமஸ்டர் முடிந்து காப்டன் கணேசன் இராணுவப் பொறியியற் கல்லூரி திரும்பினார்.பி.டெக் படிப்பில் எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங்  பாடத்தில் நூற்றுக்கு 96 மார்க் வாங்கி இருந்தாலும் அவர் விருப்பப் பாடமாக சிவில் இன்ஜினியரிங்  தான் எடுத்திருந்தார். ஆசிரியர்கள் கூட கணேசன் எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங்  படிப்பது நல்லது என்றார்கள். ஆனால், கணேசன் இராணுவத்தில் சேருவதற்கு முன்பே மூன்றாண்டு கால பட்டயப் படிப்பாக சிவில் இன்ஜினியரிங் படித்திருந்தார்.

 1962-63 காலகட்டத்தில் இராணுவத்தில் அதிகாரியாவதற்கு இண்டர்மீடியட்  தான் கல்வித் தகுதியாக இருந்தது. பத்தாம் வகுப்பிற்குப் பிறகு அது இரண்டு வருட கல்லூரிப் படிப்பு. பட்டயப்படிப்பு மூன்றாண்டுக்கான  கல்லூரிப் படிப்பு என்பதால் அதுவும் அதிகாரியாவதற்கு ஏற்புடையதாக இருந்தது. பின்னாளில் கல்வி முறையில் மாற்றம் வந்து பத்தாவதிற்குப் பிறகு +1, +2 என்று இரண்டு வருடமும் பின் பட்டப்படிப்பு  மூன்று வருடம் என்றானது. இப்பொழுது அதிகாரியாவதற்கு பட்டயப்படிப்பு போதாது. குறைந்தது பட்டதாரியாக இருக்க வேண்டும்.

 இராணுவத்தில் சிறப்பான கல்வித்தகுதி  ஒரு உயர் தகுதியாக பெருமையோடு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இராணுவத்தின் பல பிரிவுகளில் ஒன்றான ரிசர்ச் மற்றும் டெவலப்மெண்ட்  துறையில் ஒருக்கால்   உயர் கல்வி முறைக்கு மதிப்பிருக்கலாம். பெரும்பாலான இராணுவப் பிரிவுகளில் அதிகாரிகளின் மனவலிமை, உடல் வலிமை, செயலாக்கத் திறமை போன்ற ஒட்டு மொத்த ஆளுமைத் திறன் தான் மதிப்பிடப்படுகிறது. இதனால் கணேசன் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் தொடரவே விருப்பப்பட்டார். மேலும் அவருடன் பயின்று கொண்டிருந்த அதிகாரிகளில் நல்ல விளையாட்டு வீரர்கள் எல்லாரும் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் இருந்தார்கள். கணேசனுக்கு விளையாட்டில் ஆர்வமிருந்தது. அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் இருக்கையில் ‘Best Atheleet” என்ற சிறப்புப் பரிசு வாங்கி இருந்தார்.

அமர்ந்திருப்போர் வரிசையில் வலது கோடியில் கணேசன்
                   அதிகாரிகள் பயிற்சிப் பள்ளி விளையாட்டு வீரர்கள்
இராணுவக் கல்லூரியில் சுமார் 600 அதிகாரிகள் சுமார் 12 பிரிவுகளில்  பயின்று கொண்டிருந்தார்கள். அது தவிர ஆசிரியர்களாக சுமார் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இருந்தனர். அவர்களுக்கிடையேஇன்டர் ஆபீசர்ஸ் போ ட்டிகள் உண்டு. வருடத்திற்கு இரண்டு முறையாக குளிர்கால விளையாட்டுப் போ ட்டிகள் மற்றும்கோடை கால விளையாட்டுப் போட்டிகள்  என்று நடக்கும். 1970 ஆண்டு கணேசன் இராணுவப் பொறி இயற் கல்லூரியில் சேர்ந்து முதன்முறை போட்டிகளில் கலந்து கொண்ட பொழுத அவருடைய வகுப்பினரே சாம்பியன் பட்டம் வென்றனர். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் அவருடைய வகுப்பே சாம்பியன்  ஆக இருந்திருக்கிறார்கள். கால் பந்து,  கைப்பந்து,  கூடைப்பந்து,  ஹாக்கி,  நீச்சல்   போன்ற குழுப்போ ட்டிகளும் ரோ யிங் என்ற படகுப் போட்டியும் இருக்கும். இவை  தவிர கோல்ப் பாட்மிண்டன் ஸ்க்வாஷ் டென்னிஸ் போன்ற போட்டிகள் தனிநபர் சா ம்பியன்ஷிப் பெற நடத்தப்பட்டன.

“பங்களாதேஷ்” போருக்குப் போவதற்கு முன் நடந்த போட்டிகளின் முடிவில் கணேசன் “சிறந்த நீச்சல் வீரர்” என்ற சிறப்புப் பரிசு பெற்றிருந்தார். அது போன்ற காரணங்களினால் கணேசன் படிப்பிலும் விளையாட்டிலும் சமமான பங்கு கொண்டார். பட்டயப் படிப்பில் மாநில அளவில் சிறப்பாக வெற்றி பெற்றிருந்த அவருக்கு சுமார் 10 ஆண்டு இடைவெளியானாலும் இப்பொழுதும் பொறியியல் பாடங்கள் சுலபமாகவே இருந்தன. ஆகையினால் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் அவரே சிறப்பான மாணவராக கருதப்பட்டார்.

இராணுவப் பொறியியற் கல்லூரிப் படிப்பு மற்ற கல்லூரிகளைப் போல் எடுத்துக் கொள்ள முடியாது. மாணவர்கள் எல்லோரும் இராணுவ அதிகாரிகள். பட்டதாரிகள் மேலும் வயதைப் பொறுத்து சிலர் திருமணம் ஆனவர்கள். கணேசனின் வகுப்பில் இருந்த 30 மாணவர்களில் 15-16 அதிகாரிகள் 6-7 வருட அனுபவம் உள்ளவர்கள். அவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்குத் திருமணமாகி ஒன்றிரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானவர்கள். திருமணமானவர்களுக்கு குடும்பத்தினர் வசிக்கும் வீடு ஒதுக்கப்பட்டிருக்கும்.

 எல்லைப்புறங்களில் இராணுவப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது வேலையின் ஆர்வமும் சக பணியாளர்களின் கலந்துரையாடலும் கணேசனது தனிமைத் துயரங்களை மறக்கடித்தன. ஆனால், இராணுவக் கல்லூரியில் திருமணமான அதிகாரிகள் கல்லூரி நேரம் முடிந்தவுடன் மனைவி, குழந்தை என கூடு தேடி அடையும் பறவைகள் போல் அடங்கி விடுவார்கள். ஊர் சுற்ற விரும்புபவர்கள் சுகவாசிகளாகத் தங்களது கார் அல்லது மோட்டார் சைக்கிளில் கிளம்பி விடுவார்கள். கணேசனைப் போன்ற ஒரு சிலர்தான் விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். சென்ற விடுமுறையின் போது ஏற்பட்ட அனுபவத்தால் தன்னைக் கட்டாயமாக உறவினர் கூட்டத்திற்குள் நுழைத்துக் கொள்ள கணேசன் விரும்பவில்லை.

அடுத்தசெ மஸ்டர்  விடுமுறையாக 22-10-1972 முதல் 15 நாட்கள் விடுமுறை கிடைத்தது. மீண்டும் அவர் மனதில் சற்றே குழப்பம் ஏற்பட்டது. சொந்த ஊருக்குப்  போய் வரலாமா என்று நினைத்தார். தானே சிந்தித்து எடுத்த முடிவின்படி சற்றே குணமாகிவரும் மனப்புண்களை மீண்டும் கிளறிவிட வேண்டாம் என்று இம்முறை ஊருக்குப் போவதில்லை என்று முடிவெடுத்தார். விடுமுறை நாட்களை பொறியியற் கல்லூரி வளாகத்திலேயே செலவிடுவது கஷ்டமில்லை. பலவிதமானப் பயிற்சிகளும் நடந்து கொண்டிருக்கும் கல்லூரியில் எல்லோருக்கும் ஒரே சமயத்தில் விடுமுறை விடுவதில்லை. ஆகையினால், உணவு விடுதி, விளையாடு மிடங்கள், திரையரங்குகள் போன்ற இடங்களில் எப்பொழுதும் கூட்டம்   இருக்கும். ஆனால், எப்போதும்  ஒரு மாறுதலை விரும்பிய கணேசன் இம்முறை ஹைதராபாத் சென்றுவர முடிவு செய்தார்.
       
             இரட்டை நகரங்களுக்குமோ ட்டார் சைக்கிள் பயணம்


அங்கே அவரது அண்ணனுடன் பயின்ற, வேலை பார்த்த நண்பர்கள் இருந்தனர். அவர்களில் ஒரு சிலர் கணேசனுக்கும் அறிமுகமானவர்கள். பூனேயிலிருந்து ஹைதராபாத் சுமார் 250 கி.மீ இருக்கலாம். கணேசனிடம்  புதிதாக அவர்வாங்கி இருந்த 35 புல்லட்  மோட்டார் சைக்கிள் இருந்தது. அதிலேயே போய்வர முடிவு செய்தார். நண்பர்களின் முகவரி இல்லா விட்டாலும் அவர்கள் ரயில்வேயில் பணியாற்றியவர்கள் என்பதும் அவர்களுக்குரிய ரயில்வே காலனியில் குடியிருந்தார்கள் என்பதும் கணேசனுக்குத் தெரியும். ஆகையினால் இரண்டு நாட்கள் கல்லூரியில் செலவிட்டபின் 25-10-1972 அன்று அவர் புறப்பட்டார்.


 மிகவும் லகு எடை கொண்ட  உடல்வாகு உள்ள அவருக்கு மோட்டார் சைக்கிள் பயணம் காற்றில் மிதப்பது போன்றிருந்தது. அதிக வேகமில்லாமல் ஓட்டவும் வழியில் தேவைப்பட்ட இடத்தில் வண்டியை நிறுத்தி உணவருந்தவும் முடிந்தது.

மாலை 4 மணியளவில் செகந்தராபாத் சென்றடைந்தார். இரட்டை நகரங்களான ஹைதராபாத் - செகந்தராபாத் மிகப் பெரும் மாற்றங்களைக் கண்டிருந்தன. 1963-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இராணுவ அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் சேருவதற்கு முன்பு கணேசன் இரண்டு மூன்று நாட்கள் ஹைதராபாத்தில் தங்கி இருந்தார். இந்த சுமார் 10 ஆண்டுகளில் அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவு ஊர் மாறி இருந்தது. ஒரு ஹோட்டலில் அறை எடுத்துக் குளித்து உடைமாற்றி நண்பர்களைத் தேட முற்பட்டார். அவர்கள் ஹைதராபாத்தில் லால்குடா என்ற பகுதியில் இருந்த ரயில்வே   காலனியில் வசித்துக் கொண்டிருந்ததாக நினைவு. அங்கு சென்று விசாரித்தார். அவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கிருந்திருக்கிறார்கள். ஆகையினால், அவர்களை அறிந்தவர்கள் விபரம் சொன்னார்கள்.

ரயில்வே காலனி வீட்டைக் காலி செய்து விட்டு அவர்கள் வேறு  இடத்திற்கு குடி மாறி  இருந்தார்கள். அந்த முகவரியை எடுத்துக் கொண்டு இங்குமங்குமாக அலைந்து மாலை சுமார் 7 மணியளவில் அவர்கள் வீட்டைக் கண்டுபிடித்து விட்டார். கணேசனது அண்ணன் மீது மிகப்பெரும் மதிப்பும் மரியாதையும் உள்ளவர்கள் அவர்கள். அவரது தம்பி என்ற முறையில் கணேசன் மீது சற்று மதிப்பு உண்டு. அந்த நண்பர்களில் இருவர்தான் கணேசன் அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி முடிந்து அதிகாரியானபொழுது அந்த விழாவில் பங்கு கொள்ள வந்திருந்தனர்.

முன்னறிவிப்பு ஏதுமின்றி சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு கணேசன் அவர்கள் எதிரில் நின்ற பொழுது அவர்கள் மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். இடைக்காலத்தில் தான் எவ்வளவு நிகழ்ச்சிகள். கணேசன் எவ்வளவோ ஊர்கள் சுற்றி இரண்டு போர்க்களங்கள் கண்டு இன்று கல்லூரியில் பி.டெக் படிப்பது அறிந்த அவர்கள் மிகவும் மகிழ்ந்தனர். இரவு அவர்கள் வீட்டிலேயே தங்கினார் கணேசன். மறுநாள் காலை நண்பருடன் சென்று ஹோட்டல் அறையைக் காலி செய்துவிட்டு நண்பரின் வீட்டிற்கே வந்துவிடடார். மாலையில் அந்த இரட்டை நகரத்தின் மிகவும்  பிரசித்தி பெற்ற இடமான ஹுஸைன் சாகர்  ஏரிக்கரைக்குச்  சென்றார்கள்.அது  சென்னை மெரினா, பம்பாய் மெரின் டிரைவ் போன்று மாலைநேரப் பொழுது போக்குமிடம் அந்த ஏரி. அங்கு அமர்ந்துகொண்டு பேசினார்கள்.

 சென்ற 10 ஆண்டுகளில் ஹைதராபாத் தவிர ஒன்றிரண்டு உறவினர் வீட்டிற்கல்லாமல் நண்பர் வேறு எங்கும் போனதில்லை. அதிக மாற்றங்கள் இல்லாத ஒரு இயந்தரமயமான வாழ்க்கையில் என்ன புதுமைகள் இருக்க முடியும்? ஆகையினால் அவரது நண்பர் கணேசனைத்தான் அதிகம் பேசச் சொன்னார். பேசுவதற்கு தான் கணேசனிடம் ஏராளமான செய்திகள் இருந்ததே! இரண்டு நாட்கள் அப்படித்தான் செலவாயின. மூன்றாம் நாள் பூனா திரும்பி விட முயன்றார் கணேசன். ஆனால், நண்பரின் தாய் மிகவும் வற்புறுத்தியதின் பேரில் இன்னும் ஒருநாள் இருந்துவிட்டு நான்காம் நாள் அதிகாலை புறப்பட முடிவு செய்து உறங்கிப் போனார்கள்.

மறுநாள் காலை 41/2 - 5 மணிக்கு எழுந்த பொழுது வெளியில் இலேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. மழையில் போக வேண்டாம் என்றார்கள். ஆனால் கணேசன் தனது திட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை. தான் தனி ஆள் என்றும், புறப்பட்ட பிறகு மழை வந்திருந்தால் மழையினூடே தான் போக வேண்டியிருக்கும் என்று சொல்லிவிட்டு அவர்களிடம் விடைபெற்றார். இரண்டு மூன்று நாட்கள் மிகவும் மகிழ்வாக சென்றன. நண்பர் விடுமுறை எடுத்துக் கொண்டு கணேசனுடன் நேரத்தை செலவிட்டார். ஆனால், இராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் கணேசன் வந்திருக்கிறார் என்று அவரது உறவினர்களில் ஒருவர் கூட இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு கணேசனுடன் கூட இருந்து நேரம் செலவிட கடந்த 10 வருடங்களில் யாருமே செலவிடவில்லை என்பதுஆச்சரியமான உண்மையாக இருந்தது.

அதிகாலை நேரத்தில் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாததால் ஹைதராபாத்திலிருந்து புனே செல்லும் சாலையைக் கண்டுபிடிக்க கொஞ்சம் கஷ்டப்பட்டார் கணேசன். சாலையைக் கண்டுபிடித்த பிறகு எந்தவித சிரமமுமில்லாமல் மாலையில் புனே வந்து சேர்ந்து விட்டார்.
1970-ம் ஆண்டு கணேசன் அன்னை இறந்தபின் அவரது அஸ்தியைக் காசியில் பங்கையில் கரைக்க கணேசன் எடுத்துச் சென்றிருந்தார். அப்பொழுது அதில் ஒரு சிறு துண்டு எப்பொழுதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று வைத்திருந்தார். 1971-ம் ஆண்டு பங்களாதேஷ் போரில் பாகிஸ்தானிய இராணுவம் சரணடைந்த பின்  இந்திய இராணுவத்தின் மின்னல் வேகத் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல பாகிஸ்தானிய படைப்பிரிவுகள் தங்களது போர்த்தளவாடங்கள், பீரங்கிக் குண்டுகள், இராணுவ வண்டிகள் போன்றவற்றை சில இடங்களில் அப்படியே போட்டு விட்டும் சில இடங்களில் தீ வைத்து கொளுத்தி விட்டும் சென்றிருந்தார்கள்.

அன்னையின் அஸ்தி  வெள்ளிச் சங்கிலியில்


கணேசனது படைப் பிரிவினர் போரின் நினைவாக அவற்றில் தங்களுக்கு விருப்பப்பட்டதை ஆபத்து இல்லாத பொருளாகப் பார்த்து எடுத்துக் கொண்டனர். துப்பாக்கிக் குண்டுகளில் அடிப்பாகம் வெடிப் பொருள் நிரம்பிய பகுதியாகவும் முனைப்பகுதி ஈயம் நிரப்பப்பட்ட செம்பாலான குண்டாகவும் இருக்கும். துப்பாக்கி விசையை அழுத்தும் போது வெடிபொருள் நிரம்பிய அடிப்பாகம் வெடித்து அதன் சக்தியினால் முன்புறம் உள்ள குண்டுமுனை அதிவேகத்துடன் பாய்ந்து சென்று எதிரியைத் தாக்கும். பாகிஸ்தானியர் இப்படிப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளை பெட்டி பெட்டியாக ஆயிரக்கணக்கில் குவித்து தீ வைத்திருந்தனர். அவைகளில் கிடைத்த சில துப்பாக்கிக் குண்டுகள் கணேசனிடம் இருந்தன. அவற்றில் ஒன்றிலிருந்த ஈயத்தை உருக்கி எடுத்து விட்டு அதனுள் அவரது அன்னையின் அஸ்தியில் ஒரு பகுதியை வைத்து சீல் செய்து ஒரு வெள்ளிச் சங்கிலியில் அதைக் கோர்த்து ஹைதராபாத்தில் செய்யச் சொல்லி இருந்தார். அந்த வெள்ளிச் சங்கிலியைக் கணேசன் கழுத்தில் போட்டுக் கொண்டார். அது அவரது ஹைதராபாத் நினைவுப் பொருளாக  மட்டுமின்றி அன்னையின் மரணச்செய் தி அறிந்தும் விடுமுறை கிட்டாததால் அன்னை சாம்பலான பின்பு ஊர் வந்தவேதனைக்கு ஒரு விமோசனமாகவும் இருந்தது.

ஹைதராபாத் சென்றுவந்த இரண்டு நாட்கள் சென்று அவரும் இன்னும் சில நண்பர்களும் கோவா புறப்பட்டனர். ஒரு நண்பரின் வீடு பூனாவிற்கும் கோவாவிற்கும் இடைப்பட்ட “பெல்காம்” என்ற இடத்தில் இருந்தது. இரவு அங்கு தங்கிக் கொள்ளத் திட்டமிட்டு அவர்கள் புறப்பட்டனர். இரண்டு மூன்று மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் பேசிக் கொண்டு போவது சுகமான அனுபவமாக இருந்தது. கலிங்கோட் கடற்கரை,ஜுவாரி நதியில்  படகுப் பயணம், மிகவும் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்கள் என இரண்டு நாட்கள் சுற்றினார்கள். புகழ்பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் குடும்பத்தினரின் கோவிலான மங்கேஷ்கர் ஆலயம் வழியிலிருந்தது. இராணுவ அதிகாரிகள் என்ற கௌரவம் எந்த இடத்திலும் தனி மரியாதையைத் தேடிக் கொடுத்தது. அரசாங்க ஆய்வு மாளிகை,சர்க்யூட் ஹவுஸ் , போன்ற இடங்களில் வி.ஐ.ஐ பி  அறைகள் திறந்து விடப்பட்டன. இப்படி மகிழ்ச்சியோடு நாட்களை செலவிட்டு விட்டு இராணுவப் பொறியியற் கல்லூரி வந்து சேர்ந்தனர்.

இப்படித் தனக்குத்தானே ஆறுதல் தரக்கூடிய இடங்களையும் மனிதர்களையும் தேடிக் கொண்டார் காப்டன் கணேசன். விளையாட்டும் படிப்புமாக நாட்கள் சென்றாலும் திருமந்திரம், திருஅருட்பா, பாரதியார் பாடல்கள் போன்ற புத்தகங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் படித்தார். திருஅருட்பா அருளிய இராமலிங்க அடிகளின் வரலாறு மிக சமீபத்தியது. தம்பி இராமலிங்கம் சரியாகப் படிப்பதில்லை என்று அவரது அண்ணன் சபாபதிப்  பிள்ளை வருத்தப்படுகிறார். ஆனால், இராமலிங்கம் தனக்குத்தானே ஆசானாகிறார். வாழ்வின் பொருள்தேட முயற்சிக்கும் அவரது “பிறப்பவம் பொறாது பேதுறல்” கணேசனுக்கு மிகவும் பிடித்த பாடலாக இருந்தது.

விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்து கிடந்தழுது
விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
அளக்கறியாத் துயர்கடலில் விழுந்து நெடுங்காலம்
அலைந்து அலைந்து மெலிந்த துரும்பதனின் மிகத்துரும்பேன்
கிளக்கறியாக் கொடுமை எலாம் கிளைத்த பழு மரத்தேன்
கெடுமதியேன்! கடுமையினேன்! கிறிபேசும் வெறியேன்!
களக்கறியாப் புவியிடை நான் ஏன் பிறந்தேன் அந்தோ கருணை
நடத்தரசே நின் கருத்தை அறிகிலேனே!

ஆன்ம ஞானம் தேடும் இராமலிங்கத்தின் அறைகூவல் படிப்பவர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. துன்பம் மிகுதியால் விம்மும்பொழுது அங்கு வார்த்தைகள் எழுவதில்லை. கேவிக் கேவி அழுகிறது குழந்தை. அதுபோல் இராமலிங்க அடிகள் கலங்குகிறார். இறைவனைத் தேடிக் கலங்கும் அவரின் ஏக்கத்திற்கும் வாழ்வின் பொருள் தேடி அலையும் காப்டன் கணேசனது மனக்கலக்கத்திற்கும் எவ்வளவு வேறுபாடுகள். “பொருளினால் ஆனது” இவ்வுலகம் என்கிறார் அவர். இப்படிப்பட்ட புத்தகங்களைப் படித்துவிட்டு விளையாடப் போய்விடுவார் கணேசன். விளையாடிக் களைத்து அறைக்குத் திரும்பி இதமான சுடுநீரில் குளித்துவிட்டு சற்றே கண்களை மூடி அமர்ந்திருப்பார். தனது எண்ணங்கள் மாற வேண்டும். தனது வாழ்க்கையும் சீராக அமையும் என தனக்குத் தானே உறுதி எடுத்துக் கொண்டு அடுத்த நாளை வரவேற்கத் தயாராகி விடுவார்.[தொடரும்]

1 comment:

  1. Sir, I t is a great re production. psychologist say that you keep bringing back your past better performances which will condition your mind and lead you to success.so even though it is my story I keep reading this again and again.Thanks to you for bringing this to the view of millions of tamil knowing people.

    ReplyDelete