ஹரிணி |
பேருந்து-5
பாவம் செஞ்சவங்கதான் கண்டக்டர் டிரைவரா வருவாங்க
பாவம் செஞ்சவங்கதான் கண்டக்டர் டிரைவரா வருவாங்க
பேருந்து பயணம்தான் பெரும்பான்மையோருக்கு வாய்த்திருக்கிறது. ரயிலில் செல்வோர் அதற்கெனத் திட்டமிட்டுச் செல்பவர்கள். எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்வோர்தான் எத்தகைய பயணமாக இருந்தாலும் அதுகுறித்து முன்கூட்டியே திட்டமிட்டு பயணத்தேதிக்கு முன்பே அதற்கான டிக்கட்களைப் பதிவு செய்துகொண்டுவிடுவார்கள். எனவே நினைத்தவுடன் பயணம் மேற்கொள்ள எப்போதும் பேருந்துதான் சரியான வசதியாக இருக்கிறது என்பதுதான் உண்மை.
தொடக்கத்தில் சிறுவயது முதலே பேருந்தில் பயணித்தால் உடனே வாந்தி வந்துவிடும். ஒத்துக்கொள்ளாது. ஒவ்வொருமுறையும் வாந்தி எடுத்து அம்மா திட்டுவாள்..சனியன்..கண்டதையும் திங்கறது இப்படி வாந்தியெடுக்கிறது. அப்பா சொல்வார் அவனுக்குத்தான் பஸ் ஒத்துக்காதுல்ல.. என்று. கண்டக்டர் வந்து கன்னாபின்னவென்று திட்டிவிட்டு எங்கேனும் சாலையோரம் மணல்கிடக்கும் பகுதியில் பேருந்தை நிறுத்தி பெயர்ப்பலகையில் கொஞ்சம் மண்ணையள்ளிப்போட்டுவிட்டு விசில் அடிப்பார். வாயில் வைத்த விசிலுடன் ஒட்டுமொத்த வாந்தியெடுத்த குடும்பத்தை ஒரு முறை முறைத்துவிட்டுப்போவார். அம்மா அந்த வேகத்தையெல்லாம் ஓங்கி ஒரு அறைவிட்டு தணித்துக்கொள்வாள். அது வாந்தியெடுத்ததைவிட வலியாக இருக்கும்.
எனவே பேருந்து பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் ஒரு எலுமிச்சைப்பழம் அல்லது எலந்தை வடை (எலந்தை வடையின் ருசி குறித்து பெரிய கதையே எழுதலாம்) கருப்பாக வட்டமாக மெலிதாக இருக்கும். ஆனால் அது ஒரு புளிப்பும் துவர்ப்பும் உப்பும் கலந்த சுவை. அது வாந்தியைக் கட்டுப்படுத்தும். அல்லது புளிப்பு மிட்டாய். பெரும்பாலும் அந்த வாந்தியெடுக்கிற தருணத்தில் ஏன் வாழ்கிறோம் என்கிற உணர்வே மிஞ்சும். அடிவயிற்றில் ஆயிரம் பேர் நின்றுகொண்டு மேல்நோக்கி அத்தனை குடல்களையும் கைகளில் ஏந்தி வாய் வழியாக தள்ளுகிற முயற்சிபோலிருக்கும். சிலநேரம் கண்கள் கண்ணீரில் வெடிக்க மூக்கு வழியாகவும் சோற்றுப்பருக்கைகள் வெளியே வந்து திக்குமுக்காடவைக்கும். அப்போது அந்த எலுமிச்சைப் பழத்தை ஒரு துளையிட்டதுபோல் பல்லால் கடித்து அதன்வழி ஸ்ட்ரா போட்டு உறிஞசியதுபோல அந்த சாற்றின் ஒரு துளியை உறிஞ்சுகையில் அது வாந்தியை வந்து பாரு எந்த ஊரு என்று கேட்பதுபோல ஆறுதலைத் தரும்.
எதுக்கு ஒத்துக்கலன்னா அழைச்சிட்டு வர்றீங்க? பேசாம வீட்டுல விட்டுட்டு வந்துடவேண்டியதுதானே,,, வெறும் வயித்தோட அழைச்சிட்டு வர்ற வேண்டியதுதானே,,, நாத்தம் குடலைப்புடுங்குது.. நாங்கல்லாம் ஊரு போய் சேரவேண்டாம்?,,, விடுங்க சார்.. சின்னப்பசங்க.. அப்படித்தான் இருக்கும்.இனிமே பஸ்ல அழைச்சிட்டு வரும்போது இட்லி இடியாப்பம் இதுமாதிரி லைட்டா கொடுத்து அழச்சிட்டு வாங்க.. இல்ல அடிக்கடி பஸ்ல போனா பின்னால ஒத்துக்கும்... சரியாயிடும்..
உண்மையில் அடிக்கடி பேருந்தில் பயணித்ததால்தான்அது சரியாயிற்று என்பதுதான் உண்மை. பள்ளிக்கூடம் முடித்து கல்லுர்ரி படிப்பு வரை சைக்கிள்தான். பேருந்து பயணம் இல்லை. அதற்குப்பின்னரும் உள்ளுரிலேயே வேலையும் அமைந்தவிட்டதால் டூவீலர் என ஆயிற்று. எனவேதான் பேருந்துபயணம் என்பது இல்லாமல்போனது. ஆசிரியப்பணிக்காக வெளிக்கிளம்பியதுதான் பேருந்துப் பயணம்போல ஆகிவிட்டது. அதுவரை வாழ்க்கையில் சுற்றாத ஊர்களையெல்லாம் கட்டாயமாக சுற்றவேண்டிய நிலையில் வாராவாரம் பேருந்துப் பயணம் என்பது கட்டாயமாகிப்போனது. இப்போது பேருந்தில் வாந்தி வருவதில்லை. பேருந்து என்பது வசதியான ஒரு பயணத்திற்கான தோழனாக ஆகிப்போனதுதான் உண்மை.
ஒவ்வொருமுறை ஒவ்வொரு ஊருக்கும்போகும்போது எத்தனையோ முகம் தெரியாத மனிதர்கள் ஏறி இறங்குவது ஒரு மிகப்பெரிய தொடர் காட்சிக்கு ஆளாக்கிவிட்டது. வயதானவர்கள்.. சின்ன குழந்தைகள்...பெண்கள்.. பள்ளி கல்லுர்ரி பிள்ளைகள்...பல்வகை வேலை செய்யும் தொழிலாளர்கள்..பணியாளர்கள்..அலு வலர்கள்...கிளி ஸ்யக்காரன்...பலுர்ன் விற்பவன்...பஞ்சு மிட்டாய் விற்பவன்..கடலை விற்பவன்...உலக மேப் விற்பவர்கள்...வெள்ளரி பிஞ்சு விற்பவர்கள்... பைனாப்பிள் விற்பவர்கள்... கொய்யாப்பழம். . சிலசமயம் மாம்பழம் விற்பவர்கள்...கருவாடு விற்கும் பெண்.. இலைக்கட்டுடன் ஏறும் விவசாயிகள்.. பக்காரிகள்.. பூக்காரர்கள்...நெல்லிக்காய்.. எலந்தைப்பழம் விற்பவர்கள்.. சாக்கு மூட்டையுடன் ஏறுபவர்கள்... இவர்களுக்கிடையில் ஈர உடையுடன் சொட்டசொட்ட ஏறுபவர்கள்... (துக்கத்திற்குப் போய்விட்டு வருபவர்கள்.. அல்லது வயல் வேலை முடித்துவிட்டு வாய்க்காலில் குளித்துவிட்டு வருபவர்கள்) என எண்ணிலடங்கா மனிதர்கள். அவரவர்களுக்கு அவரவர் பிரச்சினை. இவர்களுக்கிடையில் கண்டக்டர் நீந்திக்கொண்டு மிதந்துகொண்டு மூச்சு திணறிக்கொண்டு நகர்ந்து டிக்கட் போடவேண்டும். சதா எதையேனும் கத்திக்கொண்டே தனது சக்தியையெல்லாம் காற்றில் கொட்டிக்கொண்டு டிக்கட் போடும் அவரைப் பார்த்தால் ரொம்பப் பரிதாபமாக இருக்கும்.
டெய்லி வர்றே... சில்லறையா கொடுக்கமாட்டீயா? அடுத்த ஸ்டாப்பிங்கல இறங்கறது நுர்று ரூவா நோட்டு.. என் தாலிய அறுக்கறதுக்குன்னு வருவியா?... நடந்துபோனா என்ன இளைச்சா போயிடுவே..
சும்மா இருய்யா... காலையிலேர்ந்து தலையில கல்லும் மண்ணும் சுமந்து வேலை பாத்திட்டு வந்தா உனக்கு அருமை தெரியும்.. சுளுவா சொல்லே அடுத்த ஸ்டாப்பிங்கதானே நடந்துபாருன்னு.. நடக்கத் தெரியாதவஙக் பாரு...சொல்லிகொடு...
நீ சில்லறையா கொடுத்தா நான் ஏன் பேசப்போறேன்?
நான் என்ன பேங்கா நடத்தறேன்.. அன்னிக்கு அன்னிக்கு சம்பளம் இந்த எரநுர்றுவா காசுதான்... இன்னிக்கே சரியாயிடும்...
இந்தாப்பா கண்டக்டர் இந்தாள தள்ளி நிக்கசெர்ல்லு இலைக்கட்டால இடிச்சுக்கிட்டேயிருக்கான்..
யோய் இலைக்கட்டு தள்ளி வா...
எங்கங்க தள்ளி வர்றது...இலைக்கட்டு வெயிட்டுங்க...
எதுக்கு இவங்கள எல்லாம் வண்டியிலே ஏத்தறீங்க?
எல்லாம் மூடித்தான் இருக்கு... வறுத்தா சப்புகொட்டி திங்க மாட்டே,,, நீயா சமைக்கிறே வூட்டுல பொம்பள சமைக்கிறா... தின்னுப்புட்டு வியாக்கியானம் பேசற...
சரி விடும்மா...
உறலோ துர்ங்கி விழாதீங்க.. நிமிருங்க...
யோய் படியவிட்டு மேல வாய்யா...
நான் பாத்துக்கறேன் நீ ஒன் வேலைய பாரு...
என் வேலையதான் பாக்கறேன்.. படியவிட்டு மேல வந்து தொலை... விழுந்து தொலைக்கபோறே...
அய்... விழுந்துடுவோமா.. நாங்க... யாரு... நீ பாட்டுக்கு டிக்கட்ட போடு... எனக்கு ஓலைத்தேவராயன்பேட்டைக்கு ஒரு டிக்கட் கொடு...
குடிகார கம்னாட்டிங்க.. விழுந்து தொலைச்சா யாரும் ஊருக்குப் போகமுடியாது...
யாருக்கும் டிக்கட் வேணுமா,,, வரவேண்டியிருக்கா.. கேட்டு வாங்கிடுங்க...செக்கர் வந்தா நான் பொறுப்பில்லே...
அடுத்த நிறுத்தத்தில் யாரேனும் ஓடி வருவார்கள்..
அய்யய்யோ இப்படி பாவி மவ பண்ணிப்புட்டானே... இனி நான் என்ன செய்யப்போறேன்... மகமாயி.. என் மடியிலயா நெருப்பள்ளி கொட்டுவே... வருஷாவருஷம் தீ மிதிச்சானே உன் மனசு இரங்கலியா.. பாவி..
ஆத்தா கத்தாதே இது பஸ்சு...
விடு அது அழுது தீரட்டும்..
எங்க போறிங்க?
என்னாச்சு?
அந்த ஆத்தாளோ பேரன்... இதுக்கு முந்துன பஸ்ல போயிருக்கான்... பஸ்ச விட்டு இறங்கியிருக்கான்.. யாரோ வெட்டிட்டாங்க...அங்கேயே உயிரு போயிடிச்சாம்...
என்ன முன்விரோதமா?
இவன் கொஞ்சம் துடிப்பா இருப்பான்...எதுக்கெடுத்தாலும் கைய ஓங்குவான்...
அப்பா அம்மா,, இருக்காங்களா?
அப்பாரு வெத்திலைக் கொடிக்கால்ல பாம்பு கடிச்சு செத்துப்போயிட்டாரு... ஆயிதான்.. அதோ அந்த மஞ்சப்புடவைதான்...
கருத்துப்போன ஒரு கரிக்கட்டையின்மேல் மஞ்சள் புடவை சுற்றியதுபோல அந்த பெண்ணிருந்தாள். அவள் வாழும் வாழ்க்கையை அவளது மேனி சொன்னது..
அவள் கண்களில் இருந்து நீர் கொட்டிக்கொண்டேயிருந்தது. புடவைத் தலைப்பை சிறுபந்தாக உருட்டி வாயில் அடைத்தபடி பொங்கிகொண்டிருந்தாள்...
என்ன வயசுங்க?
இந்த ஆவணி பொறந்தா இருவத்திரண்டு ஆகும். ஆளு நல்ல திகாத்திரமா இருப்பான். நேருக்கு நேர் நின்னு வெட்டமுடியாது.. பின்பக்கம் கழுத்துல போட்டுட்டாங்க... எல்லாம் இவன் வயசு ஒத்த பசங்கதான்...
இந்த வயசுல இது தேவையா?
எங்க பசங்க கேக்கறாங்க?
கண்டிச்சு வளர்க்கணுங்க...
புருஷ்ன் இல்லாத பொம்பள குடும்பத்த பாப்பாளா.. இழுத்துட்டு வர்ற ஊர்வம்புக்குப் பஞ்சாயத்துப் போவாளா?
சின்ன சின்ன சந்தோஷங்கள்...
கருப்பு துயரங்கள்.
கலகலப்புகள்.
சிறுசிறு சண்டைகள்
எல்லை மீறுகிற சப்தங்கள்...
எதையும் கண்டுகொள்ளாமல் துர்ங்குகிறவர்கள்
அவரவர் நிறுத்தம் வந்தால் இறங்கிப்போகிறவர்கள்.
தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பவர்கள்..
இவற்றுக்கிடையில் டிக்கட் போட்டுவிட்டு இன்வாய்ஸ் எழுதும் கண்டக்டர்.. சாலையைப் பார்த்தபடி பேருந்தை இயக்கும் டிரைவர். எல்லாவற்றையும் வாங்கிகொண்டு ஓடிக்கொண்டிருக்கும் பேருந்து..
அடிக்கடி நினைப்பது இந்தப் பேருந்திற்கு வாயிருந்தால் என்ன பேசும்?
எனக்குத் தோணவில்லை.
ஒவ்வொரு நாளும் சாலையில் ஏதேனும் ஒரு யுத்தத்திற்குத் தயாராகவே பேருந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
அன்று வெள்ளைக்குதிரை வரவில்லை.
ஏதோ இஞ்சின்கோளாறு என்று வேறு மஞ்சள் நிற வண்டியை எடுத்துக்கொண்டு ஜெயக்குமார் வந்திருந்தார். வழக்கம்போலவே பாண்டியன்.
என்ன சார் எப்படியிருக்கீங்க?
எங்க ஜெயக்குமார் போனவாரம் வரல்ல
அத ஏன் சார் கேக்கறீங்க?.. அன்னிக்கு வைத்தீஸ்வரன் கோயில்ல ஒரு ஆக்ஸிடெண்ட்... ஒரு சின்ன பையன் குறுக்க வந்துட்டான்...ஒண்ணும் பண்ண முடியல்லே... ஸ்பாட் அவுட்.. என் பையன் வயசுதான் சார்.. மனசே கலங்கிப்போச்சு.. கடைசிலே அவனோட அப்பா உங்க ஆபிசுதான்சார்... மக்கள் கூடிப்போயிட்டாங்க....ஓடிலாம்னு பார்த்தோம்.. ஏன்ன என்ன ஏதுன்னு கேக்காம அடிக்க ஆரம்பிச்சுடுவாங்க.. ஆனா எங்க மேல தப்பு இல்லங்கறதால திகைச்சுப்போய் நின்னுட்டோம்...அதுக்குள்ள போலிஸ வந்துடுச்சி...
பஸ்ஸ ஸ்டேஷன்ல் விட்டுட்டு... ஆம்புலன்சுல பாடிய ஏத்திவிட்டுட்டு.. எல்லாத்தையும் முடிச்சிட்டு வர்றதுக்குள்ள ராத்திரி மணி ரெண்டாயிடிச்சு சார்.. பாண்டியன் மேல கேஸ் புக் பண்ணிட்டாங்க...மறுநாள் வக்கீல பாத்துட்டு நான் லீவு போட்டுட்டேன்.. நாலு நாள்...கனவுல அந்த பையனே வர்றான் சார்.. துர்ங்க முடியல்லே.. இது தெரியாம என் பொண்டாட்டி லீவுலதான் இருக்கீங்க...நம்ப புள்ளக்கி முடியெடுத்து காது குத்திடலாம் குலதெய்வம் கோயில்லன்னா.. எங்க வழக்கம் திருட்டு காதுதான் குத்துவோம்.. ஒண்ணும் சொல்லமுடியல்லே...காது குத்திட்டு வந்தாச்சு.. அந்த ஆசாரி சரியா குத்தாம விட்டதால காது புண்ணாயிடிச்சி.. கொதகொதன்னு சீழ் வச்சிடிச்சு.. பையன் துடிக்கிறான்.. தோட்டையும் கழட்ட முடியல்லே.. டாக்டர் கிட்ட போனோம்.. அவர் மெதுவா எல்லாத்தையும் துடைச்சி விட்டுட்டு தோட்டை கழட்டி கொடுத்திட்டாரு...ஓட்டை துர்ர்ந்துபோயிடிச்சி.. ஆனா புண் ஆறிடிச்சி.. இனிமே தோடு போடமாட்டேங்குறான்... சரின்னு கழட்டி வச்சிட்டோம்.. இதுல என்ன கூத்துன்னா.. அன்னிக்கு ரோட்டுல அடிபட்ட பையன் காதுல போட்டிருந்த தோடும் இதுவும் ஒண்ணு சார்.. என்னமோ தெரியல்லல அது மனச உறுத்துது சார்... ஏண்டா இந்தப் பொழப்புன்னு தோணுது... உண்மையிலேயே நிறைய பாவம் செஞ்சவங்கதான் கண்டக்டர் டிரைவரா வருவாங்க போலருக்கு சார்.. ஒவ்வொரு நாளும் மோட்டார் லைன்ல வண்டிய எடுத்து நைட்டு வண்டிய விட்டு இறங்கறவரைக்கும் இம்மைசதான் சார்.. பெரிய போராட்டம்.. நிம்மதியா எந்தப் பிரச்சினையும் இல்லாம வீடு வந்து படுத்தா போதும்னு இருக்கு சார்...
நினைத்துப் பார்த்தேன்.. காலையில் அலாரம் வைத்து நான்கு மணிக்கு எழுந்து பேருந்தைப் பிடிக்க ஓடி மூன்று மணிநேரங்கள் பயணித்து அலுவலகம் சென்றால் அங்கே தளர்வாக ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் கண்டக்டர் டிரைவர் அப்படி செய்யமுடியாது.. இம்சையான பணிதான். நினைக்கையில் அவர்களை நினைத்து பரிதாபம்தான் வந்தது,
எல்லோருடைய வாழ்க்கையிலும் இம்சையும் சங்கடங்களும் இருக்கவே செய்கின்றன. அவை நிழல்போல விட்டு நீங்குவதில்லை. சில சமயம் நமக்குக் கட்டுக்கடங்கி பின்னாலே வருகின்றன. சில சமயம் இருப்பது தெரியாமல் இருக்கின்றன. சில சமயம் நமக்கு முன்னால் நீண்டு போகின்றன. அனுபவிப்பதுதான் வாழ்க்கை என்று தோணியது.
மாயவரத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு டீயைக் குடித்துவிட்டு நின்றுகொண்டிருந்தோம். எட்டு பதினெட்டுக்குத்தான் வண்டியை எடுக்கவேண்டும். அப்போது ஒருவர் கருப்பும் வெள்ளையும் இழையோடிய தலையுடன் கையில் ஒரு அழுக்கான வயர்கூடையுடன்.. எங்களை நோக்கி வந்தார்..
வாய்யா.. என்றார் ஜெயக்குமார்.
எ...ன்ன... இன்னிக்கு சீ....க்...கிரமா... வந்துட்டீங்க என்று திக்கினார்.
ஜெயக்குமார் அறிமுகம் செய்து வைத்தார். சார் சிதம்பரத்துலதான்வேலை பாக்கிறர்ரு.. வணக்கம் என்றார். பதிலுக்கு வணக்கம் வைத்தேன். இவரு டெலிபோன்ல லைன்மேன்.. வல்லம் படுகை. நம்ப வண்டி நிக்காது.. இவருக்காக நிக்குது..
நி...க்...காம...போ...வும்.. அப்புறம் வண்டிய பாக்க முடியா.....து..
ஆமா... தெரிஞ்சுக்க என்றார் திக்கிபேசி சிரித்தபடி.
பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம்.
திக்கிப்பேசியவர் பாண்டியனுக்கு பக்கத்தில் பானட்டில் உட்கார்ந்துகொண்டார். அப்போதுதான் அவரைக் கவனித்தேன். வெளுத்துப்போன சட்டை. சில இடங்களில் கிழிசல் சீப்பு பற்களாய் நின்றிருந்தன. பேண்ட் மங்கிய கலரில். காலில் வெள்ளைநுர்ல் போட்டு கையால் தானே தைத்துக்கொண்ட சிலிப்பர் செருப்பு..
சார் உங்க பேரு என்ன என்றேன்.
என் பேரா...சார்.. என்றபடி.. சொன்னார். சி...வ...க்..குமா....ர்.
என் பேரை சொன்னேன்.
கைகுலுக்கினார்.. டெய்லி வருவீங்க.. பாக்கலாம். சிரித்தார்.
பாண்டியன் வண்டியை எடுத்தார். பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து கும்பகோணம் சாலையில் ஓடி அரசு மருத்துவமனை வீதியில் நுழைந்தபோது மருத்துவமனை அருகே பெரிய கூட்டம் இருந்தது. எல்லாரும் கரை வேட்டிகள். கட்சிக்காரர்கள். நிறைய வண்டிகள். ரோடு அடைத்து நின்றார்கள்.பேருந்து போகமுடியாது என்பது உறுதியானது. பாண்டியன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினார். கூட்டத்தின் அருகே போய் யாரிடமோ என்னவோ கேட்டுவிட்டுதிரும்பி வந்தார்.
என்னாச்சு பாண்டியன் ?
எம்எல்ஏவை வெட்டிட்டாங்களாம்...
என்னாச்சு...
பெரிய கும்பலாம்.. ஏகப்பட்ட வெட்டு...அங்கேயே உயிர் போயிடிச்சாம்.. போஸ்ட் மார்ட்டம் நடந்துகிட்டிருக்காம்...
வெள்ளைக்கார மனிதர்களுக்கிடையில் நிறைய காவல்துறை காக்கிகள் தெரிந்தன. ஒரு பதட்டம் மிதந்துவந்தது. எப்படியும் கிளியர் ஆக ஒருமணி நேரம் ஆகலாம். இன்றைக்கு விடுப்பு சொல்லிவிடலாமா என்று தோணியது.
சிவக்குமார் சொன்னார்.
ஏற்கெனவே நாலைஞ்சு மெமோ ஆயிடிச்சு லேட்டா போயி. இனிமே சம்பளம் கட்டுதான்... வருத்தமாய் சொன்னார்.
பேருந்தை விட்டு இறங்கி அருகேயிருந்த கடைக்குப் போனேன் ஏதேனும் ஒரு புத்தகம் வாங்கலாம் என்று. மனசு சொல்லியது எல்லாம் நன்மைக்கே என்று.
(பேருந்து ஓடும்)
No comments:
Post a Comment