Wednesday, 15 October 2014

ஸ்ரீ வைணவ ஆசார்ய வைபவம்: வளவ துரையன் செய்த எழுத்து யாகம்

                                                                 


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் மணவாள மாமுனிகள்  கைங்கர்ய சபாவின் செயலாளர் திருவளவ.துரையன் அவர்கள் அவ்வப்போது  பல வைணவ இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே  இந்நூலாகும். 

அவர் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் மார்கழி முப்பது நாள்களும் திருப்பாவை உபன்யாசமும் ஸ்ரீராமநவமியின் போது பதினொரு  நாட்கள் இராமாயண சொ ற்பொழிவுகளும் ஆற்றி வருவதோடு  கடந்த 17 ஆண்டுகளாக மேற்படிசபையின் சார்பாக மேற்படி திருக்கோயிலில் அனைவரின் ஒத்துழைப்புடன் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு நடத்தி  வருவது குறிப்பிடத்தக்கதாகும். 

உயர்வற உயர் நலம் உடையவன் பரமபதநாதன் பிராட்டியோடு கூடிய ஸ்ரீமத் நாராயணனின் அருளினால்  மயர்வற மதி நலம் அருளல் பெற்ற ஆழ்வார்கள் இந்தப் பூமண்டலத்திற்குப் பரமபத தூதர்களாக அவதரித்தனர். அவர்களைப்  பற்றியும் அவர்கள் வழி வந்த ஆச்சாரியர்கள் வைபவத்தையும்  இந்நூலில் வளவ.துரையன் சிறப்பாக எழுதியுள்ளார். 
அத்துடன் கம்பராமாயணம் மற்றும் சில திவ்ய தேசங்கள் பற்றிய குறிப்புகள் கொண்ட கட்டுரைகளும் இதில் அடங்கியுள்ளன. ஸ்ரீவைஷ்ணவ இலக்கிய உலகிற்கு இந்நூல் மேலும் ஓர் அணிகலனாகத் திகழ வேண்டுமெனப்  பணிவுடன் வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன். 

இரா. சாம்பசிவம்
தலைவர் 
ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் 

                                                          


                            வாழ்க வளவனாரின் ஸ்ரீ வைணவத்தமிழ். 

தமிழிலக்கிய உலகின் தண்ணீர்த்தடமாக எப்பொழுதும் ஈரத்துடன் விளங்குவது பக்த இலக்கியங்கள் எனலாம்.  காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் எனத் தமிழிலக்கியங்கள் பல வகைகளிலும் அவை ஒவ்வொன்றும் பல வகைமைகளிலும் கிளைத்து வளர பக்தி இலக்கியங்கள்  காரணமாக உள்ளன.  செய்திச் செறிவுள்ள தொடர்நிலைச் செய்யுள்கள் வளம்பெற்றதும் பக்தி இலக்கியங்களால்தான். பல புதியவகைச் செய்யுள்களைத் தமிழிக்கியத்திற்கு அறிமுகப்படுத்த மரபுலகத்தை  இலகுப்படுத்தியதுடன் தமிழி நவீனத்துவத்தின் பக்கம் அழைத்து செ ன்றதிலும் பக்தியிலக்கியத்திற்குப் பங்குண்டு

ஆழ்வார்கள்.  நாயன்மார்கள் தொடங்கி வள்ளலார், பாரதியார் வரையிலான ஆளுமைகளின் படைப்புகள் இந்த அவதானிப்புகளைத் தருகின்றன.  இப்பின்னணியில் கட்டமைப்பிலும், கருத்துச்செறிவிலும் புதியச்சிந்தனைகளை விதைத்து வளர்த்துத் தமிழைச் செழுமைப்படுத்தியுள்ள பக்தி இலக்கியங்களின் வாசிப்பு நவீன படைப்பாளர்களை முழுமையும், செழுமையும் உடையவர்களாக உருவாக்குவதில் பெரும் வினையாற்றி வருகின்றது. இதற்கு ஓர் ஒளியூட்டப்பட்ட உதாரணமாக வளவ துரையனின் “ஸ்ரீ வைணவ ஆசார்ய வைபவம்” உங்கள் கரங்களில் உட்கார்ந்துள்ளது.

ஆழ்வார்கள், ஆசார்யார்கள், எழுத்து எண்ணி எழுதப்பட்டுள்ள ஸ்ரீ வைணவ உரைகள், பரிபாடல் தொடங்கி பாரதி வரையிலான இலக்கியங்களின் ஸ்ரீவைணவக்கூறுகள், திவ்யதேச ங்களின் பெருமைகள், ஸ்ரீவைணவநெறிகள், ஸ்ரீ வைணவக் கோட்பாட்டுச  சித்தாந்தங்கள் என்று ஸ்ரீ வைணவத்தளத்தில் மிகச்சிறப்பான ஓர் எழுத்து  யாகத்தை வளவ துரையன் நிகழ்த்தியுள்ளார்.

                                                           
         

 வளவ துரையன் சற்றேறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வாசிப்பு, வெகுஜன மற்றும் சிற்றிதழ்களில் வெளிப்படுத்தியுள்ள எழுத்துக்கள், மாநாடு உள்ளிட்ட பல்நிலை உரையரங்கங்களில் பெற்ற கேள்வி  ஞானம், இலக்கிய அமைப்புகள் மூலம் நிகழ்த்திய ஆயிரக்கணக்கான  இலக்கியக்கூட்டங்கள், பல்வெறு இலக்கிய மே டைகளில் வெளிப்படுத்திய உரை வீச்சு, முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடாத்தி வருகின்ற சிற்றிதழ் என்ற பல்வேறு ஆளுமைகளின் பட்டை தீட்டுதல்களோடு மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து கலைத்திறன்களின் கூர்மையையும் அண்மையில் இருபது ஆண்டுகளாக ஸ்ரீ வைணவத்திலும் ஸ்ரீவைணவ இலக்கியங்களிலும் அவர் செலுத்திவருவதின் ஒட்டுமொத்த வெளிப்பாடாக வளவ துரையனின் “ஸ்ரீ வைணவ ஆச்சார்ய வைபவம்” என்ற இப்பனுவலைப் பார்க்கின்றேன் .

அடிப் பொடியின் அடிப்ப் பொடியான இளையோயானுக்கும் தாளின் ஒரு பக்கத்தை வைபவித்து அருளியமைக்கு நன்றியைத் தெரிவித்து தாழ்ந்து உரைக்கின்றேன்., பொலிக... பொலிக... பொலிக...!

முனைவர். ந.பாஸ்கரன் 
தமிழ்ப்பே ராசிரியர் 
பெரியார் கலைக்கல்லூரி 
கடலூர்


No comments:

Post a Comment