Sunday, 26 October 2014

இ .தே ,.ஏ :4. அறிவை அறியும் அறிவு

                                                                       
கர்னல் கணேசன்

ஹைதராபாத்திலிருந்து திரும்பிய இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த நண்பரிடமிருந்து ஒரு நீண்ட கடிதம் வந்தது கணேசனுக்கு. அதனுடன் அவரது அன்னையும் ஒரு கடிதம் எழுதி இணைத்திருந்தார்கள். சிறகொடிந்த பறவையை கையிலெடுத்து மிக ஆறுதலாக வருடிக் கொடுப்பது போல் இருந்தது அந்த கடிதம் “உன்னைப் பெற்றவள் உயிரோடு இருந்திருந்தால் அது போன்ற மழையினூடே உன்னை அனுப்பி இருப்பாளா?” என்ற கடித வரிகள் கணேசனை மிகவும் உணர்ச்சி வசப்படவைத்தன. பரந்த உலகில் உனக்கேற்ற புகலிடமா இல்லை? ஏனிப்படி தனக்குத் தானே ஏதாவது கற்பனை செய்து கொண்டு கலங்குகிறாய்? என்று கேட்பது போன்றிருந்தது.


                      அறிவை அறியும் அறிவு

அறிவு என்பது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு அறிவு வேண்டும். அறிவை அறிய ஒரு அறிவு - அந்த அறிவை அறிய ஒரு அறிவு. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி அறிவை அறியும் அறிவு வெளியிலிருந்து வருவதில்லை. தன்னுள்ளேயே கிளர்ந்து எழுவது தான். அதைத்தான் சுயம் பிரகாசம் என்கிறார்கள். எந்த நிலையிலும் உடலும் மனமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் கவனமுடன் இருந்தார் கணேசன். ஆகையினால் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் யோகா, ஆசனங்கள், பிராணாயாமம் என்று உடல் நலனுக்கு ஏற்ப ஏதாவது செய்வதை வழக்கமாகக் கொண்டார். அதனால் மனம் தெளிவடைய ஆரம்பித்தது.

மூன்றாண்டு காலப் பட்டப்படிப்பு இடையில் சற்றே தடைப்பட்டிருந்தாலும் நல்லவிதமாக முடியும் நிலையை நெருங்கிக் கொண்டிருந்தது. அதிகாரிகளுக்கு அடுத்த பணிமாற்றக் கலந்துரையாடலுக்கு உயரதிகாரிகள் வந்திருந்தார்கள். கணேசனது போர்க்கால அனுபவம் அவரது ஆரம்பகாலப் படைப்பிரிவில் தான் இருந்தது. ஆகையினால் பி.டெக் படிப்பு முடிந்தவுடன் அவரை அதே படைப் பிரிவிற்கு பணிமாற்றம் செய்ய ஏற்று கொண்டார்கள். “பங்களாதேஷ்” போருக்குப் பின் கணேசன் அப்படைப் பிரிவினரை அஸ்ஸாமில் ரங்கபாரா என்ற இடத்தில் விட்டு விட்டுப் பொறியியற் கல்லூரி வந்திருந்தார். 

அப்படைப் பிரிவினர் அங்கிருந்து உடனடியாக மேற்கு பாகிஸ்தானிய போர்க்கால அழிவுகளை சீர் செய்யும் பொருட்டு ராஜஸ்தான் எல்லைப்புறம் சென்றிருந்தனர். அப்பணி முடிந்து சமீபத்தில் அவர்கள் பங்களூர் வந்திருந்தனர். அங்கு அநேகமாக இரண்டு வருடங்கள் இருப்பார்கள். அங்கு போவது கணேசனுக்கு ஒரு விதத்தில் நல்லது. பட்டப்படிப்பு முடியும் தறுவாயில் அவரது அண்ணன்கள் அவரது திருமண முயற்சியில் மீண்டும் ஈடுபட்டனர். அந்நிலையில் அவர் பங்களூரில் இருந்தால் அவரது திருமண ஏற்பாட்டில் முன்னேற்றம் ஏற்படலாம் என எல்லாரும் நினைத்தார்கள்.   

           பட்டப்படிப்பில்  முதல் மாணவராக 
28 ஜூன் 1973 கணேசனது வாழ்வில் ஒரு முக்கிய நாள்அன்றுதான் அவரது பி.டெக் படிப்பு முடிந்து பட்டமளிப்பு விழா நடந்தது. வடக்கு மண்டல இராணுவத் தளபதியும் பொறியாளர் படைப் பிரிவைச் சேர்ந்தவருமான  லெப்டினெண்ட் ஜெனரல். பி.எஸ். பகத்  அவர்கள் தான் பட்டம் வழங்கி சிறப்புரையாற்றியவர். இரண்டாவது உலகமகா யுத்தத்தில் 1942-ம் ஆண்டு வீரச்செயல் புரிந்து யுத்தத்தில் வழங்கப்படும் உயர்ந்த விருதான விக்@டாரியா கிராஸ் என்ற விருதைப் பெற்றவர். இந்திய இராணுவத்தில் பொறியாளர் படைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அதுவரை பெற்றிராத சிறப்பு கௌரவமாக வடக்கு மண்டல தலைமைத் தளபதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். அன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கணேசனுக்கு மற்றொரு சிறப்புப் பரிசு காத்திருந்தது. எதிர்பார்த்தபடியே சிவில் என்ஜினியரிங்   பட்டப்படிப்பை மேற்கொண்டவர்களில் அவர் முதல் மாணவராக பட்டம் வென்றார்.

                                                                      

பிரிட்ஜ் என்ஜினியரிங் என்ற சிறப்புப் பாடத்தில் முதுகலைப் படிப்பிற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தார். அன்று மாலையே, அவர்களுக்கு சிறப்பு விருந்தும் நடந்தது. மறுநாள் அவரும் மற்ற அதிகாரிகளும் அவரவர் பெற்றிருந்த பணிமாற்றம்படி புதிய இராணுவ தளங்களுக்கும் படைப் பிரிவுகளுக்கும் புறப்பட்டார்கள். கணேசன் பங்களூர் சென்று தனது படைப் பிரிவில் சேர்ந்தார். படைப்பிரிவுகள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு எல்லை பாதுகாப்புப் பணி குறிப்பிடப்பட்டிருக்கும். பொதுவாக, அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து விரைவில் சென்றடையக் கூடிய எல்லைப்புறமாக அது இருக்கும். பங்களூரில் இருந்த கணேசன் படைப் பிரிவினர்க்கு ராஜஸ்தான் எல்லைப்புறம் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் அவ்வப்பொழுது அங்கு சென்று வருவார்கள்.
எதிர்பார்த்தபடியே காப்டன் கணேசனின் திருமண ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக எதிர்  பார்க்கப்பட்டது. பொதுவாக இராணுவத்தைப் பற்றி உயர்வான எண்ணங்கள் இல்லாத தமிழகத்தில் திருமணச் சந்தையில் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படாத குடும்பத்திலிருந்து தான் விருப்பம் தெரிவித்தார்கள். 

 இராணுவ அதிகாரிகளின் மனைவியருக்கான தகுதி
இராணுவ அதிகாரிகளின் மனைவிமார்களுக்கு அந்த அதிகாரிக்கு இருக்கும் பொறுப்புகள் போலவே மற்ற இராணுவத்தினரின் மனைவிமார்களுக்கு சமூக நலம் பற்கற்பிக்கும் பொறுப்பு இருக்கும். ஒரு இராணுவப் படைபிரிவில் சுமார் 200 - 300 குடும்பத்தினர் இருக்கலாம். மற்றவர்கள் திருமணம் ஆகாதவர்களாக அல்லது திருமணம் ஆகி குடும்பம் வைத்துக் கொள்ள விரும்பாதவர்களாக இருக்கலாம். சுமார் 20 அதிகாரிகளில் 10-12 பேர்களாவது திருமணம் புரிந்து குடும்பத்துடன் இருப்பார்கள். படைப்பிரிவின் தலைவரின் மனைவி ஆர்மி விமன்ஸ் வெல்பர் (AWWA) என்ற அமைப்பின் தலைவியாக இருப்பார். இந்த அமைப்பு இந்திய இராணுவம் முழுவதற்கும் உள்ள பொதுவான அமைப்பாகும். இராணுவத்தில் இந்த அமைப்புக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு தையல், கணினி, ஆசிரியைப் பயிற்சி போன்ற பாடங்கள் நடத்தப்படுகின்றன. உயர்தர இராணுவ அமைப்புகளில் இந்த (AWWA)பள்ளி பஸ்    விடுவது. இராணுவத் தளங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு டவுன் பஸ் விடுவது போன்றவற்றையும் நடத்துகின்றனர்.

இதுபோன்ற அமைப்புகளைத் தலைமை ஏற்று நடத்தவும், உடனிருந்து உதவவும் இராணுவ அதிகாரிகளின் துணைவியாரே அமர்த்தப்படுகின்றனர். தலைமைப் பதவி Ex Officio  ஆக படைப்பிரிவின் தலைவரின் மனைவியே ஏற்கிறார். ஆகையினால் இராணுவ அதிகாரியின் மனைவியை ஒரு சாதாரண குடும்பத் தலைவி என்று ஒதுக்கி விட முடியாது. திருமணத்திற்குப் பெண் பார்க்கும் போது இராணுவ அதிகாரிகள் இதை மனதில் கொள்ள வேண்டும். சரியானக் கல்வித் தகுதியும் நிர்வாகத் திறமையும் இல்லாத பெண்கள் அவர்கள் மணக்கும் அதிகாரிகளுக்கு சுமையாக இருக்கக் கூடாது. அத்தை பெண் - மாமா பெண் என்று உறவு முறையில் வேறு வழி இன்றி திருமணம் புரியும் அதிகாரிகள் பல விதமான இடையூறுகளுக்கு ஆளாவது மிகவும் சாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சிதான். இவைகளை எல்லாம் மனதில் கொண்டு கணேசன் தனது திருமணத்தில் அவசரம் காட்டாமல் பொறுமையாக இருந்தார்.

ஆனால், அதே சமயம் படைப்பிரிவினர் ஒன்றிரண்டு வருடங்களே பெங்களூரில் இருப்பார்களாதலால் அவரது அண்ணன்கள் அந்த காலகட்டத்தில் அவரின் திருமணத்தை முடிக்க அவசரம் காட்டினர். நாலைந்து இடங்களில் கணேசனின் ஜாதகம், படிப்பு, வேலை பற்றிய விபரங்களும் கொடுக்கப்பட்டன. சென்னையில் அதிக அறிமுகமில்லாததால் அங்கு சரியான ஆட்களை சந்திக்க முடியவில்லை. இதற்கிடையில் அவரது சின்ன அண்ணன் சென்னைக்குப் பணிமாற்றம் பெற்று வந்தார். அவர் ஒரு மாதம் போல் விடுமுறை எடுத்துக் கொண்டு அவருடைய மாமனார் உதவியுடன் சென்னையில் பல இடங்களில் நண்பர்களையும் உறவினர்களையும் சந்தித்தார்கள். 

அப்படித்தான் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும்  P&T காலனியில் குடியிருந்த ஒரு குடும்பத்தினரையும் சந்தித்தனர். அவர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய இரண்டு மூன்று இடங்களைத் தேர்வு செய்து பின்னர் கணேசனையும் வந்து பார்கச்சொன்னார்கள். ஆனாலும் ஏதும் முடிவாகவில்லை. ஆனால்,  P&T காலனியில் பார்த்த பெண்ணின்குடும்பத்தினர் அவர்களது ஜோதிடரின் அறிவுரைப்படி கணேசனே அவர்கள் வீட்டு மருமகனாக வருவார் என எதிர்பார்த்தனர். காலம் ஓடிக் கொண்டிருந்தது. அந்த  P&T காலனியில் உள்ள குடும்பத்தினரை சந்தித்து அவர்கள் பெண்ணைப் பார்த்து வந்த சுமார் ஆறு மாதங்களாகி விட்டன. 
                              ஒரு மாறுபாடான ஜோதிடர்
அவர்களும் ஜோதிடரின் அனுமானம் பொய்யாகலாமோ என நினைத்தனர். ஆனால், அந்த ஜோதிடர் ஒரு வியாபார நோக்கத்துடன் ஜோதிடம் பார்ப்பவர் இல்லை. வேறு எங்கோவேலை பார்ப்பவர். அவரது அனுமானம் ஒரு கடவுள் வரப்பிரசாதம். அவர் வழியில் போகும் ஒருவரைப் பார்த்து அனுதாபம் கொண்டு சார்! சைக்கிளில் கொஞ்சம் கவனமாகப் போக முயற்சியுங்கள் என்று சொல்லிச் செல்வார். சுமார் 1/2 மணி நேரத்திற்குள் அந்த சைக்கிள் காரர் ஒரு சிறிய விபத்தில் மாட்டி காலில் கட்டுடன் வந்து ஜோதிடரிடம் சரணடைந்து மேலும் விபரங்கள் கேட்டுக் கொண்டு போவார். அப்படிப்பட்டவர் அந்த  P&T காலனி குடும்பத்தினரின் நண்பராக இருந்தார். 

அவரை மீண்டும் அந்தக் குடும்பத்தினர் அவர்களது பெண் திருமணம் பற்றி கேட்டிருக்கின்றனர். கணேசன் குடும்பத்தினர் அவர்களை சந்தித்து போய் ஆறுமாதத்திற்கு மேல் ஆகிவிட்டதால் வேறு நல்ல இடமாகச் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு அந்த ஜோதிடர், நல்ல இடம் என்றால் நிறைய இருக்கிறது. ஆனால் அவர்கள் பெண்ணுக்குக் கணவராக இந்த பிறவியில் கணேசன் தான் என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார். கவலைப்படாமல் இருங்கள் என்றும் கணேசன் குடும்பத்தினர் அவர்களாகவே தேடிக் கொண்டு திரும்ப வருவார்கள் என்றும் உறுதியாகச் சொல்லி இருக்கிறார்.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்கிறார்கள். திருமணத்திற்கு பெண்/பிள்ளை தேடும் குடும்பத்தினர் எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் திருமண முயற்சியில் இறங்குகிறார்கள். பலவிதமான ஆய்வுகளுக்குப் பின் திருமணம் முடிவாகி எல்லாரும் மகிழ்ச்சியுடன் திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். ஆனால், ஓரிரு உருவாகி குடும்பம் சிதறுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு அனுமான ஜோதிடர் மிகவும் சாதாரணமாக சொல்லிய வாக்கை எப்படி ஒரு குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படித்தான் அந்த P&T காலனி குடும்பத்தினர் நினைத்தனர். இதைப் பற்றி ஏதுமறியாத கணேசன் குடும்பத்தினர் ஒன்றுக்குப் பின் மற்றொன்றாகப் பல இடங்களிலும் சரியான இடம் தேடி அலைந்து கொண்டிருந்தனர்.
விதியின் கரம் வலியது என்றும் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். வாழ்வின் ஒருவனுக்கு மனைவியோ அல்லது ஒருவளுக்குக் கணவரோ அமைவதும் அப்படித்தான் போலும். இல்லை என்றால் கணேசன் குடும்பத்தினர் ஆறுமாதங்களுக்கு முன்பு பார்த்திருந்த அதே  P&T காலனி குடும்பத்தினரின் பெண் திடீரென்று இரண்டு மூன்று நாட்களில் நிச்சயிக்கப்பட்டார் என்பதை எப்படி ஏற்று கொள்வது? காலமெனும் பொன் மேடையிலே நடத்தப்படும் அற்புதமான நாடகம் போல் கணேசனது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மாப்பிள்ளை பெங்களூரில் இருக்கிறார் என்று மகிழ்ச்சியுடன் பெண் வீட்டார் திருமண ஏற்பாடுகளில் இறங்கியிருந்தார்கள். 6 பிப்ரவரி 1974 அவர்களது திருமணம் நடக்கவிருந்தது. அந்நிலையில் 28 ஜனவரி 1974 அன்று அகமதாபாத் ரயில் நிலைய சந்திப்பிலிருந்து அவர்க ளுக்கு ஒரு கடிதம் வந்தது. [தொடரும்]


1 comment:

  1. Sir,The writing goes like a great detective story.At the end of this story you can once again put our marriage photograph.
    Did you get any comments?

    ReplyDelete