தமிழ் இனி மெல்ல..[3.6] சென்ற பதிவின் இறுதியில்
இராஜேந்திரனுக்குப் பயந்து எங்கு ஓட முடியும்! தெற்கே பெருங்கடலைத் தவிர வேறு என்ன இருக்கிறது! நாற்பத்தேழு வயதிலும் கட்டிளங்காளையாகத்தான் தென்பட்டான் இராஜேந்திரன். அவனது மகன் இராஜாதிராஜன் பாண்டியரின் பரம்பரைச் சொத்தைக் கைப்பற்றி விட்டான் என்று சோழக் காவலர்கள் பேசியதிலிருந்து அறிந்து கொண்டான்...
...இலங்கையையும் இழந்து, இப்பொழுது குடும்பத்துடன் சோழர்களின் கைதிகள் ஆனதுதான் மிச்சம் என்று நினைக்கிறான் மகிந்தன். ஆளரவம் கேட்கிறது. மூன்று வீரர்களுடன் ஒரு சோழ அதிகாரி வருகிறான். அவர்களைப் பூட்டி வைத்திருந்த கதவு திறக்கப்படுகிறது. அறைக்குள்ளிருந்து வரும் கெட்ட வாடையின் தாக்குதலால் மூக்கைச் சுளித்த அவன், தன்னுடன் வந்தவனிடம் ஏதோ கோபமாகக் கத்துகிறான். அவனருகில் இருந்த வீரன் பணிவுடன் தலையாட்டியவாறே ஓடுகிறான்.
“நான் சோழநாட்டின் இலங்கைப் பகுதி ஓலைநாயகம். உம்மையும், உமது குடும்பத்தாரையும் சோழநாட்டின் அமைதியைக் குலைக்கும் வண்ணம் நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டி, அந்தக் குற்றத்தை விசாரிக்க தஞ்சைக்கு அழைத்து வரும்படி கோப்பரகேசரி இராஜேந்திர சோழ தேவரின் ஆணை. உமது மனைவியார் உடல் நலம் குன்றி இருப்பதை அறிந்து கொண்டோம். இந்த இடத்தை சுத்தம் செய்ய ஆள் வந்து சேரும். உமது மனைவியாரின் உடல் நலத்தைக் கவனிக்க மருத்துவருக்குத் தகவல் சொல்லி அனுப்பி இருக்கிறோம். விரைவில் வந்து விடுவார் நாளை பயணம் துவங்கும். ஏதாவது கேட்க வேண்டுமா?” சுருக்கமான குரலில் அறிவிக்கிறான் அந்தச் சோழ அதிகாரி.
“எமது தளபதிகள், அதிகாரிகள்?”
“சோழ நாட்டின் அமைதியைக் குலைத்ததற்காகவும், அளவில்லாப் பொருட்சேதம் ஏற்படுத்தியதற்காகவும், அவர்களுக்கு கொடுத்த மரணதண்டனை இன்று காலைதான் நிறைவேற்றப்பட்டது.”
தமிழ் இனி மெல்ல..[3.7] தொடர்கிறது
அரிசோனா மகாதேவன் |
அத்தியாயம் 6
ஜெயங்கொண்ட சோழபுரம்
காளயுக்தி, சித்திரை 8 - ஏப்ரல் 21, 1018
கேட்பதற்கு இனிமையாக மங்கள இசை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது மற்றவர்கள் பேசும் தேவையற்ற சொற்களை முழுகடிக்கிறது. வேதங்கள் ஓதப் படுகின்றன. தேவார, திருவாசகப் பாடல்கள் பாடப் படுகின்றன. இறைவனடிமைகள் தங்கள் ஆடலால் அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றனர். ஊரே மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் களித்துக் கொண்டிருக்கிறது.
பெரிதாகப் போடப்பட்ட தென்னங்கீற்றுப் பந்தலில் மெல்லிய வெள்ளைத் துணிகளால் கூரையின் உள்பக்கம் மறைக்கப்பட்டிருக்கிறது. மலர்ந்த தாமரைகளைப் போன்ற விதானங்கள், மயில்கள், சுற்றிப் பிணைந்திருக்கும் திராட்சைக் கொடிகள், அன்னங்கள், இவ்வாறு பலவிதமான ஓவியங்களால் ஆங்காங்கு அந்த வெள்ளைத் துணியில் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. விதானங்களின் மையத்திலிருந்து அலங்காரமாகப் பட்டுக் குஞ்சங்கள் தொங்குகின்றன. துணியின் ஓரங்களில் பலவித வண்ணங்களில் கரைகள் கட்டப் பட்டிருக்கின்றன. கம்பங்கள் தோறும் தொம்பைகள் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கின்றன. கம்பங்களிலும் பலவண்ணத் துணிகள் சுற்றப்பட்டிருக்கின்றன. அவற்றின் மேல் மலர்ச் சரங்கள் சுற்றப்பட்டு எங்கும் நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கிறது.
கொள்ளிடத்திலிருந்து கொண்டுவரப்பட்டுத் தூவப்பட்ட மணல் மீது மெல்லிய கோரைப் பாய்கள் அமருவதற்காக விரிக்கப் பட்டிருக்கின்றன. கிழக்கே ஒண்ணரை கல் தொலைவில் இருக்கும் ஒரு ஏரியிலிருந்து குளிர்ந்த நீர் கொணரப்பட்டு ஆங்காங்கு பளபளக்கும் மண்பானைச் சால்களில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. அச்சால்களுக்கு அருகிலேயே மரமணைகளில் குடிநீர்க்குவளைகள் உள்ளன. நடுவே பெரிய மேடை அமைக்கப்பட்டு அதில் அரியாசனங்கள் போடப்பட்டிருக்கின்றன. நடுவில் இருவர் அமரக்கூடிய பெரிய சிம்மாசனம் இருக்கிறது. இலங்கையிலிருந்து கொண்டுவந்த பாண்டியர்களின் பரம்பரைச் சிம்மாசனம் அது. அது மட்டும் காலியாக இருக்கிறது.
அதற்கருகில் இன்னொரு பெரிய சிம்மாசனத்தில் இராஜேந்திரனும், திரிபுவனமாதேவியும் அமர்ந்திருக்கிறார்கள். மற்ற அரியாசனங்களில் இராஜேந்திரனின் மற்ற மனைவியர்களும், இராஜேந்திரதேவன், வீர(ராஜேந்திரன்), அம்மங்கை, மற்றும் பின் வரிசைகளில் சேதுராயர், முத்தரையர், அமைச்சர்கள், சிவாச்சாரி, அருள்மொழிநங்கை, இன்னும் பலர் அமர்ந்திருக்கிறார்கள்.
மேடைக்குக் கீழே வேள்விக் குண்டங்களில் பெரிய வேள்வி நடந்து கொண்டிருக்கிறது. அவற்றுக்கு நடுநாயகமாக விளங்கிய வேள்விக் குண்டத்தின் அருகில் இராஜாதிராஜனும், அவனது மனைவி மூவுலக மகாதேவியும் (திரிலோக்கிய மகாதேவி) வேதியர் சொற்படி நெய்யை வேள்வித் தீயில் இட்டுக் கொண்டிருக்கின்றனர். வேள்வி முடிந்ததும், வேதியர் புடைசூழ, காவலர் வெற்றிக்குடை பிடிக்க, அரசகுரு வேள்வியால் சிறப்பிக்கப்பட்ட மகுடத்தை ஏந்தி வர, இராஜாதிராஜனும் அவனது மனைவியும், மேடைப் படியில் ஏறுகிறார்கள். இராஜேந்திரன் எழுந்து, தன் மகனுக்கு கைலாகு கொடுத்து பாண்டியரின் பரம்பரை அரியாசனத்தில் அமர்த்தி வைக்கிறான். இராஜாதிராஜன் நீட்டிய கையைப் பற்றி, அவனருகில் அமர்ந்து கொள்கிறாள் அவளது பட்டத்து அரசியான மூவுலக மகாதேவி.
வேதியர் மந்திரங்களை முழக்கி முடித்ததும், அரசகுரு மகுடத்தை எடுத்து இராஜேந்திரனின் கையில் கொடுக்கிறார். அதைத் தொட்டு ஆசி நல்கிய இராஜேந்திரன், அவரிடமே அம்மகுடத்தைத் திருப்பி அளிக்கிறான். அரசகுரு மகுடத்தை இராஜாதிராஜனுக்கு அணிவிக்கிறார். அடுத்தபடியாக ஒரு செங்கோல் அவனுக்கு வழங்கப்படுகிறது. அனைவரும் மலர்மாரி பெய்கின்றனர். இராஜாதிராஜனின் தலைக்கு மேலிருக்கும் ஒரு மலர் மூட்டை அவிழ்ந்து அவன்மீதும், அவனது மனைவி மீதும் பூமாரி பெய்கிறது.
எங்கும் கெட்டி மேளம் இடைவிடாது முழங்குகிறது.
“சோழப் பட்டத்து இளவரசர் இராஜாதிராஜர் வாழி! ஈழத்திலிருந்து பாண்டியர் சிங்காதனத்தைக் கொணர்ந்து அதில் அரசேறிய மன்னர் வாழி! விஜய இராஜாதிராஜ சோழர் பல்லாண்டு வாழிய வாழியவே!” என்று மக்கள் அனைவரும் உரக்க வாழ்த்துகின்றனர்.
சோழப் பட்டத்து இளவரசாகத் தனது இருபத்திமூன்றாம் வயதிலேயே பொறுப்பேற்கிறான் இராஜாதிராஜன்.
சோழப் பேரரசனாகி நான்கு ஆண்டுகளுக்குள்ளேயே தன் மூத்த மகன்தான் சோழப் பேரரசின் வாரிசு என்று தந்தை இராஜேந்திரன் முடிவு செய்து விட்டதுதான் அவனுக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது.
ஏற்கனவே இதுபற்றித் தந்தையிடம் கேட்ட பொழுது இராஜேந்திரன் சிரித்துக் கொண்டே அவனுக்குச் சொன்ன பதில் இதுதான்:
“எனது தந்தையார், அதாவது உனது பாட்டனார் இராஜராஜர் எனக்கு இளவரசுப் பட்டம் சூட்டிய போது எனக்கு வயது நாற்பத்திமூன்று. தந்தையார் என்னை அத்தனை காலம் அரசு உரிமை இல்லாமல்தான் வைத்திருந்தார். அதற்கு இரண்டு காரணங்கள்: ஒன்று, அவருக்குத் தெரியாமல் நான் காதல் கடிமணம் புரிந்து கொண்டது. பொறுப்பற்ற முறையில் நான் செயல்பட்டேன் என்ற சினம் அவருக்கு. ஒரு பேரரசை நிர்வகிக்கும் திறமை உள்ளவன் இவ்வாறு செய்யக்கூடாது, அதுவும் முதல் திருமணம் யாருக்கும் தெரியாமல் நடக்கக்கூடாது என்று நினைத்தார், எனவே அவர் மனது மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது.
“சேதுராயர் மகளை நான் விரும்பியதையோ, அவளை மணம் செய்து கொள்வதையோ அவர் ஒரு குற்றமாகக் கருதவில்லை. அவருக்கு அந்தச் செய்தி தெரிந்திருந்தால், தக்க தருணத்தில் அவளை எனக்கு மணமுடித்து வைத்திருப்பேன் என்றுதான் சொன்னார். எனினும் சேதுராயரின் மகள் சோழநாட்டின் பட்டத்து ராணியாக வருவதையும் அவர் விரும்பவில்லை. எந்த ஒரு அரசனின் முதல் திருமணமும் நாட்டின் நலத்தைப் பெருக்குவதாகவோ, விரிவாக்கிப் பலமாக்கும் விதமாகவோதான் நடக்கவேண்டும் என்று விரும்பினார். எனவே, நான் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்கிறேன் என்று கண்காணித்து வந்தார். அவர் மனநிறைவு அடையும் வரை எனக்கு இளவரசுப் பட்டத்தைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
“இரண்டாவது காரணம், பல அரசு விஷயங்களில் நானும், அவரும் ஒரே நோக்குடன் செயல்படவில்லை. எந்த ஒரு திட்டத்தைப் பற்றி விவாதித்தாலும், அவரின் அணுகுமுறையும், எனது அணுகுமுறையும் வெவ்வேறாகவே இருந்தன. தந்தை எதையும் நன்கு சிந்தித்து - சில சமயம் ஆறப் போட்டுதான் முடிவெடுப்பார். நானோ உடனுக்குடன் செயல்பட விரும்புவேன். எனக்கு இளவரசுப் பட்டம் வழங்கினால் அவரின் அணுகுமுறைக்கு எதிர்மாறாக நான் தன்னிச்சையாக செயல்படுவதைத் தடுக்க இயலாமல் போய்விடுமோ என்ற ஐயமும் அவருக்குச் சிறிது இருந்து வந்தது.
“எத்தனையோ போர்களில் தந்தையாருக்கும், சோழநாட்டிற்கும் வெற்றியைத் தேடிக் கொடுத்தேன். தமிழ்நாடு மட்டுமன்றி, கருநாட்டிலும், ஆந்திரத்திலும், கீழைச் சாளுக்கிய நாட்டிலும், இலங்கையிலும் புலிக் கொடியைப் பறக்கவிட்டேன். நான் படையுடன் வருகிறேன் என்றாலே புலியைக் கண்ட மான்கூட்டமாக எதிரிகள் சிதறி ஓடும் அளவுக்கு மதிப்பையும், மரியாதையையும் ஈட்டினேன். அது தந்தைக்கு என் திறமையில் நம்பிக்கையையும், மரியாதையையும் கூட்டியது. படைத் தலைவர்களும், அமைச்சர்களும், ஏனைய அதிகாரிகளும் பட்டம் சூட்டப்படாமல் இருந்தாலும் கூட என்னைச் சோழப் பேரரசின் இளவரசனாகவே மரியாதை கொடுத்து நடத்த ஆரம்பித்தார்கள்.
“கடைசியில் தந்தையாருக்குத் தமிழ் திருப்பணி மீது நாட்டம் வந்ததும் கருவூர்த் தேவர் அரசுரிமையை என்னிடம் ஒப்படைக்கும்படி தந்தையாருக்கு ஆணையிட்டார். அப்படி அவர் ஆணையிடாது போயிருந்தால்...” அப்பொழுது இராஜேந்திரன் சிரித்த சிரிப்பில் சிறிது கசப்பும் கலந்து இருந்ததை இராஜாதிராஜனால் உணர முடிந்தது.
அப்பொழுதே நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன், எவ்வளவு விரைவில் உனக்கு இளவரசுப் பட்டம் சூட்டிவிட இயலுமோ, அவ்வளவு விரைவிலேயே உனக்குப் பட்டம் சூட்டிவிட வேண்டும் என்று. காரணம், எனக்குச் சோழப் பேரரசைப் பற்றிப் பெரிய கனவொன்று இருக்கிறது. வரலாறு என்னைத் திரிபுவனச் சக்ரவர்த்தி இராஜராஜரின் மகன் என்று மட்டுமல்லாமல், என்னுடைய சாதனைகளுக்காக மட்டுமே என்னைச் சிறந்த சோழநாட்டுத் தமிழனாக போற்றி வரவேண்டும் - அதை நிறைவேற்ற வேண்டுமென்றால் என்னைப் போல நினைத்துச் செயல்படும் மகன் ஒருவன் என்னுடன் இணைந்து துணை நிற்கவேண்டும் என்றுதான்.
“அதற்குத் தகுந்தாற்போல் நீயும் உன் கன்னிப் போரிலேயே தென்சேரனை யானைப் போரில் வீழ்த்தினாய்! தமிழ்நாட்டிலும், என் தந்தையாரிடத்தும் உன் மதிப்பை உயர்த்திக் கொண்டாய்! எனவே, எனக்கு அரசுப் பட்டம் கிட்டும் முன்னரே இந்த முடிவை நான் எடுத்து விட்டேன். என் கனவு நிறைவேற நீதான் எனக்கு வலது கையாக விளங்க வேண்டும்!” என்று இராஜேந்திரன் கேட்டதும் இராஜாதிராஜனின் மனம் உருகிவிட்டது...
…“அப்படியே செய்வேன் தந்தையே! உங்கள் கனவு நிறைவேற என் உயிரையும் கொடுப்பேன்.” என்று தான் உறுதிமொழி அளித்ததும், இராஜேந்திரன் தன்னை ஆரத் தழுவிக் கொண்டு ஆசி அளித்ததும் நினைவுக்கு வருகிறது.
“நீதான் அதைச் செய்ய ஆரம்பித்து விட்டாயே, இராஜாதிராஜா! பாண்டியர்களின் பரம்பரைச் சொத்தை என்று எனக்குக் காணிக்கையாக அளித்தாயோ, அன்றே அந்த அரியாசனத்திலேயே உன்னை இளவரசனாகப் பட்டம் சூட்டவேண்டும் என்ற முடிவையும் எடுத்து விட்டேன்!” என்று தன் தந்தை பெருமையுடன் கூறியதும் அவன் கண்முன் ஓடுகிறது. அதை நினைத்து நெஞ்சம் விம்முகிறது. கண் இலேசாகக் கலங்குகிறது.
“நெய்ப் புகை உங்கள் கண்ணில் எரிச்சலை மூட்டுகிறதா?” என்று மெல்லக் கேட்கிறாள் மூவுலகமகாதேவி.
“இல்லை தேவி இல்லை. இது ஆனந்தக் கண்ணீர்!” என்று பதிலளிக்கிறான் இராஜாதிராஜன். அவன் கையை அன்புடன் மெல்ல அழுத்துகிறாள் அவள்.
* * *
ஜெயங்கொண்ட சோழபுரம்
காளயுக்தி, சித்திரை 28 - மே 13, 1018
கைதியாக இழுத்து வரப்படுகிறான் இலங்கை மன்னன் மகிந்தன். கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகச் சிறையில் அடைக்கப் பட்டிருந்ததால் பொலிவிழந்து காணப்படுகிறான். மணிமகுடமும், அரசனுக்குரிய அணிகலன்கள் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரணக் கைதியாகவே சங்கிலியால் பிணைக்கப்பட்டு நிற்கிறான்.
அரசவையில் இராஜேந்திரன் தனது அமைச்சர்கள், மற்ற முக்கிய அதிகாரிகளுடன் கொலு வீற்றிருக்கிறான். மகிந்தன் வந்து நின்றதும் அரசவையில் ஒருவிதமான அமைதி நிலவுகிறது.
அரசு அதிகாரி ஒருவன் உரத்த குரலில் அறிவிக்கிறான், “சோழநாட்டின் அமைதிக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், வணிக நாவாய்கள் எழுபத்தைந்தை வழிமறித்துக் கொள்ளையடித்து, அவற்றை முழுகடித்ததற்காகவும், சோழ நாட்டின் நிழலில் கப்பம் கட்டி வாழும் பாண்டியருக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களது பரம்பரைச் சொத்தைப் பாதுகாத்து வந்து அவர்களைச் சோழர்களுக்கு எதிராகச் செயல்படத் தூண்டியதற்காகவும், இலங்கைவாழ் தமிழர்களைத் தேவையின்றித் துன்புறுத்தியதற்காகவும், அவர்கள் சொத்துகளைச் சூரையாடியதற்காகவும், சோழநாட்டுத் துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு கோப்பரகேசரி இராஜேந்திர சோழதேவர் முன் இலங்கை மன்னர் மகிந்தர் நிறுத்தப்பட்டிருக்கிறார்!”
கையை உயர்த்தி அவையில் எழும் ஆரவாரத்தைக் கட்டுக்குள் கொணர்கிறான் இராஜேந்திரன்.
“சோழநாட்டுத் தரப்பில் வாதாட திருமந்திர ஓலைநாயகத்தை அழைக்கிறோம்!” என்று அறிவித்த இராஜேந்திரன், “மகிந்தரே, உமது தரப்பில் வாதாட யாராவது இருக்கிறீர்களா?” என்று வினவவும் செய்கிறான். அதை அவனுக்குச் சிங்களத்தில் மொழிபெயர்த்துச் சொல்கிறார் ஒரு சோழ மொழிபெயர்ப்பாளர்.
இல்லை என்று தலையாட்டுகிறான் மகிந்தன்.
“யாராவது இலங்கை மன்னருக்காக வாதாட முன் வருகிறார்களா?” என்று அவையை வினவுகிறான் இராஜேந்திரன்.
அரசவையில் மரணஅமைதி நிலவுகிறது.
“இந்தச் சோழ அவையில் என்பக்கம் பேச யாராவது இருப்பார்களா? இது ஒரு நாடகம்தானே! என் நாட்டை வஞ்சகமாகக் கவர்ந்து கொண்டீர்கள். இப்பொழுது கண்ணீர் துடைப்பாக இந்த விசாரணையையும் நடத்துகிறீர்கள். செய்யுங்கள். ஆயிரம் ஆண்டுகள் கழித்தாவது இதற்கு நாங்கள் பழி தீர்த்துக் கொள்வோம்!” என்று சீறுகிறான் மகிந்தன். இதுவும் அரசவைக்கு தமிழில் மொழி பெயர்க்கப் படுகிறது.
இராஜேந்திரனின் முகத்தில் சீற்றம் தோன்றி மறைகிறது. பின்னர் கடகடவென்று நகைக்கிறான் அவன்.
“மன்னர் மகிந்தரே! கன்றுக் குட்டியைக் கொன்றதற்காகத் தன் மகனையே தேர் ஓட்டிக் கொன்ற மனுநீதிச் சோழன் வழிவந்தவர்கள் நாங்கள். நாங்கள் குற்றம் சாட்டியிருக்கிறோம். உம் சார்பாக வாதாட எவரும் முன்வராததால் நாமே ஒருவரை நியமிக்கிறோம். எமது வழித்தோன்றலும், சோழநாட்டு பட்டத்து இளவரசுமான இராஜாதிராஜனையே உம் தரப்பில் வாதாடுமாறு பணிக்கிறோம். இதன் மூலம் சோழநாட்டில் கண்துடைப்பாக எதையும் செய்ய மாட்டோம் என்று அறிந்து கொள்வீராக!” என்று இராஜேந்திரன் அறிவித்தும் அரசவையில் “ஆ!” என்ற உரத்த ஒலி எழுகிறது.
மகிந்தனே இராஜேந்திரனிடமிருந்து இப்படி ஒரு முடிவு வரும் என்று கனவிலகூட நினைக்கவில்லை. அவனுக்கு உள்ளூர ஒரு நம்பிக்கை பிறக்கிறது. அதேசமயம் ஒரு அவநம்பிக்கையும் தொடர்கிறது. பதினாயிரக்கணக்கான வீரர்களைக் களபலி கொடுத்த இராஜாதிராஜன் முழுமனதுடன் தன் பக்கம் எப்படி வாதாடுவான் என்றும் நினைத்துப் பார்க்கிறான். அவனுக்குத் தன்னைப் பற்றி என்ன தெரியும், யானைப் படைகொண்டு சிங்களப் படைவீரரைச் சிதறடித்த அவன் தன்னைப் பற்றி என்ன நல்வார்த்தைகள் கூறப் போகிறான் என்று சிந்திக்கிறான். இளவரசனே தன்பக்கம் வாதாடும் பொழுது திருமந்திர ஓலைநாயகத்தின் சொல் எப்படி எடுபடும் என்றும் எண்ணுகிறான்.
“அரசே, சோழ இளவரசனாக இருந்துகொண்டு சோழநாட்டிற்கு எதிராக என்னால் எப்படி வாதாட இயலும்? அப்படி நான் வாதாடுவது சோழநாட்டிற்கு நான் இழைக்கும் துரோகம் ஆகாதா? இப்படி ஒரு இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைமைக்கு என்னைத் தாங்கள் ஆளாக்குவது முறையா? என்னை இந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கலாகாதா?” என்று இராஜேந்திரனைப் பணிவாகக் கேட்டுக் கொள்கிறான்.
“ஒரு மன்னனாகப் போகிறவனுக்கு மற்றவர்களின் கண்ணோட்டத்தில் அணுகத் தெரிந்திருக்கவேண்டும்! அப்பொழுதுதான் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று முடிவெடுக்க இயலும். நீ மற்றவர்களின் கண்ணோட்டம் அறிந்தவன் என்பதை இந்த அரசவைக்குக் காட்ட இது உனக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. எனவே, சோழநாட்டைப் பிற்காலத்தில் நீ எப்படி நடத்திச் செல்லப் போகிறாய் என்பதை இது காட்டுமே தவிர, யாரும் உன்னை ஒரு நாட்டுத் துரோகியாகக் காண வைக்காது. எனவே நீ வாதாடு! வாதாடுவதும் ஒரு சொற்போர்தானே! நீ சோழ நாட்டுக்கு எதிராக வாதாட வேண்டியதில்லை! இலங்கை மன்னருக்காக வாதாட வேண்டும், அதுவும் முழு மனதுடன் வாதாட வேண்டும் என்று யாம் பணிக்கிறோம்!” இராஜேந்திரனின் குரலில் தனது முடிவு மாற்றிக் கொள்ளப்பட மாட்டாது என்ற உறுதி தொனிக்கிறது.
தனது அரியணையில் இருந்து வேண்டாவெறுப்புடன் எழுந்து, அருகிலிருக்கும் முக்காலியில் தனது மணிமுடியையும், உடைவாளையும் கழட்டி வைக்கிறான் இராஜாதிராஜன்.
“சோழநாட்டின் மணிமுடியை அணிந்து கொண்டு என்னால் இலங்கை மன்னர் தரப்பில் வாதாட இயலாது! எனவே இவ்வழக்கு முடிந்து கோப்பரகேசரியார் தீர்ப்பளிக்கும்வரை நான் மணிமுடி இல்லாமல் இருக்க அனுமதி வழங்கக் கோருகிறேன்!” என்று கேட்டதும், இராஜேந்திரன் தலையசைத்துத் தன் அனுமதியை வழங்குகிறான்.
இராஜாதிராஜன் மெல்ல மகிந்தன் அருகில் சென்று இராஜேந்திரனை நோக்கி அறிவிக்கிறான்.
“அரசே! முதலாக இலங்கை மன்னர் சார்பில் நான் தங்களுக்கு விடுவிக்கும் கோரிக்கை இதுதான்! மகிந்தர் ஒரு அரசர். என்னதான் குற்றம் சாட்டப் பட்டிருந்தாலும் தீர்ப்பளிக்கும் வரை அவரை நாம் ஒரு அரசராகத்தான் நடத்த வேண்டும். அவர் அமர்ந்துகொள்ள ஒரு இருக்கையை அளிக்குமாறும், அவரைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்க்குமாறும் வேண்டிக் கொள்கிறேன். அவர் மீது குற்றம்தான் சாட்டப் பட்டிருக்கிறதே தவிர, அவர் குற்றவாளி என்று இதுவரை தீர்ப்பு அளிக்கப் பட்டிருக்கவில்லை!”
அதிர்ந்து போகிறான் மகிந்தன். எடுத்த எடுப்பிலேயே தான் செய்யப் போகும் வேலையைச் சரியாகச் செய்யப் போவதை அவனுக்கு உணர்த்தி விட்டானே அவன்! நம்பிக்கை துளிர்விடுகிறது அவனுக்கு.
“ஓலைநாயகத்திற்கு இதில் மறுப்பு ஏதாவது இருக்கிறதா?” என்று வினவுகிறான் இராஜேந்திரன்.
இல்லையெனத் தலையசைக்கிறான் சிவாச்சாரி. இராஜேந்திரன் கையசைக்கவே, ஒரு இருக்கை கொண்டு வரப்படுகிறது. மகிந்தன் அருகே இருந்த காவலன் ஒருவன் அவனைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து எடுக்கிறான்.
இருக்கையில் கால் மேல் கால்போட்டு அமர்ந்து கொண்ட அவனை நோக்கி, “நீர் இலங்கை மன்னர்தான்! இருந்தாலும் கோப்பரகேசரியார் முன்னர் இப்படி அமர யாருக்கும் அனுமதி இல்லை! இருகால்களையும் தொங்கவிட்டு அமர்ந்து கொல்லும்!” என்று உத்தரவிடும் தொனியில் எச்சரிக்கிறான் இராஜாதிராஜன்.
அவன் சொல்வதைப் புரிந்து கொண்ட மகிந்தன் சரியாக அமர்ந்து கொள்கிறான். அவன் தனக்காக வாதாடுவானே தவிர, வேறு எந்த சலுகையையும் தரமாட்டான் என்றும் அறிந்து கொள்கிறான்.
சிவாச்சாரி தன் இருக்கையை விட்டுக் கீழிறங்கி வருகிறான்.
“கோப்பரகேசரி அவர்களே! தாங்கள் அறியாததை நான் அரசவையில் கூறவரவில்லை. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை மன்னர் அவர் விருப்பப்படி ரோகணத்தை ஆண்டு வந்திருக்கிறார். நாம் அவரைத் தொந்தரவு செய்யாமல் இருந்து வந்திருக்கிறோம். சோழநாட்டின் அமைதியைக் குலைப்பதற்கென்றே இலங்கை மன்னர் நமக்குத் திரை செலுத்தி வந்த பாண்டிய மன்னரை நமக்கு எதிராகச் செயல்படுத்தி வந்திருக்கிறார். மேலும்...” என்று மகிந்தன் மீது ஒன்றொன்றாகக் குற்றங்களை அடுக்கிக் கொண்டே செல்கிறான்.
“இலங்கை மன்னர் தரப்பில் பேசப் போகும் சோழ இளவரசரே இதை நன்றாக அறிவார். இலங்கை மன்னர் பாண்டிய மன்னரின் பரம்பரைச் சொத்தை அங்கு வைத்திருக்க உதவி செய்திருக்கிறார். அங்கு இருந்து வந்த ஐயாயிரம் பாண்டிய வீரர்களுக்கு உண்ண உணவும், இருக்க இடமும் அளித்து சோழர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்திருக்கிறார். இதனால் சோழவீரர்கள் பத்தாயிரம் பேர்களுக்கு மேல் உயிரிழக்க நேரிட்டது.” கிட்டத்தட்ட ஒரு நாழிகைக்கும் மேலாக மகிந்தன் மேல் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகிறான் சிவாச்சாரி.[வளரும் ]
No comments:
Post a Comment