Tuesday, 28 October 2014

இ.தே.ஏ.5 :முதன் முதலாக ஒரு பெண்ணுக்கு எழுதிய கடிதம்

கர்னல் கணேசன் 
முதன் முதலாக ஒரு பெண்ணுக்கு எழுதிய கடிதம் 

முதன் முதல் காப்டன் கணேசன் தனக்கு வாழ்க்கைத் துணைவியாகப் போகும் பெண்ணுக்குக் கடிதமெழுதி யிருந்தார். அதன் விபரம் இப்படி இருந்தது.

“வாழ்க்கை என்ற பெரு வெளியில் என்னோடு இணைந்து இல்லறம் ஏற்க இருக்கும் பெண்ணே! திசை தெரியாத பரந்த வெளியில் நான் நின்று கொண்டிருக்கிறேன். கற்பனையானாலும் அதுதான் உண்மை என்பது போல் அகமதாபாத் என்ற ரயில்வே சந்திப்பிலிருந்து தான் இக்கடிதம் எழுதப்படுகிறது. இராணுவப் பணியை மிகவும் மனம் விரும்பி ஏற்றுக் கொண்டவன் நான். அதன் காரணமாக இன்று ராஜஸ்தான் எல்லைப்புறம் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன். குறிப்பிட்ட நாளில் பெரியோர்கள் நல்லாசியுடன் உன்னைத் துணைவியாக ஏற்க வந்துவிடுவேன் என நினைக்கிறேன். எனது தனி வாழ்க்கையில் கற்பனையாகவும் உண்மையாகவும் பல அடுக்கு மாளிகை நான் உருவாக்கியிருக்கிறேன். அந்த மாளிகையில் இணைந்து வாழ இனிதே வருக! என்று உன்னை வரவேற்கிறேன்.” .

                                                                                 

ராஜஸ்தான் போகும் வழியில் 


இப்படி ஏதோ எழுதி இருந்தார். அதைப் படித்த அந்த பெண் பயந்து போயிருக்க வேண்டும். என்ன இது! திருமணத்திற்கு நாலைந்து நாட்களுக்கு முன் மாப்பிள்ளை ராஜஸ்தான் போகிறேன் என்று எழுதி இருக்கிறாரே என்று நினைத்திருக்கலாம். உண்மையில் அப்படி நடக்கவில்லை. இராணுவத்தில் இதுபோன்ற அதிரடி வேலைகள் சர்வ சாதாரணம் என்று அவர்கள் குடும்பத்திலிருந்த உயர் இராணுவ அதிகாரி சொல்லி இருப்பார் போலும். அவர்கள் எந்தவித பயமும் இல்லாமல் 05 பிப்ரவரி 1974 அன்று மாப்பிள்ளை அழைப்புக்கு ஏற்பாடு செய்ய அங்கு வந்த நின்றார் காப்டன் கணேசன். இறைவனே முன்னின்று நடத்தியது போல் அவரது திருமணம் 06 பிப்ரவரி 1974 புதன் கிழமை - தை பூசத் திருநாளில் நடந்தேறியது.
                                                                             
கணேசன் தம்பதியர் 
“விளக்கறியா இருட்டறையில்” என்று படித்துக் கொண்டிருந்த கணேசனது வாழ்க்கையில் எளிய அகல் விளக்கொன்றை ஏற்றி வைக்க வந்தார் அந்த பெண். “இருளறியா ஒளி வெள்ளத்தில்..” என்பது போல் கணேசனது வாழ்க்கை திசைமாறியது.

பெண் குழந்தையாய் பிறந்து நடைபயில ஆரம்பித்த நாள் முதல் பல உபன்யாசங்களையும், புகழ்பெற்ற வைணவ ஆழ்வார்களின் கதைகளையும் கேட்டு வளர்ந்திருந்த திருமதி  கணேசனுக்கு திருமணம் என்ற புதிய பந்தம் எந்த பயத்தையும் அளிக்கவில்லை. 

மாயவனை மணம் செய்து கொள்வதாக தான் கண்ட கனவைத் தோழிகளுக்கு கூறும் வாரணமாயிரம் நாச்சியார் திருமொழி பாடலை பல ஆண்டுகளாக மனப்பாடமாக பிரார்த்தித்து வந்த அவர் தனது பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளை அந்த மாயவனே அனுப்பி வைத்த அவனது பிரதிநிதி என்று ஏற்றுக் கொண்டு கரடு முரடான இராணுவ வாழ்க்கை என்ற காட்டுப் பாதையில் மகிழ்வோடு நடக்க ஆரம்பித்தார். அவர்களது இல்லறம் என்ற இனிய தேர் சலனமின்றி ஓடியது.

வாரணமாயிரம் சூழ வலஞ்செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி! நான்.
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப்பந்தற் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பார் ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழி! நான்.
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்
வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக் கோடியுடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழி! நான்.
நால்திசைத் தீர்த்தங் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாலெரடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடென் தன்னை
காப்பு நான் கட்டக் கனாக்கண்டேன் தோழி! நான்
கதிரொளி தீபம் கலசமுடனேந்தி
சதிரிள மங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்
அதிர புகுதக் கனாக்கண்டேன் தோழி! நான்.
மத்தளங் கொட்ட வரிசங்கம் நின்றாத
முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழி! நான்.
வாய் நல்லார் நல்மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து
காய்சின மாகளிறன்னான் என் கைபற்றி
தீ வலஞ்செய்யக் கனாக்கண்டேன் தோழி! நான்.
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழி! நான்.
வரிசிலை வாள்முகத்து என்னை மார்தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைமெலென் கை வைத்து
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழி! நான்
குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலஞ்சசெய்து மணநீர்
அங்கு அவனோடு உடன் சென்று அங்கானைமேல்
மஞ்சனமாட்டக் கனாக்கண்டேன் தோழி! நான்.

திருமணமான சில நாட்களுக்குள் “மேஜர்” என்ற தனது அடுத்த பதவி உயர்வை பெற்றார் கணேசன். இராணுவத்தில் சாதாரணமாக ஒரு அதிகாரி பெறமுடியாத சில அற்புதமான அனுபவங்களைப் பெற்றார். ஐந்து வருட இடைவெளியில் இரு ஆண்மக்களை ஈன்றெடுத்தார் திருமதி கணேசன். 

கணேசனோ  இராணுவப் பயிற்சி அதிகாரி, இராணுவப் பொறியியற் கல்லூரியில் உதவிப் பேராசிரியர், படைப்பிரிவு தலைவர் போன்ற பதவிகளை வகித்து இந்தப் புண்ணிய பாரதத்தின் தென்துருவ ஆய்வு தளமான தக்ஷிண் கங்கோத்ரியின் தலைவனாக நியமிக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் அந்த உறைபனிக்  கண்டத்தில் பணியாற்றினார்.

அந்த அனுபவங்களை அவர் ஒரு நூலாக எழுதினார். அந்த நூலில் அவரது பனிக்கண்ட பணி அனுபவங்கள் பற்றி பார்க்கலாம். இராணுவ அதிகாரிகள் எப்படித் தங்கள் முன் வரும் பிரச்சினைகளை அணுகுகிறார்கள் எப்படித் தீர்வு காண்கிறார்கள் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழும் அந்த கட்டுரைகள்.

No comments:

Post a Comment