Sunday, 19 October 2014

ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய வைபவம் :பொய்கையாழ்வார்


ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய வைபவம் 

































  தாரிணி பதிப்பகத்தினரால்  வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் பாச்சுடர் திரு.வளவ. துரையன் அவர்கள்  அமைத்துள்ள வைப்புமுறை முக்கியமானது.
பன்னிரண்டு ஆழ்வார்களின் பெருமையை முதலில் அமைத்து 

1பொய்கையாழ்வார்
2பூதத்தாழ்வார்
3பேயாழ்வார்
4திருமழிசை ஆழ்வார்
5நம்மாழ்வார்
6மதுரகவி ஆழ்வார்
7குலசேகராழ்வார்
8பெரியாழ்வார்
9சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
10தொண்டரடிப் பொடி ஆழ்வார்
11திருப்பாணாழ்வார்
12திருமங்கையாழ்வார்

பின்னர் மகாபுருஷர்களான 
13மணக்கால் நம்பி
14நஞ்சீயர்
15ஸ்ரீமத் மணவாள மாமுனிகள்
16அன்னமாச்சார்யா
17பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் 
ஆகியோர் பற்றிய சிறப்புச் செய்திகளை அமைத்துச் செல்வது பாகவதோத்தமர்களுக்கும் பக்தர்களுக்கும் உவப்பானதுமாகும் 

அதன்படியே அவரது நூல் பொய்கையாழ்வார் வைபவத்திலிருந்து  தொடங்குகிறது 

                                                     பொய்கையாழ்வார்
நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று காஞ்சி மாநகரம் காளிதாசரால் சிறப்பிக்கப்படுகிறது. தொண்டை நாட்டின் தலைநகராகக் காஞ்சிபுரம் விளங்கி வந்துள்ளது. இம்மண்ணுலகில் உள்ள நாடுகள் எல்லாம் வயல்கள் என்றும், அவ்வயல்களில் விளைந்த கரும்பே தொண்டை நாடு என்றும், தொண்டை நாட்டின் நகரங்கள் யாவும் அக்கரும்பினது சாறு என்றும், அச்சாற்றைக் காய்ச்சி எடுக்கப்பட்ட கற்கண்டே காஞ்சி மாநகரம் என்றும் ஒரு தமிழ்ப்புலவர் எடுத்துரைக்கிறார். இன்றைக்கும் பல்வகையான சைவ வணவ ஆலயங்களைத் தன்னகத்தே கொண்டதாய் அந்நகரம் பொலிவுடன் விளங்குகிறது.
                                                              
ஆழ்வார் பெருமக்களில் முதலாழ்வாராகக் கருதப்படும், பொய்கையாழ்வார் காஞ்சிபுரம் எனும் புகழ்பெற்ற இத்திருத்தலத்தில்தான் அவதரித்தார். துவாபரயுகத்தில் 8,62,901 சித்தாத்திரி ஆண்டு ஐப்பசித் திங்கள் வளர்பிறையில், செவ்வாய்க் கிழமை, அஷ்டமி திதியில், திருவோண நட்சத்திரத்தில் அவர் தோன்றினார் என்பர். மேலும் திருமாலின் ஐந்து படைகளில் ஒன்றாய் விளங்கித் தோன்றும் பாஞ்ச சன்னியம் என்று கூறப்படும் திருச்சங்கின் அம்சமாக இவர் தோன்றினார் என்பர்.
                                                                       

காஞ்சிபுரத்தில் திருவெஃகா எனும் இடத்தில் உள்ள ஒரு பொய்கையில் பூத்திருந்த பொற்றாமரை மலரில் பொய்கையார் எழுந்தருளினார். பொய்கையில் தோன்றிய காரணத்தினால் இவருக்குப் பொய்கையார் எனும் திருநாமம் வழங்கலாயிற்று.

எம்பெருமானாகிய திருமாலிடத்தே அன்பு வைத்து, ஆழ்ந்த பற்று கொண்டு பல பாசுரங்களை இவர் அருளிச் செய்தார்.
திருவரங்கம், திருவிண்ணகரம், திருக்கோவிலூர், திருவெஃகா, திருவேங்கடம், திருப்பாற்கடல், பரமபதம் ஆகிய திருத்தலங்களை இவர் போற்றிப் பாடியுள்ளார்.

எனது கை திருமாலைத் தவிர பிறரைத் தொழாது. இவ்வுலக மாந்தர் எம்பெருமானைத் தவிர பிறரைத் தொழார். இறைவனைக் காணாத கண்ணும், அவர்தம் புகழைக் கேட்காதசெவியும், பார்வையற்ற கண்ணாகவும், கேட்கும் திறனற்ற செவியாகவும் கருதப்படும் என்று அவர் பாடுகிறார். இதோ அவர் பாடல்
“வாயவனை அல்லது வாழ்த்தாது கைஉலகம்
தாயவனை அல்லது தாம்தொழா - பேய் முலைநஞ் (சு)
ஊணாக உண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாகண் கேளா செவி”
மேலும் திருமாலின் அருங்குணங்களையும் அருளிச் செய்த பல செயல்களையும் இவர் பாடலில் காணலாம். திருமாலைப் புகழ்ந்து வணங்காதோர்க்கு வீட்டின்பம் இல்லை என்று இவர் பாடுகிறார்.
இவரது சமகாலத்தவரான பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோருடன் இறைவன் திருவருளால் இவர் திருக்கோவிலூரில் கூட்டுவிக்கப்பட்டார். அப்போது இம்முதலாழ்வார் மூவரும் ஞானக் கண்களால் இறைவன் திருமேனியைக் கண்டு வணங்கினார்கள்.
                                                                     
பொய்கையாழ்வார் இவ்வுலகமே அகலாகவும் கடலே நெய்யாகவும் கொண்டு அதில் சூரியனையே விளக்காகவும் கொண்டு விளங்கும் திருமாலுக்குப் பாமாலை சூட்டுவதாக முதல் திருவந்தாதியைப் பாடினார்.
அந்நூலானது

“வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று”

எனத் தொடங்கி திருமாலின் பெருமைகளைப் பாடுகின்றது. இப்பிறவியின் பயனே திருமாலைத் தொழுது போற்றிப் பாடுவதுதான் என்று வாழ்ந்த பொய்கையாழ்வார் என்றும் அடியார் பெருமக்களால் துதிக்கப்படுகிறார்.

பிற ஆழ்வார் பெருமக்களைப் போல் அல்லாமல் மானிடத் தாயின் கருப்பத்தில் தோன்றாது பொய்கைத் தாமரையில் தோன்றிய பெருமை உடையவர் பொய்கையாழ்வார்.

இவரை “இப்புவியும் பேசுபுகழ் பொய்கையார்” என்று உபதேச ரத்தின மாலையின் ஆறாம் பாடல் கூறுகிறது.

பொய்கையாழ்வாரைக் “கவிஞர் பேரேறு” என்று போற்றும் முதலியாண்டான் அவர்தம் பாசுரங்களை “அருந்தமிழ் நூற்றந்தாதி” என்று முதல் திருவந்தாதித் தனியனில் புகழ்கிறார்.

வேதாந்த தேசிகரும் பொய்கையாழ்வாரின் பாசுரங்களை “திருவிளக்காம் எனும் வையந்தகளி நூறும்” என்று தேசிகப் பிரபந்தத்தில் புகழ்கிறார்.

மேலும் “வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கைப் பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றத் திரித்து அன்று எரித்த திருவிளக்கு” என்று இராமானுச நூற்றந்தாதியில் திருவரங்கத்து அமுதனார் போற்றுவதிலிருந்தே பொய்கையாரின் பெருமையை நாம் அறிந்து மகிழலாம்.[வளரும்]
 

No comments:

Post a Comment