[Warning:As this novel is simultaneously published as printed book in Tamil and English it is under copyright act .Any violation has to be considered seriously under legal proceedings ]
அத்தியாயம் 1
ஷிஃபாலியின் குடியிருப்பு, ஷெனாய்
பிரஜோற்பத்தி, ஆனி 20 - ஜூலை 4, 2411
(கவனிக்கவும். காலம் எதிர்காலத்தில்)
மெல்லத் தமிழினிச் சாகும், அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்
என்றந்தப் பேதை உரைத்தாள், ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
- அமரகவி சுப்பிரமணிய பாரதியார்
“நிமிஷா, ஹெச்பி கோ கம் கர்க்கே ஸீ. மேக்ஸ் ஜ்யாதா கட்பட்! (ஹெச்பியை மெதுவாக வைத்துப் பார். நிறையச் சத்தம் போடுது!)” என்று இந்தியும் ஆங்கிலமும் கலந்த மொழியில் தன் மகளைப் பார்த்து இரைகிறாள் ஷிபாலி.
கூப்பிடும் அன்னையின் குரலைக் கேட்கவே முடியாமல் நிமிஷாவின் கவனம் எங்கோ இருக்கிறது. தரையில் ஒளிரும் பலவண்ணக் கட்டங்களில் உடலை நெளித்து நெளித்து நடனமாடிக் கொண்டிருக்கிறாள்.
“நிம்ஸ்” என்று செல்லமாக அழைப்பதை விட்டுவிட்டு “நிமிஷா” என்று கோபத்துடன் கூப்பிடுவதைக்கூட அவள் காதில் வாங்கவில்லை.
பதினாறே வயது இருந்தாலும் வயதை மீறிய செழிப்பு அவள் உடம்பில் இருக்கிறது. முகத்தில் பாதியை மறைத்தவாறு ஒரு பெரிய கருப்புக் கண்ணாடி - காதுகளைச் சுற்றி மூடிக்கொண்டிருக்கிறது. அந்த ஹாலில் டிவி எதுவும் தென்படவில்லை. இசையும் கேட்கவில்லை. ஆனால் எங்கிருந்தோ பூம், பூம் என்ற அதிர்வு மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. சற்று உற்றுக் கவனித்தால் அந்தக் கண்ணாடிகூட ஒளி ஊடுருவ முடியாத மறைப்பாகத்தான் இருக்கிறது. பின் எப்படி அவள் கொஞ்சம் கூடத் தடுமாறாமல் ஆடிக் கொண்டிருக்கிறாள்?
அவள் மாட்டிக் கொண்டிருக்கும் கண்ணாடிதான் அவளது தனிப்பட்ட டி.வி. ஹெச்பி அல்லது ஹோலோக்ராஃபிக் ப்ரொஜெக்டர் என்னும் முப்பரிமாணக் கருவியின் மூலம் நேரில் பார்ப்பதுபோல முப்பரிமாண நிகழ்ச்சிகளை அவளால் பார்த்து உணர முடிகிறது. காதைச் சுற்றி வளைத்திருக்கும் அமைப்பு, நிகழ்ச்சிகளின் ஒலி அலைகளை அவளுக்கு உணரவைக்கிறது.
கிளப்புக்கே போகாமல் டிஸ்கோ நடனம் ஆடும் நிறைவை அந்தக் கருவியும், வண்ணக் கட்டங்களும் அவளுக்கு அளித்துக்கொண்டு இருக்கின்றன. சுவர்களிலும், கூரைகளிலும் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒலிபெருக்கிகள் - அலைபரப்பிகள் - அவள் காதில் அணிந்து இருக்கும் கேட்கும் கருவிக்கு டிஸ்கோ டிரம்களின் பேரிரைச்சலை, கீழ்வரிசை அலைகளை கனகச்சிதமாகத் தந்து கொண்டிருக்கின்றன. அந்த அதிர்வுதான் ஷிஃபாலிக்குத் தலைவலியைத் தருகிறது.
”நிம்ஸ் ஏ கைஸா? லிஸன். காம்ஸ் ஆனே டைம் கம். ஸ்டாப் யே ஷைத்தான்! (ஏன் இப்படி? கேள். காம்ஸ் வரும் நேரம். இந்த சைத்தானை நிறுத்து!)” என்ற செல்லமான முரட்டுத்தனத்துடன் நிமிஷாவின் ஹெச்பியை அவள் காதிலிருந்து கழட்டி அதிலிருந்த ஒரு பொத்தானை எரிச்சலுடன் அமுக்குகிறாள் ஷிஃபாலி.
உடனே நிமிஷா நடனமாடிக்கொண்டிருந்த வண்ணக் கட்டங்கள் அணைந்து போய் தரையின் டிசைனுக்கு மாறுகின்றன. அந்தக் கட்டங்கள் இருந்தனவா என்று வியக்கும் அளவுக்கு ஒரு தடயமுமே இல்லை. ஓடிக் கொண்டிருந்த வண்டி திடீரென்று நின்று போனால் எப்படிக் குலுங்கி விழுவார்களோ அப்படி நிலை தடுமாறுகிறாள் நிமிஷா.
“யே க்யோன் மா? (இது ஏன் அம்மா)” என்று ஷிஃபாலியை முறைக்கிறாள் நிமிஷா.
(இனி மொழிமாற்றம் செய்யாமல் எல்லாப் பேச்சுகளையும் தமிழிலேயே)
“தஞ்ஜு, மத்ராவிலிருக்கும் என் நண்பர்கள்கூட எவ்வளவு உற்சாகமா புது டிஸ்கோ ஆடிக்கிட்டிருந்தேன்? அவங்க என்னை எப்படி மிஸ் செய்வாங்க தெரியுமா? கெடுத்திட்டியே!” என்று குறைப்பட்டுக் கொள்கிறாள்.
“பள்ளிக்கூடம் லீவு விட்டா இப்படித்தான் டிஸ்கோ, டிஸ்கோன்னு கூத்தடிப்பாயா நிம்ஸ்? சீனாவிலேந்து தலைமை மானேஜர் வராரு. நான் ரெண்டு நாள் தஞ்ஜுவுக்குப் போகணும். அதுனால உனக்குத் துணையா காம்ஸ். இங்கே இருப்பா. உனக்குத் தேவையானதை அவ கவனிச்சுப்பா. அவளை ரொம்பப் படுத்தாதே! அரசாங்கத்து கிட்டே நான் கெஞ்சிக் கூத்தாடி அவளைத் தனிப்பட்ட முறையிலே வேலை செய்ய வச்சிருக்கறதுனாலதான் நினைச்ச போதிலெல்லாம் உன்னை நம்பிக்கையா இங்கே விட்டுட்டுப் போகமுடியுது.” என்று கனிந்த குரலில் கண்டிக்க முயல்கிறாள்.
காம்ஸ் என்றதும் முகத்தைச் சுளிக்கிறாள் நிமிஷா. “காம்ஸா அம்மா? அவளுக்கு நான் பேசறது புரியாது, எனக்கு அவள் பேசறது புரியாது. எப்பவும் டிரான்ஸ்லேட்டரைக் (மொழிமாற்றுக்கருவி) காதில் மாட்டிக்கணும். சரியான காட்டுமிராண்டி. எப்பப் பார்த்தாலும் நான் பண்றதையே வெறிச்சு வெறிச்சுப் பாப்பா...”
“டிரான்ஸ்லேட்டரை உபயோகப்படுத்தறதுல என்ன கஷ்டம்? ஹெச்பியைவிட சுலபம்தானே! நானும் சைனாக்காரங்கட்ட பேசறதுக்கு அதைத்தானே உபயோகப் படுத்தறேன். யாரு இப்ப எல்லா பாஷையையும் கத்துக்குவாங்க?” மகனுக்குச் சமாதானம் சொல்கிறாள் ஷிஃபாலி.
“சும்மா சும்மா டிரான்ஸ்லேட்டரைக் காதில மாட்டிக்க ரொம்பக் கஷ்டமா இருக்கு. இந்தக் காம்ஸ் ஏன் நம்ம பாஷையைக் கத்துக்க மாட்டேங்கறா?” என்று அலுத்துக் கொள்கிறாள் நிமிஷா.
“நிம்ஸ்! நீ சரித்திரப் பாடத்தை மறந்துட்டியா? எடுபிடிகள் நம்ம பாஷையைக் கத்துக்கக் கூடாதுன்னு படிக்கலை?” என்று குரலை உயர்த்துகிறாள் ஷிபாலி.
“எதையும் சொல்ல விடமாட்டியே! பாடத்தை நான் மறக்கலை. நூத்தைம்பது வருஷத்துக்கு முன்னால டிரான்ஸ்லேட்டர்ஸ் வந்துட்டதுனால இந்தி தெரியாதவங்ககூட அதை வச்சே பேசிக்கலாம். எழுபத்தைஞ்சு வருஷத்துக்கு முன்னாலே எடுபிடிச் சட்டம் (Mடிணடிணிண ஃச்தீ) கொண்டு வந்தாங்க. வெறும் கூற்றுமொழி (ஞீடிச்டூஞுஞிt) மட்டுமே தெரிஞ்சவங்களை எடுபிடின்னு சொன்னாங்க. அவங்க நாம போற பள்ளிக்கூடத்துக்குப் போகக்கூடாது, அவங்களுக்கு யாரும் இந்தி கத்துக் கொடுக்கக்கூடாது. அவங்க உடல் உழைப்பு மட்டுமே செய்து பிழைப்பு நடத்தணும். அதுமட்டுமில்லை, அப்படி ஒரு சட்டமே வந்ததுகூட அவங்களுக்குத் தெரியாது. ஏன்னா அவங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவங்களுக்கு ஓட்டுரிமையும் கிடையாது. இதெல்லாம் எனக்குத் தெரியும்மா! தெரியும்மா!! ஒரு அலுப்பிலே சொன்னா, பிலுபிலுன்னு பிடிச்சுக்கறியே!”
காலிங் பெல் ஒலிக்கிறது. கதவில் “காம்ஸ்” என்று அவர்களால் அழைக்கப்பட்ட காமாட்சியின் நிழற்படம் தெரிகிறது.
காதில் மொழிமாற்றுக்கருவியை (ப்ளூடூத் போல இருக்கும் ஒரு குமிழான அமைப்பு) அணிந்து கொண்டு “கதவே திற!” என்று சுவற்றில் இருந்த ஒரு சதுரச் சல்லடை மாதிரி இருந்த அமைப்பைப் பார்த்துச் சொன்னாள் ஷிஃபாலி.
உடனே கதவு தானாகத் திறந்ததும் உள்ளே நுழைகிறாள் காமாட்சி. அவள்தான் அவர்களால் எடுபிடி என்று அழைக்கப்பட்டவள். நூறு வருடங்கள் முன்பு வரை தமிழ்நாடு என்று அழைக்கப்பட்ட “தக்கண்கண்ட்” மாநிலத்தில் தற்பொழுது “ஷெனாய்” என்னும் சென்னையில் வாழ்ந்து வரும் ஆயிரக் கணக்கான, தமிழ் மட்டுமே பேசும் எடுபிடிகளில் அவளும் ஒருத்தி.
நிமிஷாவைவிட இரண்டு வயதுதான் அவளுக்கு அதிகமாக இருக்கும். ஆனால் வயதை மீறிய ஒரு பொறுப்பு அவள் முகத்தில் தெரிகிறது. அவளுக்கும் நிமிஷாவுக்கும்தான் எத்தனை மாறுபாடு, நடை, உடை பாவனையில்? உடலை ஒட்டிய உடைகளை (சட்டை, பாண்ட்) நிமிஷா அணிந்திருந்தால், புடவை அணிந்திருக்கிறாள் காமாட்சி. கழுத்தை ஒட்டியபடி தலை மயிரை வெட்டிவிட்டு, புசுபுசுவென்று வானவில்லின் நிறங்களில் வரிவரியாக வண்ணம் தீட்டியிருக்கிறாள் நிமிஷா -
எண்ணெயிட்டு, இழுத்து வாரிப் பின்னிக் கொண்டு திலகமிட்டுக் கொண்டிருக்கிறாள் காமாட்சி. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது இருவருக்குள்ளும்.
அவர்களைப் பார்த்து வெள்ளை வெளேரென்ற பற்கள் தெரியப் புன்னகைத்த காமாட்சி, “வணக்கம் அம்மா!” என்று நல்ல தமிழில் சொல்கிறாள். அது மற்ற இருவரின் காதுகளிலும், “ப்ரணாம் மாஜி!” என்று இந்தியில் ஒலிக்கிறது. அவனும் காதில் ஒரு மொழிமாற்றுக்கருவி செருகியிருக்கிறான்.
“சரியான நேரத்துக்கு வந்துட்டே காம்ஸ். நீ ஒரு லைஃப் ஸேவர்! நான் தஞ்ஜுவுக்குக் கிளம்பிக்கிட்டிருக்கேன். திரும்பிவர ரெண்டு நாளாகும். நீ நிம்ஸுக்குத் துணையா இருக்கணும். இங்கேயே விருந்தாளி அறையிலே தங்கிக்கோ!” ஷிஃபாலியின் குரல் உத்தரவாகத்தான் இருக்கிறது.
“ரெண்டு நாளா?” காமாட்சியின் முகம் சுருங்குகிறது.
அதைக் கவனித்த ஷிஃபாலி, “ஆமாம். அதற்கு என்ன?” என்று அதட்டலாகக் கேட்கிறாள்.“என் தம்பிக்கு உடம்பு சரியா இல்லை. நான்தான் வீட்டுக்குத் திரும்பிப் போயி அவனைக் கவனிச்சுக்கணும். என் அப்பாவும் அம்மாவும் உங்க மாதிரிப் பெரிய மனுஷர் ஒருத்தர் வீட்டுக் குழந்தைகளைக் கவனிச்சுக்கறதுக்காக அங்கேயே தங்கி இருக்காங்க. என் தம்பியை நான்தான் கவனிச்சுக்கணும்” என்று தயக்கத்துடன் இழுத்து இழுத்துப் பதில் சொல்கிறாள் காமாட்சி. அவள் குரலில் பயமும் கலந்திருக்கிறது.“
அதற்காக நிம்ஸைத் தனியாக விட முடியுமா? நான் சொல்றதைக் கேக்கப் போறியா இல்லை, காப்பாளி ஆபிசரிடம் உன்னைப்பத்தி புகார் செய்யவா?” என்று பயமுறுத்துகிறாள் ஷிபாலி.
[தொடரும்]
இத் தொடரைப் படித்து விட்டு கருத்து எழுதும்
அன்பர்கள் ஒவ்வொருவருக்கும்
இந்தியாவில் வசிப்பவர் ஆயின் அஞ்சல் மூலம் அச்சுப்புத்தகம் ஒன்றும் வெளிநாட்டில் வசிப்பவர் ஆயின் அவர் கூறும் இந்திய முகவரிக்கு அச்சுப்புத்தகம் ஒன்றும் இந்த நாவலை வெளியிட இருக்கும் தாரிணி பதிப்பகம் இலவசமாக அனுப்பி வைக்கும் .விவரமான அஞ்சல் முகவரி அவசியம்
Please correct typos : எடுபிடிச் சட்டம் (Minion Law)
ReplyDeleteகூற்றுமொழி (Dialect)