தமிழ் இனி மெல்ல-1
அரிசோனா மகாதேவன்
பாகம் 1
பொது ஆண்டு 2411
அர்ப்பணம்
என் உடலில் ஓடும் குருதியிலும், என் உயிர் மூச்சிலும் இரண்டறக் கலந்திருக்கும் என் அன்னை தமிழுக்கு இந்த நாவலை அர்ப்பணிக்கிறேன்.
நன்றி
இந்த நாவல் உருவாகி வெளிவர எனக்கு உதவி செய்தவர்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.
1.இந்த நாவலின் கரு உருவாக எனக்கு உதவிய இந்தியப் பயணம்.
2.நாவலின் ஓரொரு அத்தியாயத்தையும் படித்து, என்னை ஊக்குவித்து எதைச் சேர்த்தால் நாவல் மெருகு பெரும் என்று உணர்த்தி, நான் சோர்ந்த பொழுது எனக்கு மேலும் எழுதத் துணிவு கொடுத்த எனது உடன் பிறப்புகள் இந்திரா பாலசுப்பிரமணியன். ஸ்ரீதரன், ராம், மற்றும் ராஜ் சுப்புரெத்தினம் அவர்கள் திருமதி அமுதா முகுந்தன் அவர்கள்.
3.வரலாற்றுப் புத்தகம் தந்து உதவிய பேராசிரியர் திரு. எஸ்.டி. ராஜன் அவர்கள்.
4.இந்த நாவல் எழுதும் பொது பொறுமை காத்த என் மனைவியார் திருமதி வசந்தி மகாதேவன் அவர்கள்.
5.பார்வைக் குறிப்பு எடுக்க உதவிய விக்கிபீடியா. கூகுள் மற்றும் பல இணைய தளங்கள்
6.இந்த நாவலை வெளியிட முன்வந்த தாரிணி பதிப்பக உரிமையாளர் உயர்திரு வையவன் அவர்கள்.
குறிப்பு இந்த நாவல் கற்பனைப் படைப்பே. வரலாற்று நாயகர்கள் இக் கதையில் இடம் பெற்றிருந்தாலும், நிகழ்ச்சிகள் கற்பனைதான். எவரின் மனத்தையும் புண்படுத்துவதில்லை.
[Warning:As this novel is simultaneously published as printed book in Tamil and English it is under copyright act .Any violation has to be considered seriously under legal proceedings ]
பாகம் 1
தமிழ் இனி மெல்ல...
தமிழன்னையுடன் பயணிப்போம்!
மொழி என்பது ஒருவர் தன்னை மற்றவருக்கு உணர்த்துவதற்கோ மற்றவருடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்கோ உதவும் ஊடகம் என்று வைத்துக் கொள்ளலாம். தாய்மொழி ஒருவரின் இரத்தத்திலும் விடும் மூச்சிலும் கலந்திருக்கிறது. எனவே, அது ஒருவர் தன்னை உணர்த்துவதற்கு முன் மதிக்கப்பட்டதாகும். ஒருவர் தனது அடையாளமாக உணர அதுவே வழி வகுக்கிறது. அது மிகவும் இயற்கையானதே. எனவே, அனைவரும் இந்த உலகே தன் தாய் மொழியில் பேசாதா என்றே ஏங்குகிறார்கள்.
ஆனால், அப்படி நடப்பதில்லை. இவ்வுலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் உள்ளன. அவற்றில் சில நன்றாக அறியப்படுபவை. குறிப்பாக, ஆங்கிலம் தன்னை விஞ்ஞானம், வணிகம் மற்றும் பல துறைகளுக்கும் ஊடகமாக ஆக்கிக்கொண்டு உலகமொழியாகவும் ஆகிவிட்டது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் தீவுகளில், இங்கிலாந்தில் மட்டுமே பேசப்பட்டு வந்த அம்மொழி. உலகமொழிக்கான அரியணையில் அமர்ந்தது வியப்புக்கு உரிய ஒன்றே ஆகும். அதனைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் 33.5 கோடிப்பேரே இருந்தாலும் உலகெங்கிலும் 150 கோடி மக்கள் அதனைப் பேசி வருகிறார்கள். அதற்கு அடுத்த உலகமொழியான ஸ்பானிஷ் 41 கோடி மக்களுக்குத் தாய் மொழியாக இருந்தாலும் உலகத்தில் 53 கோடிப்பேரே அதனை அறிந்திருக்கிறார்கள்.
சீன மொழி பேசுவோர் 85 கோடியாகவும் அதை அறிந்தவர்கள் 100 கோடியாக இருந்தாலும் அது ஆசியாவின் பல நாடுகளில் பேசப்படுவதால், ஒரு பகுதிக்கும் மேற்பட்ட மொழியாகத்தான் கருதப் படுகிறது. இந்த வகையில் ரஷியன், ஜெர்மன், போர்சுகீஸ், அரபிக், மலாய், இந்தி ஆகிய மொழிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இலத்தீனும், சமஸ்கிருதமும் எவருக்கும் தாய் மொழியாக இல்லாவிட்டாலும், சமயத் தொடர்பு உள்ளமையாலும், சிறந்த தொன்மை வாய்ந்த இலக்கியங்களை உள்ளடக்கியதாலும், அவை உலகறிந்த மொழிகளாகத் திகழுகின்றன. இவற்றின் தொன்மையாலும், இலக்கியச் சிறப்பினாலும், சமய நூல்கள் இவற்றின் துணை கொண்டு எழுதப்பட்டு இருப்பதாலும், உலகத்தில் பலர் இவ்விரண்டு மொழிகளுக்கும் உயிர்கொடுத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
உலக மொழிகளின் வரலாற்றில் பல மொழிக்ள அழிந்து வருவதை நாம் பார்க்கிறோம். பல புது மொழிகள் அவற்றின் இடத்தைப் பிடித்துக் கொள்வதால், அவை தங்களைப் பேசி வருபவர்களை இழந்து விடுகின்றன. இந்தக் கணக்கில் எழுத்து வடிவம் இல்லாத கூற்று மொழிக்ள எடுத்துக் கொள்ளப் படவில்லை.
இருந்தபோதிலும், பேச்சொழிந்த ஹீப்ரு மொழி தங்களுக்கு ஒரு அடையாளம் வேண்டும் என்று விரும்பிய யூதர்களால், உயிர்ப்பிக்கப்பட்டு இஸ்ரேலின் மொழியாகத் திகழ்ந்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
வேறுபல கோணங்களில் இருந்து பார்க்கும்போது, கீழ்க்கண்ட காரணங்களால் ஒரு மொழி உலக மொழியாகவோ, ஒரு பகுதிக்கும் மேற்பட்ட மொழியாகவோ, இலக்கிய மொழியாகவோ, உயிர்பெற்ற மொழியாகவோ இருப்பதற்கான காரணங்கள் என்ன?
1. ஒரு மொழி வணிகத்தாலோ, இராணுவ ஆதிக்கத்தாலோ பரப்பப் பட்டு உலகமொழி ஆகிறது. (ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு)
2. ஒரு நாட்டில் மட்டுமில்லாது பல பகுதிகளில் பேசப்படுவதால் ஒரு பகுதிக்கும் மேற்பட்ட மொழி என்ற தகுதியைப் பொறுகிறது. (இந்தி, ஜெர்மன் முதலானவை)
3. பேசுபவர் அற்றிருந்தாலும் இலக்கியச் செழிப்பினாலும், சமயம் சார்ந்த நூல்கள் இருப்பதாலும் அம்மொழி கற்கப்படுகிறது. (இலத்தீன், சமஸ்கிரும்.
4. அடையாளச் சின்னமாகவும், கவுரவத்திற்காகவும் ஒரு மொழி உயிர்ப்பிக்கப்படுகிறது (ஹீப்ரு)
இந்தியா பல மொழிகளுக்கும், நூற்றுக்கணக்கான கூற்றுமொழிகளுக்கும் தாயகமாக விளங்கி வருகிறது. அந்த மொழிகளில் பல ஐரோப்பிய மொழிகளைக்காட்டிலும் அதிகமானவர்களால் பேசப்பட்டாலும், அவை இந்தியாவில் மட்டுமே வழங்கி வருதலால் ஒரு பகுதிக்கு மேற்பட்ட மொழிக்கான தகுதியை அடையவில்லை.
இந்திய மொழிகளில் இந்தியும், தமிழும் மட்டுமே அத் தகுதியைப் பெறுகின்றன.
தமிழ் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொழிஷியஸ் நாடுகளில் பலரால் தாய் மொழியாகப் பேசப்படுகிறது. ஆறு கோடியே எண்பது இலட்சம் பேர்களுக்குத் தாய்மொழியாகவும், மொத்தம் எட்டு கோடி மக்களால் அறியப்பட்ட மொழியாகவும், உலக அங்கீகாரம் பெற்றுத் திகழும் மொழியாகவும் இருக்கிறது. தமிழை அறிந்தவர்கள் ஜெர்மன் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இணையாகவும் இத்தாலிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கும் அதிகமாகவும் இருக்கிறார்கள்.
சமஸ்கிருதம், இந்தி உள்பட பல இந்திய மொழிகளும், மற்றும் ஐரோப்பிய மொழிகள் அனைத்தும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளாகக் கருதப்பட்டாலும் தமிழ் மொழி மரத்தின் வேறு கிளையான திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியாகக் கருதப்படுகிறது.
உலகத்திலேயே பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து பேசப்பட்டு வரும் மொழிகளில் ஒன்றான மொழி தமிழ். அதன் தனித் தன்மைக்காகவும், இலக்கிய மேன்மைக்காகவும், இந்திய அரசு இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகத் தமிழை, “செம்மொழி”யாக அறிவித்துச் சிறப்பித்திருக்கிறது. அதை எந்த மொழியின் உதவி இன்றிப் பேச இயலும். அதற்கென்று தனியான இலக்கணம் உள்ளது. அதன் இலக்கியச் செறிவுக்கு அளவே இல்லை.
பண்டைத் தமிழ் மன்னர்கள் தென்னிந்தியர் மட்டுமன்றி, இலங்கை அந்தமான் நிக்கோபார் மற்றும் இலட்சத் தீவுகள் இவற்றை ஆட்சி செய்து வந்தார்கள். இன்றைய இந்தியக் கடற்படை உருவாகும் வரை பேரரசன் இராஜேந்திரனது கடற்படையையே இந்தியாவிலேயே பெரிய கடற்படையாக விளங்கி வந்தது. அவனது செல்வாக்கு இந்தியாவின் ஒரிசா, வங்காள மாநிலங்கள் மட்டுமன்றி மலேய தீபகற்பம் சுமத்ராவிலும் பரவி இருந்தது. பண்டைத் தமிழ் மன்னர்கள் காலத்தில் சீனாவுடன் தமிழர்கள் வர்த்தகம் செய்து வந்தனர். சமீபத்தில் சீனாவிலும், இந்தோனேசியாவிலும் தமிழர்கள் கட்டிய கோவில்கள் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டன சீனாவில் இருக்கும் கோவிலில் தமிழ் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன.
உரோமானிய கிரேக்க அராபிய வணிகர்கள் தங்களது நாவாய்களை கொற்கை, தொண்டி, முசிறி, காவிரிப்பூம்பட்டினம் போன்ற துறைமுகங்களுக்கு அனுப்பி வணிகத்தைப் பெருக்கி வந்தனர். புகழ் பெற்ற பயணிகள் மெகஸ்தனிஸ், ஹுவான் சுவாங், பா ஹியென், மார்க்கோ போலோ முதலானோர் தமிழ் நாட்டைப் பற்றியும், அதன் செழிப்பைப் பற்றியும், தமிழ் மக்களைப் பற்றியும் எழுதினர்.
ஆயினும் தமிழ் மன்னர்களின் ஆட்சி பதினான்காம் நூற்றாண்டில் முடிவை எய்தியது. அதற்குப் பிறகு தமிழ் மன்னர்கள் தன்னாட்சி செய்யவில்லை.
தற்காலத்தில் வேலைவாய்ப்பு கருதியும், எளிதாக மதிப்பெண்கள் பெறுவதற்காகவும் தமிழ்க்கல்வி பின்னுக்குத் தள்ளப்படும் நிலை கண்டு பல தமிழறிஞர்களும் கவலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் புதினம் தமிழ்க் கல்வி நலிவினால் ஏற்படப்போகும் விளைவு பற்றியும் பண்டைக்கால மன்னர்களின் பொற்காலம் பற்றியும், எப்படிப்பட்ட சூழ்நிலைகள் அவர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளிவைத்தன என்பது பற்றியும் சுற்றிச் சுழல்கிறது.
இந்த நாவலுக்கு உருக்கொடுப்பதற்கு வரலாற்று நாயகர்களையும், வரலாறு நிகழ்ச்சிகளையும் துணை கொண்டிருக்கிறேன். இந்த நாவலின் கதாநாயகி தமிழ் அன்னைதான். மற்ற மனிதர்கள் அல்ல. இந்த நாவலை வடிக்கும்போது நாயகன்நாயகியை மட்டும் மையமாகக் கொண்டு அவர்களின் பார்வையில் புதினத்தின் நோக்கை நடத்தாமல், பாத்திரங்கள் அனைவரின் பார்வையிலிருந்தும் அவர்கள் மன ஓட்டங்களின் கோணங்களிலிருந்தும் எழுதி இருக்கிறேன்.
தமிழ்க் கல்வி நலிவு தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழின் தமிழர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்ற அச்சம் நாவலின் தொடக்கமாக வரையப்பட்டிருக்கிறது. அப்படியே பண்டைய தமிழ் மன்னர்கள் தமிழின் முன்னேற்றத்திற்கு எப்படி பாடு பட்டார்கள்? ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நின்று அவர்களின் புகழைப் பறைசாற்றும் அளவுக்கு கட்டப்பட்ட தமிழரின் கலை நுணுக்கம் நிறைந்த நினைவுச் சின்னங்களை எழுப்பி விரிந்து பரந்த பேரரசைக் கட்டி ஆண்ட அவர்கள், எதனால் மறைந்து போனார்கள். அவர்கள் நிறுவிய பேரரசுகள் ஏன் வெடித்துச் சிதறின என்றும் இப்புதினம் படம்பிடித்துக் காட்டுகிறது.
இந்த நாவல் தமிழன்னை நடந்து வந்த அடிச்சுவடுகளைப் பின்பற்றி பண்டைத் தமிழர்களின் பொற்காலத்திற்கும் இப்படிப்பட்ட தமிழ்கல்வி நலிவு நீடித்தால் அவள் நம்மை எப்படிப்பட்ட எதிர்காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடும் என்ற கற்பனைப் பயணத்திற்கும் அவளுடன் சேரந்த பயணிக்கிறது. தமிழன்னையின் எதிர்காலப் பயணத்திற்கும் அவளுடைய பழைய பொற்காலத்திற்கும் என்னுடன் சேர்ந்து பயணிக்குமாறு வாசகர்களைப் பணிவன்புடன் அழைக்கிறேன்.
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!!
(மீண்டும் சந்திப்போம் )
Congrats good work of Dave Mahadevan
ReplyDeleteDear Anna, It was our privilege to read your Kaviyachelvam before other readers. I hope and believe, every reader enjoys the journey as we did.
ReplyDeleteCongrats and all the very best. We are all very proud. Our sincere thanks to Vaiyavan (Sri. M.S.P.Murukesan) to make your dream come true...Ram Subbarethinam
Good work Anna, and our sincere thanks to Vaiyavan. Very soon you will get the Sahitya Akademi Main Award.
ReplyDeleteRaj subbarethinam
இந்த முகவுரையில் ஒரு சிறிய பிழை இருக்கிறது. தமிழ் "மொத்தம் எண்பது கோடி மக்களால் அறியப்பட்ட மொழியாகவும்," என்பதை "மொத்தம் எட்டுக் கோடி மக்களால் அறியப்பட்ட மொழியாகவும்," என்று திருத்திப் படித்துக் கொள்ளவும். திரு வையவன் அவர்களே, வலை ஏற்றத்தில் திருத்திவிடுமாறு கோருகிறேன். வணக்கம். அரிசோனா மகாதேவன்
ReplyDeleteThe way in which every single character was brought to life was really good. Your penmanship and passion for Tamil language is an inspiration
ReplyDeleteஅன்புள்ள மகாதேவன்..
ReplyDeleteவணக்கம். முதலில் இத்தொடருக்கு என்னை ஆற்றுப்படுத்திய மதிப்பிற்குரிய வையவன் அய்யா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். நாவலுக்கான முன்னுரையே செறிவாகவும் அலுப்பின்றியும் ஆழமாகவும் மிகுந்த அக்கறையிலான கவலையோடும் தொடங்கப்பட்டிருக்கிறது. எனவேதான் தமிழ்ப் பேராசிரியன் என்கிற நிலையில் இதனைக் கவனத்தோடு வாசிக்கத் தொடங்கி ஒவ்வொரு அத்தியாயத்திலும் என்னுடைய கருத்துக்களைப் பதிவிட எண்ணியிருககிறேன். வாழ்த்துக்கள். தொடர்ந்து வாசிப்பேன்.
இதன் முதல் பத்தியின் கடைசி வரியில் இந்த உலகமே தன் தாய்மொழியில் பேசாதா என்று ஏங்குகிறார்கள் என்பது மிகவும் வசீகரித்தது.