Saturday, 21 June 2014

“கமான் காம்ஸ், டான்ஸ் ஆடி ஆடி எனக்குப் பசி ஜாஸ்தி"-4

அன்பர்கள் ஒவ்வொருவருக்கும் 

ந்தியாவில் வசிப்பவர் ஆயின் அஞ்சல்  மூலம் அச்சுப்புத்தகம் ஒன்றும் வெளிநாட்டில் வசிப்பவர் ஆயின் அவர் கூறும் இந்திய முகவரிக்கு அச்சுப்புத்தகம் ஒன்றும் இந்த நாவலை வெளியிட  இருக்கும் தாரிணி பதிப்பகம் இலவசமாக அனுப்பி வைக்கும் .விவரமான அஞ்சல் முகவரி அவசியம் என்று நாம் முன் பதிவில் அறிவித்திருந்ததை நினைவூட்டுகிறோம் 
தற்போது கடல் கடந்து வசிப்பவர் எவராயினும் அவருக்கு ஒரு மின்னூல் அனுப்பும் திட்டம் அமுலுக்கு வருகிறது. தாங்கள் செய்ய வேண்டியது ஒன்றே. இந்தப் பதிவைப் படித்தேன். பிடித்தது. பிடிக்கவில்லை.ஒரே ஒரு சொல் போதும்.  அதுவும் இயலவில்லையா? உங்கள் ஈமெயில் முகவரி மட்டும் பொத்தும்./ஒரு நூல் உங்களைத் தேடிவரும்.
சென்ற பதிவு பற்றி  C.R.Rajashree has left a new comment on your post "தமிழ் இனி மெல்ல...": Congrats good work of Dave Mahadevan  என்றுஒரு பாராட்டு அனுப்பிய  அவர்களுக்கு நன்றி அவர்கள் தமது முகவரியைத் தரவில்லை. இந்தப் பதிவை அவர்கள்  கண்டால் அன்புகூர்ந்து தம் முகவரி வழங்கி எங்கள் வாக்குறுதியை நாங்கள் காப்பாற்ற ஒரு வாய்ப்பளிக்க வேண்டுகிறோம் 

இனி இந்தப் பதிவு..... 

[இருபத்திஒன்றாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் சிறப்பாகக் கல்வி கற்பிக்கும் பள்ளிகளில் தமிழ்க்கல்வி நின்று போக ஆரம்பித்தது. அவற்றைப் பின்பற்றிச் சிறிது சிறிதாக மற்ற கல்வி நிறுவனங்களும் அதைப் பின்பற்ற ஆரம்பித்தன. இருநூற்றைம்பது ஆண்டுகளில் தமிழைக் கற்பிப்பது அறவே நின்றுபோய் விட்டது. பாரதநாடு வல்லரசாகி வரும்பொழுது இந்தியும், ஆங்கிலமும் தெரிந்தால் மட்டுமே நல்லவேலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு மாறிவிட்டது.
வாழ்க்கையின் மேல்தட்டுக்கு ஏறத்தெரிந்தவர்கள் அந்த இரு மொழிகளையும் மட்டும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். எனவே தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் தமிழ் பேசுவதே குறைந்துகொண்டு வந்தது]

ந்தியா, நேப்பாளம், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பர்மா, மலேஷியா, சிங்கப்பூர், இந்தோனேசியா எல்லாம் இணைந்து நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகிய “பாரத ஒருங்கிணைப்பி”ல் (Bharath Federation)எல்லாக் குழந்தைகளின் உடலிலும் பிறந்த உடனேயே கணிணி நுண்ணணு (Computer Chip ) பதிக்கப்பட்டு விடுகின்றன. அதிலேயே எடுபிடிகள், உரிமைக் குடிமக்கள் (elite citizen) என்று பதிந்து விடுகிறார்கள்.

உடனேயே ஒவ்வொரு எடுபிடிக்கும் ஒரு காப்பாளி நியமிக்கப் படுவார். அவர்தான் அவர்களைக் கண்காணித்து வருவார். அந்த அதிகாரிதான் அவர்கள் என்ன வேலை கற்றுக்கொள்ள வேண்டும், எங்கு வேலை செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்து, அந்த வேலையைக் கற்றுக் கொடுக்கும் பள்ளியையும் தேர்ந்தெடுக்கிறார். வேலை சரியாகச் செய்யவில்லை என்ற புகார் வந்தால் அந்த எடுபிடியின் பாடு மகா திண்டாட்டம்தான்.

“காப்பாளி ஆபீசரா, வேண்டாம்மா! என்னை அப்புறம் திருத்தும் பள்ளி (Correction School) க்கு அனுப்பிச்சுடுவாங்க. என் அப்பா, அம்மா, தம்பி இவங்க எல்லோரையும் ஒரு மாசம் பார்க்க முடியாம போயிடும்.” என்று நடுங்குகிறாள் காமாட்சி. 

அவள் மனம் ஷிஃபாலியையும், அவளைப் போன்ற இரக்கமில்லாத எஜமானர்களையும் வெறுக்கிறது. என்னவோ புரியாத மொழியில் பேசிக்கொண்டு கொத்தடிமை போல அல்லவா நடத்துகிறார்கள்?!
“மம்மி... பாவம் மம்மி ....காம்ஸ்! தம்பிக்கு உடம்பு சரியில்லைன்னா அவனைத் தனியா வீட்டிலே விட்டுட்டு எப்படி என்கூட இருக்கமுடியும்? காம்ஸ், நீ ஒண்ணு பண்ணு. உன் தம்பியை ஆஸ்பத்திரியிலே காட்டிட்டு, அங்கே விட்டுட்டு வா! ரெண்டு நாள் அவள் அங்கேயே இருக்கட்டும்!” அவள் பக்கம் பேசுகிறாள் நிமிஷா.
“நீங்க நல்லா இருப்பீங்க நிமிசாம்மா. என் தம்பிப் பையனை டாக்டர் ஐயாகிட்ட காண்பிச்சுட்டு எங்கூடவே இங்கேயே வைச்சுக்கறேன் நிமிசாம்மா. உடம்பு சரியில்லாத சின்னப் பையன் ஆஸ்பத்திரியிலே எப்படீம்மா தனியா இருப்பான்?” தன்பக்கம் பரிந்து பேசும் நிமிஷாவை நிமிசாம்மா, நிமிசாம்மா என்று அழைத்துக் கெஞ்சுகிறாள் காமாட்சி. ஷிஃபாலியுடன் பேச அவனுக்குப் பயமாக இருக்கிறது.

ஷிஃபாலி பேச வாயெடுப்பதற்குமுன், “ஓகே காம்ஸ்! இங்கேயே கூட்டிவா. எங்க குடும்ப டாக்டர்கிட்டயே ஓவர்-த-வேவ்ஸ் (அலை பரப்பு மூலம்) காட்டி விடலாம்!” என்று நிமிஷா காமாட்சிக்கு அனுசரணையாகப் பேசுகிறாள். அவளே முடிவெடுப்பதால் ஷிஃபாலியால் ஒன்றும் பேச முடிவதில்லை.

“அஞ்சு நிமிசத்திலே தம்பியைக் கூட்டியாந்திடறேம்மா!” என்று விரைகிறாள் காமாட்சி

அவள் சென்ற பிறகு மகள்மீது வெடிக்கிறாள் ஷிஃபாலி. “நிம்ஸ், நீ ரொம்ப இரக்க குணத்தோட இருக்கே! எடுபிடிகளுக்கு இரக்கம் காட்டினா அவங்க நம்மை எடுபிடிகளாக்கிடுவாங்க. எப்போதான் இதை நீ தெரிஞ்சுக்கப் போறியோ?

“எனக்கு இருக்கும் இன்ஃப்ளூயன்ஸுக்கும், பணவசதிக்கும் நான் கல்யாணம் செய்துக்கிட்டு கணவரோட வாழமுடியும். இருந்தாலும் நிறைய சாதிக்கணும்னு இந்த நாட்டில் இருக்கற பாதிப்பெண்கள் மாதிரி நானும் கல்யாணமே செய்துக்கலை. அதுபடியே எப்படி சாதிச்சுட்டு வரேன் தெரியுமா? அதுக்காக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கிட்டு அறிவை மட்டுமே உபயோகிச்சு வாழ்க்கையிலே முன்னேற எத்தனை முடிவுகள் எடுத்திருக்கேன் தெரியுமா? என் மகளாப் பிறந்துட்டு நீ உணர்ச்சிகளுக்கு அடிமையா இப்படிக் கோழையா இருக்கறது எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கலை!”

“மேடம் ஷிப்ஸ்! நீங்கள் கிளம்பும் நேரம் வந்துவிட்டது!” என்று ஒரு குரல் ஒலிக்கிறது.

“வரேன் கண்ணு!” என்று செல்லமாக நிமிஷாவின் கன்னத்தைக் கிள்ளிவிட்டுக் கிளம்புகிறாள் ஷிபாலி. 

கதவு சாத்திக்கொண்டவுடனேயே முப்பரிமாணத் தொலைக்காட்சிக் கருவியை மாட்டிக் கொண்டு நடனமாட ஆரம்பிக்கிறாள் நிமிஷா.
* * *

தன் தம்பியையும் அழைத்துக்கொண்டு நிமிஷாவின் வீட்டை நோக்கி விரைகிறாள் காமாட்சி. உலகத்தின் முதல் வல்லரசுகளில் ஒன்றான பாரதநாட்டின் கடைசித் தட்டுக்குடிமகள் அவள். அவளை இந்த நாடு பிறக்கும்போதே எடுபிடி என்று வரிசைப்படுத்தி கணிணித் துகளில் பதிவு செய்து வலதுகையிலும், இடது தோளிலும் பதித்து, தக்கண்கண்ட்டின் பெரும் கணிணியியில் சேர்த்து வைத்திருக்கிறது என்பதைக்கூட அறியாதவள் அவள். அவளுக்கு “அடிமை” என்று பட்டம் கொடுக்க வில்லையே தவிர, அவள் வாழ்க்கை ஒரு அடிமை வாழ்க்கைதான்.
காரணம் -

அவளது முன்னோர்கள் நூற்றைம்பது ஆண்டுகளாக விடாமல் தமிழைப் பேசிக் கொண்டிருப்பதுதான். இருபத்திஒன்றாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் சிறப்பாகக் கல்வி கற்பிக்கும் பள்ளிகளில் தமிழ்க்கல்வி நின்று போக ஆரம்பித்தது. அவற்றைப் பின்பற்றிச் சிறிது சிறிதாக மற்ற கல்வி நிறுவனங்களும் அதைப் பின்பற்ற ஆரம்பித்தன. 

இருநூற்றைம்பது ஆண்டுகளில் தமிழைக் கற்பிப்பது அறவே நின்றுபோய் விட்டது. பாரதநாடு வல்லரசாகி வரும்பொழுது இந்தியும், ஆங்கிலமும் தெரிந்தால் மட்டுமே நல்லவேலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு மாறிவிட்டது.

வாழ்க்கையின் மேல்தட்டுக்கு ஏறத்தெரிந்தவர்கள் அந்த இரு மொழிகளையும் மட்டும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். எனவே தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் தமிழ் பேசுவதே குறைந்துகொண்டு வந்தது. இருப்பினும் ஆங்காங்கு தமிழ்ப் பற்று உள்ள பெற்றோர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பித்தார்கள். எழுதப் படிக்கவும் கற்றுத் தந்தார்கள். சிறுசிறு கிராமங்களில்தான் தமிழ் பேசுபவர்கள் இருந்தார்கள்.

எல்லாத் தொழில்களும் மிகவும் இயந்திரமயமாக்கப்பட்ட பின்னர் உடலுழைப்பு மட்டுமே செய்வோர்கள் எடுபிடி வேலை செய்யும் நிலைமைக்குத் தள்ளப் பட்டார்கள். இருபதாம் நூற்றாண்டிலேயே மனம் வெதும்பி “தமிழ் இனி மெல்லச் சாகும்..” என்று பாடிவைத்துப் போன அமரகவி பாரதியாரின் வாக்கு மெல்லமெல்ல உண்மையாகிக் கொண்டிருந்தது. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழன்னை தன் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருந்தாளோ என்றும் தோன்றியது.
எனவே தமிழ் பேசுபவர்கள் எடுபிடிகளாகப் பிரிக்கப்பட்டார்கள். இந்தி தெரிந்தவர்கள் உரிமைக் குடிமக்கள் ஆக்கப்பட்டார்கள். எடுபிடிகள் இந்தி கற்றுக்கொண்டு உரிமைக் குடிமக்கள் ஆகிவிட்டால் 

எடுபிடிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று அஞ்சி அவர்களுக்கு இந்தி கற்றுக் கொடுக்கக்கூடாது என்றும் (நிமிஷா தன் அன்னையிடம் குறிப்பிட்ட) சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தைப் பற்றியே தெரியாத அவர்கள் ஓட்டுரிமையைப் பறிக்கும் இச்சட்டத்தை எப்படி எதிர்த்துப் போராடுவார்கள்? ஓட்டுரிமை இல்லாததால் எந்த அரசியல்வாதிகளும் அவர்களின் உரிமையைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை.

இருந்தபோதிலும் எப்படியோ காமாட்சியின் முன்னோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழை எழுதப் படிக்கக் கற்றுத் தருவதைத் தலையாய கடமையாகக் கொண்டிருந்தார்கள். எனவே, காமாட்சிக்கு தமிழ் மட்டும் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது.

ஆனால் அவனுக்கோ, அவளது பெற்றோர்களுக்கோ, தாங்கள் தமிழைப் பரப்ப ராஜராஜ சோழச் சக்ரவர்த்தியின் மகள் குந்தவிக்குத் துணையாகவும், அங்குள்ள ஆந்திரப் பெண்களுக்குத் தமிழ் கற்பிக்கவும், வேங்கை நாட்டிற்கு (வெங்கி) அனுப்பப்பட்ட நிலவுமொழியின் பரம்பரை என்பதோ, தமிழைக் காக்க உறுதி மொழி எடுத்த வீரப் பரம்பரையின் குருதி தங்கள் உடலில் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள் ஆயினும்  இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது என்றோ அறிய நியாயம் இல்லைதான்.

வேர்க்க விறுவிறுக்க நிமிஷாவின் வீட்டை அடைந்து அவர்கள் வீட்டுக் காலிங் பெல்லை அமுக்குகிறாள் காமாட்சி. அவள் கையைப் பிடித்தபடி பயந்தவாறே உடன் நிற்கிறான் அவளது தம்பி ஏகாம்பரநாதன். அவன் தன் வாழ்நாளில் இதுவரை உரிமைக் குடிமக்களின் குடியிருப்பின் உள்ளே நுழைந்து பார்த்ததே இல்லை. அதுவரை போவானேன்,  இரண்டு அறைகள் மட்டும் உள்ள கடைசித் தட்டு மக்களின் குடியிருப்பை விட்டு அவன் வெளி வந்ததும் இல்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுபிடிப் பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறான். அவனுக்குக் கலை நுணுக்கம் அதிகம். மேல்தட்டு மக்கள் தூக்கி எறியும் சாமான்களைக் கொண்டு விதம் விதமாகப் பொம்மைகள் செய்ய அவனுக்குத் தெரியும். அட்டையோ, பிளாஸ்டிக் துண்டுகளோ கிடைத்தால் விடவே மாட்டான். காமாட்சி அவனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் எழுத்துக்கள் சொல்லித் தந்து கொண்டிருக்கிறாள். அவன் தனக்குக் கிடைத்த அட்டைகளில் சிறிதும் பெரிதுமாகத் தமிழ் எழுத்துக்களை வடிவமைத்து வெட்டி எடுப்பான். தம்பியின் சாதனையைப் பார்த்து மனமகிழ்ந்து அவனைச் சேர்த்து அணைத்துக் கொண்டு ஆசையுடன் முத்தமாரி பொழிவாள் காமாட்சி.

“கமான் காம்ஸ், டான்ஸ் ஆடி ஆடி எனக்குப் பசி ஜாஸ்தியாகி விட்டது. எனக்கு ஏதாவது சாப்பிட செய்து தா!” என்று அவளை உள்ளே அழைத்த நிமிஷா, ஏகாம்பரநாதனை வைத்த கண் வாங்காமல் வெறித்துப் பார்த்தாள். அவளுடைய நடை, உடை பாவனையைப் பார்த்து அசந்து போய்விட்டான் ஏகாம்பரநாதன். அவனுடைய அக்காவுக்கும் இவனுக்கும்தான் எத்தனை வேறுபாடு? அவனுக்கு மொழிமாற்று கருவி தரப்படவில்லை. எனவே, நிமிஷா பேசியது என்ன என்று அவனுக்குப் புரியவே இல்லை.

அழகான தன் பெயரைச் சுருக்கி “காம்ஸ்” என்று அவள் அழைப்பது காமாட்சிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனாலும் என்ன செய்வது? 

 “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்று ஒருகாலத்தில் புரட்சி நடிகர் பாடியது போல இப்பொழுது எல்லோரும் தங்கள் பெயரை மூன்றெழுத்தாகச் சுருக்குவது காமாட்சிக்குப் புரிய நியாயமில்லைதான். அதிலும் கடைசி இரண்டு எழுத்துக்களும் மெய்யெழுத்துக்களாக இருப்பதுதான் ஸ்டைல் என்றும் அவனுக்குத் தெரியாது. 

அதனால்தான் நிமிஷா “நிம்ஸ்” என்றும் ஷிஃபாலி “ஷிப்ஸ்” என்றும் அழைக்கப் படுகிறார்கள் என்பதையும் அவள் உணர்ந்து கொள்ளவில்லை. இருந்தபோதிலும் நிமிசாம்மா சிபாலிம்மா என்றுதான அவர்களை அழைத்து வந்தால் - அவர்கள் அப்படி அழைக்காதே என்று அவளைக் கண்டித்த போதிலும்.

“நிமிசாம்மா, இதுதான் என் தம்பி. இவனுக்குத்தான் உடம்பு சரியில்லை. ஒரே சுரம். ரொம்பச் சோர்ந்து சோர்ந்து போகிறாள்!” என்று தன் தம்பியை நிமிஷாவுக்கு அறிமுகப் படுத்துகிறாள் காமாட்சி.

ஏகாம்பரநாதனைப் பார்த்தால் நிமிஷாவுக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. மெலிந்த தேகம், எலும்பும் தோலுமான உடம்பு, சுருள்சுருளான பரட்டைத்தலை, கருகருவென்ற துருதுருப்பான கண்கள். தொளதொளவென்ற அரை-டிராயரும், பெரிதான, சாயம் போன சட்டையையும் அணிந்து கொண்டிருக்கிறாள். அவளை வைத்த கண் வாங்காமல் வாயைப் பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

“எலே ஏகாம்பரம், நான் சொன்னேனே, அந்த நிமிசாம்மாடா இவங்க. இவங்க வூட்டுலதான் ரெண்டுநாள் இருக்கப் போறோம். வணக்கம் சொல்லிக்கோடா” என்று அவனை மெதுவாக இடிக்கிறாள் காமாட்சி.
[தொடரும்]

No comments:

Post a Comment