Saturday, 21 June 2014

பணத்திற்கு அடிமையாகிப் பேச்சையே இழந்துவரும் தமிழ்



                             தமிழ் இனி மெல்ல  

                                                அரிசோனா மகாதேவன்                                                    
                                                   

......தொடர்கிறது

[சென்ற பதிவின் முடிவில்.. ஏகாம்பரநாதனைப் பார்த்தால் நிமிஷாவுக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. மெலிந்த தேகம், எலும்பும் தோலுமான உடம்பு, சுருள்சுருளான பரட்டைத்தலை, கருகருவென்ற துருதுருப்பான கண்கள். தொளதொளவென்ற அரை-டிராயரும், பெரிதான, சாயம் போன சட்டையையும் அணிந்து கொண்டிருக்கிறாள். அவளை வைத்த கண் வாங்காமல் வாயைப் பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
“எலே ஏகாம்பரம், நான் சொன்னேனே, அந்த நிமிசாம்மாடா இவங்க. இவங்க வூட்டுலதான் ரெண்டுநாள் இருக்கப் போறோம். வணக்கம் சொல்லிக்கோடா” என்று அவனை மெதுவாக இடிக்கிறாள் காமாட்சி]

“வணக்கம் நிமிசாக்கா” கைகூப்புகிறான் ஏகாம்பரநாதன். அவன் கண்களில் ஒரு நன்றியுணர்வு பளிச்சிடுவதைக் காண்கிறாள் நிமிஷா. “நிமிசாக்கா” என்பது தன்னைத்தான் என்று உணர்ந்து கொண்ட அவள் அவனைக் கனிவுடன் பார்க்கிறாள்.

“உன் பேர் என்ன?” என்று வினவுகிறாள்.

அவனுடைய தமிழ் மொழிமாற்று கருவி மூலம் அவனுக்கு இந்தியாகப் புரிகிறது. ஆனால் அவளுடைய  இந்தி அவனுக்குப் புரியவில்லை. விழிக்கிறான்.

“ஏகாம்பரநாதன், நிமிசாம்மா, ஏகாம்பரம்னு நாங்க கூப்பிடுவோம்.” என்று அவன் சார்பில் பதிலளிக்கிறாள் காமாட்சி.

“பேர் ரொம்பப் பெரிசா இருக்கு. நான் “ஏக்ஸ்”னுதான் கூப்பிடப் போறேன். இரு இரு, நான் டாக்டரோட இவனை செட்டப் செய்து என்ன ட்ரீட்மென்ட்னு கேட்கிறேன்” என்று அங்கு தென்புறச் சுவற்றில் பதித்திருக்கும் போர்டில் இருக்கும் ஒரு பச்சைப் பொத்தானை அமுக்குகிறாள். சுவரில் ஒரு மருத்துவரின் அலுவலகப் படம் தோன்றுகிறது.

ஒரு மருத்துவர் அப்படத்தில் தோன்றுகிறார்.

“ஹாய் நிம்ஸ். என்னம்மா வேணும் உனக்கு? உடம்பு சரியாக இல்லையா?” என்று கனிந்த குரலில் விசாரிக்கிறார்.

“ஐ ஆம் ஆல்ரைட் டாக்டர். இந்த மின்யன் பையனுக்குத்தான் உடம்பு சரியில்லை. நீங்கதான் கொஞ்சம் ஹெல்ப் செய்யணும்” என்று கொஞ்சுகிறாள் நிமிஷா.

“அவளை ஹூக்கப் செய், நிம்ஸ்” என்கிறார் மருத்துவர்.

ஏகாம்பரத்தின் வலது புறங்கையில் மேல் ஒரு பட்டையைக் கட்டுகிறாள் நிமிஷா. அதிலிருந்து ஒரு கம்பி துருத்திக் கொண்டிருக்கிறது. அது ஏகாம்பரத்தின் கணிணி எண், அவனது உடல் நிலை பற்றி மின்னலைகள் மூலமாக மருத்துவருக்குச் செய்தி அனுப்புகிறது. அவர் சில நிமிடங்கள் தன் கணிணியில் கவனமாகக் கவனிக்கிறார்.

“நிம்ஸ், இந்தப் பையனுக்கு பசியின்மைதான் குறை. நிறைய சத்துணவு கொடுத்தால் போதும். தேறிவிடுவான். என்ன மருந்து கொடுக்கவேண்டும் என்று உனக்குத் தகவல் அனுப்புகிறேன். இரண்டு நாளில் சரியாகி விடும்” என்று சொல்லிப் புன்னகை செய்கிறார். அத்துடன் அவரது நிழற்படம் சுவரில் மறைந்து விடுகிறது.
                                                   * * *

                                                            Highlight 

[“ஐயா, ஸம்ஸ்கிருதம் செத்த மொழிதானே! இருந்தபோதிலும் அது உயர்மட்டத்தில் வைக்கப்படவில்லையா?அதைப்பற்றி ஆராய்ச்சிகள் இன்றும் செய்யப் பட்டு வருகின்றனவே!

“முட்டாள்! திருட்டுப் பயலே! தேவ மொழியான, வேதமொழியான ஸம்ஸ்கிருதத்தை செத்தமொழி என்று சொல்ல உனக்கு எத்தனை துணிச்சல்? அதுவும் தமிழும் ஒன்றா? பாரதம் முழுவதும் இன்றும் உயர்வாகப் போற்றப் படுகிறது ஸம்ஸ்கிருதம்

...“ஸம்ஸ்கிருதத்தை அவமதித்ததற்காக நான் உன்னைப் பதவி இறக்கம் செய்து மீண்டும் கடைநிலை ஊழியன் ஆக்குகிறேன். இருப்பதிலேயே கீழ்த்தரமான எடுபிடி வேலைதான் நீ செய்ய வேண்டும். வெளியே போ.” ]



                                                  அத்தியாயம் 2

                                    ஹோட்டல் சாம்ராட் ராஜ்ராஜ், தஞ்ஜு
                                 பிரஜோற்பத்தி, ஆனி 24 - ஜூலை 10, 2411

 ரண்டு நாள்களில் திரும்பி வந்து விடுவதாகச் சொன்ன ஷிஃபாலியை, ஆறு நாட்களுக்கு மேல் தங்க வைத்து விடுகிறது அவளுடைய வேலை. எனவே, ஷிபாலி காமாட்சியையும், அவள் தம்பியையும் தன் வீட்டிலேயே நிமிஷாவுக்குத் துணையாக இருக்கும்படி கட்டாயப் படுத்துகிறாள். ஏகாம்பரநாதன் உடல்நிலை தேறிவருவதற்கு ஷிஃபாலியின் வீட்டில் தங்கியிருப்பது உதவியாக இருக்கும் என்பதால் அதற்கு ஒத்துக் கொள்கிறாள் காமாட்சி. நிமிஷாவின் உதவியுடன் தனது பெற்றோருக்கு தகவல் கொடுக்கிறாள். பெரிய இடத்தில் வசதியாகத் தங்கியிருக்கட்டும் என்று அவள் பெற்றோர்களும் சம்மதித்துவிடுகின்றனர்.

“மிஸ்டர் லீ, இந்தத் திட்டத்தில் கொஞ்சம் ப்ராப்ளம் இருக்கு. நாம் எதிர்பார்க்கும் முடிவுகள் கிடைப்பது கஷ்டம்.” என்று தன்னம்பிக்கையுடனும், தன்னால் இப்படி ஒரு பிரச்சினையைக் கண்டு பிடிக்க முடிந்தது என்ற கர்வத்துடனும் சொல்கிறாள் ஷிபாலி. கம்பெனியின் பாரதக் குழுவுக்கு இந்த இளம் வயதிலேயே தலைவியாகி விட்டாளே, கர்வம் இல்லாமலா இருக்கும்!
“மிஸ் ஷிஃப்ஸ், ஏன் இப்படிச் சொல்றீங்க?” என்று கேட்டதும், மிகவும் உற்சாகத்துடன் விளக்கம் கொடுக்க ஆரம்பிக்கிறாள்.

லீ அவளது அறிவுத் திறனை வியப்பாகக் கவனிக்கிறார். அரை மணி நேர விளக்கத்திற்குப் பிறகு அவளது முடிவை ஏற்றுக் கொள்கிறார். ”மிஸ் ஷிப்ஸ். எக்ஸலன்ட், எக்ஸலன்ட்! உங்கள் ஐடியா நூத்துக்கு நூறு கரெக்ட். இந்த ப்ராப்ளத்தை எப்படி ரெக்டிபை செய்யலாம் என்று சொல்கிறீர்கள்?”

ஷிஃபாலி வானத்தில் மிதக்க ஆரம்பிக்கிறாள். மிஸ்டர் லீ தன்னைப் பற்றி உயர்வாக நினைக்கிறார் என்பது அவளுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இது பதவி உயர்வுக்கு வழி வகுக்குமே!

“மிஸ்டர் லீ! நான் சொல்லும் மாற்றங்களைச் செய்தால் திட்டம் இரண்டு மாதம் முன்னதாகவே முடிந்து விடும். திட்டச் செலவும் பத்து பெர்ஸெண்ட் குறையும். அதுமட்டுமல்ல, இரண்டு மாதங்கள் முன்னால் நமது பொருள் மார்க்கெட்டுக்கு வருவதால் நம் கம்பெனிக்கு அதிக லாபமும் கிடைக்கும். கல் ஒன்று, மாங்காய் ரெண்டு மாதிரி..” என்றுஆரம்பிக்கிறாள். மதிய உணவையும் சாப்பிட்டுக் கொண்டே கூட்டம் தொடர்கிறது. கூட்டம் முடியும் பொழுது மாலை ஆறு மணி ஆகி விடுகிறது. இரு தரப்பாருக்குமே மிகவும் நிறைவான வகையில் முடிவுகள் எடுக்கப் பட்டதனால் அங்கு ஒரு மகிழ்ச்சி நிலவுகிறது.

“மிஸ் ஷிப்ஸ். இந்த நல்ல முடிவை நான் மிகவும் வரவேற்கிறேன். ஐ ஆம் வெரி எக்ஸைடெட். இந்த அக்கேஷனை நன்றாகக் கொண்டாட வேண்டும். என்ன செய்யலாம்? நீங்களே சூஸ் செய்யுங்கள். மிகவும் பெரிய முறையில் கொண்டாடுவோம்.” மகிழ்ச்சி கலந்த உற்சாகத்தால் ஷிபாலியின் கைகளைப் பிடித்துக் குலுக்கியவர் அப்படியே சேர்த்து அணைத்துக் கொள்கிறார். அந்த அணைப்பில் தன் தந்தையைக் காண்கிறாள் ஷிஃபாலி.

சிறிது நேரம் யோசித்துவிட்டு, “மிஸ்டர் லீ, இந்த தஞ்ஜுவில் மிகவும் பிரசித்தி பெற்றது பெரிய கோவில். ஆயிரத்து நானூறு வருஷங்களுக்கு முன்னால் கட்டப்பட்டது. அதுதான் இங்கே பெரிய டூரிஸ்ட் ஸ்பாட். நைட் லைட் அரேஞ்ச்மென்ட்ஸ் ரொம்ப நல்லா இருக்கும். ட்ரெடிஷனல் டான்ஸ், மீல்ஸ் எல்லாம் உங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக ஃபீல் பண்ணுவீர்கள். எல்லோருமே போய் என்ஜாய் செய்துவிட்டு வரலாமே!” என்று சிபாரிசு செய்கிறாள் ஷிஃபாலி.

“மை டியர் ஷிப்ஸ், அப்படியே செய்யலாம்!” என்கிறார் லீ. இருபத்தைந்து பேர் அடங்கிய குழு உல்லாசத்துடன் அந்த முப்பத்தைந்து மாடிக் கட்டிடத்தை விட்டுக் கிளம்புகிறது.
               
                                                                 * * *

                                              பெரிய கோவில், தஞ்ஜு
                               பிரஜோற்பத்தி, ஆனி 24 - ஜூலை 10, 2411
ஞ்சைப் பெரிய கோவில் ஒரு திருவிழாக் கோலம் கொண்டிருக்கிறது. கட்டி முடித்த ஆயிரத்திநானூறு ஆண்டுகளில் கோவில், பெரிய நந்தி, நுழைவாயில்கள், மதில்கள் இவற்றில் மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்தாலும், அதன் சுற்றுப்புறம் மிகவும் மாறிவிட்டிருக்கிறது.

உள்ளே பெரிய அரங்கம் கட்டப்பட்டிருப்பது தெரிகிறது. விளக்குகள் கோவில் கோபுரத்தில் பலவித வண்ணங்களை மாறிமாறி வீசிக் கொண்டிருக்கின்றன. கண்ணைக் கவரும் அலங்காரத்துடன் கூடிய அழகிய பெண்களின் நடனம் நடந்து கொண்டிருக்கிறது. ஆங்காங்கு மேஜை நாற்காலிகள் போடப் பட்டுள்ளன. அதில் பரிமாறப்பட்டு வரும் உணவின் பசியூட்டும் மணம் நாசியைத் துளைக்கிறது. அந்த மணம், ஏற்கெனவே  நிறையச் சாப்பிட்டு வந்தவர்களுக்கும் உண்ணவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகிறது. உள்ளே நுழைவதிலிருந்து வெளியே வரும்வரை மின்நடைகள் (moving platforms) போடப்பட்டு அவற்றில் நாற்காலிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

உள்ளே நுழையும் போதே, அனைவருக்கும் விளக்கம் கேட்க வசதியாக இருக்கவேண்டி காதுக்கருவிகள் கொடுக்கப்படுகின்றன. மின்நடையில் ஏறி அமர்ந்து கொண்டவுடன் நாற்காலிகள் மெல்ல நகர்ந்து செல்ல ஆரம்பிக்கின்றன.

ஓர் இனிய பெண்குரல், “அன்பர்களே! தஞ்ஜூ பெரிய கோவிலுக்கு உங்கள் அனைவரையும் சுற்றுலாக் குழு வரவேற்கிறது. இந்தக் கோயில் ராஜ்ராஜ் சோழக் சக்கரவர்த்தியால் பொது ஆண்டு ஆயிரத்துப் பத்தில் கட்டப்பட்டது. இங்கு இருக்கும் சிவலிங்கம் மிகவும் பெரியது. இந்தக் கோவிலின் உச்சியில் இருக்கும் கலசக் கல்லை பதினாறு கிலோமீட்டர் தூரம் சாய்தளம் அமைத்து மேலே கொண்டு சென்றார்கள். அக்காலத்து மக்கள்...” என்று வர்ணித்துக்கொண்டே போகிறது.

“முன்பு ஐந்து கால பூசைகள் நடந்து கொண்டிருந்தன. அர்ச்சகர்களை யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வராத காரணத்தாலும், அர்ச்Œகர்களுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வராததாலும்,  மக்களிடையே அவர்களுக்கு மதிப்புக் குறைந்து போய்விட்டதாலும், இருபத்தொன்றாம் நூற்றாண்டுக் கடைசியில் அர்ச்சகர் கல்வி கற்க முன்வருவோர் மிகவும் குறைந்து போய் விட்டனர். கடந்த இருநூற்று ஐம்பது ஆண்டுகளாக அர்ச்சகர்கள் இல்லாது போய்விட்டதால், கோவில்களில் ஆகம முறைப்படியான பூசைகள் நின்று விட்டன. இதனால் தற்பொழுது புராதன வழிபாடுகளும் விழாக்களும் நடப்பது நின்று போய்விட்டன.

“எனவே, எல்லாக் கோவில்களிலும் தெய்வச் சிலைகளை நன்கு துடைத்துப் பராமரிக்க ஆட்கள் ஏற்பாடு செய்யப் பட்டனர். பாரத தேசத்தின் பாதுகாப்புத் திறன் குறித்த சிறப்பினால் தெய்வச் சிலைகளைத் திருடுவது பற்றி யாரும் கனவில்கூட நினைப்பது கிடையாது. முப்பரிமாண அலை வரிசைகள், ஹோலோகிராம் டிரான்ஸ்மிஷன் ஆகிய முன்னேற்றத்தால், வீட்டில் இருந்த படியே எந்தக் கோவிலில் இருக்கும் கடவுளரையும் வணங்கவும், பூசை செய்யவும் வசதியாகி விட்டது. இதனால் கோவில்களுக்கு வழிபாட்டாளர்கள் வருவதும் குறைந்து வந்து நின்றும் போய்விட்டது. இதே நிலைமைதான் மற்ற பிற சமய வணங்குமிடங்களான மசூதிகளுக்கும், தேவலாயங்களுக்கும் ஏற்பட்டது. இதனால்தான் இவை எல்லாம் சுற்றுலா மையங்களாக மாற்றப்பட்டு விட்டன.

“கோவிலில் இருக்கும் கல்வெட்டுகள் தமிழ் என்ற ஒரு மொழியில் வடிவமைக்கப்பட்டவை ஆகும். இப்பொழுது இவற்றின் மொழிபெயர்ப்புகள் இணைய நூலகங்களில் இருப்பதால், அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

“கோவில்கள், மற்ற சமய வழிபாட்டுத் தலங்கள் சுற்றுலாத்தலங்களாக மாற்றப்பட்டு விட்டாலும் அவைகளின் பழம் பெருமைகளை உணர்த்தும்படியாகவே சுற்றுலா நிகழ்ச்சிகள் இருக்கும் என்று மிக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நிகழ்ச்சிகளை நிதானமாக அனுபவித்து மகிழுங்கள்!” என்று அந்தப் பெண்குரல் வரவேற்புரையை முடிக்கிறது.

நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கின்றன. ஷிஃபாலியுடன் வந்த குழுவினர் நிகழ்ச்சிகளை நன்றாக அனுபவித்து மகிழ்கின்றனர். ஷிஃபாலிக்கு ஒரே பெருமை. தன் மதிப்பு வேலை விஷயத்தில் மட்டுமல்லாமல், மனித உறவு விஷயத்திலும் கூடுகிறது என்பதல் அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை உறுதி படுத்துவதுபோல இருக்கிறது. லீ சொல்லிய ஒரு விஷயம்.

“மிஸ் ஷிப்ஸ், இந்த திட்டத்திற்கு திறமையாக வழிகாட்ட நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியைப் பாராட்டவே இந்தக் கம்பெனி ஒரு முடிவு எடுத்திருக்கிறது...” என்ற பீடிகையுடன் ஆரம்பிக்கிறார் லீ. ஷிஃபாலி ஆவலுடன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொள்கிறாள்.

“இந்த திட்டத்திற்கு உங்களையே தலைவியாக நியமிப்பது என்று தீர்மானம் எடுத்து இருக்கிறோம். நீங்கள் இதை மறுக்கக் கூடாது. ஓ.கே?” என்று கட்டை விரலை உயர்த்திச் சைகை செய்கிறார்.

ஷிஃபாலி மகிழ்ச்சியால் திக்கு முக்காடுகிறாள். இப்படிப்பட்ட பதவி உயர்வை அவள் எதிர்பார்க்கவே இல்லை.

நன்றி பெருக்கெடுத்தோடும் குரலில், “ஷ்யூர் மிஸ்டர் லீ. உங்களை நான் மிகவும் பெருமைப்படச் செய்வேன். இத் திட்டத்தின் தலைவியாக எனக்குக் கொடுக்கப்பட்ட மாபெரும் பொறுப்பைக் கனகச்சிதமாக நிறைவேற்றுவேன்!” என்று தன் கட்டை விரலையும் உயர்த்தி பதில் சைகை செய்கிறாள்.

ஆனால் அவர் அடுத்தபடி சொன்ன விஷயம்தான் அவள் மகிழ்ச்சியை ஊசி குத்தப்பட்ட பலூனினுள்ளே இருக்கும் காற்றைப் போல அவளுள்ளிலிருந்து வெளியேற்றிவிடுகிறது.
* * *
அங்கு நடக்கும் கோலாகலங்களுக்காக “எடுபிடி” வேலை செய்து கொண்டிருக்கும் ஈஸ்வரன் அமைதியாகச் சாப்பாட்டுத் தட்டுகளைக் கழுவுவதற்காக அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறான். தஞ்சை பெரிய கோவிலில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களையும் சுற்றுலா நிகழ்ச்சிகளையும் பார்க்கப் பார்க்க அவனுக்கு நெஞ்சில் உணர்ச்சி பொங்கி பொங்கி அடைக்கிறது. தக்கண்கண்டில் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த ஒரு சிலரில் அவனும் ஒருவன்.
தமிழ் கல்வெட்டுகள் நிறைந்த சுவரில் சிறப்புக் காறைப் பூச்சுப் பூசி அதன் மீது பலவண்ணக் கலவைகளால் ஓவியங்கள் வரையப் பட்டபோது தன் உடலின் மீதே யாரோ காறைப் பூச்சுப் பூசியது போல மூச்சுத் திணறியது அவனுக்கு. தமிழைக் கொல்வதற்கென்றே உயிருடன் சமாதி கட்டி அவளைப் பிற்காலத்தில் யாரும் அறிந்துகொள்ளக் கூட முடியாது செய்கிறார்களே என்று அவன் துடித்ததை யாரும் புரிந்து கொள்ளவில்லை.

பிற்காலத்தில் மறந்துகூட தமிழ் உயிர்பெற்று வளரக்கூடாது என்பதற்காகத்தான் உயர்மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அவ்வாறு செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள அவனுக்கு வாய்ப்பு இல்லைதான். தட்டுத் தடுமாறி தானாகவே இந்தி கற்றுக் கொண்டவன் அந்த முடிவுக்கு எதிராக பெரியகோவில் சுற்றுலா மட்டத்துத் தலைவருடன் பேச அனுமதி பெற்றதை நினைவு கூர்கிறாள்...

...அவனுக்கு இந்தி பேசத் தெரியும் என்பதே அவர்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. இந்தி பேசத் தெரிந்த எடுபிடி என்பதால் அவன்மீது இரக்கம் கொண்டு அவனைக் காண அனுமதி தந்தார் அவர். ஆனாலும் அவன் வந்த காரணம் தெரிந்ததும் அவருக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்தது.

“ஈஸ்வ், நீ நல்ல உழைப்பாளி என்பதால்தான் உனக்கு ஐந்து ஆண்டுகளில் மூன்று பதவி உயர்வுகள் தந்து கடைநிலை எடுபிடியாய் இருந்த உன்னை சூப்பர்வைஸர் ஆக்கி இருக்கிறோம்.” அவனுடைய ஆவணங்களை தன் ஒளி ஈர்ப்புக் கண்ணாடி மூலம் பார்த்துக் கொண்டே பேசுகிறார் அவர், “நீ நாட்டு மொழியான இந்தியைத் தானாகவே கற்று கொண்டு விட்டாய் என்பது உன்னை எடுபிடி நிலையிலிருந்து உயர்த்திவிடும் என்பதையும் சொல்ல விரும்புகிறேன். நீ நினைத்தால், உன் பழைய பழக்க வழக்கங்களை விட்டுவிட்டு பாரத முன்னேற்றப் பிரதிக்ஞையில் கையெழுத்திட்டால், நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு முன்னேறலாம். அதை விட்டுவிட்டு, செத்த மொழியான தமிலை வளர்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதை நாங்கள் நல்லபடி எடுத்துக் கொள்ள முடியாது.” பெரிதாக இரைந்தார், சுற்றுலாக்குழு முனைவர்.

“ஐயா, ஸம்ஸ்கிருதம் செத்த மொழிதானே! இருந்தபோதிலும் அது உயர்மட்டத்தில் வைக்கப்படவில்லையா?அதைப்பற்றி ஆராய்ச்சிகள் இன்றும் செய்யப் பட்டு வருகின்றனவே! அந்த அளவுக்காவது இல்லாவிட்டாலும் தமிழை அடையாளம் தெரியாமல் அழிக்கவேண்டாமே! தமிழ்க் கல்வெட்டுகள் மீது காறையைப் பூசவேண்டாமே! கெஞ்சினான் ஈஸ்வரன்.

இதைக் கேட்ட முனைவர் தீயை மிதித்தவர் மாதிரி அலறினார்.

. "பணம் வருகிறதே என்று அடகு வைக்கப்பட்டு பேச்சைக்கூடக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது உன் தமிழ்.“பாரதத்தின் பெருமைகள்  மறைந்து போய் விடக்கூடாதே  என்று - போனால் போகட்டும்என்ற எண்ணத்தில்  - கோவில் கல்வெட்டுகளைப் படம் எடுத்து அதற்கு மொழிபெயர்ப்பும் செய்து கணிணி மையத்தில் ஏற்றி வைத்திருக்கிறோம். நீ தேவைக்கும் அதிகமாகவே தெரிந்து  வைத்திருக்கிறாய். ஒரு எடுபிடி நாய்க்கு இவ்வளவு சலுகை கொடுத்துப் பேசியதே என் தப்பு.

“ஸம்ஸ்கிருதத்தை அவமதித்ததற்காக நான் உன்னைப் பதவி இறக்கம் செய்து மீண்டும் கடைநிலை ஊழியன் ஆக்குகிறேன். இருப்பதிலேயே கீழ்த்தரமான எடுபிடி வேலைதான் நீ செய்ய வேண்டும். வெளியே போ.” 

தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து அவன் கன்னங்களில் மாறிமாறி அறைந்து விட்டார்
[தொடரும் ]
நன்றி: நமது தொடரை உலகெங்கும் பரப்பும் அன்புள்ளம் கொண்ட திரு. சங்கர இராமசாமி -நிர்வாக ஆசிரியர், தமிழ் ஸ்பீக் .காம் அவர்களுக்கு 
இனி இந்நாவலைத் தொடர்ந்து பின்வரும் சேனனலிலும் வாசிக்கலாம். 
 நாவல் : 01. தமிழ் இனி மெல்ல... -அரிசோனா மகாதேவன்
http://tamilspeak.com/?p=27909



1 comment:

  1. கீழ்க்கண்ட தவறைத் திருத்தி வலையேற்றுமாறு கோருகிறேன்: "அவனுடைய தமிழ் மொழிமாற்று கருவி மூலம் அவனுக்கு இந்தியாகப் புரிகிறது. ஆனால் அவனுடைய இந்தி அவனுக்குப் புரியவில்லை. விழிக்கிறான்" என்பதற்குப் பதிலாக
    "அவனுடைய தமிழ் மொழிமாற்று கருவி மூலம் ""அவளுக்கு"" இந்தியாகப் புரிகிறது. ஆனால் ""அவளுடைய"" இந்தி அவனுக்குப் புரியவில்லை. விழிக்கிறான்."
    வணக்கம், நன்றி -- அரிசோனா மகாதேவன்

    ReplyDelete