அரிசோனா மகாதேவனின்
தமிழினி மெல்ல-2
முற்சேர்க்கை
விசுவாவசு, தை 14 - ஜனவரி 27, 1965
ராணி சீதை ஆச்சி விடுதி, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
(குறிப்பு: இம் முற்சேர்க்கை கதாசிரியர் நேரில் கலந்து கொண்ட உண்மை நிகழ்ச்சி)
(குறிப்பு: இம் முற்சேர்க்கை கதாசிரியர் நேரில் கலந்து கொண்ட உண்மை நிகழ்ச்சி)
“அன்பார்ந்த மாணவ நண்பர்களே! நானும் உங்கள் மாதிரி மாணவனாக இருந்துதான் போலீஸ் அதிகாரி ஆகி இருக்கிறேன். ஆகவே உங்களை உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியும். தயவு செய்து ஊரடங்குச் சட்டத்தை மீறவேண்டாம். நீங்கள் படிப்பில் கவனத்தைச் செலுத்துங்கள். வீணான கலகம் வேண்டாம். அமைதியாகத் திரும்பிச் செல்லுங்கள்.” என்று உருகும் குரலில் வேண்டிக் கொள்கிறார் அந்த டி.எஸ்.பி.
ஆஜானுபாகுவான அவர் தோற்றம், அடர்த்தியான மீசை, பெரிய விழிகள், தொப்பியைக் கழட்டிக் கையில் வைத்துக்கொண்டு கையைக் கூப்பிக்கொண்டு அவர் வேண்டிய விதம் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்களிடம் ஒரு அமைதியைத் தோற்றுவிக்கிறது.
அப்பொழுது நான் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவன். போராட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. ஆயினும் மற்ற மாணவர்களுக்கு எதிராகச் செல்ல முடியுமா? நான்கு மொழிகளைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று என் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சொன்னதைக் கேட்டு, தாய்மொழி தமிழுடன், ஆங்கிலம், ஸம்ஸ்கிருதம் இவற்றுடன் இந்தியப் பொது மொழியான இந்தியில் விசாரத் வரை படித்துத் தேறியவனான நான், இந்திக்கு எதிராக ஏன் போராட்டம் நடத்த வேண்டும் என்று புரியாமல் விழித்த நேரம் அது. கல்லூரியில் ஆங்கிலத்தில் படிக்கிறோமே, அதே போல இந்தியைக் கற்றுக் கொண்டால் என்ன என்று கூட என் நண்பர்களிடம் பேசிய சமயம் அது.
ஆகவே டி.எஸ்.பி அவ்வாறு பேசியது எனக்கு ஒருவிதத்தில் ஆறுதலளித்தது என்றே சொல்லலாம். மாணவர்கள் அரை மனதுடன் கலைந்து போகச் சம்மதிக்கின்றனர். எனக்கு நிம்மதியான பெருமூச்சு. விடுதி மெஸ்ஸிலிருந்து வெங்காய சாம்பார் மணம் என் மூக்கைத் துளைக்கிறது. போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்ற மகிழ்ச்சியுடன் சாப்பாட்டுக்கு இடம் பிடிக்க ஓடுகிறேன்.
அந்த நிம்மதி ஒருநாள்தான் நீடிக்கிறது. 1965 ஜனவரி 27ம் நாள் காலை மாணவர் தலைவர்கள் எங்களை இந்தி எதிர்ப்புப் போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ளத் தயாராகுமாறு விரட்டுகிறார்கள். ஏனென்றால் 25ம் தேதி மதுரையில் இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக நடந்த அமைதியான மாணவர் ஊர்வலத்தில் சிலர் அரிவாள் தாக்குதல் நடத்தினார்களாம். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் ஊரடங்குச் சட்டத்தை மீறி இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொள்ளவேண்டுமாம். ஊரடங்குச் சட்டத்தை மீறவேண்டுமா - அரிவாள் தாக்குதல் நடந்தது என்பதைத் தெரிந்து கொண்ட பிறகும்? எனக்குப் பயமாக இருக்கிறது. என்னுடன் படிக்கும் சில மாணவர்கள் கண்ணில் நீர் கோர்க்கிறது. என்னைவிட மூன்று அங்குலமாவது உயரம் குறைந்த, ஒல்லியான, ஒடிசலான, சத்தம் போட்டால் நடுங்கும் புத்தகப் புழுதான் அவர்கள். தைரியத்திற்காக ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு போராட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்கிறோம்.
கலைக் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அணிவகுத்து முன் செல்கிறது. எவ்வளவு கடைசியாகச் செல்ல முடியுமோ, அவ்வளவு கடைசியாக நானும் என் நண்பர்களும் செல்கிறோம். என் வலது கையைப் பிடித்தபடி வரும் நண்பனின் கரங்கள் நடுங்குவது எனக்குத் தெரிகிறது. அவனுக்கு முன்பு என்னை ஒரு கோழையாகக் காட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை. எனவே, ஆறுதலாக அவன் கையை மெதுவாகப் பிடித்து அழுத்துகிறேன். என் வாய் அனைவருடனும் சேர்ந்து, “இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!! இந்தியைத் திணிக்கும் அரசாங்கம் ஒழிக!!!” என்று ஒலி எழுப்புகிறது. எங்கள் சத்தம் குறைவாக இருக்கிறது என்று மாணவர் தலைவர்களில் ஒருவர் எங்களை அதட்டுகிறார்.
எங்கள் அணி அண்ணாமலை நகரிலிருந்து சிதம்பரத்திற்குச் செல்லும் வடக்குச் சாலை வழியாக ”லெவல் கிராஸிங்”கை அடைகிறது. அங்கு வழியை அடைத்துக்கொண்டு நிறைய போலீஸ் ஜீப்கள், பஸ்கள் நிற்கின்றன. நிறைய போலீஸ்காரர்கள் கையில் தடியுடன் நிற்கிறார்கள். சிலர் கையில் துப்பாக்கிகளும் இருக்கின்றன. போலீஸ் துப்பாக்கிகளுக்கு முன்னால் வெறுங்கையுடன், கோஷத்தை மட்டுமே நம்பி நிற்கப் பயமாக இருக்கிறது.
என் வலது கைப் பிடித்துக் கொண்டிருக்கும் மாணவன் மெதுவாக அழும் குரலில் கேட்கிறான். “எக்கச் சக்கமான போலீஸ் துப்பாக்கியுடன் நிக்குதே! நம்மைச் சுட்டுடுவாங்களா? மெதுவாத் திரும்பிப் போயிடலாமா?” பின்னால் திரும்பிப் பார்த்தால் நிறைய மாணவர்கள் அணிவகுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். திரும்பவாவது, போவதாவது?
ஊர்வலம் நின்று விடுகிறது. டி.எஸ்.பி ஏதோ பேசுவது கேட்கிறது. நாங்கள் கிட்டத்தட்ட முன்னூறு மீட்டர் தள்ளி இருப்பதால் அவர் உருவம்தான் தெரிகிறதே தவிர என்ன பேசுகிறார் என்று தெரியவில்லை. இருந்தாலும் ஊர்வலம் போகக்கூடாது என்று தடுக்கிறார் என்று புரிகிறது. ஒரு நப்பாசை, ஊர்வலம் திரும்பி விடாதா என்று.
ஆனால் ஏதோ கைகலப்பு நடக்கிறமாதிரி தெரிகிறது. போலீஸ்காரர்கள் முன்னணியில் இருக்கும் மாணவர்கள்மீது தடியடி நடத்துவது எங்களுக்கு பீதியைக் கிளப்புகிறது. அடிபடும் மாணவர்களுக்குப் பின்னாலிருந்து கற்கள் பறக்கின்றன.
திடுமென்று வேட்டுச் சத்தம் கேட்கிறது. ஒரே கூக்குரல். எங்களுக்கு முன்னால் இருக்கும் மாணவர் அணி திரும்பி ஓடிவர ஆரம்பிக்கிறது. நாங்களும் திரும்பி ஓட ஆரம்பிக்கிறோம். மேலும் மேலும் வேட்டுச் சத்தம் தொடர்ந்து கேட்கிறது. நாங்கள் தலை தெறிக்க ஓடி, ராணி சீதை ஆச்சி விடுதிக்குத் திரும்ப வந்து சேருகிறோம்.
ஒரு மாணவர் துப்பாக்கிச் சூட்டினால் இறந்து விட்டதாகவும், இன்னொரு மாணவர் குற்றுயிரும் குலையிருமாக குண்டடிபட்டுக் கிடப்பதாகவும், சில நிமிஷங்களில் சேதி வருகிறது.
நான் அதிர்ந்து போகிறேன்.
ஏன் இந்த வன்முறை?
எதற்காக இந்த உயிர்ச் சேதம்?
நாங்கள் மாணவர்கள்தானே! ஊர்வலம்தானே சென்றோம்? இந்தியா ஒரு சுதந்திர நாடுதானே? தங்கள் குறைகளைச் சொல்லி ஊர்வலம் செல்ல மக்களுக்கு உரிமை இல்லையா?
“நானும் உங்களைப் போல மாணவனாக இருந்தவன்தான்!” என்று சொல்லி எங்களுடன் நண்பர் மாதிரி பேசிய டி.எஸ்.பியே இப்படி ஒரு கொலைச் செயலுக்கு அனுமதி எப்படிக் கொடுக்க முடியும்?
அப்பொழுது என் மனதில் ஒரு விரிசல் தோன்ற ஆரம்பிக்கிறது. முன்பு ஆங்கிலேயர்கள் அடக்கி ஆண்டார்கள். இப்பொழுது.. ? இந்தியாவின் தேசிய மொழி என்று நான் நம்பியது அடக்கி ஆளவந்த ஒரு மொழியா? இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியர்களே விடுதலைப் போராளிகள் மீது அடக்குமுறை நடத்தினார்கள். இப்போது இந்தி திணப்பு எதிர்ப்புப் போராட்டத்தில், தமிழர்களே குற்றமற்ற ஒரு தமிழ் மாணவன்மீது துப்பாக்கி சூடு செய்வதை என்ன சொல்லி அழைப்பது?
என் மனத்தின் அன்று பட்ட காயம் இன்றுவரை ஆறாத ஒரு குழிப் புண்ணாகவே இருந்து வருகிறது.
* * *
தாங்கள் கூறிய இந்நிகழ்ச்சி உண்மையிலேயே என்னையும் பாதித்தது. சுதந்திரம் என்பது பிறரது உரிமையில் தலையிடாமை தான். பிறரது உரிமைகளுக்கு மதிப்பளிப்பது தான்.அதைஉணராதவர்களால் தான் வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இன்று எல்லா தனியார் பள்ளிகளிலும் இந்தி கற்றுத் தரப்படுகிறது. இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்வது தவறில்லை. ஆனால் என் மனதில் எழுகின்ற ஒரு கேள்வி அது ஏன் இந்தியாக மட்டும் இருக்கிறது. நம் அண்டை மாநில மொழிகளில் ஒன்றான மலையாளமாகவோ,கன்னடமாகவோ,தெலுங்காவோ ஏன் இல்லை?
ReplyDeleteஅன்புள்ள மகாதேவன் ஐயா
ReplyDeleteவணக்கம். நிகழ்ச்சி நெகிழவைத்தது. இருப்பினும் ஒரு மாணவனின் உயிர் இழப்பு தமிழுக்காக எனும்போது இன்னும் நெஞ்சைக் கசிய வைக்கிறது. தாங்களும அச்சூழலில் இயங்கியமையால் நிகழ்வின் உயிர்த்தன்மையும் தமிழின் மீதாக அக்கறை குறித்து இன்றுவரை வலுவான அதாவது திண்ணமுடன் மொழியை தாய்மொழியை முன்னெடுத்துச் செல்லும் வண்மையை ஊட்டாத ஒரு சமுகத்தில் வாழ்நதுகொண்டிருப்பதையும் இப்பதிவு உணர்த்துகிறது இன்றைக்கு. மொழிக்குப் பின்னாலுள்ள அரசியல் குறித்து தமிழ் மைந்தர்கள் ஒவ்வொருவரும் செயற்படவேண்டிய கட்டாயத்தையும் உணரவேண்டியிருக்கிறது. உங்களுக்கு நன்றிகள். உங்களின் அனுபவம் அல்லது இதுபோன்ற நாவல்கள் தமிழின் மீட்டெடுப்பிற்கு மைல் கல்லாக இருக்கும். நன்றிகள்.