Wednesday, 13 August 2014

தமிழ் இனி மெல்ல [34] ஜெயங்கொண்ட சோழபுரம்

தமிழ் இனி மெல்ல [33] சென்ற இதழின் இறுதியில்
திடுமென்று இராஜாதிராஜனின் யானை சேரமானின் யானைக்குப் பக்கவாட்டில் செலுத்தப்படுகிறது. யாரும் எதிர்பாராதவிதமாகத் தன் யானையின் மத்தகத்தில் ஏறி நின்று சேரமானின் யானைக்குத் தாவுகிறான் இராஜாதிராஜன். அம்பாரியின் கயிற்றைப் பற்றிக் கொண்டு குரங்குமாதிரி சில விநாடிகளில் யானையின் முதுகில் சேரமானின் பின்புறமாக ஏறிவிடுகிறான்.
இதைச் சற்றும் எதிர்பாராத சேரமான் திடுக்கிட்டுத் திரும்புகிறான். அடுத்த விநாடி சேரமானின் ஈட்டியைப் பற்றி இழுக்கிறான் இராஜாதிராஜன். சேரமான் உட்கார்ந்திருக்கும் விதத்தினால் சேரமானால் சரிவரத் தன் ஈட்டியைத் தன்பக்கம் இழுத்துக் கொள்ள இயலாது போகிறது. இருப்பினும் தன் பலம் முழுவதையும் பயன்படுத்தி ஈட்டியை பிடித்துக் கொள்கிறான். அதனால் சேரமான் யானையின் பின்புறம் இழுக்கப்படுகிறான். அதனால் அவனது கால்கள் அம்பாரியில் மாட்டிக் கொள்கின்றன. அதை எடுக்கமுடியாத நிலைமையில் இராஜாதிராஜனின் பலத்திற்குச் சேரமானால் ஈடு கொடுக்க முடியவில்லை.
இராஜாதிராஜன் உடனே ஒரு கையை ஈட்டியிலிருந்து எடுத்துச் சேரமானின் முகத்தில் பலமாகக் குத்துகிறான். சேரமானின் மூக்கு உடைந்து இரத்தம் வழிகிறது. சேரமானின் மேலே மாறிமாறி குத்துக்களைப் பொழிகிறான் இராஜாதிராஜன்.
ஒரு வழியாகத் தன் கால்களை விடுவித்துக் கொள்கிறான் சேரமான். அதுவே அவனுக்கு எதிரியாக வந்து சேருகிறது. கால்கள் விடுபட்ட வேகத்தில் பக்கவாட்டில் சரிகிறான் சேரமான். உடனே ஈட்டியிலிருந்து கையை எடுத்துவிட்டுச் சேரமானைக் கீழே தள்ளுகிறான் இராஜாதிராஜன். யானையிலிருந்து தலைகீழாகக் கீழே விழுகிறான் சேரமான். அவன் கீழே விழுவதற்கும், முன்னோக்கிச் செல்லும் யானையின் பின் கால் சேரமானின் வயிற்றில் பதிவதற்கும் சரியாக இருக்கிறது. சேரமானின் வயிறு பிளந்து, நசுங்கி, குடல் பிதுங்கி வெளிவருகின்றது. முதுகெலும்பு, தொடை எலும்புகள் உடைந்து போகின்றன. யானையை நிறுத்தி விட்டுக் கீழிறங்குகிறான் இராஜாதிராஜன்.

தமிழ் இனி மெல்ல [34] தொடர்கிறது
அரிசோனா மகாதேவன் 

இரத்த வெள்ளத்தில் கிடக்கிறான் சேரமான். அவனருகில் செல்கிறான் இராஜாதிராஜன். ”சேரமான் அவர்களே! நான் உங்களை வெல்லத்தான் நினைத்தேன். ஆனால் உங்களுக்கு இப்படி ஒரு முடிவு வரும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை.” என்று மெல்லக் கூறினான்.
அவனை உற்று நோக்குகிறான் சேரமான். அவனுடைய கண்கள் வலியின் வேதனை தெரிகிறது. இராஜாதிராஜனை வாழ்த்துவது போல் கைகளை மெதுவாக உயர்த்தி ஆட்டுகிறான். அப்படியே தொப்பென்று கை கீழே விழுகிறது. கண்கள் திறந்தபடியே சேரமானின் உயிர் பிரிகிறது. அவன் கண் இமைகளில் விரல்களை வைத்து மூடுகிறான் இராஜாதிராஜன்.

இராஜாதிராஜன் சேரமானின் யானையை அமரவைத்து, அவனது உடலை அம்பாரியில் கிடத்துகிறான். சேரனின் யானைத் தட்டி அனுப்பிய பிறகு தனது யானையில் அமர்ந்து கொண்டு சோழர் பக்கம் திரும்புகிறான். சேரமானின் யானை பாண்டியர் பக்கம் நடந்து செல்கிறது. தான் கலந்து கொண்ட முதல் போரில் சேரமன்னனை வீழ்த்தியதாகச் சரித்திரம் சொல்லும், ஆயினும் அந்த வெற்றி தன்னைப் பொறுத்தவரை காலியான ஒன்றாகத்தான் இருக்கும் என்று இராஜாதிராஜன் உணர்கிறான். 

யானையில் இருந்து கீழே விழுந்து, அதன் காலில் மிதிபட்டுத்தானே சேரமான் பரிதாபமாகச் செத்தான்? தனது ஈட்டிக்கோ, வாளுக்கோ இரையாகவில்லையே! தான் ஈட்டியைப் பற்றி இழுத்தபோது மட்டும் சேரமான அதை விட்டுவிட்டிருந்தால் தானல்லவா யானையிலிருந்து கீழே விழுந்திருப்போம்? பலவிதமான எண்ணங்கள் உள்ளுள் எழுந்தவாறே திரும்பி வரும் அவனுக்குச் சோழவீரர்களின் ஆரவாரம் ஏனோ மகிழ்ச்சியை உண்டாக்கவில்லை.

திரும்பி வந்த சேரமானின் யானையைக் கண்டதும் அமரபுஜங்கனுக்குள் ஏதோ ஒன்று உறுத்துகிறது. தனக்கு உதவியாக வந்த சிங்களப் படைத்தலைவனும், சேரமான் கோவர்த்தன மார்த்தாண்டனும் இறந்துவிட்டார்கள். பாண்டியப் படைத் தலைவரும் சிவாச்சாரியனால் சிறைப் பிடிக்கப் பட்டுவிட்டார். இரண்டு ஆண்டுகளாகத் தான் மிக முயன்று தீட்டிய திட்டம் கண்முன்னால் பொடிப்பொடியாவது அவனுக்கு மிகுந்த துயரத்தைத் தருகிறது.

“நான் இராஜராஜனைச் சிறைப் பிடிப்பேன். அவனைப் பலவிதமான அவமானங்களுக்கு உள்ளாக்கி, சேரமான் மற்றும் சிங்களப் படைத் தலைவனின் உயிரிழப்புக்குப் பழி வாங்குவேன். சொக்கநாதா! எனக்கு வெற்றியை அருளப்பா! மதுரையை ஆண்ட அழகேசா! மதுரையை தலை நிமிர்ந்து நிற்க வழி செய் ஐயனே! மதுரையின் புகழை நிலைநாட்டத் திக்விஜயம் செய்த அங்கயற்கண்ணி அம்மா! என் வாளில் இருந்து தஞ்சைச் சோழனை வீழ்த்த வழி செய் அம்மா! பாண்டிய நாட்டின் பெருமை உன் கையில் தானம்மா இருக்கிறது!”  என்று மனமுருகி வேண்டிக்கொண்டு போரிட வேண்டிய பெரிய வாளைக் கையில் எடுக்கிறான். சிவாச்சாரியனும், இராஜேந்திரனும் போரிட்ட வகையான வாள்தான் அது. அதைக் கையில் எடுத்துக்கொண்டு கமபங்களைத் தாண்டி பொட்டலின் உள்ளே நுழைகிறான்.
மேற்குத் திக்கிலிருந்து இராஜராஜர் அதே மாதிரி வாளை எடுத்துக்கொண்டு தன்னை நோக்கி வருவது அவன் கண்களுக்குத் தெரிகிறது. கண்களில் வெறியுடன் வேகமாக இராஜராஜரை நோக்கி நடக்கிறான். அவன் உடலில் ஜிவுஜிவென்று வெறியேறுகிறது.
                                                            * * *

                                               அத்தியாயம் 11
                  கொள்ளிடத்திற்கு இரண்டு காதம் வடக்கே
                         பரிதாபி, ஆனி 22 - ஜூலை 7, 1012

தங்கம் போல மின்னுகிறது கொள்ளிடத்தின் நீர்ப்போக்கு - சாயும் கதிரவனின் ஒளிபட்டு. அந்த கண்கொள்ளாக் காட்சி இராஜேந்திரனின் கருத்தைக் கொள்ளை கொள்கிறது. வைத்த கண் வாங்காமல் தங்கப் பாளமாக ஓடும் நீரைக் கண்ணோக்குகிறான். நீரோட்டத்தில் வேகம் அதிகம் இல்லை. காவிரியின் வெள்ளத்திற்கு வடிகாலாக ஓடும் தண்ணீரைக் கொள்ளும் இடமாக இருந்து “கொள்ளிடம்” என்ற காரணப் பெயரைப் பெற்ற அப்பெரிய ஆறு பாதி அளவே தண்ணீரால் நிறைந்திருக்கிறது. எனவே மழைத் தண்ணீர் வடிந்திருக்கவேண்டும் என்று நினைத்துக் கொள்கிறான் இராஜேந்திரன். மறுநாள் காலையில் நீர்ப்போக்கு இன்னும் வடிந்துவிடும். ஆற்றைக் கடப்பது எளிதாகிவிடும் என்ற நினைப்புடன் தனது பாசறையை நோக்கி விரைவாகக் குதிரையைச் செலுத்துகிறான்.

அன்று காலையில் தில்லையை அடைந்த இராஜேந்திரன், தில்லை அந்தணர்கள் அவனுக்குப் பூரண கும்ப மரியாதை கொடுத்து, பூசை பல செய்து ஆடற்கூடத்தில் கூத்தாடும் சிவபிரானின் தரிசனம் செய்வித்ததும், தன்னை மறந்து சில கணங்கள் இறைவனுடன் ஒன்றிவிட்டு, மதிய உணவைக் கோவில் விடுதியில் முடித்துக்கொண்டு கிளம்பி, கதிரவன் சாயும் வேளைக்கு அரை நாழிகை முன்னர் வரை பயணித்து, அன்றிரவு கொள்ளிடத்திற்கு வடக்கே இரவைக் கழிக்க முடிவு செய்து, மாலை நீராட கொள்ளிடத்திற்கு வந்து சேர்ந்தவன் அதன் நீரோட்ட அழகில் தன்னைப் பறிகொடுத்தான்.

இராஜேந்திரனுடன் அவனது மெய்காப்பாளர்களும் பாசறைக்குத் திரும்புகிறார்கள். இளவரசர் வந்திருக்கிறார் என்று கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு, கோழி, காடை, கௌதாரி என்று நிறையப் பறவைகளை அவனது இரவு உணவுக்காகப் பாசறைக்கருகில் இருக்கும் தளிகைக் கூடாரத்திற்குக் கொண்டு வந்து சேர்த்திருந்தனர். அறுவடை செய்து பதமாக வைத்திருந்த சம்பா நெல்லைக் குத்தி எடுத்த அரிசியையும் மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றனர். இன்னொரு பக்கம் பச்சைக் காய்கறிகள் குவிந்து கிடக்கின்றன.

இராஜேந்திரன் பாசறைக்கு வரும் பொழுது சமையல் மணம் அவனது மூக்கைத் துளைக்கிறது. நிறைய நாள்கள் கோவில் விடுதிகளில் சைவச் சாப்பாட்டை உண்டு வந்த அவனது நாவில் அசைவ உணவின் மணம் எச்சிலை ஊறவைக்கிறது. உதவியாளன் கொடுத்த செம்புத் தண்ணீரில் கால்களை அலம்பிக் கொண்டு கூடாரத்திற்குள் நுழைகிறான்.

அவன் வந்ததும், இரவு உணவு கொண்டு வரப்படுகிறது. அவனுடன் நடுமண்டலத் தண்டநாயகர் ஈராயிரவன் பல்லவராயரும், இன்னும் நான்கு அணித் தலைவர்களும் உணவு கொள்ளச் சேர்ந்து கொள்கிறார்கள்.

இராஜேந்திரனின் மனதில் ஏதோ இனம் புரியாத உற்சாகம் தோன்றுகிறது. இப்பொழுது பாசறை அடுத்துத் தங்கியிருக்கும் இடம் தன் வாழ்வில் மட்டுமன்றி, சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரு முக்கியமான இடமாக ஆகக்கூடும் என்று அவன் மனதுள் ஏதோ ஒன்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஏன் அப்படிப்பட்ட உணர்வு தோன்றுகிறது என்று இராஜேந்திரன் சிந்திக்கிறான்.

தஞ்சையில் என்ன ஆயிற்று, தந்தை எப்படி இருக்கிறார் என்று இதுவரை இருந்து வந்த கவலை திடுமென்று நீங்கிவிட்டது போன்ற ஒரு உணர்வும் தோன்றுகிறது. அந்த இடம் தந்த நிம்மதியால் அவனையும் அறியாமல் அவனது முகம் சற்று பெருமிதத்துடன் மலர்கிறது.

“அரசே! உணவு நன்றாக இருக்கிறதா? தங்கள் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறதே!” என்று ஒரு முழுக் கோழியையும், ஒரு பாத்திரம் நிறையச் சோற்றையும், நிறையக் காய்கறிகளையும், ஒரு மொந்தை கள்ளையும் உள்ளே தள்ளிய நிறைவில் முக மலர்ச்சியுடன் கேட்கிறார் பல்லவராயர்.

“என்ன கேட்டீர் பல்லவராயரே? ஆழந்த சிந்தனையில் இருந்ததால் உம்முடைய கேள்வி சரியாக என் செவியில் விழவில்லை!” என்று புன்னகையுடன் பதிலளிக்கிறான் இராஜேந்திரன்.

பெருமூச்சு விட்டால் கூட விழிப்பாகிவிடும் மன்னன் இப்பொழுது தான் கேட்டதைச் செவி மடுக்கவில்லை என்று கூறுவது பல்லவராயருக்கு வியப்பாக இருக்கிறது. “அரசே! நான் தங்களது முகத்தில் இப்பொழுதுதான் மகிழ்வைக் கண்ணுறுகிறேன். அப்படித் தங்களை மகிழ்வித்த சிந்தனையைத் தாங்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டால் எனக்கும் மகிழ்வாக இருக்கும்.” என்று வினவுகிறார் பல்லவராயர்.

“அதிலென்ன பல்லவராயரே! ஏதோ இனம் தெரியாத பெருமிதத்தை இந்த இடம் என் நெஞ்சில் நிரப்புகின்றது. இந்த இடம் சோழ சாம்ராஜ்ஜியம் மட்டுமல்லாது இந்தப் பாரதப் பூமி, மற்றும் திரை கடல் கடந்தும் புகழ் பெறப் போகிறது என்று எனது உள்ளுணர்வு கூறுகிறது. தவிர மனதில் இதுவரை இருந்துவந்த பாரமும் நீங்கியதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. அதனால் என் முகத்தில் ஏற்பட்ட தெளிவே மகிழ்ச்சியாகப் பரவியதோ என்னவோ?” என்று பதிலளிக்கிறான் இராஜேந்திரன்.

“இந்த இடமா? அப்படி எனக்கு ஒன்றும் தோன்றவில்லையே? அரசே, எனக்கு போரைப் பற்றியும், உணவைப் பற்றியும்தான் தெரியும். இடங்களின் சிறப்புகளைப் பற்றி நான் என்ன அறிவேன்?” தொலைநோக்குப் பார்வை உள்ள தங்களுக்குத்தான் புவியின் சிறப்பு அதிர்வுகள் புலனாகின்றன.” என்று தன் நிலையைத் தெளிவாக்குகிறார்.

அச்சமயம் கூடாரத்தின் வாயிலில் ஏதோ காலடிச் சத்தம் கேட்கிறது. மெய்க்காப்பாளனுடன் ஒரு ஓலைதாங்கி உள்ளே நுழைகிறான். தொடர்ந்து பயணம் செய்து வந்ததினால் அவன் உடல் வேர்த்து விறுவிறுத்து இருக்கிறது. இராஜேந்திரனுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, “அரசே! சக்கரவர்த்திகள் தங்களுக்குத் திருமுகம் அனுப்பி உள்ளார். இதோ!” என்று திருமுகக் குழலை நீட்டுகிறான். பரபரப்புடன் அதைப் படித்த இராஜேந்திரனின் முகம் கதிரவனைப் போலச் சுடர்விடுகிறது.

“வெற்றி! வெற்றி!! வெற்றியோ வெற்றி!!!” என்று துள்ளிக் குதிக்கிறான்.

“தந்தையார் பாண்டிய மன்னன் அமரபுஜங்கனைச் சிறைப்பிடித்து விட்டாராம். இளவரசன் இராஜாதிராஜன் தென்சேரன் கோவர்த்தன மார்த்தாண்டனை யானைப் போரில் யமனுலகுக்கு அனுப்பினானாம். சிவாச்சாரியார் பாண்டியப் படைத்தலைவனைச் சிறைப்பிடித்தாராம். ஆறாயிரம் பாண்டியப் படையினர் உயரிழந்தும் சோழப் படையினர் ஒருவர் கூட உயிரிழக்கவில்லையாம். என்னை நிதானமாகத் தஞ்சை வரும்படி தந்தையார் செய்தி அனுப்பியிருக்கிறார்.

“என்னால் நம்பவே முடியவில்லை! எதிரிப் படையினர் ஆறாயிரம் பேர் அழிந்தும் நமது வீரர் ஒருவர்கூட இறக்கவில்லையா? ஓலைதாங்கியே! இந்த நல்ல செய்திக்காக இந்தா எமது பரிசு!” என்று தன் கையில் இருந்த தஙகக் கங்கணத்தைக் கழட்டி தூதுவனிடம் நீட்டுகிறான் இராஜேந்திரன். பணிவுடன் அதைப் பெற்றுக் கொண்ட தூதுவனின் வாயெல்லாம் பல்லாக மலர்கிறது.

“விளக்கமாகச் சொல். போர் எப்படி நிகழ்ந்தது? தந்தை பாண்டிய மன்னனை எப்படிச் சிறைப் பிடித்தார்? ஆறாயிரம் பேரை எப்படி அழிக்க முடிந்தது?” என்று பரபரப்புடன் மகிழ்ச்சி மிகுந்த குரலில் வினவுகிறான் இராஜேந்திரன்.

“அரசே! நான் தஞ்சையிலிருந்து வருகிறேன். நான் போரில் கலந்து கொள்ளவில்லை. தங்களிடம் விரைவாகச் சேர்க்க வேண்டும் என்று தஞ்சையில் சிவாச்சாரியார் என்னிடம் திருமுகத்தைக் கொடுத்து அனுப்பினார். தங்களைக் கண்டுபிடித்து இத்திருமுகத்தைச் சேர்ப்பிக்கும்வரை நான் உறங்கக்கூடாது, உணவுக்குத் தவிர வேறெதற்கும் நிற்கக்கூடாது என்றும் கட்டளையிட்டார். திருமுகத்தில் என்ன இருக்கிறது என்றோ, மற்றபடி வேறு எந்தத் தகவலுமோ என்னிடம் தெரிவிக்கவில்லை. கொள்ளிடத்தைக் கடக்கத்தான் மிகவும் சிரமப்பட்டு விட்டேன்.” பணிவுடன் பதிலிறுக்கிறான் ஓலைதாங்கி.

“சிவாச்சாரியார் வேறு ஒன்றும் சொல்லவில்லையா?” என்று கேட்கிறான் இராஜேந்திரன்.

“இல்லை அரசே! அவர் மிகுந்த படபடப்புடன் காணப்பட்டார். அவர் முகத்தில் ஒரு பரபரப்பு இருந்தது. வேறு அலுவல் இருக்கிறது என்று உடனே கிளம்பி விட்டார்” பதில் வருகிறது ஓலைதாங்கியிடமிருந்து.

“சரி, நீ போகலாம். நமக்குச் சமைத்த உணவை தளிகைக் கூடாரத்திற்குச் சென்று உண்டு களைப்பாறுவாயாக!” என்று ஓலைதாங்கியை அனுப்பி விடுகிறான் இராஜேந்திரன். மற்றவர்கள் கூடாரத்தில் இருந்து வெளியேறுகின்றனர்.

சிறிது நேரம் அமைதியில் ஆழ்ந்த வண்ணம் கூடாரத்திற்குள் முன்னும் பின்னும் நடை பயில்கிறான். அவன் முகம் பெரிதாக மலர்கிறது. மிகுந்த உற்சாகத்துடன் பல்லவராயரின் தோளில் தட்டுகிறான்.

“பல்லவராயரே! இத்தனை நேரம் நான் நினைத்தது சரியாகிவிட்டது! இந்த நிலம் என் கவலைப் பளுவை இறக்கிவைத்தது என்று நான் பகர்ந்தது எவ்வளவு உண்மை ஆகியது பார்த்தீரா? தந்தையாரிடமிருந்து வெற்றிச் செய்தி வந்துவிட்டது. இது வெற்றிகொள்ளும் இடம். இதை “ஜெயங்கொண்டம்” என்று அழைத்தால் மிகையாகாது. இந்த இடத்தில் நான் பெருவுடையாருக்கு ஒரு கோவில் எழுப்பப் போகிறேன். எனவே இந்த இடத்தை ஜெயங்கொண்ட சோழபுரம்46 என்று அழைப்போம்.”

உற்சாகமாக பேசிக்கொண்டே செல்கிறான் இராஜேந்திரன். “ஆமாத்தியரே! இந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்று அறிந்து அவர்களிடமிருந்து இந்நிலத்தைக் கொள்முதல் செய்வீராக. கிட்டத்தட்ட ஐந்து கல்லுக்கு ஐந்து கல் பரப்பளவு உள்ள நிலம் வாங்கப்பட வேண்டும். நில உரிமையாளர்களுக்கு நல்ல நன்செய் நிலத்தை மாற்றாகக் கொடுக்க ஏற்பாடு செய்வீராக! நமக்கு வெற்றிச் செய்தி அறிவிக்கப்பட்ட இக் கூடாரத்தின் அருகே பெருவுடையாருக்கு கற்றளி எழுப்ப நிச்சயிக்கிறேன். அதற்கு பெருவுடையார் அருள் செய்வாராக!”  என்று கண்களை மூடி ஒரு நிமிடம் கைகூப்பிப் பிராத்தனை செய்கிறான்.

பல்லவராயருக்கு ஒரே அதிர்ச்சியாக இருக்கிறது. சக்கரவர்த்திகள் போரில் வென்றார் என்ற செய்தி அளவில்லா மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், இராஜேந்திரன் இப்படி திடுதிப்பென்று காட்டுப்புறத்தில் ஒரு நகரை நிர்மாணிக்கவும், தஞ்சைப் பெரிய கோவிலைப் போல ஒரு கோவிலைக் கட்டவும் தீர்மானம் செய்து விட்டானே, இது சக்கரவர்த்திகளுக்கு போட்டியாக அமைந்து விடாதா என்று கவலையுடன் குழம்புகிறார். எது எப்படியிருந்தாலும் தான் வாயை மூடிக் கொண்டுதான் இருப்பது சாலச் சிறந்தது என்ற முடிவுக்கு வருகிறார்.

அவர் மனதில் ஓடுவதை அறிந்து கொண்டவன் போல, “பல்லவராயரே, என் மனதில் தோன்றியதை வெளிப்படுத்தாமல் இருப்பதே சாலச் சிறந்ததாகும். காலைக் கடன்கள் கழித்தவுடன் நான் உடனே தஞ்சைக்குப் புறப்படலாமென்று இருக்கிறேன். நீர் படைகளுடன் மெதுவாக வருவீராக. எல்லாம் சரியாக இருந்தால் சிவாச்சாரியார் இங்கு வந்திருப்பார். அப்படி இல்லாமல் சிவாச்சாரியார் பரபரப்பாக இருந்தார் என்பதும், ஓலைதாங்கியை அனுப்பியதும் எனக்கு ஒருவித கலக்கத்தை ஏற்படுத்துகிறது. தஞ்சையை அடைந்து தந்தையாரை நேரில் கண்டால்தான் மனது நிம்மதி அடையும். அனைவரும் என்னைத் தனியாக இருக்க விடுவீர்களாக.” என்று சொல்லி அவரையும் கூடாரத்திலிருந்து அனுப்பிய பிறகு கூடாரத்திற்குள் முன்னும் பின்னும் நடந்து சிந்திக்க ஆரம்பிக்கிறான்.[வளரும்]
                                                              * * *
அடிக்குறிப்பு 

46இராஜேந்திரனின் தலைநகரான “கங்கை கொண்ட சோழபுரம்” முதலில் ஜெயங்கொண்ட சோழபுரம் என்று அழைக்கப்பட்டது. தஞ்சைப் பெரிய கோவிலைப் போல ஒரு கோவிலை அங்கு கட்டுவித்த இராஜேந்திரன் கங்கை நீரை கோவில் குடமுழக்குக்காகக் கொண்டு வந்ததால் இந்த ஊர் “கங்கை கொண்ட சோழபுரம்” என்று அழைக்கப்பட்டது. இப்பொழுது கங்கைகொண்ட சோழபுரம் ஜெயங்கொண்டம் என்ற ஊருக்கு அருகில் ஒரு சிற்றூராக உள்ளது.

No comments:

Post a Comment