Saturday, 16 August 2014

எனது முதல் நூல் :ஜி.ஜே.தமிழ்ச்செல்வி


                     எனது முதல் நூல்         
ஜி.ஜே.தமிழ்ச்செல்வி 

முதல் முத்தம், முதல் இரவு ,முதல் குழந்தை, முதல் நண்பர் இப்படி எத்தனையோ முதல் முதல்களுக்கு ஒரு மறக்கவே முடியாத தனிப் பண்பு உண்டு. அந்த வகையில் முதல் நூல் வெளிவரும்போது ஏற்படும் உணர்வுகள் தனிக் கிளர்ச்சியை ஏற்படுத்துவன.  
என் வார்ப்பில், என் நெகிழ்வில், என் உணர்வுகளின் வசப்படுதல் அற்ற தருணங்களில் வந்த ஒவ்வொரு எழுத்தின் உயிர்ப்பலைகள் தொடுத்த மாலை தான் இது நிகழாதிருந்திருக்கலாம்.

  மின்தமிழ், பண்புடன் குழுமங்களிலும், விண்முகில் வலைப் பக்கத்திலும் என் கவிதைகளை படித்த திரு. சி. ஜெயபாரதன் அவர்கள், "தமிழ்ச்செல்வி உங்கள் கவிதைகளை மெருகேற்றலாம். அழகாக்கலாம், நல்ல சொல்வளம் உங்களுக்கு" என்ற போது, நன்றி அய்யா என்று சொல்லி ஒரே ஓட்டமாக ஓடிப்போனேன். மெருகாக்குதல் அழகாக்குதல் இதெல்லாம் எனக்கு தெரியாத ஒன்று. நான் எழுதிய கவிதையை திரும்ப ஒரு பத்து நாட்கள் கழித்து கேட்டால் நானா எழுதினேன் என்று யோசிக்கக் கூடியவள் நான்.

  மனதில் எழுதியே தீரவேண்டும், இப்பொழுது எழுதித் தான் ஆக வேண்டும் இதற்கு மாற்றாக எதுவுமே இல்லை என்ற நிலையிலே தான்  எழுதுவேன். தோன்றாவிட்டால் வேறு வேலைப் பார்க்கப் போய்விடுவேன். ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக் கொண்டு இந்தக்கருவை  வைத்து நாம் ஒரு கவிதை எழுதலாம் என்று இதுவரையில் என்னால் முடிந்ததில்லை.

  நான் வாசித்தது அதிகம் அதாவது என் 8 வயதில் இருந்து 19 வயதான காலக் கட்டங்களில். எழுத்து எனக்கு உற்ற நண்பனாக, துணைவனாக,ஆசானாக இருந்து  வந்திருக்கிறது நூல் வாசிப்பு . அதன்பிறகு நான் எழுதவோ படிக்கவோ இல்லை. சிறிது நாட்களுக்குப் பிறகு தான் நான் மீண்டும் எழுத துவங்கியது, இப்போது நான் செய்து கொண்டிருக்கும் வேலையும் இணையமும் கிட்டியதால் தான். இரவு வெகு நேரம் தனித்து இரவு பணி செய்யும் வாய்ப்பும், இணையம் மூலமாக எனக்கு கிடைத்த முதல் நட்பான படுகை.காம் அதன் மூலம் வந்த நண்பர் தமிழ்ராஜாவின் ஊக்கப்படுத்துதல் எழுத களம் அமைத்து தந்த படுகையின் உரிமையாளர் ஆதித்தன், ஊக்கப்படுத்தவென வலம் வந்த அருந்தா மற்றும் சுமையா
,
 இன்னும் பலர்…அதன் பிறகு தொழிற்களம் அருணேஷின் அறிமுகம், சும்மா எழுதுக்கா எழுதுக்கான்னு கூலா சொல்லிட்டு போன மிக அருமையான சகோதரர் அவர். அதன் பிறகு ஜீவ்ஸ் என் மானசீக குரு, கவிதைன்னா இப்படி இருக்கனும்னு சொன்னவர். சில கவிதைகள் அவர் பாராட்டைப் பெறவேண்டும் என்று எழுதி ஜஸ்ட் பாசான தருணங்கள். 

  ம் ஓகே ஆனா இது கவிதை அல்ல என்று ஜீவ்ஸ் ன் வாய்சில் நானே சொல்லிக்கொண்டதுண்டு. இந்த கவிதைத்தொகுப்பு என் எழுத்தின் ஆரம்ப கால பயண ஓட்டம்.

காகிதத்தில் பதிப்பித்து ஜி.ஜே.தமிழ்ச்செல்வியின் எழுத்துலகத்தை மற்றொரு களத்திற்கு கொண்டுச் சென்ற , வையவன் அவர்களை என்னால் மறக்க முடியாது. என்னைப் புகழேணிக்குகே கொண்டு செல்ல அவர் எடுத்த முதல் முயற்சி தான் இது நிகழாதிருந்திருக்கலாம்.
                              
 அவருக்கு வெறும் வார்த்தைகளால் நன்றி சொல்வது போதாது. என் மீது அன்பும் அக்கறையும் கொண்ட ஒருவரை  இறைவனே திரு ஜெயபாரதன் ஐயா மூலம் வையவன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.அவரது  தாரிணி பதிப்பகத்தாருக்கு இதயம் கனிந்த நன்றி. 

இந்த தொகுப்பு ஒரு மழலையில் கிறுக்கல்களை மகிழ்ந்து ஓவியமாக ரசிக்கும் இயல்புதான் என்பால்  அக்கறைக்கொண்டவர்களிடத்தில் இருந்தது. அந்த வரிசையில் நான் கேட்டதும், அணிந்துரை வழங்கிய கவிஞர்.மகுடேஸ்வரன் அவர்களுக்கும், நான் கேட்காமலேயே… அணிந்துரை வழங்கி கௌரவித்த திருமதி.பூங்குழலி , திருமதி ஜெயஸ்ரீ ,மற்றும் திருமதி.பவளசங்கரி அவர்களுக்கும் எனது  கனிவான நன்றிகள்.

என் எழுத்துக்களை புத்தக வடிவில் ஏந்தியபோது ஒரு சிலிர்ப்பு மனதை நிறைத்தது. முழுவதும் இலக்கணத்துடனோ அல்லது இலக்கியமாகவோ இதைப் பார்த்தால் ஒரு பூஜ்ஜியம் அங்கு இருக்கும். ஒரு படைப்பாளியின் முதல் புத்தக அனுபவம் என்று பார்த்தால் அனைவர் உள்ளமும் நட்புடன் சிரிக்கும்.

என் எழுத்துக்களை புத்தக வடிவில் ஏந்தியபோது ஒரு சிலிர்ப்பு மனதை நிறைத்தது. முழுவதும் இலக்கணத்துடனோ அல்லது இலக்கியமாகவோ இதைப்பார்த்தால் ஒரு பூஜ்ஜியம் அங்கு இருக்கும். ஒரு படைப்பாளியின் முதல் புத்தக அனுபவம் என்று பார்த்தால் அனைவர் உள்ளமும் நட்புடன் சிரிக்கும்.

இங்கு நான் கூற விரும்பும் நன்றி என் பெற்றோருக்கு, காலஞ்சென்ற என் தந்தையார் நான் எழுத்துலகிற்கு வரவேண்டும் என்று விரும்பினார். துண்டுக்  காகிதங்களில் எழுதிய என் எழுத்துக்களை படித்துவிட்டு என் பெண் அறிவாளி என்று புகழ்ந்துக்கொண்டிருபார் . அப்பொழுது அது எனக்கு தவறாக தோன்றி அதிக நாட்கள் சண்டை போட்டிருக்கிறேன் அவரோடு. ஆனால் இப்போது மிகவும் வருந்துகிறேன். நன்றி என்று சொல்லி ஒரு வார்த்தையில் நிறைவு செய்துவிட முடியாது இந்த நிகழ்வை.

என் தாயார் இன்று நான் உங்கள் முன் உயிருடன் இருக்க காரணமானவர். "வெறும் கண்ணு மட்டும் தான் அசையுது இந்த குழந்தைய காப்பாற்றி என்ன செய்யப்போற பேசாம கொஞ்சம் இளநீர் ஊற்றிடு ஜன்னி கண்டு தானா செத்துடும் !" என்று சொன்னவர்களிடம் சண்டைபோட்டு இன்று வரை இந்தக்  கணம் வரை என் ஒவ்வொரு அசைவிற்கும் உறுதுணையாக இருப்பவர்.

இந்த புத்தகத்ததின் நிறை குறைகளை கடந்து, இந்த புத்தகத்தை கையில் ஏந்திய போது அவள் விழிகளில் கசிந்த கண்ணீர் ஒன்றே எனக்கான உந்துதல் பரிசு.

வாழ்வில் எதுவும் நிகழாதிருந்திருந்தால் இதுவும் நிகழாதிருந்திருக்கும். இந்த நெகிழ்ச்சிக்கு இந்த நிகழ்தல் விதிக்கப்பட்டது என்று எண்ணுகிறேன்.

என்னை ஊக்கப்படுத்திய மின்தமிழ் மற்றும் பண்புடன் குழும நண்பர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள்.


மீண்டும் ஒரு முறை மீண்டும் ஒரு முறை புத்தகம் வெளிவர காரணராக இருந்த அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள் பல. என்னை ஊக்கப்படுத்திய வலைபதிவர் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.புத்தகம் வெளிவர காரணராக இருந்த அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள் பல.



No comments:

Post a Comment