ஜன்னல் இல்லாத விமானங்கள்!
அரிசோனா மகாதேவன் |
ஆகாய விமானத்தில் பறக்கிறோம் கீழே மேகங்கள்.பச்சைக் கைக்குட்டை போல் பரவிய வயல்வெளிகள்.பாம்பின் அளவு போல் சிறுத்து விட்ட ஜீவநதிகளின் தோற்றம் பார்த்துக்கொண்டே பயணிப்பது ஒரு தனி சுகம்.
இனிமேல் அப்படி பயணிக்க முடியாது என்ற கால கட்டம் ஒன்று வரலாம் , ஆம்!ஜன்னலே இல்லாத விமானங்களின் காலம் வந்து கொண்டிருக்கிறது?
அலுமினிய உருளைக்குள் அடைக்கப்பட்ட சார்டைன் மீன்களைப்போல நம் மாரிவிடப்போகிறோம் நிலைமை ஆகிவிடாதா? இப்பொழுதே நிலைமை அப்படித்தான் இருக்கிறது. குறைந்த பட்சம் வெளி உலகமாவது தெரிகிறதே என்று பார்த்தால், இப்படி ஒரு விபரீத எண்ணம் ஏன் விமான வடிமைப்பவர்களுக்கு ஏற்படவேண்டும்?
டெக்னிகான் என்று ஒரு நிறுவனமும், ஸ்பைக் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனமும் அப்படி ஒரு வடிவமைப்பைச்செய்துள்ளன.windowless planes
அந்த நிறுவனங்களின் விஞ்ஞானிகள் வடிவமைத்த விமானங்களின் உள்பக்கச் சுவர்களிலும், கூரைகளிலும் ஒரு புதுமையான திரை ஒட்டப்பட்டுள்ளது. விமானத்தின் வெளியில் தெரியும் காட்சி அந்தத் திரைகளில் காண்பிக்கப்படும். இதற்காக விமானத்தின் இறக்கைகள், மூக்கு, உடல் எல்லாம் சிறப்பான காமிராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
டெக்னிகான் நிறுவனம் இந்த விமானத்திற்கு இக்சியான் ஜெட் என்று பெயரிட்டுள்ளது. இந்த வடிவமைப்பு நேஷனல் பிசினெஸ் ஏவியேஷன் அசோசியேஷன் கண்காட்சியில் காட்டப்பட்டுள்ளது.
பிரான்சு நாட்டில் உள்ள அந்த நிறுவனத்தின் வடிவமைப்பு இயக்குனர் (டிசைன் டைரக்டர்) தலைமையில் இந்த விமானத்தின் உள்ளமைப்பு காட்டப்பட்டது.
இந்த விமானத்தின் உட்புறத் திரைகளில் வெளித்தோற்றம் மட்டுமல்லாது, வேறு எந்தக் காட்சிகளை வேண்டுமானாலும் திரையிடலாம். விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே, மழைக்காட்டினுள் இருப்பது போலவோ, பாரிஸ் மாநகரத்தின் தெருக்களில் உலாவுவது போலவோ, அல்லது விண்வெளியில் தாரகைகளினூடே விரைந்து செல்வதுபோலவோ திரையிடலாம். விமானத்தில் இருந்தபடியே நாம் “ஸ்கைப்”பில் பேசுவதுபோல, நண்பர்களுடன் பேசி மகிழலாம். இல்லை, புது விதமான சுற்றித் தெரியும் திரைப்படங்களைக்கூடக் கண்டு மகிழலாம்.
இம்மாதிரியான காட்சிகள் காணக் கிடைக்கும்போது, ஒரு அடிக்கு முக்கால் அடி அளவுள்ள ஜன்னல்கள் எதற்கு என்றுதானே தோன்றுகிறது!
ஆனால், இந்த விமானங்களைத் தேடி அருகில் உள்ள விமான நிலையங்களுக்குச் சென்று விடாதீர்கள்! இந்த விமானங்கள் நடைமுறைக்கு வருவதற்குப் பல ஆண்டுகள் ஆனாலும் ஆகலாம்.
இப்படியே போனால், ஜன்னலில்லாத கார்கள் வந்து விடும் அந்தக்காலமும் நெருங்கி வருகிறது
No comments:
Post a Comment