Saturday 30 August 2014

தமிழ் இனி மெல்ல:[42] இரண்டாம் பாகம் முற்றும்


தமிழ் இனி மெல்ல:[41] சென்ற இதழ் பதிவின் இறுதியில் 
ஆடாமல் அசையாமல், இளஞ்சேரனையே கண்வாங்காமல் பார்த்தபடி நின்றான் சிவாச்சாரி. நரேந்திரன் கை உடைவாளை நோக்கிச் சென்றது. சட்டென்று அவன் கையைத் தனது இடது கையால் உடும்புப் பிடியாகப் பிடித்தான் சிவாச்சாரி.

“சோழ நாயே! எனது அமைச்சரைக் குள்ளநரி என்று தரக்குறைவாகப் பேசுவாயா இனிமேல்?” என்று அரசவையே அதிரும்படி மறுமுறை அறைந்தான். “நன்றாய்த் தெரிந்துகொள்! நான் உன் மன்னனுக்குத் திரை செலுத்த மாட்டேன்! மனித பாஷையான உனது பாஷையைப் பட்டயங்களில் எழுத மாட்டேன். நீ செய்த குற்றத்திற்காக உன்னைக் கொல்ல வேண்டும். தூதனாக வந்ததால் உன்னை வாழ்நாள் முழுவதும் கடுஞ் சிறையில் கழிக்கும் தண்டனையை வழங்குகிறேன். யாரங்கே! இருவரையும் விலங்கு மாட்டிச் சிறையில் தள்ளுங்கள்!”  என்று கர்ஜித்தான்.

சபையே அதிர்ந்து போயிற்று. அனைவரும் சோழப் பேரரசின் வலிமையை நன்கு அறிவார்கள் ஏதாவது சாக்கு சொல்லி, பாதி பொருள்களையாவது கொடுத்தனுப்புவதை விட்டுவிட்டு, ஒரு தூதுவனை, அதுவும், சோழப் பேரரசின் உயர் அதிகாரியை, அனைவருக்கும் முன்னே கன்னத்தில் அறைவது என்ன விளைவை ஏற்படுத்துமோ என்னும் அச்சம் அவையோர் அனைவரையும் சூழ்ந்து கொண்டது.

சிறிதும் கலங்காமல், தலை குனியாமல் சேரனை விழித்துப் பார்த்தபடி பதிலளித்தான் சிவாச்சாரி. “சேரமான் அவர்களே! மூவேந்தர் பரம்பரையில் வந்த தாங்கள் சேரர் குலத்திற்கே அழியாப் பழியைத் தேடிக்கொடுத்து விட்டீர்கள்! ஒரு தூதுவனை இப்படியா நடத்துவது? தங்கள் அமைச்சர் என்னை நாயே என்று அழைத்ததைத் தடுத்து நிறுத்தாமல், தாங்களும் என்னை நாயே என்று விளித்தீர்கள்! அதுவும் என் பிறந்த பொன்னாட்டைக் கேவலப் படுத்தும் வகையில்!

“தங்கள் அமைச்சரைக் கழுதைப்புலி என்று அழைத்ததற்காக என்னைத் தாங்கள் சிறைப்படுத்தலாம். ஆனால் வேங்கை நாட்டு இளவரசர் அரசவையில் ஒரு சொல் கூட பேசவில்லை. அவரைத் திரும்பச் செல்லவிடுங்கள்! சிறந்த சேரர் குலத்திற்கு அவமானம் தேடிக் கொள்ளாதீர்கள்!”  அத்துடன் நரேந்திரனின் கையையும் மெல்லத் தளர்த்தினான்
தமிழ் இனி மெல்ல:[42] தொடர்கிறது 

 அரிசோனா மகாதேவன் 
“உங்களை விடாவிட்டால்?” உஷ்ணமான கேள்வி பிறந்தது சேரனிடமிருந்து.
“இளவரசர் சிறை செல்ல நான் அனுமதிக்க மாட்டேன்! அவரும் சிறைப்பட மாட்டார்! எங்கள் இருவரின் உயிர் பிரிந்தால்தான் அது நடக்கும். அது நடப்பதற்குமுன் இங்கு பலரின் உயிர்கள் பிரிய நேரிடும். அது நடக்க வேண்டுமா? அவரைச் செல்ல விடுங்கள்! நான் உங்களுக்குப் பிணைக் கைதி ஆக, எந்தவிதமான தொல்லையும் கொடுக்காமல் கைதி ஆக சம்மதிக்கிறேன். இளவரசர் தங்கள் பதிலை கோப்பரகேசரியாருக்கு எடுத்துச் செல்வார்!” சிவாச்சாரியின் குரலில் சிறிதும் நடுக்கமோ, அச்சமோ இல்லை - அமைதியான எச்சரிக்கைதான் இருந்தது.

“வேங்கை நாட்டுடன் எனக்குப் பகை இல்லை என்பதால் இளவரசரை மட்டும் நான் திரும்பிச் செல்ல அனுமதிக்கிறேன். அதற்குப் பதிலாக உன்னுடன் வந்த சோழ வீரர்கள் அனைவரையும் உன்னுடன் சிறையில் அடைக்கச் சம்மதிக்கிறாயா?” சேரனின் குரலில் எகத்தாளம் இருந்தது.

“சம்மதிக்கிறேன். இளவரசர் எனது சம்மதத்தை விடுதியில் இருக்கும் சோழ வீரர்களுக்குத் தெரிவிப்பார். அவர்கள் அதற்குக் கட்டுப்படுவார்கள்!” அமைதியாகத் தன் இலச்சினை மோதிரத்தை நரேந்திரனின் கையில் கழட்டிக் கொடுத்த சிவாச்சாரியனின் குரலில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லை. அவன் முகத்தில் தன் நிலைமை என்ன ஆகுமோ என்ற அச்சமும் இல்லை52... 

...குதிரையின் குளம்பொலி கேட்டு நினைவுக்கு வருகிறான் நரேந்திரன். அவனது குதிரையின் கடிவாளத்தை ஒரு கையில் பிடித்தவாறு அங்கு குதிரையில் வந்த வீரன் ஒருவன் அவனருகில் குதிரையை நிறுத்திக் கீழிறங்குகிறான்.

“வேங்கை நாட்டு இளவரசே! நான் சோழவீரன்தான். தாங்களும், சிவாச்சாரியாரும் சேரன் மாளிகைக்குச் செல்லும் முன்னர் ஓலைநாயகர் என்னைத் தனியாக ஒளிந்து கொள்ளுமாறும், தாங்கள் மட்டும் வெளியே வந்தால், மற்றவர்கள் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்திருந்து, தங்களைத் தொடர்ந்து வந்து, தாங்கள் உதகை எல்லையைத் தாண்டியதும், தங்களைச் சந்தித்து தஞ்சைக்கு அழைத்துச் செல்லுமாறும் பணித்தார்.” என்று அருகில் வருகிறான்.

சிவாச்சாரி எதைத்தான் முன்கூட்டியே யோசித்து முடிவெடுக்கவில்லை என்று வியக்கிறான் நரேந்திரன். பித்துப் பிடித்தவனைப் போல அல்லவா நடந்துகொண்டான் இளஞ்சேரன்! அந்தச் சேரமானுக்குச் சற்றும் தணிந்து செல்லவில்லையே சிவாச்சாரி! தன்னை விடுவிக்க என்ன துணிச்சலுடன் நடந்து கொண்டான்! இனி அவன் கதி என்ன ஆகுமோ? ஒருவேளை சேரமான் அவன் சொன்னதற்குச் சம்மதிக்காது போயிருந்தால்... ?

நினைத்துப் பார்க்கவே கலக்கமாக இருக்கிறது அவனுக்கு. இதுவரை போருக்குச் சென்றதே இல்லை அவன். தன்னைவிட வயதில் குறைந்த இராஜாதிராஜன், தென்சேரனை யானைப் போரில் வீழ்த்தினான் என்று கேள்விப் பட்டிருக்கிறான். இனி தானும் போருக்குச் செல்ல வேண்டும், உயிரை ஒவ்வொரு போரிலும் பணயம் வைக்க வேண்டும் என்று உணர்ந்தும் இருக்கிறான். முதன்முதலாக அப்படி உயிரைப் பணயம் வைக்கும் நிலை போரே இல்லாமல் வந்ததை நினைத்துப் பார்த்தால் ஒரு மாதிரியாக இருக்கிறது அவனுக்கு.

அவனது கவனத்தைக் கலைக்கிறான் சோழவீரன். “இளவரசே! சேரமானின் அரசவையில் ஏதாவது கைகலப்பு நிகழ்ந்து தங்கள் உயிருக்கு ஆபத்து நேரும் போலிருந்தால் நம்முடன் வந்த நூறு வீரர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்தாவது தங்கள் உயிரை மீட்க வேண்டும் என்றும் சிவாச்சாரி எங்களைப் பணித்திருந்தார். அதுதான், நமது வீரர்கள் விடுதியில் இல்லாமல், தங்கள் வருகைக்காக சேரமானின் மாளிகையின் வாயிலிலேயே காத்திருந்தார்கள்.” என்றும் சிவாச்சாரியனின் திட்டத்தைத் தெளிவுபடுத்துகிறான்.

சிவாச்சாரியனுக்கு சேரமான் இவ்வாறு நடந்து கொள்வான் என்று எப்படி முன்கூட்டியே ஊகிக்க முடிந்தது என்று மூளையைக் கசக்கிப் பிழிந்து பார்க்கிறான் நரேந்திரன். அவனுக்கு குழப்பம் மிஞ்சியதே தவிர, விடை ஒன்றும் கிடைக்கவில்லை.

“இளவரசே,  தாங்கள் மதியத்திலிருந்து உணவே உண்ணவில்லை. நான் கொஞ்சம் உணவு கொண்டு வந்திருக்கிறேன். அதை உண்டுவிட்டு, இரவை அந்தப் பாழடைந்த மண்டபத்தில் கழிப்போம். விடிந்ததும் மலையிலிருந்து இறங்க ஆரம்பிப்போம்.” என்று குதிரையின் பக்கவாட்டில் கட்டியிருந்த பையிலிருந்து உணவுப் பொட்டலத்தை எடுத்து அவனிடம் நீட்டினான் சோழவீரன்.
                                * * *
                                    நீலமலை அடிவாரம்
                       பிரமாதீச, மார்கழி 22 - ஜனவரி 7, 1014
சோழர் படை நீலமலை அடிவாரத்தில் வெற்றி முகாமிட்டிருக்கிறது. பதினைந்து நாட்களுக்கு முன்னர்தான் இளஞ்சேரனைப் போரில் வென்று, சேரப் படைகளில் பெரும்பாலோரை யமனுலகுக்கு அனுப்பிவிட்டு, வெற்றிவாகை சூடி, சிவாச்சாரியையும், சிறைப்பட்ட சோழ வீரர்களையும் விடுவித்திருக்கிறான் இராஜாதிராஜன்.

 கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களாகச் சேரனின் சிறையில் நாட்களைக் கழித்த சிவாச்சாரி, மீசை-தாடியுடன் தலை மயிரை உச்சியில் சுருட்டி முடிந்திருந்ததால் ஒரு முனிவரைப் போலக் காணப்படுகிறான்.

.
தலையில் கையை வைத்துக்கொண்டு குனிந்திருக்கிறான் சிவாச்சாரி. அவன் முன்னர் அமர்ந்திருக்கும் இராஜாதிராஜன், “ஏன் வீணாகக் கவலைப் படுகிறீர்கள் சிவாச்சாரியாரே! போர் என்றால் வீரர்கள் மடிவார்கள், நகரங்கள் அழியும். இது நீங்கள் அறியாததா!

“இந்தமட்டும் உங்களை உயிரோடு சிறை மீட்டது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாகத் தெரியுமா இருக்கிறது! உங்களுக்கு ஏதாவது ஆகியிருந்தால் நான் அக்காவுக்கு என்ன பதில் கொண்டு செல்ல இயலும்? தூதனாக வந்த உங்களைத் தகாத சொற்களால் அவமதித்து, தந்தையின் பிறப்பைப் பற்றியும் இழிவாகப் பேசிய சேரமானைத்தானே நீங்கள் காலனுக்கு இரையாக்கினீர்கள்! பின் ஏன் இந்த வருத்தம்?” என்று தேற்றுகிறான்.

“இளவரசே, என் ஒருவனுக்காக இத்தனை உயிர்கள் இறக்க வேண்டுமா? அதுமட்டுமல்ல, முதன்முறையாக நான் உயிர்க்கொலை செய்தேனே! அதுவும் ஒரு அரசனை, என்னை அவமானப்படுத்தியதற்காகக் கொன்றேனே!
“சிவபூசை செய்த நான் உயிர்க்கொலை செய்யலாமா? இது தகுமா? என் மனமே என்னைக் கொல்லுகிறது. அது மட்டுமா? என் பொருட்டு இயற்கை அன்னையின் மடியில் அழகுறத் தவழ்ந்த ஒரு நகரமே தீக்கு இரையாக்கப்பட்டு அழிந்ததே!

“என் நெஞ்சை இந்நிகழ்ச்சிகள் அரித்து எடுக்கின்றன, இளவரசே! பாண்டிய மன்னனுடன் நிகழ்ந்த போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் என்னால் அழிந்தனவே! இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்தால் என் இதயம் வெடித்து இரத்தம் பெருக்கெடுப்பது போல இருக்கிறது. இளவரசே! அதுதான் என்னால் தாங்க முடியவில்லை!” முகத்தில் இருந்த கையை எடுக்காமலேயே பதில் கூறுகிறான் சிவாச்சாரி.

இதுவரை அவன் முகத்திலோ, அவன் குரலிலோ எந்த விதமான தடுமாற்றத்தையும் கண்டதில்லை இராஜாதிராஜன். போர்க் கலையைப் பற்றி அவனுக்கு நிறைய போதித்திருக்கிறான் சிவாச்சாரி. இதுவரை அவனிடம் கழிவிரக்கத்தை அவன் கண்டதே இல்லை. ஒரு கர்ம வீரனைப் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறான்.

இதுகாறும் அவன் அந்தண குலத்தாரைப் போல குருதியைக் கண்டு மருகவில்லை. அவன் மனத்தில் உள்ளதையும் யாரிடமும் திறந்து சொன்னதில்லை. சிவாச்சாரியனின் உள் உருவத்தை, மன ஓட்டத்தை முதன் முதலாகக் காண்கிறான் இராஜாதிராஜா.

“சிவாச்சாரியாரே! ”“உதகையைக் கொளுத்திவிட்டு, சிவாச்சாரியாரைச் சிறைமீட்டு வா! இல்லையேல் என் முன் வராதே!”  என்று என்னை ஆணையிட்டு அனுப்பினார் தந்தையார். நான் அரச கட்டளையைத்தான் நிறைவேற்றினேன். இளஞ்சேரனையும் சிறைப்பிடித்து வரத்தான் நான் திட்டமிட்டிருந்தேன். ஆயுதம் எதுவும் இல்லாதிருந்த உங்களைக் கொல்ல அவன் சிறைக்கு வந்த போது, துணிச்சலுடன் தங்களைப் பிணைத்திருந்த சங்கிலிகளையே துணையாகக் கொண்டு அவனது கழுத்தை நெறித்துத் தலையைப் பிளந்து கொன்றீர்கள்.

“தன்னைக் கொல்ல வரும் பசுவையே கொல்லலாம் என்னும் சாத்திரத்தை அறியாதவரா நீங்கள்! தவிர, நீங்கள் சோழப் பேரரசின் திருமந்திர ஓலைநாயகர் ஆவீர்கள். தாங்கள் இப்படிக் கழிவிரக்கப்படுவது தங்கள் பதவிக்கு அழகு சேர்க்குமா? வீரத்துடன் புலியாக உறுமுங்கள். அதுதான் சரியாக இருக்கும்!” என்று சிவாச்சாரியனை உற்சாகப் படுத்துகிறான் இராஜாதிராஜன்.

“என் கழிவிரக்கத்தைத் தேற்றியதற்கு மிக்க நன்றி இளவரசே! இது நம்முடன் இருக்கட்டும். முக்கியமாக கோப்பரகேசரியாருக்கு இது தெரியவேண்டாம்!” என்று தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்துக் கேட்டுக் கொள்கிறான் சிவாச்சாரி. அவன் கண்கள் சிவந்து இருக்கின்றன. “இதுதான் நான் கழிவிரக்கப்படும் முதலும் கடைசித் தடவையும் ஆகும் வேங்கைநாட்டு இளவரசர் நலமாகத் தஞ்சை வந்து சேர்ந்தாரா? சக்கரவர்த்தி அவர்களும், நங்கையும், மற்றும் என் வீட்டில் அனைவரும் நலமாக இருக்கிறார்களா?”

“பாட்டனாரைத் தவிர அனைவரும் நலமாகத்தான் இருக்கிறார்கள் சிவாச்சாரியாரே! இரண்டு திங்கள் முன்பு பெருவுடையார் கோவிலுக்குச் சென்ற பாட்டனார், படியிலிருந்து தவறி விழுந்து விட்டார். அதில் அவரது கால் எலும்பு முறிந்து விட்டது. நுடமருத்துவர் முறிவைச் சரிசெய்து தைலம் தேய்த்துக் கட்டுப்போட்டு தற்பொழுது குணமடைந்திருக்கிறார்.

“அவர் நீங்கள் சிறைப்பட்டதை அறிந்து மிகவும் வருந்தினார். அக்கா வெளிப்படையாக ஏதும் சொல்லாது போனாலும் உள்ளூர மிகவும் நொந்து போயிருக்கிறாள். தங்களைச் சிறை மீட்டதுமே, விரைவாகச் செல்லும் குதிரை வீரர்கள் மூலம் செய்தி அனுப்பி உள்ளேன்.

“நரேந்திரன் போருக்குத் தானும் வருவதாகச் சொன்னான். தந்தையார்தான் கோழியடிக்க இரு குறுந்தடிகள் தேவையில்லை என்று அவனைத் தடுத்து நிறுத்தி விட்டார். குற்ற உணர்ச்சியுடன் இருக்கும் அவன் தற்பொழுது போரில் ஈடுபடுவது முறையல்ல என்று என்னிடம் பிற்பாடு சொன்னார். நாமும் கூடிய விரைவில் திரும்பிச் செல்வோம். சிறையில் இருந்ததால் நீங்கள் மிகவும் மெலிந்திருக்கிறீர்கள். ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்!” என்று கூடாரத்தை விட்டு வெளியேறுகிறான் இராஜாதிராஜன். வைக்கோல் மெத்தை இடப்பட்ட கயிற்றுக் கட்டிலில் தலை சாய்க்கிறான் சிவாச்சாரி.

அவன் மனம் இராஜராஜ நரேந்திரனைப் பற்றி சிந்தனை செய்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அவனுடன் இருந்திருக்கிறான் நரேந்திரன். அந்தக் காலம் முழுவதும் தாமரை இலைத் தண்ணீர் போலத்தான் அவர்களுடைய உறவு இருந்து வந்திருக்கிறது. சிவாச்சாரி எவ்வளவுதான் நட்புக் கரம் நீட்டினாலும் நரேந்திரன் ஒதுங்கியே இருந்து வந்திருக்கிறான். இராஜேந்திரனுடைய உத்திரவுப்படி தன்னுடன் நேரத்தைக் கழித்து வருகிறானே தவிர, தன்னுடன் இருப்பதற்குச் சிறிதளவுகூட விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாகவே காட்டி வருவது சிவாச்சாரியனுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

தன்மீது எதனால் நரேந்திரனுக்குக் காழ்ப்பு உணர்ச்சி இருக்கக்கூடும் என்று சிவாச்சாரியனுக்குத் தெரியாமல் இல்லை. ஆயினும் நிலவுமொழியின் மீது தோன்றிய பித்து, அது நிறைவேறாமல் போனதனால் ஏற்பட்ட ஏமாற்றம், தாய் குந்தவியின் கோபம், குதிரைக் காப்பாளன் முன்னால் பட்ட அவமானம் இவற்றிற்கு வடிகாலாக, அவனுடைய மொத்தக் காழ்ப்புணர்ச்சியும் தன்மீது பாய்ந்திருக்கிறது என்று அவன் உணர்கிறான்.

ஆயினும், நரேந்திரனுடைய இந்த மனநிலைமைக்குத் தான்தான் மூலகாரணம் என்று முடிவு எடுப்பது அரசனாகப் போகும் அவனுக்கு அழகல்ல என்பதை அவனுக்கு எப்படி எடுத்துச் சொல்வது? மறைமுகமாக என்ன சொன்னாலும் அதை உணரும் அளவுக்கு அவனது அறிவுத் திறன் விரிவடையாமல் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் சிவாச்சாரியனுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

வயதில் சிறியவனான இராஜாதிராஜனுக்கு இருக்கும் அறிவு முதிர்ச்சி நரேந்திரனுக்கு இல்லாது போனதை இராஜேந்திரன் உணர்ந்து கொண்டதால்தானே, அவனை உதகைப் போருக்கு அனுப்பவில்லை!

இதுவரை ஒரு போரையும் சந்திக்காத நரேந்திரன் எப்படி சோழப் பேரரசின் வட எல்லையில் இருக்கும் வேங்கை நாட்டைக் கட்டி ஆளப் போகிறான்?  இந்நிலையில் அம்மங்கையை மணந்து கொண்டால், சோழ வளநாட்டின் மருமகனாகப் போகும் இவனைத் தூக்கி நிறுத்தவே சோழ நாட்டின் தளவாடங்களும், போர் முயற்சிகளும் நிறைய செலவிடப் படவேண்டியிருக்குமோ என்று அஞ்சுகிறான் சிவாச்சாரி. அது மட்டுமன்றி சோழ அரசின் கவனமும் தேவையின்றி வேங்கை நாட்டின் பக்கமே திரும்ப வேண்டியிருக்குமே!

எப்படியிருந்தாலும் இவன் மீது தனிக் கவனம்தான் வைத்திருக்க வேண்டி வரும் - இவனுக்கும், பிற்கால சோழப் பேரரசுக்கும் தலைவலி காத்திருக்கிறது என்று மட்டும் புரிந்து கொள்கிறான் சிவாச்சாரி. அந்தச் சிந்தனையிலேயே உறக்கம் அவனை ஆட்கொள்கிறது.
* * *

                                           பழையாறை அரண்மனை
                                           பிரமாதீச, ?? ?? - ?? ?? , 1014

“அருள்மொழி, எழுந்திரு!எத்தனை நாள்கள் இப்படி படுக்கையிலேயே படுத்துக் கிடப்பாய்? அரசகேசரியான நீ இப்படி மனத்தைத் தளரவிடலாமா? சோழப் பேரரசின் மாமன்னனான உனக்கு இது அழகா?” கணீரென்று ஒலிக்கிறது மிகவும் படிக்கப்பட்ட அந்தக் குரல் இராஜராஜரின் காதுகளில் தேனாகப் பாய்கிறது அந்தக் கனிவான குரல்.

குருநாதர் கருவூர்த் தேவரின் குரலல்லவா இது! அவர் திருக்கயிலையிலிருந்து எப்பொழுது திரும்பி வந்தார்? இனி தனது மனக்கவலையெல்லாம் தீர்ந்து போய்விடும், தமிழ்த் திருப்பணிக்கு வரும் எந்தத் தடைகளும் அவரது வருகையால் இனி கதிரவனைக் கண்ட பனியாக நீங்கிவிடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது இராஜராஜருக்கு.

அவரிடம் என்னவெல்லாமோ கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் நாக்கு பிறழ மறுக்கிறது.

“அருள்மொழி, உன்னைத் திருக்கயிலைக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன். ஒளிமயமான, பனிசூழ்ந்த, இறையருள் பொங்கும், சச்சிதானந்தப் பேரின்பமான, சிவனாரின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன். கண்ணைத் திற! எழுந்திரு! நமக்கு அதிக நேரமில்லை!” மீண்டும் கருவூர்த் தேவரின் குரல் காதில் ஒலிக்கிறது.

“தேவரே! தமிழ்த் திருப்பணி என்று முடியும்? அதை நிறைவேற்றாமல் அப்படியே விட்டுவிட்டு வரச் சொல்கிறீர்களே! என் உடல்நிலையில் என்னால் திருக்கயிலை வர இயலுமா?” என்று கேட்க நினைக்கிறது அவர் மனம்.

“அருள்மொழி, அது சிவனாரின் அருளுடன் நடைந்தேறும். எதையும் நினைப்பதும், ஆக்குவதும், காப்பதும், நிலைநிறுத்துவதும், துடைப்பதும், மறைப்பதும், அருளுவதும் அவன் செயலல்லவா? நான் செய்ய வேண்டுமே, நான் பார்க்க வேண்டுமே என்று நினைக்கும் தருணமா இது? நான் என்ற எண்ணத்தை நீக்கு! அவன் உன்னை அழைத்து வரச் சொல்லி நான் வந்திருக்கிறேன். எல்லாவற்றையும் அவனிடம் விட்டுவிட்டு அவனைச் சேர என்னுடன் கிளம்பு. என் பக்கம் திரும்பு, கண்களைத் திற, என் கைகளைப் பற்றிக் கொள். திருக்கயிலைக்கு அழைத்துச் செல்கிறேன்!” அவர் குரலில் குழந்தைக்கு தந்தை சொல்லும் ஆறுதலும், அழைப்பும் இருக்கிறது.

“நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன அச்சம்? உங்கள் கையைப் பற்றிக் கொண்டால் எனக்கு இளமைக்கான மனவலிமை வந்துவிடும் தேவரே! இதோ எழுந்திருக்கிறேன்!”  தனது வலிமையை எல்லாவற்றையும் ஒரு சேரத் திரட்டி, கருவூர்த் தேவரின் குரல் வரும் திசையை நோக்கித் திரும்ப விழைகிறார் இராஜராஜர்.

அச்சமயம் சிவாச்சாரி பதட்டத்துடனும், அவசரமாகவும் இராஜாதிராஜனுடன் உள்ளே நுழைகிறான். மஞ்சத்தில் இராஜராஜர் படுத்திருக்கிறார். அவரைச் சுற்றி அருள்மொழிநங்கை. இராஜேந்திரன், குந்தவைப் பிராட்டியார், குந்தவி, சோழமாதேவி, மற்ற ராணியார்கள், அரச மருத்துவர், அவரது பணியாளர் ஆகியோர் நின்று கொண்டிருக்கிறார்கள். சிவாச்சாரியனுக்கு இராஜராஜரின் தலையும் கால்களும் தெரிகிறது. அவன் வரும் அரவம் கேட்டதும், இராஜேந்திரன் அவன் பக்கம் திரும்புகிறான்.

இராஜராஜரின் தலை சிவாச்சாரி பக்கம் திரும்புகிறது. விழிகள் பாதி திறக்கின்றன. அவர் முன் தாடியுடனும் மீசையுடனும், தலைக்கு மேலே தூக்கி முடியப் பட்ட கேசமும் கொண்ட முகம் தெரிகிறது. பின்னால் தெரியும் வெளிச்சம் தலையைச் சுற்றி ஜோதியாகப் பளிச்சிடுகிறது.

அவர் முகத்தில் இலேசான புன்னகை மலர்கிறது. அருகில் வந்து நிற்கிறான் சிவாச்சாரி. இராஜராஜரது வலது கை அவனை நோக்கி மெல்ல உயர்கிறது. தன் கையை மெதுவாக அவரிடம் நீட்டுகிறான் சிவாச்சாரி.

நீட்டிய அவனது கையை தன் கையினால் உறுதியாகப் பற்றிக் கொள்கிறார் இராஜராஜர். அனைவரும் பல நாள்களாக சுயநினைவற்றிருந்த இராஜராஜர் கண்விழித்ததையும், சிவாச்சாரியனின் கைகளைப் பற்றிக் கொண்டதையும் வியப்புடன் நோக்குகிறார்கள். இராஜராஜரின் உதடுகள் மெல்ல அசைகின்றன. மெல்லிய குரலில் சிவாச்சாரியிடம் கனிவு ததும்பும் குரலில் கூறுகிறார். குழந்தை நாள் கழித்துத் திரும்பி வரும் தந்தையிடம் பேசும் அன்பு அதில் இருக்கிறது.

“வந்துவிட்டீர்களா கருவூர்த் தேவரே! என்னை நீங்கள் மறந்துவிட மாட்டீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். உங்கள் வருகையால் என் மனக்குறை நீங்கி விட்டது! தேவரே, என்னைத் திருக்கயிலைக்கு அழைத்துச் செல்லத்தானே வந்திருக்கிறீர்கள்! நான் வந்து விட்டேன். இத்தனை நாள் சோழ நாட்டை நான் சுமந்தது போதும். என்னை இறைவனிடம் அழைத்துச் செல்லுங்கள்! தென்னாடுடைய சிவனுடைய காலடியில் நான் தங்களுடன் சரணடைந்து விடுகிறேன்!! ஓம் நமச்சிவாய!!!”
அவரது புன்னகை அப்படியே உறைந்து போகிறது. விழித்த கண்கள் அப்படியே நிலைகுத்தி நின்று விடுகின்றன.
                                    * * *
 (இரண்டாம் பாகம் முற்றும்)
-----------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு 
52உதகையில் ஆட்சி செய்து வந்த இளஞ்சேரன் இரண்டாம் பாஸ்கர ரவிவர்மன் அவனிடம் கப்பம் கேட்டு வந்த இராஜராஜ சோழனின் தூதுவனை அவமதித்துச் சிறையில் அடைத்ததாக “Medival Chola Empire and its relation with Kerala'' ” என்ற புத்தகம், பத்தாம் அத்தியாயத்தில் கூறுகிறது

No comments:

Post a Comment