Tuesday, 26 August 2014

தமிழ் இனி மெல்ல.[39]எந்தக் குதிரை அவனைக் கீழே தள்ளியதோ..,

தமிழ் இனி மெல்ல.[38] சென்ற பதிவின் இறுதியில் 
நரேந்திரனின் முகம் வாடிப் போய் விடுகிறது. அத்துடன் மதுவின் மயக்கமும் இறங்கிப் போய் விடுகிறது. உடல் முழுவதும் இனம் காணாத கோபத்தினால் எரிச்சல் ஏற்படுகிறது. இருவரையும் முறைத்துப் பார்க்கிறான். பதிலே பேசாமல் திரும்பி நடக்கிறான்.

பெரிதாக விம்மல் வெடிக்கிறது நிலவுமொழியிடமிருந்து. குலுங்கி குலுங்கி அழுகிறாள் அவள். “என்னை மன்னித்து விடுங்கள் மகாராணி! நான் இளவரசரை மிகவும் அவமானப் படுத்தி விட்டேன்! அவர் இம்மாதிரி எண்ணத்துடன் என்னை நோக்குகிறார் என்பதை முன்னரே தங்களிடம் தெரிவித்து, தமிழ் கற்றுக் கொடுக்கும் பணியிலிருந்து நின்று விட்டிருக்க வேண்டும். அதை விடுத்து இளவரசர் தமிழ் பேசினால் தாங்கள் மிகவும் மகிழ்வீர்களே என்று அமைதியாக இருந்தது என் தவறுதான்!”  என்று விம்முகிறாள் அவள்.

குந்தவியின் கண்கள் கண்ணீரைச் சொரிகின்றன. “அழாதே நிலா, அழாதே! உன் கடமையைத்தான் நீ செய்ய நினைத்தாய்! ஆனால் இவன் இப்படி நடந்து கொள்வான் என்று உனக்குத் தெரியுமா? இனிமேல் நீ அவனுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டாம்! மற்றவர்களிடம் அவன் தமிழ் க்ற்றுக் கொண்டாகிவிட்டது என்று சொல்லி விடலாம்.” அவளது குரல் நிலவுமொழியைச் சமாதானப் படுத்துகிறது.

அவர்கள் இருவரும் பேசுவது நடந்து செல்லும் நரேந்திரனின் காதில் விழுகிறது. அவன் தன் நடையை வேகப் படுத்துகிறான். அவனது நெஞ்சம் குமுறுகிறது. “போயும் போயும் எங்கோ அடித்தளத்தில் ஒரு ஓதுவாரின் மகளாய்ப் பிறந்தவள் என்னை அவமானப் படுத்தி விட்டாளே! இவளை என்ன நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றா நினைக்கிறாள்! என்னைப் போன்ற ஒரு இளவரசன் தன்னை ஆசைநாயகியாக வைத்துக் கொள்வேன் என்று சொன்னது எவ்வளவு அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாமா? என் பார்வைக்காக வேங்கை நாட்டில் எத்தனை பெண்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? என் காலடியில் விழுந்து கிடக்க போட்டி போட்டுக் கொண்டல்லவா வருவார்கள்!

தமிழ் இனி மெல்ல.[39] தொடர்கிறது

அரிசோனா மகாதேவன் 

‘கருப்பாக இருந்தாலும் களையாக, அம்சமாக இருக்கிறாள் என்று இவள் பின்னால் எத்தனை மாதங்கள் சுற்றி வந்தேன்? இவளுக்காக தமிழ் பேசக்கூட கற்றுக் கொண்டேனே! என்னவோ குருகுலத்தில் சொல்வது போல தான் எனக்கு அம்மாபோல என்று கதை பேசுகிறாளே! வேங்கை நாட்டு மகாராணியும், சோழ சாம்ராஜ்ஜியச் சக்கரவர்த்தியின் மகனுமான என் அம்மா எங்கே? ஓதுவார் மகளான இவள் எங்கே? இப்படி என் அன்னையின் இடத்திற்குத் தன்னை உயர்த்திக் கொண்ட இவள் நாவை நான் என் வாளால் துண்டாடியிருக்க வேண்டும்!

“அம்மாவுக்கென்ன இப்படி புத்தி கெட்டுப்போய் விட்டது! தமிழ், தமிழ் என்று உயிரை விடுகிறார்கள்! அப்படி உயிரை விடுகிறார்கள் என்பதால்தானே இந்தப் பெண்ணிடம் தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்! அதற்காகவே இப்பெண்ணை எனக்கு அடிமையாகப் பரிசளித்திருக்க வேண்டாமா! இவள் என்ன, தெலுங்கு ஆசான் நன்னய்யாவுக்குச் சமமானவளா? இவளுக்குப் பரிந்துகொண்டு என்னைப் பார்த்துப் போய்விடு என்று சொல்லி விட்டார்களே? இதே நிலையில் அப்பா இருந்திருந்தால் இந்தப் பெண்ணின் திமிரை அடக்கி, இவளை எனக்குச் சொந்தமாக்கி விட்டுத்தானே மறுவேலை பார்த்திருப்பார்!

“கடைசியில் இவளை அடையவேண்டும் என்பதற்காக நான் செலவிட்ட நேரமெல்லாம் வீணாகிப் போனதே! இவளுக்கும், இவளுக்கு ஆதரவாக இருக்கும் அம்மாவுக்கும் ஒரு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்! என்ன செய்யலாம்?” என்று எண்ணியபடியே வேகமாக நடக்கிறான் நரேந்திரன்.

குதிரையின் கனைப்பு அவன் கவனத்தைக் கலைக்கிறது. நடந்துகொண்டே குதிரை லாயத்திற்கு வந்திருக்கிறான்! அவனைக் கண்டதும் வணங்கி நிற்கிறான் குதிரைலாயக் காப்பாளன்.

“நேக்கு ஒரு குதிரை வேணும்.” விறைப்பாக உறுமுகிறான் நரேந்திரன்.

“ராவாயிப் போயிருச்சு, ராசா! இந்த சமயத்துலே குதிரையிலே எங்கே போகணுமிங்கிறீங்க? நான் துணைக்கு யாராச்சையும் அனுப்பட்டுங்களா?” என்று பணிவாகக் கேட்கிறான் காப்பாளன்.

“மட்டி மடையா! நாக்கு வழி தெரியாதா? நான் குருடனா! குதிரை வேணும்னா கொடுடா. வேகமாப் போற குதிரையா குடுடா!”  நரேந்திரன் அதட்டியதும் பயந்து விடுகிறான் காப்பாளன். இதுவரை அவனை யாரும் மரியாதைக் குறைவாகப் பேசியதே இல்லை, இராஜேந்திரன் உள்பஅவனது பரிவை அலட்சியம் செய்ததோடு மட்டுமல்லாமல் அவமரியாதையாகவும் பேசுகிறானே இந்த வேங்கை நாட்டு இளவரசன்! எப்படியோ போய் விழுந்து தொலைக்கட்டும் என்றா விடமுடியும்? இவனுக்கு ஏதாவது ஒன்று ஆனால் தானல்லவா மகாராஜாவுக்குப் பதில் சொல்ல வேண்டும்!

தனது ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பணிவான குரலில், “ராசாவுக்கு ஏதோ கோவம் போல. நல்ல குதிரையா ராசாவுக்கு கொண்டு வரேன், செத்த இருக்கறீங்களா?” என்று கேட்கிறான்.

“தள்ளிப் போ, நேனே சூஸ்தானு!” என்று அவனை முரட்டுத்தனமாகத் தள்ளிவிட்டு அங்கு உடம்பை சிலிர்த்துக் கொண்டிருக்கும் ஒரு கருப்புக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுக்கிறான். அது பயங்கரமாகக் கனைத்தபடி முன்னங்கால்களைத் தூக்கி எழுந்து ஆர்ப்பரிக்கிறது.

காப்பாளன் கவலையுடன் ஓடி வருகிறான்.

“இந்தக் குதிரை ரொம்ப முரட்டுக் குதிரை, ராசாவே! இது வேணாம். கொஞ்ச நாள் முன்னாலதான் இது துலுக்க தேசத்திலேந்து வந்தது. கடலுலே ரொம்ப நாலு வந்ததாலே அதுக்குத் தாங்கமுடியாத கோவமுங்க. இதோ, இந்த வெள்ளக் குதிரை ரொம்ப நல்ல குதிரை, ராசாவே! இத எடுத்துக்கிட்டுப் போங்க.” என்று கவலையுடன் அருகிலிருக்கும் ஒரு வெள்ளைக் குதிரையைச் சுட்டிக் காட்டுகிறான்.

வெறி பிடித்தமாதிரி கத்துகிறான் நரேந்திரன். நிலவுமொழியிடம் கற்றுக் கொண்ட தமிழ் தங்கு தடையில்லாமல் காவிரியாகப் பொங்கிப் பெருகுகிறது. “ஏண்டா, என்னடா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க! இந்தச் சோழ நாட்டுக் காரங்களுக்கு மரியாதை ஒண்ணும் தெரியாதா? இங்கே யாருடா ராஜா, யாரு குதிரைக்காரன்? உன் நிலைமை தெரிஞ்சு நடந்துக்கோ!” என்று ஓங்கி காப்பாளனின் கன்னத்தில் அறைந்து விட்டு, கருப்புக் குதிரையின் மீது தவ்வி ஏறிக் கொண்டு அதைச் சாட்டையால் நன்றாக வெளுக்கிறான்.

அடி வாங்கிய வெறியில் குதிரை தவ்விக் குதித்துக் கொண்டு பாய்ந்து ஓடுகிறது. ஒரே சீராக ஓடாமல் தன்னை அடித்தவனை எப்படியாவது குப்புறத் தள்ளிவிட வேண்டும் என்ற ஆத்திரத்துடன் புலியாகப் பாய்கிறது அக்குதிரை.

குதிரை மீது விழுந்த சாட்டை அடிகள் தன்மீது விழுந்ததைப் போல உணர்கிறான் காப்பாளன். ஏதாவது விபரீதமாக நடந்து விடக்கூடாது என்று வெள்ளைக் குதிரையை அவிழ்த்து, அதன் மீது ஏறிக் கொண்டு நரேந்திரனைப் பின்தொடர்கிறான். இது எல்லாவற்றையும் சற்றுத் தள்ளி நின்று கவனித்துக் கொண்டிருக்கும் அவனது உதவியாளன் குதிரை லாயக் கதவைச் சாத்திவிட்டு, அருகிலிருக்கும் கல்லில் கவலையுடன் அமர்ந்து கொள்கிறான்.

அரைக் காத தூரம் கூடப் போகவில்லை, கருப்புக் குதிரை தன் மனதில் நினைத்ததைச் சாதித்து விடுகிறது.

ஒரு வேலியைத் தாண்டும் சமயத்தில் முன்னங் கால்களை அழுத்தமாக ஊன்றிய அது, பின்னங்கால்களை ஊன்றித் தாவுவதற்குப் பதிலாக, பின்னங்கால்களை வேகமாக மேலே தூக்கி எழும்புகிறது. வேலியைத் தாண்டும் பொழுது முதலில் குதிரையின் தலை மேலெழும், என்று எண்ணி அதற்காகத் தன்னைத் தயார் செய்து கொண்ட நரேந்திரனுக்கு அது பெரும் அதிர்ச்சியானதோடு மட்டுமல்லாமல், அவனை நிலைகுலையவும் செய்கிறது. அதே வேகத்தில் குதிரை முன்னங்கால்களை ஊன்றி தட்டாமாலையாகச் சுழல்கிறது.

பாதி சுழன்றவுடன் பின்னங்கால்களைக் கீழே ஊன்றி, முன்னங்கால்களை உயரத் தூக்கித் தாவுகிறது. கிட்டத்தட்ட ஏழடி உயரம் தவ்விய அக்குதிரை, காற்றிலேயே சுழன்று முன்னங்கால்களில் கீழே குதித்து, அந்த வேகத்தில் பழையபடியும் பின்னங்கால்களை உயரத் தூக்கி விசிறுகிறது. அந்த வேகத்தைச் சமாளிக்க முடியாத நரேந்திரன் கடிவாளத்தின் பிடியை நழுவவிட, குதிரையின் முதுகிலிருந்து வீசப்படுகிறான். தன்னை முரட்டுத் தனமாக நடத்தியவனைக் கீழே தள்ளி விட்ட நிம்மதியுடன் குதிரை லாயத்திற்குத் திரும்புகிறது.

முள்வேலியில் விழுந்த நரேந்திரன் வலியில் துடிக்கிறான். உடலில் பல இடங்களில் காயம் பட்டதோடு மட்டுமல்லாமல், முட்களும் குத்தியிருக்கின்றன. எல்லாவற்றையும்விட அடுத்தடுத்து பட்ட அவமானங்கள் அவனைப் பிடுங்கித் தின்கின்றன. இதற்குள் அங்கு வந்து சேருகிறான் காப்பாளன். மெதுவாக நரேந்திரனைத் தூக்கி விடுகிறான்.

“ராசாவே, மெல்ல, மெல்ல, என்னைப் பிடிச்சுக்குங்க. இந்தச் சனியனை இதுக்குத்தான் நான் வேணாம், வேணாம்னு சொன்னேன். நான் வந்த குதிரைலே உக்காந்துக்குங்க. நான் லாயத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயி காயத்துக்கு பச்சிலை வச்சுக் கட்டிவிடறேன். நிக்க முடியுதா பாருங்க.” என்று ஆதங்கத்துடன் கேட்கிறான் காப்பாளன்.

நரேந்திரனுக்கு கோபத்துடன், வெட்கமும் பிடுங்கித் தின்கிறது. யாரை நாம் அவமதித்தோமோ, அவன் முன்னே அந்தக் குதிரை தன்னை அவமானப்பட வைத்து விட்டதே! இவன் ஊர்முழுக்க இதைப் பற்றிச் சொல்லி தம்பட்டமல்லவா அடிப்பான். மெல்ல எழுந்து நிற்கிறான். வலது கால் சுரீரென்று வலிக்கிறது. தடுமாறுகிறான்.

அவனைச் சட்டென்று தாங்கிப் பிடித்த காப்பாளன், “ராசாவே, சுளுக்கு மாதிரி இருக்கு போல. மொள்ளமா என்னைப் பிடிச்சுக்கிட்டு குதிரைமேல ஏறுங்க, உறுவி சரி செஞ்சு விட்டுடறேன்.”

அவனைக் குதிரையில் ஏற்றி விட்டுவிட்டு, கடிவாளத்தைப் பிடித்தவாறே முன்னால் நடக்கிறான் காப்பாளன்.

நரேந்திரனின் மனம் நெருப்பாகக் கொதிக்கிறது. மனம் என்னவெல்லாமோ எண்ணிக் குமுறுகிறது. நிலவுமொழியின் மீது ஒரு வன்மம் பிறக்கிறது. அவளை எப்படியாவது பழி வாங்கவேண்டும் என்று உள்ளம் துடிக்கிறது
.
“பழி வாங்குவேன், அவளை எப்படியாவது பழிவாங்குவேன். தமிழைக் கற்றுக் கொடுத்ததால்தானே தன்னைத் தாய் என்று சொல்லி என்னை அவமதித்தாள்! அந்தத் தமிழை வேங்கை நாட்டில் பரப்பத்தானே என் அம்மாவும், பாட்டனாரும், அந்த சிவாச்சாரியனும் அவளை வேங்கை நாட்டிற்கு அனுப்பினார்கள்?

“அந்தத் தமிழை இனி நான் வேங்கை நாட்டில் பரப்ப விடமாட்டேன்! பாட்டனாரின் தமிழ்த் திருப்பணி வேங்கை நாட்டை அணுகாதவாறு பார்த்துக் கொள்வேன்.

“என் தந்தையின் மொழியான தெலுங்கை சிறந்ததாகச் செய்வேன். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்வேன். என்னிடம் வேங்கை நாட்டின் சிம்மாசனம் வரட்டும். என்னைப் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்வார்கள். சிரித்துக் கொண்டே இவர்களின் திட்டத்தை முறியடிப்பேன். கேவலம், ஒரு ஓதுவாரின் பெண் என்னை அவமானப்படுத்தும்படி செய்து விட்டார்கள் அல்லவா! இந்த நரேந்திரன் எப்படிப் பட்டவன் என்பதை எதிர்காலத்தில் எல்லோரும் தெரிந்து கொள்வார்கள்!” என்று தனக்குள் சூளுரைத்துக் கொள்கிறான் நரேந்திரன்.

குதிரை லாயத்தை அடைகிறது.
                                                               * * *
                                         பழையாறை மாளிகை
                          பரிதாபி, தை 20 - பிப்ரவரி 5, 1013

அருள்மொழிநங்கைக்கும், சிவாச்சாரியனுக்கும் திருமணம் இராஜராஜரின் விருப்பப்படி பழையாறை அரண்மனையில் நடந்து ஐந்து நாள்கள் ஆகியிருக்கின்றன...

...சிவாச்சாரியின் முதல் மனைவி மிகவும் ஆத்திரமடைவாளோ என்று அருள்மொழிநங்கை திருமணத்திற்கு முன்பு சிவாச்சாரியிடம் அது பற்றி கேட்டதற்கு, அவன் ஒரு புன்னகையைத்தான் பதிலாகத் தந்தான்.

“அரசகுமாரி என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள் என்று நான் தெரிவித்தவுடன் தன்னைப் பரிகாசம் செய்ய வேண்டாம் என்று பெரிதாகச் சிரித்துத் தள்ளிவிட்டாள். ‘உங்கள் வயதென்ன, அரசகுமாரியின் வயதென்ன? அது மட்டுமா, அவளுக்கு ஒரு ராஜகுமாரனைத்தான் கல்யாணம் செய்து வைப்பார்கள். கட்டுக்குடுமியுடன், கோவிலில் பூஜை செய்து வந்த உங்களையா மகாராஜா மாப்பிள்ளையாக ஆக்கிக் கொள்வார்? வெய்யில் கூட அடிக்கவில்லை, ஆனால் உங்கள் மூளை உருகி, பித்துப் பிடித்து விட்டதா?” என்று குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

கடைசியில் ஒருவழியாக அவளுக்கு நான் சொல்வது உண்மைதான் என்று விளக்குவதற்குள் அரை நாழிகையாகி விட்டது.”என்றவனை இடைமறித்து, “அக்கா என்ன சொன்னார்கள் என்று சொல்லுங்கள். சுற்றி வளைக்காதீர்கள்.” என்று கொஞ்சும் குரலில் கெஞ்சினாள் அருள்மொழிநங்கை.

“சொல்கிறேன், சொல்கிறேன். அவளுக்கு மிகவும் பெருமை. ‘ராஜகுமாரி எனக்குத் தங்கை ஆகப் போகிறாள் என்றால் எனக்கு மிகுந்த சந்தோஷம்தான். பாவம், அவர்களால் நமது சிறிய வீட்டில் இருக்க முடியாது. அவர்கள் அரண்மனையிலேயே இருக்கட்டும். நீங்கள் அவர்களுடன் இருங்கள். அவ்வப்பொழுது என்னையும் வந்து பார்த்துக் கொண்டு இருங்கள்!’ என்று சொன்னாள்.

“அவளும் குழந்தையுடன் தஞ்சையிலிருந்து பழையாறைக்கு வந்து சேரவேண்டும், சக்கரவர்த்திகள் நமக்கு ஒரு புதிய, பெரிய அகத்தைக் கட்டுவித்திருக்கிறார் என்று சொன்னதற்கு, அவள் மிகவும் தயங்கினாள். தான் நாட்டுப்புறம் என்றும், ராஜகுமாரியுடன் சேர்ந்து ஒரு இல்லத்தில் இருக்கத்தகுதி இல்லாதவள் என்றும் சொல்கிறாள். நீ வந்து சொன்னால் வருவாளோ என்னவோ?” என்று முடித்தான்.

உடனே பொங்கி எழுந்து விட்டாள் அருள்மொழிநங்கை, “என்ன இப்படி நான் கேட்கும்வரை இதுபற்றி ஒன்றும் சொல்லாமலே இருந்திருக்கிறீர்கள்! அக்கா கட்டாயம் என்னுடன்தான் இருக்கவேண்டும். நானே அவருடன் பேசுகிறேன்.” என்றதோடு மட்டுமல்லாமல் தானே சிவாச்சாரியனின் வீட்டிற்குச் சென்று அவன் மனைவியைத் தன்னுடன் பழையாறைக்கு வரச் சம்மதிக்கவும் செய்து விட்டாள். அரசகுமாரியே தன் வீட்டிற்கு வந்துகேட்டதால் அவளால் மறுக்க இயலவில்லை. அக்கிரஹாரமே அன்று வியப்பில் ஆழ்ந்து விட்டது.

சீர்வரிசைகள் எதுவும் வேண்டாம் என்றும், பெரிய வீடு கொடுத்ததே ஒரு பெரிய சீர்தான் என்றும் சொல்லிப் பார்த்தான் சிவாச்சாரி. அவனைப் புன்னகையுடன் அடக்கி விட்டனர் இராஜராஜரும், இராஜேந்திரனும்.

“சிவாச்சாரியாரே, நீர் சிறு குடிசையில் ஓலைப்பாயில் நாள்களைக் 
கழித்துவிடும் திறன் உள்ளவர்தான். இருப்பினும் பேத்திக்கு திருமணச் சீர் ஒன்றுமே செய்யவில்லை என்று நாடே எம்மைப் பழிக்காதா? இந்த விஷயத்தில் நீர் ஒன்றும் சொல்லாமல் இருப்பதே சாலச் சிறந்தது!’ என்ற இராஜராஜரின் கூற்றுக்கு அவனால் பதில் சொல்ல முடியாது போயிற்று.

அவனது முதல் மனைவி பெரிய வீட்டையும், அரசகுமாரியுடன் வந்த சீர்களையும் கண்டு மலைத்து விடுகிறாள். அவளுக்கும், சிவாச்சாரியனின் முதல் குழந்தைக்கும் வந்த பரிசுகளும் அவளைத் திக்குமுக்காட வைத்து விடுகின்றன. தனது கணவர் அரச பரம்பரையின் அன்புக்கு எவ்வளவு பாத்திரமானவர் என்பதை நேரில் கண்டு பெருமையில் பூரித்துப் போகிறாள்...
புதுமணத் தம்பதிகள் தனித்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த அவள் அடிக்கடி குழந்தையைத் தூக்கிக் கொண்டு கோவிலுக்குச் சென்று விடுகிறாள்.

உறவாடி மகிழ்ந்த நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் தமிழ்த் திருப்பணியைப் பற்றியும், தேவாரத் திருப்பதிகங்களின் மறைப் பொருள்களைப் பற்றியும் அவனுடன் உரையாடி மகிழ்கிறாள் அருள்மொழிநங்கை. அவளுக்குத் தமிழில் இருக்கும் ஆர்வத்தை நேரில் கண்டு மகிழ்கிறான் சிவாச்சாரி. அது மட்டுமன்றி, சைவத்தின் சிறப்புகளைப் பற்றியும் அவனை விளக்கச் சொல்லிக் கேட்கிறாள். கேட்பது அனைத்தையும் கடல் பஞ்சைப் போல உறிஞ்சிக் கொள்வதைக் கண்டு வியக்கிறான் சிவாச்சாரி.

“நங்கை, உனக்கு என்ன மாதிரி மக்கள் பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?” என்று வினவுகிறான் சிவாச்சாரி.

“ஐயனே, தங்கள் விருப்பமே என் விருப்பம்.” என்று நாணத்துடன் தலை குனிகிறாள் அருள்மொழிநங்கை.

“எனது விருப்பம் என்ன என்று நீ அறிவாயா?” செல்லமாகக் கேட்கிறான் சிவாச்சாரி.

“நம் திருமணத்திற்கு நீங்கள் சம்மதம் தெரிவித்த பொழுது, சோழ நாட்டின் ஊழியர்களாகவே எங்கள் வழித் தோன்றல்கள் இருக்கவேண்டும் என்று தெரிவித்தீர்கள். அதற்கு நான் சம்மதம் தெரிவித்துத்தானே உங்கள் கரத்தைப் பிடித்தேன்! நம் வழித்தோன்றல்கள் சோழநாட்டுக்கு சிறப்பான வகையில் பணியாற்ற வேண்டும் என்பதே உங்கள், மற்றும் எனது விருப்பமும் கூட. அவர்கள் பாட்டனாரின் தமிழ்த் திருப்பணிக்குச் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் - இந்தப் பரந்த பாரத கண்டத்தின் ஐம்பத்தி ஆறு நாடுகளும் தமிழ் பேசும்படி செய்ய வேண்டும், தமிழ் மூலம் சைவம் தழைக்க உழைக்க வேண்டும் என்பதுதான் இந்த அடியாளின் கோரிக்கை, கனா. அது நிச்சயம் நடந்தேறும் என்று என் உள் மனது சொல்கிறது, ஐயனே.” என்று தணிந்த, உணர்ச்சி பெருக்கு பொங்கும் குரலில் பதிலிருக்கிறாள் அருள்மொழிநங்கை.

சிவாச்சாரியனின் முகத்தில் கவலைக் கோடுகள் பரவுகின்றன. அதைக் கவனித்த அருள்மொழிநங்கை, “ஐயனே, நான் ஏதாவது பிழையாகச் சொல்லிவிட்டேனா? உங்கள் முகத்தில் கவலைக் குறி தோன்றுகிறதே?” என்று சிறிது பதட்டத்துடன் கேட்கிறாள்.

அவனது முதல் மனைவி இவ்வளவு தூரம் அவனது முக உணர்ச்சிகளைக் கண்டு கொண்டிருக்கவும் மாட்டாள், அப்படியே கண்டு கொண்டாலும், சுற்றி வளைத்துத் தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயலுவாளே தவிர, நேராகக் கேள்வி கேட்டிருக்க மாட்டாள். தனது மனதில் இருப்பதை அவளிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதினால், தானாகவே அது அவளுக்கு வந்து சேரும் என்பது அவளுடைய எண்ணம் என்பதை அவன் அறிவான். கைவிரல்களே ஒன்று போல இல்லை, பெண்களின் நடவடிக்கை எப்படி ஒன்றாக இருக்க முடியும் என்று எண்ணியவாறே, “இல்லை நங்கை இல்லை. உன்னிடம் பிழை ஏதும் இல்லை. உன்னுடைய தமிழ்ப் பற்று, சைவப் பற்று, திருப்பணி நிறைவேற வேண்டும் என்ற உனது அவா - எதிலுமே பிழை ஏதும் இல்லை. நமது வழித்தோன்றல்கள் மூலம் தமிழ்த் திருப்பணி நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதும் என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தச் செய்கிறது.”

“பின் ஏன் இந்த வாட்டம்?” கவலையுடன் கேட்கிறாள் அருள்மொழிநங்கை.

“உனது அத்தை மகன் நரேந்திரனின் போக்குதான் எனக்கு மிகுந்த கவலையை உண்டாக்குகிறது.” என்று தன் மனதில் ஓடிய எண்ணத்தைப் பகிர்ந்து கொள்கிறான் சிவாச்சாரி.

“அப்படியா? அவன் தமிழ்கூட நன்றாகப் பேச ஆரம்பித்து விட்டானே?” என்று வியப்புடன் கேட்கிறாள் அருள்மொழிநங்கை.

“அவன் நோக்கம் தமிழ் கற்றுக் கொள்வதாக இருக்கவில்லை. தமிழைக் கற்றுக் கொடுக்கும் பெண் நிலவுமொழி மீது மையல் கொண்டிருந்தான். அதனால்தான் தமிழ் கற்றுக் கொள்வதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டான். நான் வேங்கை நாடு போன போது அந்தப் பெண் அழாக்குறையாக என்னிடம் கெஞ்சினாள், தன்னை மயிலைக்குத் திருப்பி அனுப்பி விடுமாறு. நான்தான் அவளுக்கு ஒரு யுக்தியைச் சொல்லிக் கொடுத்தேன் - ஏடாகூடமாகப் போனால் கல்வி கற்பிக்கும் தான் நரேந்திரனின் தாயின் இடத்தில் இருப்பதாகவும், தாய் மீது மையல் கொள்வது முறை அல்ல என்று சொல்லும்படியும் சொன்னேன். இங்கு வந்த நரேந்திரன் அப்பெண்ணைத் தன் காமக்கிழத்தியாக இருக்கும்படி கேட்டிருக்கிறான். நான் சொல்லிக் கொடுத்தபடி நிலவு மொழியும் அவனிடம் சொல்லியிருக்கிறாள். அச்சமயம் உன் அத்தை குந்தவி அங்கு போய்ச் சேர்ந்திருக்கிறாள்...”

“அடாடா, அத்தை என்ன சொன்னார்கள்?”

“உன் அத்தையைப் பற்றி நான் சொல்லவா வேண்டும்! அவர்களுக்குத்தான் சினம் மூக்குக்கு மேல் வந்து விடுமே! நரேந்திரனை மிகவும் சினந்து வெளியே போகும்படி சொல்லிவிட்டார்கள்.”

“பிறகு?”

“பிறகென்ன? இவன் கோபத்துடன் குதிரை லாயத்திற்குச் சென்று அங்கு முறைகேடாக நடந்து கொண்டிருக்கிறான். காப்பாளனை அவமதித்து, அரபு நாட்டிலிருந்து புதிதாக வந்திருந்த, பழக்கப்படுத்தப்படாத குதிரையை எடுத்துச் சென்று, அது அவனைக் கீழே தள்ளி..” என்று இழுத்த சிவாச்சாரி, “எப்பொழுதும் மது அருந்திக் கொண்டு தாறுமாறாக நடந்து கொள்கிறானாம்.” என்று முடிக்கிறான்.

இப்பொழுது அருள்மொழிநங்கையின் முகத்தில் கவலை படர்கிறது. “ஐயனே, இது தந்தைக்கும், பாட்டனாருக்கும் தெரிந்தால் நிலைமை கையை விட்டுப் போய் விடுமே? மங்கையை நரேந்திரனுக்கு மணமுடிக்க வேண்டும் என்று அவள் பிறந்ததிலிருந்தே பேசி வரப்படுகிறதே? இந்நிலையில் இந்தப் பிள்ளை ஏன் இப்படிச் செய்கிறான்?” என்று ஆதங்கத்துடன் வருத்தப் பட்டவள், “அது சரி, இதற்கும், நான் தமிழ்ப் பணியைப் பற்றிப் பேசியதற்கும் என்ன தொடர்பு? இதுவரை அமைதி காத்த நீங்கள், இந்த விஷயம் பேசப்படும் போது ஏன் முகவாட்டமுற்றீர்கள்? என்று கேட்கிறாள்.

“நங்கை, நிலவுமொழி என்னிடம் நரேந்திரனைப் பற்றிப் பேசிய பொழுதே அவளை வேங்கை நாட்டிலிருந்து அனுப்பி விடாதது எனது தவறோ என்று அடிக்கடி உள்ளுணர்வு என்னைச் சாடுகிறது.” பெருமூச்சு விடுகிறான் சிவாச்சாரி.

“நரேந்திரன் முறையற்று நடந்தது அவனுடைய பிழை. அத்தையார் அவன் மீது சினம் கொள்ளாமல் மெச்சவா செய்வார்கள்? அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்? ஐயனே, நீங்கள் தேவையில்லாமல் மனதை வருத்திக் கொள்கிறீர்களோ என்று எனக்குத் தோன்றுகிறது.” என்று அவனைத் தேற்ற முயல்கிறாள் அருள்மொழிநங்கை.

“அவன் முறை தவறி நடந்ததோடு நின்றிருந்தால் ஏதோ இளமை வேகத்தில் பிழை செய்து விட்டான், தான் விரும்பியது கிடைக்காத சினத்தில் இப்படி நடந்து கொள்கிறான் என்று விட்டுவிடலாம். ஆனால்...” என்று இழுத்த சிவாச்சாரி, “உன் அத்தையிடம் தெலுங்கிலேயே பேச ஆரம்பித்து விட்டானாம். இது தமிழ்த் திருப்பணிக்குத் தடங்கலாக அமையுமோ என்று ஐயுறுகிறேன். சக்கரவர்த்தி அவர்களின் திருப்பணி ஆலோசகனான நான் பெரிய பிழை செய்து விட்டேனோ என்றும் அஞ்சுகிறேன். அதனால்தான் என் மனம் அமைதியின்றித் தவிக்கிறது.” என்று முடிக்கிறான்.

“நரேந்திரன் மிகவும் செல்லப் பிள்ளையாக வளர்க்கப் பட்டவன். அதனால்தான் இப்படித் தாறுமாறாக நடந்து கொள்கிறான். அவனது கவனத்தைத் திருப்ப, எந்தக் குதிரை அவனைக் கீழே தள்ளியதோ, அந்தக் குதிரையையே அவனுக்குப் பரிசாகக் கொடுத்து, அவனுக்குக் குதிரை ஏற்றமும், போர்க்கலைகளும் கற்பியுங்கள். அவன் மனம் இந்த ஏமாற்றத்திலிருந்து விடுபடும்.

“பாட்டனாரும், தந்தையாரும் உங்கள் மீது அளவு கடந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். தந்தையாரோ உங்களை ஆருயிர் நண்பராகக் கருதித்தானே என்னையே உங்களுக்குப் பரிசளித்திருக்கிறார். உங்கள் சேவையை வருங்காலம் போற்றும். பெருவுடையார் உங்கள் முயற்சிகளைத் திருவினையாக்குவார்.” என்று அவனைத் தன்னுடன் சேர்த்து இழுத்துக் கொள்கிறாள்.

No comments:

Post a Comment