Sunday, 31 August 2014

என்னால் ஒரு நல்ல காரியம்

கவிதாயினி ஜி.ஜே.தமிழ்ச்செல்வி 

                                                                       

அன்றாடம் ஒரு பார்வை 

என்னால்  ஒரு நல்ல காரியம்

திடீரென்று ஒரு நாள்  அவளை நான் சாலையில் சந்தித்தேன். அது முற்றிலும் எதிர்பாராத சந்திப்பு. என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டாள் அவள் கண்கள் என் கன்னங்களில் ஏதோ ஆறுதல் வேண்டி ஓய்வெடுத்தது போல் பதிந்தன. அவற்றிலிருந்து கண்ணீரின் ஈரம் என் கன்னத்தில் பட்டு நான் அவள் முகத்தை நிமிர்த்தினேன். என் கண்களைச் சந்திக்கக் கூச்சப்பட்டு அவளது இமைகள் தானதன. என் கவிதை உள்ளம் கண்ணிமைகளின் நுனியில் கோர்த்து நின்ற கண்ணீர்த்துளிகளைக் கண்டு மூங்கிலை மேலே தூங்கும் பனி நீரே என்று தாலாட்டத் தொடங்கியது 

ச்சே! தோழி அழுகிறாள். இந்த நேரத்தில் என்ன கவிதை என்று என் மண்டையில் ஒரு அடி விழுந்தது.  சாலை என்பதையும் மறந்து கட்டிக்கொண்டு அழுதவளைத்  தேற்ற வழி இன்றித்  தவித்தேன்.

அவள்  குடும்பப்பாங்கான பெண். நல்லவள். மாநிறம். நீண்ட கூந்தல்.எனக்கு மிகவும் பிடித்தது அவளது அழகிய நீண்ட கூந்தல் பெண்ணுக்குப் பெண்ணே கண்டு பொறாமைப்படும் கூந்தல் அது.. பேச்சிலேயே ஒரு மரியாதையும் கண்ணியமும் தெரியும். பிறருக்கு எப்போதும் உதவும் மனப்பாங்கு உடையவள். தற்போது பொதுப்பணித்துறையில்  பணியாற்றி வருகிறாள்.

அவள் கதையை நான் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தேன். அழுவதாக இருந்தால் அவள் என்னிடம் வந்து தான் அழுவாள். சிரிப்பதும் அப்படியே.என்னிடம் தான்.

அவளைக்  காதலிப்பதாகக் கூறியவர் பட்டியலை வரிசையைக் கூறிவிட்டு என்னிடம் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாள். 

"இதுலே எவனையாவது பிக் அப் பண்ணிக்கிறது தானேடி!" என்றேன் ஒருமுறை .

" பெத்துப் பாடுபட்டு வளர்த்து நல்ல வரன் பார்க்கணும்னு ஜோசியர் களையும் கல்யாண ப்ரோக்கர்களையும் தேடி அலையிற என் அப்பா அம்மா நெஞ்சிலே இடி விழட்டுங்கிறியா ?"

அந்த லாஜிக் என் மனசைத் தொட்டுவிட்டது. இந்தக் காலத்தில் இப்படி ஒருத்தியா? வியந்தேன் மனசிற்குள்.

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்வேன் என்ற அவள் உறுதி நிலைத்தது. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை ஏற்பாடு செய்தனர். மாப்பிள்ளை ஆசிரியர் உத்தியோத்திற்கு படித்திருந்தார். விரைவில் வேலை வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் பெண் தர ஒப்புக்கொண்டார்கள். 

இந்த மாப்பிள்ளையை என் சிநேகிதிக்கு ஏனோ பிடிக்கவில்லை. வேறு இடம் பார்க்கலாம் என்று வாய்விட்டு சொல்லி விலக்கப் பார்த்தாள். அவளுக்கு அடுத்து ஒரு  தங்கை. அவளுக்குத்  திருமணம் செய்ய வேண்டும் என்று காரணத்தைச்  சொல்லி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர்.


திருமணமும் வெகு ஆடம்பரமாக அதிக செலவுகளோடு நடந்து முடிந்தது. மாப்பிள்ளை வீட்டில் கேட்ட அத்தனை சீர்களும் கொடுத்தார்கள். தங்கள் பெண் எந்த குறையும் இன்றி அந்த வீட்டில் வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்.

முதலிரவு அன்று அருகில் வந்து நின்ற மணமகன் அவள் தோளைத் தொட்டு  வேறு பெண்ணை காதலிப்பதாகவும், குடும்ப நிர்ப்பந்தத்திற்காக அவளை மணந்துக்கொண்டதாகவும் கூறி இருக்கிறான். மனைவி என்ற அந்தஸ்த்தை தவிர வேறு எந்த சுகமும் உனக்கு கிடைக்காது என்றும் கூறியிருக்கிறான்.

செய்வதறியாது திகைத்த அவள் தங்கையின் திருமணத்தை மனதில் வைத்துக்  கொண்டு உடனே வெளியேறிவிடாமல் அங்கே இருக்க முடிவெடுத்திருக்கிறாள். ஆனால் அவள் எதிரில் செல்போனில் தன் காதலியோடு பேசுவதும், போனில்  அந்தக்  காதலிக்கு முத்தம் கொடுப்பதுமாக இருந்திருக்கிறான். 

தங்கையின் திருமணம் முடிந்தது. மேலும் மன உளைச்சல் தாங்காமல் அவள் அவனை விட்டு வந்து விட்டாள்.

"அவனை விட்டு வந்துவிட்டாயே! விவாக ரத்து பெற்றாயா?"

" வாங்கிக்கொண்டேன்!"

"அப்புறம் என்ன? வேறு பொருத்தமான ஒருவனைத் திருமணம் செய்துகொள் "

" அப்படி எவனும் கிடைக்கவில்லை. வருகிறவன் எல்லாம் இரண்டு பிள்ளை மூன்று பிள்ளை கேஸ்கள். நான் கன்னி கழியாதவள் என்று நம்பத்தயாராய் இல்லாதவர்கள். எந்தப் பெற்றோருக்காக நான் காதல் கூடாது என்று கட்டுப்பாடாக இருந்தேனோ அவர்களே இரண்டாந்தாரமாக எப்படியோ வீட்டை விட்டு தொலைந்து தங்கள் சுமை தீர்ந்தால் சரி என்ற மனப்போக்கில் சலித்துக்கொள்கிறார்கள்!" என்றாள் .

மேலும் ஒரு பெருமூச்சு எனக்குள் புதைந்தது.

ராகவன் ஞாபகம் வந்தது. கருச்சிதைவினால் மனைவி இறந்து விட்டாள் ஒரு பெண்ணோடு வாழ்ந்து அந்தப் பாசத்திற்கு அடிமையாகிப் பட்ட பாடே போதும் என்று திடமாக இருப்பவன்.

நான் சொன்னால் கேட்பான்.

"ஒருவன் இருக்கிறான். இரண்டாம் தாரம் தான்.மனைவியை உயிருக்கு உயிராக நேசித்து அவள் இறந்ததால் மனமுடைந்து போனவன்.உனக்கு சரியென்றால் உடனே முயற்சிக்கிறேன்!" நான் சொன்னேன்

"அவர் என்னை நம்பவேண்டுமே!|"

"நம்ப வை நம்புவான்"

நம்பினாள். நம்பவைத்தாள் 

அடுத்தசந்திப்பில் அவள் முகத்தில் ஒரு புன்னகை. நாணப் புன்னகை.

"என்னடீ?" என்று கேட்டேன்.

",மூன்று மாதம் முழுகாமே இருக்கேன்"

எனக்குள் ஒரு சிறு பூரிப்பு. என்னால் கூட ஒரு நல்ல காரியம் செய்ய முடிந்திருப்பதில்.

வாழ்க்கை ஒரேயடியாகப் புலம்பலில் முடிந்துவிடுவதில்லை
------------------------------------------------------------------------------------------------------------------
நளினமும் நகைச்சுவையும் நவீனப் பார்வையும் கொண்ட  நாவல் அடுத்த செப்டம்பர் முதல் தேதிப் பதிவிலிருந்து  தொடங்குகிறது
------------------------------------------------------------------------------

                            எழுதுபவர்:?

                   ஆணா ? பெண்ணா?

                     நாவல் தலைப்பு?

                      தீம்?
                   
                    சமூகமா? சரித்திரமா?

----------------------------------------------------------------

  சஸ்பென்ஸ் ....சஸ்பென்ஸ்..சஸ்பென்ஸ் .... 

....சஸ்பென்ஸ் ....சஸ்பென்ஸ் ....சஸ்பென்ஸ் ....
---------------------------------------------------------------

                ஒரே ஒரு யூகத்திற்கும் கூட ஒரு புதுமையான பரிசு!

1 comment: