தமிழ் இனி மெல்ல [26]சென்ற பதிவின் இறுதியில்
சோழநாட்டில் அனைவரும் இராஜேந்திரனின் முன்நின்று பேசவும் அஞ்சுவர். அதைப் பற்றிக் கேள்விப்பட்டதால் அவள் மனதில் இராஜேந்திரனைப் பற்றி ஒரு அச்சங்கலந்த மரியாதையே இருந்து வந்தது. அவன் முதலில் தன்னுடன் பேசிய தோரணையில் அது அதிகமாகியது. ஆனால் தன் பதிலைக் கேட்டு அவன் காட்டிய பரிவு அச்சத்தை நீக்கி நன்றியில் திக்குமுக்காடச் செய்கிறது.
அருகில் நின்ற கணக்கரை விளித்த இராஜேந்திரன், “ஆமாத்தியரே, இப்பெண்ணின் தந்தையார் பொன்னம்பல ஓதுவார் காஞ்சிக்கடுத்த திருமயிலைக் கோவிலில் ஓதுவாராகப் பணிபுரிகிறாராம். அவருக்கு நமது அன்பளிப்பாக நூறு காணி34 நன்செய் நிலம் அளிக்க யாம் விரும்புவதாக நமது நண்பர் சிவாச்சாரியாருக்கு ஓலை அனுப்பும். இரவு நான் உணவு கொள்வதற்கு முன் ஓலை எழுதப்பட்டு எமது இலச்சினை அதில் இடப்பட்டுவிட வேண்டும். தஞ்சை திரும்பும் முதல் குதிரைவீரன் மூலம் இச்செய்தி சிவாச்சாரியாருக்குச் செல்ல வேண்டும்.” என்று ஆணையிடுகிறான்.
இதைக்கேட்ட நிலவுமொழியின் தலை சுழல்கிறது. நூறு காணி நன்செய் நிலமா? அப்படி ஒரு அன்பளிப்புப் பெற நாம் என்ன செய்துவிட்டோம்! இதுதவிர விலை மதிக்கமுடியாத பொன்மாலையை மகாராணியார் கடிட்டி நம் கழுத்தில் போட்டிருக்கிறாரே! மேலும் கோப்பரகேசரியான இராஜேந்திரரே தன்னைத் தன் மகள் என்று இத்தனைபேர் முன்னர் சொல்லிவிட்டாரே! நிலவுமொழி நிலவுக்கே மிதந்து சென்று கொண்டிருக்கிறாள்.
அவள் தலையை அன்புடன் வருடிக்கொடுத்த இராஜேந்திரன், “ஆமாத்தியரே, இப்பெண்ணுக்கு நல்ல ஆடைகள் உடனே வேண்டும் அதையும் நிறைவேற்றுவீராக!” என்று அடுத்த ஆணையைப் பிறப்பிக்கிறான்.
“பெண்ணே நிலவுமொழி, எமது நண்பரான சிவாச்சாரியார் எப்படி இருக்கிறார்? எமக்கு ஏதாவது சேதி சொல்லி அனுப்பியிருப்பாரே!” என்று வினவுகிறான்.
தடுமாறுகிறாள் நிலவுமொழி. சிவாச்சாரியார் என்ன சேதி சொல்லி அனுப்பியிருப்பார் என்று குழம்புகிறாள். சிறிது நேர யோசனைக்குப் பிறகு அவள் முகம் மலர்கிறது.
“அரசர் பெருமானே! சிவாச்சாரியார் தமிழ்த் திருப்பணிக்காக நாடு முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார் நான் புறப்படும் சமயம் “வேங்கை நாட்டில் நமது புலி இருக்கிறதா என்று பார்!” என்று சொன்னார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று என் மதிக்கு எட்டவில்லை. ஒருவேளை இது அவர் தங்களுக்கு அனுப்பிய குறியீட்டுச் சேதியா என்றும் எனக்குத் தெரியவில்லை.” என்று தயங்கியவாறே சொல்கிறாள்
.
“இது எனக்கு அனுப்பிய சேதிதான். நன்று பெண்ணே நன்று! என்னம்மா மங்கை ஒன்றுமே பேசாமல் நின்றுவிட்டாய்?” என்று மகளின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளுகிறாள்.
“தந்தையாரே! இரண்டு திங்கள் என்னுடன் பணிப்பெண்ணாகப் பயணித்த நிலவுமொழி சிவாச்சாரியார் தேர்ந்தெடுத்து அனுப்பியவளா? இவள் மூலம் சிவாச்சாரியார் தங்களுக்கு சங்கேதமாகச் சேதி வேறு அனுப்பியிருக்கிறாரா? அன்னையார் சொல்லும் வரை இவள் எனது பணிப்பெண்ணாக, எனக்குத் துணையாக வந்திருக்கிறாள் என்றுதான் எண்ணி வந்திருக்கிறேன்.
இவளோ, அன்னையாரோ, இதுபற்றி என்னிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. இன்னும் வேறு என்னவெல்லாம் நடக்கிறது? எனக்குத் தலை சுற்றுகிறது. அரசு இயங்குவது பற்றி தாங்கள் எனக்கு நிறையக் கற்றுக்கொடுக்கவேண்டும்!” என்று செல்லமாகக் கோபிக்கிறாள்.
“புலிக்குட்டிக்கு வேட்டையாடக் கற்றுக் கொடுக்கவா வேண்டும்? உன் அன்னையைக் கவனித்தாலே அந்தக் கலை உனக்குத் தானாகவே வந்துவிடும்.” என்று கடகடவென்று சிரிக்கிறான் இராஜேந்திரன்.
அங்கு எட்டு ஆட்கள் தூக்கி வந்த சிவிகையில் மூன்று பெண்களும் ஏறிக் கொள்கிறார்கள். சிவிகை அவர்கள் இரவு தங்கவிருக்கும் ஓடைக் கரையை நோக்கிச் செல்கிறது. உள்ளே அமர்ந்திருந்த அம்மங்கை நிலவுமொழியை நோக்குகிறாள். தனது தாயின் பொன்மணிமாலை அவளுக்கு அழகு சேர்ப்பதை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள். நிலவுமொழியின் கருநிறத்திற்கு அந்தப் பொன்மாலைதான் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது?! அந்த மாலை அவளுக்கு ஒரு அரசகளையையே கொண்டுவருவதை அம்மங்கையால் உணர முடிந்தது. தந்தை சொல்லியபடி அவள் நல்ல ஆடைகளையும் அணிந்து கொண்டால் அவளையும் ஒரு அரசகுமாரி என்று நினைத்தாலும் நினைத்து விடுவார்கள் என்பதை நினைத்தவுடன் தன்னையும் அறியாமல் “க்ளுக்” என்று சிரித்து விடுகிறாள்.
“என்ன சிரிப்பு மங்கை?” என்று தாய் வினவியதற்கு, “ஒன்றுமில்லை” என்று தலையசைக்கிறாள்.
----------------------------------------------------------------------
பரிதாபி, வைகாசி 5 - மே 10, 1012
“நீர் சொல்வது உண்மைதானா? அமரபுஜங்கன் படை திரட்டத்தான் ஈழம் சென்றிருந்தானா? இப்பொழுது எவ்வளவு தூரம் அவன் முயற்சி உருப்பெற்றிருக்கிறது?” என்று தென்மண்டல ஒற்றர் படைத் தலைவனை வினவுகிறார் இராஜராஜர். அவரருகே சிவசங்கர சிவாச்சாரி, தலைமை அமைச்சர், தென்மண்டலப் படைத் தண்டநாயகர் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்.
“கிட்டத்தட்ட முப்பதாயிரம் பேர்களைத் திரட்டி இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. மதுரைக் கோட்டைக்குள்ளும் பத்தாயிரம் பேர் இருக்கக் கூடும்!” என்று பதிலளிக்கிறான் ஒற்றர் தலைவன்.
“சோழநாட்டு நாவாய்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, அமரபுஜங்கன் எப்படிச் சிங்களத் தீவிற்குச் சென்று திரும்பி வந்தான்? சிவாச்சாரியார் மதுரைக்குச் சென்று வந்து தனது சந்தேகத்தைத் தெரிவித்த பிறகுதானே நீர் உமது ஒற்றர்களை அனுப்பி இதெல்லாவற்றையும் கண்டறிந்து வந்திருக்கிறீர்! அதுவரை உமது ஒற்றர்படை தூங்கிக் கொண்டா இருந்தது?” இராஜராஜரின் குரலில் புலியின் உறுமல் இருக்கிறது.
ஒற்றர் படைத் தலைவனின் குலை நடுங்குகிறது. நம்மால் கண்டுபிடிக்க முடியாததை மதுரை சென்ற சிவாச்சாரி ஒரே நாளில் எப்படிக் கண்டுபிடித்தான் என்று எண்ணினால் அவனுக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. பாண்டிய அமைச்சரிடம் மதுரைக் கோட்டையைச் சுற்றிப் பார்ப்பதாகச் சொன்னவன் படை வீரர்கள் ஒளிந்து இருப்பதை எப்படி மோப்பம் பிடித்தான்? அமரபுஜங்கன் குற்றாலம் சென்றிருக்கிறான் என்பதையும் அவன் நம்பவில்லை என்றும், அவன் எங்கிருக்கிறான் என்பதைச் சல்லடை போட்டுத் தேடவேண்டும் என்று சொன்னதும் ஒற்றர் தலைவன் நினைவுக்கு வருகிறது.
“சக்கரவர்த்தி அவர்களே! அரபு நாட்டுக் கப்பல் போல மாற்றம் செய்த கப்பலில் கொல்லம் வந்திருக்கிறான் பாண்டிய மன்னன். கொல்லத்தில் நமது சுங்கப் பரிசோதனை அதிகாரிகளும் அதை நம்பி விட்டார்கள். அராபியன் மாதிரி மாறுவேடத்தில் கொல்லத்தில் இறங்கிய அவன் அதே வேடத்தில் மதுரை வந்து சேர்ந்ததாக ஆங்காங்கு கிடைத்த தகவல்களை இணைத்துப் பார்த்து அறிந்து கொண்டோம். இந்தக் கவனக் குறைவுக்கு நான் முழுப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ளுகிறேன். சக்கரவர்த்தி அவர்கள் கொடுக்கும் எந்தத் தண்டனையையும் ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக உள்ளேன். தங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இல்லாது போன எனக்கு இனி தங்கள் முன்பு நின்று பேசவும் என்ன தகுதி இருக்கிறது?” என்று தழுதழுத்த குரலில் பதில் சொல்கிறான்.
அவனை உறுத்துப் பார்த்த இராஜராஜர் சிறிது நேரம் அமைதியாக இருக்கிறார்.
“உமக்கு தண்டனை கொடுப்பது பற்றியும், அது எவ்வாறு இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதும் எமது கடமை. நீரே எமது பொறுப்பை எடுத்துக் கொண்டு உமக்கத் தண்டனையும் வழங்கிக் கொள்ள தீர்மானிக்க ஆரம்பித்து விட்டீரா?” ஒற்றர் தலைவனை இரண்டாக அறுப்பது போல இருக்கிறது அவரது குரல். ஏதோ பதில் சொல்ல ஆரம்பித்த அவனைக் கையமர்த்தி விட்டு, “தண்ட நாயகரே! நமது கையில் இப்பொழுது எவ்வளவு படை இருக்கிறது?” என்று வினவுகிறார்.
“சக்கரவர்த்தி அவர்களே! தஞ்சைக் கோட்டையின் காவலுக்காக பெருவீரர் படையினர் ஐயாயிரவர் இருக்கிறார்கள். உறையூரில் மூவாயிரம் குதிரை வீரர்களும், நூற்றைம்பது யானைகளும், பத்தாயிரம் காலாள் படையும், ஆயிரம் வில்லாளிகளும் உள்ளனர். நாகைப்பட்டினத்தில்...” என்று ஆரம்பித்த தண்ட நாயகரை இடைமறித்து, “யாம் கேட்டதின் உள்நோக்கமறியாமல் எனக்கு எண்ணிக்கை காண்பிக்கிறீரே! பாண்டியன் படைக்கு பதில் சொல்ல இப்பொழுது நம்மிடம் படைகள் உள்ளனவா? நம் வீரர்களின் ஆற்றல் எமக்குத் தெரியும். நாற்பதாயிரம் பகைவர் படைகளை எதிர்க்கும் அளவுக்கு நம்மிடம் படைபலம் இருக்கிறதா? அதைச் சொல்லும்.” என்று சாடுகிறார் இராஜராஜர்.
பொறுமையிழந்து அவர் இப்படிப் பேசியதே இல்லை. அதிலிருந்து அமரபுஜங்கனின் திட்டத்தை அவர் புரிந்து கொண்டிருக்கிறார், சோழப் படைகள் இக்கட்டான நிலைமையில் இருக்கின்றன என்று அவருக்குப் படுகிறது என்று தண்ட நாயகருக்குப் புரிகிறது. தாம் சொல்லப் போகும் பதில் ஒற்றர் தலைவனின் நிலைமைக்குத் தன்னை ஆளாக்கப் போகிறது என்றும் புரிந்து கொள்கிறார்.
“என்னை மன்னிக்கவேண்டும் சக்கரவர்த்தி அவர்களே! தஞ்சைக கோட்டையின் படைகளை நீக்கி நம்மிடம் மொத்தம் இருபத்தையாயிரம் பேர் இருக்கிறார்கள். மொத்தம் முந்நூறு யானைகள் தேறும்.” என்று தணிந்த குரலில் பதில் அளிக்கிறார்.
அந்தச் செய்தி இராஜராஜருக்கு மிகவும் எரிச்சலைத் தந்தாலும் அவருடைய முகத்தில் ஒருவிதமான மாறுதலும் தெரியவில்லை. அவரது பார்வை சிவாச்சாரி பக்கம் மெதுவாகத் திரும்புகிறது. அதைக் கண்ட சிவாச்சாரி மனது இலேசாகப் படபடக்கிறது.
“சிவாச்சாரியாரே! கிட்டத்தட்ட இருபது திங்கள்கள் முன்னால் இராஜேந்திரனிடம் ஒரு புது மாதிரியான படை அமைப்பைப் பற்றிச் சொன்னீர் அல்லவா? ஏதோ சீனநாட்டு அறிஞர் எழுதிய படை நடத்தும் முறை என்றுகூட கூறினீரே!” நிறுத்திவிட்டு அவளையே உற்று நோக்குகிறார்.
“திரிபுவனச் சக்கரவர்த்திகளே! நான் விவரித்த படை அமைப்பு மூலம் பாண்டியப் படை அனைத்தையும் சிதறி ஓடச் செய்து அமரபுஜங்கனையும் சிறைப்பிடிக்க இயலும். அதற்கான வலிமை நம்மிடம் இருக்கிறது. நம் படைகளுக்கு ஒத்தாசையாக ஏவுகணைக் கருவிகள் ஐநூறு செய்ய வேண்டும். இன்று ஆரம்பித்தால் நூற்றைம்பது தச்சர்களையும், இருநூறு கொல்லர்களையும் கொண்டு இருபது நாட்களில் செய்து விடலாம்.”
“ஏவுகணைக் கருவிகள் இல்லாவிட்டால்?”
“இந்தப் போர் வலுவில்லாத சூதாட்டம் போலத்தான் அமையும், சக்கரவர்த்திகளே!”
சிவாச்சாரியனுடைய பளிச்சென்ற பதில் அனைவருக்கும் வியப்பைத் தருகிறது. ஒண்ணரை ஆண்டுகளில் அவன் இராஜராஜரிடம் பெற்று வரும் செல்வாக்கு அனைவருக்கும் வியப்பையும், சிறிது பொறாமையையும் தந்தாலும், அவனது திறமைக்கு அனைவரும் மதிப்புக் கொடுத்தனர். தனது செல்வாக்கை அவன் துளிகூட எவரிடமும் காட்டியதில்லை. அனைவரிடமும் மதிப்புடனும், பணிவுடனுமே பழகி வந்தான். எவரையும் ஓரம் கட்டவும், பதவியைப் பறித்துக் கொள்ளவும் அவன் முற்படவில்லை. அதனால் அனைவரும் அவனை ஒரு இடையூறாகவோ, தமக்குப் போட்டியாகவோ நினைக்கவில்லை. இருப்பினும் தயக்கமில்லாமல் அவன் இப்படிப் பதில் சொல்வதை இராஜராஜர் எப்படி எடுத்துக்கொள்வாரோ என்ற அச்சமும் அனைவரின் மனதில் தோன்றத்தான் செய்கிறது.
“சூதாட்டத்தில் எமக்கு என்றுமே நம்பிக்கை கிடையாது. எதிர்நீச்சல் போடுவது எமக்கு விரும்பிய செயல்தான். அமைச்சரே, தண்ட நாயகரே, இன்றே ஏவுகணைக் கருவிகள் செய்வதற்கு வேலைகள் தொடங்கட்டும். சிவாச்சாரியாரே! அவை எப்படி வேலை செய்யும் என்று அனைவருக்கும் விளக்குவீராக! இன்னும் என்னவேண்டுமோ, தெரிவியும்!” கணீர் என்ற குரலில் பதிலும், உத்திரவும் பிறக்கிறது இராஜராஜரிடமிருந்து.
சிவாச்சாரி ஏவுகணைக் கருவியைப் பற்றி விளக்க ஆரம்பிக்கிறான். எளிதான, ஆனால் மிகவும் கொடூரமான கருவி அது. மிகப் பெரிய கவண்கல் எறியும் கருவி மாதிரித்தான் அது இருக்கும் என்று ஆரம்பிக்கும் சிவாச்சாரி. “அந்தக் கருவியில் ஒரு பெரிய கம்பத்தை நடுவில் மற்ற இரு கம்பங்கள் தாங்கி இருக்கும். நடுக் கம்பத்தின் ஒரு பக்கம் பெரிய கல் எடைக்காகக் கட்டப் பட்டிருக்கும். மறு பக்கம் பெரிய தொட்டி இருக்கும். அதில் கற்களையோ, எரியும் தீப்பந்தங்களையோ வைக்கலாம்.
“கீழே இருக்கும் சக்கரத்தில் கட்டப்பட்டு இருக்கும் கயிற்றை இழுத்து நடுக் கம்பத்தில் கட்டிய பெரிய கல்லை உயர்த்த வேண்டும். தொட்டியை நிரப்பியதும், ஒரு பிடியை இழுத்தால் கல் இருக்கும் பக்கம் தாழ்ந்து தொட்டி வேகமாக மேலே வரும். வரும் வேகத்தில் அதிலுள்ளவை கிட்டத்தட்ட அரைக் காதத்திலிருந்து முக்கால் காதம் வரை எறியப்படும். அவை எதிரிப் படையைத் தாக்கும் பொழுது அவர்கள் நிலை குலைவார்கள்” என்று விளக்குகிறான்.
ஒரு திரைச்சீலையில் அதை வரைந்தும் காண்பிக்கிறான். இப்படிப்பட்ட ஏவுகணைக் கருவிகளை35 யவனர்களும், அராபியர்களும் பயன் படுத்துகிறார்கள் என்றும் தெரிவிக்கிறான். தான் இக்கருவியை நேரில் பார்க்கா விட்டாலும், கேள்விப்பட்டதை வைத்து இக்கருவியை சிறிய அளவில் வடிவமைத்ததாகவும், அதையே பெரிது படுத்தினால் போரில் பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறான்.
முன்மாதிரியாகச் செய்யப்பட்ட சிறிய கருவி நூறு காலடி தூரம் கணைகளை ஏவும் வல்லமை படித்தது என்று சோதனை செய்து அறிந்து கொண்டதாகவும், விருப்பப்பட்டால் அரண்மனையை அடுத்த போர்க்கருவிச் சாலையில் இருக்கும் அந்த மாதிரிக் கருவியை அனைவரும் சென்று பார்க்கலாம் என்று தெரிவிக்கிறான். இப்படிப்பட்ட கருவியை நிர்மாணிக்க எப்படி இவன் மூளை வேலை செய்தது என்று நினைத்துப் பார்த்துப் பேச்சிழக்கிறார்கள்.
இராஜராஜர் உள்பட அனைவரும் அப்போர்க்கருவியின் மாதிரியையும் அதன் இயக்கத்தையும் சென்று பார்வையிட்டு வந்தவுடன் போர் ஆலோசனை துவங்குகிறது.
“சக்கரவர்த்தி அவர்களே! இந்தப் போரைத் தாங்கள்தான் முன்னிருந்து நடத்த வேண்டும். தங்கள் அருகில் நான் இருக்க வேண்டும். போரில் வெல்லுவதற்கு இந்த இரண்டும் நடந்தேறவேண்டும்!”
சிவாச்சாரியனுடைய கடைசி விண்ணப்பம் தண்டநாயகருக்குச் சினத்தை வரவழைக்கிறது.
“சிவாச்சாரியாரே! நீர் பேசுவது எமது திறமையைக் குறைத்து மதிப்பிடுவதுபோல இருக்கிறது! பாண்டியனுடன் போரிட சக்கரவர்த்திகளும், அவருக்குத் துணையாக நீரும் செல்லவேண்டும் என்றால் தண்டநாயகனான எனக்கு என்ன வேலை? இது எமக்குச் சரியாகப் படவில்லை!” குமுறுகிறார் தண்ட நாயகர். கோபத்தில் மீசை துடிக்கிறது, கண்கள் கோவைப் பழம் போலச் சிவக்கின்றன. இராஜராஜர் இல்லாவிட்டால் வாளை உறுவியிருப்பார் போலத் தெரிகிறது.
“தண்ட நாயகரே, உமது சொல்லில் இருக்கும் நியாயத்தை யாமும் அறிகிறோம். நீர் சற்றுப் பொறுத்திருந்தால் அக்கேள்வி எம்மிடமிருந்தே பிறந்திருக்கும்.” என்றவாறு சிவாச்சாரியனை நோக்கிப் புருவங்களை உயர்த்துகிறார் இராஜராஜர்.
மிகவும் பணிவுடன் தண்டநாயகரை நோக்கிக் கைகூப்புகிறான் சிவாச்சாரி. “தண்ட நாயகரே! உங்களது திறமையைக் குறைத்து மதிப்பிட எனக்கு எப்படித் துணிவு வரும்? திரிபுவனச் சக்கரவர்த்தி அவர்களால் போற்றப்படும் பழுவேட்டரையர் பரம்பரையில் வந்த தங்களையா நான் அப்படிப் பேசுவேன்! அப்படிப் பட்ட எண்ணத்தை எழுப்பிய என் சொற்களுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.” அவனுடைய குரலில் இருந்த மனப்பூர்வமான கழிவிரக்கம் தண்டநாயகரின் சினத்தைச் சிறிது குறைக்கிறது.
“நான் அப்படிச் சொல்வதற்குக் காரணங்கள் உள்ளன. சக்கரவர்த்திகள் அனுமதி கொடுத்தால் மேலே தொடருகிறேன்” என்று இராஜராஜர் பக்கம் திரும்புகிறான்.
“மேலே தொடரலாம்” என்பது போலத் தலையசைக்கிறார் இராஜராஜர்.
“இந்தச் சீனமுறைப் போரில் அடிக்கொரு தடவை மாற்றங்கள் செய்து கொண்டே இருக்கவேண்டும். எதிரியை ஏமாற்றுவதே அதன் முக்கிய அம்சமாகும். அது மட்டுமல்லாமல் பாண்டிய மன்னரையும் நாம் கைது செய்ய வேண்டும். அதற்கு உடனுக்குடன் மின்னல் வேகத்தில் படைநடத்திச் செல்வதை மாற்றவேண்டும். அப்படிச் செய்ய ஆலோசனை கூறும் நிலையில் நான் இருக்கிறேன்.” என்ற சிவாச்சாரி மேலே தொடர்கிறான்.
“நான் உங்களுக்கு ஆணை இட இயலுமா தண்ட நாயகரே? தென்மண்டலச் சோழப் படைகளை நடத்தும் திறமையான தாங்கள் எங்கே, நானெங்கே? ஆகவே, தங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களைச் செய்யக்கூட ஆணையிடும் அதிகாரம் திரிபுவனச் சக்கரவர்த்திகளுக்குத்தான் இருக்கிறது. அதனால்தான் நான் அவர்கள் போரை முன்னிருந்து நடத்த வேண்டும் என்று சொன்னதன் காரணம். அவருக்கு ஆலோசகனாகத்தான் நான் போரில் கலந்து கொள்வேன். தண்ட நாயகர் நீங்கள்தான், நான் அல்ல. என்னுடைய உற்சாகத்தில் நான் விளக்கம் தராமல் பேசியதற்கு அனைவதும் என் பிழையைப் பொறுத்து அருளவேண்டும்!”
சிவாச்சாரி குரலில் இருக்கும் பணிவும், கழிவிரக்கமும் தண்ட நாயகரை அமைதிப் படுத்துகிறது. தலை பணிந்து நிற்கும் அவனிடம், “சிவாச்சாரியாரே! நானும் காரணத்தை அறிந்து கொள்ளாமல் சிறிது அவசரப்பட்டு சினத்துடன் பேசிவிட்டேன். நீரும் அதை மனதில் இருந்து நீக்கி விடுவீராக!” என்கிறார்.
இராஜராஜரின் முகத்தில் இலேசான புன்னகை மலர்கிறது. யார் பேசுவதையும் நொடியில் அலசி ஆராயும் திறன் படைத்த அவருக்கா சிவாச்சாரி சொன்னது விளங்காமல் போய்விடும்!” தண்ட நாயகருக்கு அவனே விளக்கம் சொல்லட்டும் என்றுதான் நாடகத்தை நடத்தி, எரிச்சலைத் தணித்தார்.
ஒற்றர் தலைவன் பக்கம் திரும்புகிறார். “நீர் உம்மை மிகவும் குறைத்து மதிப்பிட்டு விட்டீர். நீர் கடந்த இருபது ஆண்டுகளாக சோழ நாட்டிற்குத் திறமையாகப் பணி செய்து வந்துள்ளீர். தவறு செய்வது மனித இயல்பு. அதை துணிச்சலுடன் ஒப்புக் கொள்வது உயர்வான குணமாகும். உம்முடைய தொழிலை உற்சாகத்துடன் செய்து வாரும். இதுதான் யாம் உமக்கு அளிக்கும் தண்டனையாகும்.” என்று புன்னகை செய்த அவர், “நீர் எமக்கு ஒரு முக்கியமான உதவியைச் செய்ய வேண்டும்!” என்கிறார்.
“ஆணையிடுங்கள் சக்கரவர்த்தி அவர்களே!”
“நம்மிடம் பதினையாயிரம் படைவீரர்களே இருப்பதாகவும், நூற்றைம்பது யானைகளே உள்ளதாகவும், மற்றவர்கள் எல்லாம் இராஜேந்திரனுடன் கீழைச் சாளுக்கிய நாட்டிற்குச் சென்று விட்டதாகவும் பாண்டிய ஒற்றர்களுக்குத் தவறான செய்தி கிடைக்கும்படி செய்ய வேண்டும். தவிர, நமக்கு பாண்டியன் படை திரட்டியிருப்பது பற்றி ஒன்றுமே தெரியாதவாறும் அவர்களை நம்பச் செய்ய வேண்டும். புரிகிறதா?” பொருட்செறிந்த புன்னகையுடன் ஆணையிடுகிறார்.
“உத்தரவு சக்கரவர்த்தி அவர்களே!” என்று குழைகிறான் ஒற்றர் தலைவன்.
இராஜராஜர் தலையசைத்ததும் அங்கிருந்து வெளியேறுகிறான்.
சீனப் போர் முறைகளைப் பற்றி விவரிக்கும்படி இராஜராஜர் கேட்டவுடன் அதை விளக்க ஆரம்பிக்கிறான் சிவாச்சாரி. அனைவரின் முகமும் மெல்ல மலர ஆரம்பிக்கிறது. இரண்டு நாழிகைகளில் போர் ஆலோசனை முடிகிறது. இராஜராஜர் தனியாகச் சிந்தனை செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டதால் தண்டநாயகரும், சிவாச்சாரியனும், அமைச்சருடன் வெளியே செல்கிறார்கள்.
“யாழிசைக்கும் பாணர்களை வரச் சொல்!” என்று ஆணையிடுகிறார் இராஜராஜர்.
யாழிசையில் கண்களை மூடிக்கொண்டு தான் கடைசியாக முன்னிருந்து நடத்தப் போகும் போரைப் பற்றி சிந்திக்கிறார் அவர். வெற்றித் திருமகளைத் தழுவ இப்போர் எவ்வளவு கனகச்சிதமாக நடக்கவேண்டும். படைகள் தனித்து இயங்காமல் சதுரங்கப் பொம்மைகளைப் போல இயக்கப்பட வேண்டும், இதுவரை செய்திராத சித்து வேலைகளை எப்படி மின்னல் வேகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று கண்முன் உருவகப் படுத்துகிறார். சோழப் படைகளில் பாதிப் பேர் அழியும் வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைத்தால்தான் அவருக்கு வருத்தமாக இருக்கிறது. சதுரங்கத்தில் பலி கொடுத்து வெல்லும் ஆட்டம் போல (gambit) இறுதி வெற்றிக்காகப் பாண்டியர்களுக்குக் காவு கொடுக்க பலிகடாக்களாக தான் அனுப்பப் போகும் சோழவீரர்களை நினைத்தால் அவர் இதயம் கனக்கிறது. இந்தவிதமாக இப்போரை நடத்தப் போவது அவருக்குப் பிடிக்காவிட்டாலும், இக்கட்டான இந்நிலையில் சோழநாட்டைக் காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை.
சிவாச்சாரியனின் அறிவுக்கூர்மையை எண்ணி வியக்கிறார் இராஜராஜர். அவன் கலந்து கொள்ளப் போகும் முதல் போருக்கு முன்னாலேயே தண்டநாயகரின் மதிப்பைக்கூடத் தன் ஏவுகணைக் கருவியின் வடிவமைப்பால் கவர்ந்து விட்டானே என்பது அவருக்கு மகிழ்வை அளிக்கிறது. சகலகலா வல்லவனாக ஒருத்தனைத் தமக்கு அளித்துவிட்டுப் போன கருவூராருக்கு மனத்தளவில் நன்றி செலுத்துகிறார்.
“பெருவுடையாரே! எனக்குப் பிறகு இந்த சிவாச்சாரியார் நெடுங்காலம் இராஜேந்திரனுக்கு உதவியாக இருக்க அருள் செய்யுங்கள்” என்று வேண்டிக் கொள்கிறார்.[தொடரும்]
-----------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு
35இம்மாதிரிக் கருவிகளை ஐரோப்பியர்கள் பாலிஸ்டா என்றும், ட்ரபுசெட் என்றும் அழைப்பர். இங்கே காட்டியுள்ள படங்கள் விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்டன. சிவாச்சாரி விவரிப்பது இம்மாதிரியான ஏவுகணைக் கருவிகளைப் பற்றித்தான்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு
35இம்மாதிரிக் கருவிகளை ஐரோப்பியர்கள் பாலிஸ்டா என்றும், ட்ரபுசெட் என்றும் அழைப்பர். இங்கே காட்டியுள்ள படங்கள் விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்டன. சிவாச்சாரி விவரிப்பது இம்மாதிரியான ஏவுகணைக் கருவிகளைப் பற்றித்தான்.
No comments:
Post a Comment