Tuesday, 12 August 2014

தமிழ் இனி மெல்ல:[33] எப்பொழுது நீர் எமது கைதி ஆகி விட்டீரோ...

தமிழ் இனி மெல்ல:[32] சென்ற பதிவின் இறுதியில் 
பாண்டியர்கள் வீரபாண்டியனின் மோசமான சாவுக்குப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிவான். இருந்த போதிலும், சோழப் பேரரசுக்குத் தமிழகமே தலை வணங்கிக் கொண்டுதான் இருக்கிறது. கருநாடு, வேங்கை நாட்டோடு வடசேரன் பாஸ்கர ரவிவர்மனும் கப்பத்தை ஒழுங்காக அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறான். இலங்கையில் பாதிக்குமேல் சோழர்களின் நேரடி ஆட்சிக்குக் கீழ்தான் இருக்கிறது. இலங்கை மன்னன் மகிந்தனும் அரசாளத் தகுதியற்ற ஒருவன் என்பதோடு மட்டுமின்றி, தென்னிங்கைக்கும் தள்ளப் பட்டிருக்கிறான். இருப்பினும் எப்பொழுதும் சோழர்களின் கடல் வணிகத்திற்குத் தொல்லை தர முனைந்துகொண்டுதான் இருக்கிறான்.

தென்சேரனும், வயநாட்டுத் தலைவனுமான கோவர்த்தன மார்த்தாண்டன் தொல்லை தர வாய்ப்பிருக்கிறது. ஆக, சிங்களவன், மற்றும் தென் சேரன் உதவியுடன் பாண்டியன் படை திரட்டியிருக்கிறான். தஞ்சைக் கோட்டையைக் காக்கவென்று மிகச் சிறந்த படை இருக்கிறது. ஆயினும் பாண்டியன் போருக்கழைத்தால் தந்தை செல்லாமல் இருக்கமாட்டார். குறைந்த படை வீரர்களுடன் தந்தை எப்படி... ?

“அரசே! சிந்தனையைக் கலைப்பதற்கு மன்னியுங்கள். மதிய உணவு கோவில் விடுதியில் ஏற்பாடாகி உள்ளது. அங்கு செல்லலாமா?” என்று வினவுகிறார் பல்லவராயர். போரென்று வந்தால் நாள் கணக்கில் உணவின்றி இருக்கும் அவர், சாதாரண நாள்களில் ஒரு வேளைகூட தாமதித்து உணவு உண்ணமாட்டார். அப்படி ஒரு பழக்கம் அவருக்கு. நான்கு பேர் உணவை அவரே உண்டுவிடுவார். முன் பிறப்பில் தான் ஒட்டகமாகப் பிறந்திருக்கக் கூடும் என்று தன்னைத்தானே நகையாடிக்கொள்ளவும் செய்வார். எனவே, அவர் உணவுண்ணத் தன்னை அழைப்பதில் இராஜேந்திரனுக்கு வியப்பொன்றும் இல்லைதான். தான் இருக்கும்போது தனியாக உண்ணமாட்டார், தவிர இப்பொழுது அவருக்கு பசி வந்து விட்டது என்று அறிந்து கொண்ட இராஜேந்திரன், சரியென்று தலை அசைக்கிறான்.

இருவரும் கோவில் விடுதியை நோக்கி நடக்கிறார்கள்.
                                                         * * *
தமிழ் இனி மெல்ல:[33] தொடர்கிறது 

அரிசோனா மகாதேவன் 

                          பிரான்மலைக்கும் பொன்னமராவதிக்கும் நடுவே
                           பரிதாபி, ஆனி 10 - ஜூலை 4, 1012
பொன்னமராவதிக்கும் பிரான்மலைக்கும் நடுவில் சமதளமான இடத்தில் சோழப்படையினர் ஆயிரம் பேரும், பாண்டிய, சேரப் படையினர் ஆயிரம் பேரும் திரண்டிருக்கின்றனர். நடுவில் ஒரு பெரிய யானையில் அமர்ந்திருக்கிறார் இராஜராஜர். அவரது யானையின் அம்பாரியின் மீது புலிக்கொடி பறந்து கொண்டிருக்கிறது. இராஜராஜருக்கு வலப்பகத்தில் இருக்கும் யானையில் சோழர் தென்மண்டலத் தண்டநாயகர் பழுவேட்டரையர் அமர்ந்திருக்கிறார். இடப்பக்க யானையில் இராஜாதிராஜனும், அவனுடைய யானைக்கு அடுத்த யானையில் சிவாச்சாரியும் அமர்ந்திருக்கிறார்கள். இவர்களுக்குப் பின்னால் ஐநூறு குதிரைவீரர்களும், இருநூறு வில்லாளர்களும், முன்னூறு காலாட்களும் அணிவகுத்து நிற்கிறார்கள்.

அதே மாதிரி, அவர்களுக்கு எதிரில் கால் காத தூரத்தில் (கிட்டத்தட்ட ஆயிரம் அடி) மூன்று யானைகளில் அமரபுஜங்கன், கோவர்த்தன மார்த்தாண்டன், மற்றும் பாண்டியப் படைத் தலைவர் ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள். சோழர்கள் போலவே பாண்டியர்களும் தங்கள் குதிரைவீரர்கள், வில்லாளர்கள், காலாட் படையுடன் நிற்கிறார்கள்.

முதலில் சிவாச்சாரி தன் யானையிலிருந்து இறங்குகிறான். இருவீரர்கள் புலிக்கொடியுடனும், சமாதானக்கொடியைப் பிடித்தவாறு அவன் அருகில் வருகிறார்கள். மூவரும் குதிரைகளில் ஏறிக்கொள்கிறார்கள்.

இதைக் கண்டதும் பாண்டியர் படைத்தலைவர் தனது யானையிலிருந்து இறங்கி ஒரு குதிரையில் ஏறுகிறார். ஒரு குதிரைவீரன் மீன் கொடியுடனும், இன்னொருவன் வில், அம்புக் கொடியுடனும், அதே சமயம் இருவரும் சமாதானக் கொடிகளைத் தாங்கியும் அவரது இருபக்கமும் வருகிறார்கள்.

சிவாச்சாரியனும், பாண்டியர் படைத் தலைவரும் ஒருவரை நோக்கி ஒருவர் குதிரையைச் செலுத்துகிறார்கள். அருகில் வந்ததும், சிவாச்சாரி கையை உயர்த்துகிறான். அறுவரும் குதிரைகளை நிறுத்துகிறார்கள்.

“பாண்டியப் படைத்தலைவருக்கு எனது வணக்கங்கள்! சிவனருள் கிட்டட்டும்!”  உரத்த குரலில் முழங்குகிறான் சிவாச்சாரி.

“சிவாச்சாரியாருக்கு எனது வணக்கங்கள்! சொக்கநாதன் அருள் கிட்டட்டும்!”  என்று பதிலுக்கு முழங்குகிறார் பாண்டியப் படைத்தலைவர்.

“சக்கரவர்த்தி அவர்களின் திருமுகப்படி வந்தமைக்கு நன்றி! நேர்முகப் போருக்குத் தங்கள் மன்னர் அழைப்பை ஏற்று சக்கரவர்த்தி அவர்கள் வந்திருக்கிறார். சண்டைக்கு அழைத்தது தங்கள் மன்னர் என்றபடியால், ஆயுதத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை சக்கரவர்த்தி அவர்களுக்கு இருக்கிறது. ஆகவே எங்கள் சக்கரவர்த்தி அவர்கள் இருகைகளாலும் பிடித்துப் போர் செய்யும் அகண்ட வாளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதோ அந்த வாளில் ஒன்று, பாண்டிய மன்னருக்காக. இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா?” என்று கணீரென்ற குரலுடன் அறிவித்த சிவாச்சாரி நீட்டிய வாளை பெற்றுக் கொள்கிறார் பாண்டிய படைத்தலைவர்.
“அதைதான் திருமுகத்தில் தெளிபுபடுத்தியாகி விட்டதே! தூதாக அனுப்பிய எங்கள் பாண்டிய வீரர்கள் எங்கே?” என்ற பாண்டிய படைத்தலைவரின் வினாவுக்கு, “எங்கள் சோழ வீரர்களைப் போல நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இச் சண்டையை எங்கள் தரப்பிலிருந்து அவர்கள் காண்பார்கள். சண்டை முடிந்ததும் உங்களிடம் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதுபோலவே எங்கள் வீரர்களையும் எங்களிடம் அனுப்பிவிடுங்கள்!” சிவாச்சாரி தெளிவாகப் பதில் சொல்கிறான்.

“இன்னும் ஒன்று, சண்டையில் வெல்பவரிடம், தோற்பவர் சிறைக்கைதி ஆவார், அவ்வளவே! இருதரப்புப் படைகளும் தங்கள் நாட்டிற்குத் திரும்ப வேண்டும். அது பற்றி வினா ஏதும் உண்டா?” சிவாச்சாரி கேட்கும் தொனி இராஜராஜர்தான் வெல்வார் என்பது போல தன்னம்பிக்கையுடன் ஒலிக்கிறது.

“அதற்குப்பிறகு?” என்ற பாண்டியப் படைத் தலைவர் வினவுகிறார். “சண்டையில் வெல்பவர்கள் திரும்ப வேண்டுமா? வெல்பவருக்குத் தோற்பவர் அடிபணிந்து திரை செலுத்த ஒப்புக் கொள்ள வேண்டாமா?”

“தங்கள் மன்னரின் நிபந்தனையை ஒப்புக் கொண்டதால்தான் இவ்வளவு தூரம் சக்கரவர்த்தி அவர்கள் இறங்கி வந்திருக்கிறார். அது நேர்முகச் சண்டை என்பதால்! மற்றபடி எந்த மாற்றமும் இல்லை. இப்பொழுது நடக்கவிருக்கும் போரில் ஆயிரக்கணக்கானவர் உயிரிழக்காமல் இருப்பர். மீண்டும் போர்தான் வேண்டும் என்றால் சொல்லுங்கள். இருவருக்கும் தோதான நாளில், குறிப்பிட்ட இடத்தில் சந்திப்போம். தங்கள் மன்னரின் திருமுகத்தில் நேரடிச் சண்டைக்குப் பிறகு திரும்பப் போரைத் தொடங்க வேண்டும் என்றோ, இப்பொழுது சோழ, பாண்டிய நாட்டின் உறவினை மாற்றவேண்டும் என்றோ குறிப்பிடப் படவில்லை. நான் நேரடிச் சண்டையின் விவரத்தைத்தான் எடுத்து உரைக்கிறேன். ஏன், இப்பொழுது பேச்சு மாற்றம் செய்யப் போகிறீர்களா?” என்று வம்புக்கு இழுக்கிறான் சிவாச்சாரி.

“இப்பொழுது பாண்டிய மன்னர்தான் திரை செலுத்துகிறார். நீங்கள் பேசுவதைப் பார்த்தால் சக்கரவர்த்தி அவர்கள் தோற்றுவிடுவார் என்பது போலப் பேசுகிறீர்கள். இப்படிப் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, உம்மை நான் நேர்முகச் சண்டைக்கு அழைக்கிறேன். உமது ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்!” என்று சற்றும் எதிர்பாராது  கணையையும் தொடுக்கிறான்.

அதிர்ந்து போகிறார் பாண்டியப் படைத்தலைவர். கோவிலில் மணியடிக்கும் ஒரு சிவாச்சாரி தன்னை நேர்முகச் சண்டைக்கு அழைப்பதா? அவருக்குள்ளே விறுவிறென்று சூடேறுகிறது.

 “சிவாச்சாரியரே! இன்று நீர் சிவபதம் அடையவேண்டும் என்று எழுதியாகிவிட்டது போலும். நான் குதிரையில் ஈட்டிச் சண்டையிட உம்மை அழைக்கிறேன்!”  அவர் குரலில் கோபம் தொனிக்கிறது.

“எனக்கும் சம்மதமே! தோற்றவர் வெல்பவருக்கு அடிமை!” என்று நகைத்தவாறே பதிலளிக்கிறான்.

“இன்னும் ஏதாவது உண்டா?” என்று சூடான குரலில் கேட்கிறார் பாண்டியப் படைத்தலைவர்.

உடனே சிவாச்சாரியனிடமிருந்து, “உம் மன்னருக்கு உதவியாக வந்திருக்கும் தென் சேர மன்னரை எமது இளவல் இராஜாதிராஜர் நேர்முகச் சண்டைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். யானை மீதிருந்து சண்டை செய்ய கேரளருக்கு விருப்பமா என்றும் கேட்டிருக்கிறார்.” என்று பதில் வருகிறது.

“அவரைக் கேட்க வேண்டும்...” என்று இழுத்த படைத்தலைவரை இடைமறித்து, “உம்முடன் சேர்ந்துதானே சோழர் மீது தாக்குதலைத் தொடர வந்திருக்கிறார் சேர மன்னர்! நேர்முகச் சண்டை என்றால் பயந்து ஓடுவார் என்று நீர் நினைக்கிறீரா? அதனால்தான் அவரைக் கேட்கவேண்டும் என்கிறீரா? உமது மன்னருக்கு அவருடைய ஆதரவு இவ்வளவுதானா?” சிவாச்சாரியனின் குரலில் கிண்டல் தொனிக்கிறது.

“சிவாச்சாரியரே! நாவை அடக்கும்! கூண்டோடு கைலாசம் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து விட்டீர்கள் போலும். சேரமான் எனது மன்னர் அல்ல. அதனால்தான் அவரைக் கேட்கவேண்டும் என்று சொன்னேன். நீர் அவர் ஓரு கோழை என்பது போல ஏளனம் செய்கிறீர். இதைக் கேட்டால் சேரமன்னர், உமது நாவைத் துண்டித்து விடுவார். நமது சண்டைக்குப் பிறகு உம்மை நான் அவரிடம் ஒப்படைக்கப் போகிறேன். நீர் எப்படிச் சாகப் போகிறீர் என்பதை அவரே தீர்மானிக்கட்டும்!”  மீசை துடிக்கிறது படைத்தலைவருக்கு.

”“நடக்கப் போகாததைப் பற்றி நீர் ஏன் பகல் கனவு காண்கிறீர்? முதலில் உமக்கும் எனக்கும் நேர்முகப் போர். அதற்குப் பிறகு இளவல் சேர மன்னருடன் மோதுவார். இறுதியில் சக்கரவர்த்தி அவர்கள் பாண்டிய மன்னரைச் சந்திப்பார். இன்னும் ஒரு நாழிகையில் தயாராகுங்கள். உங்கள் மற்றும் எங்கள் வீரர்கள் இருபதின்மர் சண்டை நடக்குமிடத்தைவரை செய்வார்கள். தன்னுடன் வந்த வீரர்களுடன் குதிரையில் சோழப் படை இருக்குமிடம் நோக்கி விரைகிறான் சிவாச்சாரி.45

சேரமன்னனைக் கேட்காமல் அவனைச் சண்டைக்குள் இழுத்து விட்டுவிட்டோமோ என்று தயங்கிய படைத்தலைவர், “பல களம் கண்ட சேரமன்னர், கன்னிப் போர் செய்யப் போகும்” இராஜாதிராஜனைக் களபலி கொடுப்பார் - பாண்டிய மன்னர் இராஜராஜரைச் சிறைப் பிடிக்கும் முன்னதாக,” என்று தன்னைத்தானே தேற்றியவாறு திரும்புகிறார்.

.
சிவாச்சாரி இராஜராஜர் இருக்குமிடம் திரும்புகிறான்.

“நமது திட்டப்படி நடந்து விட்டது சக்கரவர்த்தி அவர்களே! பாண்டியன் பெருவாளுடன் போர் புரிய ஒப்புக் கொண்டான். அதுமட்டுமல்ல, தென் சேரனும் இளவளலுடன் யானை மீதேறிப் போர் புரிய சம்மதிக்க வைத்துவிட்டேன். மேலும் பாண்டியருக்கு படைத் தலைமையே இல்லாதிருக்க பாண்டியப் படைத்தலைவனையும் குதிரையேறி என்னுடன் ஈட்டிப் போரிடவும் சம்மதிக்கச் செய்தேன்.” சிவாச்சாரியனின் முகம் சுடர்விடுகிறது. அதைக் கண்ட இராஜராஜரின் முகமும் மலர்கிறது.

தண்டநாயகரின் முகம் வாட்டமாக இருந்ததைக் கண்ட இராஜராஜர், “தண்டநாயகரே! உம் முகம் வாட்டமுற்றிப்பதற்கான காரணத்தை அறிய விரும்புகிறோம்.” என்கிறார்.

“அரசே! பாண்டியர்களுடனும், சேரர்களுடனும் நடக்கும் இப்போரில் நானும் கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறேன். தங்களுக்காக என் குருதியைச் சிந்த வாய்ப்பில்லாது போய்விட்டதே! தங்கள் உயிருக்கு உறுதுணையாக நிற்கக்கூடிய வாய்ப்பும் என் கை நழுவிப் போகிறதே, பழுவேட்டரையர்களின் வழிவந்த நான் இப்படி கைகட்டப்பட்டு நிற்கிறேனே என்றுதான் வருந்துகிறேன்.” என்று வருத்தத்துடன் கூறுகிறார் தண்டநாயகர்.


கனிவுடன் அவர் தோளில் கைவைக்கிறார் இராஜராஜர். “தண்டநாயகரே! நீர் வருத்தப்பட வேண்டியதே இல்லை. அமரபுஜங்கனைச் சிறைப்பிடித்து இன்றுமாலை நாம் தஞ்சை திரும்புவோம்.”

அப்படி நடக்கவேண்டும் பெருவுடையாரே!” என்று இறைவனை வேண்டிக் கொள்கிறார் தண்டநாயகர். சிவாச்சாரி தனது போர்த் திட்டத்தை விவரிக்கிறான். அதைக் கேட்டதும் தண்டநாயகரின் முகம் கதிரவனைக் கண்ட தாமரையாக மலர்கிறது.

“சிவாச்சாரியாரே! நீர் அந்தணர் குலத்தில் தவறிப் பிறந்து விட்டீர்! எங்களைப்போல பழுவேட்டரையர் குலத்தில் பிறந்திருக்க வேண்டும்! உமக்கு எங்கள் குலத்திலேயே ஒரு வீரப் பெண்ணை மணமுடித்திருப்போம்!” என்று பெருமையுடன் பாராட்டி மகிழ்கிறார். அடக்கத்துடன் தலையைக் குனிந்து கொள்கிறான் சிவாச்சாரி.

அதே சமயம் பாண்டியன் அமரபுஜங்கன் மகிழ்ச்சியில் பூரித்துப் போகிறான். 

“இராஜராஜன் தான் சிறைப்படப் போவதற்கு முடிவு செய்து விட்டான் போலும். இவ்வளவு கனமான வாளை எடுத்துச் சுழற்ற அவனிடம் எவ்வளவு நேரம் வலு இருக்கும்?  அது போதாதென்று தனது பேரனையும் நமது சேர மன்னருக்குக் காவு கொடுக்கத் தீர்மானித்து விட்டான். சிறுவன் சிறுமியுடன் தங்களைப் போருக்கழைத்திருக்கிறான். யானைப் போரில் இத் தமிழகத்தில் 
தங்களை வெல்லவும் ஒருவன் இருக்கிறானா!” என்று எக்காளமாகச் சிரிக்கிறான் அமரபுஜங்கன்.

 “தளபதி, உம் வலிமை தெரியாது கோவிலில் மணியாட்டும் சிவாச்சாரி ஈட்டிச் சண்டைக்கு அழைத்திருக்கிறான். பாண்டி நாட்டில் ஈட்டி எறிதலிலும், தாக்குதலிலும் உம்மை மிஞ்சக்கூடியவர் எவர் இருக்கிறார்கள்?”

“அரசே! நான் ஈட்டியைத் தேர்ந்தெடுப்பேன் என்று தெரியாமல் அந்த சிவாச்சாரி என்னை ஆயுதத்தை தேர்ந்தெடுக்கச் சொல்லிக் களத்திற்கு அழைத்திருக்கிறான் என்று தோன்றுகிறது. நான் வீரமாகப் போரிட்டு பாண்டி நாட்டுக்கு முதல் வெற்றியைத் தேடித்தருவேன் அரசே!” என்று பெருமிதத்துடன் பதில் சொல்கிறார் படைத்தலைவர்.

“உங்களுக்குத் துணையாக வந்தது சரியாகப் போயிற்று! சோழ இளவரசன் என் கையால் மடியப் போகிறான்! இராஜேந்திரன் தஞ்சைக்கு வந்ததும் அபிமன்யுவை இழந்த அர்ஜூனனாகத் தவிக்கத்தான் செய்வான். அத்துடன் தனது தந்தை உங்கள் பிணைக் கைதியாக மதுரையில் அவமானப் படுவதையும் தெரிந்து கொள்வான். இன்று நாம் நரி முகத்தில்தான் விழித்திருக்கிறோம்!” என்று புசுபுசுவென்ற தனது மீசையை விரல்களால் நீவி விட்டக் கொண்டபடியே சேரன் மலைச்சாரல் கலந்த கொடுந்தமிழில் கொக்கரிக்கிறான்.

அனைவரும் அவனது மகிழ்ச்சியில் கலந்து கொண்டு உரக்கச் சிரிக்கின்றனர்.
இருபது நிமிடங்களுக்குள் நடுவில் இருந்த பொட்டலில் போட்டி மைதானத்தைக் குறிக்கும் கம்பங்கள் நடப்படுகின்றன. பொட்டலுக்குக் கிழக்கே பாண்டிய, சேரப் படைவீரர்களும், மேற்கே சோழவீரர்களும் அணி வகுக்கின்றனர். முரசுகள் முழங்குகின்றன. இருதரப்பிலும் முரசறிவிப்போர் ஒரே மாதிரியான அறிவிப்பை அறிவிக்கின்றனர்.

“இதனால் எல்லாருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்- போட்டியிடுபவர்களைத் தவிர யாரும் கம்பங்களைத் தாண்டி உள்ளே வரக்கூடாது. அப்படி வந்தால் உடனடியாகப் போட்டி நிறுத்தப்படும். உள்ளே வந்தவர்களின் தலை துண்டிக்கப்படும். போட்டியில் வென்றவர்கள் தோற்றவர்களைச் சிறைப்பிடித்துத் தன் பக்கம் அழைத்துச் செல்வர். தோற்றவர்களின் அணியிலிருந்து யாரும் அவருக்குத் துணையாக கம்பத்தைத் தாண்டி உள்ளே வரக்கூடாது. போட்டி முடிந்தவுடன், வீரர்கள் அனைவரும் தங்கள் பாசறைக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். போர் மீண்டும் துவங்காது. சோழர்கள் தஞ்சைக்கும், பாண்டியர்கள் மதுரைக்கும், சேர வீரர்கள் கொல்லத்திற்கும் அமைதியாகத் திரும்பிச் செல்ல வேண்டும். இதற்கு சோழச் சக்கரவர்த்தியும், பாண்டிய, சேர மன்னர்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

“சோழ வில்லாளர்கள் தங்கள் விற்களையும், அம்புகளையும் - ஈட்டி எறிபவர்கள் தங்கள் ஈட்டிகளையும் கம்பத்திற்கு வடக்கேயும், பாண்டியர்கள் மற்றும் சேரர்கள் கம்பத்திற்குத் தெற்கேயும் போட்டுவிட வேண்டும்.
 “முதலில் பாண்டியப் படைத்தலைவருக்கும், சோழத் திருப்பணி ஆலோசகர் சிவாச்சாரியாருக்கும் குதிரையில் ஈட்டிச் சண்டை துவங்கும். அதற்குப் பிறகு, சேரமான் கோவர்த்தன மார்த்தாண்டருக்கும், சோழ இளவரசர் இராஜாதிராஜருக்கும் யானைப் போர் நடக்கும். கடைசியில் சோழச் சக்கரவர்த்தி இராஜராஜருக்கும், பாண்டிய மன்னர் அமரபுஜங்கருக்கும் வாட்போர் நடக்கும். பல்லாயிரக்கணக்கான வீரர்களின் உயிரைக் காப்பாற்றும் இந்தப் புதுவிதப் போரை இருந்து பார்த்து அமைதியாகச் செல்ல வேண்டும். இது எல்லா மன்னர்களின் உத்தரவு.” பல தடவை முரசறிக்கைகள் அறிவிக்கின்றன.

பின்னர் போர்முரசுகள் ஒரே மாதிரியாக முழங்குகின்றன. இரு தரப்பிலும் கொடிகள் வீசப்படுகின்றன. பழுப்புக் குதிரையில் கவசம் அணிந்து கையில் ஈட்டியைத் தாங்கி பொட்டலை நோக்கி விரைகிறார் பாண்டியப் படைத்தலைவர்.

கவசம் எதும் இல்லாமல் உடலில் இடுப்பிலிருந்து தோள் வரையும், கால்களில் கணுக்காலுக்கு மேலிருந்து முழங்கால் வரையும் தென்னங் கயிற்றால் சுற்றப்பட்டிருந்தவாறு குதிரையில் அமர்ந்திருக்கிறான் சிவாச்சாரி. தலையில் தென்னங்கயிற்றால் நெய்யப்பட்ட பெரிய தலைப்பாகையும், கைகளில் மணிக்கட்டுக்கு மேலிருந்து முழங்கை, மற்றும் முழங்கைக்கு மேலிருந்து தோள்வரை இதேமாதிரி தென்னங்கயிறு சுற்றியிருக்கிறது. குதிரையின் மேல் இலேசான தகடுகள் போர்த்தப் பட்டிருக்கிறது. அதே மாதிரி, கழுத்து, கால்கள் எல்லாம் தகடுகளால் மறைக்கப்பட்டிருக்கிறது. இம்மாதிரியான ஒரு அமைப்பை இதுவரை யாரும் பார்த்ததே இல்லை.

அவனது குதிரை மெதுவாக பொட்டலின் உள்ளே சுற்ற ஆரம்பிக்கிறது. பாண்டியத் தலைவரை நோக்கி வரவில்லை. சிவாச்சாரியனை நோக்கி விரைந்து குதிரையைச் செலுத்துகிறார் படைத்தலைவர். சிவாச்சாரியனோ நிதானமாகக் குதிரையை நடை பழக வைக்கிறான். கையில் ஈட்டியை எடுக்கவும் இல்லை. அவன் என்ன செய்கிறான் என்று குழம்புகிறார் படைத்தலைவர். எறியும் தூரம் வந்ததும் அவனைக் குறிபார்த்து ஈட்டியை எறிகிறார். அச்சமயம் சிவாச்சாரியின் குதிரையின் மேலுள்ள தகடுகள் சூரியனின் ஒளியைப் பிரதிபலித்து, அவரின் கண்களை ஒரு கணம் கூச வைக்கிறது. அவரது குறி மிகவும் இலேசாகத் தடுமாறுகிறது.

அவரிடமிருந்த ஈட்டி கிளம்பியதும், உடனே ஈட்டி வரும் திசைக்கு செங்கோணத்தில் குதிரையைத் திருப்பியதோடு மட்டுமல்லாமல் குதிரையின் முதுகிலிருந்து சரிந்து அதன் வயிற்றுப் பக்கம் ஒட்டியபடி தொங்குகிறான். அவன் இழுக்கும் வேகத்தில் குதிரையும் தனது கழுத்தைக் கீழே சரிக்கிறது. அதன் கழுத்துக்கு சில அங்குலங்கள் மேலே விர்ரென்று சென்ற ஈட்டி குதிரைக்குப் பின்னால் சென்று கீழே விழுகிறது. சிவாச்சாரி குதிரையிலிருந்து சரிந்திருக்காவிட்டாலோ, அதன் கழுத்தைச் சரிக்காவிட்டாலோ, ஈட்டி அவனது நெஞ்சிலோ அல்லது குதிரையின் கழுத்திலோ பாய்ந்திருக்கும்.

சிவாச்சாரி வேண்டுமென்றேதான் தன்னுடைய குதிரையைத் திருப்பி, அதனுடைய பளபளக்கும் தகடுகள் தனது கண்களைக் கூசச் செய்து நிலைதடுமாறச் செய்தான் என்பதைப் புரிந்து கொள்ள சில விநாடிகள் ஆகின்றன. இதைச் சற்றும் எதிர் பார்க்காத படைத்தலைவர் சில கணங்கள் திகைக்கிறார்.

அவரது குதிரை சிவாச்சாரியனை நோக்கி நேராக விரைகிறது.

அதற்குள் சிவாச்சாரி குதிரையைப் பழையபடியும் திருப்பி, கடிவாளத்தை இழுக்கிறான். குதிரை பின்னங்கால்களில் நின்று முன்னங்கால்களை உயர்த்திப் பெரிதாகக் கனைக்கிறது. உடனே கீழே குதித்து குதிரையின் பின்பு தொங்கிக் கொண்டிருந்த ஈட்டியை எடுத்து படைத்தலைவரின் குதிரையின் பின் கால்களுக்கு இடையில் கொடுத்து, தன் கைகளை எடுத்துக் கொள்கிறான். அவரது குதிரை தடுமாறிக் கீழே விழுகிறது. அவனது வேகத்தையும், போர் முறையையும் சற்றும் எதிர்பாராத படைத்தலைவர் குதிரையுடன் கீழே சாய்கிறார்.

தவ்விப் பாய்ந்து தனது ஈட்டியை எடுத்த சிவாச்சாரி, எழ முயலும் படைத்தலைவரின் மார்பில் ஈட்டியை நிறுத்தி, “நீங்கள் தோற்றுவிட்டீர்கள்! நீர் எமது கைதி. எழுந்திருந்து என்னுடன் வாரும்!”  என்று கனிவான குரலில் கூறுகிறான்.

படைத்தலைவருக்கு ஒரே அதிர்ச்சி. அவரது முகத்தில் தோற்றுப் போனோம் என்ற அதிர்ச்சியைவிட, சிவாச்சாரியனின் புதுமுறையான தாக்குதலின் விளைவாகத் தான் கீழே விழுந்ததுதான் வியப்பாக இருந்தது. இப்படிப்பட்ட துணிச்சலான தாக்குதலை அவர் சந்தித்ததே இல்லை.

மெதுவாக அவரைக் கையைப் பிடித்துத் தூக்கிவிடுகிறான் சிவாச்சாரி. “படைத்தலைவரே! ஆயுதத்தைக் கையில் எடுக்காத என்மீது ஏன் அவசரப்பட்டு ஈட்டியை எறிந்தீர்கள்? இது மறவர் வழி வந்த உங்களுக்கு அழகா?” என்று கேட்கிறான். அவன் குரலில் குற்றச்சாட்டோ, ஏளனமோ கொஞ்சம்கூட இல்லை.

அவனுடைய இந்தக் கேள்வி படைத்தலைவரின் நெஞ்சை ஈட்டி கொண்டு குத்துகிறது. அவரது முகத்தில் வேதனை படர்கிறது. தன்னைச் சமாளித்துக் கொண்டு, “போட்டி என்று உள்ளே நுழைந்து விட்டபிறகு நீர் சரணடையாதவரை நான் எப்பொழுது வேண்டுமானாலும் உம் மேல் ஆயுதத்தைச் செலுத்தலாம். இருப்பினும் உமது கேள்வியில் ஒரு நியாயம் இருக்கிறது.” என்று நான்கடி எடுத்து வைக்கிறார்.

சட்டென்று குனிந்து தரையில் கிடக்கும் தனது ஈட்டியை எடுக்கிறார். அதை எடுத்து உயரே தூக்கி எறிந்து அது கீழே வரும்போது அதன் கீழே நின்று கொள்கிறார். அவர் அவரது தலையில் இறங்குவதற்கு அரை நொடிக்கு முன் அவரைத் தள்ளி விடுகிறான் சிவாச்சாரி. ஈட்டி தரையில் பாய்ந்து நிற்கிறது.

“படைத்தலைவரே, எப்பொழுது நீர் எமது கைதி ஆகி விட்டீரோ, அப்பொழுதிலிருந்து உமது உயிர் எனக்குச் சொந்தமாகிவிட்டது. தற்கொலை செய்துகொள்வது உம்மாதிரி வீரருக்கு அழகல்ல. உம்முடைய வீரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். உமது வீரத்தை உமது உடலிலிருக்கும் விழுப்புண்கள் பறை சாற்றுகின்றன. நாம் நமது மன்னர்களுக்குக் கட்டுப்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறோமே தவிர உமக்கும் எனக்கும் தனிப்பட்ட பகை ஒன்றும் இல்லை.” என்று இதமாகப் பேசி மேற்குப் பக்கம் அழைத்துச் செல்கிறான் சிவாச்சாரி.

அவனது குதிரை அவனைப் பின் தொடர்கிறது. பாண்டியப் படைத்தலைவரின் காலுடைந்த குதிரை பரிதாபமாகக் கனைத்துக் கொண்டு மண்ணில் புரள்கிறது.

சோழர் பக்கம் ஒரே ஆரவாரம் காரைப் பிளக்கிறது. ஒரே நிமிடத்தில் சிவாச்சாரி களம் பல கண்ட பாண்டியப் படைத் தலைவரைத் தனது முதல் போரிலேயே தோற்கடித்தது அனைவருக்கும் வியப்பைத் தருகிறது.

“சிவாச்சாரியரே, உமது விநோதமான வேஷத்திற்கு என்ன பொருள் என்று அறிந்து கொள்ளலாமா?” என்று கேட்கிறார் பாண்டியப் படைத்தலைவர்.

“அது ராணுவ ரகசியம் பாண்டியரே! எதிரிப் படைத்தலைவருக்கு அதை நான் இயம்ப இயலாது போனமைக்கு வருந்துகிறேன்!” என்று சிரித்தபடி பதிலளிக்கிறான். அவனை இராஜராஜரும், இராஜாதிராஜனும் கைதட்டலுடன் வரவேற்கின்றனர்.

“பாண்டியப் படைத்தலைவரே! உம்மைப் பாதுகாப்பாக வைக்கவேண்டிய கடமை எமக்கு இருக்கிறது. தண்டநாயகரே, நடக்கட்டும்!” என்று உத்தரவிடுகிறார் இராஜராஜர். பாண்டியப் படைத்தலைவரின் கைகளில் விலங்கைப் பூட்டுகிறார் தண்டநாயகர். 

அதைக் கண்ட சிவாச்சாரியனுக்கு ஒரு சிறந்த வீரரை விழுப்புண் எய்தி வீரமரணத்தைத் தழுவாது தடுத்துவிட்டோமே என்று நினைத்தவுடன் கண்களில் நீர் பனிக்கிறது.

இதையெல்லாம் மறுபக்கத்திலிருந்து பார்க்கும் அமரபுஜங்கனுக்குத் தன் கண்களை நம்பவே முடியவில்லை. “கோவிலில் மணியாட்டும் ஒரு சிவாச்சாரியனியனிடம் பாண்டியப் படைத்தலைவர் இப்படித் தோற்றுவிட்டாரே? தவிர தோல்வியின் பளு தாங்காது நெஞ்சில் ஈட்டியைத் தாங்கித் தன் உயிரைவிடத் துணிந்த அவரை அந்த சிவாச்சாரி காப்பாற்றிச் சிறுமைப்படுத்தி விட்டானே! அவரது அவமானத்தைத் துடைக்க இராஜராஜனை எப்படியாவது சிறைப்பிடித்து வருவேன், உம்மை விடுவிப்பேன்! என்று மனதில் சூள் உறைத்துக் கொள்கிறான்.

மீண்டும் முரசுகள் முழங்க ஆரம்பிக்கின்றன. கோவர்த்தன மார்த்தாண்டன் தனது யானையில் புறப்படுகிறான். எதிரில் இராஜாதிராஜன் தனது யானையில் வருகிறான். அவை அருகில் பக்கவாட்டில் வரும் பொழுது எட்டடி நீளம் உள்ள நீண்ட ஈட்டிகளை எடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர். சில சமயம் இருவருக்கும் காயம் பட்டு உடலிலிருந்து செந்நிறக் குருதி கசிகிறது. சுற்றிச் சுற்றிவந்து தாக்குதல் நடக்கிறது. கிட்டத்தட்ட அரைமணி நேரம் கடுமையான தாக்குதல் நடக்கிறது. யானைகள் ஒன்றையொன்று மத்தகத்தால் முட்டிக் கொள்கின்றன. அப்பொழுது அவற்றின் நெற்றியில் பட்டயத் துணிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கூரிய குமிழ்கள் குத்தி யானைகளின் நெற்றியிலிருந்து குருதியை வரவழைக்கின்றன.

திடுமென்று இராஜாதிராஜனின் யானை சேரமானின் யானைக்குப் பக்கவாட்டில் செலுத்தப்படுகிறது. யாரும் எதிர்பாராதவிதமாகத் தன் யானையின் மத்தகத்தில் ஏறி நின்று சேரமானின் யானைக்குத் தாவுகிறான் இராஜாதிராஜன். அம்பாரியின் கயிற்றைப் பற்றிக் கொண்டு குரங்குமாதிரி சில விநாடிகளில் யானையின் முதுகில் சேரமானின் பின்புறமாக ஏறிவிடுகிறான்.

இதைச் சற்றும் எதிர்பாராத சேரமான் திடுக்கிட்டுத் திரும்புகிறான். அடுத்த விநாடி சேரமானின் ஈட்டியைப் பற்றி இழுக்கிறான் இராஜாதிராஜன். சேரமான் உட்கார்ந்திருக்கும் விதத்தினால் சேரமானால் சரிவரத் தன் ஈட்டியைத் தன்பக்கம் இழுத்துக் கொள்ள இயலாது போகிறது. இருப்பினும் தன் பலம் முழுவதையும் பயன்படுத்தி ஈட்டியை பிடித்துக் கொள்கிறான். அதனால் சேரமான் யானையின் பின்புறம் இழுக்கப்படுகிறான். அதனால் அவனது கால்கள் அம்பாரியில் மாட்டிக் கொள்கின்றன. அதை எடுக்கமுடியாத நிலைமையில் இராஜாதிராஜனின் பலத்திற்குச் சேரமானால் ஈடு கொடுக்க முடியவில்லை.

இராஜாதிராஜன் உடனே ஒரு கையை ஈட்டியிலிருந்து எடுத்துச் சேரமானின் முகத்தில் பலமாகக் குத்துகிறான். சேரமானின் மூக்கு உடைந்து இரத்தம் வழிகிறது. சேரமானின் மேலே மாறிமாறி குத்துக்களைப் பொழிகிறான் இராஜாதிராஜன்.

ஒரு வழியாகத் தன் கால்களை விடுவித்துக் கொள்கிறான் சேரமான். அதுவே அவனுக்கு எதிரியாக வந்து சேருகிறது. கால்கள் விடுபட்ட வேகத்தில் பக்கவாட்டில் சரிகிறான் சேரமான். உடனே ஈட்டியிலிருந்து கையை எடுத்துவிட்டுச் சேரமானைக் கீழே தள்ளுகிறான் இராஜாதிராஜன். யானையிலிருந்து தலைகீழாகக் கீழே விழுகிறான் சேரமான். அவன் கீழே விழுவதற்கும், முன்னோக்கிச் செல்லும் யானையின் பின் கால் சேரமானின் வயிற்றில் பதிவதற்கும் சரியாக இருக்கிறது. சேரமானின் வயிறு பிளந்து, நசுங்கி, குடல் பிதுங்கி வெளிவருகின்றது. முதுகெலும்பு, தொடை எலும்புகள் உடைந்து போகின்றன. யானையை நிறுத்தி விட்டுக் கீழிறங்குகிறான் இராஜாதிராஜன்.[வளரும்]
-----------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு 

45இராஜராஜருக்கும், பாண்டியன் அமரபுஜங்கனுக்கும் நடந்த போரில் பாண்டியன் சிறைப்பிடிக்கப் பட்டான் என்றும், பாண்டியனுக்குத் துணையாக சேரன் கோவர்த்தன மார்த்தாண்டனும், சிங்கள வீரர்களும் கலந்துகொண்டார்கள் என்று சரித்திரம் கூறுகிறது. அது எப்பொழுது எங்கே நடந்தது என்பது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. ஆகவே, இந்தப் போர் நடந்த ஆண்டு, வர்ணனை அனைத்தும் முழுக்க முழுக்கக் கற்பனையே

No comments:

Post a Comment