Tuesday, 12 August 2014

நானும் என் தாத்தாவும்

                                                 நானும் என் தாத்தாவும்

கவிஞர்:ஜி.ஜே.தமிழ்ச்செல்வி 
 
அது கிட்டத்தட்ட 50 வருஷத்துக்கு முந்தி கட்டப்பட்ட மாடி  வீடு. அப்போது  எனக்கு வயது எட்டு 

ஒரு வராந்தா . அங்கே  உட்கார்ந்து என் தந்தை வழித் தாத்தா சாப்பிட்டுட்டு இருக்கார். அரியலும் பொரியலுமில்லை, கேழ்வரகுக்  கூழு. இன்னைக்கும் எங்க தாத்தா காலத்துக்கு பிறகும் எங்க சித்தப்பா வீட்லயும் கேழ்வரவு உணவு தான். கூழும் களியும் ,

எங்கம்மா இடுப்புல நான், எங்கம்மா கையைப் பிடிச்சுக்கிட்டு என் பெரிய தம்பி. வீட்டுக்குள்ளே நுழைந்த எங்களுக்கு எந்த வித வரவேற்பும் இல்லை ஏதோ சினிமாக் கதை போலே இருக்கலாம் காரணம் எங்கம்மா அப்பாவுக்கு  காதல் கல்யாணம் அப்பா பஸ்ஸிலே கண்டக்டர். அம்மா அந்த பஸ்ஸில் தினமும் பயணம் செய்யும் டீச்சர் காதல். ங்கறதால, எங்கத்தாத்தா வீட்லயே சேக்கல, அப்பா ஹிந்து. அம்மா கிறிஸ்துவர். கல்யாணம் நடப்பதற்கு அவர் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவரானவர் 

கிறிஸ்தவர்கள் என்றால் தாழ்ந்தவர்கள் என்று ஒரு திடமான முடிவு அந்த ஊரில். அதனால்  காதலித்தவர்களை எல்லாம் ஒன்று  பிரித்துவிடுவார்கள்  இல்லை 
கௌரவக் கொலை.ஆமாம். கொலையே தான்  எங்கள் அப்பா  எப்போதாவது அவரது  காதல் பற்றிச்  சொல்லும் போது அதைத்  திகில் கதையைா மாற்றி விடுவார். எங்கப்பாவை மட்டும் இரகசியமா சேர்த்துக்கொண்டார். அவர் பெற்ற பிள்ளை அல்லவா?

வெளியே நிற்கிற நானும் பார்க்கிறேன் காயும்  வெயிலுக்கு கொஞ்சம் பச்சைத் தண்ணீராவது முகந்து தருவாரா என்று?, மனுஷன் கூழுக்குள்ள தலையை கவுத்துட்டு நிமிரவே இல்லையே! 'இந்த பயபுள்ள மண்டையில நச்சுன்னு நாலு போடு போட்டா என்னன்னு தோணுச்சு. அட்லீஸ்ட் அந்த கூழையாவது அந்த கிழவனுக்கு இல்லாம பிடுங்கி குடிச்சுத் தீக்கனும்ன்னு ஒரு ஆக்ரோஷம்.

எங்க தாத்தா கருப்பு, எங்கம்மா கருப்புத்தங்கம், அடவிடுங்க எங்க தாத்தனுக்கு வாய்ச்சது மட்டும் செக்கச் செவெல்ன்னு அம்புட்டு செவப்பு. என்ன எங்க பாட்டிக்கு ஒண்ணும் தெரியாது, கொசுவம் வச்ச சேலை முந்தியை இடதுகைப்  பக்கம் போட்டுக்கிட்டு, சுவற்றோடு ஒட்டி நின்றபடி  தேமேன்னு பார்க்கிறாங்க 

எங்கம்மா "அதுதான் உங்க பாட்டி" என்றார்கள் 

'இந்த பார்வைக்கு ஒன்னுங் கொறைச்சலக்காணோம்ன்னு வந்தவள் தான் நான்.
.அதற்கப்புறம் அந்த திசைப்பக்கம் தலைவைக்கவில்லை நான் அப்படிஒரு ரோஷக்காரி பெற்ற மகள் 

மீண்டும் எங்கள் தாத்தாவைச் சந்தித்தது எங்கள் வீட்டில்.நான் அப்போது  எட்டாங்கிளாஸ் எங்கள் ஊர்  பள்ளிக்கூடத்தில். பள்ளிக்கூடம் வீடு வந்து பார்க்கிறேன்  கால்மேல கால போட்டுக்கிட்டு உட்கார்ந்திருக்கிறார் அந்தக்கிழவர்  கையில் காபி டம்பளர் 

"யாரும்மா  அது?"

"உங்க தாத்தாடி!" கிசு கிசுக்கிறார்கள்  எங்கள் அம்மா

"என்னவாம்?"

"ம் பொங்கலுக்கு கூப்பிட வந்திருக்காங்க!"

"இன்னாது இந்த பெரிய மனுஷன் வீட்டுக்கா? அது சரி நீயுமாச்சு அந்த பொங்க சோறுமாச்சு, ஏம்மா அங்கிட்டு எங்கள அனுப்புறே ?".

நான் சொன்னதைக்  கேட்காமல் என்னைத  தூக்கி சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு  தாத்தா சைக்கிள் தள்ள, அதை  ஓட்டுறதுக்கு ஒரு பொடிப்பயல்  வேற

அப்படித் தான் எங்க தாத்தா வீட்டுக்கு அடுத்த  முறை போனேன்

நான் அவரை மொறைக்க, அவங்க பாசம் காட்டன்னு, ஒரு வாரம் ஓடிபோச்சு எங்க தாத்தா ஊரில் .அததற்கப்புறம் நானும் எங்க தாத்தாவும் ராசியாகிவிட்டோம் 

எப்போது பொங்கல் வரும்.. எப்போது தாத்தா வீட்டுக்கு சைக்கிள் சவாரி போகலாம் என்று ஏக்கம் தொடர்ந்தது கொஞ்ச நாள் போயிற்று 

"நீ உன் பாட்டி லக்ஷ்மி மாதிரியே இருக்கே!" அவர் மனைவி பெயரையே  எனக்கு வைத்து விட்டார்  சாலையில் போகிறவர் வருகிறவர்களிடமெல்லாம் எம் பொண்டாட்டி மாதிரியே இருக்கான்னு பெருமிதம் வேறு.

"ப்ச்!" அலுத்தபடி நான் கண்ணாடியில என் முகத்தை பார்த்தேன். சாடை லேசா அப்படித தெரிந்தாலும்  நிறத்தில் பாட்டி தான் பெஸ்ட்..

பாசம் எப்போதும் ஜெயித்துவிடுகிறது.

1 comment:

  1. உயர்திரு தமிழ்ச்செல்வி அவர்களுக்கு,

    தங்களின் கட்டுரை என் பாட்டனார்களை நினைவு படுத்தியது. பழைமை நினைவுகள் என் மனதில் அலைமோதின. அவர்களுடன் நான் கழித்த இனிமையான நினைவுகள் நிழற்படமாக நெஞ்சில் விரிந்தன. அந்த இனிமையான நினைவுகளை ஊற்றாக வரவழைத்தமைக்கு நன்றி. வணக்கம்!

    ReplyDelete