Friday, 22 August 2014

ஒரு படம் இரு கவிதைகள் :கவிதாயினி ஜி.ஜே.தமிழ்ச்செல்வி

           ஒரு படம் இரு கவிதைகள் 

                1`
வரண்ட பூமியிலும்


உணவு ஆக உயிர்க்கின்றன 
பச்சைப் புற்கள்

மலர்ந்த மனதின்
நினைவுகள் கூம்பித்  
தவிப்பது ஏன்?

மேய்ப்பன் இல்லாத போதும்
மேய்ச்சலுக்கென நிலம்
உண்டிங்கு விதியின் பலன்

உணவு ஆவதிலும்
உணவு ஆக்குவதிலுமே
கடந்து போகிறது வாழ்க்கை

அடிமைப்படுத்து அல்லவெனில்
அடிமையாகிவிடு
விசித்திர மனவெழுச்சியில்

பாந்தமாய்ப்  பவனி வருகிறது
பழம் பெரும்
மானுடம் இங்கு!

000000000000000
                                


           2
மேய்ச்சலுக்கான நிலம் நீ
உன்னைப்  புசிப்பதிலேயே
சுகித்துக்கொள்கிறது மனம்

இருமை அற்ற  ஒருமைக்கான
பயணவெளியில்
இருமையாய் விலகுவதை
நிறுத்தேன்

நம் வசந்தங்களை  
அசைபோடுவதிலும்
உலகிற்கென தள்ளிவைப்பதிலும்
காதல் மலரட்டும்

இவ்வுலக விதிகளுக்காக
உடல்கள் விலகிப்  போகட்டும்
மனங்கள் பிணையும் வித்தையில்

லயித்து வாழலாம் நாம்

[காதலும் தத்துவமும் கைகோர்த்து பின்னும்  கவிதைக்கலையில் கைதேர்ந்த கவிதாயினி  ஜி.ஜே.தமிழ்ச்செல்வியின் கற்பூரக்கைவண்ணம்} 

1 comment: