Saturday, 23 August 2014

“யார் வேண்டுமானாலும் சொர்க்கத்துக்குப் போக முடியுமா?”

“யார் வேண்டுமானாலும் சொர்க்கத்துக்குப் போக முடியுமா?”

அரிசோனா மகாதேவன் 

நான் ஒரு நாய்தான், அதிலும் சொறி பிடித்த ஒரு தெருநாய். யார் சிறிது சோறு போடுவார்கள், எந்தக் குழந்தை சாப்பாட்டில் மீதி வைக்கும், அதன் அம்மா எனக்கு அந்த மீந்த சோற்றைப் போடுவார்களா என்று அலைந்து திரியும் -- வீசி எறிந்த எச்சில் இலையில் ஒட்டிக்கொண்டு இருக்கும் சோற்றுப் பருக்கைகளை நக்கித் தின்ன அலையும் பொறுக்கி நாய்தான் நான்.
ஒரு இரவில், வழக்கப்படி ஒரு அம்மா தன் குழந்தைக்கு நிலவைக்காட்டிக் கதை சொல்லிக்கொண்டு சோறு ஊட்டிக்கொண்டு இருந்தாள். நானும் வழக்கப்படி வாலை ஆட்டிக்கொண்டு, நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு, ஏதாவது சோறு கிடைக்காதா என்று காத்துக்கொண்டு இருந்தேன். 
என்னைப் பார்த்ததும், “அம்மா, நிலாக் கதை ஆணாம். நாய்க் கதை தொல்லு... அப்பத்தான் நான் தாப்பிவேன்..” என்று மழலையில் அடம் பிடித்தது குழந்தை. 
 “எந்த நாயைப் பத்தி அம்மா சொல்லறது?” என்று யோசித்தாள் அம்மா.
“இந்த நாயைப் பத்தி...” என்று என்னைப் பார்த்துக் கையைக் காட்டியது குழந்தை.
 “இதப் பத்தியா?  இந்த சொறி நாயைப் பத்தியா? இதப் பத்தி சொல்ல என்ன இருக்கும்மா?  இது தினோம் தெருப்பொறுக்கித் தின்னும். அவ்வளவுதான்.” உதட்டைப் பிதுக்கினாள் அம்மா.
“போம்மா... உனக்கு நாயைப் பத்தி ஒண்ணுமே தெல்லே! நாயே, நாயே! நீயே உன்னப் பத்தி கதை தொல்லு!” என்று என்னைப் பார்த்துக் கேட்டது மழலையில் மிழற்றியது அம்மகவு.
என்னையும் மதித்து இந்தக் குழந்தை கேட்கிறதே!
“சொல்றேன் கண்ணு! சொர்க்கத்துக்குப் போன நாயின் கதையைச் சொல்றேன்!” என்று உற்சாகமாக் குரல் எழுப்பினேன் நான்.
“சனியனே! தினம் உனக்குச் சோறு போட்டா, குழந்தையைப் பார்த்தா குலைக்கறே!” என்று என்னை விரட்டினாள் அம்மா. எனது சொற்கள் அவளுக்குக் குரைப்பாகத்தானே கேட்கும்! என் மொழியை அறிவாளா அவள்?
மேலும் விரட்டவே, இன்று பட்டினிதான் என்று நினைத்தபடி தள்ளிச் சென்று குப்பை மேட்டில் படுத்துக்கொண்டேன் நான்.
நான் அந்தக் குழந்தைக்குச் சொல்ல விரும்பிய கதை, என்னைப் போன்ற ஒரு நாயின் கதை, சுவர்க்கத்திற்கே சென்ற என் முன்னோர் நாயின் கதை என் மனதில் விரிந்தது. அதை நீங்களாவது கேளுங்களேன்!...

...”அண்ணா! கண்ணன் நம்மை விட்டுவிட்டுச் சென்றுவிட்டான், அண்ணா!” என்று தன் எதிரே நின்ற அர்ஜுனனை ஏற இறங்கப் பார்த்தார் தர்மபுத்திரரான யுதிஷ்டிரர். அவர் மனதிலும், முகத்திலும் இருள் சூழ்ந்தது.  அது தூரத்தில் நின்றுகொண்டிருந்த என் முன்னோரான ஒரு நாயின் காதிலும் விழுந்தது.
“என்ன, கண்ணன் போய்விட்டானா?” என்று அப்படியே பதறிப்போய் ஓடிவந்தான் பீமன். அவன் காதில் சுற்றிக்கிடந்த முப்புரி நூலைக்கூட அவன் அவிழ்க்கவில்லை.
பாஞ்சாலி, நகுலன், சகாதேவன் இவர்களும் அந்த அவலச் செய்தியைக் கேட்டு அப்படியே அவரை அணுகினார்கள்.
அனைவரையும் மாறி மாறி நோக்கினார் தர்மபுத்திரர்.
“கலியுகம் வந்துவிட்டது! அதைக் கண்ணன் மறைந்த செய்தி மட்டுமல்ல, நீங்கள் வந்து நிற்கும் கோலமுமே தெரிவிக்கிறது!” என்று தர்மபுத்திரர் வருத்தத்துடன் சொன்னது என் முன்னோர் நாயின் காதிலும் விழுந்தது. காதுகளை உயர்த்திக்கொண்டு மேலே என்ன பேசுகிறார்கள் என்று கேட்டது.
“நாங்கள் வந்த விதமா?” அனைவரிடமிருந்தும் கேள்வி எழுந்தது.
“ஆமாம்.  நிச்சயமாக...” என்ற தர்மபுத்திரர் தொடர்ந்தார். “பீமா, நீ பல் துலக்குவதைப் பாதியில் நிறுத்திவிட்டு, காதில் சுற்றிய முப்புரி நூலுடன் வந்திருக்கிறாய்! சகாதேவனோ, தனது சூரிய நமஸ்காரத்தைப் பாதியில் நிறுத்திவிட்டான். பாஞ்சாலியோ, மாதவிடாய் என்பதையே மறந்துவிட்டு ஓடி வந்திருக்கிறாள். இதற்கு மேலும் என்ன சொல்ல? நாம் இப் பூவுலகை விட்டு நீங்கும் தருணம் வந்து விட்டது!”
தர்மவான்களான இவர்கள் பூவலகை விட்டு நீங்கப் போகிறார்களா! அப்படிப் பட்ட பூவுகில் தனக்கு என்ன வேலை என்று நினைத்துக்கொண்டது என் முன்னோர் நாய். 
“என்ன சொல்கிறீர்கள் அண்ணா?” என்று கேட்டான் பீமன்.
“பீமா!  நமது தர்மங்களும், நெறிகளும் கலி யுகத்திற்குப் பொருந்தா. அதர்மமே தர்மம் என்று ஆகிவிடும், மண், பெண், பொன் என்ற இந்த மூன்றுக்குமே முதலிடம் கொடுக்கப்படும். எனவே, இக்கலி யுகத்தில். நம்முடைய தர்மங்கள் தவறு என்று தூற்றப்படும். கலிபுருஷன் அப்படி எல்லோரின் மதியையும் மயக்கிவிடுவான். நாம் இங்கு இனிமேலும் இருந்தால் நமது மதியும் மயங்கி மங்கிப்போகும். நமது நாட்டை அர்ஜுனனின் பேரன் பரீக்ஷித்திடம் ஒப்படைத்துவிட்டுக் கிளம்புவதே சாலச் சிறந்தது.” என்று தர்மபுத்திரர் அறிவுரை வழங்கியது என் முன்னோர் நாயின் காதிலும் விழுந்தது.
உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்தது என் முன்னோர் நாய்.
“ஏதேது, வம்பாக இருக்கிறது. நானும் இங்கு இருக்கக் கூடாது. இவர்களுடன் கிளம்பிவிட வேண்டியதுதான்.  இல்லாவிட்டால் நமது இயல்பான தர்மமான நன்றி உணர்வை இக்கலி புருஷன் பறித்துக்கொண்டு விடுவான். நமது இனமும் நன்றியுள்ள நாய் இனம் என்ற பெயரை இழந்துவிடும்.” என்று முடிவு செய்து கொண்டது.
“எங்கே அண்ணா செல்வது? இந்த மனித உடலை விட்டால்தானே இப்புவியை விட்டு நீங்க இயலும்?” என்று கேட்டான் பீமன்.
“சகாதேவா, நீதான் சாஸ்திரம் அறிந்தவன் ஆயிற்றே! உன் அண்ணன் கேள்விக்குப் பதில் சொல்லு.” என்று பணித்தார் தர்மபுத்திரர்.
“அண்ணா, தாங்கள் இருக்கும்போது...” என்று இழுத்த சகாதேவனைப் பார்த்து மேலே சொல்லு என்பதுபோல தலையை அசைத்தார்.
என் முன்னோர் நாயும் காதுகளை நிமிர்த்தி, சகாதேவன் சொல்வதைக் கேட்கத் தயார் ஆகியது.
“அண்ணா, இமய மலையைத் தாண்டி வடக்கில் மகாமேரு மலை இருக்கிறது.  அதன் உச்சியை அடைந்தால், இப்பூத உடலுடனேயே விண்ணுலகை அடையலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.” என்று தனக்கே உரிய பணிவுடன் பகிர்ந்தான் சகாதேவன்.
“மகாமேரு மலையில் ஏறுவதா?  அது முடியுமா?” என்று வியப்புடனும், ஐயத்துடனும் கேட்டனர் அனைவரும்.
என் முன்னோர் நாய்க்கும் அந்த அச்சம் இருந்தது.  ஆயினும், தர்மபுத்திரர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்தது.
“திடமனதும், தான் என்ற எண்ணத்தையும் விட்டுவிட்டால் அது அடையக்கூடிய ஒன்றுதான்!” என்று அமைதியாக தர்மபுத்திரர் சொன்ன பதில் என் முன்னோர் நாய்க்கு நிறைவைத் தந்தது.
“இயலாத ஒன்றை தர்மபுத்திரர் என்றும் சொல்லமாட்டார். எனவே, நான் இவர்களைப் பின்தொடர்வேன். நானும் தர்மாத்மாக்களான இவர்களுடன் முதல் நாயாக விண்ணுலகை அடைவேன்.” என்று உறுதி (திட சங்கல்பம்) எடுத்துக்கொண்டது.
அரசை பரீக்ஷித்திடம் ஒப்படைத்துவிட்டு, தென்மேற்குத் திசையை நோக்கி நடக்கத் துவங்கினார் தர்மபுத்திரர்.









“அண்ணா! இமயம் வடக்கில் அல்லவா...” என்ற பீமனிடம், “துவாரகை சென்று, கண்ணனுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டுச் செல்வோம்!” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தார்.
இதுவரை நான் துவாரகையைப் பார்த்தே இல்லையே, கண்ணனுக்கு இறுதி மரியாதையைச் செலுத்திவிட்டு, துவாரகையையும் பார்க்கும் பாக்கியம் கிடைக்கப் போகிறதே என்று தர்மபுத்திரருக்கு மனதில் நன்றி செலுத்தியது என் முன்னோர் நாய்.
ஆனால் துவாரகையைக் காணச் சென்ற எழுவருக்கும் -- என் முன்னோர் நாயையும் சேர்த்துதான் சொல்கிறேன் – ஏமாற்றமே காத்திருந்தது.  கண்ணனில்லாமல், அவனது இடைக்குலமே அழிந்துபோனபின் நான் ஏன் இருக்கவேண்டும் என்று ஏங்கித் தவித்த துவாரகையை அள்ளி விழுங்கி விட்டான் வருணன்.  துவாரகை இருந்த இடம் கடலாக மாறி இருந்தது.
ஏமாற்றத்தை மென்று விழுங்கிவிட்டு, கண்ணனுக்கும், அவனது இடைக்குலத்திற்கும் இறுதிச் சடங்குகளைத் துவாரகையை விழுங்கிகிய கடல் நீரை எடுத்தே செய்துவிட்டு, மீண்டும் வடக்கு நோக்கித் திரும்பினர் எழுவரும்.
தங்களுடன் தொடர்ந்து வரும் என் முன்னோர் நாய் பஞ்சபாண்டவர், மற்றும் பாஞ்சாலியின் கண்ணில் படாமல் இல்லை.  அவ்வப்பொழுது தாங்கள் உண்ணும் உணவில் ஒரு சிறு பகுதியை என் முன்னோர் நாய்க்கும் அளித்து வந்தனர்.  இமயமலையில் ஏற ஆரம்பித்தனர். திட உறுதிபூண்ட என் முன்னோர் நாயும் அவர்களைப் பின் தொடர்ந்தது.
என் முன்னோர் நாய் அவர்களைத் தொடர்வது பீமன் முதல் பாஞ்சாலி வரை, ஐவரின் மனதையும் உறுத்தத்தான் செய்தது.  ஏன் இந்த நாய் இப்படி விடாப்பிடியாகத் தங்களைத் தொடர்கிறது என்று மனதில் கேட்டுக் கொண்டாலும், வெளிப்படையாக ஒன்றும் பேசவில்லை. தர்மபுத்திரரே அதைப்பற்றி பேசாதபோது தாங்கள் பேசுவது முறையாகாது என்றே நினைத்தார்கள்.
இமய மலையைத் தாண்டியதும் சமவெளியான பெரிய பாலைவனப் பகுதி தென்பட்டது. நடக்க இயலாது கால்கள் சோர்ந்தன. சில சமயம் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. தனக்கே இல்லாதபோது நாய்க்குக் கொடுக்க முடியுமா? முடியும் என்பதுபோல தர்மபுத்திரர் தன் பங்கு உணவிலும் தண்ணீரிலும் சிறிது என் முன்னோர் நாய்க்குக் கொடுத்தார். அதை உண்டுவிட்டு, வாலை ஆட்டித் தன் நன்றியைத் தெரிவித்தது என் முன்னோர் நாய்.
தர்ம புத்திரர் செய்கிறாரே என்று மற்றவர்களும் அவ்வப்போது தங்கள் பங்கு உணவிலும், தண்ணீரிலும் சிறிது கொடுத்தார்கள். பீமன் மட்டும் அதைச் செய்யவில்லை. ஆயினும், அவ்வப்போது என் முன்னோர் நாய் களைத்துப் பின்வாங்கும்போது சிறிது நேரம் அதைத் தூக்கிச் செல்வான்.
கடைசியில் வடக்குக் கோடியில் மகாமேரு மலை தென்பட்டது. விடிவு பிறந்தது என்ற மகிழ்ச்சியுடன் முன்னேறினர். 
“இனிமேல் நமக்குத் தேவையில்லாத சுமை வேண்டாம், நமது அரச அணிகலன்களைத் அவிழ்த்துத் தூர எறிவோம்!” என்று அறிவித்தார் தர்மபுத்திரர். 
அனைவரும் அப்படியே செய்தனர். தனது ஈட்டியைத் தரையில் வைத்தார்.
“சகாதேவா, உனது ஓலைச் சுவடிகளைத் தூக்கி எறி! நகுலா, உனது ஒப்பனைப் பொருள்கள் உனக்கு உதவாது; அர்ஜுனா, காண்டீபம் எதற்கு? பீமா, உன் கதையும் உன்னைவிட்டுப் பிரியவேண்டும்.”
தர்மபுத்திரர் சொற்படி அனைவரும் செய்தனர். என் முன்னோர் நாயும் பின்னங்காலால் தனது கழுத்துப்பட்டையைக் கழட்டிக் கடாசியது.
“பாஞ்சாலி...” என்று அவளை நோக்கினார் தர்மபுத்திரர்.
வேண்டா வெறுப்பாக, ஒவ்வோன்றாகத் தனது நகைகளைக் கழட்டினாள் அவள்.
மேருமலையில் ஏறும்போது அனைவருக்கும் மூச்சு முட்டியது. மிகச் செங்குத்தான பகுதியில் ஏறுவது மிக, மிகக் கடினமாக இருந்தது. இடுப்பளவு உயரமான கல்லில் ஏறும்போது பீமன் ஒவ்வொருவரையும் தூக்கிவிட்டான்.
அவ்வளவு உயரமான கல்லில் என் முன்னோர் நாயால் தாவி ஏற முடியவில்லை.
“பீமா! அந்த நாயையும் தூக்கிவிடு!” என்று தர்மபுத்திரர் சொன்னதும் பாஞ்சாலிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
“என்ன இது? ஒரு நாய்க்கு இத்தனை பரிவா? என் நகையும், சகாதேவனின் அறிய ஓலைச் சுவடிகளும், அழகன் நகுலனின் ஒப்பனைப் பொருள்களும், விஜயனின் வில்லும், பீமனின் கதையும், உங்கள் ஈட்டியும் வேண்டாதபோது இந்த நாய் வேண்டுமா? இந்த நாயுமா நம்முடன் சொர்க்கத்திற்கு வரவேண்டும்? விட்டுவிட்டு வாருங்கள்!” என்று கத்தினாள். உடனே அவளது உயிர் பிரிந்து கீழே விழுந்தாள்.
அனைவரும் திகைத்துப்போய் நின்றனர். 
ஒன்றும் பேசாமல் தர்மபுத்திரரே என் முன்னோர் நாயைத் தூக்கிவிட்டுவிட்டு, மேலே செல்ல ஆரம்பித்தார். மற்றவர்கள் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு அவரைப் பின்தொடர்ந்தனர். அவரது செய்கைக்கு விளக்கம் தேடினர்.
சிறிது நேரம் சென்ற பின்னர், அவரே அமைதியைக் கலைத்தார். “உயிர் உள்ளவரைதான் அவளுக்கு நமது பாதுகாப்பு தேவையை இருந்தது. அங்கு கிடப்பது பாஞ்சாலியின் கூடுதான். அவளது ஆன்மா நமக்கு முன்னரே விண்ணுலகம் சென்று விட்டது. நமது சங்கல்பமோ இப்பூத உடலுடன் விண்ணுலகம் அடைவது. எனவே, பாஞ்சாலியைப் பற்றி கவலைப்படாமல் வாருங்கள்.”
பாஞ்சாலி இறந்ததற்கு காரணம் என் முன்னோர் நாய் தான் என்று நினைத்தனர். தர்மபுத்திரர் கொடுத்த விளக்கம் என் முன்னோர் நாய்க்குப் போதுமானதாக இருந்தது. ஆனால், பீமன் முதல் சகாதேவன் வரை மற்ற நால்வருக்கும் என் முன்னோர் நாய் மீது ஒரு வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது. 
மகாமேரு மலைமேல் ஏற ஏற, நாள்கள் செல்லச் செல்ல, உணவுவம் தண்ணீரும்  கிடைப்பதும் குறைய ஆரம்பித்தது. எனவே என் முன்னோர் நாய்க்கு உணவு பங்கு கொடுக்க தர்மபுத்திரரைத் தவிர வேறு யாரும் முன்வரவில்லை.  
ஒருநாள் செங்குத்துப்பாதியில் ஏறும் பொது, ஏற இயலாது தவித்த என் முன்னோர் நாயைத் தூக்கிர் விடும்படி தருமபுத்திரர் சொன்னதும், பாஞ்சாலியைப் போல உரக்கக் கத்தினான் சகாதேவன். “இந்த நாயைக் கொள்ள வேண்டும். இதனால்தான் பாஞ்சாலியை நாம் பிரியநேரிட்டது. ஒரு கல்லை எடுத்து என் முன்னோர் நாய் மீது வீசினான். அச்சமயம் கால் வழுக்கி அதல பாதாளத்தில் வீழ்ந்தான்.  உடனே அவன் உயிர் பிரிந்தது. 
தருமபுத்திரர் தலையை ஆட்டியபடி, பீமனைப் பார்த்தார். பீமனும் என் முன்னோர் நாயை வேண்டா விருப்பாகத் தூக்கிவிட்டான். நன்றியுடன் வாலை ஆட்டியபடி அவர்களைத் தொட்ரன்தது என் முன்னோர் நாய்.
இதே மாதிரி சில நாள்கள் சென்றதும், நகுலனும், அர்ஜுனனும் என் முன்னோர் நாயைத் தூக்க மறுத்து, தம்பிகள், மற்றும் பாஞ்சாலியின் சாவுக்கு அதுதான் காரணம் என்று, தங்கள் நிலை குலைந்து, உணர்ச்சிப்பெருக்கில் வீரிட்டு, மலையிலிருந்து கீழே விழுந்து மரித்தனர்.
தான் ஒன்றுமே செய்யவில்லையே, தர்மாத்மாக்களான பாண்டவர்களைப் பின்பற்றித்தானே செல்கிறோம், ஏன் தன்மீது இவ்வளவு வெறுப்பைப் பொழிகிறார்கள் என்று மனதுக்குள் அழுதது. அதன் கண்ணில் நீர் கசிந்தது. இருப்பினும், எடுத்துக்கொண்ட உறுதி பிறழாது தருமபுத்திரரையும், பீமனையும் பின்தொடர்ந்தது.
தருமர் தினமும் தனக்குக் கிடைக்கும் மிகவும் கொஞ்சமான உணவில் பாதியைப் பசி பொறுக்காத பீமனுக்கும், மீதி இருப்பதில் பாதியை என் முன்னோர் நாய்க்கும் அளித்து வந்தார். அவரும், என் முன்னோர் நாயும் மெலிந்து விலா எலும்பு தெரியும் கூடாக இளைத்துப்போனார்கள்.
மகாமேரு மலையின் உச்சியை நெருங்கிவிட்டார்கள். கடைசியில் மிஞ்சி இருந்தது ஒரே ஒரு செங்குத்துப் பாறைதான். அதில் ஏறி விட்டால் போதும். பீமனைக் கேட்க வேண்டாம், தானே தூக்கி விடலாம் என்ற முடிவை எடுத்த தருமர், “பீமா, நீ முதலில் ஏறிச் செல். நான் இந்த நாயைத் தூக்கிவிட்டுவிட்டு ஏறி வருகிறேன்!” என்றார்.  எங்கே பீமனைத் தூக்கச் சொன்னால் அவன் நாயில் மேல் ஏதாவது சொல்லி, மற்றவர்களுக்கு நேர்ந்த கதி அவனுக்கும் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கரிசனம் அவருக்கு.
“போதும் அண்ணா, பொதும்! தம்பி மூவரும், பாஞ்சாலியும் விண்ணுலகுக்கு வர இயலாது தடுத்தது இந்த நாய்! இந்தக் கருமம் பிடித்த நாய் அவர்களைவிட உங்களுக்கு உயர்வாகிப் போனதா!” என்று வெறிபிடித்தவன் மாதிரி கத்திக்கொண்டே பாறையில் ஏறிய பீமனின் கை நழுவியது. உருண்டு பல்லாயிரம் அடிகள் கீழே உருண்டு விழுந்தான். மத யானைக்கு ஒப்பான அவன், எலும்புகள் சுக்கு நூறாக உடைந்து, தலை தேங்காய்போலச் சிதறி இறந்தான். அவனது உயிரும் உடலை விட்டு நீங்கியது.
தன் திட மனதில் சற்றும் மாறாத தர்மர், நாயைத் தூக்கிவிட்டார். தான் ஏற முயன்றபோது, பல தடவை வழுக்கி, வழுக்கிக் கீழே விழுந்தபோதிலும், அவர் எங்காவது பிடிப்பை ஏற்படுத்திக் கொண்டார்.
கடைசியில், அவரும், என் முன்னோர் நாயும் மகாமேரு மலையின் உச்சியை அடைந்தார்கள்.
அங்கே விண்ணவர் கோனான தேவேந்திரன் தன் உதவியாளனுடன், தன் விமானத்தில் காத்துக்கொண்டிருந்தான். 
“வரவேண்டும் யுதிஷ்டிரா! தர்மத்தின் திருவுருவே! உனக்காக என் தேர் காத்திருக்கிறது. விண்ணுலக்கு உன் பூத உடலுடன் செல்லலாம்!” என்று கனிவுடன் அழைத்தான்.
“வருகிறேன், வானவர் கோனே!  என்னுடன் இவ்வளவு தூரம், திட சங்கல்பம் பூண்டு, மகாமேரு மலையின் மீது ஏறி இந்த நாய் வந்திருக்கிறது. இதையும்.என்னுடன் அழைத்து வர விரும்புகிறேன்.” என்று இனிய குரலில் இயம்பினார் தருமபுத்திரர்.
“என்னது, இந்த நாயையா? என்ன யுதிஷ்டிரா பேசுகிறாய்? வேள்விக்கு ஆகுதியாகக் கொடுக்கப் போகும் பொருள்களைப் பார்த்தாலே – இந்த நாய் பார்த்தாலே போதும், அவை ஆகுதியாகும் தகுதியை இழந்துவிடுகின்றன என்று சாத்திரங்கள் சாற்றுகின்றன. அப்படிப்பட்ட ஒரு இழிந்த ஞமலியை விண்ணுலகுக்கு எப்படி அழித்துச் செல்ல இயலும்.  தருமத்தை முழுதும் கற்றுணர்ந்த நீ இப்படிக் கேட்கலாமா, அல்லது நினைக்கக் கூடுவதும் தகுமோ? கலிபுருஷன் உன் மதியை மயக்கி விட்டானா?” என்று கேட்டான் இந்திரன்.
                                    
“தங்களை எதிர்த்துப் பேசுவதாகத் தாங்கள் எண்ணக்கூடாது, விண்ணவரில் சிறந்தவரே! பந்த பாசத்தத் துறந்து, திட சித்தத்துடன், தன்னலமின்றி எவன் மகாமேரு மலைமேல் எருகிறானோ, அவன் பூத உடலுடன் விண்ணுலகம் புகத் தக்கவன் என்று சாத்திரங்கள் பறைகின்றன. நானோ மனிதன். எனக்கு ஆறாம் அறிவான பகுத்தறிவு இருக்கிறது.  எது அறம், எது நெறி என்று என்று உணரும் திறம் இருக்கிறது. எனவே நான் கற்று உணர்ந்து விண்ணுலக்கு வர உறுதி எடுத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.
“ஆயினும், ஆறாம் அறிவு இன்றி, பலராலும் பரிசுத்தம் அற்றது என்று வெறுத்து ஒதுக்கப்படும் இந்த ஞமலி திட உறுதி பூண்டு, என் உடன்பிறப்புகள், மனைவி இவர்களின் ஏச்சையும், பேச்சையும் பொறுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றி ஏறவும் அரிதான இம் மகாமேரு மலையின்மேல் ஏறி வந்திருக்கிறது.
“எனவே, என்னைவிட உயர்ந்து நிற்கிறது, இந்த ஞமலி.  இதனுடன் ஒப்பிட்டால் நான் சிறியவனே. நாயிலும் கடையேன் நான். இதை நீங்கள் உங்கள் இரதத்தில் ஏற்றிக்கொள்ளவிட்டால், ஒரு ஆறறிவு அற்ற உயரின் உயர்வை உணர மறுத்தால், அப்படிப்பட்ட விண்ணுலகம் எனக்குத் தேவையில்லை. இப்பூவுலகே சிறந்தது!” என்று உறுதியாகப் பதிலிறுத்தார் தருமபுத்திரர்.
அதைக்கேட்ட என் முன்னோர் நாயின் மனம் பூரித்தது.
“உதிஷ்டிரா, உன் கூற்றை ஏற்றுக்கொள்கிறேன். இன்னும் ஒரு கேள்வி. அதற்கான காரணத்தை அறநெறியின் மூலம் விளக்குவாயாக! உனது தம்பியர் நால்வரும், பாஞ்சாலியும் ஏன் இறந்தனர்? இந்த நாயை எள்ளி நகையாடியதாலா? மனிதர்கள் மட்டுமே பூதவுடலுடன் செல்லக்கூடிய விண்ணுலகை ஒரு கேவலமான நாய் அடையக்கூடாது என்ற வெறுப்பாலா? இல்லை கலிபுருஷன் அவர்கள் மதியை மயக்கிவிட்டானா? வேறு எதனால்? இதற்குச் சரியான விடையைச் சொன்னாளல் உன் நாயையும் நீ கூட்டி வரலாம்.” என்றான் இந்திரன்.
“அவர்களுக்குத் உறுதியான மனமும் இல்லை, தன்னலமும் இருந்தது. அதுவே காரணம். கலிபுருஷனும் காரணமில்லை, இஞ்ஞமலியின் மீது தோன்றிய வெறுப்பும் அல்ல, காரணம்...”
“பின்?...”
“நாங்கள் ஐவரும் அவளுக்குக் கணவர்களாக இருப்பினும், அவளுக்கு அர்ஜுனனிடம்தான் அதிக அன்பு இருந்தது. தன்னைப் போட்டியில் வென்றவன் என்று அவன்மீதே தனி அன்பு செலுத்தினாள். சமநோக்கம் இல்லாததால் அவள் முதலில் உயிர் இழந்தாள். சகாதேவனுக்கோ தன்னைவிட சாத்திர அறிவு மிக்கவர் யாரும் இல்லை என்ற கர்வம் இருந்தது. அதுவே அவனது அழிவுக்குக் காரணம். நகுலனுக்கோ அவனது அழகின்மீது செருக்கு இருந்தது. அதனால் நான் தூக்கி எறியச் சொன்னபோதும், சிறிதளவு ஒப்பனைப் பொருள்களை இடுப்பில் மறைத்து வைத்துக்கொண்டான். விண்ணுலகம் போவதற்குப் புற அழகா தேவை, அக அழகுதான் அதிமுக்கியம் என்பதை அவன் அறியவில்லை.
“அர்ஜுனனோ காண்டீபத்தின் இழப்பிலிருந்து மீளவே இல்லை. கடினமான மலைப்பாதைகளில் ஏறும்போதெல்லாம், காண்டீபம் இருந்தால், ஏறமுடியாத பாறையைச் செதுக்கி நல்ல படிகள் அமைத்திருப்பேனே என்று தன் காண்டீபப் பெருமையிலும், வில்வித்தைத் திறமையிலும் மனதை வைத்திருந்தானே தவிர, தன் சித்தத்தை சுவர்க்கத்திலோ, நெடிதுயர்ந்த மேருமலையைச் சிதைக்கலாமா என்னும் எண்ணத்திலும் வைக்கவில்லை. பீமனோ, தனது வயிற்றையே பெரிதாக மதித்தான். நாங்கள் அனைவரும் எங்கள் உணவில் ஒரு சிறிது பகுதியை இந்த நாய்க்குக் கொடுத்த போதும், அவன் இதற்கு ஒரு பருக்கை சோறுகூட கொடுக்கவில்லை.  பசித்த ஒரு உயிருக்குத் தன் உணவைப் பகிரும் அறநெறியைக்கூடச் செய்ய விரும்பாத அவன், எப்படி பூத உடலுடன் விண்ணுலகை எட்ட இயலும்?”
விளக்கத்தைக் விவரித்துவிட்டு அமைதியானார் தருமர்.
முதன்முறையாக வாயைத் திறந்து பேசியது என் முன்னோர் நாய்.
“மகனே! என்னைப் பார்! நான் யார் என்று தெரிந்துகொள்!” என்று கூறவே, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார் தர்மர்.
நாயின் உருவம் மறைந்து தருமராஜனான எமதர்மன் அவர் முன் உருவெடுத்தான்.
 “உன்னைச் சோதிக்கவே, உன் அறநெறியைச் சோதிக்கவே, உன்னைப் பின்தொடர்ந்தேன். அதில் நீ வெற்றி பெற்றுவிட்டாய். நீ சுவர்க்கம் செல்லத் தகுந்தவனே!” என்று தன் மகனின் பண்பைப் பார்த்த பூரிப்புடன் கூறினான்.
தந்தையை வணங்கி நின்றார் தருமபுத்திரர்.
“யுதிஷ்டிரா! நானும் உன் நேர்மையால் மன மகிழ்ச்சி அடைந்தேன். நீ விரும்பிய வரம் ஒன்று தருகிறேன். கேள்!” என்றான் இந்திரன்.
“விண்ணவர் கோனே! இந்த நெடிய பயணத்தில் நான் மனம் தளர்ந்த போதெல்லாம், எனக்கு மனத்திண்மையைக் கொடுத்தது ஞமலியின் வடிவில் வந்த என் தந்தைதான். எதற்காக அந்த விலங்கின் வடிவைக் கொண்டாரோ, அந்த விலங்கு கலிபுருஷனின் மயக்கத்தால் மதி இழக்காது, என்றுமே நன்றி உள்ள உயிராக விளங்க வேண்டும். அதுவே நான் வேண்டும் வரம்!” என்று இறைஞ்சினார் தருமர்.
“அப்படியே ஆகுக!  ஒரு பருக்கை சோறு யார் அளித்தாலும், அவருக்கு நன்றியாக இருந்து வரும் இனமாக ஞமலியின் இனம் விளங்கட்டும் என்று வரமளித்தான் வானவர் கோன்.
அவன் கைலாகு கொடுக்க, விண்ணுலகம் செல்லும் இரதத்தில் ஏறி அமர்ந்தார் தருமபுத்திரர்...
... ஆக, ஒரு நாய் எப்படி சொர்க்கம் சென்றது என்ற நாய்க் கதையைச் சொல்லிவிட்டேன். நீங்களாவது உங்கள் குழந்தை ஒரு நாய்க் கதை கேட்டால், என் முன்னோர் நாயின் கதையைச் சொல்லுங்கள்.
என்ன இது சத்தம்?  எதோ எச்சில் இலை எறியப்படுவது போல இருக்கிறதே! என் பிழைப்பை நான் பார்க்கப் போகிறேன். ஆளை, இல்லையில்லை, இந்த நாயை விடுங்கள்
--------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு:  மகாபாரதத்தில் சுவர்க்காரோகண பர்வத்தில் வரும் இக்கதை, சிறுவயதில், “யார் வேண்டுமானாலும் சொர்க்கத்துக்குப் போக முடியுமா?” என்று நான் கேட்டபோது, என் தாய்வழிப் பாட்டியால் சுருக்கமாகக் கூறப்பட்டது. 

No comments:

Post a Comment