Tuesday, 19 August 2014

பருத்தியைப் பாடிய பாவலர் ;ஜவாஹர் பிரேமலதா

                    பருத்தியைப் பாடிய பாவலர் 
ஜவாஹர் பிரேமலதா
இணைப்பேராசிரியர்,அரசு கலை அறிவியல் கல்லூரி [தன்னாட்சி]சேலம்-7
                        

பருத்தி (டinn)
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பழந்தமிழர் பருத்திச்செடியின் அருமையை உணர்ந்து, அதை உணவிற்காகவும் நூலாக்கி கயிறு திரிக்கவும், ஆடை நெய்யவும் பயன்படுத்தியுள்ளனர்.

தமிழர்கள் தொழில் நுட்ப மேம்பாட்டுக்குப் பருத்தியும் ஒரு காரணமாகும். தீ, சக்கரம் இரண்டும் கண்டுபிடித்த பின்னர், மனித நாகரிகம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியது என்பர். அதைப் போல மனிதன் சிந்திக்கத் தொடங்கியவுடன் காற்று, பனி, வெயில், மழை போன்றவற்றிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளஎவை பயன்படும் என்று தேடினான்= இலை தழை , மரப்பட்டை, தோல் போன்றவை கண்களிலே தென்பட்டன. 

அவற்றை ஆடையாக்  அணிந்தான். ஆனால், அவனுடைய முழுத் தேவையையும் அவை நிறைவு செய்யவில்லை. 
பருத்தி இழையிலிருந்து நூல் எடுக்கக் கற்றுக் கொண்ட பின்னர் அவனுடைய வாழ்க்கை தொழில்நுட்பம் நிறைந்ததாக மாறிப்போனது. பருத்தி நூல் கண்டுபிடிப்பு ஒரு மாபெரும் புரட்சியாகும்.

பருத்திச் செடிகள் ஊருக்குப் புறத்தேயும் வீட்டிற்கு வெளியேயும் வளர்க்கப்பட்டன. போர்ச்சூழல் நிரம்பிய அக்காலத்தில், நாட்டின் மானம் காக்கவும், பெண்களின் மானம் காக்கவும் கை கொடுத்து உதவியது பருத்திச் செடியே.
""""பன்னல்வேலி இப்பணை நல்ஊரே"" (புறம். 35 : 20)
என்று பருத்தியை வேலியாக உடைய ஊர்களைப் புலவர்கள் பாராட்டியுள்ளனர். ஊருக்குப் புறத்தே பரந்து விரிந்துள்ள பருத்திச் செடிகள் ஊருக்கே வேலிபோல விளங்கியதை இப்பாடல் உணர்த்துகிறது.

""""கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
தாழி முதற் கலித்த கோழிலைப் பருத்தி"" (அகம். 129 : 6-7)
என்ற அகப்பாடல் வீட்டிற்குப் புறத்தே கற்கள் சூழ்ந்த பகுதியில் விளைந்துள்ள கோழிலைப் பருத்தி பற்றிக் கூறுகிறது.

பருத்திச் செடியிலிருந்து எடுக்கப்பட்ட கொட்டையை உணவிற்காகவும், கொட்டையைச் சுற்றி வளர்ந்துள்ள இழைப் பகுதியை எடுத்து நூலாகவும் பயன்படுத்தியுள்ளனர். இந்நூலைக் கொண்டு கயிறு திரித்து, அக்கயிற்றினைப் பலவித பயன்களுக்காகவும் பயன்படுத்தியுள்ளனர். பருத்தியிலிருந்து தயாரிக்கப்பட்ட பருத்தி ஆடை கிரேக்கம், எகிப்து, சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு தமிழரின் பெருமையை உலகெங்கும் நிலைநாட்டியுள்ளது.

பருத்திச் செடியின் உணவுப்பயன்

பருத்தியிலிருந்து கிடைக்கும் கொட்டையை பறவைகளும், மனிதர்களும் உணவிற்காகவும் பயன்படுத்தியுள்ளனர். அகப்பாடலொன்று, வீட்டின் புறத்தே வளர்ந்துள்ள பருத்திச் செடியிலுள்ள முற்றிய காயை ஆண் பறவையொன்று, தன் அலகால் குத்திப் பிளந்து, கொட்டையை எடுத்து பெண் பறவைக்கு உண்ணக் கொடுத்தது என்கிறது. மேலும் அப்பறவை கீழே சிதறவிட்ட பஞ்சிழைக்குள் எடுக்காமல் விடப்பட்டப் பருத்திக் கொட்டைகளை வறுமையுற்ற பெண்கள் உணவிற்காகச் சேகரிப்பர் என்கிறது. இக்கொட்டை இனிப்புச் சுவையுடையது.

""""பொதி வயிற்று இளங்காய் பேடை ஊட்டி
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண்காழ்
நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும்"" (அகம்.129 : 8-10)
இக்காலத்திலும் மதுரை, கோவை மாவட்டக் கிராமங்களில் பருத்திப்பால் பருகப்படுகிறது. இது நெஞ்சுச் சளி, நெஞ்சு பாரம் போன்றவற்றிற்கு அருமருந்தாகக் கருதப்படுகிறது. சித்த வைத்தியமும் இதை மருந்தாகப் பயன்படுத்துகிறது. பருத்திக் கொட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சில உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மாடுகளுக்குப் பருத்திக் கொட்டை அரைத்துக் கொடுக்கப்படுகிறது. எண்ணெய் பிழிந்த பின் கிடைக்கும் சக்கை புண்ணாக்குஆகும். இதுவும் மாட்டிற்குத் தீவனமாகிறது. இதனால் மாட்டின் பால் அடர்த்தியாகக் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கையாகும்.

பருத்தியின் தொழிற்பயன்
சங்க காலத்தில் போரில் இறந்துபட்ட வீரர்களின் மனைவியர் தன் மானத்தைக் காக்கவும், சுற்றத்தைப் பேணவும் பருத்திச் செடிகளையே நம்பியிருந்தனர். பருத்தியைக் கொண்டு வாழ்கை நடத்தியவர்களைப் பருத்திப்பெண்டீர்’ (புறம்.125 :1) என அழைத்துள்ளனர். பெரும்பாலும் கைம்பெண்டிரே இத்தொழில் ஈடுபட்டுள்ளனர்.

 ஊரைச் சுற்றி விளைவிக்கப்பட்டுள்ள பருத்திச் செடிகளே இவர்களின் வாழ்வாதரமாக இருந்துள்ளது. கோடைக்காலத்தில் பருத்திச் செடியிலுள்ள காய்முற்றி வெடித்து, பஞ்சிழை வெளிவரும். வெண்மையான பருத்திக் கொட்டையைச் சுற்றிப் பஞ்சு இழைகள் சூழ்ந்திருக்கும். இவ்விழையில் செல்லுலோசும், மெழுகும் கலந்திருக்கும். இதை நீக்கினால் தான் பருத்தி இழை நிலைப்பு, உறுதி, மென்மை போன்ற தன்மைகளைப் பெறும் என்பதால் இதை அடித்து பக்குவப்படுத்துவர். இப்பருத்தியை """"கோடைப்பருத்தி"" (புறம். 393) என்றும் இதன் பூவை """"பாரம்"" (குறிஞ்சிப்பாட்டு. 92) என்றும் சங்க இலக்கியம் கூறுகிறது. இப்பருத்திப்பூவை பறித்து, பெரிய மூட்டைகளில் கட்டி வீடு முழுதும் நிறைத்திருப்பர்.
""""கோடைப் பருத்தி வீடு நிறை செய்த
மூடைப் பண்டம் மிடை நிறைந்து அன்ன"" (புறம். 393 : 12-13)
என நல்லிறையனார் இப்பாடலில், கிள்ளிவளவன் கொடுத்த இறைச்சி நிரம்பிய உணவை உண்ட புலவரின் சுற்றத்தாரின் வயிறு, பருத்திப்பெண்டிர் வீட்டில் அடுக்கி வைத்திருந்த பஞ்சு மூட்டைகள் வீட்டை நிறைந்திருப்பதைப் போல நிறைந்திருந்திருந்தது எனக் கூறுகிறார்.

பருத்தி தொழில் சார்ந்த தொழிற்கருவிகள்

கைம்பெண்கள், பருத்தி இழையிலிருந்து கொட்டையைப் பிரிந்தெடுக்க இரும்பினால் செய்யப்பட்ட தாள் மற்றும் வில் முதலான கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
""""ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பனுவல் போல"" (நற். 353: 1-2)
""""எஃகுறு பஞ்சிற்று ஆகி"" (நற். 247 : 4)
""""வில்லெறு பஞ்சியின்"" (அகம். 133: 6)

போன்ற தொடர்கள் தாள், வில் போன்ற பஞ்சடிக்கும் இரும்பினால் செய்யப்பட்ட கருவிகளைப் பற்றிக் கூறுகிறது. இவ்வாறு இக்கருவிகளினால் பன்முறை அடிக்கப்பட்ட பருத்தி இழையானது மென்மையான பஞ்சாக மாறுகிறது. இப்பஞ்சானது மிகமிக நுண்ணியதாக இருக்கும். இப்பஞ்சு வேக வைக்கப்பட்ட இறைச்சி போல கடினத் தன்மையும் இழுவைத் தன்மையும் நீங்கி மிக மென்மையாக இருந்ததாக ஒரு புலவன் கூறுகிறான்.

""""பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங்குறை"" (புறம். 125: 1)

இங்கு வேக வைக்கப்பட்ட இறைச்சிக்குப் பஞ்சு உவமை கூறப்பட்டுள்ளதைப் போல, வெண்மேகத்திற்கும், கடல் நுரைக்கும் உவமை கூறப்பட்டுள்ளது.

""""வில்எறி பஞ்சிபோல, மல்கு திரை
வளிபொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளிகடற் சேர்ப்பனொடு"" (நற்.299:7-9)

வில்லைக் கொண்டு அடிக்கப்பட்ட பஞ்சானது, கடல் அலை கரையில் கொண்டு வந்து சேர்த்த கடல் நுரையோடு ஒப்பிடப்படுகிறது. கடல் நுரையானது பொங்கிப் பெருகி நிறைந்திருப்பதைப் போல, அடிக்கப்பட்ட பஞ்சு இருப்பதால் பஞ்சை பொங்கல்என்றும் அழைத்துள்ளனர்.
""""பொங்கல் வெண்காழ்"" (அகம். 129:9)
மற்றொரு பாடலும் பஞ்சினை மேகத்திற்கு உவமை கூறுகின்றது.
""""பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி
விண்டுச் சேர்ந்த வெண்மழை போல"" (ப.ப.55:14-15)
பருத்திப் பெண்டிர் வில் கொண்டு பருத்திப்பூவை அடிக்கும் பொழுது, பஞ்சு இழையானது சிதறுண்டு வெண்மேகம் போல அறையெங்கும் சிதறிக்கிடக்கும் என்கிறது இப்பாடல். பஞ்சு நூலாவதற்குள் அடிக்கப்பட்டும், தூற்றப்பட்டும், முறுக்கப்பட்டும் பலபாடுகள்படும். இதை,
""""பஞ்சாகி நூலாய்ப் பல பாடுநீ படுதல்
அஞ்சா துயிர் காக்க வல்லவோ"" (செங்குந்தர் துகில் விடுதூது.) என்று பிற்கால நூல் கூறுகிறது.
நன்கு அடிக்கப்பட்ட வெண்பஞ்சின் மென்மையை  மேகத்தோடும், நுண்ணிய தன்மை கடல் நுரையோடும் ஒப்பிட்டுக்காணும் பார்வை கடலோடும் விண்ணோடும் தமிழர் கொண்ட உறவின் சின்னமாக வெளிப்படுகிறது.
இவ்வாறு கொட்டையிலிருந்து பிரித்த  பஞ்சை  மாற்றும் முறையை பிற்கால நூலாகிய நன்னூல் ஒரு நூற்பாவில்  காட்டுகிறது. நூற்கும் பெண் தன் கைகளைப் பயன்படுத்தி, கதிர் என்னும் கருவியின் உதவியால் பஞ்சினை நூலாக மாற்றுவதைப் போல, ஒரு புலவன் சொற்களாகிய பஞ்சினை செய்யுளாக மாற்றுவதற்கு, அறிவு என்னும் கதிரைப் பயன்படுத்த வேண்டும் என்கிறது.
சொற்கள் - பஞ்சு
செய்யுள் - இழை (நூலிழை)
எழுதுபவன் - நூற்கும் பெண்
எழுதுபவனின் வாய் - நூற்கும் கை
அறிவு - கதிர் (நன். எழு. 24)
""""----- கதிர் பொலவுறூஉம்
ஏந்தல் கொடு நின்றோங்கும் ஏமக்கை"" (திருக்கை. 143)
பெண்டிர் கதிர் என்னும் கருவி கொண்டு பஞ்சினை நூலாக மாற்றியுள்ளனர் எனத் திருக்கை வழக்கநூலும் கூறுகிறது.
இவ்வாறு பருத்தி பண்பாட்டோடும்,தொழிற் திறத்தோடும் , ஒட்டு மொத்த சமூக வாழ்க்கையோடும் கொண்ட பிணைப்பை சங்கத் தமிழர் அழகியல் பார்வை கவிதையாக்கி இருக்கிறது 


2 comments:

  1. உயர்திரு பிரேமலதா அவர்களே,

    இன்னும் ஒரு அருமையான இலக்கியக் கட்டுரையைக் கண்டு மகிழ்ந்தேன். தொடரட்டும் உங்கள் தமிழ்ப் பணி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. பருத்தி பற்றிய பேராசிரியையயின் கயிறு திரிக்காத பதிவு அருமை.வாழ்த்துக்கள்!

    ReplyDelete