தமிழ் இனி மெல்ல [35]சென்ற பதிவின் இறுதியில்
நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க! என் அருமை மைந்தா, நீ இத்திருமுகத்தை நீ படிக்க நேரிட்டால் நான் இவ்வுலகை விட்டு சொக்கநாதனின் திருவடிகளைச் சேர்ந்து விட்டேன் என்று அறிவாயாக. “தென்னாடுடைய இறைவனான நீ ஆண்ட மதுரை மாற்றானுக்குத் திரை செலுத்த வேண்டிய சூழ்நிலையால் ஏற்பட்ட அவச்சொல்லை எத்தனை நாள்கள்தான் தாங்குவேனய்யா, உன்னிடம் சேர்த்துக்கொள்! என்று அவனுடைய திருவடியைச் சரணடைந்து விட்டேன் என்பதுதான் உண்மையாகும். என் இறைவன் திருவிளையாடல் பல புரிந்த மதுரையைத் திரை செலுத்தும் அடிமையாக இருக்கும் நான், நமது முன்னோர்களின் அரியணையில், அவர்கள் அணிந்த மகுடத்தை அணிந்து, அவர்களது வீரவாளையும், செங்கோலையும் ஏந்தி எப்படி ஆட்சி செய்வது என்று நொந்துதான், அவற்றையெல்லாம் இலங்கையில் பாதுகாப்பாக வைத்துவிட்டேன் என்பது உனக்கே தெரியும்.
“அந்நிலையை மாற்றவேண்டும், மதுரையின் பெருமையை நிலைநாட்டவேண்டும் என்ற அவாவில்தான் நான் அலைந்து திரிந்து படை திரட்டி இராஜராஜனைச் சிறைப் பிடிக்கச் செல்கிறேன். அந்த உன்னதமான முயற்சி நிறைவேறக் கூடாது என்று சொக்கநாதன் முடிவு எடுத்துவிட்டால்தான் இத்திருமுகம் உன் கைக்குக் கிடைக்கும்.
“அப்படி இது உன் கையில் கிடைத்தால் உன் தந்தை உன்னிடம் கேட்டுக் கொள்வது இதுதான். அவசரப் பட்டு நீ உடனே தஞ்சைக்குப் படையெடுத்து வராதே! உன் உயிரைக் காப்பாற்றிக் கொள். மதுரைக்கு வராதே! உன் தந்தை இப்படிச் சொல்கிறானே என்று நினைக்காதே!
“நமது முன்னோர்கள் நமக்கு அளித்த அரியணையில் அமரவோ, வீரவாளையும், செங்கோலையும் தாங்கவோ உரிமையுள்ளவன் - மதுரையை யாருக்கும் அடிபணியாமல் ஆட்சி செய்பவன் மட்டும்தான். ஆகவே, எனது இந்தக் கடைசி விருப்பத்தை நமது சந்ததிகளுக்குச் சொல்லி வருவாயாக. எந்த ஒரு பாண்டிய மன்னனுக்கும் தனது முன்னோரின் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்யவேண்டும் என்ற அவா இருக்கத்தான் இருக்கும். அதை நிறைவேற்ற வேண்டும் என்றால், மதுரையை மீட்கவேண்டும். அப்படி மதுரையை மீட்பவன்தான் தன்னை உண்மையாகவே பாண்டிய மன்னன் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை அடைகிறான். அப்படிப்பட்ட பெருமையைப் பெறும்வரை நமது வழித்தோன்றல்கள் ஒவ்வொருவரும் முயன்று கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் எனது கடைசி அவா.
“இந்த அவாவை நிறைவேற்றவேண்டும் என்றால் கவனமாகச் செயல்பட வேண்டும். சரியான நேரம் வரும்வரை அமைதியாக இருந்து மதுரையை மீட்கவேண்டும். இப்பொழுது நீ இருக்கவேண்டிய இடம் மதுரை அல்ல. நெல்லைதான். பொறுமையாகச் செயல்படு. பாண்டியரை அடக்கிவிட்டோம் என்று சோழர்கள் ஒரு நாள் கூட அமைதியாகத் தூங்கக் கூடாது. கடலில் இறங்கிய சோழப் புலியை என்று பாண்டிய மீன் விழுங்கி ஏப்பம் விடுமோ என்று பயந்து கொண்டேதான் இருக்கவேண்டும். இந்த உணர்ச்சிப் பெருக்கை, வேட்கையை, மதுரையை மீட்கவேண்டும் என்ற வெறிச் சுடரை, அணையாமல் நமது வழித் தோன்றல்களின் ஒவ்வொரு மூச்சிலும் கலக்கச் செய்வாயாக. இதுதான் நீ பாண்டியனாக எனக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்கு.
“மதுரையை மீட்கும்வரை நமது வழித் தோன்றல்கள் ஒவ்வொருவருக்கும் இத் திருமுகத்தைக் காட்டி வளர்க்க வேண்டும்.
“தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!”
திருமுகத்தைப் படித்து முடித்த விக்கிரமனின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகப் பெருகுகிறது.
“தந்தையே! உறையூரும், தஞ்சையும் நெருப்பில் கருகும்வரை இனி சோழர்களுக்கு நிம்மதி இருக்காது! உங்கள் இலட்சியம் நிறைவேறும். மதுரை மீட்கப்படும்! இது உங்கள் மீது ஆணை! மதுரையை ஆளும் சொக்கநாதன் மீது ஆணை!!! உலகநாயகியான மீனாட்சி மீது ஆணை!!!” என்று உரக்கக் கத்திய விக்கிரமன், தனது உடைவாளை எடுத்து, வலது உள்ளங்கையைக் கீறி, பெருகும் குருதியில் உறுதிமொழி எடுக்கிறான்.
* * *தமிழ் இனி மெல்ல [36]தொடர்கிறது
அரிசோனா மகாதேவன்
வங்கக் கடலில், நாகைப்பட்டினத்திற்கு அருகில்
பரிதாபி, புரட்டாசி 21 - அக்டோபர் 6, 1012
எத்தனை தடவைகள் வாந்தி எடுத்தோம் என்ற கணக்கே மறந்து போய்விடுகிறது நிலவுமொழிக்கு. யானையின் மீதோ, குதிரை பூட்டிய ரதத்திலோ சென்றால் அதிக நாள்கள் ஆகிவிடும் என்று நினைத்த சிவாச்சாரி, விரைவாகச் செல்லவேண்டி சோழ நாட்டின் சிறப்பான நாவாய் ஒன்றில் அனைவரும் பயணிக்க ஏற்பாடு செய்திருந்தான். நிலத்தில் பயணம் செய்தால் அலுப்பாக இருக்கும். உண்ண, உறங்க, ஓய்வெடுக்க என்று நேரம் கழிந்து விடும், ஆனால் நாவாய் இரவு பகலாகச் சென்று கொண்டே இருக்கும். எனவே பயணம் மெதுவாக இருப்பினும் விரைவில் முடிந்து விடும் என்று காரணம் கூறினான்.
அரச குடும்பத்தினர் யாரும் அதற்குத் தடையேதும் கூறவில்லை. சோழ மகாராணியாரும், இளவரசியும், மற்றும் வேங்கைநாட்டு மகாராணியும், இளவரசரும் வருகிறார்கள் என்று நாவாயில் உபசாரம் தடபுடலாக இருந்தது. அவர்கள் பயணிக்கும் நாவாய்க்குப் பாதுகாப்பாக அதைச் சுற்றிலும் ஐந்து நாவாய்கள் கடற்படை வீரர்களுடன் வந்து கொண்டிருந்தன. அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி என்னவென்றால், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஸ்ரீவிஜயத்திற்குச் சென்றிருந்த இராஜேந்திர தேவன் நாவாயில் அவர்களை வரவேற்றதுதான்.
அண்ணனைக் கண்ட மகிழ்ச்சியில் ஆரவாரித்தாள் அம்மங்கை. இத்தனை பெண்களுக்கு நடுவே எப்படி பொழுதைக் கழிக்கப் போகிறோம் என்று தயங்கிய இராஜராஜ நரேந்திரனும் அம்மானின் மகனைக் கண்டதும் உவகை கொண்டான். ஒவ்வொரு கப்பலாகச் சென்று பார்த்துப் பொழுதைப் போக்கினார்கள் அவர்கள் இருவரும்.
ஆனால் நிலவு மொழிக்குத்தான் அலையில் நாவாய் ஓரொரு தடவை எழுந்து விழும் பொழுதும் வயிற்றைக் கலக்கியது, தலையைச் சுற்றியது. தொப் தொப்பென்று கப்பல் விழுந்து எழும் பொழுதெல்லாம் அது சாய்ந்துவிடுமோ, கடலிலேயே தாங்கள் மூழ்கிவிடுவோமோ என்று பயந்தாள். திருமயிலையில் வாழந்து வந்த அவளுக்குக் கடல் புதிதல்ல. நிறையத் தடவை கடற்கரையில் அலைகளில் நின்று, அவை கால்களை வருடுவதை ரசித்திருக்கிறாள். சிலசமயம் தன் தோழிகளுடன் நீராடவும் செய்திருக்கிறாள். இருந்தாலும், பருவத்திற்கு வந்தபிறகு தந்தையின் விருப்பத்திற்கிணங்க கடலில் நீராடுவதை விட்டுவிட்டாள். கால்கள் நிலத்தில் பதிந்து இருக்கும் பொழுது அலையில் விளையாடுவது வேறு, அலைகள் தூக்கிப் போட்டு விளையாடும் நாவாயில் இருப்பது வேறு என்று அவளுக்கு நன்றாகவே அந்தப் பயணம் விளக்கியது.
அவளது அச்சம் அம்மங்கைக்கு விளையாட்டாக இருந்தது.
“நிலா! பொதுவாகக் கருவுற்ற பெண்கள்தான் வாந்தி எடுப்பார்கள். நீ எதற்காக வாந்தி எடுக்கிறாய்?” என்று கேட்டுக் கிண்டல் செய்தாள்.
குந்தவிதான், “மங்கை! இவளே பாவம் கடல் நோவால் வருந்துகிறாள். இதுவா நகையாடும் நேரம்? ஆறுதலாக இரண்டு சொற்கள் கூறாவிட்டாலும் பரிகசிக்காதே!” என்று விளையாட்டாக அதட்டினாள்.
திரிபுவன மகாதேவியோ தினமும் ஓரிரு மணி நேரம் சிவாச்சாரியனுடன் ஏதோ அரசுச் செய்திகளையே பேசிக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் அவர்கள் இருவரும் அதற்காகவே உள்ள ஆலோசனை அறைக்குச் சென்று விடுவார்கள். எனவே, சிவாச்சாரி அவர்களுடன் வருவது அவர்களுக்குத் துணையாக மட்டுமல்ல, இராஜேந்திரன் சோழப் பேரரசின் பட்டப் பொறுப்பை ஏற்றதால், பட்டத்து ராணியான திரிபுவன மகாதேவிக்கு அரசு விவகாரங்களை எடுத்துச் சொல்லவும்தான் என்று புரிந்து கொண்டனர் அனைவரும்.
தனது கடல் நோவிலிருந்து மனதைத் திருப்ப அவ்வப்பொழுது நரேந்திரனுக்குத் தமிழ்ப் பேச்சு கற்றுக் கொடுக்கும் பணியைச் செய்து வந்தாள் நிலவுமொழி. அப்பொழுதெல்லாம் சிவாச்சாரியனும் தானும் பேசியது நினைவுக்கு வருகிறது...
...குந்தவியின் அரண்மனையில் அவனைத் தனியாகச் சந்தித்த நிலவுமொழி கண்ணீர் விட்டு அழுததைக் கண்டு பதறிவிட்டான் சிவாச்சாரி. “ஏனம்மா நிலா, என்ன ஆயிற்று? வீட்டு நினைவு வந்துவிட்டதா?” என்று பரிவுடன் விசாரித்தான்.
“இல்லை ஐயா. மறந்தால்தானே வீடு நினைவுக்கு வரும்? அது அல்ல, என் கண்ணீருக்குக் காரணம். வேங்கை நாட்டு இளவரசரை நினைத்தால்தான் எனக்குப் பயமாக இருக்கிறது!”
“ஏன்? அவர் தமிழ் கற்றுக் கொள்ளமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாரா? இல்லை கற்றுக் கொடுக்கும் போது உன்னை அதட்டுகிறாரா? உன்னிடம் சினம் கொள்கிறாரா?” என்று மீண்டும் பரிவுடன் சிவாச்சாரி கேட்டதற்கு இல்லையென்று தலையை ஆட்டினாள் நிலவுமொழி.
“அவர் தமிழைக் கற்பதைவிட என்னைக் கற்கத்தான் விரும்புகிறார் போலத் தெரிகிறது. இளவரசரான அவர் எங்கே, கோவிலில் ஓதுவாராகப் பணியாற்றுபவரின் மகளான நானெங்கே? தவிர, கற்றுக் கொடுப்பவரைக் கற்றுக் கொள்ள நினைப்பது தகுமா?” என்று கேள்விகளாகப் பதில் சொல்லும் பொழுது நிலவுமொழியின் கண்களில் தாரைதாரையாகக் கண்ணீர் வழிகிறது.
“அழாதே அம்மா!” என்று தனது உத்தரீயத்தால் அவளது கண்ணீரைத் துடைத்தான் சிவாச்சாரி. “உன்னை மகளாக மன்னர் இராஜேந்திரர் ஏற்றுக் கொண்டிருக்கிறாரே! அரசிளங்குமரியான நீ அழலாமா? நான் இங்கு புறப்பட்டு வருவதற்கு முன்னர் கூட தனது தத்து மகளான நீ எப்படி இருக்கிறாய், உனக்குக் குறையேதும் இல்லையே என்று பார்த்து வரும்படி என்னைப் பணித்தார். உன்மீது சோழப் பேரரசரே அக்கறை எடுத்துக் கொள்ளும் போது உன் மதிப்பு எவ்வளவு உயர்வானது என்று அறிந்து கொண்டாயா! அதனால் உன் மதிப்பை நீயே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதே! ஆனால் இப்படி ஒரு இக்கட்டான நிலை உனக்கு வந்து சேரும் என்று நான் நினைக்கவில்லை. நிலைமை கையை மீறிப் போனால் உன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்த மாதிரி செய். வேங்கை நாட்டு இளவரசர் அடங்கி விடுவார்!” என்று தணிந்த குரலில் அவளுக்கு நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று எடுத்துரைத்தான் சிவாச்சாரி.
அதைக் கேட்டதும் நிலவுமொழியின் முகத்தில் நிம்மதி பிறந்தது.
“அப்படியே செய்து விடுகிறேன், ஐயா! உங்களோடு பேசியதில் என் மனதில் இருந்த பெரிய பளு இறங்கிய மாதிரி இருக்கிறது.” அவள் முகத்தில் இலேசான புன்னகை மலர்ந்தது.
“நீ இனி கவலைப்படாதே. உன் மன நிம்மதிக்கு ஒரு குறையும் வராது.” என்று சொல்லிவிட்டு, நம்பிக்கையூட்டும் புன்னகையுடன் அவளை விட்டுவிட்டுச் சென்றான் சிவாச்சாரி.
சிவாச்சாரி ஒரு சிறந்த ராஜதந்திரி என்று நிலவுமொழி கேள்விப் பட்டிருக்கிறாள். நரேந்திரனைச் சமாளிக்க அவன் சொல்லிக் கொடுத்த வழி எவ்வளவு எளிதானது, அது எப்படித் தன்னைக் காப்பாற்றும் என்று நினைத்துப் பார்த்து பார்த்து நிம்மதி கொண்டாள். ஆனால் அந்த வழி அவளைக் காப்பாற்றினாலும், மற்றொரு வகையில் சிவாச்சாரியானாலும் அறிந்து கொள்ள இயலாமல்தான் போய்விட்டது!...
...“அத்தை, நாகைப் பட்டினம் தெரிகிறது, வந்து பாருங்கள்.” என்று தனக்கே உரித்தான குழந்தைத்தனத்துடன் குதூகலத்துடன் குந்தவியை அம்மங்கை அழைப்பது நிலவுமொழியின் காதில் விழுகிறது. ஒருவழியாகத் தனது கடல் நோவுக்கு ஒரு முடிவு வரப் போகிறது என்பதை உணர்ந்து நிம்மதி கொள்கிறாள் அவள்.
ஒரு நாழிகை சென்றவுடன் நாவாய் கடலிலேயே நின்றுவிடுகிறது. மீகாமன் ஒருவன் நங்கூரத்தைத் தூக்கிக் கடலில் வீசுகிறான். மீண்டும் படகில்தான் கரைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தால் நிலவுமொழிக்கு வயிற்றைக் கலக்குகிறது.
அருகில் இருந்த ஒருவனிடம், “ஏன் நாவாயைக் கரைக்குச் செலுத்த முடியாது நடுக் கடலில் நிறுத்துகிறீர்கள்?” என்று வினவுகிறாள்.
ஏதோ ஒரு நகைச்சுவையைக் கேட்டமாதிரி அவளைப் பார்த்துச் சிரிக்கிறான் அந்த மாலுமி. நாவாய்க்குச் சொந்தக்காரரான நகரத்தார் ஒருவர் அவளைப் பரிவாகப் பார்க்கிறார்.
“அம்மா, இந்த நாவாய் நிற்க நிறைய ஆழம் வேண்டும். நாகைக் கடற்கரைக்கு அருகில் அந்த அளவு ஆழம் இல்லை. அதனால், குறைந்த ஆழத்தில் நிறுத்தக் கூடிய படகுகளில் உங்களை அழைத்துச் செல்லப் போகிறோம்.” என்று புன்னகையுடன் கூறுகிறார் அந்த நகரத்தார்.
காவிரிப்பூம்பட்டினத்துத் தன வணிகர்களான அவர்கள் திரைகடலோடியும் திரவியம் தேடுவோர் ஆவர். அவர்களுடைய கடல் கடந்த வணிகம் சுங்க வரி வாயிலாக சோழ நாட்டுக்கு அளவற்ற செல்வத்தைக் கொணர்கிறது. அதனால் அவர்களின் கடலாடும் வணிகத்திற்குச் சோழப் பேரரசும் பாதுகாப்புக் கொடுத்து வருகிறது. அந்த நன்றிக்காக தங்களுடைய ஆடம்பரமான, நீண்ட பயணம் போகக் கூடிய நாவாய்களை அரசுப் பணிக்கு அவ்வப்போது கொடுத்து உதவி வருகிறார்கள்.
அந்த நகரத்தாரைப் பார்த்தால் நிலவுமொழிக்குத் தனது தந்தை நினைவு வருகிறது.
“ஐயா, ஏன் கடற்கரையை ஆழப்படுத்தக் கூடாது? பெருவுடையார் கோவிலைக் கட்டிய சக்கரவர்த்திகளிடம் தாங்கள் வேண்டிக் கொள்ளலாமே?” என்ற கேள்விக்குப் புன்னகையே பதிலாகத் தருகிறார் நகரத்தார்.
அவனுடைய கருத்து எதிர்காலத்தில் அமுல் படுத்தப்பட்டு, பெரிய துறைமுகங்கள் எழுப்பப்படும் என்பதை அறிய இயலுமானால் அப்படி அவர் புன்னகைத்திருக்க மாட்டார். அரச குடும்பத்தினரை கரைக்கு அழைத்துச் செல்ல நாவாய்க்கருகில் படகுகள் நிறுத்தப்படுகின்றன.
* * *
அத்தியாயம் 13
தஞ்சை அரண்மனை
பரிதாபி, புரட்டாசி 30 - அக்டோபர் 15, 1012
பதுமை போல நின்றுவிடுகிறான் சிவாச்சாரி. அவனது காதுகளையே அவனால் நம்பமுடியாது போகிறது. மஞ்சத்தில் அமர்ந்திருக்கும் இராஜராஜர், அருகே ஆசனங்களில் அமர்ந்திருக்கும் சோழமாதேவி, குந்தவைப் பிராட்டியார், இராஜேந்திரன், திரிபுவனமகாதேவி, பஞ்சவன்மாதேவி, குந்தவி ஆகியோரின் முகங்களை மாறி மாறிப் பார்க்கிறான்.
“என்ன சிவாச்சாரியாரே, வாயடைத்து நின்று விட்டீர்! என்ன சொக்குப் பொடி போட்டு என் மருமகளை மயக்கினீர்? ‘இனி யாரையும் என் கண்கள் நோக்கா, எவருக்கும் என் இதயத்தில் இடமில்லை, என் வாழ்க்கைத் துணைவராக வல்லார் யாருமிலர்!” என்று சொல்லும் அளவுக்கு நீர் என்ன செய்தீர்? உம்மை நண்பராக வரித்த என் தமையனுக்கு நீர் செய்யும் நன்றிக் கடனா இது! உம்மை ஓலைநாயகமாக உயர்த்திய என் தந்தையாரின் பேத்திக்கே வலை வீசியிருக்கிறீரே!” என்று பொறிந்து தள்ளிய குந்தவிக்கு என்ன பதில் சொல்வது என்று சிவாச்சாரியனுக்குத் தோன்றாமல் போகிறது.
முப்பத்தி இரண்டு வயதான தன்மீது பத்தொன்பது வயதான அருள்மொழி நங்கைக்கு காதல் எப்படிப் பிறந்தது? அவளுடன் தான் நேருக்கு நேர் நேர் நின்று பேசியது கூட இல்லையே!” இராஜராஜருடன் தமிழ்த் திருப்பணி பற்றி உரையாடும் பொழுது பல தடவை ஆர்வத்துடன் கவனித்திருக்கிறாள். சில சமயம் ஏதாவது ஆலோசனையோ, அல்லது கேள்விகளோ கேட்பாள். அதற்குப் பதில் சொல்லும் பொழுது அரசிளங்குமரிக்கான மதிப்புடன்தான் அவளிடம் பேசியிருக்கிறானே தவிர, மற்றபடி அவளிடம் வேறு பேச்சே கிடையாது. அப்படியிருக்கையில் பதிமூன்று வயது அதிகமான, அதுவும் ஏற்கனவே திருமணம் ஆகிய தன்மீது அவளுக்கு இப்படி ஒரு...
அவனால் மேலே எதுவும் நினைக்கவும் இயலவில்லை, குந்தவியின் குற்றச்சாட்டுக்குப் பதில் எதுவும் சொல்ல இயலவில்லை. செயலிழந்து நிற்கிறான்.
“ம்... இப்படி வாய்மூடி மௌனியாக நின்றால் உமது குற்றத்தை நாங்கள் மறந்து விடுவோம் என்ற நினைப்பா, சிவாச்சாரியாரே? உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைத்து விட்டீரே!” பெண்புலியாகச் சீறுகிறாள் குந்தவி.
தலையைக் குனிந்து கொள்கிறான் சிவாச்சாரி.
“வேங்கை நாட்டு அரசியாரே! சக்கரவர்த்தி அவர்களே, என்னை நண்பராக வரித்த மன்னர் அவர்களே, பிராட்டியாரே, மகாராணியார்களே!...” என்று ஆரம்பிக்கும் சிவாச்சாரியனின் குரல் தழுதழுக்கிறது.
“... என் உயிரும், உடலும் இந்தச் சோழ நாட்டை ஆண்டுவரும் சக்கரவர்த்தி அவர்களுக்கும், கோப்பரகேசரியாருக்கும் சொந்தமானது. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லுவேன் வேங்கைநாட்டு ராணியாரே! எச்சமயத்திலும் நீங்கள் சொல்லிய எண்ணத்துடன் நான் அரசிளங்குமாரியாரைக் கண்ணுறவே இல்லை. இது பெருவுடையார் மீது ஆணை! என் ஆசானான கருவூரார் மீது ஆணை! பரம்பரை பரம்பரையாக நாங்கள் சோழ அரச வம்சத்தின் உப்பைத் தின்று வளர்ந்திருக்கிறோம். இந்த நாட்டுக்காகவும், அரசுக்காகவும் எங்கள் தோலைக்கூட மிதியடியாகச் செய்து போடுவோம். அப்படியிருக்கும் எங்களைப் பார்த்து உண்ட வீட்டுக்கு இரண்டகம்...” தொண்டை அடைத்துப் பேச்சு அடைக்கிறது அவனுக்கு. எச்சிலை விழுங்கி விட்டு மீண்டும் தொடர்கிறான்.
“எப்பொழுது இப்படிப்பட்ட பேச்சு எழுந்ததோ, அப்பொழுதே நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். என் முன்னோர்கள் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டேன். இனிமேலும் நான் சோழ அரசுக்கு ஓலை நாயகமாகவோ, கோப்பரகேசரியாருக்கு நண்பனாகவோ இருக்கும் தகுதியை இழந்து விட்டேன்.
“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்
“என்று செந்நாப்போதார்48 உரைத்ததற்கு ஏற்ப இனி நான் உயிருடன் இருக்கவும் அருகதை அற்றவன். சக்கரவர்த்திகள் எனக்களித்த இலச்சினைகளைத் தந்துவிட்டு, தில்லை சென்று, வடக்கிருந்து என் உயிரை நீத்து, என் பரம்பரைக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைத்துக் கொள்கிறேன்!” என்று சோழ இலச்சினைகளைக் களைய ஆரம்பிக்கிறான் சிவாச்சாரி
. இராஜராஜரின் குரல் அவனைத் தடுத்து நிறுத்துகிறது.
“போதும் குந்தவி, உனது குற்றச்சாட்டு! எமது ஓலைநாயகத்தை இப்படிச் சாட உனக்கு யாம் எப்பொழுது அனுமதி அளித்தோம்?” அவரது குரல் மெதுவாக, நிதானமாக இருந்தாலும் அப்படியே குந்தவியை உறைய வைக்கிறது. “சோழப் பேரரசின் ஓலைநாயகத்தை வேறு யாரேனும் அவமதிப்பாகப் பேசியிருந்தால் அவரது நாவை எமது வாளுக்கு இரையாக்கி இருப்போம்.”
சவுக்கடி போல விழுகின்றன அவரது சொற்கள். அதிர்ந்து போய்விடுகிறாள் குந்தவி. அவர் கண்களில் பறக்கும் தீப்பொறிகளைக் காணும் மனத்திண்மை இல்லாது தலையைக் குனிகிறாள்.
“நங்கையின் விருப்பத்தைச் சோழப் பேரரசின் முதுபெரும் தலைவியாரான எமது தமக்கையார், எமது வேண்டுதலின் படி சிவாச்சாரியாரிடம் இயம்பினார். அதற்கு சிவாச்சாரியார் பதிலளிக்கும் முன்னரே அவசரப்பட்டு அவரைச் சொல்லால் சாடுகிறாய். இல்லையில்லை! நீ அவரைச் சாடவில்லை, எமது மதிப்பீட்டைச் சாடியிருக்கிறாய். ஆராய்ந்து அறியாமல் ஒருவரை யாம் இச் சோணாட்டின் ஓலைநாயகமாக நியமித்திருக்கிறோம் என்று எம் மீது குற்றம் சாட்டியிருக்கிறாய்! மேலும் கீழைச் சாளுக்கிய ராணிக்கு சோணாட்டின் ஓலைநாயகத்தைச் சாட யாம் அதிகாரம் கொடுத்ததாக எமக்கு நினைவில்லை!”
இராஜராஜர் சிவாச்சாரி பக்கம் திரும்பி, “உமக்கு யாம் சக்கரவர்த்தியா, அல்லது எமது மகளா? யாமா உம்மிடம் இருக்கும் இலச்சினைகளையும், உமது உயிரையும் கேட்டோம்? எமக்குத் திரை செலுத்தும் நாட்டின் ஒரு பெண்ணின் குற்றச்சாட்டுக்கு முன், பெண் பிள்ளையாகக் குரல் தழுதழுப்பது சோணாட்டு ஓலைநாயகத்தின் முறைமையா?” என்று வினவுகிறார்.
கண்களில் தாரையாக நீர்ப் பெருக்கெடுக்கிறது குந்தவிக்கு.
...சற்று முன்பு குந்தவைப் பிராட்டியார் சிவாச்சாரியிடம், “சிவாச்சாரியாரே! நீர் சரியான ஆள்தான். சோழ அரசிளங்குமரி அருள்மொழி நங்கையின் மனதைக் கவர்ந்து விட்டீரே! அவள் பெருவுடையாரிடம்,
“உன் அடியார் தாள் பணிவோம்
ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்”
என்று வாக்குறுதி தினமும் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும், தனது பாட்டனாருக்கு வலது கையாகவும், தமிழ்த் திருப்பணி ஆலோசகராகவும், இப்பொழுது திருமந்திர ஓலைநாயகமாகவும் இருக்கும் சிவனடியாரான சிவாச்சாரியரைத் தன் மனதில் மணாளராக வரித்து விட்டதாகவும், இனி யாரையும் அவள் கண்கள் நோக்கா, எவருக்கும் அவள் இதயத்தில் இடமில்லை, அவள் வாழ்க்கைத் துணைவராக வல்லார் யாருமிலர் என்று சொல்லிவிட்டாள். என்ன செய்து அவள் மனதைக் கவர்ந்தீர்?” என்று சற்றுமுன் கேட்டதைத் தான் வேறு விதத்தில் பொருள் செய்து கொண்டு விட்டோமே, தனது அவசரத்தால் தன்னை அதிர்ந்து பேசாத தனது தந்தையாரை, சக்கரவர்த்தியாகத் தன்னை ஆணையிடும் குரலில் பேச வைத்துவிட்டோமே என்று குன்றிப் போகிறாள்...[தொடரும்]
-----------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு
-----------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு
48திருவள்ளுவருக்கு செந்நாப்போதார் என்ற அடைமொழியும் உண்டு.
No comments:
Post a Comment