Saturday, 9 August 2014

வைணவ ஆசார்ய வைபவம் 3 : பிரமதேவன் துதி

                                   


வைணவ ஆசார்ய வைபவம் -3 [தொடர்ச்சி]
                                வளவ துரையன் 

                                    பிரமதேவன் துதி


வெள்ளெருக்கஞ் சடைமுடியானின் வெற்பை எடுத்த தசமுக இராவணனின் உள்ளே இராகவனின் வாளி புகுந்து உயிர் போக்கியது. பிறகு வீடணனுக்கு முடிசூட்டப்பட்டது. தொடர்ந்தது சீதாபிராட்டியின் அக்னிப்பிரவேசம். நெருப்பின் கடவுளோ சீதையின் கற்பு எனும் வெந்தீயால் சுடப்பட்டுப் பொறுக்க இயலாதவனாய் இராமபிரான் முன் வந்தான். அவனுரை செவிமடுத்து பழிப்பிலள் என்று பிராட்டியை இராமன் ஏற்கிறார்.

அப்போது தேவர்கள் “இராமபிரானுக்கு உண்மை நிலைகளை அறிவிப்பீர்” என்று நான்முகனிடம் கூற நான்முகனும் இராமபிரானிடம் கூறத் தொடங்குகிறான்.

இராமபிரானே! உம்மைப் பழைய சூரிய குலத்தில் தோன்றிய மன்னர் என்றும் மனிதன் என்றும் எண்ணி விட வேண்டாம். நான்மறைகள் கூறும் உண்மையான தத்துவம் உன்னையன்றி வேறில்லை; இவ்வுலசகில் நிலைத்து நிற்கும் பொருளும் உன்னையன்றி வேறு இல்லை.

“நின்அலாது இல்லை நின்னின் வேறுஉனது இலை நெடியோய்”
என்று நான்முகன் துதிக்கிறான்.பெருமானையே வேதமாகவும் வேதத்தின் பயனாகவும் மங்கை மன்னன் போற்றுகிறார்.

“வேதத்தை, வேதத்தின் சுவைப்பயனை” (1069) என்பது அவர் அருளிச் செயலாகும்.

மேலும் திருப்புல்லாணியில் எழுந்தருளியுள்ள திருமாலைக் கூறுகையில்
“வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும்
ஆதியும் ஆனான்” என்று அவரே போற்றுவார் (1786)

“நெடியோய்” என்று நான்முகன் போற்றுவது பெரியாழ்வாரின்
“நெடுமையால் உலகேழும் அளந்தாய்
நின்மலர்; நெடியாய்” (436) என்ற வாக்கினை நினைவுபடுத்தி மகிழச் செய்கிறது.

வளவதுரையன் 
மேலும் நான்முகன் “இவ்வுலகில் மூலப்பிரகிருதி எனும் தத்துவமும் அதனால் உண்டான காரியங்களான தத்துவங்களும் எல்லாவற்றுக்கும் மேலான புருட தத்துவமும் ஆன எல்லாப் பொருள்களும் நீயே.’ மேலும் இவை அனைத்தும் உம் பிரம்மாண்டமான மாயையால் உண்டானவையாகும்” என்று பெருமானின் மாயை பற்றிப் போற்றுகிறான்.

அவனே மாயை! அவனால் உண்டாக்கப்படுவதும் மாயை! அதனால்தான் ‘மாயனை, வடமதுரை மைந்தனை” என்று நாச்சியாரும்

“மாயப்பிரான் என் வல்வினை மாய்ந்தற
நேயத்தினால் நெஞ்சம் நாடுகுடி கொண்டான்” (2912)
என்று நம்மாழ்வாரும் அருளிச் செய்துள்ளனர்.

அவருடைய மாயையை யார் அறிய முடியும்! அந்த மாயவனுக்கே ஆளானவர்தாம் அறிய முடியும் என்று நம்மாழ்வார் கூறுகிறார்.
“மாயம் அறிபவர் மாயவர்க்கு ஆளன்றி யாவரோ” (2796)
என்பது அவர் அருள்வாக்கு.

மேலும் அழகரது வடிவில் ஈடுபட்ட நம்மாழ்வார் “முடிச்சோதி” பாசுரத்தில்

பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இதுவியப்பே! (2313)
என்று அருளிச் செய்வதையே தன்துதியாக நான்முகனும்
“எனக்கும் எண்வகை ஒருவர்க்கும் இமையவர்க்கு இறைவன்
தனக்கும் பல்பெருமுனிவர்க்கும் உயிருடன் தழீஇய
அனைத்தினுக்கும் நீயே பரம்’ என்று போற்றுகிறான்.

‘நான்முகனாகிய எனக்கும் எட்டு வகை வடிவத்தை உடைய சிவனுக்கும், தேவரின் தேவனான இந்திரனுக்கும் முனிவர்க்கும் உயிருள்ள எல்லாப் பொருள்களுக்கும் நீயே பரம் பொருள்” என்று இராமபிரானைத் திருமாலாகவே நான்முகன் வழிபடுகிறான்.

உலகில் தோன்றிய உயிர்கள் தாய் தந்தை என்ற பற்றாகிய மாயையில் மூழ்கி மனம் வருந்துகின்றன. அந்த அறியாமை நீங்கி ஒழிந்த சில உயிர்கள் உன்னைத் தந்தை என்று உணர்வதால் முத்தி அடையும் என்று நான்முகன் “தன்னைத்தான் அறியாமையின் சலிப்ப அச்சலம் தீர்ந்து உன்னைத் தாதை என்று உணர்குவ முத்தி வித்து ஒழிந்த” என்ற அடிகளால் போற்றுவது

“எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன்” எனும் நம்மாழ்வாரின்
பாசுர அடிகளை நினைவூட்டுகின்றன.

பெருமானே! பிரமாணங்களால் ஆம் என்றும் அன்று என்றும் கூறுவது உமக்குப் பொருந்தாது. உபநிடதமானது தன் ஞானக் கண்ணால் நீ உள்ளதை உறுதியாய்ச் சொல்லும் உம்மை உணராதபடி பெரிய தடையாய் இருப்பவை ஐம்பொறிகளே! அவற்றை வெல்லாதவர் இறத்தலும் திரும்பப் பிறத்தலுமாகிய துன்பங்களில் உழல்வார்கள். அத் துன்பங்களை நீக்க உன் திருவடியே அன்றி வேறு அடைக்கலம் இல்லை எனும் பொருளில்

“மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்குன்
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை அன்னவை தவிர்ப்பான்”
என்று நான்முகன் பணிந்து துதிப்பது

“சரணம் ஆகும் தனதுதான் அடைந்தார்க்கு எல்லாம்
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்” (3067)

என்ற பாசுர அடிகளால் திருக்கண்ணபுரம் பெருமாளை நம்மாழ்வார் அருளிச் செய்வதை நினைவூட்டுகிறது

“பெருமானே! நீ ஒளிந்து நின்றாலும் மறைகளின் மொழியினால் நான் உன்னை உணர்கிறேன். நீ என் வடிவம் கொண்டு இந்த உலகைப் படைக்கிறாய். நின் உருவத்தால் உலகங்களைக் காக்கிறாய்; சிவன் உருவம் கொண்டு அவற்றை அழிக்கிறாய்!” என்று நான்முகன் போற்றுவது திருமாலே பரம்பொருள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

“என் உருக்கொடு இவ் உலகினை ஈனுதி இடையே
உன் உருக்கொடு புகுந்துநின்று ஓம்புதி உமைக்கோன்
தன் உருக்கொடு துடைத்தி”

எனும் அடிகள் நான்முகனின் வாக்காக கம்ப நாட்டாழ்வாரின் பக்திப் பெருக்கைப் பறைசாற்றுகின்றன.

இங்ஙனமாக தாமரை உந்தியில் தோன்றிய பிரமதேவன் இராமபிரானிடம் திருமாலின் பெருமைகளை ஏற்றிப் புகழ்ந்து துதிப்பது மிகவும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

No comments:

Post a Comment