ஊடுதல் காமத்திற்கின்பம்
ஜி.ஜே.தமிழ்ச்செல்வி |
கோடை மழையின் தாக்கத்தால் மிதமான குளிரில், மனமும் குளிர்ந்திருந்தது, தொடர்ந்து பல நாட்களாக அவனோடு உண்டான ஊடலில் ஏனோ இன்று அவன் அருகாமைக்காக மனம் ஏங்கி தவித்தது. இன்று நிச்சயம் அவனோடு பேசி சமாதானம் ஆகிவிடவேண்டும் என்ற தீர்மானம் வந்தபோதுதான் அவன் வீட்டிற்குள் நுழைந்தான்,
என்னவன், என் உயிரானவன், என் ஆருயிர் த் துணைவன், இன்னமும் கோபம் தீரவில்லை போலும், மணி ஒன்பதை தாண்டியிருந்தது. மழையும் மின்னலுமாய் இரவு புதுக் கோலம் பூண்டிருந்தது.
"ஏன் லேட்டு?" என்று நாவின் நுனிவரை வந்த கேள்வியை மனதிற்குள்ளாகவே முடக்கிவிட்டேன். நான் ஏதோ கேட்டு மீண்டும் ஒர் உள்நாட்டுப் போர் போல் உள் வீட்டு போரை தாங்கும் சக்தி எனக்கு இல்லை, அவன் கொஞ்சம் குரலை உயர்த்தினாலும் மனம் துறவு பூண்டுவிடுகிறது.
உடையை மாற்றி படுக்கையில் சரிந்தான்.
சிறிது தயக்கத்திற்கு பிறகு நானும் அவன் அருகில் சென்று படுத்தேன். அதுவரையில் விளையாடிக்கொண்டிருந்த எங்கள் நான்கு வயது மகன் பிரியஹாசன் எங்கள் இருவருக்கும் நடுவில் வந்து படுத்தான்.
எங்கள் இருவர் மேலும் கால்களை பிரித்து போட்டுக்கொண்டு, உறக்கத்தின் தாக்கத்தால் கண்களை கசக்கியபடி" பால் வேணும் மம்மி "என்று மழலை பேசினான்.
நான் எழுவதற்கு முன்பாகவே என்னவன் எழுந்து குழந்தைக்கு பாலும், மறுகையில் அவனுக்கு காபியுமாய் வந்து நின்றான். எனக்கு மனம் வலித்தது. நான் தான் பிடிக்கவில்லை நான் போடும் காபியுமா பிடிக்கவில்லை?
எழுந்த எண்ணத்தில் கண்களின் விளிம்பில் கண்ணீர் துளிர்த்தது.
குழந்தை என்னை அணைத்தபடி உறங்கியிருந்தான். அவனை நோக்கினேன் சீரான மூச்சு அவன் உறக்குவதாகத்தான் கட்டியம் கூறியது.
எப்படி தான் உறக்கம் வருகிறதோ இந்த ஆண்களுக்கு?, என் உறக்கம் தொலைந்து போனது. உணவும் கூட கசந்து போனது. அவனோ என்றால் யாரை மிஸ் பண்ணினாலும் சாப்பாட்டை மிஸ் பண்ணமாட்டேன் என்கிறான். யாருக்காவது உதவி செய்தால் உடனே அவனை காதலித்து விடுவார்களாம், எதற்காக அப்படி சொன்னானோ தெரியவில்லை,
அவனோடு பேசும் எந்த பெண்களை பார்த்தாலும் இவளும் இவனை காதலித்திருப்பாளோ? என்ற வினா நெஞ்சத்தை நெருஞ்சியாய் நெருடுகிறது.
கோபம் வந்தது.
பெரிய ஆண் அழகன்,
அவன் முகத்தை பார்த்தேன், ஆம் என்றே தோன்றியது. என் விழிகள் அவன் ஆண்மையை நேசித்தன . ஒருவேளை நிஜமாகவே தேவதை எவளாவது கிடைத்துவிட்டதால் என்னை புறக்கணிக்கிறானோ என்று தோன்றியது. இந்த எண்ணம் வந்தவுடன் எழுந்து கண்ணாடியில் என் முகத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை முளையிலேயே நசுக்கி வைத்தேன்.
முன்பு ஒரு நாள் சொன்னானே பணியின் நிமித்தம் யார்வீட்டிலோ தங்கப் போய் அந்த வீட்டு பெண் இவனை நேசித்ததாக, அந்த பெண்ணே மீண்டும் தொடர்புகொண்டிருப்பாளோ, அதனால் தான் இந்த பாராமுகமோ?
ஒரு புறம் அழுகை வந்தாலும் எப்படியோ அவன் மகிழ்வாய் இருந்தால் போதும் என்ற எண்ணத்தோடு சண்டை போட்டேன். அது எப்படி இருவரும் ஒன்றாக வாழவென்று உடன் படிக்கை செய்துவிட்டு அவன் மட்டும் மகிழ்வாய் இருப்பது, நானும் அவனும் மகிழ்வாய் இருக்க வேண்டும். ஒரு முறை தான் வாழ்க்கை மீண்டும் பிறப்போம் என்ற நிச்சயமில்லை…என்ற மனதோடு, அது எப்படியாம் நானும் தான் மறுபடி பிறக்க போவதில்லை அதற்காக, எதுவாக இருந்தாலும் அது என்னோடு தான் சந்தோஷம் சோகம், நட்பு, காதல் அனைத்தும் எனக்கே எனக்கு தான். ம்க்கும் மனம் முனகலோடு முடங்கிக்கொண்டது.
இந்த பிரிவு நிரந்தரமானால் வாழ்க்கை கசந்து தான் போகும், முகத்தில் தெரியும் சோகம் பெரும் அவஸ்ததைக்குள்ளாக்கும். சிரிப்பு மறந்து போகும், லட்சியங்கள் மறந்து போகும். சிந்தனை ஒருவாறு எதிர்மறையாய் செல்ல, மெல்ல வெளியே வந்து மழையை ரசிக்க முயன்றேன். உள்ளிருக்கும் வெம்மையை தூண்டியதே தவிர்த்து இதயத்தின் வெம்மையை தணிக்க மழைச்சாரலினாலும் கூட இயலவில்லை.
விழிகள் மீண்டும் ஊற்றெடுக்க தயாரானது, உதடுகள் பிதுங்கி விழிகளுக்கு துணைச்சென்றது. அரவமற்று அவன் வந்தான், பின்புறமாய் நின்று என்னை அணைத்தவன், என் கழுத்தில் முத்தமிட, நான் துவண்டுபோனேன்,
முன்புறம் சரியப் போனவளை தாங்கி சுவர்ப் புறமாய் சாய்த்து நிறுத்தினான்.
“ஏய் லூசு பொண்டாட்டி எதுக்காம் இந்த அழுகை?”,
நான் அவன் பார்வையை சந்திக்க முடியாதவளாய், அவன் மார்பில் முகத்தை புதைத்துக்கொண்டேன்.
"நான் சொல்லட்டுமா?"
,அவன் என் அனுமதிக்காக காத்திருக்கவில்லை.
" அன்னிக்கி சஹானா வீட்டுக்கு வந்தாளே அது தான உன் பிரச்சினை, ஒரு நாளைக்கு ஆயிரம் பொண்ணுங்கள பார்க்க வேண்டியிருக்கும் பழக வேண்டியிருக்கும் அவங்ககிட்ட எல்லாம் மனசு லயிச்சு போய் உடனே முத்தம் குடுன்னு கேட்பாங்களா என்ன? "
நான் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தேன். உன்னிடம் கேட்பதெல்லாம் இல்லை. நானே எடுத்துக்கொள்வேன். அவன் என்னை நோக்கி குனிந்தான். அவன் சுவாசக்காற்று என் நாசியை தீண்டியது.
நீ என் மனைவி, என்னுடையவள்,
அவன் இதழ்கள் என் இதழோடு ஒற்றி என்னில் எதிர்பார்ப்பை தூண்டிப் பிரிந்தான்.
இதழ்கள் இடம் மாறி நெற்றியில் பதிந்து விடை பெற்றது. இந்த நொடி இப்படியே நீண்டுவிட வேண்டும் என்று மனம் ஆசிக்க…"எப்பவும் என்னை விட்டுக்கொடுக்கவேண்டும் என்றொரு எண்ணம் வேண்டாம் பெண்ணே!" என்று காதில் கிசுகிசுத்தான்.
வாழ்தலும் சாதலும் இருவரையும் இணைத்தே செல்ல வேண்டுகிறேன் என்றவனின் உள்ள காதலை புரிந்தவளாய்… என் ஊடல் விடைபெற, அவன் பரந்த நெஞ்சத்தில் பாதுகாப்பாய் ஒட்டிக்கொண்டேன.ஊடுதல் காமத்திற்கின்பம்
** ** **
No comments:
Post a Comment