Tuesday 24 June 2014

த. இ. மெ ...எடுபிடி எப்படி இந்தியில் பேச முடியும்?

                            தமிழ் இனி மெல்ல  

                                                அரிசோனா மகாதேவன்   
-சென்ற பதிவின் முடிவில் 
இந்த மையத்திலிருக்கும் ஒரு மேலதிகாரியிடம்தான் ஸஹஜாவும், ஸாத்விக்கும் தாங்கள் பார்த்த கோடுகளைப் பற்றித் தெரிவிக்கத் திட்டம் தீட்டி விபரம் அனுப்பியிருக்கின்றனர். பொதுவாக “முக்கியம்” என்று குறியிட்டு அனுப்பியிருந்தால் அவருக்கு உடனே விஷயம் போயிருக்கும். ஆனால் “பார்வைக்கு மட்டுமே” என்று குறியிட்டு அனுப்பியதால் அவரே வந்து நேரில் பார்க்கும்வரை அவரது அலுவலகத்தில் அந்த கணிணி அஞ்சல் காத்துக் கிடக்கிறது.                                               
[தொடர்கிறது ]

                            ஹோட்டல் சாம்ராட் ராஜ்ராஜ், தஞ்ஜூ
                           பிரஜோற்பத்தி, ஆனி 24 - ஜூலை 10, 2411

மூன்று மாதங்கள் சீனாவுக்குச் சென்று திட்டம் முடியும்வரை பொறுப்பேற்க வேண்டும் என்று லீ தெரிவித்தது. ஷிஃபாலியின் மகிழ்ச்சியை காற்றிறங்கிய பலூனாக ஆக்கி விடுகிறது. தன் மகள் நிமிஷாவைச் சீனாவுக்கு அழைத்துச் செல்லவோ, ஷெனாயில் தனியாகவோ விட்டுச் செல்லவும் முடியாது. இப்படி இரண்டும் கெட்டான் நிலைமைக்குத் தன்னை லீ தள்ளுகிறாரே என்று பரிதவிக்கிறாள் அவள். ஆனால் இப்படிப்பட்ட உயர்பதவி வாய்ப்பு மீண்டும் கிடைக்கவே கிடைக்காது என்றும் அவனுக்குப் புரிகிறது. எனவே தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் அவனுக்கு கவனமே செல்லவில்லை.

“ஷிப்ஸ், நான் கேட்டதற்கு என்ன பதிலே சொல்லவில்லை? உங்களுக்கு இதில் சம்மதம்தானே? என்ன யோசனை?” என்று கேட்டார் லீ. தன்னை உடனேயே கட்டுக்குக் கொண்டுவந்தாள் ஷிஃபாலி.

“எப்பொழுது நான் சீனாவுக்குச் செல்லவேண்டும்?” அவள் கேட்டதன் பொருள் எத்தனை நாள் கழித்துச் செல்ல வேண்டும் என்பதுதான்.

ஆனால் அதை உடனேயே சீனாவுக்குச் செல்ல விரும்புகிறாள் அவள் என்று பொருள் செய்து கொண்ட லீ, “இப்படித்தான் இருக்கணும், ஷிப்ஸ்! நான் என்ன நாளையே என்னுடன் கிளம்புண்ணா சொல்வேன்? நீ இங்கு இன்னும் ஒரு வாரம் இருந்து உனக்கு உதவியாளர்கள் யார் யார்னு முடிவு செய்து கொண்டு சீனா கிளம்பி வா. மத்ராவுக்கும் ஒரு நாள் போய் உன் உதவியாளர்களை நேர்முகத் தேர்வு செய்வது நல்லது என்றுதான் சிபாரிசு செய்வேன். சீனா வந்தவுடன் முதலில் ஷாங்ஹையில் ஒரு வாரம் கலந்தாலோசனை. இரண்டு நாள் பைஜிங்கில் மேலிடத்திற்கு விளக்கவுரைக் கூட்டம். அதன்பின் தொழிற்சாலைக்குச் சென்று திட்டத்தை முடிக்கவேண்டியதுதான் பாக்கி.” என்று நிறைவுடன் அடுக்கடுக்காக மேலே என்ன செய்யவேண்டும் என்று அன்பு உத்தரவுகளையும் போட்டுக்கொண்டு, அவள் முதுகில் தட்டியவாறு பதில் சொல்கிறார்.

ஷிஃபாலிக்கு மிகவும் தர்மசங்கடமாக இருக்கிறது. தன் மகளைப் பற்றி ஒரு முடிவு எடுக்காமல் எப்படி சீனா செல்வது? அவரிடம் குடும்ப விவகாரங்களைப் பற்றி பேசினால் நன்றாகவா இருக்கும்? எனக்கு ஒரு வாரம் விடுப்பு கொடுங்கள், சில முக்கியமான வேலைகளைச் செய்து முடித்து விட்டு வருகிறேன் என்றா சொல்லமுடியும்?

உடனே ஷிஃபாலி ஒரு முடிவுக்கு வருகிறாள். ஆகவே லீயிடம் கொஞ்ச நேரத்திற்குத் தனக்கு தனி வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு தன் குழுவிடமிருந்து மெல்ல விலகிச் சென்று கொஞ்சம் கூட்டமில்லாத இடத்திற்குச் செல்கிறாள்.

தன் மகளிடம் இதைப் பற்றி பேசித் தன் முடிவை அவளிடம் சொல்லலாம் என்று தீர்மானிக்கிறாள். மூக்குக்கண்ணாடி மாதிரி இருக்கும் ஹோலோ புரொஜெக்டரை அணிந்து கொள்கிறாள். அக்கருவியின் காதுப் பகுதியில் உள்ள ஒரு பொத்தானைத் தட்டுகிறாள். அவள் கண்முன் ஷெனாயில் அவள் வீட்டின் டிராயிங் ரூம் தெரிகிறது. அங்கு மணி அடிப்பது அவள் காதுகளில் விழுகிறது. சில விநாடிகளுக்குப் பிறகு நிமிஷா அங்கு வந்து அவள் அணிந்து கொண்டிருப்பது மாதிரி ஒரு ஹோலோ புரொஜெக்டரை அணிந்து
கொண்டு நிற்பது தெரிகிறது.

“என்ன மம்மி, என்ன ஆச்சு? ரெண்டு நாள்னு சொல்லிட்டு ஒரு வாரம் லேட் ஆக்கிட்டாயே? என்ன, பழையபடி இன்னும் லேட்டாக்கப் போறியா?” என்று கேட்கிறாள் நிமிஷா.

அவளை விட்டுவிட்டு சீனாவுக்கு மூன்று மாதம் செல்ல வேண்டும் என்று எப்படிச் சொல்வது என்று ஒரு விநாடி தயங்கிய ஷிஃபாலி, “நிம்ஸ் கண்ணு. மம்மிக்கு ஒரு பெரிய பதவி உயர்வு கிடைச்சுருக்கு. உனக்கு நான் அதுக்காக ஒரு கிஃப்ட் கொடுக்கணும். என்ன வேணும் சொல்லு.” என்று கேட்கிறாள்.
“மம்மி. எனக்கு ரொம்ப சந்தோஷம். கிஃப்டுன்னா..” 

சிறிது நேரம் யோசித்தவள், “இப்ப நான் ஹோலோ ப்ரொஜக்ஷன்ஸ்லதான் என் ஃப்ரன்ட்ஸோட டான்ஸ் ஆடறேன். அவங்ககூட நேரிலே ஆடினா, ரொம்ப சந்தோஷமா இருக்கும். உன்னால ஏற்பாடு செய்யமுடிஞ்சா அதுதான் எனக்கு ரொம்பப் பெரிய கிஃப்ட்!” என்று பதில் சொல்கிறாள்.

“கட்டாயம் ஏற்பாடு செய்யறேன். எனக்கு ஒரு ஹெல்ப் நீ செய்யணும். செய்யறியா?” மகளை பரிசு என்ற தூண்டில் போட்டுப் பிடிக்க முயல்கிறாள் ஷிஃபாலி.

“கண்டிஷன் போடாம எதுவும் நீ செய்யமாட்டியே! என்ன ஹெல்ப் மம்மி  வேணும் உனக்கு? என்னால செய்ய முடிஞ்சதைச் சொல்லு. க்ளாஸ்லேயே ஃபர்ஸ்ட்டா வரணும். அப்படி இப்படின்னு செய்ய முடியாததைக் கேக்காதே!” என்று செல்லமாகக் கோபிக்கிறாள் நிமிஷா.

“அப்படியெல்லாம் கேட்பேனா நிம்ஸ்? செய்ய முடியறதைத்தான் கேட்கப் போறேன். தஞ்ஜூவுலே நான் இப்ப இருக்கற இடத்துக்கு வா. நீ கேட்ட கிஃப்ட்டைக் கொடுக்கிறேன். மத்ராவுலே உன் ஃப்ரன்ட்ஸ் எங்கே இருக்காங்கன்னு சொல்லு. இங்கே வரவழைக்கிறேன். நீ வந்து சேர்றதுக்கும் அவங்க இங்கே வர்றதுக்கும் சரியா இருக்கும். அப்படியே தஞ்ஜூல இருக்கற ப்ரன்ட்ஸ்களையும் கூப்பிட்டு பெரிசா விருந்து கொடுத்தாப் போச்சு.” தூண்டிலைப் பெரிதாகப் போ ட்டுத் தன் மகள் கவ்வுவதற்காக முயற்சி செய்கிறாள் ஷிஃபாலி.

“மம்மீ,  மம்மீ.. நீ இன்னும் என்ன வேணும்னு சொல்லலே. ரொம்பப் பெரிசா,  என்னால செய்யமுடியாத ஹெல்ப்பைத்தான் கேக்கப் போறே! அதுனாலேதான் இப்படி நான் கனவுல கூட நம்பமுடியாத கிஃப்டைத் தரேன்னு சொல்றே! என்னாலே ஸஸ்பென்ஸைத் தாங்க முடியலே! நான் கேட்டதைச் செய்யாட்டாலும் பரவாயில்லே. என்ன வேணும்னு சொல்லு!” நிமிஷாவின் குரலில் இருந்த பரபரப்பு மட்டுமல்ல, அவள் முகத்தில் இருந்த ஆர்வமும் ஷிஃபாலிக்கு நன்றாகவே தெரிகிறது.

“சொல்றேன் நிம்ஸ் கண்ணு, ” என்று இழுத்தவாறே ஆரம்பிக்கிறாள் ஷிஃபாலி. “மம்மிக்கு பதவி உயர்வு கிடைச்சதோட மட்டுமில்ல,  நிறைய பொறுப்பும் கூடவே வந்துருக்கு. எங்க முக்கிய மானேஜர் என்னை உடனடியா சீனாவுக்கு புறப்பட்டு வான்னு சொல்றார்...” என்று தயங்கியவாறு இழுத்தவளை இடைமறித்த நிமிஷா, ”கண்டிஷன் இப்பதான் வர்ரது மம்மி. எத்தனை நாள் நீ சீனா போகணும்? உடனடியா சீனா போகணும்னா எப்ப நீ சீனாவுக்குப் புறப்படணும்? எனக்கு இவ்வளவு பெரிய விருந்தை எப்ப கொடுக்கப் போறே? அதுவும் வெறும் ப்ராமிஸ்தானா? நீ சீனாவுக்கு என்னைக் கூட்டிப் போவியா? இல்லை நீ மட்டும் தனியாப் போனா நான் ஷெனாய்லே எப்படித் தனியா இருப்பேன்?” என்று பொரிந்து தள்ள ஆரம்பிக்கிறாள்.

அவள் குரலில் இருந்த ஆர்வம் மாறி, ஏமாற்றமும் கோபமும் வருவது ஷிஃபாலிக்கு நன்றாகவே தெரிகிறது.

“நிம்ஸ் கண்ணு. கோவிச்சுக்காதேம்மா. எனக்கு மட்டும் உன்னைத் தனியா விட்டுட்டு சந்தோஷமாப் போக முடியுமா? இது மாதிரி பதவி உயர்வு வரவே வராதும்மா. லைஃப்ல இந்த மாதிரி வாய்ப்பு அம்மாவுக்கு கிடைக்கவே கிடைக்காதும்மா. கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சுக்கோம்மா கண்ணு..” என்று குழைகிறாள் ஷிஃபாலி.

“மம்மி. நான் கேட்ட கேள்விகள் ஒண்ணுக்குமே பதில் சொல்லாம அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு சொன்ன - நான் உன்னை விட்டுட்டு சீனா போக முடிவு செஞ்சுட்டேன், அட்ஜஸ்ட் பண்ணிக்கோ அப்படீன்னுதானே அர்த்தம்? முடிவு பண்ணிட்டே, சரி. நான் தனியா இருக்க வேண்டியதுதான், வேற வழியில்லை. எனக்குத் துணையா காம்ஸ் இருப்பான்னுதான் நினைக்கிறேன். இல்லை, வேற யாரையும் ஏற்பாடு பண்ணி இருக்கியா? எப்ப சீனா போப்போறேன்னு சொல்லறியா?” நிமிஷா எரிச்சலுடன் கொடுத்த பதில் அவள் கன்னத்தில் அறைந்தது போலத்தான் இருக்கிறது.

“ஸாரிம்மா நிம்ஸ் என்னை அப்படி கட்டாயப் படுத்திட்டாங்க இங்கே. என்னம்மா செய்யறது? இன்னும் ஒரு வாரத்திலே நான் சீனா போகணும். மூணு மாசம் அங்கே இருக்க வேண்டி வரும்மா, காம்ஸைத்தான் உனக்குத் துணையா இருக்க வைக்கணும். வேணும்னா அவளோட காப்பாளி கிட்டச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டியதுதான்!” மகளைச் சமாதானப் படுத்த முயல்கிறாள் ஷிஃபாலி.

“எனக்கு நல்லாத் தெரியும் மம்மி. எங்கே போகணும்னாலும் உன் வழி, இல்லைனா எந்த வழியுமே இல்லேதானே உன்னைப் பொறுத்தவரைக்கும்! அதுதான் என் அப்பா யாருன்னுகூடச் சொல்ல மாட்டேங்கறே! சொன்னா ஒண்ணாச் சேந்து இருக்கணும்னு நான் பிடிவாதம் பிடிப்பேன்னுதானே! “சரி,  நீ சீனா போகறதுக்கு முன்னாலே என் டான்ஸ் பார்ட்டியையாவது அரேன்ஜ் பண்ணு. நான் காம்ஸ் கிட்டக் கெஞ்சிக் கூத்தாடி எனக்குத் துணையா இருக்க கேட்டுக்கறேன். நீ ஒண்ணும் காப்பாளி,  காப்பாளினு சொல்லி அவளைப் பயமுறுத்த வேணாம். அவள் தம்பி இங்கே நம்ம ஃப்ளாட்லே இருக்கட்டும்னு சொன்னா அவ சரின்னு சொல்லிடுவா. அவளையும் அவ தம்பியையும் தஞ்ஜுவுக்கு கூட்டிட்டு வரேன். எனக்கு விருந்து நடக்கறபோது ஹெல்ப்பா இருக்கும்.” ஷிஃபாலியின் பிரச்னைகளை அவளே தீர்த்து வைத்தாற்போல பதில் சொல்கிறாள் நிமிஷா.

அதே நேரத்தில் அவள் தன் தந்தையைப் பற்றி பேசியது ஷிஃபாலியின் இதயத்தைப் பிழிகிற மாதிரி இருக்கிறது. திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழும் அளவுக்குப் பணம் இருந்தும், தன் வேலைக்கு, தொழில் முன்னேற்றத்திற்கு இடையூறு வரக்கூடாது என்று - தான் உண்டாகியிருப்பதைக்கூட நிமிஷாவின் தந்தையான தன் துணைவனிடம் சொல்லாமல் - வேறு வேலை பார்த்துக் கொண்டு - தான் எங்கு போகிறோம் என்று கூடத் தெரிவிக்காமல் - அவனுக்குத் தெரிவிக்காமலே பிரிந்து வந்த்தை நினைவு கூர்கிறாள்.

தப்பித் தவறிக்கூட தந்தைப் பாசம் தன் மாஜி துணைவனையும், தன்னையும் இல்லற வாழ்வில் பிணைத்து, தன் தொழில் முன்னேற்றத்திற்கு இடையூறு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக - தன் மகள் எத்தனையோ முறை கேட்டும் அவள் தந்தை யார் என்பதே அவளுக்குத் தெரியாமல் வளர்த்து வந்திருப்பதையும் நினைத்துப் பார்க்கிறாள்.

அவனுடைய இந்தப் பிடிவாதத்தைப் பற்றி இதுவரை இப்படி அவமரியாதையாகப் பேசியதே இல்லை நிமிஷா. தான் சீனா செல்வது என்று தீர்மானித்த முடிவு நிமிஷாவை எப்படிப் பாதித்திருக்கிறது என்று சிந்தித்துப் பார்க்கிறாள். எப்படியும் நிமிஷா சில ஆண்டுகளில் தன்னை விட்டுப் பிரிந்து அவள் வழியைப் பார்த்துக் கொண்டு சென்று விடுவாள். எனவே,  இந்த சில ஆண்டுகளுக்காகத் தன் முன்னேற்றத்தை விட்டுக் கொடுப்பதில் அர்த்தமேயில்லை என்ற முடிவுக்கு வருகிறாள். தன் முகத்தில் ஓடும் உணர்ச்சிகளை நிமிஷா பார்க்கமுடியாமல் இருப்பதும் நல்லதுக்குத்தான் என்று பெருமூச்சு விடுகிறாள்.

“ஸாரிம்மா நிம்ஸ். நீங்க மூணு பேரும் வர்றதுக்கு டிரெய்ன் டிக்கெட்ஸ் அனுப்பறேன். இங்கே நம்ம ரெண்டு நாள் ரொம்ப ஜாலியா இருக்கலாம்.” பிரச்சினை ஒரு வழியாக இவ்வளவு சுலபமாகத் தீர்ந்ததில் அவளுக்கு இரட்டை மகிழ்ச்சி. தனக்கும் நிமிஷாவுக்கும் இருக்கும் இணைப்பைத் துண்டித்துவிட்டுத் திரும்புகிறாள் ஷிஃபாலி.

தன்னையே உற்று கவனித்துக் கொண்டிருக்கும் அந்த இளைஞனைத் திரும்பிப் பார்க்கிறாள். அவனுக்கு வயது இருபத்திரண்டு அல்லது இருபத்திமூன்று இருக்கலாம். ஐந்தடி ஒன்பது அங்குலம் உயரம்,  அதற்கேற்ற பருமன். சுருள் சுருளான தலைமயிர், அவனது உடைகளைப் பார்த்தால் “எடுபிடி” என்று தோன்றுகிறது. ஆனால் எல்லா எடுபிடிகளும் அணிந்திருக்கும் மொழிமாற்றக் கருவி அவன் காதில் இல்லை.

ஷிஃபாலியைப் பார்த்துச் சிரித்து, “ப்ரணாம் ஸாஹிபா (வணக்கம் அம்மா)” என்று இந்தியில் பேசுகிறாள் அந்த இளைஞன் - ஈஸ்வரன்.

எடுபிடி எப்படி இந்தியில் பேச முடியும்? ஒருவேளை மொழிமாற்றக் கருவி எங்காவது மறைந்திருக்குமோ என்ற சந்தேகத்துடன் அவனை நோக்கி வினவுகிறாள் ஷிஃபாலி.

“உனக்கு இந்தி தெரியுமா?” அவள் குரலில் வியப்பு ஒலிக்கிறது.

“எனக்கு இந்தி தெரியும் அம்மா. அதனால்தான் நான் மொழிமாற்றக் கருவி அணியா விட்டாலும் நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது.” என்று புன்னகைக்கிறான்.

“நீங்கள் உங்கள் மகளுடன் பேசியதைக் கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டு விட்டது. ஏனென்றால் செய்யும் இந்த வேலையை விட்டு எங்கேயும் நான் செல்லக் கூடாது. எனவே உங்கள் அந்தரங்கப்  பேச்சைக் கேட்கவேண்டி நேர்ந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் மகளுடன் இங்கு பொழுதை நல்லபடி கழிக்க எனது வாழ்த்துக்கள். உங்கள் சீனப் பயணம் இனிதாக இருக்கட்டும்.’
[தொடரும்]

1 comment:

  1. ஒரு எழுத்துப் பிழை இருக்கிறது. "அவனுடைய இந்தப் பிடிவாதத்தைப் பற்றி இதுவரை இப்படி அவமரியாதையாகப் பேசியதே இல்லை நிமிஷா." "அவளுடைய" என்று இருக்கவேண்டும்.
    நன்றி

    ReplyDelete