Monday 23 June 2014

தேனீக்களிடம் கடி வாங்காமல், தேன் எடு

ஜோசஃபின்

                                                 பழுப்புப் புரட்சி 

                                தேன்களில் மொத்தம் 30 வகை தேன் உள்ளது 

மதுரை கரைசநேந்தல் பகுதியில், தேன் வளர்ப்புத் துறையில், தான் சாதித்துக் கொண்டிருப்பதன் மூலம் 7 மாநில அவார்டுகள், 3 தேசிய அவார்டுகளை பெற்றுள்ள  திருமதி.ஜோசஃபின் கூறுகிறார் 


எனது பெயர் ஜோசஃபின், மதுரை விவசாய பல்கலைக்கழகத்தில் பயிற்சி எடுத்தேன். 2006 இல், தேன் வளர்ப்பை ஆரம்பித்தேன். முதன் முதல் தேன் பெட்டிகளில் 8கிலோ தேன் எடுத்ததும், அந்த செய்தியை ஒரு நாளிதழில் வெளியிட்டதும், எனக்கு மிகப் பெரிய ஊக்கத்தைக் கொடுத்து, இந்த துறையில் நிறைய சாதனை செய்யவைத்தது. இன்னும் நிறைய பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். மார்த்தாண்டம், பூனே, பஞ்சாப் போன்ற பல இடங்களுக்கு சென்று,  இந்த தொழிலின் பல நுணு க்கங்களைக் கற்றுக் கொண்டேன்.



முதலில் நான் மட்டும் தான் செய்தேன். ரொம்பக் கடினமாக இருந்தது. தேன் எடுக்கும்போது, தேன் பூச்சிகளிடம் பல கொட்டுகளை வாங்கியுள்ளேன். தேனீக்களிடம் கடி வாங்காமல், தேன்களை எடுப்பது எப்படி என்று தெரிந்துக்கொள்ளவே, எனக்கு ஒன்றரை வருடம் ஆகியது. கிட்டத்தட்ட 1000 தேனீக்களிடம் கடி வாங்கிய பின் தான், இந்த ரகசியத்தைத் தெரிந்துக்கொண்டேன். இப்போது அதை நிறைய பேருக்குக் கற்றுத் தருகிறேன். கடந்த 8 வருஷத்தில், 40000 பேருக்கு மேல் பயிற்சி கொடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் தேனீக்களிடம் கடி வாங்காமல், தேன் எடுக்கிறார்கள்.


ஜோசஃபின்: ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை, எனது மதுரை வீட்டிலேயே பயிற்சிக்கூடம் அமைத்து, இதில் விருப்பமுள்ளவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி கொடுக்கின்றேன். இந்தப் பயிற்சிக்கு குறைந்தது 100பேராவது வருவர். நான் இதற்காக விளம்பரம் ஏதும் தருவதில்லை, ஏற்கனவே இங்கு வந்து பயிற்சி எடுத்தவர்கள் மூலமாக சொல்லி வருபவர்கள் தான்.

தேசிய தோட்டக்கலை திட்டத்தின் (NATION HORTICULTURE MISSION) கீழ் 50% மானியமாக தேன் கூட்டுடன் சேர்ந்து தேன் சேகரிக்கும் பெட்டியை, அவ்வாறு பயிற்சிக்கு வருபவர்களிடம் கொடுக்கிறோம். அது மட்டுமன்றித் தமிழ்நாட்டில் ஒரு 23 மாவட்டங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு இலவச பயிற்சியும் கொடுக்கின்றோம். இருந்தாலும், என்னைப் போல் ஒரு மாவட்டத்திற்கு ஐந்து பேராவது இருந்தால் தான் தமிழகத்தின் மொத்த தேவையை பூர்த்தி செய்ய முடியும்.


என்னால் பயிற்சி பெறப்பட்டவர்கள் 362 பேர் தமிழகத்தின் பல இடங்களில் சிறப்பாக செயல்பட்டு சம்பாதிக்கின்றார்கள். இது மட்டுமின்றி எனக்கு சம்பந்தமில்லாத 50000 பேர், மார்த்தாண்டம், கன்னியா குமரி பகுதிகளில் தேனீ வளர்ப்பை மட்டுமே தொழிலாக செய்து வருகின்றனர். 2007இலிருந்து இதை செய்கிறேன். அப்போது ஒரு வருடத்திற்கு 300 முதல் 500 பெட்டிக் கொடுக்க ஆரம்பித்து இன்று 5000 பெட்டிகள் வரைக் கொடுக்கின்றேன். நான் சொல்லித்தரும் அனைவரும் இதில் வல்லுநர் ஆகிவிடுவதில்லை. ஒரு 10000 பேருக்கு பயிற்சிக் கொடுத்தால் 100 பேர் மட்டுமே ஒழுங்காக வேலை செய்து பயன் பெருகின்றனர்.

                                                    தேன் பெட்டி பற்றி 

ஒவ்வொரு தேன் பெட்டியிலிருந்தும் ஒரு மாதத்திற்கும் 2கிலோ தேன் கிடைக்கும், இந்தப் பெட்டியை நான் தான் டிசைன் செய்தேன். ப்ளாஸ்டிக்கில் இல்லாமல் டப்பர்வேரில் இருப்பதால், கிட்டத்தட்ட 25 வருடம் வரை நீடித்து வரும். முன்பிருந்த பெட்டிகளில் இருந்த பல பிரச்சினைகளை நீக்கி, புது யுக்திகள் பலவற்றை சேர்த்துள்ளதால், உலகத்திலேயே முதல்முறையாக இப்படி மிக அருமையான ஒரு டிசைனாக  வெளி வந்துள்ளது.


நிறைய விவசாயிகளை சந்தித்து பெட்டிகள் கொடுக்கிறேன். நிலங்களில் தேன் கூடு இருப்பது, (மகரந்த சேர்க்கையின் மூலம்) 10 முதல் 70% வரை விவசாயிகளுக்கு மகசூல் கூடுகின்றது. நாம் எடுக்கும் இரண்டு கிலோ தேன் முக்கியமல்ல, இந்த தேன் பூச்சிகளினால் கிடைக்கும் அதிக மகசூல் தான் முக்கியம். இதை நன்கு உணர்ந்த பல விவசாயிகள் நன்றாக ஆதரவு தருகின்றனர். இதேக் காரணத்தினால் தான், தோட்டக் கலையில் இதனை மானியத்தில் தருகின்றனர். இப்போது காதியிலும் இலவசமாக கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

: தேன்களில் மொத்தம் 30 வகை தேன் உள்ளது. அதில் 10வகைத் தேன் தனி மலர் தேனாக இருக்கும். அத்தகைய தேன் பூச்சிகள், பருவநிலைக்கு (SEASON) ஏற்றார்போல், வளர்க்கும் இடங்களில், கிட்டத்தட்ட 60% ஒரே மாதிரியான மரங்களில் இருந்து தேனை எடுத்துவரும். உதாரணத்திற்கு இப்போது உள்ள பருவநிலைப்படி நாவல் மரம், முருங்கை மரம், வேப்பமரம் போன்ற மரங்களிலிருந்து தேன் பூச்சிகள் தேனை எடுத்து வரும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறமாகவும், ஒவ்வொரு சுவையாகவும் இருக்கும். சில கசப்புத்தன்மையுடன் இருக்கும் தேன், மருத்துவ குணம் அதிகம் உள்ளதாக இருக்கும்.

தேனை எடுத்து அதை புட்டியில் (BOTTLE) அடைத்து பல இடங்களுக்கு விற்பனை செய்கிறேன். மதிப்பூட்டியும் ஒரு புறம் செய்கிறேன். அதாவது தேனிற்குள் மாம்பழம், நெல்லி, அத்திப்பழம் போன்றவற்றை ஊறவைத்து புட்டியில் அடைத்து தமிழகம் முழுவதும் நமது நிறுவனம் விநியோகிக்கிறது. இந்த பழங்கள் அனைத்தும் சிவகங்கையில் உள்ள என் தந்தையின் தோட்டத்தில் இருந்து, இயற்கை விவசாய முறையில் (ORGANIC FARMING) வருவது கூடுதல் சிறப்பு. பதனச்சரக்கு (PRESERVATIVE) இல்லாமல், துளசித் தேன், இஞ்சித் தேன், பூண்டுத் தேன் போன்றவற்றையும் தயார் செய்து விற்பனை செய்கிறோம்.


நிறையக் குடும்பங்களுக்கு இந்தத் தொழிலை சொல்லித் தருகிறேன். அவர்கள் அனைவரும் இதனால் நல்ல பயன் பெருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள வீடுகளில் இல்லத்தரசிகள் ஒவ்வொருவரும், 3பெட்டி முதல் 5பெட்டி வரை வளர்க்கின்றனர். கோயிலைச் சுற்றி பழக்கடைகளும், பூக்கடைகளும் மிகுதியாக உள்ளதால், தேன் மிகுதியாகக் கிடைக்கிறது.

இது ஒரு மிக அற்புதமான தொழில். மருத்துவ குணமுடையத் தேனை சாப்பிடுகிறவர்களுக்கு சளி, காய்ச்சல், மூல நோய், வாத நோய், சர்க்கரை நோய் போன்ற பல நோய்களுக்கு இது மருந்தாக பயன்பெறுகிறது. தேனீ விஷ மருத்துவம் (BEE VENOM THERAPHY) இங்கு மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் மிக பிரசித்திப்பெற்றது. தேனீ கடிப்பது நம் உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. தீக்காயத்திற்கு கூட த்தேனைத் தடவலாம். செல்களை புதுப்பிக்கவும்,  உடல் ஆரோக்கியத்திற்கும் தேன் அருமையாக உதவுகின்றது. மலைத் தேனீயின் விஷம் மட்டுமே ஆபத்தானது.

 எனது பணியைப் பாராட்டி, 17 மாநில அவார்டுகள், 3 தேசிய அவார்டுகள் இதுவரைக் கிடைத்துள்ளது. தேன் வளர்ப்பில் மிகப் பெரிய சாதனை செய்ததாக பஜாஜ் நிறுவனம் என்னைப் பாராட்டி “ஜானகி தேவி புரஸ்கார்” விருதும் மூன்று லட்ச ரூபாயும் கொடுத்து பாராட்டியது. எனது மகனின் முகம் முழுவதும் தேன் பூச்சிகளினால் மூட வைத்து “கின்னஸ் சாதனையும்” முயற்சித்தோம்.

: இந்தப் பணியை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கவேண்டும். சென்னை மாதிரியான நகரங்களில் கூட வீடுகளில மொட்டைமாடிகளில் வைத்து வளர்க்கலாம். ஒரு “பழுப்புப்  புரட்சி (BROWN REVOLUTION)” செய்யவேண்டும் என்பதே என் விருப்பம். இத்தனைக் கஷ்டப்பட்டு வளர்க்கின்றேன், என்னிடமே சிலர், இந்தத் தேன் சுத்தமான தேனா? என்றுக் கேட்பர். அவர்களிடம் எல்லாம், உங்களுக்கே பெட்டித் தருகிறேன், நீங்களே வளருங்கள் என்று கூறுவேன்.

தமிழகம் முழுவதும் வீட்டிற்கு ஒரு தேன் பெட்டி என்பதே என் இலக்கு. இது சமூக ஆரோக்கியத்தையும், இயற்கையையும் கண்டிப்பாகக் காக்கும்.

     நன்றி: bepositive1000@gmail.com

No comments:

Post a Comment