Wednesday 17 April 2013

இப்படித்தான் குறும்படம் எடுக்கவேண்டும்


குறும்படம்

இப்படித்தான் குறும்படம் எடுக்கவேண்டும் என்று வரையறை எல்லாம் கிடையவே கிடையாது. இருந்தாலும், குறும்படம் ஏழு நிமிடங்களுக்கு மேல் இருந்தாலோ, கதைமாந்தர்கள் ஐந்து பேருக்கு மேல் இருந்தாலோ, அதை குறும்படம் என்று சொல்ல முடியாமல், நெடும்படம் என்று பயமுறுத்த வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்ட குறும்-நெடும்படங்களை எடுக்கும் ஆசாமி நீங்கள் என்றால்,  கீழே சொல்லப் பட்டிருப்பவை உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.

குறும்படம் எடுப்பதற்கு படப்பிடிப்பு, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு, இசை என்று நான்கு முதன்மையான படிமுறை இருக்கின்றன. ஆனால், படப்பிடிப்புக்கு முன்னால் செய்யவேண்டியவை நிறைய உள்ளது. வீடு கட்டுவதற்கு முன் தோண்ட வேண்டும் அல்லவா? ஒரு குறும்படத்துக்கு மிகவும் முதன்மையானது கதை, திரைக்கதை, வசனம். வெறும் மேலோட்டமான கதையை வைத்துக் கொண்டு நண்பர்களுடன் கலந்துரையாடினால் திரைக்கதை மேலும் மெருகேறும். திரைக்கதையை முழுவதுமாகக் குழப்பமில்லாமல் முடிவு செய்த பின்னர் வசனம் எழுத வேண்டும்.

வசனங்கள் எழுதும் போதே காட்சி பிரித்து, அந்தக் காட்சியில் யார் யார் வருகிறார்கள், எங்கே எப்போது நடக்கிறது என்பதைக் குறிப்பிடவும். வசனங்கள் காட்சி வாரியாக எழுதி முடித்தப்பின் செய்ய வேண்டிய கடமை – நடிகர்கள் தேர்ந்தெடுப்பது. நடிகர்களைத் தேர்ந்தெடுத்தப்பின் அவர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி வசனம் எழுதிய கையேட்டை வைத்துக் கொண்டு முழு திரைக்கதையையும் நன்றாக விளக்கிவிட வேண்டும்.  அந்தக் குறும்படம் எடுப்பதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் இந்த நேரத்திலேயே கணக்கிட்டுக் கொள்ளலாம். இப்போதைக்கு Screenplay + Dialogues, Casting, Budget estimation தயாராக உள்ளது. மற்ற தொழில்நுட்ப வல்லுனர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் இது. ஒளிப்பதிவாளன், படத்தொகுப்பு செய்பவர், இசையமைப்பாளன் என்று அனைவரையும் முடிவு செய்துவிட்டால் crew தயார். Pre-production வேலைகள் நிறைவடைந்துவிட்டது!

இப்போதுதான் நாம் படப்பிடிப்பை தொடக்கும் நிலையில் இருக்கிறோம். படப்பிடிப்புக்கருவி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. கைபேசியை வைத்தோ, நிழற்படக்கருவி வைத்தோ, நிகழ்படக்கருவி வைத்தோ எடுத்துக் கொள்ளலாம். ஆனால், எடுக்கும் முன்பு அந்தப் படப்பிடிப்புக் கருவியைப் பற்றி அதை இயக்குபவர் முழுமையாகத் தெரிந்து கொள்ளவேண்டும். அதில் முதன்மையானது அந்தக் கருவியில் படம்பிடித்தால் எந்த கோப்பு வகையில்(File format – ex: *.mts, *.mov, *.wmv) அது சேமிக்கப்படும் என்பது தெரிந்திருக்க வேண்டும்! இல்லையென்றால் படத்தொடுகுப்பில் இடர்பாடு வரும். எந்த அளவு காட்சிப் பெருக்கம்(zoom) செய்ய முடியும்? , மனித ஆற்றலால் குவிமையத்தை(Manual focus) மாற்றமுடியுமா? போன்ற கேள்விகளுக்குத் தெளிவான விடை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

ஒரு காட்சி எடுப்பதற்கு முன் அது எங்கே எப்போது எடுக்கவேண்டும் என்பதை அந்தக் காட்சியில் வரப்போகும் நடிகர்களுக்கு முன்னதாகவே தெரிவித்துவிட வேண்டும். இது இயக்குனரின் மிகப்பெரிய பொறுப்பு. பொதுவாக ஒரு காட்சி எடுப்பதற்கு தேவையான பொருட்கள் நிகழ்படக்கருவி(Video camera), அதன் தாங்கி(tripod), thermo-col அட்டை(ஒளியமைப்புக்கு – Lighting). கூடவே மடிக்கணினியும், தேவையான மின்னேற்றிகளையும்(Chargers) எடுத்துச் செல்வது சிறப்பு. வெளியிடத்தில் படம்பிடிப்பதென்றால்(Outdoor shooting) வேறு சில சிக்கல்களும் வரக்கூடும். கூட்டத்தைச் சமாளிக்க ஆட்கள் தேவைப்படும். அங்கே எடுப்பதற்கு முறையான ஒப்புதல் பெறவேண்டும்.

படப்பிடிப்பு முடிந்த பிறகு படத்தொகுப்பு. இது ஒரு நுட்பமான வேலை. உங்கள் படத்தைப் பார்த்து மக்கள் கொட்டாவி விடப்போகிறார்களா அல்லது இருக்கை நுனியில் அமரப் போகிறார்களா என்பது இதைப் பொறுத்து இருக்கிறது.  இதற்கு பயன்படுத்தப்படும் கணினி நிரல்களுள் சில – AVS Video Editor (Windows), Windows movie maker (Windows), Final cut pro (Mac), iMovies (Mac). படத்தொகுப்பு ஆரம்பிக்கும் முன்பே ஒவ்வொரு காட்சிக்குமான இறுதியெடுப்புகளை(final takes) எண்வரிசைப் படி அடுக்கி வைத்தல் நலம். முடிந்தால் ஒவ்வொரு எடுப்பிலும்(take) எந்த நேரத்தில் தொடங்கி எந்த நேரம் வரை வெட்டப் போகிறோம் என்பதையும் ஒரு நினைவூட்டுக்குறிப்பில்(Cue sheet)  தயார் செய்துகொள்வது நல்லது.

ஒலிப்பதிவும், இசையும் உங்கள் விருப்புக்குரியது. இரைச்சல் இல்லாமல் நல்ல ஒலியுடன் படம்பிடித்திருந்தால் ஒலிப்பதிவு தேவையில்லை. ஒலிப்பதிவு மற்றும் மறு-ஒலிப்பதிவு(re-recording) செய்வதற்கு Gold wave software பயன்படலாம். ஒலிப்பதிவு, இசை போக நிகழ்பட திருத்தங்கள்(Colour correction, Gamma correction etc – software: Adobe After effects), மிகைப்படுத்தல்கள் (VFX softwares), அசைவூட்டம்(Animation) சேர்த்தல் என்று நீங்கள் விளையாடலாம். எடுத்துமுடித்த குறும்படத்துக்கு ஒரு தூண்டிப்படம்(teaser), துண்டுப்படம்(trailor) மற்றும் ஒரு விளம்பரப்படம்(poster) செய்வது உங்கள் படத்தை விளம்பரப் படுத்துவதுக்கு பயன்படும். படப்பிடிப்புக்குப் பிறகு செய்பவை எல்லாமே post-production works.

என்னைப் பொறுத்தவரையில் ஒரு குறும்படத்தின் தரம் Pre-production வேலைகளால் தான் தீர்மானிக்கப் படுகிறது. Post-production வேலைகள் மலர்ந்த முகத்துக்கு ஒப்பனை செய்வது போன்ற ஒன்று தான்.

டுவிட்டர்: @BalaramanL

No comments:

Post a Comment