Monday 29 April 2013

நினைவின் நதிக்கரையில்:1-(கௌதம நீலாம்பரன்)

கௌதம நீலாம்பரன்



காலத்தின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டியவற்றைத் தேர்ந்து தெளிவதே வரலாற்று நவீனம். இந்தக் கூர்மையோடு களத்தில் இறங்கிய பெருமை, கெளதம நீலாம்பரனுக்கு உண்டு.அமரர் நா.பார்த்தசாரதி, தீபம் திங்கள் இதழின் ஆசிரியர், ஏற்றி வைத்த இலக்கிய தீபங்களில், ஒரு எழுச்சி தீபம் கெளதம நீலாம்பரன். சரித்திர நவீனங்களின் சரித்திரம்.
-கவிப்பேரரசு வைரமுத்து, ‘பல்லவ மோகினி” முன்னுரையில்,


நினைவின்  நதிக்கரையில்
                         1


“உன்னை என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்கிட்டிருக்கேன்... உன் நினைவை என்னால மறக்க முடியலையே... என் காதலைப் புரிஞ்சுக்க...” என்று காதலியிடம் புலம்பிய காதலன் தன் நெஞ்சில் கை வைத்துக் காண்பித்தான்.

“என் இதயத்துலயும் நீங்கதான் இருக்கீங்க. நம்ம காதலை எங்க வீட்ல ஒத்துப்பாங்களான்னுதான் புரியலை. எது நடந்தாலும் சரி, என் நெஞ்சுலேருந்து உங்க நினைவை அழிக்க யாராலும் முடியாது...” என்றாள் காதலி.

“எங்க வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கிட்டு இவங்க நல்லா வாழ்ந்துடுவாங்களா, பார்த்துடறோம்” என்றனர் பெற்றோர்.

இவர்கள் எல்லாரும் நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் முக்கியத்துவம் தந்து பேசினாலும், விஷயம் நினைவுகள் சம்பந்தப்பட்டது. காதலோ, பாசமோ, கோபதாபங்களோ எதுவாயினும் மனம்தான் அதன் உற்பத்தி ஸ்தானம். மனம் என்று தனியாக ஓர் உறுப்பு உடலில் எங்கும் இல்லையென்றாலும், மனம் என்பது நிச்சயமாக நெஞ்சுக்குள்ளோ, வயிற்றுள்ளோ இருக்கவியலாது. அது, மூளையோடு மட்டுமே தொடர்புடைய ஒன்று. மூளை இருப்பதோ தலைக்குள்ளே, தலைக்குக் கீழே உடலின் எந்த உறுப்பும் தனியே சிந்திக்கவியலாது. இருப்பினும் காதலர்களும், கவிஞர்களும் நெஞ்சின் மீது கை வைத்து மட்டுமே நினைவைப் போற்றிப் பாட்டுப்பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி நெஞ்சு வேகாதென்று சபதமிடுகிற அளவு நினைவுகள் நெஞ்சுக்குழிக்குள்ளே கிடந்து காலம் காலமாக அல்லாடிக் கிடப்பதை யாராவது தவறு என்று சுட்டிக் காட்டினால் தலையில் அடித்துக் கொண்டு ‘பழிப்பு’ காட்டுவார்கள்.

ஒரு பெரியவர் இருந்தார். பஞ்சாய் நரைத்த தலைமுடி, ‘மார்பில் அலை பரப் பும் வெண் தாடி. நல்ல நல்ல தத்துவங்கள் சொல்வார். நன்றாகப் பக்தி மணம் கமழப் பாடல்கள் பாடுவார். “ஆஹா” என ரசித்து, அவரைப் பாராட்டுகிறவர்களிடம், “எல்லாம் நம்மிடம் ஒன்றுமில்லை, அவன் செயல்’ என்று மேலே கைகளை உயர்த்திக் காட்டுவார். அடுத்த கணம், வயிற்றைத் தொட்டுக்காட்டி, ‘இங்கே இசை ஊற்றெடுக்கிறது. நாபியிலிருந்து மேலெழும் அதற்கேற்ப நான் வாயசைக்கிறேன். அவ்வளவுதான், தத்துவங்களும் அப்படித்தான். உள்ளே அவன் இருந்து சொல்ல வைக்கிறான். நான் ஒரு கருவி மாத்திரமே” என்பார்.

அவருடைய அடக்கம், எல்லாம் தெய்வச் செயல் என்று எண்ணுகிற உயரிய மனோபாவம் தவறே அல்ல. ஆனால், ஓசைக்கான காற்று நாபிக்கமலத்திலிருந்து உந்தி மேலெழுந்து வந்தாலும், எண்ணங்கள் புத்தியிலிருந்து மட்டுமே உதிக்க முடியும். அதற்கு வயிற்றையோ, நெஞ்சையோ தொட்டுக் காட்டி என்ன பயன்?

ஜவஹர்லால் நேரு எழுதிய குட்டிக்கதை ஒன்று உண்டு. அதில் ஒரு சகலசாஸ்திர பண்டிதர் வருவார். அவர் தன் வயிற்றைச் சுற்றி செப்புத் தகடுகளை வைத்துக் கட்டிக் கொண்டுதான் எங்கும் புறப்படுவார்.

ஒருநாள் அப்பெரியவர் ஒரு நதிக்கரையில் பல்லக்கில் வந்து இறங்கினார். முகம், கை கால் கழுவி சந்தியாவந்தன நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பல்லக்கில் புறப்பட ஆயத்தமான பொழுது, வயிற்றில் சுற்றிலும் செப்புத் தகடுகளே வைத்துப் பட்டுத் துணியால் கட்டிக் கொண்டிருந்தார். இதை ஆடு மேய்க்கும் ஓர் இடைச்சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு இந்த வேடிக்கையின் பொருள் புரியவில்லை. “சாமி, எதுக்கு இப்படி வவுத்த சுத்தி செப்புத் தகடு வச்சுக்கட்டறீங்க, வவுத்து வலியா?”  என்று கேட்டான்.

அவருக்குக் கோபம் வந்துவிட்டது.

“அடேய், ஆடு மேய்க்கும் சிறு பயலே...என்னை யாரென நினைத்தாய்?  நான் சகல சாஸ்திர பண்டிதன், பல அறிவாளிகளைத் தோற்கடித்த மேதை. என்னைக் கண்டால் அரச சபையே அலறும். நீ எத்தனை அலட்சியமாக என்னைக் கேள்வி கேட்கத் துணிந்துவிட்டாய்...” என்றார்.

“அது இருக்கட்டும் சாமி...நீங்க அறிவாளியாவே இருங்க. அறிவாளிங்களுக்கு வவுத்து வலி வராதா?” என்றான் சிறுவன்.

“அடே அற்பப் பதரே! இந்த செப்புத் தகடுகளை நான் வயிற்று வலிக்காகக் கட்டவில்லை. என் சாஸ்திர ஞானம், சகல விஷயங்களிலும் உள்ள பாண்டித்யம் மிக மிக அதிகம். அதன் காரணமாக வயிறு வீங்கி வெடித்து விடக்கூடாதல்லவா? அதற்காகத்தான் இந்தப் பாதுகாப்பு. இதெல்லாம் உனக்குப் புரியாது. போ அந்தப் பக்கம்...” என்றார் பண்டிதர்.

பையன் இதைக் கேட்டு கெக்கொலி கொட்டிச் சிரித்தான்.

“ஏனடா சிரிக்கிறாய்... ?”

“பின்ன என்ன சாமி... எங்களுக்கெல்லாம் அறிவு மண்டைல இருக்குங்கறதுதான் தெரியும். வவுத்துல செரிமானக் கழிவுகளோட மலக்குடல்தான் இருக்கு. உங்களுக்கு மட்டும் வவுத்துல அறிவு நிரம்பிக் கிடக்குன்னா, உங்க மண்டைல நிச்சயம் மலம்தான் சேர்ந்து கிடக்கும். அதை நினைச்சேன், சிரிப்பு வந்துடுச்சி...” என்றான்.

    பெரியவர் கர்வம் அந்தக் கணத்தில் அகன்றது. அறிவுக்கண்கள் திறந்தன. அதுவரை ஆணவத்தால் பெரும் பிழை செய்து விட்டதை எண்ணி வெட்கித் தலை குனித்து நின்றார்.

     இந்தக் குட்டிக்கதை நமக்கு எவ்வளவு பாடம் புகட்டுகிறது பார்த்தீர்களா...?

      அது சரி, இவ்வளவு பெரிய ஆலாபனை-முன்னோட்டம் எல்லாம் எதற்கு என்கிறீர்களா? நான் பெரிய அறிவாளியோ, புகழ் பெற்ற எழுத்தாளனோ இல்லையெனினும், ஓரளவு பத்திரிகை மற்றும் எழுத்துத்துறையில் காலம் தள்ளி வருபவன் என்பதை அனைவரும் அறிவார்கள். என் நினைவுகள் சிலவற்றை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

(வளரும்)

No comments:

Post a Comment