Wednesday 19 September 2012

Vallamai Editor


சந்திப்போம் 
அமுதசு ரபி முன்னாள் ஆசிரியரும் சிறந்த தமிழ்ப்பற்றுள்ள எழுத்தாளரும் யாஹூ நிறுவனத்தில் தமிழ் எடிட்டராகப் பணியாற்றுபவருமான டாக்டர் அண்ணா கண்ணன் அவர்கள் துவக்கிய வல்லமை இணைய மின்னிதழ் ஆசிரியர்
 பவள சங்கரி  , சேலம் மாநகரில் பிறந்து, வளர்ந்தவர். சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் இளம் அறிவியல் – குடும்பவியல் பயின்றவர். கணவரின் ஊக்கத்தால், திருமணத்திற்குப் பிறகும் கல்வி கற்றார். இந்தி பிரசார சபாவில் இந்தி பிரவீண் தேர்ச்சி, மத்திய அரசின் இந்திச் சான்றிதழ்ப் பட்டயம்,  DIP. C.R.E.W. IN ENGLISH  ஆகியவற்றையும் பயின்றார். 1991 முதல்  எழுதி வருகிறார்

வையவன்: வணக்கம்  பவளசங்கரி  
பவளசங்கரி : வணக்கம்
வையவன் : நீங்கள் இலக்கிய ஆசானாக யாரைக் கருதுகிறீர்கள் ?
பவளசங்கரி:  வெறும்  ஆசானாக அல்ல. என் ஆத்மார்த்த குருவாக மகாகவி பாரதியையே நான் போற்றுகிறேன்.
வையவன் : தமிழில் வெளிவரும் இணைய இதழ் ஒன்றிற்கு ஆசிரியராக இருக்கும் பெண்  தாங்கள் தான் என்று நினைக்கிறேன். 
பவளசங்கரி வேறு யாராவாவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை 
வையவன் : தங்கள் ஆழ்ந்த நம்பிக்கை எது?
பவளசங்கரி : ஒரு பெண் முழுமையான கல்வியறிவு பெற்றால் அவள் சார்ந்த குடும்பமே சுபிட்சமாகும் 
வையவன் : யாரைக் கண்டு தாங்கள் மலைத்துப் போகிறீர்கள்?
பவள சங்கரி- குடும்பமே கோவில், கொண்டவனே தெய்வம் என்று  சென்ற நூற்றாண்டுகளில் வாழ்ந்து நம் இந்தியத் திருநாட்டின் மறுமலர்ச்சிக்காக தம்முடைய வாழ்வையே அர்ப்பணித்த எண்ணற்ற பெண்டிரின் தனித்தன்மை கண்டு மலைத்துப் போய் நிற்பவள்.
வையவன் : தற்போதைய தங்களுடைய இலக்கியப் பணிகள் குறித்து...?
பவளசங்கரி : குடத்திலிட்ட விளக்காக இருக்கக்கூடிய பலரின் வாழ்க்கை வரலாறுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் .என் வாழ்க்கையை 
பல வகையிலும் மேன்மைப்படுத்திய ஊக்கங்கள் அனைத்தும் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் கட்டுரைகளாக வடித்துக் கொண்டிருக்கிறேன். என் சிறுகதைகளும், கவிதைகளும் பெரும்பாலும் பெண்களின் பிரச்சனைகள் பற்றி அலசுபனவே 
வையவன்-இன்றைய பெண்ணுக்கு உங்கள் செய்தி?
பவளசங்கரி : கீழோர்க்கு அஞ்சேல்!
                 குன்றென நிமிர்ந்து நில்! 
                 கேட்டிலும் துணிந்து நில்!
                 கொடுமையை எதிர்த்து நில்1
                 கல்வியதைக் கைவிடேல்!
                 சிதையா நெஞ்சு கொள்!
                  சீறுவோர்ச்சீறு!
                 ரௌத்ரம் பழகு!
என்ற ஐயன் பாரதியின் கருத்துக்களை ஒவ்வொரு பெண்ணும் தம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான தாரக மந்திரமாகக் கொள்ளல் வேண்டும்
வையவன்: தங்களின் ஆத்மார்த்தமான தேடல் எது? 
பவளசங்கரி : கற்றது கையளவு, கற்க வேண்டியது கடலளவு என்ற தேடல் 
வையவன் : தங்கள் இணைய இதழ் அனுபவம் பற்றி?
பவள சங்கரி : இணையம் ஒரு மாய உலகம். 
வையவன் :அப்போதுநம் இணையவெளி இதழ் கூட மாயம் என்று கருதுகிறீர்கள?
பவள சங்கரி:(சிரித்தபடி) இணையமே மாயம் என்னும்போது இணையவெளி மட்டும் மாயமாக இல்லாமல்  போகுமா?
வையவன் :; சற்று விளக்குங்கள் 
 பவள சங்கரி:பெரும்பாலும் வருடக்கணக்கில் இணையத்தில்  பழகிக் கொண்டிருக்கும் மிக நெருங்கிய நண்பர்களைக் கூட இறுதிவரை நேரில் காணும் வாய்ப்பே கிடைக்காமல் போகலாம். அதை வைத்து சொன்னேன் வையவன் :; :ஆனால் அந்த  நட்பு இலக்கியத் தொடர்பு என்ற பரிமாணம் பெற்று, பல வகையில் அவரவர் சுய வளர்ச்சிக்கு ஏற்றம் தராதா?
பவள சங்கரி: நிச்சயம் . இணைய இதழ் என்பது இலக்கியவாதிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் . பொதுவாக எழுத்தாளர்கள் அனைவரும் தனித்தீவுகளாகத்தான் செயல்படுகிறார்கள். ஆனால் இணையம்  எழுத்தாளர்கள் அனைவருக்கும் ஒரு பொது மேடையாகிறது. நல்ல ஆரோக்கியமான வாதங்களின் களமாகிறது.  நல்ல பல ஆய்வுப் பணிகளும் வெகு எளிதாக நடைபெற வழிவகுக்கிறது. 
வையவன் :இது பொதுக் கதை. உங்கள் அனுபவம் என்ன?
பவள சங்கரி:வல்லமை இதழின் ஆசிரியராக பணிபுரிவதன் மூலம் பல எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் வாசகர்களின் உன்னதமான நட்பைப் பெற்றுள்ளதே எம் சாதனையாகக் கொள்கிறேன். நம்முடைய  எண்ணங்களைச் சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்கிற ஒரே தளம் இணையதளம். நல்லவிதமாக பயன்படுத்துவோருக்கு ஒரு வரப்பிரசாதம்.
வையவன்: நன்றி 
பவள சங்கரி. நன்றி .வணக்கம் 

No comments:

Post a Comment