Wednesday 19 September 2012


சென்னை மியூசிக் அகாடமியில்            
சாகித்திய அகாடமி இலக்கியச் சந்திப்பில்          
வையவன் (நான்)


ஆந்திரப் பிரதேச அரசு ஆண்டு தோறும் ஆத்ம கௌரவ புரஸ்கார் என்று ஒரு பரிசு அளிப்பதாக அண்மையில் நான் கேள்விப் பட்டேன். எதற்கு அளிக்கப் படுகிறது யாருக்கு அளிக்கப் படுகிறது என்று விவரமாக அறிய இயலவில்லை. எனினும் ஆத்ம கௌரவம் என்று ஒரு பரிசுக்கான அந்த அடைமொழி என்னை மிகவும் கவர்ந்தது. அதற்காகவே - அந்தப் பரிசை அல்ல- ஆத்ம கௌரவம் என்ற  அந்தப் பண்பைப் பெறுவதற் காகவே - என் வாழ்நாள் முழுதும் செலவழிந் திருப்பதாக எனக்கு அப்போது நினைக்கத் தோன்றியது.

13 வயதில் எழுத ஆரம்பித்த நான் வெளிச்சத்திற்கு வந்தது 1959 மே மாதம் 10 தேதியிட்ட  குமுதம் இதழில் வெளிவந்த என்  ‘வெளிச்சம் விரட்டுகிறது’ என்ற சிறுகதையின் மூலம் தான். அப்போது எனக்கு 19 வயது. அதற்குள் வாழ்க்கை என்பது என்னவென்று நன்றாகவே விளங்கி விட்டிருந்தது. கொடிது கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவையார். இனிது இனிது இளமையில் வறுமை என்று நான் இப்-போது கருதுகிறேன் . காரணங்கள் பலப்பல.
வறுமை வாழ்க்கையின் மதிப்பை உணர்த்துகிறது. அதைப் பற்றிய விசாலப் பார்வையை வழங்குகிறது.
வியர்வையின் அருமையை ... உழைப்பின் பெருமையை ... போராட்ட உணர்வுகளை மனிதர்களின் மதிப்பை அவர்கள் வகுத்துள்ள மதிப்பீடுகளின் நன்மையை-யும் அவற்றின் புன்மையையும் விரிவாகப் புலப்படுத்தி நேர்முகமாக அனுபவிக்க  வைக்கிறது. அதுவும் உறவினர் நண்பர்கள் என எல்லோராலும் இகழ்ச்சியாக ஒதுக்கி வைக்கப் பட்டால் ஒரு தனி பலம் பெற்ற  ஆத்ம கௌரவத்தை நம்முள் ஏற்படுத்துகிறது.
ஒரு வேளை நபருக்கு நபர் அது மாறுபடலாம். எனக்குள் ஏற்பட்ட எண்ணங்-கள் இவை.
வாய்த்த வாழ்க்கையைக் குறித்து மனம் சலித்தோ விதியைச் சபித்தோ உழல்வது வீண் என்று எப்போதுமே  என்  எண்ணம். மாற்றியமைக்கத் தான் வாழ்க்கை வழங்கப் பட்டிருக்கிறது .இது என் முடிவு.
எப்படி மாற்றியமைப்பது ?
இதுவும் நபருக்கு நபர் வேறுபடும் விஷயம்.
எஸ்.எஸ்.எல்.சியை முடித்து விட்டு என்னென்ன வேலைகள் செய்ய முடியும் என்று பரீட்சார்த்தமாக அலைந்து கொண்டிருந்த ஒரு பருவம் அது. ஏழு வயதிலேயே என் தந்தையார் வாசிப்புப் பழக்கத்தை என்னுள் ஏற்படுத்தி இருந்தார். வாசிக்கும் ஆர்வம் வளர்ந்தோங்கி கொழுந்து விட்டெரிந்தது.
இன்றைய வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் அன்று ஓரிரண்டு வாடகை நூலகங்களும் ஒரு பெரிய நூலகமும் இருந்தன. அவற்றில் விவேகானந்தர் முதல் டர்ஜனீவ் டால்ஸ்டாய் டாஸ்டாவ்ஸ்கி என  ஏராளமான புத்தகங்கள். பீரோ பீரோவாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த புத்தகங்கள்..அ-வை என்னை க் காந்-த-மாக ஈர்த்-தன.
வாசிக்க வாசிக்க அறிவும் ரசனையும் மன உறுதியும் வளர்ந்து வலுப்பட்டன.
அந்த நூல்களும்  நூலகங்களும்  நீ ஏழையோ கோழையோ அல்ல என்று உணர்த்தின. வாழ்க்கை என்பது பணம் சம்பாதித்துக் குவிப்பது மட்டுமல்ல. ஒரு பதவி அதைவிட்டு மற்றொரு பதவி என்று அலைவதும் அல்ல என்று அவை உணர்த்த ஆத்ம கௌரவத்தின் சம்மட்டி அடிகள் என்னை உருவாக்கத் தொ-டங்கின.
வாசித்துக் கொண்டே இருந்த நான் சிறுவயதுப் பழக்கத்தைத் தொடர விளையாட்டாகத் தான் எழுத ஆரம்பித்தேன். விளையாட்டாக எழுதி அனுப்பிய கதை பிரசுரிக்கப் பட்டு அதற்குச் சன்மானமாகப் பணமும் வந்தது. வெறும் முப்பது ருபாய் தான். ஆனால் 1959ல் அது ஒரு பெரிய தொகை. உடனே சென்னைக்கு ஓடி வந்து பத்திரிகை பத்திரிகையாகப் படையெடுத்து ஓயாமல் எழுதிப் பரபரவென்று நாடகம் சினிமா என்று அலைந்து பணம் பணமாகக் குவித்து விடவேண்டும் என்று ஏனோ தோன்றவில்லை. புகழில் வருகிற போதையின் அபாயமும்  நல்ல வேளையாக எனது இளமைப் பருவத்திலேயே எனக்குப் புலப்பட்டுவிட்டது
வசதியாக இருப்பது ஒரு வாழ்க்கை முறை என்றால் வசதி இன்றி இருப்பது கூட ஒரு வாழ்க்கை முறை தான். ஒன்றில் ஒரு சுகம். அதை ஒட்டிய பல சுகக் கேடுகள். மற்றொன்றில் ஒரு சுகம். அதை ஒட்டிய சுகக்கேடுகள். சிக்கல்கள்.
வாழ்க்கை எல்லா நிலைகளிலும் பிரச்சினகைள் கொண்டது தான் .எனவே சிந்திக்கிறவனுக்கு  பெரிய வித்தியாசம் தென்படுவதில்லை. என்ன பெரிய வித்தியாசம் என்ற வேதனைச் சிரிப்பு வரும்.
எழுதினால் பணம் வரும். சினிமா வாய்ப்பு வரும். பெரிய டைரக்டர் கூட ஆகலாம். சென்னைக்குப் போ என்று நண்பர்கள் வற்புறுத்தினார்கள். பணம் எனக்கு மயக்கம் தரவில்லை. வறுமையில் ஒரு ரசனை தெரிந்தது. எனது நண்பர்களும் உறவினர்களும் பணம் சம்பாதிக்கப் பெரும்பாடு படுவதும் பணம் வந்ததும் அதன் பாதாளச் சீர்கேடுகளில் வீழ்ந்து சிறுகச் சிறுகச் சிறுக அழிந்து வருவதும் விலகி நின்று பார்க்கும் விவேகத்தை எனக்கு வழங்கி இருந்தன.
1940 முதல் 1956வரை சென்-னை-யில்வா-ழ்ந்த நான்  தந்-தை-யின் தொ-ழில் வீழ்ச்-சி-யால் சென்னையை விட்டு1956ல் சென்று மீண்டும் 1987ல் தான் சென்னைக்கு வந்தேன் அப்போதும் வாய்ப்பு தேடியோ வசதி  நாடியோ வரவில்லை.
என் மகளும் என் மகனும் என் வச-திக்கு மீறிய சென்னைக் கல்லூரிகளில் படிக்க விதிக்கப் பட்டதால் பெற்றோருடன் இருந்து பழகிவிட்ட அவர்களின் கல்விக்கு  உறுதுணையாக இருக்கவே நான் மீண்டும் சென்னைக்கு வந்தேன்
புலவர்கள் அதுவும் காலத்தால் என்றென்றும் அழிக்க முடியாத அமரத்துவம் பெற்ற படைப்புக்களைச் செய்த திருவள்ளுவர் உள்ளிட்ட பெரும் புலவர்கள் எழுதியோ பாடியோ மட்டும் வாழ்க்கையைக் கழித்து விடாமல் சமூகத்திற்கு உடல் பூர்வமாக உழைக்க வேண்டுமென்று வாழ்ந்-து காட்டி  உணர்த்தியதாக எனக்குப் பட்டது. முழுநேர எழுத்தாளராகப் பலர் இருக்கிறார்கள். நான் அப்படி ஆகி விடவில்லை. ஆக விரும்-பி-ய-தோ முயன்றதோ இல்லை. எழுதி மட்டுமே வாழ முடியும் என்ற தைரியம் இருந்தும் கூட.இந்தச் சமூகத்திற்கும் என்னை வளர்த்து உருவாக்கிய பெற்றோருக்கும் அப்போது மொழி நாடு என்று நெஞ்சில் நிலவிய பற்றுக்களுக்கும் நான் பதில் கூறவும்  பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தவும்  கடமைப் பட்டிருப்பதாகவே கருதினேன். இதெல்லாம் பித்துக்குளித்தனம் என்று எல்லோரும் சிரித்தார்கள்.
கிடைக்கிற எந்தப் பணியையும் மறுக்கும் வழக்கம் எனக்கு இல்லை. த யூனிவர்ஸ் ஈஸ் ட்ரையிங் டு பெட்-டர் மீ அப் இன் ஆல் ஆஸ்பெக்ட்ஸ் என்று தோன்றும். மலேரியா ஒழிப்புத் திட்டத்தில் சர்வேலன்ஸ் இன்ஸ்பெக்டராக எந்த சிபாரிசுமின்றி தானாய் ஒரு வேலை தேடி வந்தது. கிராமம் கிராமமாக சைக்கிளில் போய் மலேரியாக் காய்ச்சல் இருக்கிறதா என்று சர்வேலன்ஸ் ஊழியர்கள் சோதித்தார்களா என்று பரிசோதிக்கிற வேலை.அந்த வேலையில் இரண்டு லாபங்கள். கிராமம் கிராமமாக மக்களைச் சந்திப்பது. சைக்கிளில் சாலை சாலையாகச் சுற்றி வரும் ஆனந்தம்.
அப்போது யூனிட் ஆபீஸர் ஆக இருந்த மலையாளி ஒருவர் நான் கதை எழுதுவதைக் கேள்விப்பட்டு இந்த இலா-கா-வில் வேலை செய்வதாக இருந்தால் கதை எல்லாம் எழுதக் கூடாது என்றார். சற்று கூட யோசிக்காமல் மடமடவென்று அவரிடமே ஒரு காகிதம் வாங்கி ராஜினாமாக் கடிதத்தை எழுதி அவரிடம் நீட்டினேன்.
என்ன இது ?என்று கேட்டார். ராஜிநாமா. கதை எழுதாமல் என்னால் இருக்க முடியாது என்று கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினேன். என்ன எதிர்-கா-லம் என்ன என்ற கவ-லையே இன்றி.  உடல் நல-மற்ற பெற்-றோர்-கள் என்னை நம்-பியிருந்த போ-தும்.
வேலை செய்ய வேண்டும். படிக்கவும் வேண்டும். எழுதவும் வேண்டும். அப்படி ஒரு வேலை எது ? ஒரு தேடலும் இல்லாமல் தான் முடிவு கிட்டியது.
சுதந்திரமாகச் சிந்திக்கிற வாய்ப்பும் உள்ளபடியே நாட்டிற்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் வாய்ப்பும் எழுதவும் படிக்கவும் நேரமும் இருக்கிற வாய்ப்பும் உள்ள ஒரு பணி எதுவென யோசித்துத் தான் நான் ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்தேன்.
அப்போதும் செகண்டரி கிரேடு என்று யாரும் மதிப்பாக ஏற்க முடியாத ஒரு  வேலை தான்.
யாருக்காகவும் நான் வாழவில்லை. வரலாற்றில் என் பாத்திரம் என்னவென்று நான் தீர்மானிக்கிற வாழ்க்கை தான் எனக்குச் சரி என்று
நினைத்தேன். அதில் ஒரு மன உறுதி தோன்றி ஒரு கிராமத்திலே அதே செகண்டரி கிரேடு ஆசிரியராகப் பணியாற்றியபடியே படிக்கவும் எழுதவும் தொடங்கினேன்.
வாங்கிய அரசாங்கச் சம்பளத்துக்கோ என்னிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவச் செல்வங்களின் எதிர்காலத்திற்கோ எந்த விதமான துரோகமும் செய்யாதவாறுபணியாற்றியவாறு ஓய்வின்றி இரவும் பகலும் எழுதினேன்.
இன்று நான் பணியாற்றிய கிராமங்களுக்குச் சென்றால் நான் அங்கு ஆற்றிய ஆசிரியப்பணிக்காக மட்டும் தான் அவர்கள் என்னை மதிக்கிறார்கள். பலருக்கு நான் எழுத்தாளன் என்பதே தெரியாது. தெரிவிக்கிற வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் நான் அதை விவே-கமாக விலக்கி இருக்கிறேன். திருப்தியாக இருக்கிறது. ஒரு போர்வையில் ஒளிந்து கொண்டு வேறு சுய காரியங்களைச் சாதித்துக் கொண்ட குற்ற உணர்விலிருந்து நிம்மதியான விடுதலை கிடைக்கிறது.
எழுதி எழுதியும் படித்துப் படித்தும் மொழிகள் மொழிகளாகப் பயின்று பயின்றும் தேர்வு தேர்வுகளாக எழுத பல்கலைக் கழகங்கள் பல்கலைக் கழகங்களாக நடந்து நடந்தும் காலம் போயிற்று.
‘வாசற்படி கடந்து வாராத பிச்சைக்கு ஆசைப்படுவதில்லை அண்ணலே !’ என்ற பட்டினத்துப் பிள்ளையின் மனப் பக்குவமும் ‘ஈடின் மானிகளாய் இளைத்தவர் தம் மனக் கருத்தறிந்து உளம் இளைத்த’ வடலூர் வள்ளலின் அருளுணர்வும் எனக்குப் போதித்துக் கொண்டே வந்தன.
எழுதினேன்.
செட்டியார் மிடுக்கா சரக்கு மிடுக்கா  என்று ஒரு முதுமொழி உண்டு. எழுத்தை விட அதிகமாகப் 'பந்தா' பண்ணிக்கொள்ள வேண்டும்  என்ற அர்த்தத்தில் இதை எடுத்துக் கொள்ளலாம். என் மகள் என் பே பத்தி என என்னை அறிந்தவர் எல்லாம் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் பெரிய மனிதன்  தோரணை காட்டிக் கொள்ளாமல இருப்பதைக் குறை கூறினார்கள்.
 ஏதாவது வேண்டும் என்று நினைப்பவன் தான் அதற்காக ஏதாவது செய்து  கொள்ள வேண்டும். எனக்கு  வேண்டியது எழுத்து என்ற . இடைவிடாத பணி
அதற்கு ஏன் தோரணை?
நகரத்திலிருந்த பத்திரிகைகள் என் கதைகளைக் கேட்டு வாங்கிப் பிரசுரித்தன. குறுநாவல் எழுதச் சொல்லி நாவல் எழுதச் சொல்லிக் கவிதை  எழுதச் சொல்லிக் கட்டுரைகள் எழுதச் சொல்லி அழைப்புக்கள் வந்த பின் தான் எதையுமே நான் எழுதினேன்.
எனக்குக் கிடைத்த பரிசுகள் வாய்ப்புக்கள் என எல்லாமே நான் ஒன்றுக்கு இரண்டு முறை மறுத்து மறுத்து ஒதுக்கிய பன் தான்
என்னைப் பலவந்தமாக ஏற்க வைத்தன. காரணம் ஆத்ம கௌரவம் என்பது எல்லாவற்றையும் விட மேலா-னது  என்று நான் வைத்திருந்த ஒரு மதிப்பீடு தான்.
சோழா கிரியேஷன் என்ற திரைப்படக் கம்பெனியிலிருந்த  வந்த ஒரு கதை வசன வாய்ப்பை இரு முறை மறுத்து தொடர்பானவர்கள் வீடு தேடி வந்து வலியுறுத்த மனைவி வற்புறுத்த ஏற்றேன். அதற்-குப்-பின் சினி-மாத் துறை-யின் பக்-அது கிடைந்தது வந்தது. ”கமே நல்ல வேளை-”கம் பதவி பரி” என்பதன் பக்க@ம தலை வைத்-துப் படுக்-கக்-கூ-டத் தோன்-ற-வில்-லை.
எந்தக் கதையும் எந்த ஒரு படைப்பும் ஒரு தீக்குச்சி  அளவு வெளிச்சமேனும் தராவிடில் எழுதாமல் இருப்பது மேல் என்ற கொள்கை வகுத்துக் கொண்டு எழுதினேன்.
வாசகர் ஒருவர் மனசில் ஒரு சிறு ஒளி கிடைத்த பரவச வெளியீட்டின் முன்பு  உங்கள் படைப்பு என் வாழ்க்கையை மாற்றியது என்று யாரோ முகம் தெரியாத ஒருவர் சொன்னாலோ எழுதினாலோ அதில் ஒரு திருப்தி கிடைத்தது. பெருமை அல்ல. திருப்தி. எங்கோ உருப்படியாக சமுதாயத்திற்கு சிறிதளவேனும் ஒரு சின்ன நட்டோ போல்ட்டோ போன்ற அளவிலேனும் பயன்பட்டதால் கிடைக்கிற அந்த திருப்தி விலை மதிக்க முடியாதது.
அப்படி அடிக்கடி அனேகமாக ஆண்டிற்கு ஓரிருமுறை என் எழுத்திற்கு எதிரொலிகள் வருவது காலம் கடந்து கூட வருவது நான் பெற்ற அனுபவம். ஒரு பக்கம் மேலை நாட்டு இலக்கிய வார்ப்புக்களுக்கு நகல் போல எழுதியும் விமர்சித்து வருகிற பலர்.
கலா பரிபக்குவம் இல்லை. பாத்திரப் படைப்பு இல்லை .. அது இது எல்லாம் இல்லை. அதுவும் இதெல்லாம் வியாபாரப் பத்திரிகை எழுத்து மீடியாக்ரிடி என்று உத-டு பிதுக்கி தீண்டாமை அனுஷ்டித்தபடி விமர்சகப் பெரும்புலவர்கள் வாய் சப்புவதைப் பல முறை கேட்டிருக்கிறேன. பாதிக்கப் பட்டதில்லை.
 கேரளத்திலே தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப் பட்ட ஈழவர்களுக்காக அவர்கள் தொழுவதற்காகவென்று ஈழவ சமுதாயத்தின் மகானான நாராயண குரு ஒரு சிவன் கோயில் கட்டினார். உடனே உயர் ஜாதியாரிடையே பெரும் ஆட்சேபமும் கொந்தளிப்பும் கிளம்பன. நாராயண குரு அமைதியாக சிரித்து விட்டு அடடா நீங்கள் ஏன் அவஸ்தைப் படுகிறீர்கள் ? உங்கள் சிவனுக்கு இல்லை.. மக்களே! ஒரு ஈழவ சிவனுக்குத் தான் நான் கோயில் கட்டினேன் ? என்றார்.
அதைப் போலவே நான் விமர்சகப் பெருமக்களுக்காகவோ இலக்கிய உத்தாரணத் திற்காகவே எழுத வரவில்லை. வாசிக்கிறவர் மனசில் சிறிது வெளிச்சத்தையும் சிறு நெகிழ்ச்சியையும் வரவழைக்க அல்லவா எழுதுகிறேன் என்று திருப்தி அடைந்தேன்.
வந்த பாராட்டுகள் ஒரே ஒரு ஞானத்தை ஏற்படுத்தின. மெச்சிமெச்சிப் புகழ்ந்தால் புகழக் கேட்டால் மமதையே மிஞ்சுகிறது என்ற ஞானம் அது.
இதிலிருந்து விடுபட எப்போதும் முயன்று வரும் நான் தமிழக அரசு பரிசுபெற்றதற்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் இப்போது ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் பரிசு பெற்றதற்குக் கூறிய அதே வாக்கியத்தை 1984ல் 15 ஆண்டுகளுக்கு முன் திருப்பத்தூரிலே  ஏற்புரையிலே அன்றே கூறினேன்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
எந்தக் கிரீடம் தலையில் ஏறினாலும் கழற்றி வைத்து விடுகிறீர்கள் என்று பாராட்டிப் பேசிய நண்பர் கூறினார். தலை கனத்துவிடும். தலை இருப்பது கனம் சுமப்பதற்காக அல்ல  என்று பதில் சொன்னேன்.
நான் பொதுவாக எழுதியானதும் கையெழுத்துப் பிரதியை என் மனைவியிடமும் என் மகளிடமும் வாசித்துக் காட்டும் வழக்கம் இருந்தது. நான் எழுதிய குஷ்கா என்ற சிறுகதையை அவர்களிடம் வாசித்துக் காட்டியபோது நல்ல ரசனையுள்ள அவர்கள் விம்மி விம்மி அழ ஆரம்பித்தார்கள். எனக்கும் கண்ணீர் வந்தது. என் எழுத்து உண்மையான பாதிப்பை ஏற்படுத்தியது என்ற திருப்தியும் வந்தது
என் முதலாவது ஆசிரியப் பணி ஜவ்வாது மலைக் காடுகளில் பஸ் போக்குவரத்து கூட இன்று வரை கூட இல்லாத புலியூர் என்ற ஆதிவாசி ஊரின் வனத்துறைப் பள்ளியில் ஓராசிரியப் பள்ளியில் தான் தொடங்கியது. என்னைச் சென்னைக்குப் போகச் சொன்னவர்கள் நான் வனவாசம் போனதைப் பார்த்து வருத்தப் பட்டார்கள்.அங்கு வாழ்ந்த ஓராண்டில் அந்த கானக வாசம் தந்த கற்பனை தான் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற தமிழக அரசின் இரு ஆண்டுகளுக்குமான நாவல் பரிசினைப் பெற்றது. 1967ல் மலேசியா தமிழ் நேசன் இதழில் வெளியான அந்த நாவலுக்கு வருடா வருடம் ஒரு வாசகர் கடிதமாவது வந்து கொண்டே இருக்கும்.
எங்கள் ஊரிலே என் ஆப்த நண்பரி-ன் அண்-ணா ஒருவரின் அண்-ணன் நடத்திய ஹோட்டலில் அடிக்கடி சென்று அவரோடு காலம் கழித்த நாட்கள் ஏராளம். அந்த ஹோட்டல் ஒரு குடும்பமாக விளங்கியதையும் அந்தக் காலத்தில் மனித மதிப்பீடுகளுக்கு இருந்த மரியாதையும் என் ஜமுனா நாவலில் வடிவம் பெற்றன.
எட்டு ஆண்டுகள் பள்ளிகொண்டா என்ற பெரிய கிராமம் ஒன்றில் பணியாற்றியபோது சுற்றியிருந்த ஊர்களின் தோல் ஷாப்புகளால் ஆற்றங்கரையும் விவசாயமும் அழிந்து கொண்டு வரும் காட்சியைக் கண்டு மனம் பதறிய அனுபவம் கன்னியராகி நிலவினிலாடி என்ற நாவலாக வெளிப்பட்டது. அங்கு சந்திக்க நேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர் மணல்வெளி மான்கள் நாவலில் கதாபாத்திரமானார்.
இப்படி ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் ஒரு கதை உண்டு. சொல்லிக் கொண்டே போகக் கூடிய கதை  புகழ் தேடியோ பணம் தேடியோ எழுதாதே என்று எனக்கு நான் போதித்துக் கொண்டக-தை
புகழ் பொருளற்றுப் போகிறது. போட்டி பொறாமையை வளர்த்து பொல்லாங்காகி விடுகிறது. நான் கண்ட அனுபவம் இது.
பணம் அர்த்தமிழக்கிறது. அர்த்-தங்-களை மேன்மையான மதிப்பீடுகளை அழிக்கிறது. மதிப்பை இழக்கிறது. அழிக்கிறது. மனித மதிப்பீடுகளை மண்ணுக்குள் வீழ்த்தித் தேய்த்து      மாய்த்து     விடுகிறது.
இதுவும்கண்ணார நான் கண்ட அனுபவம். இதையெல்லாம் வெளியிட்டுக் கொண்டு போனால் பைத்தியக்காரன் என்றோ போலிப் பாசாங்கு  என்றோ கெட்ட பெயர் தான் மிஞ்சுகிறது.
ஆனால் என்ன ? எல்லாக் காலத்திலும் சில பைத்தியக்காரர்கள் இருந்து கொண்டு தான் வருகிறார்கள். ஒரு நஷ்டமும் இல்லை என்று காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது.
எனக்குத் தோன்றுவதை வெளியிட்டு மன ஈடுபாட்டோடு உழைக்க வேண்டியது தான் எனக்கு விதிக்கப்பட்ட பணி. இந்த நெடிய அனுபவங்களுக்குப் பன் எனக்கு விளங்கியது இது தான் .
வேதனைகளை வெளியேற்று.
பரவசங்களைப் பகிர்ந்து கொள்.
வெளிச்சத்தைச் சுட்டிக்காட்டு
வேலையைப் பார்த்துக் கொண்டு போ. இவை தான் எனக்கு நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட சாலைத் திருப்பங்கள்.
 ஆத்ம கௌரவம் என்ற பாதையை நோக்கியதே என் பயணம் .
ஆத்மகௌரவம் என்ற சொல் மனித மதிப்பீட்டின் உச்சிப் படிக்கட்டு.
அது தான் பதினெட்டாம் படி. அந்த பதினெட்டாம் படியைக் கடந்து மிதித்து விட்டுச் சபரிமலைக்குச் சென்று ஏறியவர்கள் காண்பது ஒரு திருவாசகம். தத்வமஸி. உங்களில் பலர் அதை அறிந்திருப்பீர்கள் நீ தான் அது. இது தான் அதன் பொருள்
வாழ்க்கைக்கு அதாவது உயிர்வாழ்வுக்கு அர்த்தம் தேடி மனித மனம் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து முயன்று கொண்டே வருகிறது. சலிப்படைந்தவர்கள் அப்படி ஒரு அர்த்தமும் இல்லை என்று சொல்லி அப்படி மறுப்பது தான் அர்த்தம் என்று நிலைநாட்டித் தோற்கிறார்கள். இருக்கட்டும்
தெய்வ நிலை எய்தல் என்பது வாழ்க்கையின் முடிவாக மகான்கள் ஏற்றுக் கொண்ட அர்த்தத்தின் இறுதி . அது காளிகட்டம் போன்ற யாத்திரைக் கட்டமான ஒரு சிந்தனைப் போக்கு. அந்தச் சிந்தனைப் போக்கு தன்னைத் தன்னுள் கண்டுபிடிக்கச் செய்கிறது.
 வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்தில் வைக்கப் படும் என்று சூசகமாகச் சொன்னார் வள்ளுவப் பெருமான்.
தான் தேடிக் கொண்டிருக்கும் ஒரு பொருள் தானே தான் , என்று உறுதி செய்ய முயல்கிறது.
 அதன் ஒரு வெளிப்பாடு தான்' தத்வமஸி' என்ற மகா வாக்கியம். அது தான் முடிந்த வாக்கியம். அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்று நாம் முடிவு கட்டிவிடுவதற்கில்லை. அதுவும் மனித சிந்தனையிலே உதித்த வாக்கு தான். அதற்கு மேல் தேடுதல் இல்லை என்று பொருளல்ல.
மனிதன் தெய்வ நிலையை நோக்கிய இடை விடாப் பயணத்தில் ஈடுபட்டிருப்பவனாகத் தான் நம் இந்திய சிந்தனைப் போக்கு நமக்குக் கற்பத்திருக்கிறது. எவ்வளவு சீர்கேடுகளும் அவநம்பக்கைகளும் நம்மைச்சூழ்ந்து வந்தாலும் நமது பயணம் நின்று விடவில்லை. அந்த ஆத்ம கௌரவத்தை அடைவதற்கு அந்த வாக்கியம் உரைகல்லாக அமைகிறது.
அதற்கும்.... எழுத்துக்கும் ... ...50 ஆண்டுகளாக எழுதி இன்னும் கூட ... அப்படியா ...வையவனா அப்படி ஒரு எழுத்தாளரா? என்று கேள்விப்படாத பாவனையில் பார்க்கும் பலருக்கு இடையில் நிற்கும் முனைந்து முட்டி மோதி முன்ன-ணிக்கு வர விரும்-பாத எனக்கும்... என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றும்.
எழுத்து என்பது ஆத்ம சம்பந்தம். எழுத வந்தவர்கள்.  அந்த ஆத்ம சம்பந்தத்தோடு எங்கோ ஏதோ ஒரு வகையில் சங்கிலிக் கரணையாகத் தொடர்பு கொண்டவர்கள். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அமரத்துவம் பெற்றவர்கள்.
சினிமா நாடகம் இசை நடனம் ஓவியம் என்று எத்தனையோ கலைகள் இன்புறுத்தலாம். கிரிக்கெட் போல ஒரு விளையாட்டு கோடானுகோடி மக்களைப் பித்துப் படிக்கச் செய்யலாம். அவை யாவும் புலன்களை மட்டுமே  தொட்டு வெற்றி பெறக் கூடியவை. எல்லைக்குள் நின்றுவிடுபவை.
அவை கலைகள் .
எழுத்து கலையல்ல. அது கலைக்கும் மேலே.. எல்லாவற்றுக்கும் அப்பால்
‘சரஸ்வதி நம ஸுப்யம்  வரதே காமரூபிணி. வித்யாரம்பம் கரிஷ்யாம் சித்திர் பவது மே ஸதா என்று தொடங்கி ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதம் ஆதாரம் ஸர்வ வித்யாநாம் என்று வளர்ந்து செல்வது அது
ஆத்ம விளக்கத்திற்கான சம்பந்தம் .
மகாகவி சொன்னார்.
எழுதுகோல் தெய்வம் . இந்த எழுத்தும் தெய்வம்.
இதை எழுதி எழுதிவிளங்-கிக்  கொள்வதற்குத் தான் எனக்கு 50 ஆண்டுகள் படித்தன.
திரும்பிப் பார்க்கிறேன்.  நான் மகானல்ல. ஒரு வெகு வெகு சாதாரணமான மனிதன். எளியவன். எல்லாக் குறைகளும் ஒரு சேர நிரம்பியவன்.  எனினும் ..
நான் எழுதிய எந்த எழுத்திலும் , இந்தச் சமுதாயம் எனக்கு விதித்த எந்தப் பணியிலும்
நான் என்னால் இயன்ற அளவு அந்தரங்க சுத்தியோடு முடிந்த அளவு திறனோடு உண்மையாக உழைத்திருக்கிறேன் என்று புலப்படுகிறது.  வேலையை முடித்துக் கொண்டு கை கழுவுகிற உத்தியும் எனக்கு லபித்தது.
ஆசிரியனாகவும் எழுத்தாளனாகவும் சொன்னால் எழுதினால் புரிந்து கொள்-கிற நிலையில் உள்ளவர்களுக்கும் எழுதி வந்த என்னை ஸ்டேட் ரிஸோர்ஸ் சென்டர் என்ற  தொண்டு நிறுவனத்தார்  வயது வந்தோர் கல்விக்கும் அறிவொளித் திட-டத்திற்கும் புத்தகம் எழுதக் கூப்பிட்டார்கள்.
சென்றேன். எல்லா அறிவு மற்றும்  புலமை மிடுக்கையும் மூட்டை கட்டிவைத்து விட்டு மிக மிக எளிய மொழியில் மிகமிக எளிதாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுத வேண்டிய நிலை அது.
ஆக மக்களைச் சென்றடைவதே எழுத்துஎன்ற அறிவு எனக்கு அங்கே கிடைத்தது. பின்னர் ஜன் சிக்ஷன் சன்ஸ்தான் என்ற அகில இந்திய நிறுவனத்துக்கு புதிதாகக் கற்றோருக்கான  தொழிற் கல்விக்கான நூல்-கள் எழுதும் வாய்ப்பில் என் அடக்கம் மேலும் கூடியது
மக்களின் மனதில் ஒரு சிறி-ய தீபத்தை ஏற்றி வைக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது என்று அங்கே தெளிவா-யிற்று. இந்தப் புலப்பாடு  தான் எனக்குக் கிடைத்திருக்கிற ஆத்ம கௌரவ புரஸ்கார் விருது. வேலையை முடித்துக்கொண்டு கை கழுவுகிற உத்தியும் எனக்கு அந்த ஆத்ம சம்பந்தத்தால்  லபித்தது.
அலைகள் வரும் போகும்.
ஆனால் சமுத்திரம் என்றென்றும் இருக்கும்.
அடுத்த காற்றோட்டத்தை, அடுத்த அலைவீச்சை எதிர்நோக்கியபடியே..





No comments:

Post a Comment