Saturday 13 December 2014

இ.தே.ஏ தொடர்கிறது[9] தற்கொலை செய்துகொண்ட நீர்மூழ்கிக் கப்பல்




இ.தே.ஏ தொடர்கிறது[9] 

                            சாக்கடையில் வீழ்ந்து நாசமான ஒரு கர்னல்

இப்படி சாக்கடையில் வீழ்ந்து நாசமாக்கிக் கொள்பவர்கள் கல்வியறிவு குறைந்தவர்கள் என்றில்லை. நன்கு படித்து நல்ல குடும்ப வாழ்வில் உள்ள அதிகாரிகளும் கூட இப்படி தவறிப்போகிறார்கள். 1984-ம் ஆண்டு கர்னல் கணேசன் ஒரு படைப்பிரிவு தலைவராக அருணாசலப் பிரதேசத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது இராணுவத்தின் மற்றொரு பிரிவானப் பீரங்கிப் படையின் தளபதியாக அதே கர்னல் என்ற பதவியில் ராஜசேகரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் பணியாற்றி கொண்டிருந்தார். சுமார் 20க்கும் மேற்பட்ட படைத் தலைவர்களில் அவரும் ஒருவர் என்றாலும் உயர் இராணுவ அதிகாரிகள் கர்னல் ராஜசேகரனின் திறமையான நிர்வாகம் குறித்து மிகவும் புகழ்ந்து பேசுவார்கள். சுமார் ஓராண்டு அங்கு பணியாற்றிய பிறகு கர்னல் கணேசன் ஹிமாசல் பிரதேசத்திற்கும் கர்னல் ராஜசேகரன் திருவனந்தபுரத்திற்கும் இடம் மாறினார்கள். இராணுவப் பணியில் சுமார் 7-8 ஆண்டுகள் ஓடிமறைந்தன.

கர்னல் கணேசன் தென்துருவ இந்திய விஞ்ஞான ஆய்வு தள தலைவராகப் பணியாற்றிவிட்டு 1990ம் ஆண்டு சமயத்தில் பெங்களூரில் உள்ள ஒரு பயிற்சி தளத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். அப்பொழுது கோயமுத்தூரில் யாரோ ஒரு கர்னல் அந்தஸ்தில் உள்ள இராணுவ அதிகாரியின் மேல் சில குற்றங்கள் சாற்றப்பட்டு அவற்றைப் பற்றி விசாரிக்க ஒரு உயர்மட்ட இராணுவக் குழு அமைக்கப்பட்டது. கர்னல் கணேசன் அதில் ஒரு உறுப்பினர். சில நாட்களில் அந்த உயர்மட்டக் குழு கோயமுத்தூரில் கூடியது. அங்கு குற்றம் சாற்றப்பட்டிருந்த கர்னலைக் கண்ட கணேசன் அதிர்ச்சியடைந்தார். அவர் வேறு யாருமல்ல! கர்னல் ராஜசேகரன்தான். என்ன ஆயிற்று? இந்த 7-8 ஆண்டுகளில் எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது. குடிப்பழக்கம்தான்.

இராணுவத்தில் படைப்பிரிவு தலைவராகப் பொறுப்பேற்பவர்களுக்கு தாங்கள் மட்டும் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. தங்களுடைய படைப்பிரிவு அதிகாரிகள் - அதிகாரிகளல்லாதோர் எல்லாரையும் கௌரவமாகவும் மரியாதையுடனும் வழி நடத்த வேண்டும். கர்னல் ராஜசேகரன் சிறப்பான கௌரவத்துடன் தான் அருணாசலப் பிரதேசத்திலிருந்து திருவனந்தபுரம் பணிமாற்றம் பெற்று சென்றார். திருவனந்தபுரத்தில் அவரது பணி பொதுவாழ்வில் உள்ள அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்டிருந்தது. அவர்கள் இராணுவ அதிகாரிகளுக்கு உரிய சலுகையைப் பயன்படுத்தி ஏராளமான மது வகைகளை ராஜசேகரனின் படைப்பிரிவிலிருந்து வாங்க ஆரம்பித்தனர். அடிக்கடி விருந்தும் நடக்க ஆரம்பித்தது. செலவு அதிகமாக அதிகமாக ராஜசேகரன் இராணுவத்திற்காக வந்த மதுப்பாட்டில்களை வெளிச் சந்தையில் விற்க ஆரம்பித்தார். கூடவே குடிப்பழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஆக்ரமிக்க ஆரம்பித்தது. ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறு என்று அடுக்கடுக்காக தவறுகள் செய்ய, ஒரு காலகட்டத்தில் அவரிடம் பணியாற்றிய அதிகாரிகளே அவரைக் காட்டிக் கொடுத்தனர். அதிகார போதை மற்றும் சாராய போதை இரண்டுமே தலைக்கு ஏறிய கர்னல் ராஜசேகரன் தப்பிக்க வழியின்றி பலவிதங்களிலும் எழுத்து சாட்சியங்களுடன் மாட்டிக் கொண்டார். பழைய நட்பின் காரணமாக ஒருமுறை கர்னல் கணேசனிடம் வந்துதான் தப்பிக்க ஏதும் வழியுண்டா என்று கேட்டுப் பார்த்தார். கர்னல்  கணேசன் அவர் மீது வருத்தப்படுவதைத் தவிர வேறு ஏதும் செய்ய முடியவில்லை. அவரிடம் பணியாற்றியவர்கள் இரண்டு மூன்று வருட ஒழுங்கீனங்களை எல்லாம் எழுத்துமூலமாக நிரூபித்தனர். சுமார் 25 வருடப் பணி அனுபவம் இருந்தும் கர்னல் ராஜசேகரன் ஒரு பைசா கூடப் பெற முடியாமல் இராணுவத்திலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். வெளியேறிய சில நாட்களுக்குள் அவர் இறந்துவிட்டார் என்பது வருத்தப்படத்தக்க செய்தியே.
                           சட்ட திட்டங்கள் ஒருவரைத் திருத்திவிட முடியாது
ஆனால், இவைகளை மட்டுமே மனதில் கொண்டு இராணுவத்தினர்களின் பழக்க வழக்கங்களை முடிவு கட்டிவிட முடியாது. மற்ற துறைகளைப் போலவே இராணுவமும் தனிமனிதர்களின் குணநலன்களை அடிப்படையாகக் கொண்டது. சட்ட திட்டங்கøள் கொண்டும் கடுமையான நடவடிக்கைகளைக் கொண்டும் ஒருவனைத் திருத்திவிட முடியாது. நல்ல பழக்கங்கள் மனதில் உருவக வேண்டும். இராணுவத்தில் 30-40 வருடங்கள் பணியாற்றிய அதிகாரிகள், அதிகாரிகளல்லாதோரில் மது அருந்தாதவர்கள் எண்ணற்றோர் உண்டு. இராணுவத்தில் சில உயர் அதிகாரிகள் அவர்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை அவர்களுக்குக் கீழ் பணியாற்றும் இராணுவத்தினர்கள் மீது கட்டாயமாகத் திணிப்பதுண்டு. இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு இராணுவ சட்ட திட்டங்களையும் ஒழுங்கு முறைகளையும் மதித்து உயர்ந்த நிலைக்கு வந்தவர் லெப்டினெண்ட் ஜெனரல் ஹனூட் சிங்.  திருமணம் செய்து கொள்ளாதவர். மேலும், எந்த இராணுவ விருந்தாக இருந்தாலும் நடைமுறைக்கு ஏற்ற விதத்தில் இரவு சுமார் 91/2 - 10 மணி சமயத்தில் முடித்துக் கொள்ளவும், விருப்பப்படுவோர் தொடரவும் அனுமதி அளித்துவிட்டு அவர் சென்றுவிடுவார். இராணுவத்தை விட்டு ஓய்வு பெற்றபின் ஆன்மீக குரு பாலயோகியின் டேராடூன் கிளை மடத்தில் ஒரு யோகியாக அவர் இருப்பது இராணுவத்தினர் பற்றிய மக்களின் கணிப்பிற்கு ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.
                                               குளிரும் மதுவும்
உறைபனி இடங்களில் பணியாற்றுவோர் குளிரின் தாக்கத்தை சமாளிக்க மது அருந்துவார்கள் என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விவாதமே. சியாசென் மலைப் பகுதிகளில் பணியாற்றும் இராணுவத்தினரில் பலர் மது அருந்துவதில்லை. இந்த நூலாசிரியருடன் தென்துருவ பனிக் கண்டத்தில் 11/2 வருடங்கள் பணியாற்றியவர்களில் ஓரிருவர் மது அருந்தாதவர்கள். உறைபனி கண்டத்தின் குளிர் அதிகபட்சமா - 89.60 டிகிரி   பதிவாகியுள்ளது. சாதாரணமாகவே குளிர் - 30 டிகிரி  அல்லது 40டிகிரி  இருக்கும். அப்படி இருந்தும் அங்கு கூட தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் மது அருந்தாமலும் சைவ உணவு அருந்துபவர்களும் உண்டு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
                                       இலக்கைத் தேடும் ஏவுகணைகள்

“எண்ணம் போல் வாழ்வு” என்று எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் எழுதி வைத்தவர்கள் தமிழர்கள் தாம் ‘எண்ணங்களே மனிதனின் ஏற்றத் தாழ்வை நிர்ணயிக்கின்றன’ என்பது இன்றைய மனோதத்துவ மேதைகள் உலகுக்குச் சொல்லும் விஞ்ஞான பூர்வமான உண்மை. இதுதான் உண்மை என்றால் நல்லவாழ்க்கை பற்றி எண்ணிக் கொண்டிருந்துவிட்டு அவற்றை அடைந்து வாழ்ந்துவிட்டுப் போக வேண்டியதுதானே! பின்னர் ஏன் மனிதர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். ஏழை - பணக்காரன், பலசாலி - கோழை, அறிவாளி-அறிவற்றவன் போன்ற எண்ணற்ற பாகுபாடுகளும் வித்தியாசங்களும் ஏன்?

அங்குதான் சூக்ஷமம் இருக்கிறது. எண்ணங்கள் உருவாவது மனதில். ஆனால், எல்லா பெரியோர்களும் சொல்லிய மற்றொரு உண்மை என்னவென்றால் அது “மனம் ஒரு குரங்கு” என்பதாகும். குரங்கு ஒரு நிமிடம் கூட சும்மா இருக்காது மரத்திற்கு மரம் தாவிக் கொண்டிருக்கும். இப்படித் தாவிக் கொண்டிருக்கும் மனதை ஒரு நிலைப்படுத்துவது என்பது முற்றும் துறந்த முனிவர்களுக்கும் முடியாத ஒன்று. அப்படி இருக்க மனதை ஒரு நிலைப்படுத்தி - பிறகு அதில் தனக்குத் தேவையான எண்ணங்களை விதைத்து - அதை அடைந்து நல்வாழ்வு வாழ்வது எப்படி?

ஏவுகணைகளில் நெறிபடுத்தப்படும் ஏவுகணைகள் என்றும் விடுபட்டவுடன் தானே இலக்கைத் தேடிக் கொள்ளும் ஏவுகணைகள் என்றும் இருவகைப்படும். இரண்டு வகைகளிலுமே நன்மை தீமைகள் உண்டு. மனித மனம் எப்படி இருக்க வேண்டும்? இலக்கைத் தேடும் ஏவுகணைகள் போன்று தான் இருக்க வேண்டும். ஆனால் அதை நெறிப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாதது.

                              தற்கொலை செய்துகொண்ட நீர்மூழ்கிக் கப்பல்

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஆழ்கடலில் வெடித்துச் சிதறி மூழ்கடிக்கப்பட்டது. அது ஒரு ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கி கப்பல். யார் அதை மூழ்கடித்தார்கள்? - ஏன் மூழ்கடித்தார்கள்? போன்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மிகத் தீவிரமாக நடத்தப்பட்ட இந்த விசாரணையில் ஒரு திடுக்கிடும் உண்மை புலனானது. அந்த நீர்மூழ்கிக்கப்பல் தற்கொலை செய்து கொண்டது. அதாவது தன்னுடைய ஏவுகணையினாலேயே தாக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டது. ஏன்?

அந்த நீர்மூழ்கிக்கப்பல் இலக்கைத் தேடும் ஏவுகணை தாங்கியது. ஆழ்கடலில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத ஒரு விபத்தாக ஏவுகணை வீசப்பட்டு விட்டது. இலக்கைத் தேடும் ஏவுகணைகள் வீசப்பட்டவுடன் முன்பே நிர்ணயிக்கப்பட்ட விசைகளின்படி எதிரி நீர்மூழ்கிக் கப்பலைத் தேட ஆரம்பித்து விட்டது. ஒவ்வொரு கோணத்திலும் தனது மின் அலைகளைச் செலுத்தி மிக நுணுக்கமான ஆய்வுப் பணியில் சுற்றி வந்தது. துரதிர்ஷ்ட வசமாக அந்த ஆழ்கடல் பிராந்தியத்தில் எந்த ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் இல்லை.

இப்படி ஒவ்வொரு கோணத்திலும் ஆராய்ந்து சுற்றி வந்து கொண்டிருந்த ஏவுகணை கிட்டத்தட்ட 360 டிகிரியையும் ஆராய்ந்து முடியும் தருவாயில் தான் எங்கிருந்து ஏவப்பட்டதோ அந்த நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டது. ஏவுகணைகளின் வடிவமைப்பிலும் ஆய்வு விசைப் பகுதிகளிலும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை அடையாளம் காணக்கூடிய மின்னணு சாதனங்கள் தாம் இருக்குமே ஒழிய, அந்த நீர்மூழ்கிக்கப்பல் தங்கள் நாட்டினுடையதா அல்லது எதிரி நாட்டினுடையதா என்ற பாகுபாடு கண்டறிவதற்கான வாய்ப்பு அப்பொழுது நடைமுறையில் இல்லை. ஆகையினால், நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டவுடன் அந்த ஏவுகணை விரைந்து சென்று அந்தக் கப்பலைத் தாக்கிச் சிதறடித்து விட்டது.

இலக்கை மட்டுமே தேடும் ஏவுகணையால் வந்த விபத்து இது. இன்றைய மனிதர்களும் அப்படித்தான் இலக்கை மட்டுமே தேடிச் சீரழிகிறார்கள். இயந்திரங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கும் போது அங்கு வேறுவிதமான குறுக்கீடுகள் இருப்பதில்லை. ஆனால், மனிதன் ஒரு இலக்கை நிர்ணயித்துச் செயலாக்க முற்படும் போது எண்ணற்ற குறுக்கீடுகள் வருகின்றன.[வளரும்]

1 comment:

  1. sir,this is the "punch"story of the entire book.It has come out nicely.Congratulations for the strain taken. Hope that viewers will appreciate.
    Regards.

    ReplyDelete