Saturday 20 December 2014

இ.தே.ஏ.12 பதுங்குக்குழியில் குண்டடி

          
                     

                                          
       இ.தே.ஏ.12                     பதுங்குக்குழியில் குண்டடி
சீனாவுக்கு எதிராக அமெரிக்க அரசு வழங்கிய ஏராளமான படைக்கலங்களுடன் உருவானப் படைப்பிரிவு அது. ஆகையினால் 1965-ல் இந்திய-பாகிஸ்தானிய போரில் மிக முக்கிய பங்கு வகித்தது அந்த படைப்பிரிவு போர் மேகங்கள் 1965 ஆகஸ்ட் மாதத்திலேயே சூழ ஆரம்பித்து விட்டதால் அந்த படைப்பிரிவு வடகிழக்குப் பகுதியிலிருந்து பஞ்சாப் வந்துவிட்டனர். போர் ஆரம்பித்த நாலைந்து நாட்களுக்குள் எந்த பகுதியில் இந்தியா வலுவான நிலையில் உள்ளதோ அங்கு அந்த படைப்பிரிவு போரிட முனைந்தது. எதிரியின் தாக்குதலும் அங்கு மிகவும் உக்கிரமமாக இருந்தது. பாகிஸ்தானிய வான் படையினர் பத்தான்கோட் ஜம்மு பகுதியில் மீண்டும் மீண்டும் குண்டு வீசினர். Straffng என்று சொல்லப்படுகின்ற முறையில் அதாவது விமானத்தில் கீழ்நோக்கி மீடியம் வகை மெஷின் கன் பொருத்தி இயக்கவும், விமானம் நமது ஆக்கிரமிப்புப் பகுதியில் சுற்றிச் சுற்றி இரண்டு மூன்று முறை வந்து போவதுமாக இருந்தது. இதனால் தரைமட்டத்தில் இல்லாமல் பதுங்குக்குழியில் இருப்பவர்களும் கொல்லப்படலாம். அப்படிப்பட்ட போர்ச் சூழலில் கணேசன் காலில் குண்டடிபட்டு போர்க் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். நண்பர்கள் இருவரும் சில ரகசியக் குறியீடுகள் முறையில் தங்களது போர்க்கால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இப்படி 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. இருவருமே நாட்டின் அவசர நிலை காரணமாக இராணுவத்தில் சேர்ந்தவர்களாதலால் அந்த நிலை நீக்கப்பட்ட உடன் இராணுவத் தலைமையகம் அவர்களுக்குக் கடிதம் அனுப்பினர். அதாவது அவர்கள் தொடர்ந்து இராணுவத்தில் இருக்க விருப்பப்படுகிறார்களா அல்லது அவர்களது பொதுப் பணித்துறை வேலைக்குத் திரும்பி விடுகிறார்களா என்று கேட்டிருந்தனர். திருநாவுக்கரசு தான் இன்னும் இரண்டு வருடம் மட்டுமே பணியாற்றி விட்டுப் பொதுப் பணி துறைக்குப் போய் விடுவதாகத் தெரிவித்து இருந்தார். கணேசன் பட்டயப்படிப்பு மட்டுமே படித்தவர். பொதுப்பணித் துறையில் அவ்வளவு சிறந்த எதிர்காலம் இருக்காது. அதற்குப் பதிலாக அவர் இராணுவத்தில் தொடர்ந்தால் அவர் உடனடியாக பட்டப் படிப்புக்காகப் பொறியியற் கல்லூரி அனுப்பப்படுவார். மேலும் மிகவும் சுறுசுறுப்பாகவும் வீரதீர விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவராகவும் இருப்பதால் இராணுவமே சிறந்தது. ஆனால், அவர் இராணுவத்தில் தொடர விருப்பப்பட்டால் மீண்டும் இராணுவத் தேர்வுக்குச் செல்ல வேண்டும். இது பற்றி திருநாவுக்கரசு விடமும் கணேசன் கலந்தாலோசித்தார். கணேசன் மீண்டும் இராணுவத் தேர்வுக்குச் செல்வது என்றும் அப்படித் தேர்வாகாவிட்டால் பொதுப்பணி துறைக்கு வந்து விடுவது என்றும் முடிவெடுத்தார்கள்.

இறைவனது கருணை கணேசன் பக்கமிருந்தது. பலவிதமான இயற்கை இடையூறுகளுக்கிடையில் மேகலாயா மாநிலத்திலிருந்து அலாகபாத்தில் உள்ள இராணுவத் தேர்வு மையத்திற்குச் சென்று நான்கு நாட்கள் நடைபெறும் அந்த தேர்வில் கலந்து கொண்டார். முடிவு அவருக்கு சாதகமாக இருந்தது. கணேசன் இந்திய இராணுவத்தில் ஒரு நிரந்தர அதிகாரியாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அதனால் 1970-ம் ஆண்டு அவர் மகாராஷ்டிர மாநிலம் பூனேயில் உள்ள இராணுவப் பொறியியற் கல்லூரிக்கு மூன்றாண்டு கால பட்டப்படிப்புக்கு அனுப்பப்பட்டார். அதிர்ஷ்ட வசமாக நண்பர் திருநாவுக்கரசு பணிமாற்றம் பெற்று பதவி உயர்வில் @மஜர்  என்ற தகுதிபெற்று பூனேவுக்கு கேரிஸன் என்ஜினியர்  ஆக வந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்தார்கள். இராணுவப் பொறியியற் கல்லூரியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் திருநாவுக்கரசு பணியாற்றிக் கொண்டிருந்தார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகி இருந்தார். கணேசன் மிகவும் பிரசித்திப் பெற்ற ராயல் என்பீல்ட்  மோட்டார் சைக்கிள் அதுவும் மிகவும் கனமான 3.5 புல்லட் வாங்கி இருந்தார். கல்லூரியிலிருந்து எத்தனையோ நாட்கள் திருநாவுக்கரசு வீட்டிற்குச் சென்று அங்கேயே தங்கி விடுவார்.5-6 ஆண்டு கால இடைவெளி அவர்களது தனி வாழ்விலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது.
            உயிரோடு இருக்கும் போது உணர முடியாத தாயின் பங்கு
கணேசனின் தாய் 1970-ம் ஆண்டு இறந்து போனார். ஒரு குடும்பத்தில் தாயின் பங்குமகத்தானது என்பதை அவர் உயிரோடு இருக்கும் போது உணரப்படுவதில்லை. ஏழு குழந்தைகள் பெற்றெடுத்த அவர் அந்த ஏழுபேரையும் எப்படிக் கட்டுக்குள் வைத்திருந்தார் என்பது அவர் இறந்த பிறகுதான் தெரிய வந்தது. திருமணமானவர்கள் தங்கள் தங்களது குடும்பமே பெரிதென வாழ்ந்தனர். திருமண மாகாதவர்கள் கயிறறுந்த காற்றாடி என உலகச் சூழலில் சிக்கி பரிதவித்தனர். இதில் திருமணமாகாத கணேசனின் நிலை என்னவென்று சொல்லத் தேவை இல்லை. குடும்பச் சூழ்நிலை காரணமாக அவரது தம்பிக்கு அன்னை மறைந்த சில நாட்களுக்குள் திருமணம் செய்ய நேர்ந்தது. அது கணேசனின் நிலையை மேலும் சங்கடமாக்கியது. கணேசனுக்குத் திருமண ஏற்பாட்டின் போதெல்லாம் அண்ணன் இருக்கையில் தம்பிக்கு ஏன் திருமணம் செய்வித்தார்கள் என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் அவர்களது எண்ணத்திற்கு ஏற்ப பதில் தேடிக் கொண்டனர். தமிழ்நாட்டில் இராணுவத்தினர்க்கு மணவினை அவ்வளவு சுலபமாக அமைந்து விடுவதில்லை. இதுபோன்ற காரணங்களினால் கணேசன் எதிர்பார்த்த கால இடைவெளியில் திருமணம் புரிய முடியவில்லை.

இரண்டு தங்கைகளுடன் பிறந்து வளர்ந்திருந்த திருநாவுக்கரசு திடீரென்று ஒரு தங்கையை இழந்தார். போதிய மருத்துவ வசதி இல்லாமலேயேதான் பெண் இறந்தாள் என்று நினைத்த அவரது பெற்றோர் எக்காரணத்øத் கொண்டும் அவர் இராணுவத்தில் நிரந்தரமாக இருக்கக் கூடாது என்று நிர்பந்தப்படுத்தினர். இதனால் திருநாவுக்கரசு ஏழு ஆண்டுகால இராணுவ வாழ்க்கைக்குப் பிறகு பொதுப் பணித்துறைக்குத் திரும்பினார். எத்தனையோ நாட்கள் அவர்களது வீட்டில் கணேசன் தங்கி இருந்திருக்கிறார். பாலைவனம் போன்ற தனது வாழ்வில் திருநாவுக்கரசின் வீடு ஒரு பசுஞ்சோலை என்று ஆறுதல் பெற்றிருக்கிறார். ஆனாலும், அவர்களது வழி தனித்தனி என்றாகி விட்டது. 1971ம் ஆண்டு திருநாவுக்கரசு இராணுவத்தை விட்டு விலகிவிட்டார். கணேசன் தனது பொறியியற் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தார்.

                                   இந்திய-பாகிஸ்தான் போர்
இந்நிலையில் எதிர்பாராத நேரத்தில் இந்திய-பாகிஸ்தானின் போர் 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பமானது. கிழக்கு பாகிஸ்தானின் கலவரம் காரணமாக ஏற்பட்ட போர் அது. கிழக்கு வங்காளம் என்ற அந்தப்பகுதி ஒரு பெரிய சமவெளி. கங்கையின் ஆற்றுப்படுகையே கிழக்கு வங்கம். ஏராளமான நதிகள் குறுக்கும் நெடுக்கும் பாய்கின்றன. இந்திய இராணுவம் அங்கு போரிட நேர்ந்தால் ஏராளமானப் பொறியாளர் படைப் பிரிவினர் தேவைப்படும். ஆனால், சுமார் 400 - 500 பொறியாளர் அதிகாரிகள் இராணுவப் பொறியியற் கல்லூரியில் பலவிதமான பயிற்சியில் / உயர் படிப்பில் இருந்தனர். இதனால் பொறியியற் கல்லூரி உடனடியாக மூடப்பட்டு அதிகாரிகள் படைப் பிரிவிற்கு அனுப்பப்பட்டனர். கணேசன் தனது சாமான்களை எல்லாம் ஒரு நண்பரின் வீட்டில் போட்டார். விபரங்களடங்கிய ஒரு கடிதமெழுதித் தான் உயிரோடு திரும்பாவிட்டால் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்துஅதன்படி நடவடிக்கை எடுக்கும்படி சொல்லிவிட்டு அவர் படைப்பிரிவு சென்று விட்டார். பொதுப்பணி துறையில் பணியாற்றிக் கொண்டு இருந்த திருநாவுக்கரசு தனது நண்பரின் போர்க்கால சூழ்நிலை அறிந்து மிகவும் ஆறுதலாக அவருக்குக் கடிதமெழுதினார்.

உலக வரலாற்றில் ஒரு புதுவிதமான போர் அணுகுமுறையாக கிழக்குப் பாகிஸ்தானிய போர் முடிந்து “பங்களாதேஷ்” என்ற புதிய நாடு உதயமானது. அப்படிப்பட்ட புரட்சிகரமானப் போரில் கலந்து கொண்ட கணேசன் கொமிலா, மைனாமட்டி, டாக்கா போன்ற நகரங்களின் வீழ்ச்சியையும் 93,000 பாகிஸ்தானிய இராணுவத்தினர் 16 டிசம்பர் 1971 அன்று மாலை 41/2 மணியளவில் டாக்கா குதிரைப் பந்தய மைதானத்தில் இந்திய இராணுவத்தினரிடம் சரணடைந்ததையும் கண்டுகளித்து விட்டு எந்தவிதமான ஆபத்தும் இல்லாமல் மீண்டும் இராணுவப் பொறியியற் கல்லூரி திரும்பினார். போரின் அழிவுகளை நேரில் கண்டு திரும்பிய கணேசனுக்கு திருமண ஏற்பாட்டில் அதே போர் காரணமாகப் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், அதைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் 1973-ம் ஆண்டு 28 மே மாதம் அவர் பொறியியற் கல்லூரியில் சிவில் என்ஜூனியரிங் பிரிவில் முதல் மாணவனாகப் பட்டம் பெற்றார்.
                                                     பெண் பார்க்கும் படலம்
பட்டப் படிப்பு முடிந்தவுடன் கணேசன் பணிமாற்றம் பெற்று பங்களூர் வந்தார். ஊருக்கு அருகில் இருக்கும் அந்த காலகட்டமே அவர் திருமணம் செய்து கொள்ள சிறந்தது என்று பலவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அவரது சின்ன அண்ணன் ஒரு மாதம் போல் விடுமுறை போட்டுவிட்டுப் பல இடங்களிலும் பெண் பார்த்தனர். குடியாத்தம் அருகில் ஒரு B.Sc., M.B.B.S, படித்த அரசாங்க பெண் மருத்துவரின் குடும்பத்தினர் கணேசனின் திருமணத்தில் விருப்பம் காட்டினர். பெண், மாப்பிள்ளை பார்த்து முடிவெடுக்கும் நிலையில் கணேசன் தனது நண்பர் திருநாவுக்கரசை சந்தித்து அவரும் அவரது துணைவியும் குடியாத்தம் சென்று அந்தப் பெண்ணை பார்த்து வரும்படிக் கேட்டுக் கொண்டார். தனது நண்பருக்கு செய்யக் கூடிய மற்றொரு முக்கிய உதவி என்று நினைத்து அவர்கள் இருவரும் குடியாத்தம் சென்று அந்தப் பெண்ணையும் அவர்கள் குடும்பத்தினரையும் பார்த்து வந்தனர்.

 சுமார் 7 ஆண்டுகள் திருமணமானவராக இராணுவத்திலிருந்த நண்பர் திருநவுக்கரசு அந்தப் பெண் கணேசனுக்கு ஏற்றவராக இருக்க மாட்டார் என்று கருத்து தெரிவித்தார். திருமணத்திற்காகப் பெண் - மாப்பிள்ளை பார்க்கும் போது எந்த காரணத்திற்காக ஒரு வரன் ஏற்கப்பட வேண்டும் அல்லது நிராகரிக்கப்பட வேண்டும் என்பதை இரு வீட்டாருமே தனித்தனியாக விவாதிப்பது மிகவும் நல்லது. திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணும் பையனும் வெளிப்புற தோற்றம், குடும்பம் போன்றவற்றின் அடிப்படையில் முடிவெடுத்தாலும் வயது முதிர்ந்தவர்கள் மற்ற காரணங்களில் கவனம் செலுத்தி அதன் நன்மை தீமைகளை மணமக்களாகப் போகுபவர்களுக்குத் தெரிவிப்பது என்பது நல்ல முடிவு. கணேசன் தனது நண்பரின் முடிவை ஏற்றுக் கொண்டார். இதனால் திருநாவுக்கரசு அதன்பிறகு கணேசனின் திருமணத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். கணேசனுக்குப் பார்த்த பெண்களின் விபரங்களை எல்லாம் கேட்டு அவரும் கணேசனின் சின்ன அண்ணனும் மீண்டும் ஒருமுறை அந்த விபரங்களையும் பார்த்தனர். அதன் அடிப்படையில் சென்னைதேனாம்பேட்டையில் உள்ள பி அண்ட் டி காலனியில் பார்த்திருந்த பெண்ணின் குடும்பத்தினரை மீண்டும் சந்தித்துப் பேசினர். இன்னும் சில இடங்களிலும் பெண் பார்த்தனர்.

                     உடுக்கை இழந்தவன் கைபோல உதவிய நட்பு

1973-ம் ஆண்டு தீபாவளி சமயம் திருநாவுக்கரசு தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கச் சென்றிருக்கிறார். அங்கு ஏதோ சாமான்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண் அவர் கவனத்தைக் கவர்ந்து கணேசனுக்கு இவளைப் போன்ற பெண் மனைவியாக அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே படி இறங்க எத்தனிக்கையில் அவர்கள் சில நாட்களுக்கு முன் க-கூ காலனியில் சந்தித்த அம்மையார் அமர்ந்திருக்கக் கண்டு வணக்கம் சொல்லி அவர்கள் பெண்ணுக்குத் திருமணமாகி விட்டதா என்று விசாரித்திருக்கிறார். இன்னும் இல்லை என்றும் அதோ நின்று கொண்டிருக்கிறாளே அவள்தான் தனது பெண் என்றும் அந்த அம்மையார் சற்று முன்பு திருநாவுக்கரசு பார்த்திருந்த அதே பெண்ணை சுட்டிக் காட்டியிருக்கிறார். அப்படியா! மகிழ்ச்சி கணேசனுக்கும் இன்னும் திருமணம் நிச்சயமாகவில்லை என்று சொல்லி விட்டு வந்துவிட்டார். அன்று இரவே பெங்களூருக்கு டெலிபோன் செய்து கணேசனை உடனடியாக சென்னை வரச்சொன்னர். நண்பர்கள் இருவரும் கணேசனது சின்ன அண்ணனுடன் கலந்து ஆலோசித்தனர். கணேசனும் அவரது குடும்பத்தினரும் சுமார் 6 மாதங்ளு முன் அந்தப் பெண்ணைப் பார்த்திருந்தாலும் அந்த வரன் வேண்டாம் என்று சொல்வதற்கு எந்த காரணமும் இல்லை. திருநாவுகரசு கணேசனின் சின்ன அண்ணனிடம் இராணுவ வாழ்வில் கணேசனின் தீவிர ஆர்வம், அதற்குத் துணை நிற்கக்கூடிய அந்தப் பெண்ணின் குடும்பப் பாங்கு, அவளது பெற்றோர் உறவினர் போன்ற காரணங்களை எடுத்துச் சொல்லி கணேசனுக்குத் தனிப்பட்ட முறையில் ஏதாவது விருப்பு வெறுப்பு உண்டா? என்று கேட்டார். தனக்கு அப்படி ஏதுமில்லை என்றார் கணேசன். 1974ம் ஆண்டு பிப்ரவரி 6ம் நாள் தை பூசப் புதன்கிழமை கணேசனது திருமணம் நடந்தது.

நட்புக்கு இலக்கணமாக எவ்வளவோ உதாரணங்கள் சொல்லப்படுகின்றன. நண்பனுக்கு “உடுக்கை இழந்தவன் கைபோல” உதவுவதே நட்பு என்கிறார் திருவள்ளுவர். சுமார் 10 ஆண்டுகள் மிக நெருங்கிப் பழகாவிட்டாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பழகிவந்த நண்பர்களின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம் .

தமிழ் மன்னர்களின் வரலாற்றில் நட்புக்குப் பெயர் பெற்றது கோப்பெருஞ்சோழன் - புலவர் பிசிராந்தையர் நட்பு. பாண்டிய நாட்டுப் புலவரான பிசிராந்தையார் அரசாட்சி செய்வதில் மட்டுமல்லாது அறநெறியிலும் தமிழ் மொழியிலும் வல்லமை பெற்று விளங்கிய கோப்பெருஞ் சோழனை அவனை சந்திக்காமலேயே பெருமதிப்புடன் நேசிக்கிறார். கோப்பெருஞ்சோழனின் மக்களே அவனுக்குப் பகையாகிய பொழுது வடக்கிருந்து உயிர் விட முனைந்தான் சோழன். இதையறிந்த பிசிராந்தையார் தம் உள்ளத்துள் வைத்துப் பூஜித்த நண்பனைத் தனியே வழியனுப்ப விரும்பவில்லை. வடக்கிருக்க முனைந்த மன்னனும் தமது நண்பருக்காக ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள் என்றே சொல்லி அமர்றான். ஓடோடி வந்த பிசிராந்தையார் நண்பனுக்கருகிலமர்ந்து வடக்கிருந்து தானும் உயிர் விடுகிறார். முன்னர் சந்திக்காமலேயே ஒருவர் மனதை ஒருவர் அறிந்து பிசிராந்தையார் வருவார் என்று கோப்பெருஞ்சோழன் சொல்லிய விதமே அவர் ஓடிவர அøத் கண்ட பொத்தியார் என்ற புலவர் பாடுகிறார்.

நினைக்குங்காலை மருட்டைத்தே
எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்
அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
இசைமரபு ஆக, நட்புக் கந்தாக
இனையதோர் லை ஈங் வருதல்
“வருவன்” என்ற கோனது பெருமையும்
அது பழுது இன்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே! (புற-217)

மாட்சிமை பொருந்திய மன்னன் தன்மக்களே தனக்குப் பகையானதறிந்து வடக்கிருந்து உயிர் துறக்க எண்ணியது மிகப்பெரும் வியப்பு. பிறநாட்டிலே வாழும் ஒரு புலவன் நட்பின் காரணமாக ஓடோடி வந்து அவனுடன் சேர்ந்தே உயிர் விடுவது அதனினும் வியப்பு. தன் ஆட்சி செல்லாத நாட்டிலும் சான்றோர்களின் நெஞ்சில் இடம் பெற்ற கோப்பெருஞ்சோழன் எத்தனை உயர்ந்த வேந்தன் என்கிறார்.

கால ஓட்டத்திலே கணேசன் - திருநாவுக்கரசு ஆகியவர்களின் நட்பு வீண் போகவில்லை. பொதுப்பணி துறையில் தலைமைப் பொறியாளராகத் திருநாவுக்கரசு ஓய்வு பெற்றார். இராணுவப் பணியிலிருக்கையில் இந்தியாவின் தென்துருவ ஆய்வு தளத்திற்கு தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அண்டார்டிகாவில் 11/2 வருடம் பணியாற்றி நாட்டிற்கும் தனக்கும் புகழைச் சேர்த்து இந்தியக் குடியரசுத் தலைவரின் விருது பெற்று கர்னல் என்ற பதவி உயர்வில் சென்னையில் தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றார் கணேசன் அவர்களது குழந்தைகள் வளர்ந்து பல உயர் நிலைகளிலிருக்கிறார்கள். திருநாவுக்கரசின் அனுமானம் பொய்க்காமல் திருமதி கணேசன் சிறந்த குடும்பத் தலைவியாக வளர்ந்து இரு ஆண்மக்களுக்குத் தாயானார். மூத்த மகன் இராணுவ அதிகாரியாகவும் இளைய மகன் பொறியாளர் மற்றும் மேலாண்மை வல்லுனர் ஆகவும் பணியாற்றுகிறார்கள்.[வளரும்]

No comments:

Post a Comment