Friday 8 May 2015

ஜெயகாந்தனுக்கு அஞ்சலி 6

ஒரு மனிதன் ஒரு இலக்கியவாதி ஒரு உலகம்
(சென்னை அடையாரில் இருந்து வெளி வரும் “அன்பு பாலம்” சிறு பத்திரிக்கையின் மே2008 இதழ் ஜெயகாந்தன் பவள விழாவின் இரண்டாவது பகுதியாக வந்தது. அதில் அவரைப் பற்றிய எனது கட்டுரை)
கண்டதைச் சொல்லுகிறேன் -உங்கள்
கதையைச் சொல்லுகிறேன்- இதைக்
காணவும் கண்டு நாணவும்- உமக்குக்
காரணம் உண்டென்றால்                        
அவமானம் எனக்குண்டோ?
ஆனந்த விகடனில் வெளிவந்த ‘சொல்’ என்னும் கவிதையை “சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் திரைப்படத்துக்காக ஜெயகாந்தன் பாடலாக்கினார். ஜெயகாந்தன் என்னும் தனி மனிதனைப் புரிந்து கொள்ள இந்தப் பதிவு உதவும்.
ஒரு படைப்பாளிக்குள் மிகவும் நாசூக்கான ஒரு இதயம் நிறைய விழுப்புண்களுடன் தழும்புகளுடன் தத்தளிக்கும். ஒரே கல்லில் இடறினாலும் நகக் கண்ணில் உயிர் போகிற வலி வருவது போல் சொந்த வாழ்க்கையிலும் பிறர் ஏற்படுத்தும் காயங்கள் படைப்பாளியின் சொரணையால் மிக ஆழமானதாய் விழும். உலகெங்கும் ஆகச் சிறந்த படைப்பாளிகள் தற்கொலை செய்து மாய்ந்தனர். இன்னும் பலரும் எழுதுவதை விட்டு ஒதுங்கினர். வேறு பலர் மன அழுத்தத்துடன் மங்கி மடிந்தனர். இன்னும் அது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கும்பிடச் சொல்லுகிறேன்- உங்களை
கும்பிட்டுச் சொல்லுகிறேன்-என்னை
நம்பவும் நம்பி அன்பினில் தோயவும்
நம்பிக்கை இல்லையென்றால் எனக்கொரு
தம்பிடி நஷ்டமுண்டோ?
என கர்வமுடன் நிமிர்ந்து நிற்கும் ஆளுமை ஜெயகாந்தனுடையது. அவரால் எப்போதும் தலை நிமிர்ந்து தன் குரலை உயர்த்த இயன்றது. திருச்சியில் ஒரு விவாத மேடையில் தந்தை பெரியார் மகாபாரதத்தைக் கிழிகிழி என்று கிழித்து அமர்ந்த போது, சற்றும் தயங்காது இந்தியப் பண்பாட்டுக் கூறுகள் பற்றிய அழுத்தந் திருத்தமான ஒரு சொற்பொழிவாற்றினார் ஜெயகாந்தன்.
எந்தை, தந்தை, தந்தை தம் மூத்தப்பன் என்னும் பாரம்பரியம் பற்றிய பெருமிதம் அவருடையது. அதே சமயம் அந்தப் பாரம்பரியத்தைப் பற்றிய விமர்சனங்களை அவர் பதிவு செய்து கொண்டிருந்தார். அரசியலிலும் தாம் இணைந்த கட்சியின் செயற்பாடுகள் தமக்கு ஒத்து வர வில்லையென்றால் விமர்சிக்கவும் விலகித் தனியே நிமிர்ந்து நிற்கவும் அவர் தயங்கியதே இல்லை.
ஒரு இலக்கியவாதி
சிறுகதை, நவீனம், கவிதை, திரைக்கதை, கட்டுரைகள் எனப் பல்வேறு தளங்களில் தமது ஆற்றலை வெளிப்படுத்தினார். அவரது சிறுகதைகளும், கட்டுரைகளும் கூர்மைக்காகவும் அவரது நாவல்களும் திரைப்படங்களும் பாத்திரச் சித்தரிப்புக்காகவும் போற்றிக் கொண்டாடப் பட்டன.
புதுமைப் பித்தனை இன்று வாசித்தாலும் அவருடைய கால கட்டத்தில் எப்படி இத்தனை தனித்தன்மையும் புதுமையும் கற்பனையும் அவரிடம் வெளிப்பட்டன என்ற பிரமிப்பு ஏற்படும். அதுவே ஜெயகாந்தனுக்கும் பொருந்தும்.
பின்னாளில் “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்னும் நாவலாய் சினிமாவாய் வெளிவந்ததன் மூலக் கதையான சிறுகதை “அக்கினிப் பிரவேசம்” . பதினாறு பதினேழு வயதுச் சிறுமி இதே தொழிலாக இருந்த பணக்கார வாலிபனிடம் தனது கன்னித்தன்மையை இழந்து, தாயிடம் சொல்லி அழுகிறாள். ஒரு சொம்புத் தண்ணீரால் அவளைக் குளிப்பாட்டி ‘இது கங்கை உன்னைப் புனிதப் படுத்தும் ‘ என ஆறுதலிக்கிறாள் தாய்.
‘சிலுவை’ என்னும் கதையில் ஒரு பயணத்தின் போது ஒரு குடும்பப் பெண்ணை கவனித்து வரும் கிறித்துவப் பெண் துறவி அன்று மாலை பாதிரியாரிடம் தான் துறவு மேற் கொண்டது பாவம் என்று குறிப்பிட்டுப் பாவ மன்னிப்புக் கேட்கிறார். “உண்மை சுடும்” என்னும் சிறுகதையில் தன் தந்தையின் குறை நிறைகளைப் புரிந்து கொள்கிறார் மகன். நாம் பீடத்தில் வைத்தவர்களை, வைத்தவற்றை, சாதி, மத, இன, நம்பிக்கை தொடர்பான முத்திரைகளை அகற்றி ஒரு நிதர்சனத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறார்.
காதலுடன் இள வயது எஜமானனிடம் தன்னை இழக்கும் இளவயது வேலைக்காரி. கையில் பணத்தைத் திணித்து அவளைக் கொச்சைப் படுத்தியதற்காகக் கழிவிரக்கம் கொள்கிறார் ஒருவர் ‘திரஸ்காரம்’ கதையில்.
இரண்டாம் மனைவியுடன் பகற்பொழுதில் தனித்திருப்பதற்காகப் பையனை ‘மேட்னி ஷோ’வுக்கு அனுப்பும் தந்தை கதவைத் திறக்கும் போது “படம் “அடல்ட்ஸ் ஒன்லி” நான் பார்க்கவில்லை’ என்று கதவருகே நிற்கிறான் மகன். மணமான புதிதில் மனைவி ஒத்துழைக்கவில்லை என்று பழகிய விலை மாதுவிடம் போகும் இளைஞனை ‘புது செருப்பு கடிக்கும்’ என அவள் திருப்பி அனுப்புகிறாள். கதையும் தலைப்பு அதுவே. முதிர்கன்னி ஒருத்தி ஜன்னலருகே என்ன எண்ண ஓட்டங்களுடன் இருக்கிறாள் என விரியும் “நான் ஜன்னலருகே”. “ஒரு பிடி சோறு” வறுமை பற்றிய ஆகச் சிறந்த படைப்பு.
உலகின் வக்கிரங்கள், வன்மங்கள், குரூரங்கள், கோழைத்தனங்கள் இவை யாவையும் அவரது கதாபாத்திரங்கள் வாயிலாக விமர்சிக்கப் படுகின்றன. வெளிச்சப் படுத்தப் படுகின்றன.
ஜெயகாந்தனின் நாவல்கள் இருவிதமானவை. ஒன்று படித்தவர்களின் உலகத்தைப் பற்றியது. மற்றது வறிய கல்வியற்றவர்களின் உலகம். ஆனால் தனி மனிதன், சமூகம், தேசம் என்னு வரையறைகளைத் தாண்டிய ஒரு புதினம் “ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ . தமிழின் ஆகச் சிறந்த ஐந்து நாவல்கள் எனத் தெரிவு செய்தால் இது அவற்றுள் ஒன்றாகும். ‘கோகிலா என்ன செய்து விட்டாள்?’, “பாரிஸுக்குப் போ”, “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”, “ரிஷிமூலம்”, “சில நேரங்களில் சில மனிதர்கள்” ஆகிய நாவல்கள் பெரிதும் படித்தவர் உலகத்தைப் பிரதிபலிப்பவை. “சினிமாவுக்குப் போன சித்தாளு”, “உன்னைப் போல் ஒருவன்”, தலித்துகள் பற்றிய அபூர்வமான பதிவுகள். “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நாவலில் வரும் ஹென்றியும் கிராமமும் இந்திய மண்ணின் பண்பாட்டுக் கூறுகளை ஆழமாகப் பதிவு செய்வது.
ஒரு உலகம்
ஜெயகாந்தன் என்னும் தனி உலகம் (தீவு அல்ல) மற்றும் வாசகர்கள் என்னும் பிரிதொரு உலகம் இவை இரண்டின் பாலங்களாக அமைந்தவையே அவரது படைப்புகள், திரைப்படங்கள்.
‘என் உலகம் வேறு – உன் உலகம் வேறு’ என்று குழப்பமே இல்லாமல் தான் அவர் உரை நிகழ்த்துகிறார். எழுதினார். நண்பர்களுடன் பேசுகிறார். தமது உலகம் பிறருக்கான சமாதானங்கள் எதையும் கொண்டிருக்கத் தேவையில்லை என்று அவருக்குத் தெரியும். மனித நேயமுண்டு, சமுதாயத்தின் மீது அக்கறையுமுண்டு, பண்பாடு பற்றிய புரிதலும் பெருமிதமும் உண்டு. ஆனாலும் அவர் தமது உலகத்தில் இருந்து கொண்டு நம் அருகில் இருக்கிறார். ஆனால் நம்முள் இல்லை.
சுமார் பத்து வருடங்கள் முன்பு குமுதம் இதழ் ஒன்றைத் தயாரித்த போது புகையிலை, கஞ்சா இவை தமக்குத் தீண்டத் தகாத பொருட்கள் அல்ல என வெளிப்படையாகப் பதிவு செய்தார். அவர் ஒரு திறந்த புத்தகம். ஒரு குடும்பஸ்தனாக இருந்தும் பொருள் தேடி குடும்பத்தை நிலை நிறுத்தப் பெரு முயற்சிகள் எடுத்தவர் அல்லர் அவர். பல பத்திரிக்கைகளைத் தொடங்கி நடத்தி இருக்கிறார். அவை நின்று போயின. ஆயினும் அவர் இலக்கியப் பணி என்றும் தொடர்கிறது.
ஜெயகாந்தன் என்னும் ஒரு மனிதனை, இலக்கியவாதியை உள்ளடக்கிய ஜெயகாந்தன் என்னும் உலகம் மிக விரிந்தது. தமிழ் மண்ணின் பெருமை மிக்க அடையாளமாய் என்றும் இருக்கும்.
-சத்தியானந்தன் 

No comments:

Post a Comment