Thursday 30 April 2015

ஜெயகாந்தன் நினைவுகள்


ஜெயகாந்தன் நினைவுகள் 
[இதயம் பேசுகிறது மணியன்]
’ஆனந்த விகடன்’ அலுவலகத்தில் திரு.பார்த்தசாரதி என்ற இளைஞர், அப்போது வாசகசாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பழைய புத்தகங்களையும்-புதுப் புத்தகங்களையும் பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தவர். ஒரு சிறுகதைத் தொகுப்பைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்தார்.
‘ஸார்! இந்தச் சிறுகதைகளைப் படித்துப் பாருங்களேன்! இவை வித்தியாசமான முறையில் அமைந்திருப்பதைப்போல எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் நிச்சயமாக இவற்றை ரசித்துப் பாராட்டுவீர்கள்!‘ என்றார். அந்தப் புத்த்கத்தின் தலைப்பு - ’ஒரு பிடி சோறு’ அதை எழுதியவர் ஜெயகாந்தன்.
புத்தகத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு கதையும் என்னைச் சிந்திக்க வைத்தது. புத்தகம் முழுவதையும் படித்து முடிக்கும் வரையில் வேறு எந்த வேலையிலும் மனம் பதியவில்லை. துணிச்சலான கருத்துக்களை, அவருக்கே உரிய தனியான நடையில் வெகு லாகவமாகக்  கையாண்டிருந்தார் ஜெயகாந்தன். அவரை எப்படியாவது ’ஆனந்த விகடனி’ல் எழுதும்படி செய்ய வேண்டும் என்று ஆவல் எனக்கு உண்டாயிற்று. பத்திரிகையில் முழுப்பொறுப்பை ஏற்றிருந்த திரு. எஸ்.பாலசுப்பிரமணியம் அவர்களின் அனுமதியுடன் அவரைச் சந்தித்துப் பேசினேன்.
’ஆனந்த விகடனில் எழுதுங்கள்’ என்று அந்த அலுவலகத்திலிருந்து ஓர் உதவி ஆசிரியர், அழைப்புடன் வந்து நின்றால், அந்த எழுத்தாளர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொள்வார் என்றுதான் எல்லாரும் நினைப்பார்கள். ஆனால் ஜெயகாந்தன் அப்படி எழுதச் சம்மதிக்கவில்லை. ‘என்னுடைய சிறுகதைகளை நீங்கள் துணிந்துபோட மாட்டீர்கள். போட்டாலும் உங்கள் பத்திரிகையின் சௌகரியத்திற்கு ஏற்றபடி ’எடிட்’ செய்து போடுவீர்கள். அதற்கெல்லாம் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். எனக்கு இந்த வாய்ப்பு வேண்டாம்‘ என்று ஒதுங்கிக் கொள்ள முயன்றார் ஜெயகாந்தன்.
அந்த நல்ல எழுத்தாளர் எழுதக் கூடிய வாய்பை ’ஆனந்த விகடன்’ இழந்து விடக்கூடாது என்று நான் எண்ணினேன். அவருடைய நிபந்தனைகளையும் ஒப்புக்கொண்டேன். மற்றவர்களைவிட அதிகமாகச் சன்மானம் செய்து கொடுப்பது, அவருடைய தனித்தன்மை வெளிப்படும்படி சிறுகதைகளை அவர் சுதந்திரமாக எழுத இடம்கொடுப்பது, அவருடைய எழுத்துக்களை அவருடைய சம்பந்தம் இன்றி ’எடிட்’ செய்வதில்லை.. இப்படிப் பல நிபந்தனைகளையும் ஒப்புக்கொண்டேன்.
ஜெயகாந்தன் ’ஆனந்த விகடனி’ல் எழுதத் தொடங்கினார். அந்தச் சிறுகதைகளைப் படித்தவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். அவருடைய எழுத்துக்கள் எல்லா வாசகர்களுடைய கவனத்தையும் கவர்ந்தன. வாசகர்கள் பலரிடமிருந்து பாராட்டுக் கடிதங்களும் வந்தன. ஒருசில கண்டனக் கடிதங்களும் வந்தன. இது நாங்கள் எதிர்பார்த்ததுதான். ஜெயகாந்தனின் சிறுகதைகளில் போலிச் சம்பிரதாயங்களை உடைத்து எறியும் துணிச்சல் இருக்கும். மேலோட்டமான ரசனைகள் உள்ளவர்கள் மத்தியில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திற்று.
அப்போது ஆசிரியர் வாசன் வாரம் ஒருமுறை ஆசிரியர் குழுவைக் கூட்டி விவாதிப்பார். எல்லாரும் அவரவர் கருத்துகளை வெளிப்படையாக எடுத்துச் செல்லலாம். அப்படி ஒரு கூட்ட்த்தில், ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு.ஸ்ரீதர் மிகுந்த மனத்தாங்கலுடன் ஜெயகாந்தனின் கதைகளைக் கண்டித்துப் பேசினார். ‘ஜெயகாந்தனின் சிறு கதைகளில் தவறான, ஒழுக்கக்கேடான கருத்துக்கள் வெளிவருகின்றன. அவற்றைப் படிக்கவே பெண்கள் கூசுகிறார்கள். ’ஆனந்த விகடனை’ வழக்கமாக வாங்கிப் படிக்கும் குடும்பங்களில் பெரியவர்கள் வெள்ளிக் கிழமை வந்தாலே மனங்கலங்கும் நிலை ஏற்பட்டு விட்டது ! என்று கொஞ்சம் காரசாரமாகவே தாக்கிப் பேசினார். நேர்மை, ஒழுக்கம், நியாயம் இவற்றுக்கெல்லாம் தானே காவலர் என்ற தற்பெருமை கொண்டவர் அவர். போலிவேதாந்தம் பேசுவது தவிர, இலக்கியத் தரமான கதைகளை மதிப்பிடத் தகுதியில்லாதவர். கொள்கைகளைப் பற்றியும், ஜெயகாந்தனின் சிறுகதைகளைப் பற்றியும் அந்தப் போலிமனிதர் ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொண்டு சண்டை போட்டது எனக்கு வியப்பாக இருந்தது.
ஆசிரியர் வாசன் எல்லாருக்கும் சுதந்திரம் கொடுப்பவர். எல்லாருடைய கருத்துக்களையும் பாரபட்சமின்றிப் பரிசீலனை செய்பவர். அதனால், ‘இதுவரை வெளிவந்த ஜெயகாந்தனின் சிறுகதைகளை எனக்கு அனுப்பி வை‘ என்று கூறிவிட்டுப் போய்விட்டார். கதைகளை அனுப்பி வைத்தேன். எனக்குச் சிறிது கலக்கமாகவே இருந்தது. மறுநாள் வாசன் என்னிடம் ’போன்’  மூலமாக ’ஜெயகாந்தனை நான் சந்திக்க விரும்புகிறேன்’ என்று வேறு சொல்லிவிட்டார். என்னுடைய கலக்கம் மேலும் அதிகமாயிற்று. ஆனால், தொடர்ந்து நடந்த நிகழ்ச்சி என்னை மனம் நெகிழ்ந்து வியக்கச் செய்துவிட்டது ! என்னை அழைத்து ’ஜெயகாந்தனைன் கதைகளைப் படித்தேன். பண்போடு நயமாக எழுதியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து எழுதச் செய்ய வேண்டும்!’ என்று சொன்னார் ஆசிரியர் வாசன். நேரில் அவரைச் சந்தித்த ஜெயகாந்தனிடமும் அவரை மிகவும் பாராட்டி, தொடர்ந்து எழுதும்படி கேட்டுக் கொண்டார். ஆசிரியர் வாசனின் பாரபட்சமற்ற மதிப்பீடும், கருத்தாழமும் இதில் தெளிவாக வெளிப்பட்டது. போலிவேதாந்தம் பேசியவரின் முகமூடியும் இதில் கிழித்தெறியப்பட்டது !
ஜெயகாந்தனின் எழுத்தில் உள்ள வேகம் அவருடைய மேடைப் பேச்சுகளிலும் இருக்கும். தனது கொள்கைகளை எடுத்துவைக்க, எந்தச் சந்தர்ப்பமானலும் - எவர் முன்னிலையிலும் தயங்க மாட்டார். பெரியாரை எதிர்த்து அவர் முன்னிலையே, அவர் திருச்சியில் மேடையில் பேசியதை நான் கேட்டிருக்கிறேன். திருமதி. இந்திரா காந்தியை எதிர்த்து 1971ம் ஆண்டு தேர்தல் கூட்டங்களில் அவர் பேசியதையும் கேட்டிருக்கிறேன்.
தன்னுடைய தனிச் சிறப்பை எடுத்துச் சொல்லிக் கொள்ள அவர் தயங்க மாட்டார் ’அன்று புதுமைப்பித்தன் - இன்று ஜெயகாந்தன்!’ என்று அவர் தனது திறமையைப் பற்றி அடித்துச் சொல்லிப் பேசுவார். ’தமிழ்ச் சிறுகதைகளின் உலகில் இந்த அரைநூற்றாண்டு காலத்தில், உலகின் தரத்துக்கு உகந்த சிறுகதைகளை எழுதி, தமிழையும் - தங்களுடைய தரத்தையும் உயர்த்திக் கொண்ட எழுத்தாளர்கள் ஒருசிலர் உண்டு. அவர்களில் நானும் ஒருவன்’ என்று தனது அனைத்திந்திய நூல் வரிசை புத்தகத்தின் மதிப்புரையில் எழுதி இருக்கிறார் அவர்.
காஞ்சிப் பெரியவர்களைச் சந்திக்க வேண்டும் என்று அவர் பெரிதும் விரும்பினார். அவர்களுடைய ஆசிகளைப் பெற நானும் ஜெயகாந்தனும் சென்னையில் புறப்பகுதியில் இருந்த திரு.எஸ்.வி.சுப்பையாவின் தோட்டத்துக்குப் போனோம். அங்கே அவர் காஞ்சி முனிவரின் முன் நின்று மெய்மறந்து, மனம் உருகிப்போன நிகழ்ச்சி இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. அன்றிலிருந்து அவருடைய வாழ்க்கையிலேயே ஒரு புதிய மாறுதல் உண்டாயிற்று. சுவாமிகளை ஒரு பாத்திரமாக வைத்து அவர் எழுதிய நாவல், தமிழ்ப் புத்தக வெளியீட்டில் பிரமிக்கத்தக்க சாதனையையே ஏற்படுத்திற்று.
ஜெயகாந்தன் எழுத்தாளர் என்று முறையில் சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர். அவருடைய ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற நாவல் திரைப்படமாக உருவாக்கப்பட்ட போது, அனைத்திந்திய அளவில் புகழ் பெற்றது. பல மொழிகளிலும் அவருடைய எழுத்துக்கள், மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த அளவு எல்லாத் துறைகளிலும் பெருமையும் புகழும் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே. தமிழுக்கு அப்படி ஒரு ஜெயகாந்தன் கிடைத்தது, தமிழுக்குப் பெருமை.
சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக என்னுடன் நெருங்கிப் பழகிவரும் நண்பர் அவர். எங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் நிறைய உண்டு. அதேபோல எண்ண ஒற்றுமைகளும் பலவிதத்தில் உண்டு. இவை எதுவும் எங்களுடைய நட்பைப் பாதித்ததில்லை. என்னுடைய குடும்பத்தில் ஒருவராக இடம்பெற்றவர் அவர். ‘ஜெயகாந்தன் என்னுடைய மூன்றாவது மகன்‘ என்றே எனது தாயார் சொல்வது வழக்கம்.
துணிச்சலுக்கு மறுபெயர் ஜெயகாந்தன் !தன்னம்பிக்கைக்கு மறுபெயர் ஜெயகாந்தன் !தமிழ் சிறுகதைகளுக்கு மறுபெயர் ஜெயகாந்தன் !
(மார்ச் 1982 - மணியன் எழுதிய கட்டுரை)

No comments:

Post a Comment