Thursday 13 November 2014

தமிழ் இனி மெல்ல [3.17]தொடர்கிறது

தமிழ் இனி மெல்ல [3.16] சென்ற பதிவின் இறுதியில் 
அம்மங்கையின் பகட்டும், அருள்மொழி நங்கையின் எளிமையும் ஒரு மாறுபாடாகத்தான் இருக்கும். ஆனால் அருள்மொழிநங்கையின் முகத்தில் இருக்கும் அமைதியும், நிறைவும் அம்மங்கையின் முகத்தில் ஒருபொழுதும் தென்படாது. எப்பொழுதும் ஏதோ ஒரு குறை இருப்பது போலத்தான் இருக்கும் அவளது முகம். அவள் முகத்தில் இருந்த குழந்தைத் தனமும், குறுகுறுப்பும், நரேந்திரனை மணந்து சில ஆண்டுகள் ஆனபிறகு மறைந்து வருவதையும், அதே சமயத்தில் அருள்மொழிநங்கையின் முகத்தில் அருள் களையும், நிறைவும் கூடிவருவதையும் இராஜேந்திரர் கவனிக்காமல் இல்லை.  எந்த மகள் எளிய வாழ்வு நடத்துகிறாள் என்று குறைப் பட்டுக் கொள்கிறோமோ, அவள் நிறைவுடனும், அரசியர்க்கு உரிய பகட்டுடன் இருக்கும்  இன்னொரு மகள் எதையோ பறிகொடுத்தது மாதிரி இருப்பதும் அவருக்கு ஏதோ மாதிரித்தான் இருக்கிறது. நரேந்திரனுக்கு அவளை மணம் செய்து கொடுத்தது தவறோ என்று கூட சிலசமயம் எண்ணுவதுண்டு,

ஆனால் ஒருபொழுதும் அருள்மொழிநங்கையின் திருமணத்தைப் பற்றி அப்படி நினைக்கத் தோன்றியதே இல்லை.  அவளது மகனான மறையன் அருள்மொழியும் சிறந்த வீரனாகப் புகழ் பெற்று வருவது மிகவும் மகிழ்வாகத்தான் இருக்கிறது.

ஐந்து வயது நிரம்பிய இராஜேந்திர நரேந்திரன் - அம்மங்கயை?ன் மகன் - பிறந்ததிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்தில்தான் இருந்து வருகிறான். அவனது காலில் இருக்கும கோடுகளைக் கண்ட சோதிடர் அவன் ஒரு பெரிய மன்னனாக ஆட்சி செய்வான் என்று சொன்னது மகாராணி திரிபுவனமாதேவிக்கு மட்டுமல்லாது இராஜேந்திரருக்கும் பெருமையாகத்தான் இருக்கிறது. அவனாவது அவன் தந்
தை மாதிரி இல்லாமல் சிறந்த வீரனாக, கலிங்கம், வங்கம், இன்னும் நடுநாடுகளையும் தன் குடைக்கீழ் கொண்டுவந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணி மகிழ்வதும் உண்டு.

அதே சமயம், மறையன் அருள்மொழி அரசுரிமை ஏற்கக் கூடாது என்று கண்டிப்பாக பிரம்மராயரும், அருள்மொழிநங்கையும் சொல்லிவருவது இராஜேந்திரருக்கு அவ்வளவு ஏற்புடையதாகப் படவில்லை. அவன் கருநாட்டை ஆளும் பொறுப்பேற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றும் எண்ணுவதுண்டு. அவன் அங்கு சென்று வந்த ஆறு திங்கள்களிலேயே கன்னட மொழியைப் பேசக் கற்றுக் கொண்டுவிட்டான் என்று அருள்மொழி நங்கை மூலம் அறிந்து கொண்ட போது அப்படிப்பட்ட எண்ணம் தோன்ற ஆரம்பித்தது.  ஆனாலும் தனது நண்பன் பிரம்மராயரின் குணம் தெரிந்ததால் அந்த எண்ணத்திற்கு அணை போட்டு வருகிறார்.

மருத்துவர் கையைப் பிடித்து நாடி பார்க்கும் போது மனதிற்குள் சிரித்துக் கொள்கிறார். பிரம்மராயரைத் தடுத்துவிட்டார். ஆனால் மருத்துவரை எப்படித் தடுக்க முடியும்? யார் விடுவார்கள்?

“அரசே! நாடியில் சிறிது தெளிவு வந்திருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியே நிலைமை தேறினால் நீங்கள் ஓடி விளையாட ஆரம்பித்து விடுவீர்கள்!” என்று வாயெல்லாம் பல்லாகத் தெரிவிக்கிறார் அரச மருத்துவர்.
“மருத்துவரே! உமது மருந்தால் எமது நிலைமை தேறவில்லை.  எமது நண்பருடன் பேசியதுதான் அஞ்சனமாக இருந்திருக்கிறது.” என்று சிரிக்கிறார் இராஜேந்திரர்.

“அப்படியானால் இவர் உங்கள் அருகிலேயே இருக்கட்டும் தந்தையே!” என்று பரிவுடன் கூறுகிறாள் அருள்மொழிநங்கை.  மெல்லத் தலையாட்டுகிறார் இராஜேந்திரர்.

அரிசோனா மகாதேவன் 
தமிழ் இனி மெல்ல [3.17]தொடர்கிறது 
                                                          அத்தியாயம் 12
                             திருப்பூவனம், பாண்டி நாடு
                              சுபானு, தை 19 - பிப்ரவரி 4, 1044

 “சை என்ன தொல்லை இது? ஈக்கள் தொல்லை ஒரேயடியாப் பெருகிப் போச்சு. ஏ பிள்ளே, மீனாச்சி! வீட்டைச் சுத்தம் செய்யல்லையா? மனுசி பகல்ல சோத்தைத் தின்னுப்புட்டு கொஞ்சம் உறங்கலாம்னா முடியாம போச்சே! என்று சலித்துக் கொள்கிறாள் ஐம்பது வயதை எட்டிப் பிடிக்கப் போகும் வள்ளியம்மை - பாண்டியரின் பொக்கிஷத்தைப் பாதுகாக்க மண்ணுக்கடியில் கோட்டை அமைத்து உயிரைத் துறந்த முருகேசனின் மனைவி. அவள் குறை சொல்வது, தனது மருமகள் மீனாட்சியைப் பற்றித்தான். 

“பொங்கலுக்கு வெட்டிப் போட்ட கரும்புங்க இன்னும் நிறையக் கிடக்கு, அத்தை! அதுதான் ஈயோட தொல்லைப் பெருகிப் போச்சு.  நான்தான் தினமும் ரெண்டு தபா - காலையும், மாலையும் வூட்டை நல்லாப் பெருக்கித் தொடச்சு வச்சிருக்கேனே! சும்மாக் கொறை சொல்லாதீங்க, அத்தை! ஒங்க மயன் காதுல விழுந்தா நான் வூட்டுலே வேலையே பார்க்கறது இல்லேன்னு முதுகுல ரெண்டு தப்பு தப்பிடுவாரு.” என்று தான் வேலை சரியாகச் செய்வதாகவும், தனது கணவனின் முன்கோபத்தைக் கிளறினால் தனக்கு அடி விழும் என்று தனது மாமியாருக்கு அறிவித்திருக்கிறாள். வள்ளியம்மையின் மகன் சொக்கநாதனின் மனைவியும், ஆறு குழந்தைகளுக்கு இருபத்தேழு வயதிலேயே தாயானவளும், வள்ளியம்மையின் அண்ணன் மகளும் ஆன மீனாட்சி.

“ஆமா, நீ ரொம்ப சொக்கனுக்குப் பயந்தவ யாரு! அசந்துபோனா அவனை முந்தானையிலே முடிஞ்சு வச்சுக்கிட மாட்டியா என்ன! சரியாத்தா, நான் வாயை மூடிக்கறேன். ரெண்டு நாழி கண்ணை மூடினாத்தான் உடம்பு அசதி கொறையுது.  பேரப்பசங்க எங்கே போயிருக்காங்க, கழுதை பொதி சொமக்கற வெய்யில்ல?” என்று தனது முதல் மூன்று பேரப் பிள்ளைகளைப் பற்றி பொதி சொமக்கற வெய்யில்ல?” என்று தனது முதல் மூன்று பேரப் பிள்ளைகளைப் பற்றி விசாரிக்கிறாள் வள்ளியம்மை - அடுத்த இரண்டு பேரன்களும் தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்து விட்டு.

“மழை பெஞ்சு வைகையிலே தண்ணி ஓடுதுல்ல, அதுல தொளையப் போயிருக்கானுக. தண்ணீலே இறங்கிட்டா சட்டுனா திரும்பி வரானுக!” என்று குறைந்து கொள்கிறாள் மீனாட்சி.

வாசலில் காலடிச் சத்தம் கேட்கிறது. திண்ணையில் வைத்திருந்த அண்டாவிலிருந்த தண்ணீரைச் செம்பில் எடுத்துக் காலைக் கழுவிக் கொண்டு வீட்டிற்குள் நுழைகிறான் சொக்கநாதன் என்ற சொக்கன். புசுபுசுவென்ற மீசையை நன்கு முறுக்கி விட்டுக் கொண்டிருக்கிறான். கிருதா காதுக்கும் கீழே இறங்கியிருக்கிறது.

“ஆத்தா, சோறு சாப்பிட்டியா? உடம்பு எப்படியிருக்கு? நேத்து முழுக்க ஒரேயடியா இருமிக்கிட்டு இருந்தியே!” என்று அன்னையின் உடல் நலத்தைப் பற்றி விசாரித்தபடி உள்ளே வருகிறான்.

“இப்ப அது ஒண்ணுதான் நான் ஒழுங்காச் செய்யற வேலை.  தினமும் மூணு வேளை திங்கறதும், தூங்கறதும். நீ பசியா வந்திருப்பே, ராசா. சாப்பிட உக்காரு. ஏ பிள்ளே, மீனாச்சி! உன் புருசன் வந்துட்டான்டியம்மா.  சீக்கிரம் சோத்தை எடுத்து வை . அவன் பசியாறணும்.” என்றபடி மெல்ல எழுந்து உட்காருகிறாள் வள்ளியம்மை.

விட்டத்தில் தொங்கும சீலைத் துணித் தூளியிலிருந்து குழந்தை குரல் கொடுத்து அழ ஆரம்பிக்கிறது.

“கொழந்தையை எடுத்து எங்கிட்ட கொடுத்துடிம்மா. நான் அதைச் சமாதானப் படுத்தறேன். யாராவது சாப்பிட ஒக்காந்தாப் போதும், உடனே முழுச்சுக்கிட்டு கத்த ஆரம்பிச்சுடறா. படுத்தா எந்திரிச்சு ஒக்கார முடியலை, உக்காந்தா, நிமிந்து நிக்க முடியலை. அவரும் சட்டுனு என்னையைக் கூட்டிக்க மாட்டேங்கறாரு. எத்தனை நாள்தான் இப்படி அவரையே நெனைச்சுப் பொழுதைக் கழிக்கணுமோ! என்று விதியை நொந்து கொள்கிறாள் வள்ளியம்மை. அழும் குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு, அவர்களது பரம்பரை வெள்ளித் தட்டையும், சோம்பு நிறையப் பானைத் தண்ணீரையும் எடுத்து வைத்து சோற்றையும் வெஞ்சினத்தையும் பரிமாறுகிறாள் மீனாட்சி. அமைதியாக சோற்றை அள்ளித் தின்கிறான் சொக்கன்.

“ஏம்ப்பா சொக்கா , என்னப்பா ஒண்ணுமே பேசாமச் சாப்பிடறே? மதுரை போயிட்டு வந்தியே, அங்கே என்ன நடக்குது? ரொம்ப காலமா சோழ ராசகுமாரங்களே பாண்டிய ராசா பேரை வச்சுக்கிட்டு அரசாட்டி பண்ணிக்கிட்டு வாராங்களே, இது அடுக்குமா? மதுரைக் கோவில்ல மீனாச்சியும், சொக்கநாதனும் இன்னமும் கல்லாத்தானே ஒங்காந்துக்கிட்டு இருக்காங்க! நீயும் அந்தச் சொக்கநாதன் பேரை வச்சுக்கிட்டு கல்லைப் போல ஒங்காந்துக்கிட்டு, ஒரு பேச்சும் பேசமாட்டேங்கறியே!” வள்ளியம்மை பேசுவது புலம்பலைப் போலத்தான் இருக்கிறது.

“ம்..” என்று உறுமுகிறான் சொக்கன்.

“நீ புலம்பிக்கிட்டே இரு, ஆத்தா! நாம என்ன செய்ய முடியும்? இலங்கை ராசா நமக்கு உதவியா இருந்தாருன்னு அவரையும், அவங்க பொண்டாட்டி பிள்ளைங்களையும் சிறையெடுத்து சோழநாட்டுக்குக் கொண்டு போயிட்டதும், அங்கேயே அவங்க எல்லாரும் சிறையிலேயே கிடந்து செத்துப் போனதையும் உனக்குச் சொல்லுறதா? மூணு வருசத்துக்கு முன்னாலதான் அந்த இலங்கை ராசாவோட பையனும், நம்ம விக்கிரம பாண்டிய ராசாவும், ஒரு வடக்கத்தி ராசாவோட சேர்ந்து சண்டை போட்டதும், இராசேந்திர சோழரோட மகன் - அதுதான் மதுரைலே கொஞ்ச காலம் சோழபாண்டியன்னு பேரை வச்சுக்கிட்டு ஆட்சி  செஞ்சாரே - அவர் பெரிய படையோட இலங்கைக்குப் போயி சண்டை போட்டு, நம்ம ராசாவையும் சேத்து மூணு ராசாக்களையும் கொன்னுப்புட்டதும் உனக்குத் தெரியாதா! அந்தச் சண்டையிலே பெரியப்பா மகன், அதுதான் என் அண்ணன் காளையப்பன் செத்துப் போனதையும் உனக்குச் சொல்லுறதா! விக்கிரமராசா மகனான பாண்டிய இளவரசருக்குத் துணையா நான் இருக்கணும்னு சொல்லி, மகாராசா என்னை மட்டும் இங்கே விட்டுப்புட்டு போனதைச் சொல்லுறதா! என்னத்தைச் சொல்லுவேன் நான் உனக்கு? என்ன பேச்சுப் பேசுவேன் நான்!

தினமும் திங்கறதும், தூங்கறதும், நிறையப் பேருக்கு சண்டை சொல்லித் தருவதையும் தவிர என்ன செய்யறேன்! பாண்டிய ராசகுமாரரைக்கூட இந்த ஊருலதானே மறைச்சு வச்சுருக்கோம்! அப்பா எழுதப் படிக்கக் கத்துக்கணும்னு சொன்னாருன்னு சொன்னே! அதுனால ரொம்பச் சிரமப் பட்டு எழுதவும் கத்துக்கிட்டேன். இப்ப உம் பேரன்களும் எழுதப் படிக்கக் கத்துக்கணும்னு சொன்னதால அவங்களைத் திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கும் அனுப்பறேன். வேறென்ன சேதியிருக்கு, உன்கிட்ட சொல்லி சந்தோசப் படறதுக்கு! சோறுகூட நிம்மதியா திங்க விடமாட்டேங்கறியே!” என்று தன்னுடைய நிராசைகளைத் தன் தாயாரின் மேல் கொட்டிக் கொள்கிறான்.

“ஆனா ஒண்ணு மட்டும் சொல்லறேன், ஆத்தா. ஒரு நாள் இல்லாட்டா ஒருநாள் மதுரையிலே மீன் கொடி பறக்கத்தான் போகுது. அங்கே மட்டுமில்லே, சோழநாட்டுத் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்திலும் நம்ம மீன் கொடி பறக்கத்தான் போகுது. அந்த சமயத்துல உன்னோட பரம்பரைலே வந்த ஒருத்தன், நம்ம இரத்தம் ஓடற ஒருத்தன் பாண்டிய ராசாகூட மீன் கொடியை ஏத்தத்தான் போறான். இம்புட்டுத்தான் நான் உனக்குச் சொல்ல முடியும். வேற என்ன இருக்கு!” என்று அங்கலாய்கிறான்.

இதை கேட்டதும் வள்ளியம்மையின் கண்கள் பளிச்சிடுகின்றன.

“நல்லாச் சொல்லு மகனே, நல்லாச் சொல்லு! இந்தப் பேச்சுதான் தினமும் உன் வாயிலேந்து வரணும், நான் அதைக் கேட்டு சந்தோசப் படணும் இந்தப் பேச்சைத்தான் நீ தினமும் உன் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்கணும். உன் பையங்க உடம்பிலே ஓடற ஒவ்வொரு துளி ரத்தமும் நம்ம பாண்டிய ராசாக்காள் பட்ட அவமானத்துக்குப் பழி வாங்கணுங்கற வெறியோடதான் ஓடணும். நம்ம பாண்டிய ராசாக்களோட பரம்பரைச் சொத்தைக் காப்பாத்த எத்தனை சோழங்களோட உயிரைக் குடிச்சுட்டு செத்துப் போனாரு உன்னோட அப்பா - என் புருசன்! சேதி கேட்டு, என் தாலியை அறுத்து வீசினப்ப எனக்கு ஒரே ஒரு குறைதான் இருந்துச்சு. பாண்டிய ராசாக்களுக்காக உயிரைவிட ஒரே ஒரு ஆம்பிளப் பிள்ளையை மட்டும் கொடுத்துட்டுப் பொயிட்டியே மகராசான்னுதான் செத்து போன என் புருசன நெனச்சு வருத்தப்பட்டேன்.

“அதுனாலதான் என் அண்ணன் பொண்ணை அவ வயசுக்கு வந்த கையோட உனக்கு கண்ணாலம் செஞ்சு வச்சேன். காரணம், நீயும் அவளும் சேர்ந்து நிறைய ஆம்புளப் பிள்ளைகளை நம்ம பாண்டிய நாட்டுக்குப் பெத்துக் கொடுக்கணும்ன்னதான்.  இதுவரைக்கும் பொறந்த ஆறுலே அஞ்சு ஆணாப் பொறந்தது எனக்கு ரொம்பச் சந்தோசமா இருக்கு. இன்னும் பொறக்கணும். எல்லாத்தையும் நல்லா வீரமா வளர்த்துருப்பா. அதுங்க எல்லாத்துக்கும் உன் அப்பன் சொன்ன மாதிரி எழுதப் படிக்கக் கத்துக் கொடுத்துடு. இது நம்ம குடும்பத்துக்கு பாண்டிய ராசாவோட கட்டளை. அதுக்குத்தான் நிலபுலமெல்லாம் நமக்கு கொடுத்திருக்காங்க. அவங்க உப்பைத் திங்கற நாம அவங்களுக்கு விசுவாசமா இருக்ணும்.” என்று சொல்லி முடிக்கிறாள். வள்ளியம்மை. அவள் வருங்காலத்தின் மகிழ்ச்சியில் தன்னைத்தானே மறக்கிறாள்.

“அப்படியே செஞ்சுப்புடறேம்மா. நீ எதுக்கு தினமும் பொழுது விடிஞ்சா இப்படிக் கவலைப்பட்டுக்கிருக்கே! என்ற அவளைத் தேற்றுகிறான் சொக்கன்.

“நான் கவலைப் படறதுக்கும் காரணமிருக்குடா, சொக்கா. உங்க ஆத்தா வீட்டோட கெடக்கற பொட்டச்சிதானே, இவளுக்கு என்ன தெரியுமின்னு நெனச்சுடாதே!” என்று ஆரம்பிக்கிறாள் வள்ளியம்மை, “காளையப்பன் போனதுக்கப்பறம் உன் பெரியப்பன் குடும்பத்திலே ஆம்பிளப் பசங்களே இல்லை. இருந்த ஒத்தப் பொண்ணும் பேசிக் காய்ச்சல்லே போயிட்டு அவுங்க வமிசமே இல்லாம போயிடுச்சு. இனிமே பாண்டிய ராசாக்களுக்கு உயிரைக் கொடுக்க உன் பிள்ளைங்க மட்டுந்தான்டா நம்ம பரம்பரையிலே இருக்காங்க.
“நீ சொன்னியே, சோழ நாட்டுலே நம்ம மீன் கொடி பறக்கத்தான் போவுதுன்னு - உன் பிள்ளைங்க வாழையடி வாழையாத் தழைச்சுப் பெருகினாத்தான்டா அது நடக்கும். அதுனாலதான் பாண்டிய ராசா உன்னை இங்கே விட்டுட்டுப் போயிட்டாரு. அந்த நன்றியை நம்ம மறக்கப்படாதுடா.  அதுனாலதான் நான் இப்படி பினாத்திக்கிட்டு இருக்கேன்.

“இன்னும் ஒண்ணுடா. நீயும் என்னை மாதிரிதான் பேசிக்கிட்டு இருக்கே. படிச்சவங்க மாதிரித் தமிழ் பேசணும்டா. உன் அப்பன் என்னமாத் தெரியுமா பேசுவாரு. “உங்கிட்டப் பெசிப் பேசி எனக்குக் கூட நல்ல தமிழ்ல பேசறது மறந்து போயிடுது. நாளைக்கே விக்ரம ராசா வந்தா இப்படிப் பேசிப்புடுவேனோன்று பயமா இருக்குது புள்ளே! அப்படீன்னு விரட்டுவாரு. எனக்கு எவ்வளவு பெருமைத் தெரியுமாடா இருக்கும்! அவரு மனசு குளிரணும்டா. அவரு காவல் தெய்வமா இருந்து நம்ம எல்லாரையும் நல்லபடியா பார்த்துப்பாருடா!” என்று ஓய்கிறாள் வள்ளியம்மை.

அவள் சொல்லியதை மனதில் அசை போட்டவாறு உணவைச் சாப்பிட்டு முடிக்கிறான் சொக்கன்.  இவர்கள் பேசுவரை கவனமாக மனதில் வாங்கிக் கொள்கிறாள் மீனாட்சி. அவள்தானே தனது பிள்ளைகளை வீரர்களாக, தனது அத்தையின் விருப்பப்படி வளர்க்க வேண்டும்! பாண்டிய நாட்டில் பிறந்த வீராங்கனையாயிற்றே அவள்![வளரும்]

No comments:

Post a Comment